அன்றும் வழக்கம் போல ஹாஸ்பிடலில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள் எழில். ‘இன்னைக்கும் அவன் எங்கே வரப் போறான்…’ என்ற ஏக்கம் கலந்த சலிப்போடு குளித்துவிட்டு, வழக்கம் போல அத்தையோடு சேர்ந்து இரவுச் சமையல் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.
அப்போது, வாசலில் காலடிச் சத்தம் கேட்க, தன் தந்தை மருதோடு கம்பீரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராயன்.திடீரெனத் தன் கணவனைக் கண்டதும் எழிலின் நெஞ்சம் ஒரு கணம் வீரிட்டுத் துடித்தது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைதியாக அவர்களுக்குச் சாப்பாட்டை எடுத்துப் பரிமாறினாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் உயிரான மனைவியைக் கண்டவனின் கண்கள் காதலால் மின்னின. அவளது ஒவ்வொரு அசைவையும் தாகத்தோடு பருகியவன், அவள் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல், ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கடமைக்குப் பரிமாறுவதைக் கவனித்தான்.
பயங்கர கோபத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, சாப்பாட்டை அமைதியாகச் சாப்பிட்டு முடித்தவன்,பின்னர், அப்பா அம்மாவிடம் சிறிது நிமிடங்கள்பேசிவிட்டு, மெதுவாக மாடியை நோக்கிச் சென்றான்.
இருபது நாட்களுக்குப் பிறகு தன் மனைவியோடு அந்தத் தனிமை அறையில் ஒன்றிணையப் போகும் ஆவலும், அதேசமயம் அவளது கோபத்தைச் சமாளிக்க வேண்டுமே என்ற யோசனையுமாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டான்.
நீண்ட இருபது நாட்களுக்குப் பிறகு தன் கணவனின் வாசம் அந்த அறை முழுவதும் மீண்டும் நிறைந்திருப்பதை உணர்ந்த எழில், கட்டிலில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், தீவிரமாகப் படிப்பது போலப் பாவனை செய்தாள்.
ராயனோ மீசையோரச் சிரிப்போடு மெல்ல வந்து அவளருகே கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, அவளது சேலை முந்தானையைத் தொட்டுத் தன் பக்கம் இழுக்க முயல, அவளோ சட்டென கணவனின் கையை தட்டிவிட்டுத் தள்ளி உட்கார்ந்தவள் புத்தகத்தைப் புரட்டிக்கிட்டே, “வந்துட்டாரு பெரிய ஜமீன்தாரு… காட்டுல அறுவடை முடிச்சுட்டு!” என்று காதில் விழாத மாதிரி முணுமுணுத்தாள்.
ராயன் மெல்ல அவளது தோளைத் தொடப் போக, எழில் சட்டெனச் தள்ளிப்போய், “தொடாதீங்க! காட்டுல நண்பர்களோட முயல் வேட்டை ஆடும்போது இந்த பொண்டாட்டி ஞாபகம் வரலல? இப்போ மட்டும் என்ன?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஏய்… நான் அங்கப் பட்ட கஷ்டம் எனக்குத்தானே டி தெரியும்! தினமும் ராத்திரி உன்னோட நினைப்புல பரண்ல படுத்துக்கிட்டு…” என்று அவன் இழுக்க,”போதும் நிறுத்துங்க! ‘கிழக்குக்கும் மேற்குக்கும் பிரண்டு தூங்குவேன்னு’ நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னதுக்கு, நிஜமாவே இருபது நாள் என்னை இந்த ரூம்ல தனியா தவிக்க விட்டுட்டீங்கள்ல? இனிமே நீங்க அந்தப் பரண்லயே போய் தங்குங்க!” என்று கோபித்துக் கொண்டாள்.
ராயன் சடாரென அவளது வளையல் அணிந்த கரத்தைப் பற்றி இழுத்து, அவளைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டு அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவன், “ஏண்டி … என் பொண்டாட்டி பக்கத்துல இல்லாத இந்த இருபது நாளும் நான் உடலால காட்டுல இருந்தேனே தவிர, என் உசுரு முழுசும் இந்த மாடி அறையில உன்னைச் சுத்தித்தான்டி சுத்திட்டு இருந்துச்சு…” “இருபது நாள் கழிச்சு புருஷன் வீட்டுக்கு வந்திருக்கேன். ஒரு வார்த்தை கூடப் பேசாம இவ்வளவு கோபமா இருந்தா என்ன அர்த்தம்?” என்று அவளது தோளைப் பற்றித் தன் பக்கம் திருப்பினான்.
எழிலோ தன் கோபத்தை அடக்க முடியாமல், கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் “பேசறதுக்கு இங்க என்ன இருக்குங்க? உங்களுக்குத்தான் காடும் நண்பர்களும் தான் முக்கியமாச்சே! ஒரே ஊர்லதான் இருந்தீங்க… இந்த இருபது நாள்ல ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நிமிஷம் பொண்டாட்டியப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணவே இல்லதானே? இங்க நான் இந்த பெரிய ரூம்ல தனியா பயந்து பயந்து, உங்களை நினைச்சு ஏங்கி செத்துப் பிழைச்சது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆத்திரமும் ஏக்கமும் பொங்க அவனது மார்பில் கையால் குத்தினாள்.
அவளது கண்ணீரும் தவிப்பும் ராயனின் நெஞ்சைக் நொடிப்பொழுதில் உலுக்கிப்போட்டன.அவளது கைகளைப் பிடித்து நிறுத்தியவன், “ஏய் லூசு… என்னடி பேசுற? உன்னைப் பார்க்காம நான் அங்க சந்தோஷமாவா இருந்தேன்? தினமும் ராத்திரி பரண்ல படுக்கும்போது உன் நினைப்புல தூக்கம் வராமத் தவிச்சேன்டி“
“காட்டு வேலையை பாதியில விட்டுட்டு வந்தா நல்லா இருக்காதுன்னுதான்டி பொறுத்துக்கிட்டு இருந்தேன். உன்னை விட்டுட்டு என்னாலையும் இருக்க முடியுமாடி?” என்று ஆழமான குரலில் சொன்னான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த உண்மை எழிலின் கோபத்தை மொத்தமாக உருக வைக்க “அப்ப ஏன் ஒரு வார்த்தை கூட ஆள் விட்டுச் சொல்லல?” என்று விம்மியவளை, தன் அகன்ற மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளது நெற்றியிலும், கன்னங்களிலும், இதழ்களிலும் தன் அசுரத்தனமான முத்தங்களைப் பொழிந்தான்.
“இனிமே உன்னை விட்டு ஒரு அடியும் நகர மாட்டண்டி என் செல்ல ராட்சசி…” என்று அவளது காதோரம் கிசுகிசுக்க, இருபது நாள் பிரிவின் வலியும் ஏக்கமும் அந்த மாடி அறையின் குளிர்ந்த இரவில் காதலின் அணைப்பில் கரையத் தொடங்கியது.
அவனது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டவளின் இடை வளைவில் கரங்களைச் செலுத்தி, அவளை இன்னும் நெருக்கமாகத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன் சிறிது நிமிடங்களுக்கு பிறகு,”நர்சம்மா… அசுரனை மன்னிச்சு ஏற்றுக்கலாமா? இல்ல இன்னும் ஏதாவது தண்டனை பாக்கி இருக்கா?” என்று அவளது காதோரம் மீசை உரசக் குறும்போடு கேட்டான்.
எழில் மெல்லத் தலைநிமிர்ந்து, அவனது தாடியை விரல்களால் கோதியபடி, “தண்டனை இல்லாம எப்படி? இனிமே இந்த அரசியை விட்டுட்டு ஒரு நாள் இல்லை… ஒரு மணி நேரம் கூடத் தனியா எங்கயும் போகக் கூடாது. அப்படிப் போனீங்க… அப்புறம் இந்த மாடி வீட்டுத் கதவு உங்களுக்கு நிரந்தரமா மூடப்படும்!” என்று செல்லமாக மிரட்டினாள்.
“அப்படியா சங்கதி?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன், அவளது இதழ்களில் மின்னல் வேகத்தில் தன் முத்தத்தைப் பதித்துவிட்டு “இனிமே உன்னை விட்டுட்டு எங்கடி போகப் போறான்? என் உலகமே இந்த மாடி அறையிலதானே அடைபட்டுக் கிடக்கு…” என்று கரகரத்தக் குரலில் சொன்னபடி, அவளது தோளிலிருந்த சேலை முந்தானையை மெல்ல நழுவவிட்டான்.
இருபது நாட்களாகத் தேங்கி நின்ற அவனது அசுரக் காதலும், அவளது ஏக்கமும் அந்த மாடி அறையின் குளிர்ந்த இரவில் எல்லைகளைத் தாண்டத் தொடங்கின.ஜன்னல் வழியே வீசிய தென்றல் காற்று திரைச்சீலையை மெல்ல விலக்க, நிலவொளி கட்டிலில் கிடந்த இருவரின் மீதும் படர்ந்து, அவர்களின் காதல் கூடலுக்கு அமைதியாகச் சாட்சி சொன்னது.
அந்த இரவு, அவர்களின் நீண்ட நாள் பிரிவை மொத்தமாக மறக்கடித்து, மாறாத அன்பால் அவர்களை மீண்டும் ஒன்றிணைத்தது.நாட்கள் மேலும் கடந்து வேகமாக உருண்டோடின. ராயனின் ஆழமான காதலிலும் அரவணைப்பிலும் எழிலின் வாழ்க்கை எந்தக் குறையுமின்றி மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.
அன்று வழக்கம்போல ஹாஸ்பிடலில் வேலை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. உள்நோயாளிகள் பிரிவில் எழில் ஒரு நோயாளிக்கு ஊசி போடுவதற்காக மருந்தை சிரிஞ்சில் இழுத்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று அவளுக்குத் தலைசுற்றுவது போலவும், தொண்டையை அடைத்துக்கொண்டு வாந்தி வருவது போலவும் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. கை நடுக்கத்தோடு சிரிஞ்சைக் கீழே வைத்தவள், சுவரைப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் ஆழமாக மூச்சு வாங்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
தான் ஒரு செவிலியர் என்பதால், இந்தத் திடீர் உடல் மாற்றத்தின் பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என்பது அவளது அனுபவத்திற்கு உடனே பொறி தட்டியது.
‘ஒருவேளை… நாம கர்ப்பமா இருப்போமோ?’ என்ற எண்ணம் எழுந்த கணத்திலேயே அவளது நெஞ்சம் விவரிக்க முடியாத பூரிப்பில் துடித்தது.ஹாஸ்பிடலில் கர்ப்பத்தைக் கண்டறியும் கிட் இருந்ததால், பதற்றமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனதோடு தன் சிறுநீர் மாதிரியை எடுத்துச் சோதனை செய்து பார்த்தாள்.
சில நொடிகள் திக் திக் மனநிலையோடு காத்துக்கொண்டிருக்க… அந்தச் சிறிய பிளாஸ்டிக் நெகிழியில் தெளிவாக இரண்டு சிவப்புக் கோடுகள் தோன்றின!
தான் தாயாகப் போகிறோம், தன் அசுரன் ராயனின் வம்சத்து உயிரைச் சுமக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்த கணத்தில், எழிலின் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
தன் வயிற்றை மெல்லக் கரங்களால் தடவியபடி, ‘இதை அந்த மாங்கா மண்டையன்கிட்ட எப்படிச் சொல்லி ஆச்சரியப்படுத்தப்போறோம்?’ என்ற யோசனையோடு அவளது உதடுகளில் பேரன்பின் புன்னகை மலர்ந்தது.
பனி சிந்தும்…