Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 20

CHAPTER 20

பனித்துளி 20

By seema · October 30, 2026

0

மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட ரவி, “நல்லா இருக்கியா? பிள்ளைங்க எங்கே?” என்று வாஞ்சையோடு கேட்டார். “அவங்க உள்ளே தூங்கிட்டு இருக்காங்கப்பா,” என்றாள் தமிழ்.

“மாப்பிள்ளை?” என்று வள்ளி கேட்க, “அவர் வேலைக்குப் போயிருக்கிறார்,” என்றாள்.

பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு தான் கொண்டு வந்திருந்த நகைப்பெட்டியையும் பணப் பையையும் தமிழின் மாமனார் முன்பு நீட்டிய ரவி, “இந்தாங்க சம்பந்தி… என் பொண்ணோட கல்யாணத்துக்காக நாங்க ஆசையா சேர்த்து வச்ச நகையும், பாத்திரம் பண்டம் மற்ற விஷயங்களுக்கான பணமும் இதுல இருக்கு வாங்கிக்குங்க,” என்றார்.

“அய்யயோ… எதுக்குங்க இதெல்லாம்? இப்போ எதுக்கு இதைக் கொண்டு வந்து கொடுக்குறீங்க?” என்று தமிழின் மாமியார் பவ்யமாகத் தயங்கினார்.

திருமணமானதிலிருந்து “பத்து பைசா இல்லாமல் வந்தவ” என்று மாமியார் அவ்வப்போது குத்திக்காட்டிப் பேசிய விஷயங்கள் தமிழிற்கு நினைவுக்கு வரவும், தன் மாமியாரை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு, அமைதியாகத் தலைகுனிந்து கொண்டாள்.

பின்னர் தன் கணவனுக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொல்லவும், கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவன், “அரை மணி நேரத்துல வீட்ருக்கு வந்துடுறேன்டி,” என்று பதற்றமும் சந்தோஷமுமாகச் சொன்னான்.

சொன்னபடியே அரை மணி நேரத்தில் ஓடோடி வந்த மாப்பிள்ளை, மாமனார் மாமியாரின் கால்களில் மனைவியுடன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

“இனிமே அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டுப் போங்க சம்பந்தி,” என்று ரவி தமிழின் மாமனார் மாமியார் கிட்ட அன்போடு சொல்ல, மலர்ந்த முகத்துடன் அவர்களும் வழியனுப்பி வைத்தார்கள்.

திரும்பி வரும் வழியிலேயே, ரவி தன் சின்ன மகள் எழிலிற்கு போன் செய்தவர் தமிழ் வீட்டிற்குத் நேரில் சென்றதைப் பற்றி போனில் சொல்லச் சொல்ல, எழிலிற்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

“அப்பா… நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷம்பா! அக்கா எவ்வளவு நாளா நீங்கள் பேசுவீங்கனு  ஏங்கிக்கிட்டு இருந்தா தெரியுமா? இனிமே நம்ம குடும்பத்துல எந்தக் கவலையும் இல்லைப்பா…” என்று சிரித்த முகத்தோடு, பெற்றோர்களிடம் போனில் பேசியபடியே தன் வீட்டை நோக்கி வந்தாள்.

அவளது அந்த மிதமிஞ்சிய மகிழ்ச்சியையும், முகத்தில் வழிந்தோடும் சிரிப்பையும் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராயனின் நெஞ்சிற்குள் பொறாமையும் ஆத்திரமும் ஒருசேரக் கனன்றன.

‘காலையில இவ மாப்பிள்ளையைப் பார்த்தாச்சுனு திமிரா சொன்னாளே… அவன்கிட்டதான் இவ்வளவு சிரிச்சுச் சிரிச்சுப் பேசுறாளா?’ என்று தப்பாக நினைத்துக் கொண்டு அவளைக் கூர்மையாக முறைத்துப் பார்த்தபடியே, “என் வாழ்க்கையும் சந்தோஷமும் இங்கே சீரழிஞ்சு கிடக்கு… நீ மட்டும் யாரையோ காதலிச்சுக்கிட்டு இவ்வளவு சந்தோஷமா சிரிச்சுப் பேசுறியா? இருடி… உன்னை என்ன பண்றேன்னு பாரு!” என்று மனதிற்குள் வஞ்சமாய் அனல் கக்கிக் கருவிக் கொண்டான்.

ராயன் மேலே நின்று தன்னைக் கொலைவெறியோடு முறைப்பதைப் பற்றிச் சிறிதும் அறியாத எழில், அம்மாவிடமும் பேசிவிட்டு போனை வைத்தவள் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

காலையிலிருந்து நடந்த பரபரப்புகள், ராயனின் அசுரத்தனமான முத்தம், அக்கா குடும்பத்தோடு பெற்றோர் இணைந்த சந்தோஷம் என எல்லாம் சேர்ந்து அவளது மனதை லேசாக்கியிருந்தது.

பின்னர் குளித்து முடித்து ரெப்ரஷாகியவள்,எளிய புடவையை நேர்த்தியாக உடுத்திக்கொண்டு, ஈரக் கூந்தலை முடிந்து போட்டவள், மயிலா அம்மாவின் உடல்நிலையைப் பார்க்க வேண்டுமென்ற நினைப்போடு மீண்டும் மருதுவின் வீட்டை நோக்கிச் சென்றாள்.

முகத்தில் சந்தோஷம் மின்ன, தன் வீட்டு வாசற்படியைக் கடந்து வருபவளை மாடி படியில் நின்ற ராயனின் விழிகள் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தன.எழில் மெதுவாக வீட்டின் கூடத்தைக் கடந்து மயிலா படுத்திருந்த அறைக்குள் நுழைய, அங்கே  மருதுவும் மயிலாவும் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“இப்ப உடம்பு எப்படி இருக்குங்க அம்மா?” என்று வாஞ்சையோடு அவள் கேட்க, “இப்போ பரவாயில்லை தாயி.நல்லாருக்கேன்,” என்று மெலிதான குரலில் பதிலளித்தார் மயிலா.

அவளைப் பார்த்ததும், மதியம் ராயன் பேசிய விஷயங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து சென்றது.மதியம் மூன்று மணிக்கு மேல் காய்ச்சலின் வீரியம் குறைந்து மெதுவாகக் கண் விழித்த மயிலா, கட்டிலின் அருகே சோகமே உருவாக உட்கார்ந்திருந்த மகனைப் பார்த்து, “என்னடா ராயா ஆச்சு எனக்கு?” என்றார்.

“ஒன்னும் இல்ல… உடம்பு கொஞ்சம் சூடா அடிச்சிருச்சு, அவ்வளவுதான்,” என்றவன், பக்கத்திலிருந்த கஞ்சிக் கிண்ணத்தைக் காண்பித்தான்.

அதைப் பார்த்த மயிலா, “நீயா இதெல்லாம் பண்ணி வச்சது?” என்று வியப்பாகக் கேட்க, ராயனோ லேசாக சிரித்துக் கொண்டே, “உன் மருமகதான் வந்து செஞ்சு வச்சுட்டுப் போனா!” என்றான்.

அதைக் கேட்ட மயிலா திகைப்போடு, “எதே… எவ அவ என் மருமகள்?” என்க, ராயன் சட்டென, “ஏன்? உன் நர்சம்மா உனக்கு மருமகளா வரக் கூடாதா என்ன? அவ வந்தா உன்னால ஏத்துக்க முடியாதா?” என்று திருப்பிக் கேட்டவன், பின்னர், தன் நெஞ்சிற்குள் பூட்டி வைத்திருந்த அந்த உண்மையையும் உடைக்கலானான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் எழிலை உயிருக்கு உயிராக விரும்பியதையும், அவளிடம் தன் காதலைச் சொன்னபோது அவள் அதை ஏற்க மறுத்துச் சென்றதையும் அப்படியே ஒப்புக்கொண்டான்.

மகனின் விருப்பத்தைக் கேட்காமல், ஊராரின் சொல்லைக் கேட்டு அவசரப்பட்டு ஒரு திருமணத்தை முடித்து, அது மறுநாளே முறிந்து விட்டதே. நாமே மகனது வாழ்க்கையை இப்படிப் பாழாக்கி விட்டோமே என்று மருதுவின் மனம் வேதனையில் துடித்தது.

ஆனாலும், தன் மகனின் நிலைமை யோசித்து, “அது டவுன்ல படிச்ச புள்ளடாப்பா… நம்ம கிராமத்து வாழ்க்கைக்கு ஒத்து வருமா?” என்று தயக்கத்தோடு கேட்டார்.

அவ்வளவுதான், ராயனுக்குக் கோபம் தலைக்கேறியது! “இப்ப என்ன… அவளை எனக்குக் கட்டி வைன்னு உங்ககிட்ட கேட்டேனா? போங்கப்பா!” என்று தந்தையை முறைத்துக் கொண்டே விறுவிறுவென வெளியேறி மாடிக்குச் சென்றுவிட்டான்.

“இப்படி நடக்கும்னு தெரியாம போச்சே… எழிலோட அப்பா அம்மா கிட்ட பேசிப் பார்க்கலாமா?” என்று மருது கேட்க, ” அதற்கு மயிலாவும் சரிங்க… நல்ல நேரம் வரட்டும். அப்ப ஒரு வார்த்தை நாமளும் போய்க் கேட்டுப் பார்க்கலாமே” என்கவும் மருதுவும் மனைவியிடம் ஆமோதித்திருந்தார்.

இப்போது அடக்கம் ஒடுக்கமாக புடவையில் கனிவோடு நிற்ப்பவளை பார்த்து, ‘என் மகன் நெஞ்சுக்குள் இவ்வளவு பெரிய காதலையும் நிராசையையும் சுமந்துகொண்டுதான் இத்தனை நாளா இப்படிச் சுற்றிக்கிட்டு இருக்கானா?’ என்று கவலைப்பட்டனர்.

“உடம்பு பரவாயில்ல.. நீ எதுக்கு தாயி சிரமப்படுற?” என்று மயிலா நெகிழ்ச்சியோடு சொல்ல, எழிலோ தயங்கியபடியே, “அம்மா… நீங்க தப்பா நினைச்சுக்கலைனா, நானே நைட்டுக்குச் சமையல் பண்ணிட்டுமா?” என்று கேட்டாள்.

“இது உன்னோட வீடு கண்ணு… இதுக்கெல்லாம் எதுக்கு தயக்கம்? போய் தைரியமாச் செய்மா!” என்று மருது உரிமையோடு சொன்னார்.

“சரிங்க ஐயா…” என்றவள், தன் புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, விறுவிறுவெனச் சமையலறைக்குள் சென்றாள்.

எழில் இப்போது இத்தனை உரிமையோடு இந்த வீட்டின் பொறுப்பை கையில் எடுப்பதற்குக் காரணமும் இருந்தது.

அவள் இந்த ஊரில் தங்கியிருந்த காலம் முதலே, குயிலாவை எப்படித் தங்கள் சொந்த மகளாகப் பார்த்தார்களோ, அதேபோல்தான் மயிலாவும் மருதுவும் அவளையும் நடத்தினார்கள். அதனால் தான், தன் சொந்த வீடு போல நினைத்து இந்த வீட்டில் இயல்பாகச் சென்று வேலை செய்யத் தொடங்கினாள்.

எழில் தங்கியிருக்கும் வீட்டில் சின்னதாக எலக்ட்ரிக் குக்கரும், இண்டக்ஷன் அடுப்பும் இருந்ததால் அவளுக்குச் சமைப்பது சுலபமாக இருந்தது. ஆனால் ராயன் வீட்டில் விறகு அடுப்புதான் என்பதால் சமைப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

அடுப்பில் விறகுகளைச் செருகி, அதைத் தீப்பற்ற வைக்கக் குழலால் அவள் ஆக்ரோஷமாக ஊதத் தொடங்கினாள். விறகிலிருந்து எழுந்த கரும்புகை அவளது கண்களைச் சுட, கண்களிலிருந்து நீர் பெருகித் தட்டுத்தடங்கலாகச் சிமிட்டிக் கொண்டிருந்தாள்.

சமையலறைக்கு வெளியே முற்றத்தில் நின்று கொண்டிருந்த ராயனின் விழிகள், புகைக்கு நடுவே கண்கள் சிவக்க, உதட்டைக் கடித்துக்கொண்டு போராட்டத்தோடு சமைக்கும் அவளது அந்த அழகிய அவஸ்தையை ரசித்துப் பார்க்கத் தவறவில்லை!

அடுத்த அரை மணி நேரத்தில், மயிலா அம்மாவிற்காகச் சூடாகச் சாதமும், ஜீரணத்திற்குக் காரசாரமான ரசமும் வைத்த எழில், ‘தொட்டுச் சாப்பிடுறதுக்குக் கொஞ்சம் துவையல் அரைச்சா நல்லா இருக்குமே’ என்று யோசித்தாள்.

அப்போதுதான் அவளது தாய் வள்ளி அடிக்கடி செய்து தரும் மருத்துவக் குணம் நிறைந்த ‘இஞ்சித் துவையல்’ நினைவுக்கு வந்தது.கூடையிலிருந்த இஞ்சி, பூண்டு, சிறிதளவு புளி, கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தோட்டத்தில் இருந்த அம்மிக்கல்லின் அருகே வந்தாள்.

நின்றுகொண்டே அரைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த அம்மியை நன்றாகக் கழுவிவிட்டு, இஞ்சியையும் மிளகாயையும் வைத்து மெல்ல அரைக்கத் தொடங்கினாள்.

அவள் அம்மியில் அரைக்கும் அழகை முற்றத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராயன் சத்தமில்லாமல் வந்து அமைதியாக வாசல் படியில் நின்று ஒரு பாட்டை முணுமுணுக்கத் தொடங்கினான்.

“அம்மி அரைக்கணும் அம்மி அரைக்கணும் மாமி… நீ இழுத்து அரைக்கும்போது என் கழுத்து அரைப்பது ஏனோ…”அவனது அந்த நக்கலான பாட்டைக் கேட்டதும் எழிலிற்கு எரிச்சல் தலைக்கேற, “என்ன…நக்கலா?” என்று கையில் இருந்த குழவியைப் பிடித்தபடியே அவனை முறைத்துப் பார்த்தாள்.

“நான் ஒன்னும் நக்கல் பண்ணலடி… எனக்குத் தோணுது, பாடுறேன். அதுக்கு நான் என்னடி பண்றது?” என்றான் அசால்ட்டாக.

“காலையிலதானே உங்ககிட்டப் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்… என்னை இப்படி ‘வாடி போடீனு கூப்பிடாதீங்கன்னு?” என்று ஆத்திரத்தோடு பல்லைக் கடித்தபடி சொன்னாள்.

“உன்னை அப்படித்தான் கூப்பிடணும்னு தோணுது!” என்று ராயனும் மீசையை முறுக்கிக்கொண்டேச் சொன்னான்.

“இருங்க… உங்க அப்பாகிட்டயே போய்ச் சொல்றேன்!” என்று எழில் மிரட்டலாகச் சொல்ல…ராயன் லேசாகச் சிரித்துக்கொண்டே அவளருகே வந்தவன், “போய் சீக்கிரம் சொல்லுடி… உனக்கும் எனக்கும் அவர் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு!” என்றான் அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து.

திடீரென்று அவன் ‘கல்யாணம்’ என்று தன்னை அவனோடு இணைத்துப் பேசியதைக் கேட்ட எழில், அப்படியே அதிர்ந்துபோய் நின்றாள்.

அவளது திகைப்பைப் பார்த்தவன், “அதுதான் நடக்கப் போகுது… நீ வேணா பாருடி!” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, மிடுக்கான நடையோடு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

எழிலோ ராயன் போன பாதையையே திகைப்பும், நெஞ்சுக்குள் எழும் இனம்புரியாத தவிப்புமாகப் பார்த்தபடி அம்மிக்கல்லின் முன்னே உறைந்து போய் நின்றாள்.

பனி சிந்தும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!