நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓட, அன்று காலை சொக்கனின் அப்பா குப்பனும், அவனது அம்மாவும் மருதுவின் வீட்டிற்கு வந்தனர்.
வாசலில் நின்றிருந்த மயிலா, தன் அண்ணனையும் அண்ணியையும் கண்டதும் “வா மதனி… வாண்ணே! என்கவும், வரோமாத்தா என்றபடி உள்ளே வந்தவர் அத்தான் என்க, தோட்டத்துப் பக்கம்தான் இருக்காரு. குயிலா… போய் அப்பாவைக் கூப்பிடுடி, மாமாவும் அத்தையும் வந்திருக்காங்க பாரு!” என்று குரல் கொடுத்தார்.
குயிலா ஓடிச்சென்று தோட்டத்திலிருந்த மருதுவை அழைத்து வந்தாள்.
உள்ளே வந்த மருது வாங்க மச்சான், வா தாயி…என்ன அதிசயமாக தங்கச்சி வூடு ஞாபகம் வந்துருக்கென மருது சிரிக்க, “ஏன் அத்தான் இப்படி?, என் தங்கச்சி மவ உசந்த படிப்பு படிக்குதேன்னுதான் இத்தன நாளா அமைதியா இருந்தோம். இப்பத்தான் படிப்பு முடிய போவுதாமே? இனி தாமதிக்காம பரிசம் போட்டுடலாமா?” என்றார் குப்பன்.
அடி சக்கை…ஒரு முடிவோடு தான் வந்துருக்க போலனு சிரித்த மருது, “அதுக்கென்ன மச்சான்… நம்ம ஏற்கனவே பேசி வச்சதுதானே? நல்லபடியா முடிச்சுடலாம்!” என்கவும், பின்னர், திருமணத்தாற்கான நாளும் குறிக்கப்பட்டது.
இரண்டு வீட்டிலும் தீவிரமாக கல்யாண வேலை நடக்க, இதோ அவர்களின் குலதெய்வமான மலையம்மன் கோவிலில் குயிலா – சொக்கன் திருமணம் மிக விமரிசையாக நடந்து முடிந்தது.
ஆனால், எழிலால் குயிலாவின் திருமணத்திற்கு வர முடியவில்லை. “மெடிக்கல் கேம்ப் இருப்பதனால் என்னால் வர முடியவில்லை” சாரி டி என்று குயிலாவிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
மாடியில் நின்று கொண்டு திருமணகூட்டத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராயனோ, ‘தன்னைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே எழில் வேணுமென்றே பொய் சொல்லித் தவிர்க்கிறாள்’.
தன் தங்கையின் கல்யாணத்திற்குக்கூட வர மனமில்லாத அளவுக்குத் தன் மீது வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறாளா என்ற எண்ணம் அவன் நெஞ்சில் ஆழமான காயத்தை ஏற்படுத்த, எழிலின் மீது கொண்டிருந்த அளப்பரிய பிரியத்திற்கு நடுவே, முதல்முறையாக அவளைப் பற்றிய ஒரு கசப்பான தவறான புரிதல் ராயனுக்குள் முளைவிடத் தொடங்கியது.
மகளுக்கான சீர்வரிசை பொருட்களோடு தனது மனைவியின் பிறந்த வீட்டிற்கு வந்த மருது, அன்றைக்கு என் மாமனார் உன் தங்கச்சிய என் கையில் பிடித்து கொடுக்கும் போது ஒரு வார்த்தை சொல்லல. ஏன்னா அம்புட்டு நம்பிக்கை என்மேல.
இன்றைக்கு என் உசுர உன் கிட்ட ஒப்படைக்கிறேன் மச்சான் என்கும் போதே மருதுக்கு தொண்டை அடைக்க, அத்தான் ஏன்யா இப்படி என்று கண்களை துடைத்து விட்ட குப்பன், “என் அத்தான் எப்போதும் தலை நிமிர்ந்து கம்பீரமாக இருக்கணும் அதான்யா எனக்கு பெருமை” என்றார்.
எழிலின் பெற்றோர்கள் இருவரும் மகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குடும்ப ஜோசியரைப் பார்க்கச் சென்றனர்.ஜோசியர் ஜாதகத்தைக் வாங்கி மேஜை மீது வைத்து, ஓலைச்சுவடியையும் கணக்குச் சுவடியையும் புரட்டி நிதானமாகக் கணித்துவிட்டு தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, இருவரையும் நிமிர்ந்து பார்த்தார்.
என்ன சொல்லப் போகிறாரோ என்று இருவரும் பார்க்க, “கல்யாண யோகம் இந்த பொண்ணுக்கு இப்ப கிடையாதுமா… இன்னும் இரண்டு வருஷம் ஆகும்! பொண்ணுக்குக் கிரக நிலைகள் அப்படி இருக்கு. ஆனா ஒன்னு… எதிர்பாரா நேரத்துல திடிரென எல்லாம் கூடி வரும்! கடவுள் சித்தம்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
ஜோசியரின் வார்த்தைகளைக் கேட்டு ரவியும் வள்ளியும் சற்றுத் திகைத்தாலும், விதியை மீற முடியாது என்பதால் அமைதியாக வீடு திரும்பினர்.
நாட்களும் மின்னல் வேகத்தில் ஓடியது. சொக்கனும் குயிலாவும் புதுமணத் தம்பதிகளாகத் தங்கள் அழகிய வாழ்க்கையைத் தொடங்கினர். திருமணம் முடிந்த அடுத்த மூன்றாவது மாதத்திலேயே குயிலா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைக் கேட்டதும் மருதுவின் குடும்பத்திற்கும் குப்பனின் குடும்பத்திற்கும் சந்தோஷம் தாங்கவில்லை.ஆனால், ராயனின் வாழ்வில் மட்டும் எந்த சந்தோஷத்தின் வெளிச்சமும் படரவில்லை.
வழக்கம்போலக் காடு, மலை, என்று தன் உடலை வருத்திக்கொண்டு வேலையைப் பார்த்தாலும், அவனுள் எழிலின் நினைவுகளும் அவள் மீதான கோபமும் வர வர அதிகமாகிக் கொண்டேயிருக்கவும், அவளை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும், அவளது நினைவுகள் அவனை மேலும் நெருப்பைப்போல சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
குயிலாவின் போனிலிருந்து நம்பரை எடுத்து எழிலுக்கு கால் பண்ண நாட் ரீச்சபுள் என்றே வந்தது. சரி டவர் இல்லை போலயென சிறிது நிமிடங்கள் சென்று மீண்டும் கால் பண்ண ஏமாற்றமே எஞ்சியது.
அங்கே எழில் புது நம்பரை யூஸ் செய்து கொண்டிருப்பது தெரியவில்லை..
குயிலாவிற்குத் தலைச்சன் பிரசவம் என்பதால், இரண்டு குடும்பத்தினரும் அவளைத் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். ஆரம்பக்கால வாந்தி, மயக்கம், உடலளவில் இருந்த அவஸ்தைகள் எல்லாம் குடும்பத்தினரின் அன்பில் கரைந்து போனது.
ஒன்பதாவது மாதத்தில் வளையல் போட்டு வீட்டிற்கு அழைத்து வர, இதோ பத்தாவது மாதத்தின் இறுதியில், குயிலாவிற்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தன.
தங்களது பரம்பரையிலேயே யாருக்குமே இரட்டைக் குழந்தைகள் பிறந்ததில்லை என்பதால், இரண்டு வீட்டினரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இந்த சந்தோஷத்தில் நேர்த்திக்கடனாகத் தங்களது குலதெய்வமான மலையம்மனுக்கு ஆளுக்கு ஒரு கிடா வெட்டி ஊருக்கே கறி விருந்து போட்டனர்.
நாட்கள் உருண்டோடின. இரட்டைக் குழந்தைகளும் தவழ்ந்து, நடை பழகி, இதோ ஒன்றரை வயதைக் கடந்திருந்தன.
மருதுவும் அவரது மனைவியும், “இனி தாமதிக்கக் கூடாது, ராயனுக்கும் கல்யாணத்தை முடிக்கணும்,” என்று தீவிரமாக தங்கள் மகனுக்குப் பெண் தேடத் தொடங்கினர்.
விஷயத்தை கேள்வி பட்டவன் இப்போது கல்யாணம் வேண்டாம் என்று தாம்தூமென குதிக்க, மகனுக்கும் அப்பனுக்கும் நாளுக்கு நாள் பிரச்சினை தான் வளர்ந்தது.
இறுதியாக அவர்கள் சொந்தத்திலேயே ‘செம்பா’ என்ற பெண்ணை ராயனுக்குப் பேசி முடித்தனர்.எழில் தன் வாழ்வை விட்டு முற்றிலுமாக விலகிவிட்டாளென ஏற்கனவே ராயன் மனம் மரத்துப் போயிருக்க,பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கட்டாயத்திற்கு முன்னால், ராயனால் இந்தத் திருமணத்தை மறுத்துப் பேச வழியே இல்லாமல் போய்விட்டது.
வேறு வழியின்றி, மனதிற்குள் எழிலின் நினைவுகளையும் தோற்றுப்போன காதலின் காயங்களையும் பூட்டி வைத்துவிட்டுத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.
குறிக்கப்பட்ட சுபமுகூர்த்த நாளில், அவர்களின் குலதெய்வமான மலையம்மன் கோவிலில், சொந்த பந்தங்கள் வாழ்த்த, ராயனுக்கும் செம்பாவிற்கும் விமரிசையாகத் திருமணம் முடிந்தது.
அன்று இரவு….மாடியில் இருக்கும் ராயனின் அறையில் புதுமணத் தம்பதிகளுக்காகச் முதலிரவு ஏற்பாடுகள் தடபுடலாகச் செய்யப்பட்டிருந்தன.மல்லிகைப் பூக்களின் நறுமணமும், பால் பழத்தின் வாசனையும் அறையெங்கும் நிறைந்திருக்க, புதுப்பெண்ணிற்கு இருக்க வேண்டிய எந்தப் பதற்றமோ, நாணமோ இல்லாமல் செம்பா உள்ளே வந்தாள்.
கட்டிலின் ஓரத்தில் பலவிதமான யோசனையோடு உட்கார்ந்திருந்த ராயனைப் பார்த்தவள், ஒரு நொடி தயங்கி நிற்பது போல நின்றுவிட்டு, பின் கதவை உட்பக்கமாகத் தாளிட்டாள்.
அந்தச் சத்தம் கேட்டு திரும்பியவனின் முன்னே வந்து நின்றவள், “எனக்கு இந்தக் கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை! எப்படியாவது இதிலிருந்து என்னை விடுவியுங்கள்!” என்று வெடுக்கென்று சொன்னாள்.
ஏற்கனவே எழிலின் நினைவாலும் காதல் கை கூடாத ஏமாற்றத்தாலும் மனமும் உடலும் நொந்து நூலாகிப் போயிருந்த ராயனுக்கு, செம்பா இப்படிப் பேசியது பேரிடியாய் இறங்கியது.
அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் கண்கள் சிவக்க எழுந்தவன், ஓங்கி அவளை அறையக் கையை உயர்த்தினான்! ஆனால், அடுத்த நொடியே தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு உயர்த்திய கையை அப்படியே மடக்கிக் கீழே இறக்கியவன், “இத்தனை நாள் உன் வாயில என்னடி கொழுக்கட்டையா இருந்தது? இப்போது வந்து இப்படிச் சொல்றியே” என்று பற்களைக் கடித்தபடி சீறினான்.
செம்பா சிறிதும் அஞ்சாமல், “நான் வேற ஒருத்தரைக் காதலிக்கிறேன்.அவரு வெளிநாட்டுக்குப் போயிருக்காரு. அவர் போய் ஒரு வருஷம்தான் ஆகுது, உடனே அவரால் வர முடியவில்லை. எங்க அப்பா அம்மா என்னை மிரட்டி தான், உங்ககூட எனக்குக் கல்யாணத்தைப் பேசி முடிச்சுட்டாங்க. அவரை மனசுல வச்சுக்கிட்டு உங்க கூட என்னால் வாழ முடியாது!” என்றாள்.
எழிலின் மீதிருந்த பேரன்பை நெஞ்சில் பூட்டி வைத்துவிட்டு, பெற்றோரின் சொல்லுக்காகவும் குடும்பக் கௌரவத்திற்காகவுமே ராயன் செம்பாவிற்குத் தாலி கட்டச் சம்மதித்தான்.
மனதிற்குள் ஆறாத வடுவாக எழிலின் நினைவுகள் வதைத்தாலும், ‘நம்மைக் நம்பி வந்த பொண்ணுக்கு எந்தக் குறையும் வைக்கக் கூடாது… விருப்பம் இல்லாம தாலி கட்டியிருந்தாலும், இனி இவ தான் நம்ம வாழ்க்கை. இவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கிறது தான் ஒரு ஆம்பளைக்கு அழகு’ என்று இவ்வளவு நேரம் தன் மனதைத் தேற்றிக் கொண்டிருந்தான்.
ஆனால், ஊரறிய, தாலி கட்டி கூட்டி வந்தவள், முதலிரவிலேயே “இன்னொருத்தனை விரும்புறேன்” என்று சொன்னதும் அவனது ஆண்மகனின் சுயமரியாதையும் கம்பீரமும் சுக்குநூறாக உடைந்துபோயின. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு அவனுக்குள் அசுரக் கோபத்தை மூட்டியது.
பெற்றோர் பேச்சைக் கேட்டு தாலி கட்டிய அவன் மீது அவனுக்கே பேரருவருப்பும் ஆத்திரமும் வர, தன் தலைமுடியைக் கோதிப் பிடித்துக்கொண்டு, தலையில் கையை வைத்தவன், “அப்பா…” என்று அந்த மரவீடே அதிரும்படியாக கத்தினான்!
மகனின் குரல் கேட்டு, கீழே பேசிக்கொண்டிருந்த இருவீட்டுப் பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு மாடிக்கு ஓடிவந்தனர்.
அங்கே ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்று கொண்டிருந்த ராயன், செம்பாவின் அப்பா அம்மாவை நேருக்கு நேராகப் பார்த்து, “உங்க பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை விரும்புறான்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாமத்தான் இந்தக் கல்யாணத்தை முடிச்சீங்களா?” என்று சீறினான்.
செம்பாவின் பெற்றோரோ நிலைமையைச் சமாளிக்க எண்ணி, “என்னப்பா சொல்ற… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே…” என்று திக்கித் திணறிப் பொய் சொல்ல முயன்றனர்.
ஆனால் செம்பாவோ நடுவிலே புகுந்து, “அப்பா! நான் தான் உங்ககிட்ட அத்தனை முறை சொன்னேனேப்பா… நான் குமாரைக் காதலிக்கிறேன், அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு! நீங்கதானப்பா தலைவர் பையன், பணக்காரக் குடும்பம்னு ஆசைப்பட்டு என்னை மிரட்டி இவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்க? இவரு கூட என்னால வாழவே முடியாது!” என்று உண்மையை உடைத்தாள்.
அதைக் கேட்டதும் மயிலாவுக்குத் தூக்கி வாரிப்போட, “அடி சண்டாளப்பாவி இப்படி என் புள்ள தலையில இடியைப் போட்டுட்டியேடி!” என்று நெஞ்சிலடித்துக்கொண்டு கதறி அழுதார்.
ராயனோ தன் அப்பாவைப் பார்த்தவன், “நான் வேண்டாம் என்று சொல்லியும் ஊரார் பேச்சை கேட்டுக் கொண்டு அவசரப்பட்டு என்கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம இந்தக் கல்யாணத்துக்கு முடிவு பண்ணீங்களே… இப்போ சந்தோஷமா உங்களுக்கு?” என்று வேதனையோடு கேட்டுவிட்டு, யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் விருட்டெனப் படிகளில் இறங்கி, இருட்டுக்குள்ளேயே வீட்டை விட்டு வெளியேறிச் சோளக்காட்டுக்குள் சென்றுவிட்டான்.
காட்டுக்குள்ளிருந்த பரணில் போய் படுத்துக்கொண்ட ராயனுக்கு, மனசு உலைக்களம் போலக் கொதித்துக்கொண்டிருந்தது.
மறுநாள் காலை ஊர் கூடியது. முதல் நாள் இரவு தான் திருமணம் நடந்தது, ஆனால் மறுநாளே ஊர்ப் பஞ்சாயத்து கூடியதை பார்க்க வேதனையாக இருந்தது.
எந்த மலையம்மன் சாமிக்கு முன்பாக அவளது கழுத்தில் தாலி கட்டினானோ, அதே சாமிக்கு முன்னால் வைத்துத் தாலியை அவிழ்க்கச் சொன்னார்கள்.
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செம்பா தாலியை அவிழ்த்துக் கோவில் உண்டியலில் போட்டாள். “இருவருக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று பஞ்சாயத்துத் தலைவர்கள் சாமிக்கு முன்னால் தீர்ப்புச் சொல்ல, செம்பா தன் பெற்றோர்களோடு அங்கிருந்து சென்றாள்.
மயிலாவும், மருதுவும் நொந்துபோய் வீட்டிற்கு வந்தனர். நேற்று இரவு வீட்டை விட்டுப் போன மகன் இன்னமும் திரும்பி வரவில்லை. ‘நண்பர்களோடுதான் பாதுகாப்பாக இருப்பான்’ என்று நினைத்துத் தங்களைத் தேற்றிக்கொண்டாலும், பெற்ற மனம் கேட்கவில்லை.
பின்னர் மகனைத் தேடித் தங்களின் சோளக்காட்டுக்குள் சென்றனர். அங்கே பரணில், உலகத்தையே வெறுத்தது போலக் கண்கள் சிவக்கப் படுத்திருந்தான் ராயன்.
பரணின் மீது ஏறி மேலே வந்த மயிலாவும் மருதுவும், மகனின் நிலையைப் பார்த்தவர்கள், “ஐயா… உனக்கு நல்லது செய்யப்போய் நாங்களே உன் வாழ்க்கையைக் கெடுத்துட்டோமேடா! எங்களை மன்னிச்சிடுயா…” என்று மயிலா அவனது கால்களைப் பிடித்துக்கொண்டு அழுது புலம்பினார்.
மருதுவோ கண்கள் கலங்கத் தன் மகனின் தோள்களைப் பிடித்துக்கொண்டு சொல்லொணா வேதனையோடு நின்றார்.
ஆனால் ராயனோ எந்த ஒரு உணர்ச்சியுமின்றி அமைதியாக எழுந்து உட்கார்ந்தான்.
பனி சிந்தும்…