Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 23

CHAPTER 23

பனித்துளி 23

By seema · November 2, 2026

0

டவுனில் இருந்து மலை ஏறும் பாதை வரை இருவருமே அமைதியாகத்தான் வந்தார்கள். ஆனால், அந்த மௌனம் ராயனுக்குப் பிடிக்கவில்லை.

“ஒய்… அரசி மேடம், ஏதும் பேச மாட்டேங்கிறீங்க?” என்று பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளைப் பார்த்தபடி ராயன் கேட்க…எழில் உடனே கடுப்பாகி, “என்ன புதுசா அரசி-கொரசினு?, என் பேர் எழிலரசி.அமைதியா நீங்க வண்டி ஓட்டுறதா இருந்தா நான் உங்கக்கூட வர்றேன்! இல்லைனா என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்க,” என்றாள் சீற்றத்தோடு.

“ஓ… உனக்கு அவ்வளவு துணிச்சல் வந்துடுச்சாடி?” என்றவன், சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லாத அந்த மலையடிவாரப் பாதையில் சட்டென வண்டியைப் பிரேக் அடித்து நிறுத்தியவன் “சரி, இறங்கி நடந்தே வாடி! உன் திமிர் அப்பயாவது அடங்குதான்னு பார்ப்போம்!” என்று சீறினான்.

அவன் மிரட்டுகிறான் என்று நினைக்காமல், எழிலும் பிடிவாதமாக வண்டியிலிருந்து சட்டெனக் கீழே இறங்கிவிட்டாள்.

ராயனும் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை; புல்லட்டின் ஆக்சிலரேட்டரை முறுக்கி, அடர்ந்த அந்த மலைப்பாதையில் வண்டியைப் புகைப்பறக்க வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டான்.

அவன் போன திசையையே கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்த எழில், வேறு வழியின்றித் தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு நடந்து வரத் தொடங்கினாள்.சிறிது நிமிடங்களுக்குப் பிறகுதான் அங்கிருக்கும் சூழலின் வீரியம் அவளுக்குப் புரியத் தொடங்கியது.

மாலைச் சூரியன் மேற்கே மெல்ல மறைந்து கொண்டிருக்க, மலையடிவாரத்தில் இருள் மெல்லப் படர ஆரம்பித்தது. வானம் செவ்வானமாக மாறி, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் கருமை ஆட்கொள்ளத் தொடங்கியது.

சுற்றிலும் பிரம்மாண்டமாக உயர்ந்து நின்ற பெருமரங்கள், காற்றில் அசையும்போது எழும் ஒருவித உருமல் சத்தம், கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளின் உரத்த கீச் கீச் குரல்கள்… எல்லாமே சேர்ந்து அந்தப் பாதையை அச்சுறுத்தலாக மாற்றின.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னே பின்னே வாகனமோ, மனித நடமாட்டமோ தென்படவே இல்லை.பயம் நெஞ்சை அடைக்க, “அடப்பாவிப் பயலே! பேசாம காசு கொடுத்து ஏதாச்சும் ஆட்டோ பிடிச்சாவது வந்திருப்பேன்… இல்லைனா இன்னைக்கு நைட்டு அங்கேயே கேம்ப் ஹாஸ்டல்ல தங்கிட்டு காலையில வந்திருப்பேன்! இப்படிப் பாதியிலேயே விட்டுட்டுப் போயிட்டானே சண்டாளன்! மனுஷனாடா நீ எல்லாம்?” என்று ராயனை மனதிற்குள் கண்டபடி திட்டிக்கொண்டே வேகமாக நடந்து வந்தாள்.

ஒவ்வொரு எட்டையும் பயத்தோடு வைக்கும்போது, காட்டின் நிழல்கள் கூட அவளை மிரட்டுவது போலத் தோன்றின.

“மலையில இருந்து கீழே வேலைக்கு இறங்கிப் போறவங்க யாராச்சும் கண்டிப்பா இந்த வழியா வராமல் போயிடுவாங்க… அவங்ககிட்ட உதவி கேட்டு ஊருக்குப் போயிடலாம்,” என்று மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட எழில், கால்களை வேகமாக எடுத்து வைத்து நடந்தாள்.

ஆனால், சில மீட்டர் தூரம் வண்டியை ஓட்டிச் சென்று, பாதையின் ஓரமாகப் புல்லட்டை நிறுத்தியவனுக்கு என்றோ நண்பர்களோடு விளையாடுவதற்காக வாங்கிப் பெட்ரோல் டேங்க் பையில் போட்டு வைத்திருந்த பேய் முகமூடி ஞாபகம் வந்தது.

அதை உடனே வெளியில் எடுத்த ராயனுக்குள் வம்புத் தனம் எல்லை மீறியது.”அடியேய்… உன் தைரியம் எவ்வளவு பெரியதுன்னு இன்னைக்கு நான் பார்க்காம விடப் போறதில்லைடி!” என்று மனதிற்குள் நக்கலாக நினைத்துக் கொண்டவன் சாலையோரப் பாறை மீது ஏறி, காட்டுப் பகுதிக்குள் குதித்து, எழிலிற்கு முன்னதாகவே அந்த பக்கம் ஓடிச் சென்றான்.

சில மீட்டர் தூரத்தில் எழில் பயத்தோடும் தவிப்போடும் முன்னும் பின்னும் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாக வருவது அவனுக்குத் தெரிந்தது.அவள் வரவிருக்கும் பாதையிலிருந்த ஒரு அடர்ந்த மரக்கிளையைக் கணக்குப் பண்ணி, விறுவிறுவென மரத்தில் ஏறிப் ஒளிந்து கொண்டான்.

எழில் சரியாக அந்த மரத்தைக் கடக்கும் அந்த நொடியில்… “பே…” என்று முகமூடியோடு அவள் முன்னே பொத்தென்று குதித்தான்!திடீரென்று இருட்டுக்குள்ளிருந்து தன் முன்னால் ஒரு உருவம் முகமூடியோடு வந்து குதிப்பதைப் பார்த்த எழில், “ஐயோ… அம்மா!” என்று அலறி அடித்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்த வழியிலேயே பின்னோக்கி ஓட்டம் பிடித்தாள்.

அவள் பயந்துபோய் அலறியடித்து ஓடுவதைப் பார்த்த ராயனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை! கையில் முகமூடியைப் பிடித்துக்கொண்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள்ளேயே விழுந்து விழுந்து சிரித்தான்!

சிறிது நிமிடங்களுக்குப் பின்னர் வேகமாக முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, “ஏய்… ஓடாதடி பிடி உஷா! நான்தான்டி…” என்று உரக்கக் கத்தினான்.

அவனது குரல் அடர்ந்த காட்டிற்குள் எதிரொலித்து அவளது காதில் விழ, எழில் சட்டென்று ஓட்டத்தை நிறுத்தினாள். பயத்திலும் அதிர்ச்சியிலும் நெஞ்சு படபடவென அடிக்க, மூச்சு வாங்கத் தன் இரு கைகளையும் முட்டிகளில் ஊன்றி வளைந்து நின்றாள்.

சிரிப்பு மாறாத முகத்தோடு அவளருகே வேகமாக வந்த ராயன், “இவ்வளவுதானாடி உன் தைரியம்? அதுக்குள்ள இப்படிப் பயந்து ஓடுறியே!” என்று கேலியாகச் சொன்னான்.அவன் பேசி முடிப்பதற்குள், எழில் தன் முழு பலத்தையும் திரட்டி “பளார்!” என அவன் கன்னத்தில் அறைந்தாள்.

அந்தத் திடீர் அறையில் மலையடிவாரத்தின் அமைதியே ஒரு நொடி உறைந்துபோனது. ராயன் அதிர்ச்சியில் தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுதாரிப்பதற்குள், அவனது சட்டையைப் பிடித்துக் கொண்ட எழில், “நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமாடா அசுரா… மிருகமே!” என்று கத்திக்கொண்டே ஓவென்று அழத் தொடங்கினாள்.

பயமும், கோபமும், அவனைக் கண்ட நிம்மதியும் ஒன்றாகச் சேர்ந்து அவளது கண்ணீராக வழிந்தோடியது.அவள் அழுகையைக் கண்டதும் ராயனின் முகத்திலிருந்த கேலி அப்படியே மறைந்தது.

நெஞ்சில் ஒரு மெல்லிய தவிப்பு பரவ, எழிலின் கைகளைப் பற்றி மெதுவாக இழுத்துத் தன் வலிமையான நெஞ்சோடு சேர்த்து இறுக்க அணைத்துக் கொண்டவன் “இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்டி…” என்றது போல் அவளது தலையைக் கோதி, தன் மார்போடு அவளை அணைக்க, அவளது பதற்றமெல்லாம் அவனது அந்த அசுரத்தனமான அரவணைப்பில் சிறுகச் சிறுகக் கரைந்து போயின.

அடர்ந்த இருட்டிலும், அந்த மலையடிவாரக் குளிரிலும் இருவரின் இதயத் துடிப்புகளும் ஒன்றையன்று தொட்டு உரையாடத் தொடங்கின.அவனது அகன்ற மார்பில் முகம் புதைத்து அழுத எழில், மெல்லச் சுதாரித்து அவனது நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள் “விடுங்க என்னை… தொட்டுப் பேசாதீங்க!” என்று மூச்சை வாங்கியபடி விலக முயல, ராயனோ அவளது கைகளைப் பற்றி மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

“இனிமே ஆயுசுக்கும் உன்னை விடப் போறதில்லைடி…” என்றவன், அவளது கண்ணீரை தன் கட்டை விரலால் மெதுவாகத் துடைத்துவிட்டான்.

அவனது அந்த மென்மையான ஸ்பரிசத்தில் எழிலின் உடலெங்கும் ஒரு புதுவித அதிர்வு பரவியது.

“பின்னர் வேகமாக அவனிடமிருந்து விலகியவள்… வாங்க ஊருக்குப் போகலாம். இருட்டாயிடுச்சு,” என்று அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள்.

“வாடி…” என்று அவளது கையைப் பற்றியபடியே கூட்டிச் சென்று, சாலையோரம் நின்றிருந்த புல்லட்டின் அருகே நிறுத்தினான். இம்முறை எழில் எந்த விதண்டாவாதமும் பேசாமல், அமைதியாக வண்டியின் பின்சீட்டில் ஏறி அமர்ந்தாள்.வண்டி மலையேறத் தொடங்கியது.

சில்லென்ற மலைக் காற்றும், அடர்ந்த காட்டின் வாசமும் அவர்களைச் சூழ்ந்துகொள்ள, வண்டியின் வேகத்திற்கு ஏற்ப எழில் லேசாகத் தடுமாறும் போதெல்லாம், அவளது கரங்கள் அறியாமலேயே ராயனின் தோளைப் பற்றிப் பிடித்துக்கொண்டன.

பக்கவாட்டுக் கண்ணாடியில் தன் தோளை தழுவியிருந்த அவளது கரங்களையும், தன் முதுகில் சாய்ந்திருந்த அவளது முகத்தையும் பார்த்த ராயனுக்குள் அளவற்ற மகிழ்ச்சி பொங்கியது.

தன் அசுரத்தனமான காதலுக்கு முன்னால் எழில் மெல்லச் சரணடையத் தொடங்கிவிட்டாள் என்பதை அவனும் உணர்ந்துகொண்டான்.ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கிராமத்தின் எல்லைக்குள் புல்லட் நுழைந்தது.

ஊர் அடங்கிப் போய் அமைதியாக இருக்க, நேராக எழிலின் வீட்டின் முன்னே வந்து வண்டியை நிறுத்தினான்.வண்டியிலிருந்து இறங்கிய எழில், பையைத் தோளில் மாட்டியபடி, “நான் வர்றேன்…” என்று சொல்லத் திரும்பியவளை, ராயனின் குரல் தடுத்தது.”நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்துடுடி… உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்திப் பேசணும்,” என்றான் அழுத்தமான குரலில்.

“என்ன விஷயம்?” என்று அவள் புருவத்தை உயர்த்த…”அது நாளைக்குத் தெரியும்! போய்த் தூங்குடி அரசி,” என்று கண்ணடித்துச் சொல்லிவிட்டு, புல்லட்டை முடுக்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

அவன் மறைந்த திசையையே சில நிமிடங்கள் பார்த்தபடி நின்றிருந்த எழில் நெஞ்சில் ஏதோ ஒரு இனம்புரியாத பூரிப்போடு வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூடிச் சாய்ந்தவளுக்கு, மலையடிவாரத்தில் அவன் கொடுத்த அந்த இறுக்கமான அணைப்பும், அவனது நெஞ்சின் சூடும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவளது கன்னங்களைச் சிவக்க வைத்தன.

மறுநாள் காலை, விடிந்தும் விடியாததுமாக எழிலின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்டது.தூக்க கலக்கத்தில் அட்டென் பண்ணியவள் அதிர்ந்து போய் வேகமாக தோட்டத்துக் கதவை திறக்க கம்பீரமான தோற்றத்தில் ராயன்தான் நின்றிருந்தான்.

அவனது கண்களில் ஒருவித தீர்க்கமான உறுதியும், லேசான புன்னகையும் மின்னியது.அவனைக் கண்டதும் எழில் தன் நைட்டியை சரிசெய்தபடி, “என்ன… காலங்கார்த்தாலேயே வந்து நிற்கிறீங்க? நேத்து ராத்திரி ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களே… என்ன சொல்லப் போறீங்க?” என்று படபடப்போடு கேட்டாள்.

ராயன் மெல்ல நடைபோட்டு அவளருகே வந்து அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து, தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்.

“நேத்து ராத்திரி மலையடிவாரத்துல என் நெஞ்சோடு உன்னை அணைச்சப்போ, உன் இதயத் துடிப்பு என்ன சொல்லுச்சுன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சுடி! மூணு வருஷத்துக்கு முன்னாடி பயந்து ஓடின அதே எழில் தான் இன்னைக்கும் நிற்கிறியா.. இல்லை, என் அசுரத்தனமான காதலைப் புரிஞ்சுகிட்ட அரசி நிற்கிறியா?”எழில் பதில் பேச முடியாமல் திகைத்து நிற்க…”இப்பவே சொல்லிடுறேன்… இன்னும் ரெண்டு நாள்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்! எங்க அப்பாவும் உங்க அப்பாவும் பேசி முடிச்சிட்டாங்க. உன் மனசுல என்னைப் பத்தின கோபம் இருக்கலாம்… ஆனா, உன் நெஞ்சுக்குள்ள எனக்கு ஒரு இடம் இருக்குங்கிறது எனக்கு நல்லாவே தெரியும்”

இந்த முறை உன்னை என் பொண்டாட்டியா என் வீட்டுக்குக் கூட்டிட்டு போகாம நான் விடப்போறதில்லை!” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்து ரசித்தான்.அவனது அந்த திடீர் திருமண முடிவைக் கேட்டதும் எழிலிற்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது!

பனி சிந்தும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!