தாயின் அழுகையை தாங்க முடியாதவன் “இப்ப எதுக்கு அழுகுறீங்க? விருப்பம் இல்லாதவ கூட யாரால வாழ முடியும்? எல்லாம் முடிஞ்சு போச்சுல…” என்று மிகச் சாதாரணக் குரலில் கேட்கவும், “அவ தாலியைக் கழட்டி உண்டியல்ல போட்டுட்டு போயிட்டாப்பா”என்றனர்.
“சரி, அதோட இந்த விஷயத்தை விடுங்க. நானா இனிமே கல்யாணத்தைப் பத்தி வாயைத் திறக்கிற வரைக்கும், நீங்க யாரும் என் முன்னாடி அந்தப் பேச்சை எடுக்கக் கூடாது,” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் பரணிலிருந்து கீழே இறங்கினான்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, “பையனுக்கு வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே” என்று சொந்தக்காரர்களும் ஊர் மக்களின் அனுதாபப் பார்வைகளும், “பாவம் பையன்” என்ற முணுமுணுப்புகளும் அவனது காயத்தில் ஈட்டியைப் பாய்ச்சின.
அப்போது ஒருநாள் “டேய் ராயா… செம்பா போனா போகட்டும்டா. முதல் திருமணம் அப்படி ஆகிடுச்சுன்னு வாழ்க்கையை இழந்துட முடியுமா? பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்த கல்யாணம்தான் தப்பாயிடுச்சு… காலம் கடத்தாம வேற ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோடா,” என்று ஆளாளுக்கு வந்து மறுமணம் பற்றி அறிவுரை சொல்லத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே எழிலைப் பிரிய நேர்ந்த ஆறாத வடு, பெற்றோருக்காக ஆசையாசையாக நடந்த திருமணமும் ஒரே நாளில் பஞ்சாயத்தில் முடிந்துபோன கசப்பு, ஊராரின் அனுதாபப் பார்வைகள்.இவை அனைத்தும் சேர்ந்து ராயனுக்குள் பேராத்திரத்தை மூட்டவும்”நிறுத்துங்கடா எல்லாரும்!” என்று கர்ஜித்தவனைப் பார்க்க சற்று திகிலாகதான் இருந்தது.
“கல்யாணம்னா என்ன உங்களுக்கு விளையாட்டுப் பொருளா? ஊருக்கு முன்பு பஞ்சாயத்துல நின்னு தாலியை அவிழ்த்துக் கொடுத்தப்ப இந்த ராயன் பட்ட அவமானம் எனக்குத்தானடா தெரியும்! பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்த லட்சணத்தை பார்த்தாச்சு. இனிமே எவனாவது என் முன்னாடி வந்து இந்த ‘இரண்டாவது கல்யாணம்’, ‘மறுமணம்’னு பேச வந்தீங்க… அம்புட்டு பேரையும் வெட்டிச் சாாய்ச்சுருவேன்!” என்று ஆத்திரத்தில் கத்தி, அங்கிருந்த பொருட்களை தூக்கி அடித்துத் தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.
அன்று அவன் வெளிப்படுத்திய அந்த கோபமும், மீண்டும் ஒரு திருமணமா என்று மறுமணத்தின் மீது அவனுக்கு வந்த வெறுப்பால் அவனது கவனம் முழுவதும் விவசாயத்தின் மீது மட்டுமே திரும்பியது.
அதன் பிறகு, ராவணனின் வாழ்க்கையே முற்றிலும் மாறிப்போனது. அவனது பழைய சிரிப்பு, துள்ளல், கம்பீரமான கேலிகள் என அனைத்து இயல்புகளும் மொத்தமாகத் தொலைந்து போயின. பேச்சு குறைந்து, முகம் எப்போதும் இரும்பைப் போல இறுக்கமாகவே மாறின.
இரவு பகல் பாராமல், வெயில் மழை என்று எதையும் பொருட்படுத்தாமல் காடு, மலை, தோட்டம் என மனதின் வலியை மறக்க உழைப்பை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தினான்.
நாட்கள் மாதங்களை கடந்து ஓட, அவனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணங்கள் ஆகி, அவரவர் குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகினர்.ஆனால் ராயன் மட்டும் தனி மரமாக, யாருடனும் அதிகம் பேசாமல் தள்ளியே இருந்தான்.
அவனது நிலையைப் பார்த்து, நண்பர்களோ சொந்தக்காரர்களோ அவனிடம் ‘திருமணம்’ என்ற வார்த்தையைக் கூட மூச்சு விடப் பயந்தனர்.
அந்நேரத்தில் தான் விதியின் விளையாட்டு வேறு வழியில் திரும்பியது.குமராட்சியில் பணியாற்றி வந்த எழிலுக்கு, எதிர்பாராத விதமாக மீண்டும் அதே மேதினூர் அரசு மருத்துவமனைக்கே டிரான்ஸ்ஃபர் கிடைத்தது!
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த மேதினூர் மண்ணில் காலடி வைத்த எழிலிற்கு, ஊரில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாதது போலத்தான் தோன்றியது. அதே பசுமை, அதே தென்றல், அதே கிராமத்து அமைதி. தெருவில் எதிரே வந்த தெரிந்தவர்கள் சிலர் அவளை அடையாளம் கண்டுகொண்டு, “என்ன தாயீ… நல்லா இருக்கியா? திரும்ப வந்துட்டியா?” என்று நலம் விசாரிக்க, தன் மெல்லிய புன்னகையோடு “நல்லா இருக்கேன்” என்று தலையசைத்துக்கொண்டே நடந்தாள்.
அவளது கால்கள் தானாக மருதுவின் வீட்டை நோக்கித் தான் சென்றன.வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மருதுவும் மயிலாவும் எழிலைக் கண்டதும் திகைத்துவிட்டு, “தாயீ! நல்லா இருக்கியா? என்ன தாயீ… ஒரு போன்கூடப் பண்ண முடியல? நாங்க எவ்வளவு தூரம் உன்னைத் தேடுனோம் தெரியுமா? உன் நம்பருக்கு என்னாச்சு?” என்று பதற்றமும் பாசமுமாக விசாரித்தனர்.
எழிலின் முகம் சற்றுத் தணிந்தது. தன் குடும்பச் சூழ்நிலையை நினைத்து மெல்லிய குரலில், “அக்கா என்கிட்ட பேசின விஷயம் தெரிஞ்சு அப்பாவுக்கு ரொம்பக் கோபம் ஆயிடுச்சுங்க ஐயா. அக்கா காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனது உங்களுக்கும் தெரியுமில்ல… அதான் அப்பா என் பழைய நம்பரை மாத்திட்டாரு”
“அதனாலதான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாம போச்சு. மத்தபடி உங்க நினைவெல்லாம் எனக்கு இல்லாம இல்லைங்க ஐயா… நான் குயிலா கல்யாணத்துக்கும் குழந்தைகள் பர்த்டேவுக்கும் அனுப்பின கிஃப்ட் எல்லாம் வந்து சேர்ந்துச்சா?” என்று ஆவலுடன் கேட்டாள்.
“அதெல்லாம் நல்லபடியா வந்து சேர்ந்துச்சு தாயீ… குயிலாவுக்கு இப்போ இரண்டு ஆண் புள்ளைங்க இருக்கானுங்க! அவங்க மாமியார் வீட்ல சந்தோஷமா இருக்கா,” என்று மயிலா பூரிப்போடு சொன்னார்.
எழில் பதிலுக்குப் புன்னகைத்தாலும், அவளது கண்கள் இயல்பாக வீட்டின் மாடியையும் சுற்றிலும் இருந்த இடத்தை துழாவி, ராயனைத் தான் தேடின.
அவனது கம்பீரமான உருவம் எங்கும் தென்படாததால், மனதிற்குள் ஏதோ ஒரு தவிப்பு முதல்முறையாக முளைக்க, “வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்று மேலோட்டமாகக் கேட்டாள்.”ம்… ஏதோ நல்லா இருக்கோம் தாயீ,” என்று மருது பெருமூச்சோடு சொன்னார்.
அவர்களின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்தாலும், அதை அதிகம் ஆராயாமல், “ஐயா… நான் முன்ன இருந்த அந்த வீட்டிலேயே தங்கிக்கட்டுமா?”.அதைக் கேட்ட மயிலாவின் கண்கள் கலங்கின. “என்னமோ தெரியல தாயீ… நீ திரும்ப வருவேன்னு அந்த வீடு உனக்காகத்தான் காத்துட்டு இருந்தது போல!” என்றவாறே வீட்டிற்குள்ளேயிருந்து சாவியை எடுத்து வந்து கொடுத்தார்.
சாவியை வாங்கிக்கொண்டு, தான் முன்பு தங்கியிருந்த அந்தச் சிறிய வீட்டிற்குள் நுழைய, மூன்று வருடங்கள் பூட்டிக் கிடந்த வீடு தூசியும் தும்புமாக இருக்கும் என்று நினைத்தவளுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது!
அன்று அவள் எப்படிச் சுத்தமாக விட்டுச் சென்றாளோ, அதேபோலத் தூசியின்றித் துடைத்துச் சுத்தமாக இருந்தது. யாரோ ஒருவர் இந்த வீட்டை சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பதை உணர்ந்த நொடி, எழிலின் நெஞ்சுக்குள் ராயனின் நினைவு தான் வந்தது.
இத்தனை நாட்களாக மனதின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் அவனது முகம் ஒளிந்துகொண்டுதான் இருந்தது.ஆனால், எப்போது அந்த ‘மேதினூர்’ என்ற ஊரின் பெயரைப் பார்த்தாளோ, அப்போதிருந்து அடக்கி வைக்கப்பட்ட அவனது நினைவுகள் மொத்தமாக உருவெடுத்து, நெஞ்சுக்குள் பேரலையாக எழும்பத் தொடங்கியது.
அவனது கம்பீரமான பேச்சு, அந்த அதட்டலான பார்வை, அவனது வீட்டுத் தோட்டத்தில் தன் கைபிடித்து நிறுத்திய அந்த வீரியமிக்க கண்கள் என அனைத்தும் மனக்கண்ணில் வரிசையாக வந்து போயின.
பின்னர் ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்தவள் கடையில் வாங்கி வந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, எடுத்து வந்த பொருட்களை எல்லாம் அதற்கான இடத்தில் வைத்தவளோ, தயாராகி நேராக மேதினூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ரிப்போர்ட் செய்யப் போனாள்.மருத்துவமனைக்குள் நுழைந்தபோது அங்கே பழைய ஆளுக்குப் பதிலாகப் புதிதாக ஒரு அட்டெண்டர் இருந்தான்.
ஆனால், நல்லவேளையாகப் பழைய ஆண் தலைமை டாக்டர் மட்டும் மாறாமல் அங்கேயே பணியாற்றிக் கொண்டிருந்தார்.எழிலை பார்த்ததும் முகம் மலர்ந்த டாக்டர், “வாங்க எழிலரசி… எப்படி இருக்கீங்க?” என்று அன்போடு விசாரித்தார்.
“நான் நல்லா இருக்கேன் சார்… நீங்க எப்படி இருக்கீங்க?” என்று எழிலும் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே மருத்துவமனையில், அதே மேசையின் முன் அமர்ந்து அன்றைய டியூட்டியில் அதிகாரப்பூர்வமாக ஜாயின் பண்ணினாள் எழிலரசி.
பனி சிந்தும்….