Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 30

CHAPTER 30

பனித்துளி 30

By seema · November 9, 2026

0

மீசையோரத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு வர, பாத்ரூம் வாசலுக்கு எதிரே இருந்த மரத்தடியில், இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அமைதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவு திறந்தது. தலைக்கு ஊற்றிக் குளித்துவிட்டு, ஈரக் கூந்தலைத் துவடாடியபடி, சேலையைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்த எழில் எதிரே இருட்டோடு இருட்டாக மரத்தடியில் கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் கணவனைக் கண்டதும், அவளது நெஞ்சு அடைத்துக்கொண்டது!

“அம்மாடி!” என்று பயத்தில் அலறியவள், நெஞ்சில் கை வைத்துத் திடுக்கிட்டுப்போய் அப்படியே நின்றுவிட்டவள் “யோவ் கூறுகெட்ட மனுஷா! இப்படி இருட்டுல வந்து நிற்கிற! பயத்துல என் உயிரே போயிடுச்சு தெரியுமா?” என்று அடிபட்ட குரலில் கோபமும் பதற்றமுமாக அவனை திட்டினாள்.

ராயன் மெல்ல எழுந்து அவளருகே வந்தான். அவளது ஈரக்கூந்தலிலிருந்து வழிந்த நீர்த்துளிகள் நிலவொளியில் மின்னின.

“ஏண்டி… மாடியில் அட்டாச்டு பாத்ரூம் இல்லைன்னு இந்த நடுநிசி நாலு மணிக்கே எந்திரிச்சு வந்து குளிக்கிறியா? அதை என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாடி?” என்று காதலும் அக்கறையும் கலந்த குரலில் அவளது தோளைப் பற்றி அணைத்துக் கொண்டு கேட்டான்.

அவனது அந்த அன்பில், எழிலின் பயமும் கோபமும் கணப்பொழுதில் கரைந்துபோயின. பின்னர் படபடப்போடு, “வீட்டிற்குள் போவோம் வாங்க… முதல்ல கைய எடுங்க!” என்று அவன் பிடியிலிருந்து விலக முயல…ராயன் சிரித்துக்கொண்டே இரு கரங்களையும் மேலே தூக்கி, “நான் ஒண்ணுமே பண்ணலடி!” என்று நிரபராதி போலச் சொன்னான்.

“ஆமாமா… உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன?” என்று பொய்யாகக் முறைத்துவிட்டு, மாடிக்கு போனவள் துண்டால் தன் ஈரத் தலையைத் துவட்டி, கூந்தலின் அடியில் முடிச்சுப் போட்டுக் கொண்டு பின்னர் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்து, நெற்றியில் பளிச்சென்று குங்குமப் பொட்டை வைக்கும்போது கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

ராயன் அவளையே ரசித்துப் பார்த்தபடி உதட்டைக் குவித்து, “உம்மா…” என முத்தமிடுவது போல அசைக்க…”ஆத்தா கண்ணைக் குத்திடுவா… ஒழுங்கா இருங்க!” என்று செல்லமாகக் கடிந்துகொண்டே கீழே வந்தாள்.

கீழே அவளது மாமனார் பால் கறப்பதற்காக எழுந்திருப்பது தெரிந்தது. அத்தையோடு சேர்ந்து வழக்கம் போல் வீட்டுக் காரியங்களைத் தொடங்கினாள்.

திருமணத்திற்கு எடுத்த விடுப்பு முடிந்து அன்றுதான் எழில் மீண்டும் மருத்துவமனை வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் காலை உணவையும், மதிய உணவையும் அவசர அவசரமாகச் சமைத்து வைத்தாள்.

கிளம்பும் நேரம் வந்ததும், “வாடி… நான் கொண்டுபோய் விடுறேன்,” என்று புல்லட்டை முடுக்கிக் கொண்டு ராயன் வந்து நிற்க…”இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா உங்களுக்கு? இங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து போனாலே வெறும் பத்து நிமிஷம்தான்… நீங்க சும்மா இருங்க, நான் நடந்து போய்க்கிறேன்,” என்று அவனைச் செல்லமாக விரட்டிவிட்டு எழில் நடந்தே சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவனின் மனதில் ஒரு தீர்க்கமான முடிவு உருவானது. நேராகப் பக்கத்துத் தெருவில் இருக்கும் தனது தாய்மாமன் வீட்டிற்குப் புறப்பட்டான்.அந்த ஊருக்குள்ளேயே மிகச் சிறந்த கட்டிட மேஸ்திரி என்றால் அது சொக்கனின் அப்பா குப்பன்தான்!

“என்னடா புது மாப்பிள்ளை… இந்த நேரத்துல வந்திருக்கே?” என்று குப்பன் கேட்க, ராயன் நேராக விஷயத்திற்கு வந்தான்.

“மாமா… நம்ம மாடி அறையில உடனே ஒரு அட்டாச்டு பாத்ரூம் கட்டி ஆகணும்”

“உன் மவள் தினமும் அதிகாலை நாலு மணிக்கே கீழ வந்து குளிச்சிட்டுப் போறா… அவ படுற கஷ்டத்தைப் பார்க்க முடியல. எத்தனை ஆளுங்களை இறக்கினாலும் பரவாயில்லை, வேலையை உடனே ஆரம்பிச்சு முடிச்சுக்கணும்!” என்று உறுதியான குரலில் சொன்னான்.

மருமகனின் இந்த ஆழமான அன்பையும் அக்கறையையும் பார்த்துப் பூரித்துப் போன குப்பன் , “அடேய்… என் அத்தான்(மருது) என்கிட்ட இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லிட்டாருடா! உன் கல்யாணத்துக்கு முன்னாடியே மாடில பாத்ரூம் கட்டணும்னுதான் பிளான் பண்ணினோம். ஆனா மணல் லாரி எல்லாம் ஸ்ட்ரைக்ல இருந்ததாலதான் தள்ளிப்போச்சு. அநேகமா இன்னைக்கு மணல் வந்து இறங்கிடும்னு நினைக்கிறேன்,” என்று சிரித்தபடியே சொன்னார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள், ஊருக்குள் இரண்டு பெரிய லாரிகள் கர்ஜனையோடு வந்து நிற்கும் சத்தம் கேட்டது.வாசலிலிருந்து பார்த்த குப்பன், “அடேய் மாப்பிள்ளை! சொல்லி வாய மூடல… இங்க பாரு, லாரி வந்துடுச்சு!” என்றார்.

மருதுவின் வீட்டின் வாசலுக்கு ஓரமாக வந்து நின்ற லாரிகளிலிருந்து செங்கற்களும், மணலும் சடசடவென வந்து இறங்கின.

“என்னடா இது… வீட்ல திடீர்னு செங்கல்லும் மணலும் வந்து இறங்குது?” என்று மயிலா ஆச்சரியத்தோடு வெளியே வந்து பார்க்க…குப்பனும் ராயனும் வீட்டிற்குள் வந்து மயிலாவிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

“அம்மா… மாடில அட்டாச்டு பாத்ரூம் கட்டச்சொல்லி அப்பாவும் சொன்னாராம்…தினமும் அதிகாலை நாலு மணிக்கு அவ கீழ வந்து குளிச்சிட்டுப் போறா… அந்தச் சிரமம் இனி அவளுக்கு வேண்டாம்,” என்றான்.

அதைக் கேட்ட மயிலா, ” ஓஹோ… இத்தனை வருஷமா பொண்டாட்டிமேலயும், மவமேலயும் இல்லாத அக்கறை… மருமகள் வந்ததும் இந்த ஐயாவுக்கு உடனே வந்துடுச்சோ?” என்று நக்கலாகச் சொன்னாலும், தன் கணவர் மருமகள் மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் நினைத்துப் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.

அன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருந்ததால், குப்பன் உடனே ஆட்களை இறக்கித் தோட்டத்தில் வேலையைத் துரிதமாக ஆரம்பித்தார். சுவர்கள் எழுப்புவதற்கும், மாடிக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் கொடுப்பதற்குமான ஆரம்பக் கட்ட வேலைகள் விறுவிறுவென நடந்தன.

மாலை வேளையில், வழக்கம் போல் மருத்துவமனை டியூட்டி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்தாள் எழில்.வீட்டின் வாசலை நெருங்கியவளுக்குத் தூரத்திலேயே பெரிய மாற்றங்கள் தெரியத் தொடங்கின. வாசலில் மலை போலக் குவிந்து கிடந்த மணல் மேட்டையும், அடுக்கப்பட்டிருந்த செங்கற்களையும் பார்த்தவள் ஆச்சரியத்தில் உறைந்துபோனாள்.

தோட்டத்துப் பக்கமிருந்து கொத்தனாரின் உரத்த குரல்களும், சிமெண்ட் கலக்கும் சத்தமும் கேட்க, ‘என்ன இது… திடீர்னு இங்க என்ன கட்டிடம் எழும்பப் போகுது?’ என்ற யோசனையுடனும் குழப்பத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தவள் “என்னத்தை… வீட்ல திடீர்னு என்ன வேலை நடக்குது?” என்று மயிலாவிடம் கேட்டாள்.

மயிலா சிரித்துக்கொண்டே, “எல்லாம் உன் புருஷனும் மாமனாரும் பண்ணுற வேலைதான்! நீ தினமும் அதிகாலை நாலு மணிக்கே கீழ வந்து குளிச்சிட்டு போற சிரமத்தைப் பார்த்துட்டு, உன் மாமனார் மாடி அறையிலேயே உனக்காக தனியா பாத்ரூம் கட்ட ஏற்பாடு பண்ணியிருக்கார்,” என்று விவரத்தைச் சொன்னார்.

அதைக் கேட்டதும் எழிலுக்கு நெஞ்செல்லாம் பூரித்துப் போனது. தன் சின்னச் சின்னச் சிரமத்தைக் கூட உணர்ந்து, யோசித்து உடனே அதைச் சரிசெய்ய முனைந்த மாமனாரின் அக்கறையை நினைத்து மனதிற்குள் அளவற்ற பெருமையும் மதிப்பும் அவர்மேல் பொங்கியது.மாடியில் பாத்ரூம் கட்டும் வேலைகள் குப்பன் மேற்பார்வையில் விறுவிறுவென நடந்தன.

சுவர்கள் எழுப்பி, டைல்ஸ் ஒட்டி, குழாய் இணைப்புகள் கொடுத்து, மாடி அட்டாச்டு பாத்ரூம் வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகி முழுமை பெற சரியாக இரண்டு வாரங்களுக்கு மேலாகின.

அதன்பின்னர், அதிகாலை எழுந்து கீழே ஓடும் சிரமமின்றி, அன்பின் அடையாளமாக எழும்பிய அந்த அறையிலேயே  நிம்மதியாகத் தன் காலைக் கடன்களை முடிக்கத் தொடங்கினாள்.

மாடியில் அட்டாச்டு பாத்ரூம் வசதி வந்ததில் எழிலுக்கு அதிகாலைக் குளியல் சிரமம் தீர்ந்ததே தவிர, அதனால் இன்னொரு புதுச் சிக்கல் உருவானது!

இத்தனை நாளாக “கீழே அத்தை மாமா இருக்காங்க, பாத்ரூமுக்குக் கீழே போகணும்” என்று சொல்லி ராயனைச் சமாளித்துத் தப்பித்துக் கொண்டிருந்த எழிலுக்கு, இப்போது அந்தச் சாக்கும் கைநழுவிப் போனது.

அறைக்குள்ளேயே பாத்ரூம் வசதி வந்துவிட்டதால், ராயனின் குறும்புத்தனங்களுக்கும் காதல் அக்கிரமங்களுக்கும் எல்லையே இல்லாமல் போயின!

அதிகாலையில் அவள் குளிக்கப் போகும் நேரத்தைப் பார்த்து, “நான் வேணா வந்து உதவி பண்ணட்டுமாடி நர்சம்மா?” என்று கதவருகே வந்து நிற்பதும், குளித்துவிட்டு ஈரக் கூந்தலோடு வெளியே வரும் அவளைத் தப்பித்துப்போக விடாமல் வழியிலேயே வளைத்துப் பிடிப்பதும் என அந்த அசுரனின் சேட்டைகள் நாளுக்கு நாள் கூடியது.

அவனது இந்த அசுரத்தனமான காதலையும் குறும்புத்தனங்களையும், அந்த மாடி அறைத் தனிமையில் சமாளிப்பதுதான் இப்போது எழிலுக்கு அன்றாடப் பெரும் பாடாகவும், அதேசமயம் நெஞ்சை இனிக்கும் பெரும் பாக்கியமாகவும் மாறியிருந்தது!

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!