அன்று குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் நாள் என்பதால், எழில் அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து தடுப்பூசி மருந்துகள் அடங்கிய வேக்சின் பாக்ஸை எடுத்துவந்து தயாராக வைத்திருந்தாள்.
சுற்றியுள்ள அக்கம் பக்கத்துப் கிராமங்களிலிருந்து தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துவர, எழிலும் மருத்துவமனையில் ஊசி போடும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.
அப்போது, குயிலா தன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைய, அங்கே சிரித்த முகத்தோடு குழந்தைகளுக்கு ஊசி போட்டுக்கொண்டிருந்த எழிலைப் பார்த்ததும் குயிலாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது!
திகைப்பில் அப்படியே உறைந்து நின்றாள்.முதல் நாள் எழில் மேதினூருக்குத் திரும்ப வந்த விஷயம் குயிலாவிற்குத் தெரியவில்லை.
நேற்று முழுவதும் நாகர்கோவிலில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இரவு தாமதமாகத் திரும்பியதால் இந்தச் செய்தி அவளுக்கு எட்டவில்லை.
“அக்கா!…” என்று நெகிழ்ச்சியோடு ஓடிவந்த குயிலா, எழிலைக் கட்டியணைத்துக் கொண்டவள்”நல்லா இருக்கியாக்கா? எப்பக்கா வந்தே?” என்று கண்களில் நீர்வழிய நலம் விசாரிக்க, “நான் நல்லா இருக்கேண்டி குயிலா… நேத்துதான் வந்தேன்,” என்று எழிலும் புன்னகையோடு அவளது கரங்களைப் பிடித்துக்கொண்டு “குழந்தைகளோட பேர் என்னடி?” என்று ஆவலோடு கேட்டாள் எழில்.
குயிலாவும் தன் இரண்டு பட்டுக்குட்டிகளின் பெயர்களைச் பெருமிதத்தோடு சொல்ல, “அட செல்லக்குட்டிகளா…” என்று கொஞ்சிய எழில், அவர்களின் குப்பிச் கன்னங்களில் செல்லமாகக் கிள்ளி முத்தமிட்டாள்.
மற்ற குழந்தைகளுக்கு ஊசி போட்டு முடித்ததும், குயிலாவின் குழந்தைகளுக்கும் மென்மையாகத் தடுப்பூசியைப் போட, குழந்தைகள் வலியால் “ஓ”வென்று அழத் தொடங்க, செவிலியருக்கே உரிய அனுபவத்தோடு, “பயப்படாதடி குயிலா, தடுப்பூசி போட்டதால சாயந்தரம் லேசாகக் காய்ச்சல் வரும். அது இயல்புதான்,” என்று கூறி அதற்கான மருந்தையும் கொடுத்தாள்.
அப்போது அங்கே வந்த டாக்டர், குயிலாவின் குடும்பத்தையும் எழிலின் அன்பான கவனிப்பையும் பார்த்துப் புன்னகைத்தவாறு, “என்ன சிஸ்டர்… வந்த உடனேயே உங்கள் சொந்தக்காரங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டியா?” என்று செல்லமாகக் கேட்டார்.
“சார்” என்று சிரித்தாள்.
அன்றைய ஷிப்ட் முடிந்து எழில் வீட்டிற்கு வந்தவளோ ஒரு குளியலைப் போட்டுவிட்டு, வேறு புடவையை மாற்றிக்கொண்டு, மருது வீட்டினருக்கு தான் வாங்கி வந்திருந்த இரண்டு துணிப் பைகளோடும் ராயன் வீட்டிற்குள் மீண்டும் சென்றாள்.
அதேநேரம், காட்டில் வேலை செய்துவிட்டு ராயனும் வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.குளித்து முடித்துத் துண்டால் தலையைத் துடைத்துக்கொண்டே முன் வாசலை நோக்கி அவன் வர, எழிலோ பைகளில் எல்லாம் சரியாக எடுத்து வச்சோமானு பார்துக்கொண்டே வந்ததால் எதிர்பாராவிதமாக எதிரில் வந்தவளின் மீது பலமாக மோதினான்.
“ஆ…” என்ற அலறல் சத்தத்தோடு, எழில் நிலைதடுமாறிப் பொத்தென்று தரையில் விழவும், கையிலிருந்த பைகளும் சிதறின.
அந்தச் சத்தத்தில் துண்டை முகத்திலிருந்து எடுத்துக்கொண்டு, “யாரது?” என்ற அதட்டலான குரலோடு ராயன் நிமிர, கீழே விழுந்து கிடந்தவளைப் பார்த்த அந்த நொடி… அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது! கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.
இத்தனை வருடங்களாகத் தன் நெஞ்சை உலைக்களமாக மாற்றியவள்… தன் காதலையும் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டுச் சென்றவள்… இதோ தன் கண்முன்னே நிற்கிறாள்!ஆனால், அந்த அதிர்ச்சி அடுத்த நொடியே கசப்பான கோபமாகவும் மாபெரும் இறுக்கமாகவும் மாறியது.
கீழே கிடந்தவளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல், அவளைக் கடந்து நேராக வீட்டின் வெளிவாசலை நோக்கி நடந்து சென்றுவிட்டான்!
சிதறிக்கிடந்த பைகளை எடுத்துக்கொண்ட எழில், “மலமாடு எப்படி வந்து மோதிட்டுனு திட்டிக்கொண்டே, அம்மா…” என்றபடி வீட்டிற்குள் சென்றாள்.
தோட்டத்தில் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த மயிலாவிற்கு யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே, “யாரது?” என்று கேட்டார்.
“நான்தான்ம்மா… எழில்!” என்றாள்.
“தோட்டத்துலதான் இருக்கேன், வா தாயி!” என்றார் மயிலா.பைகளை அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் வைத்துவிட்டு, இடுப்பில் கைவைத்துத் தேய்த்தவாறே தோட்டத்திற்குச் சென்ற எழில், “உங்களுக்காகச் சின்னதா ஒரு பொருள் வாங்கிட்டு வந்தேன்மா,” என்றாள்.
“எதுக்குக் கண்ணு அதெல்லாம்?” என்று மயிலா செல்லமாகக் கேட்க, “ஆசையா வாங்கிட்டு வந்தேன்மா,” என்று அவரை கையோடு அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவள் தான் வாங்கி வந்த புடவை வேஷ்டியை மயிலாவிடம் கொடுத்தவள், “இன்னொரு பேகை காட்டி இதுல குயிலாவுக்கும் குழந்தைகளுக்கும் ட்ரெஸ் இருக்குமா,” என்றாள்.
அப்போது அங்கே வந்த ராயன், அவளை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல், அமைதியாகப் படிகளில் ஏறி மாடிக்குச் சென்றுவிட்டான். அவனது அந்த அதீத மௌனமும் அலட்சியமும் எழிலின் நெஞ்சில் லேசாக முள்ளாய் தைத்தது.
“இரு கண்ணு, வரகாபி போடுறேன்,” என்கவும், “இருக்கட்டும்மா… நானே போடுறேன்,” என்று சொல்லிவிட்டு, அந்த வீட்டிற்கு ஏற்கனவே வந்த மூன்று வருடங்களில் அவள் இதுவரை சமையல்கட்டு பக்கம் போனதில்லை. இன்று முதல்முறையாக அடுப்பறைக்குள் சென்று வரகாபி போட்டாள்.
மணக்க மணக்க வரகாபியை எடுத்துவந்து மயிலாவிடம் ஒரு டம்ளரைக் கொடுத்துவிட்டு, இது அவருக்குமா என்று நீட்ட, மயிலாவும் மகனுக்கு எடுத்துச் செல்ல முயன்ற நேரம், பக்கத்து வீட்டுப் பெண்மணி ஏதோ அவசர உதவி கேட்டு வர, மயிலா அவரிடம் பேசிக்கொண்டே, “தாயி… மாடியில ராயன் இருக்கான், அவன்கிட்ட இதை கொடுத்துடு,” என்று எதேச்சையாகக் கூறினார்.
“இதுல என்ன இருக்குமா, நான் தர்றேன்,” என்று எழிலும் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு மாடியிலிருந்த அவனது அறையை நோக்கிச் சென்றாள்.
அடுப்படியைப்போல இந்த மாடி அறைக்கும் அவள் ஒருமுறைகூட வந்ததே கிடையாது. தயக்கத்தோடு மாடிப்படிகளில் ஏறிச் சென்று அவனது அறைக்கதவை லேசாகத் தட்டினாள்.
பதிலேதும் வராததால், மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே செல்ல, அங்கே ராயன் ஜன்னல் பக்கமாக நின்று வெளியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கம்பீரமான அவனது பின்புறத் தோற்றம் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.
கொலுசு சத்தம் கேட்டு ராயன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். மாடிப்படி ஏறி வந்ததால், கீழே தவறி விழாமல் இருக்கத் தன் புடவையை இடது கையால் லேசாகத் தூக்கிப் பிடித்தபடி, மறுகையில் சுடச்சுட வரகாபியோடு எழில் நின்றிருந்தாள்.
அவளைக் கண்டதும் அவனது விழிகளில் கோபக் கனல் மூண்டது. மெல்ல அடிமேல் அடி வைத்து அவளை நோக்கி வந்தவன், திடீரென கதவை ஓங்கிச் சாத்தினான்!
அவனது இந்த எதிர்பாராத செயலால் எழில் திடுக்கிட்டு அதிரும்போதே, அவளது வாயை இன்னொரு கையால் அழுத்தமாகப் பொத்தியவன், அவளை அங்கிருந்த மரப் பலகைச் சுவரின் மேல் வேகமாகச் சாய்த்து இறுக்கப் பிடித்தான்!
அவனது கண்களில் ஆத்திரமும், கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சில் தேக்கி வைத்த ஏமாற்றத்தின் வலியும் ஒன்றாகக் கொப்பளிக்க, “திரும்பவும் என் வாழ்க்கையில எதுக்குடி வந்த? உன்னால என் வாழ்க்கை நாசமானது போதாதாடி? அன்னைக்கு ஊரை விட்டுப் போகும்போது என்கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகக்கூடாதா ?” என்று பற்களைக் கடித்தபடி அவன் குரல் சீறியது.
இன்னும் அவளது முகம் அருகே நெருங்கி வந்தவன், “உன்னை என் உயிருக்கு உயிராகக் காதலிச்சேனடி! அதைவிட்டு உன்கிட்டத் தப்பா நடந்துக்கிட்டேனா? உன்னை என்னைக்காவது வற்புறுத்தினேனா?” என்று ஆத்திரத்தில் கொதித்தவனோஅவளது கையில் இருந்த டம்ளரைப் பிடுங்கி மூலைக்குத் தூக்கி எறிந்தவன், அவளை இன்னும் வன்மையாகச் சுவரோடு சேர்த்து இறுக்கிப் பிடித்தான்.
ராயனின் அசுரப் பிடியிலும், அவனது அதீதக் கோபத்திலும் எழிலால் மூச்சுக்கூட விட முடியவில்லை. அவன் அவளது வாயைக் கெட்டியாகப் பொத்தியிருந்ததால், அவளால் கத்தக்கூட முடியாமல், கண்களில் கண்ணீர் பெருக அவனையே திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்!
எழிலின் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைப் பார்த்த ராயனின் கைகளில் வேகம் சற்றுத் தணிந்தாலும், மனதிற்குள் இருந்த கோபத்தின் கனல் இன்னும் குறையவில்லை.
அவளது வாயைப் பொத்தியிருந்த தன் கையை மெதுவாக எடுத்தான். ஆனால், அவளது தோள்களைப் பற்றியிருந்த பிடியை மட்டும் தளர்த்தவே இல்லை.
வாய் விடுபட்டதும் மூச்சு வாங்கத் தொடங்கிய எழில், “பிளீஸ்… முதல்ல என்னை விடுங்க! நீங்கள் என்ன பேசுறீங்கன்னு எனக்கு எதுவுமே புரியல…” என்று தடுமாறும் குரலில் சொன்னாள்.
“புரியலையாடி உனக்கு? எல்லாம் நல்லாப் புரியும்! அன்னைக்கு நான் உன்கிட்ட என் காதலைச் சொன்னப்போ, ‘வேண்டாம்’னு முகத்திலடிச்ச மாதிரிச் சொன்னியே… சரிடி, உனக்கு விருப்பம் இல்லைன்னு ஒதுங்கிப்போனேன். ஆனா, ஊரை விட்டே போறப்போ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு கூட உனக்குத் தோணலையேடி?” என்று அவளது முகத்தை நெருங்கி, ஆத்திரமும் வேதனையுமாகச் சீறினான்.
அவனது பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போன எழில், தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, “நீங்கள் என்னைப் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க… எனக்கு அன்னைக்குத் திடீர்னுதான் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துச்சு..உங்ககிட்ட வந்து சொல்லக்கூட எனக்குச் சந்தர்ப்பம் அமையல!” என்று தன் பக்கத்து நியாயத்தைச் சொன்னாள்.
“அப்படியாடி? சந்தர்ப்பம் அமையலையா? சரி… அன்னைக்குத்தான் சொல்ல முடியல, ஆனா என் தங்கச்சி குயிலா கல்யாணத்துக்குக் கூடவா உன்னால வர முடியல? மெடிக்கல் கேம்ப்னு பொய்யைச் சொல்லிட்டு வராம இருந்தியேடி…என்னைச் சந்திக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தானே வராம இருந்தே?” என்று ராயன் அவனது பழைய காயத்தைக் கிளறினான்.
அதைக் கேட்டதும் எழிலிற்கு தூக்கி வாரிப்போட்டது. ‘தான் குயிலாவின் கல்யாணத்திற்கு வராததை இவன் இப்படித் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறானா?’ என்று நினைத்தபோது அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
“ஐயோ! கடவுள் மேல சத்தியமா சொல்றேன்… அன்னைக்கு நிஜமாவே எனக்கு ஹாஸ்பிடல்ல மெடிக்கல் கேம்ப் டியூட்டி இருந்தது! நான் வேணும்னு வராம இல்லை… காதலிச்சு ஓடிப்போன எங்க அக்கா கிட்ட போனில் பேசிட்டு இருந்ததை அப்பா பார்த்துட்டார்.அதால் எங்க வீட்ல பெரிய கலவரமே நடந்துச்சு. அப்பா என் பழைய போன் நம்பரையே மாத்திட்டாரு! நீங்க ஏன் எல்லாமே நான் வேண்டும் என்று செய்யறேன்னு தப்பா நினைச்சுக்கிறீங்க?” என்று கதறினாள்.
அவளது உண்மையான கண்ணீரையும், பதற்றத்தையும் பார்த்த ராயனின் மனதில் ஒரு நொடி லேசான தடுமாற்றம் ஏற்பட்டதுதான். ஆனால், அடுத்த நொடியே அவன் செம்பாவின் கழுத்தில் கட்டிய தாலி அவிழ்ந்துபோன அந்தப் பஞ்சாயத்து நினைவுக்கு வர, அவனது முகம் மீண்டும் இருண்டது.
அவளை தன்னிடமிருந்து உதறித் தள்ளியவன், “இப்போ இதெல்லாம் பேசி என்னடி ஆகப்போகுது? எல்லாம் முடிஞ்சு போச்சு! உன் நினைப்பால என் வாழ்க்கையே நாசமாப் போச்சுடி… இனிமே என் முன்னாடி வந்து நிக்காத!” என்று சுவரில் ஓங்கி குத்திவிட்டு, ஜன்னல் பக்கமாகத் திரும்பி நின்றான்.
அவனது அந்த வார்த்தைகள் எழிலின் நெஞ்சில் பேரிடியாய் இறங்கின. ‘என் நினைப்பால இவன் வாழ்க்கை நாசமாப் போச்சா? அப்படி என்ன நடந்தது இவன் வாழ்க்கையில்?’ என்று புரியாமல், கலங்கிய கண்களோடு ராயனின் பின்புறத் தோற்றத்தையே பார்த்தபடி திகைத்து நின்றாள் எழில்.
சிறிது நொடிகள் கடந்திருக்க, “போதும்! மரியாதையா வெளிய போயிரு… இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது! தேவையில்லாம என்னை ஏதேனும் செய்ய வச்சிராம ஓடிப்போயிரு!” என்று ராயன் சிங்கமெனக் கர்ஜித்தான்.
அவனது அந்த ஆக்ரோஷமான குரல் எழிலின் முதுகுத்தண்டில் சில்லென்ற பயத்தைப் பாய்ச்ச, அதற்குமேல் அங்கே நிற்கத் துணியாமல், வேகமாக மாடி அறைக் கதவைத் திறந்து கடகடவென்று படிகளில் இறங்கி வந்தாள்.
கீழே வந்ததும் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, வாசலில் மயிலா இன்னும் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, தன் கலங்கிய முகத்தை அவசரமாகத் துடைத்து இயல்பாக்கிக் கொண்டவள் “சரிங்கம்மா… நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்,” என்று மெல்லிய குரலில் மயிலாவிடம் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குள் ஓடி வந்தாள்.
கதவைச் சாத்திவிட்டு, அறை மூலையில் அப்படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டு ‘இவனுக்கு நான் அப்படி என்ன கெடுதல் பண்ணினேன்? அன்னைக்கு எனக்கு இருந்த சூழ்நிலையில காதலை ஏத்துக்க விருப்பமில்லைன்னு தான் சொன்னேன். அதை விட்டுட்டு என் நினைப்பால இவன் வாழ்க்கை நாசமாப் போச்சுனு சொல்றானே‘
‘நான் எங்கே இவன் வாழ்க்கையைக் கெடுத்தேன்? இவன் வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்துச்சு?’ என்று புரியாமல் குழம்பினாள்.
மனதிற்குள் சந்தேகமும் தவிப்பும் அதிகமாக, உடனடியாக அந்த உண்மையைத் தெரிந்துகொள்ள முடிவு செய்தவள் உடனே போனை எடுத்து, தன் புதிய எண்ணிலிருந்து குயிலாவிற்கு கால் பண்ணினாள்.
பனி சிந்தும்…