கனவிலே வாழதடி என்ற குரலில் சுதாரித்தவள் துவையலோடு வீட்டிற்குள் போய், சுடச்சுடச் சாதமும், மணக்க மணக்க ரசமும், கையோடு இஞ்சித் துவையலையும் வைத்து, எடுத்துகொண்டு போனவள் “இந்தாங்கம்மா… கொஞ்சம் சாப்பிட்டுட்டு மாத்திரை போடுங்க,” என்றாள்.
மயிலா கண்களில் நெகிழ்ச்சியோடு, “உனக்கு ரொம்பச் சிரமம் கொடுக்கிறேனோ தாயி?” என்று வருத்தப்பட்டார்.
“ஏன்மா அப்படி நினைக்கிறீங்க? என்னை நீங்க அப்படியா பார்த்துக்கிட்டீங்க?”
“அய்யய்யோ… குயிலா வேற, நீ வேற இல்லடா கண்ணு! அப்படி இருக்கிறப்போ நான் உன்னை வேறயா நினைப்பேனா தாயி?” என்று மயிலாவின் குரல் தழுதழுத்தது.அவருக்குச் சாதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள், “ஐயா… நீங்களும் வந்து சாப்பிடுங்க,” என்று மருதுவை அழைத்தாள்.
“சரி தாயி… எடுத்து வை,” என்று மருது வர, உள்ளேயிருந்த கட்டிலில் படுத்திருந்த மகனைப் பார்த்தவர், “எலேய் வந்து உட்கார்ரா! புள்ள கரியடுப்புல கஷ்டப்பட்டுச் சமைச்சிருக்கு,” என்றார்.உடனே அவன் நக்கலான சிரிப்போடு, “ஏன்ப்பா… மேடம் சிலிண்டர் அடுப்புலதான் சமைப்பாங்களோ?” என்றவாறே வந்து உட்கார்ந்தான்.
அதைக் கேட்ட எழிலிற்குள் ஆத்திரம் பொங்கியது. ‘இவன்கிட்ட நான் எப்போ சொன்னேன் சிலிண்டர் அடுப்புலதான் சமைப்பேன்னு? வந்ததிலிருந்து எதையாவது சொல்லி வம்பு இழுத்துக்கிட்டே இருக்கான்!’ என்று மனதிற்குள் முணுமுணுத்தபடியே இருவருக்கும் தட்டில் பரிமாறினாள்.
அந்த மலைக் கிராமத்து இரவு நேரக் குளிர்ச்சிக்கு உணவின் சுவை நாக்கிற்கு அத்தனை இதமாக இருந்தது. மருது வயிறார சாப்பிட்டு முடித்தவர்”நீயும் சாப்பிடு தாயி…” என்று கரிசனையோடு சொல்ல, எழில் தயங்கி நின்றாள்.
அப்போது தன் தட்டைக் கழுவ எழுந்த ராயன், அவளைக் கடந்து செல்லும்போது, ‘புருஷன் சாப்பிடாம பொண்டாட்டி சாப்பிட மாட்டாளோ?’ என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்படி உதடுகளை மட்டும் அசைத்து, கண்ணடித்துப் பேசினான்.
அவனது அந்த லீலையைக் கண்டவள், சற்றும் சளைக்காமல் அவனை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்து, ‘அப்படி எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது!’ என்று அதேபோல உதடுகளை மட்டும் அசைத்துப் பதில் கொடுத்துவிட்டுத் தட்டை எடுக்கச் சென்றாள்.
அவளது அந்த எதிர்பாராத பதிலைக் கேட்டு, தாடி மீசைக்குள்ளே சிரிப்பை அடக்கிக் கொண்டு மிடுக்காக நடந்து சென்றான் ராயன்.
“நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கிறேன் ஐயா…” என்றபடி சாப்பிட்ட தட்டுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றவளோ அங்கிருந்த குழாயடியில் தட்டுகளை கழுவி, பக்கத்திலிருந்த பரணில் காய வைத்துவிட்டு, தனக்காக சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
வீட்டிற்கு வந்தவள், கரியடுப்புப் புகையும் வியர்வையுமாக இருந்த கசகசப்பு போக முகத்தையும் கை கால்களையும் கழுவிக்கொண்டு நைட்டியை மாற்றியவள், சாதத்தை சாப்பிட்டுவிட்டு போனில் யூடியூப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளது அக்கா தமிழிடமிருந்து கால் வந்தது.
போனை அட்டென் பண்ணியவள், “சொல்லு தமிழு… இப்ப சந்தோஷமா?” என்று ஆசையோடு கேட்டாள்.
மறுமுனையில் தமிழின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது. “இனிமே என் மாமியார் என்னை எந்தப் பேச்சும் பேச முடியாதுடி எழில்… ‘ஒன்னும் கொண்டு வராத வெறும் சிருக்கி’னு அவங்க என்னை ஒவ்வொரு தடவையும் குத்திக்காட்டிப் பேசின பேச்சு இருக்கே… அது என் நெஞ்சை அவ்வளவு தூரம் காயம் பண்ணியிருந்தது,” என்று சொல்லி தமிழரசி விம்மி அழத் தொடங்கினாள்.
“விடு தமிழு… எல்லாம் ஒரு காலம் தான். ஆனா எனக்கு இன்னமும் ஆச்சரியமா இருக்கு, திடீர்னு அப்பாவுக்கு எப்படித்தான் இப்படி ஒரு ஞானோதயம் வந்துச்சுன்னு தெரியல!” என்று எழில் வியப்போடு கூறினாள்.
“உண்மைதான்டி… அப்பா போன் பண்ணிப் பேசினப்பதான் எனக்குப் பாதி உயிர் வந்தது. இன்னைக்கு நேர்ல வந்து நகையையும் பணத்தையும் கொடுத்தப்போ எனக்கு அழுகைய அடக்கவே முடியல,” பணம் பொருளை விட பெத்தவங்க உறவு தானே பெருசு என்று தன் நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாள் தமிழரசி.
ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தில் வீசியிருக்கும் இந்த அன்பின் காற்றை நினைத்து, அக்கா தங்கை இருவரும் வெகுநேரம் மனவிட்டுப் பேசிச் சிரித்தார்கள். நேரம் போனதே தெரியாமல் பேசி முடித்தவர்கள், நிம்மதியான மனதோடு போனை வைத்தனர்.
போனை வைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்த எழிலிற்குத் தூக்கம் வர மறுத்தது. ஜன்னல் வழியே தெரிந்த நிலவையும், வெளியேயிருந்த அமைதியையும் பார்த்தவளுக்குப் மீண்டும் ராயனின் நினைவுகளே நெஞ்சில் வந்து மோதின.
‘எவ்வளவு திமிர் இவனுக்கு? என்னைப் பார்த்து அப்படியே கல்யாணம் பண்ணி வச்சிடுவாருன்னு சொல்றான்! அதுவும் அந்த ‘டி’ போட்டுப் பேசுறதும், அவன் கண்ணடிச்சதும்…’ என்று நினைக்கும்போதே அவளது நெஞ்சுக் கூடு வேகமாக அடித்துக்கொண்டது.
உதட்டை லேசாகக் கடித்துக்கொண்டவள், தொட்டுப் பார்த்தபோது காலையில் அவன் கொடுத்த முத்தத்தின் கன்றிய வடு இன்னும் லேசாக வலித்தது.
“மிருகம்… அசுரன்…” என்று முணுமுணுத்தபடியே கண்களை மூடினாள்.
மறுநாள் காலை, விடிந்ததும் வழக்கம்போல எழுந்து ரெடியானவள், மயிலா அம்மாவிற்கு காய்ச்சல் மருந்தையும் சத்து மாத்திரைகளையும் கொடுத்துவிட்டுச் செல்லலாம் என்று மருதுவின் வீட்டிற்கு வந்தாள்.
வீட்டு வாசலில், ராயன் கையில் சகாபிக் கோப்பையோடு கம்பீரமாக நின்றிருந்தான். எழில் புடவையை நேர்த்தி செய்து நடந்து வருவதைப் பார்த்தவன், அவளது வழி மறிப்பது போலத் திண்ணைப் படியில் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தவள், “கொஞ்சம் வழி விடுறீங்களா? அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கணும்…” என்றாள் குரலில் கடுமையான இறுக்கத்தை வரவழைத்துக்கொண்டு.
ராயன் நகராமல், அவளது முகத்தையும் கீழ் உதட்டையும் ஆழமாகப் பார்த்தவன் “மாத்திரை அப்புறம் கொடுக்கலாம் மேடம்… நேத்து நைட் நீ எனக்கு ஒரு பதில் சொன்னியே, நினைவிருக்கா?” என்று குரலைத் தாழ்த்தி, மீசையை முறுக்கியபடி அவளருகே நெருங்கி வந்தான்.
அவன் எதைக் கேட்கிறான் என்பது புரிந்ததும் எழிலின் முகம் லேசாகச் சிவந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “எனக்கு டியூட்டிக்கு நேரம் ஆகுது… வழியை விடுங்க இளந்திரையன்!” என்று அவனைத் தள்ள முயன்றாள்
.”இளந்திரையனா? பரவாயில்லையேடி… பேரெல்லாம் வரத் தொடங்கியிருக்கு! ஆனா ஒன்னுடி, நீ என்னதான் தப்பிச்சு ஓடப் பார்த்தாலும், இந்த ராயனோட சிறையில இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது… பார்த்துக்கிட்டே இரு!” என்று அவளது காதோரம் அனல் பறக்கக் கிசுகிசுத்து விட்டு, நக்கலான புன்னகையோடு காபியைக் குடித்தபடியே நகர்ந்து சென்றான்.
அவனது அசுரத்தனமான வார்த்தைகளும், அந்த உறுதியான பார்வையும் எழிலின் உடலெங்கும் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது. திகைப்போடு அவனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, உள்ளே மயிலாவைப் பார்க்க விரைந்தாள்.
கையோடு அவர்களுக்காக வீட்டில் சமைத்து எடுத்து வந்த உணவைக் கொண்டுபோய் மேஜையில் வைத்தவள் “அம்மா… இதுல காலையில சாப்பிடுறதுக்குச் சாப்பாடு இருக்கு. முடிஞ்சா நான் மத்தியானம் நேரம் கிடைச்சா வர்றேன்,” என்றாள்.
“ஐயோ! உனக்கு எதுக்குக் கண்ணு அவ்வளவு சிரமம்? நீ வேலையைப் பாரு தாயி…” என்று மயிலா பரிவோடு தடுத்தார்.
அவரது உடம்பைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “பரவாயில்லை, ஃபீவர் நல்லாவே குறைந்திருக்கு. ஆனா உடம்பு ரொம்ப டயர்டா இருக்கும். சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க,” என்றவளோ அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றாள்.
அன்று மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், குழந்தைகளுக்குக் கடுமையான சளியும் காய்ச்சலும் பிடித்திருந்தது.
கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தாய்மார்கள் பதற்றத்தோடு வரிசையில் காத்திருக்க, எழிலிற்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் வேலை பிய்த்துக் கொண்டு ஓடியது.
அடுத்து வந்த இரண்டாவது நாளில், மயிலா காய்ச்சல் முற்றிலும் குணமாகி வழக்கம் போல் எழுந்து வீட்டு காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார். எழிலும் மருத்துவமனை வேலையும், வீட்டிற்கு வந்துபோவதுமாகத் தன் அன்றாட சுழற்சியில் மூழ்கிப் போனாள்.
ஆனால், ராயன் அவளைச் சும்மா விடவில்லை. தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் வம்பு வளர்ப்பதும், நக்கலாகப் பேசி அவளது கோபத்தைத் தூண்டிவிட்டு ரசிப்பதுமாக அவளை வைத்துச் செய்தான்.
சமையலறைக்குப் போகும் வழியிலோ, தோட்டத்துக் குழாயடியிலோ அவன் திடீரென எதிரில் வந்து நின்று அவளைத் தடுமாற வைப்பான். அவனது இந்த அசுரத்தனமான அணுகுமுறையிலிருந்து தப்பித்து ஓடுவதே எழிலிற்குப் பெரும் பாடாக இருந்தது.
இரவின் காரிருள் அந்த மலைக்காட்டைச் சுற்றிலும் அடர்ந்த போர்வையைப் போலப் போர்த்தியிருந்தது. சுற்றிலும் மனித நடமாட்டமோ, சிறு வெளிச்சமோ இல்லாத அந்த ஆள்அரவமற்ற சூழலில், காட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பூச்சிகளின் ரீங்காரமும், மரக்கிளைகள் காற்றில் உரசும் ஒலியும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன.
அந்த இரவுப் பொழுதில், கம்பு கொல்லைக்குக் காவலுக்காகத் தன் உயிர் நண்பர்களிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல், தனிமையைத் தேடி அந்த மலைக்காட்டுக்கு வந்திருந்தான் ராயன்.
அங்கே உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரணில், கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தவனின் சிந்தனைகள் அனைத்தும், அசைக்க முடியாத புன்னகையோடு அவன் நெஞ்சில் குடியிருக்கும் எழிலை நோக்கியே சுழன்றுகொண்டிருந்தன.
அந்த நள்ளிரவு அமைதியில், அவனது மனசாட்சி விழித்துக் கொண்டு அவனைக் கூண்டில் ஏற்றி விசாரிக்கத் தொடங்கியது:”டேய் ராயா! நீ மனசுல என்னதான்டா நினைச்சுக்கிட்டு இருக்க? ஏற்கனவே உனக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆகிடுச்சு. ஒரே நாளானாலும் அடுத்தவள் கழுத்துல தாலி கட்டினவன் நீ. எழிலோ வயசுப் பொண்ணு! அவள் உன்னை எப்படி இரண்டாம் தரமா கட்டிக்க சம்மதிப்பா? எந்த துணிச்சல்லடா நீ அவகிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கிற?”மனசாட்சியின் அந்த வார்த்தைகள், ராயனின் நெஞ்சில் சாட்டையடியைப் போல விழுந்து நொருக்கின.
பனி சிந்தும்…