Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 24

CHAPTER 24

பனித்துளி 24

By seema · November 3, 2026

0

திகைத்துப்போய் நிற்பவளின் முகபாவனையைப் பார்த்து அதற்கு மேல் ராயனுக்குச் சிரிப்பை அடிக்க முடியவில்லை.

“என்னடி… நிஜமாவே கல்யாணம்னு நினைச்சு பயந்துட்டியா?” என்று மீசையை முறுக்கியபடியே உரக்கச் சிரித்தான்.

எழிலோ கோபத்தில் கொந்தளித்து, “விளையாடுறீங்களா? என்ன பேச்சு பேசுறீங்க?” என்று  கையை ஓங்கினாள்.

அவளது கையை லேசாகப் பிடித்துத் தடுத்தவன், “சரி சரி, மேடம் ரொம்பக் சூடாகாதீங்க! நான் உன்னைக் கூப்பிட வந்தது அதுக்கு இல்ல… கிளம்பு, நாம காட்டுக்குள்ள சுத்திப் பார்க்கப் போறோம்!” என்றான் கம்பீரமாக.

எழில் புரியாமல் புருவத்தை உயர்த்தி “காட்டுக்குள்ளயா? எதுக்கு? எனக்கு ஹாஸ்பிடலுக்கு நேரமாகுது… நான் வரலை!” என்று மறுத்தாள்.

“இன்னைக்கு உனக்கு டியூட்டி இல்லைடி  அரசி! கேம்ப் முடிஞ்சு வந்ததால இன்னைக்கு உனக்கு லீவுன்னு உங்க டாக்டர் சொல்லியாச்சு. போதாததற்கு உன் மாமனார் மாமியார்( ராவணன் அப்பா அம்மா) கிட்டயும் சொல்லிட்டேன் அதனால எந்தச் சாக்கும் சொல்லாம அமைதியா கிளம்புடி!” என்று அதட்டலாகச் சொன்னான்.

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு தேவையில்லாம என்னை இப்படி வம்பு இழுக்குறீங்க?” என்று அவள் சலித்துக்கொள்ள…ராயன் அவளருகே நெருங்கி, “மூணு வருஷமா என் நெஞ்சுக்குள்ள பூட்டி வச்சிருந்த ஆசையையெல்லாம் உனக்குக் காட்டணும்டி. இந்த மலையும் காடும் எனக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவுக்கு உனக்கும் அதைச் சுத்திக் காட்டணும்னு தோணுச்சு… மரியாதையா கிளம்புறியா, இல்ல தூக்கிட்டுப் போகவா?” என்று தன் அசுரத்தனமான பார்வையோடு கேட்டான்.

அவனது அந்தப் பிடிவாதத்திற்கு முன்னால் தன் பேச்சு செல்லாது என்பதை உணர்ந்த எழில், வேறு வழியின்றி உள்ளே போனவள் வேகமாக டிரஸ் மாற்றிக்கொண்டு பல்லு விலக்கி முடியை சரிசெய்துகொண்டு, “இருங்க… கதவைப் பூட்டிட்டு வர்றேன்,” என்றாள்.

பின்னர் இருவரும் அடர்ந்த கானகத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். பனிமூட்டம் இன்னும் விலகாத அந்த அதிகாலை வேளையில், உயரமான மரங்களும், காட்டு மலர்களின் நறுமணமும், சில்லென்ற காற்றும் அவர்களை வரவேற்றன.

சுற்றிலும் ஆள்நடமாட்டமே இல்லாத அந்த அமைதியான அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தவன், “வாடி… உனக்கு ஒரு இடத்தைக் காட்டுறேன்,” என்று அவளது கையைப் பிடித்துக் காட்டுப் பாதைக்குள் அழைத்துச் சென்றான்.

“ஏனோ அவனிடமிருந்து கையை விலக்க அவளுக்கு தோணவில்லை”காட்டின் பசுமையையும், ராயனின் இந்த எதிர்பாராத காதலையும் கண்டு எழிலின் மனம் மெல்ல கரையத் தொடங்கியது.

அடர்ந்த காட்டுப் பாதைக்குள் ராயன் அவளது கரங்களைப் பற்றி அழைத்துச் செல்ல, சில்லென்ற கானகத்துத் தென்றல் எழிலின் கூந்தலைக் கலைத்துப் போட்டது. சுற்றிலும் அரிய வகை மரங்களும், காட்டுப் பூக்களின் மணமும், பறவைகளின் கூச்சலும் அந்த இடத்தையே ஒரு தனி உலகமாக மாற்றியிருந்தன.

கொஞ்ச தூரம் நடந்ததும், அடர்ந்த மரங்களுக்கு நடுவே பளிங்கு போலத் தெளிந்த நீரைக் கொண்ட ஒரு சிறிய இயற்கைச் சுனை கண்ணில் பட்டது. பாறைகளின் வழியே தண்ணீர் சலசலவென வழிந்தோடும் அழகைக் கண்டு எழில் மெய்மறந்து நின்றாள்.

“எப்படி இருக்குடி இந்த இடம்?” என்று அவளருகே வந்து நின்று மெல்லிய குரலில் கேட்டான்.

“ரொம்ப அழகா இருக்கு…” என்று அறியாமலேயே மனதாரச் சொன்னவள், சட்டெனச் சுதாரித்து அவனைக் கூர்மையாகப் பார்த்தவள், “ஆனா எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?”ராயன் பாறையின் மீது சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, “மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை விட்டுட்டுப் போனப்போ, நான் தனியா வந்து உட்கார்ந்த இடம்டி இது. என் கோபம், தவிப்பு, காதல் எல்லாத்தையும் இந்தச் சுனைத் தண்ணியும் இந்தக் காடும் மட்டும்தான் பார்த்துச்சு,” என்றான்.

அவனது குரலில் எப்போதும் இருக்கும் நக்கலுக்குப் பதிலாக, ஒரு ஆழமான வலி இழையோடியது.ராயனின் அந்தப் பேச்சும், பார்வையும் எழிலின் நெஞ்சைக் கனக்கச் செய்யவும் “அது வந்து.. பழையதை ஏன் இப்போ பேசுறீங்க?” என்று அவள் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.

“ஏன்னா… அன்னைக்கு நீ மறுத்துட்டுப் போன அதே காதல் தான்டி, இன்னைக்கும் என் நெஞ்சுக்குள்ள ஆறாத காயமா இருக்கு! நீ என்னதான் என்னை வெறுக்கிற மாதிரி நடிச்சாலும், உன் மனசுல என்னைப்பத்தின யோசனை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்டி,” என்று சொல்லிவிட்டுச் சட்டென அவளது கரங்களைப் பற்றித் தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான்.

ராயனின் இதயத் துடிப்பு மிக வேகமாக அடிப்பதை எழில் தன் கையால் உணர்ந்தாள்.

“இந்தத் துடிப்பு உனக்காக மட்டும்தான்டி துடிக்குது… இன்னமும் உன்னால என்னை ஏத்துக்க முடியாதா அரசி?” என்று கெஞ்சலும் காதலும் கலந்த குரலில் கேட்க, அவளோ முற்றிலும் உறைந்து போனாள்.

ராயனின் அசுரத்தனமான கோபத்திற்குப் பின்னே இருக்கும் இந்த ஆழமான காதலைக் கண்டவளுக்கு, இனிமேலும் தன் மனதை மறைக்க முடியாது என்பது புரிந்தது.

கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்க்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இல்லைங்க… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. மூணு வருஷமா நான் தினமும் உங்களையே நினைச்சுக்கிட்டு எல்லாம் வாழ்ந்தேனு பொய் சொல்ல விரும்பல. என்னைக்காவது ஒரு நாள், அபூர்வமா தான் உங்களைப் பத்தின ஞாபகம் எனக்கு வரும். ஆனா, இந்த ஊருக்கு எனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சு, உங்களை மறுபடியும் பார்த்த பிறகுதான் அந்தப் பழைய நினைவுகளும் உங்களைப் பத்தின யோசனையும் என்னை அறியாமலேயே அதிகமாகிடுச்சு…” என்று உண்மையை உடைத்தாள்.

ராயன் அமைதியாக அவளது முகத்தையே பார்க்க, எழிலின் குரல் தழுதழுத்தது. தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த அந்தப் பெரிய பாரத்தை அவனிடம் இறக்கி வைக்கத் தொடங்கினாள்.

“எனக்கு உங்க மேல ஆசை இருந்தாலும், நாம சேர்ந்த வாழ முடியாது இளன். எங்க குடும்ப நிலைமை உங்களுக்குத் தெரியாது…” என்று விம்மியவளைப் பார்த்தான்”

“பாறையின் மீது உடைந்து போய் உட்கார்ந்தவள், என் அக்கா காலேஜ் படிக்கும்போது, வேற மதத்துக்காரரை காதலிச்சு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அது நடந்து இப்ப ஆறு வருஷம் ஆச்சு… அன்னைக்கு ஓடிப்போனவதான், அதன்பிறகு எங்க குடும்பத்துக்கும் அவளுக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அக்கா பண்ணின அந்த காரியத்தால எங்க குடும்பத்தோட மானமே போயிடுச்சு. எங்க அப்பா அன்னைக்கு அடைஞ்ச மானக்கேடும், பட்ட அவமானமும் கொஞ்சம் நஞ்சம் இல்லை…”

“அக்கா போனதுக்கப்புறம் எங்க அப்பா ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு அக்கா ஓடிப்போன விஷயம் கேள்விப்பட்டு, அப்பாவோட அக்கா-தங்கையும் சொந்தக்காரங்களும் ஒரு குற்றவாளி போல எங்க அம்மாவை நிக்க வச்சு பொம்பள புள்ள வளர்க்க துப்பு இல்லன்னு எவ்வளவு கேவலப்படுத்தினார்கள் என்று எனக்கு தான் தெரியும்.”

“அம்மாவும் அந்த வேதனையிலயே தினமும் செத்துச் செத்து பிழைச்சாங்க. இப்ப நானும் அதே மாதிரி காதலிச்சு, என் குடும்பத்தை எதிர்த்து வந்துட்டா… என்னால என் குடும்பத்தை ஆழமான குழியில தள்ள முடியாது இளன்! என் அப்பா அந்த அவமானத்தைத் தாங்காம ஏதாச்சும் பண்ணிப்பாரு… அம்மாவும் உயிரோடவே இருக்க மாட்டாங்க…”

“என் குடும்பத்தோட நிம்மதியை அழிச்சுட்டு, அவங்க கண்ணீருக்கு மேல எனக்கு ஒரு வாழ்க்கை தேவையா சொல்லுங்க? உங்களை எனக்குப் பிடிச்சிருந்தாலும், என்னால என் பெத்தவங்களை விட்டுக் கொடுக்க முடியாது” என்று ராயனின் கரங்களைப் பற்றி, கதறி அழுதாள்.

பனி சிந்தும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!