நாட்களும் பறந்தோட, திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எழில் தன் சொந்த ஊரான சிதம்பரத்திற்குப் புறப்பட வேண்டியதாக இருந்தது.
அன்று இரவு, வழக்கம்போலக் காட்டுப் பகுதியில் அந்த மரத்தின் கீழே இருவரும் உட்கார்ந்திருந்தனர். எழிலைத் தன் மடியில் இருத்தி, இடுப்போடு சேர்த்து அணைத்தபடி, அவள் காதோரம் மென்மையாகப் பாடத் தொடங்கினான்.
“ஒருநாளும் உனை மறவாத இனிதாக வரம் வேண்டும்…”
அவனது காந்தக் குரலின் மயக்கத்தில் அப்படியே ராயனின் அகன்ற நெஞ்சின் மேல் சாய்ந்தவள், “உங்களுக்கு எப்படி என்மேல இவ்வளவு காதல் வந்துச்சுங்க?” என்று உருகிக் கேட்டாள்.
“எனக்கு அது தெரியலடி… ஆனா உன்மேல எனக்கு அப்படியொரு காதல் வந்துடுச்சு! காரணமெல்லாம் கேட்டா எனக்குச் சொல்லத் தெரியாது,” என்றவன், அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“அடுத்த முறை நாம சந்திக்கும்போது… ‘மிஸஸ் இளந்திரையனா’ தான் நான் உங்களைச் சந்திப்பேன்,” என்று எழில் சொல்ல…”அதுவும் எனக்குக் கஷ்டம்தான்டி… பக்கத்துல இருந்தா ஓடிவந்து நைட்ல உன்னைப் பார்ப்பேன். இந்தத் திருட்டு முத்தமெல்லாம் அடுத்த பத்து நாளைக்குக் கிடைக்காதே… நான் என்னடி பண்ணுவேன்?” என்று ராயன் புலம்பினான்.
“ஏண்டா மாங்கா மண்டையா… நான் உன்னைப் பிரிஞ்சு போறேன்னு வருத்தப்பட்டுச் சொல்றேன், உனக்கு முத்தம் கிடைக்கலன்னு கவலையா?” என்று கோவப்பட்டு அவனது அடர்ந்த தாடியைப் பிடித்து இழுத்தாள்.
“ஏய்… வலிக்குதுடி! விடுடி!” என்று சிரித்தவன், “எனக்கு எல்லாமே வேணும்டி அரசி! இதுல அது வேணுமா இது வேணுமான்னுலாம் பகுத்துப் பார்க்க முடியாது… இருந்தாலும் சரி, கொஞ்சம் உடம்பை தேத்துடி… அப்பதான் இந்த வனவாசியைக் கல்யாணத்துக்கு அப்புறம் சமாளிக்க முடியும்!” என்றான் குறும்பாக.
“அதையும் பார்க்கலாம்!” என்று எழில் புன்னகைத்தாள். மறுநாள் காலையில், தனது லக்கேஜோடு மருதுவிடமும் மயிலாவிடமும் விடைபெற்றாள். ராயன் அவளைத் தன் புல்லட்டில் அழைத்துச் சென்று ரயில்வே ஸ்டேஷனில் வழியனுப்பி வைத்தான்.
டிரெயின் கிளம்பித் தூரத்தில் மறையும் வரை, கண்களில் தேங்கிய நீரை மறைத்தபடி அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான். எழிலுக்கும் அவனைப் பிரிந்து செல்வது பெரும் பாரமாகத்தான் இருந்தது.
சிதம்பரம் வீட்டில் சுற்றமும் நட்பும் சூழ முகூர்த்தக்கால் ஊன்றி, மங்கல இசையோடு நலங்கு விழா தொடங்கியது. அதோ இதோவென ஐந்து நாட்கள் நலங்குச் சடங்குகள் விமரிசையாக நடந்து முடிந்தது.
பொண்ணழைப்பு சடங்கிற்காக முதல் நாளே மருது குடும்பத்தில் இருந்து முக்கியமான சிலர் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கே இரண்டு லாட்ஜ்களில் வசதியாக அறைகள் எடுத்துத் தங்க வைக்கப்பட்டிருந்ததால் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.
மறுநாள் காலையில் நல்ல நேரத்தில் பரிசம் போட்டு, எழிலை அழைத்துக் கொண்டு மேதினூரை நோக்கி இரண்டு பேருந்துகளில் புறப்பட்டவர்களோ இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மேதினூர் மலைக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே பொண்ணழைப்புச் சடங்கு மிகவும் விமரிசையாக நடந்து முடிந்தது.
ஏற்கனவே எழில் தங்கியிருந்த வீட்டிலேயே அவள் தங்க, வந்த உறவினர்களுக்கும் அதே ஊரிலேயே தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன.
மறுநாள் அதிகாலை… மலையம்மன் கோயில் வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.அருணோதயத்தின் மெல்லிய சிவப்பில், நாதஸ்வரத்தின் கெட்டிமேளச் சத்தமும் தவிலின் ஓசையும் மலையடிவாரமெங்கும் எதிரொலித்தன. பட்டு வேட்டிச் சட்டையில், நெற்றியில் திருநீற்றுப் பட்டையோடு ராயன் கம்பீரத்தின் உருவமாக மணமேடையில் வீற்றிருந்தான்.
சிறிது நேரத்தில், சிவப்புக் கூறைப் புடவையில், தலைநிறைய மல்லிகைப் பூவோடும் மங்கல ஆபரணங்களோடும் தேவதை போல நடந்து வந்தாள் எழிலரசி.
அவளது பாதங்கள் தளர் நடைபோட, விழிகள் மணமேடையில் இருக்கும் தன் அசுரனை மட்டுமே தேடின. ராயனின் பார்வையும் அவள் மீது நிலைக்க, இருவரின் விழிகளும் காதலால் பேசிக்கொண்டன.
ஐயர் வேத மந்திரங்களை முழங்க, கெட்டிமேளம் உச்சக்கட்டத்தை அடைந்தது.பெரியோர்களின் ஆசியோடு, எழிலின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுத் திருமாங்கல்யத்தைக் கட்டினான் ராயன்.எழிலின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் பனிய, ராயன் அவளது நெற்றியில் அமுதம் போன்ற முத்தத்தைப் பதித்துத் தன் மனைவியாக அவளைச் சுவீகரித்துக் கொண்டான்.
நேரமும் கடகடவெனக் கடந்தது. திருமணம் முடிந்து ஊர் விருந்தும் சடங்குகளும் நிறைவடைந்த பிறகு, அன்று இரவு ராயன் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டன.
ரோஜாப் பூக்களின் நறுமணமும், சந்தன ஜாஸ்மின் வாசனையும் மாடி வீடு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. அக்காவும் தோழியும் சேர்ந்து எழிலை மெல்லிய பட்டுப் புடவையில், தலைநிறைய மல்லிகைப் பூ சூட்டி, நிலவு போல அலங்கரித்தார்கள்.
மாடிப் படிவளைவில் அவளைக் கொண்டுபோய் விட்டவர்கள், அவளது கையிலிருந்த பால் சொம்பைக் கொடுத்து, “பத்திரமா போயிட்டு வாடி!” என்று குறும்போடு கிசுகிசுத்துச் சிரித்தனர்.பின்னர் அனைவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு, எழில் தங்கியிருந்த வீட்டிற்கு உறங்குவதற்காகச் சென்றுவிட, அந்தப் பெரிய மாடி வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே தனிமையில் இருந்தனர்.
படிகளில் எழிலின் காலடிச் சலங்கைச் சத்தம் மெல்லக் கேட்க, ராயனின் நெஞ்சில் எதிர்பார்ப்பின் துடிப்பு அதிகரித்தது. மாடி அறையின் வாசலில் பால் செம்போடு வந்து நின்றவளைக் கண்டதும், அவனின் பார்வையில் காதலும் மோகமும் ஒட்டுமொதாகப் பொங்கிப் பிரவாகமெடுத்தன.
மெல்ல உள்ளே நுழைய முயன்றவளின் கரத்தைப் பற்றி, அறைக்குள் இழுத்துச் சத்தமில்லாமல் கதவைச் சாத்தினான்.
“என்னங்க… பால்…” என்று பதற்றத்தில் எழில் முணுமுணுக்க, அவளது கையிலிருந்த பால் செம்பை வாங்கி அருகிலிருந்த மேஜையில் வைத்தவன், அவளைத் தன் இரு கரங்களாலும் வளைத்துத் தூக்கிக்கொண்டான்.
“ஐயோ… விடுங்க!” என்று அலறிய அவளது இதழ்களைத் தன் வலிய இதழ்களால் சிறைபிடித்தான். இத்தனை வருடக் காத்திருப்பு, ஏக்கம், தவிப்பு என அனைத்து உணர்ச்சிகளும் அந்த ஆழமான முத்தத்தில் வெளிப்பட்டன.
அவளை மெல்லக் கட்டிலில் சாய்த்தவன், அவளருகே அமர்ந்து அவளது பூச்சூடிய கூந்தலிலும், நெற்றியிலும் தன் கரங்களால் வருடினான். அவளது கண்கள் வெட்கத்தால் மூடிக்கொள்ள, அவளது இதழ்கள் லேசாக நடுங்கின.
“கண்ணைத் திறந்து என்னைப் பாருடி மிஸஸ் இளந்திரையன்…” என்று அவன் கரகரத்தக் குரலில் காதோரம் சொல்ல, எழில் மெல்லக் கண் திறந்து தன் கணவனின் கம்பீரமான முகத்தைப் பார்த்தாள்.
“அன்னைக்குச் சுனையில என்னடி சொன்னே? நான் எதுக்கும் லாயக்கே இல்லைன்னுதானே?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் குறும்போடு கேட்க…”ஐயோ… அது சும்மா விளையாட்டுக்குக் சொன்னதுங்க!” என்று எழில் தன் இரு கரங்களாலும் கண்களை பொத்திக் கொண்டாள்.
“விளையாட்டுதானே… ஆனா இந்த அசுரன் விளையாட ஆரம்பிச்சா நீ தாங்க மாட்டியேடி!” என்றவன், அவளது நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்தான். அவளது சேலை முந்தானையை மெல்ல விலக்கி, அவளது உடலின் ஒவ்வொரு அணுவிலும் தன் முத்தங்களைப் பதித்தான்.
அவனது தீண்டலில் எழிலின் உடல் தணலாகக் கொதித்தது. இத்தனை நாளாக அவனிடமிருந்து தள்ளி நின்ற அந்த இடைவெளி இப்போது மொத்தமாக உருகி மறைந்தது. அவனது அகன்ற நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அவனது கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
“இந்த எழிலரசி… இனி எனக்கு மட்டும்தான் சொந்தம்!” என்று அவளது காதோரம் முணுமுணுத்தவன், அவளது சம்மதத்தோடும் முழு விருப்பத்தோடும் அவளோடு ஒன்றிணைந்தான்.
ஜன்னல் வழியே நுழைந்த மெல்லிய நிலவொளியும், தென்றல் காற்றும் அந்த அறையைத் தழுவிச் செல்ல, இருவரின் ஆன்மாவும் காதலின் கடலில் மூழ்கித் திளைத்தது. அந்த இரவு, அவர்களின் காதலுக்கு என்றும் மறக்க முடியாத சாட்சியாக அமைந்தது.இரவு கடந்து விடியலின் மெல்லிய வெளிச்சம் ஜன்னல் திரைகளின் வழியே அறைக்குள் பரவியது.
கட்டிலில், ராயனின் அகன்ற மார்பின் மீது தன் தலையைச் சாய்த்து, அவனது கரங்களுக்குள் அடக்கமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் எழில். அவளது கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகைப் பூக்களின் வாசம் அறை முழுதும் இன்னும் வீசிக்கொண்டிருந்தது.
ராயனுக்கு முதலிலேயே விழிப்பு வந்துவிட்டது. தன் மார்பில் படுத்துறங்கும் தன் அரசியின் அமைதியான முகத்தையும், நெற்றியில் கலைந்து கிடந்த சுருள் முடிகளையும் பார்த்தவனின் மனதிற்குள் அளவற்ற நிறைவும் சந்தோஷமும் பூத்துக் குலுங்கின.
மெல்ல விரல்களால் அவளது முடிகளை ஒதுக்கி, அவளது நெற்றியில் அமுதமாக ஒரு முத்தத்தைப் பதித்தான்.அவனது மீசையின் உருவிலும் முத்தத்தின் சூட்டிலும் மெல்லக் கண் விழித்தாள்.
எதிரே தன்னையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனின் முகத்தைக் கண்டதும், நேற்றைய இரவின் நினைவுகள் சட்டென நினைவுக்கு வர, அவளது முகமும் கன்னங்களும் செங்காந்தள் மலராகச் சிவந்தன.
வெட்கத்தால் அவனது மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
“என்னடி மிஸஸ் ராயன்… விடிஞ்ச பிறகும் இவ்வளவு வெட்கமா?” என்று அவளது இடுப்பை வளைத்து நக்கலாகக் கேட்க…”போங்க இளன்… கண்ணைப் பார்க்கவே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, முதல்ல விடுங்க!” என்று அவனது நெஞ்சில் லேசாகக் குத்தினாள்.
“ஏய் இப்போது எப்படி கூப்பிட்ட என்று ராயன் அதிர, ஒன்னும் சொல்லலையேனு சமாளித்தாள். இல்லை டி எதோ என் காதில் விழுந்தது என்றபடி அவளை பார்க்க எதுவும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.பிரம்மையோ என்று முணுமுணுத்தவன்,விடுறதுக்காடி இத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்து உன்னைக் கல்யாணம் பண்ணினேன்?” என்றவன், அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளது உதடுகளை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றான்.
அப்போது திடீரெனக் கீழே வீட்டின் வாசலில் கதவு தட்டும் சத்தமும், “மயிலா… ரெண்டு பேரையும் எழுப்புடி! கோயிலுக்கு போக நேரம் ஆச்சு!” என்று மருதுவின் உரத்தக் குரலும் கேட்டது.அதைக் கேட்டதும் எழில் பதறியடித்துக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயல, ராயனோ அசால்ட்டாக அவளது கையைப் பிடித்து இழுத்து, “இருடி… எங்க அப்பனுக்கு வேற வேலையே இல்லை! இந்த நேரத்துல வந்து கத்திக்கிட்டு…” என்று சலித்துக்கொண்டான்.
“அய்யோ விடுங்க! அத்தை, மாமா எல்லாரும் கீழ வந்துட்டாங்க… முதல்ல கைய விடுங்க, நான் போய் குளிச்சிட்டு வர்றேன்,” என்று அவனைத் தள்ளிவிட்டு, சிதறிக்கிடந்த தன் புடவையை எடுத்துச் சுற்றிக்கொண்டு குளியலறைக்கு ஓடினாள்.
அவள் வெட்கத்தோடு ஓடுவதைப் பார்த்தவன் உரக்கச் சிரிக்க, அந்தப் புதுக் காலை அவர்களின் திருமண வாழ்க்கையின் அழகிய தொடக்கமாக மலர்ந்தது.திருமண முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டது.
ராயனின் அளவற்ற அன்பிலும் அரவணைப்பிலும் எழிலின் நாட்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு கழிந்தன. ஆனால், அவளுக்கு ஒரே ஒரு சின்னச் சிரமம் மட்டும் இருந்தது.
அது அந்த வீட்டின் அமைப்பு!
மாடி அறையில் அட்டாச்டு பாத்ரூம் வசதி இல்லாததால், தினமும் அதிகாலை நான்கு மணிக்கே திருட்டுத்தனமாக எழுந்து கீழே போக வேண்டியிருந்தது.
மாமனாரும் மாமியாரும் விழிப்பதற்கு முன்பே தோட்டத்தில் இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு, தலையைத் துவட்டியபடி மீண்டும் மாடிக்கு ஓடிவந்துவிட வேண்டும்.இந்த ஒரு விஷயத்தைத் தவிர, அந்த வீட்டில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனால், எழில் தினமும் அதிகாலையிலேயே படபடப்போடு எழுந்து ஓடுவதை ராயன் ஒரு வாரம் கழித்துதான் கவனித்தான்.
அன்று இரவு… கணவன் மனைவியிடையே நிறைவான, ஆழமான கூடல் முடிந்து இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி அயர்ந்து தூங்கினர்.
அதிகாலை வேளையில், தூக்கத்தில் தன் வலது கையைத் தூக்கி மனைவியின் மீது போடப் போனான். ஆனால், பக்கத்தில் இடம் காலியாக, மெத்தை குளிர்ந்து கிடந்தது.
பட்டென்று கண்ணைத் திறந்தான்!
“அரசி…” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தான். அறையில் அவளைக் காணவில்லை. கதவின் தாழ்ப்பாள் விலக்கப்பட்டு லேசாகத் திறந்திருப்பது வெளிச்சத்தில் தெரிந்தது.
‘எங்கே போனா இவ்வளவு காலையிலேயே?’ என்ற யோசனையோடு சடாரெனக் கட்டிலில் இருந்து எழுந்தவன், இடுப்பு கைலியை சரி பண்ணிய படி வேகமாகக் மரப்படிகளில் இறங்கி கீழே வரவும், வீட்டின் கீழ்ப்பகுதி இருட்டாகத்தான் இருந்தது. சமையலறை, கூடம் எங்கும் அவளைக் காணவில்லை.
பின்வாசல் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்துத் தோட்டத்துப் பக்கம் வந்தான். அங்கே அமைதியான அந்த அதிகாலை வேளையில், பாத்ரூமுக்குள் தண்ணீர் ஊற்றும் சத்தம் ‘சளக் சளக்’ எனப் மெலிதாகக் கேட்டது.
‘ஓ… மேடம் இந்த நேரத்துல குளிச்சுக்கிட்டு இருக்காங்களா!’ என்று அப்போதுதான் அவனுக்கு விஷயம் புரிந்தது.
பனி சிந்தும்…