திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் மிகவும் அழகாகக் கடந்துவிட்டன.அன்று இரவு, வழக்கம் போலக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தனர்.எழில் சமையலறை வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, மாடி அறைக்குச் சென்றுவிட, கீழே கூடத்தில் மருதுவும் ராயனும் அடுத்த நாள் வேலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
“லே ராயா… நாளைக்கு நம்ம தெற்கு காட்டு வயல்ல கம்பு, சோளம் ரெண்டையும் அறுவடை ஆரம்பிக்கிறோம். காடெல்லாம் விளைந்து கிடக்கு. ராத்திரிக்குக் காட்டுல காவலுக்கத் தங்கணும்டா…” என்றார்.
“அப்பா, நீங்க வீட்ல நிம்மதியா தூங்குங்க… நான் போய்க் காட்டுல காவலுக்குத் தங்கிப் பார்த்துக்கிறேன்,” என்றான் ராயன் இயல்பாக.
மருதுவோ மகனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “அடேய்… இப்போதான் உனக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. இந்த நேரத்துல உன்னை போய்க் காட்டுல காவல் காக்கச் சொல்வேனா?, நீ இருல நான் போறேன் என்க…ஓஓஓ…உனக்கு இன்னும் பதினெட்டு வயசுப் பையன் நினைப்பாவே இருக்குதாப்பா! பேசாம வீட்டில் தூங்குற வழியைப் பாரு. காவலுக்கு நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
அடேய் நீ போய் உன் பொண்டாட்டியை கவனி டா என்கும் தந்தையின் இந்த நேரடிப் பேச்சைக் கேட்டதும் ராயனுக்கு வெட்கமும் எரிச்சலும் ஒருசேர வந்தது.
“அப்பா… தேவையில்லாம எதையாவது பேசி என் கடுப்பை ஏத்தாதீங்க!” என்று முறைத்தவன், “நான் மாடிக்குப் போறேன்,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவெனப் படிகளில் ஏறித் தன் அறைக்குச் சென்றான்.
மாடி அறையில், எழில் இரவு நேரச் சௌகரியமான சேலைக்கு மாறிக் கொண்டு, கட்டிலில் மெத்தையைச் சரி செய்து விரித்துக் கொண்டிருந்தாள்.
அவிழ்ந்து கிடந்த கூந்தலும், இரவொளியில் ஒளிரும் மேனியும் வாசலில் வந்து நின்ற ராவணனின் கண்ணில் பட, கீழே தந்தை சொன்ன பேச்சு மறந்து, மனதிற்குள் மீண்டும் காதலின் அசுர உணர்வுகள் தலைதூக்கத் தொடங்கின.அறைக்குள் நுழைந்தவன், கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டான்.
கதவு சாத்தும் சத்தம் கேட்டுத் திரும்பிய எழில், கணவனின் முகத்தில் தெரியும் கள்ளச் சிரிப்பையும், விழிகளில் மின்னும் சங்கதியை கண்டதும், “என்ன… என்ன ஆச்சு? மாமா கூட என்ன பேசிட்டு வந்தீங்க?” என்று லேசான தயக்கத்தோடு கேட்டாள்.
ராயன் ஒன்றும் பேசாமல், மெல்ல நடைபோட்டு வந்தவனோ அவளது இடுப்பை வளைத்துத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டவன்”எங்க அப்பா பெரிய ஆளுடி… நாளைக்குக் காட்டுல அறுவடை வேலை இருக்கு, காவலுக்கு நான் போறேன்னு சொன்னா, ‘இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு, ஒழுங்கா மாடிக்குப் போய் பொண்டாட்டி கூடத் தூங்குடா’ன்னு சொல்லி என்னை விரட்டி விட்டுட்டாரு!” என்று அவளது காதோரம் மீசையால் உரசியபடி கிசுகிசுத்தான்.
மாமனாரின் பேச்சைக் கேட்டதும் எழிலின் முகம் வெட்கத்தால் சுட்ட செங்கல்லாகச் சிவக்க “ஐயோ… மாமாவா அப்படிச் சொன்னாரு?” என்று முகத்தைப் பொத்த முயன்றவளின் கரங்களைப் பற்றி அகற்றியவன், “ஆமாடி… பெரியவர் சொன்ன பேச்சைத் தட்ட முடியுமா? அதனால் இன்னைக்கு ராத்திரி இந்த அசுரனுக்கு முழு சுதந்திரம்!” என்று கரகரத்தக் குரலில் சொன்னான்.
“அய்யோ போங்க… உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் ஒரே அக்கிரமம்தான்!” என்று அவனது மார்பைத் தள்ளி ஓட முயன்றாள்.
ஆனால், ராயன் அவளைத் தப்பவிடவில்லை. அவளை அப்படியே தூக்கிக் கட்டிலில் சாய்த்தவன், அவளது இதழ்களில் ஆழமான முத்தத்தைப் பதித்தான்.
எழிலின் மெல்லிய எதிர்ப்புகளெல்லாம் அவனது அசுரத்தனமான அணைப்பில் உருகிப் போயின.ஜன்னல் வழியே குளிர்ந்த இரவுத் தென்றல் வீச, மாடி அறையின் தனிமையில் இருவரின் காதலும், சிரிப்பும், கூடலும் அந்த இரவு முழுவதையும் இனிமையாக மாற்றின.அதிகாலைக் குளியலை முடித்துவிட்டு, எழில் அறைக்குள் வந்து சேலையை அழகாக உடுத்தித் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவளது கொலுசின் மெல்லிய ஒலியிலும், வளையல்களின் கலகலப்பிலும்தான் ராயனுக்கு மெல்ல விழிப்பு வந்தது.கட்டிலில் தலைக்குக் கைகளைக் கொடுத்துப் படுத்தபடியே மனைவியின் எழிலோவியத்தைக் கண் கொட்டாமல் ரசித்தவன், “அரசி… இன்றிலிருந்து அறுவடை வேலை முடியற வரைக்கும் நான் காட்டிலேயேதான்டி தங்குவேன்!” என்றான் கம்பீரமான குரலில்.
அவன் சொன்னதைக் கேட்டதும், “அப்படியா?” என்று ஆச்சரியத்தோடு வேகமாய்த் திரும்பினாள் எழில்.அவளது முகப் பாவனையைக் கூர்ந்து கவனித்த ராயன், மீசையோரக் குறும்புச் சிரிப்போடு, “ஓ… அப்போ நான் பக்கத்துல இல்லன்னா இந்த மாடி அறையில நீ சந்தோஷமா இருப்ப… அப்படித்தானே மேடம்?” என்று வம்பிற்கு இழுத்தான்.
எழில் அவனைக் கண்சிமிட்டிப் பார்த்து, “ஆமா… அதுல உங்களுக்கு என்ன சந்தேகமாம்? நீங்க இல்லைனா நிம்மதியா அந்த பெட்ல கிழக்குக்கும் மேற்குக்கும் பிரண்டு பிரண்டு தூங்குவேன்!” என்று செல்லமாக நக்கலடித்தாள்.
“ஓ… அப்படியா சங்கதி! சரி சரி… பார்த்துக்கிறேன்டி,” என்று சிரித்தபடியே எழுந்தவன், பாத்ரூமிற்குச் சென்று முகம் கழுவித் தயாராகி கீழே வந்தான்.
கீழே கூடத்தில் மயிலா சூடாக டீ போட்டு தன் கணவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த மகனுக்கும் ஒரு டம்ளர் டீயைக் நீட்டினார். இருவரும் காலையிலேயே வீட்டின் பூசையறையில் சாமியை கும்பிட்டுவிட்டு, அறுவடை வேலையைப் பார்ப்பதற்காக வயல்வெளிக்குக் கிளம்பிச் சென்றனர்.
எழில் தலை துவட்டி, அலங்காரம் முடித்து கீழே வருவதற்குள்ளேயே ராயன் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டான்.’அறுவடை வேலை என்பதால் காலையிலேயே போக வேண்டியிருக்கும்’ என்பது எழிலுக்கும் ஏற்கனவே தெரியும் என்பதால், அவன் சொல்லிவிட்டுக் கிளம்பாததை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
வழக்கம்போல அத்தையோடு சேர்ந்து காலை சமையல் மற்றும் வீட்டு வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு,மருத்துவமனை வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.’எப்படியும் இரவு வேலை முடிந்து வீட்டுக்குத்தானே வருவான், அப்புறமாக அவனிடம் பொறுமையாகப் பேசிக்கொள்ளலாம்’ என்ற எண்ணத்துடனேயே அவள் தன் அன்றாட வேலையில் மூழ்கினாள்.
மாலை மருத்துவமனை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவளோ குளித்து உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு, இரவுக்குத் தேவையான சமையல் வேலைகளில் அத்தையோடு சேர்ந்து ஈடுபடத் தொடங்கினாள்.
அப்போது அங்கே வந்த மருது, “மயிலா… ராயனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் சேர்த்து சாப்பாட்டைக் கட்டு. நான் காட்டுக்குக் கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்துடுறேன்,” என்றார்.
அதைக் கேட்டதும் எழிலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏங்க மாமா… அவர் வீட்டுக்குச் சாப்பிட வரலையா?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.
“இல்லம்மா… அவன்தான் அங்கே காவலுக்குக் கட்டுன பரண் மேலேயே தங்கிக்குறேன்னு சொல்லிட்டான். அவன் கூட கூட்டாளி பயலுகளும் அங்கதான் தங்குறானுங்க… தனியா இருந்தா பயப்படணும், கூட்டமா இருக்கானுங்க, அதனால ஒன்னும் பயப்பட வேண்டாம்” என்றார் மருது இயல்பாக.
‘அப்ப நிஜமாவே இவன் என்னை விட்டுட்டு அங்கதான் தங்கப் போறானா?’ என்று நினைத்த கணத்திலேயே எழிலின் நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு வலி இறங்கியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக, அந்த மாடி அறைத் தனிமையில் இருவரும் ஈருடல் ஓருயிராக எப்படித் திளைத்தார்கள்… அவனது மூச்சுக்காற்றும், தழுவலும், அசுரத்தனமான அணைப்பும் இல்லாமல் ஒரு வினாடி கூட நகராத அந்த நாட்கள் அவளுக்குத்தானே தெரியும்!காலையில் அவள் சும்மா விளையாட்டுக்குக் சொன்னதை நிஜமாக்கிவிட்டு, இப்படித் தன்னைப் பிரிந்து அங்கே போய் தங்குகிறானே என்ற ஏக்கம் அவளை வாட்டியது.
ஆனால், தன் மனதில் எழுந்த அந்தத் தவிப்பை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், அமைதியாகச் சாப்பாட்டைத் தூக்குச் சட்டியில் வைத்துக் கொண்டுவந்து கொடுத்தாள்.மருதுவும் கையில் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வர, அதேநேரம் வேலை முடிந்து வந்து கொண்டிருந்த குப்பனும், “அத்தான்.. நானும் வர்றேன், போலாமா?” என்று சேர்ந்து கொள்ள, இருவரும் பேசிக்கொண்டே சாப்பாட்டை எடுத்துக்கொண்டு காட்டுப் பாதையில் நடந்தனர்.
அவர்கள் சென்ற பிறகு, மனதே இல்லாமல் கடமைக்கு நாலு வாய் உணவை வயிற்றில் தள்ளிவிட்டு மாடி அறைக்கு வந்தாள்.கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு, அந்த அறை மிகவும் விசித்திரமாகவும் வெறுமையாகவும் காட்சி அளித்தது.
அறையின் ஒவ்வொரு மூலையும், கட்டிலும், மெத்தையும் அவளது கணவனோடு அவள் கூடிப் பேசிச் சிரித்து மகிழ்ந்த தருணங்களை அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தன. அவனது உடலின் வாசம் இன்னும் அந்த மெத்தையில் வீசுவது போல இருந்தது.அவன் இல்லாத அந்த மாடி அறை, அவளுக்கு மூச்சு முட்டுவது போல அடைத்தது.
“மாங்கா மண்டையா… என்னை நிஜமாவே விட்டுட்டுப் போயிட்டியா…” என்று முணுமுணுத்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிந்தோடின. கட்டிலில் தனியாகச் சாய்ந்தவளுக்கு, அவனது நினைவுகளும் பிரிவின் ஏங்கிய தவிப்பும் இரவை மேலும் நீளமாக்கின.
கணவன் இல்லாத அந்த மெத்தை எழிலுக்கு நெருப்பை அள்ளிக் கொட்டியது போலக் கொதித்தது. அவனது உடலின் சூடும் அணைப்பும் நிறைந்திருந்த அந்த இடத்தில் தனியாகப் படுக்க அவளுக்கு மனமே வரவில்லை.பட்டென்று கட்டிலில் இருந்து எழுந்தவள், பாயைக் கூட விரிக்காமல், வெறும்தரையில் தன் கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்துக்கொண்டாள்.
“என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லாம, என்னை விட்டுட்டு அங்கேயே தங்கிட்டான்ல… நீ வீட்டுக்கு வாடா மாங்கா மண்டையா, உனக்கு இருக்கு!” என்று மனதிற்குள் கோபமும் ஏக்கமும் கலந்த குரலில் புலம்பியபடியே, வெகுநேரம் கழித்து கண்ணீரோடு தூங்கிப்போனாள்.
முதல் நாள் இரவு, பரணில் வந்து படுத்திருந்த புதுமாப்பிள்ளையைப் பார்த்த அவனது நண்பர்கள், “ஏண்டா ராயா… கல்யாணமான புதுசுல பொண்டாட்டியை விட்டுட்டு இங்க வந்து படுத்திருக்கே? என்னடா ஆச்சு?” என்று நக்கலாகக் கேட்டனர்.
ராயன் அவர்களை முறைத்துப் பார்த்து, “ஏண்டா… என்னமோ இப்பதான் புதுசா நான் காட்டிற்குள்ள வந்து தங்கப்போற மாதிரி பேசுறீங்க? ஒழுங்கா அமைதியா தூங்குங்கடா, இல்லை எட்டி உதைச்சேன்னா மூஞ்சி முகரையெல்லாம் பேர்ந்துரும்!” என்று தன் வழக்கமான அசுரத்தனமான குரலில் மிரட்டினான்.
நண்பர்களும் அவனது இயல்பான அசுரத்தனமான பேச்சைக் கண்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வழக்கம் போல அவர்கள் காட்டுப்பகுதியில் தங்கி, முயல் வேட்டையாடிச் சமைத்துச் உண்பதும், சுனை நீரில் மீன் பிடித்து விதவிதமாகச் சமைத்து உண்பதுமாகத் தங்கள் கானக வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால், வெளியிலும் நண்பர்களிடமும் எவ்வளவு கெத்தாக நடந்து கொண்டாலும், ராயனின் உள்ளுக்குள்ளும் பிரிவின் ரணம் ஆழமாகத் தைத்துக் கொண்டுதான் இருந்தது.
இரவு வேளைகளில் பரணில் தனியாகப் படுக்கும்போது, தன் அரசியின் மென்மையான தேகப் பரிசமும், அவளது கூந்தலின் மல்லிகைப் பூ வாசமும், அவளது குறும்புத்தனமான பேச்சுகளும் அவனது நெஞ்சை இம்சித்துக் கொண்டே இருந்தன.
அவளைத் தொடாமல், அணைக்காமல் கடக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த அசுரனுக்கும் நரகமாகவே கழிந்தது.அறுவடை வேலைகள் நீடித்து, இரண்டு வாரங்களையும் தாண்டி மிகச் சிறப்பாக முடிவடைந்தன.
ராயன் காட்டுக்குச் சென்று இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டன.ஒரே ஊருக்குள் தான் இருவரும் இருந்தார்கள். ஆனால், எழிலுக்குத் தனியாகக் காட்டுக்குள் போகப் பயமாக இருந்தது.
முன்பு ஒருமுறை காட்டில் வழித்தெரியாமல் தவித்து பயந்த அந்த கசப்பான அனுபவம் அவள் நினைவில் இருந்ததால், இம்முறை அவளால் துணிந்து காட்டுப் பக்கம் போக முடியவில்லை.
பனி சிந்தும்…