மறுநாள் காலை சூரியனின் இளங்கதிர்கள் ஜன்னல் வழியே அறையைச் ஒளிமயமாக்கின.எழில் மெல்லக் கண் விழித்துப் பார்த்தபோது, பக்கத்தில் குயிலா இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நேற்று இரவின் நினைவுகளும், குயிலா சொன்ன வார்த்தைகளும் மீண்டும் எழிலின் மனக்கண் முன் வந்து மோதின. தன் நெஞ்சில் கைவைத்துத் துடிப்பை உணர்ந்தவளுக்கு, முகத்தில் லேசான அரும்புப் புன்னகையும் சிவப்பும் படர்ந்தது.
சத்தமில்லாமல் எழுந்தவள், தன் ஆடை மற்றும் தலைமுடியைச் சரிசெய்து கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தவளோ தயங்கி நிற்க.. வீட்டின் பின்புறத்துத் தோட்டத்தில், கிணற்றடியில் ராயன் கையில் தண்ணீரைக் மொண்டு தன் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான்.
எழில் அங்கே நிற்பதை உணர்ந்தவன் போல, ராயன் நிமிர்ந்து பார்த்தான். இருவரின் விழிகளும் நேரடியாக மோதிக்கொண்டன.
நேற்று இரவு வரை இருந்த அந்த அதட்டலும் பயமும் போய், இப்போது இருவருக்குள்ளும் ஒரு மெளனமான பாலம் அமைந்திருந்தது. எழில் அவனது பார்வையைச் சந்திக்க முடியாமல் லேசாகக் கீழ் உதட்டைக் கடித்துத் தலையைக் குனிந்துகொண்டாள்.
ராயன் மெல்ல அவளை நோக்கி நடந்து வந்தான். அவனது கம்பீரமான நடை எழிலின் இதயத் துடிப்பை மீண்டும் எகிற வைத்தது.அவளுக்கு மிக அருகில் வந்து நின்றவன், மெல்லிய ஆழமான குரலில், “இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு மேடம்? காடு, மலைன்னு தனியாப் போய் மாட்டிக்கிற பழக்கம் உண்டுன்னு முன்னாடியே சொல்லியிருந்தா… கூடவே ஒரு ஆளைக் காவல் அனுப்பியிருப்பேனே?” என்று சிறிய குறும்புப் புன்னகையோடு கேட்டான்.
அவன் ‘காவல்’ என்று சொன்னதன் ஆழமான அர்த்தம் புரியாமல் இல்லை எழிலிற்கு.
“இப்போ… இப்போ நல்லா இருக்கேன். நேற்று… ரொம்ப நன்றி,” என்று வார்த்தைகள் தட்டுத் தடுமாறச் சொன்னாள்.
“நன்றியெல்லாம் இருக்கட்டும்… ஆனா இனிமே என் அனுமதி இல்லாம இந்த காட்டுக்குள்ள தனியா போகக் கூடாது. புரிஞ்சதா?” என்று உரிமையோடு சொன்ன ராயனின் குரல், எழிலின் மனதிற்குள் ஏதோ ஒரு புதுவித அதிகாரத்தையும், அதேசமயம் ஆழமான பாதுகாப்பையும் உணர்த்தியதோடு அவன் காட்டிய உரிமையைக் கண்டு, தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீம்புக்கு பதில் சொல்ல முயன்றாள்.
“அது… நேத்து ஈவினிங் டைம்ல போனதால வழி தெரியாம மாட்டிட்டேன். இனிமே பகல்ல போய் பார்க்கிறேன்,” என்று லேசாகத் திமிராகப் பதில் சொன்னாள்.
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் ராயனின் பார்வையில் ஒரு மின்னல் வெட்டியது. எட்டி வீட்டிற்குள் ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி எழிலின் கையைப் பிடித்து இழுத்து, தன் அகன்ற நெஞ்சோடுச் சேர்த்து ஒரே கையால் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
ராயனின் இந்தத் திடீர் செய்கையால் எழில் அசைவற்று அப்படியே அதிர்ந்துபோய் நின்றாள். அவளது மூச்சுக்காற்று அவனது மார்பில் பட்டுச் சிதறியது.அவளது திகைத்த முகத்தை ஆழமாகப் பார்த்தவன், தாடைகள் இறுகிய குரலில், “இனிமே ஒரே ஒரு அடி காட்டுக்குள்ள தனியா எடுத்து வச்ச… உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுடி!” என்று எச்சரித்தான்.
“என்னது… ‘டி’யா?” என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க, அவனது அணைப்பு இன்னும் இறுக்கமானது.”ஆமாடி… இந்தச் சூழ்நிலையில உன்கிட்ட இதைச் சொல்வேன்னு நானும் எதிர்பார்க்கல. ஆனா சொல்ல வேண்டிய கட்டாயத்தை நீ உண்டாக்கிட்ட! அரசி…உன் மேல எனக்குக் கொள்ளைப் பிரியம் இருக்கு… புரியுதா உனக்கு? நேத்து நீ காணாம போனப்போ நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு!”
“இன்னைக்கு இராவு தோட்டத்துல உனக்காகக் காத்திருப்பேன். வராம இருந்த… நேரா வீட்டுக்குள்ளேயே வந்துடுவேன்! இந்த ராயனைப் பத்தி உனக்கு இன்னும் தெரியாது. எனக்கு இதுவரைக்கும் எவ மேலயும் ஆசை வந்தது இல்லடி… முழுசா உன் மேல மட்டும்தான், அவ்வளவுதான்!” என்று தன் மனதிலிருந்த மொத்தக் காதலையும் உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்த்தான்.
அவன் பேசும்போது அவனது தாடைகள் இறுகுவதையும், தன் மீதான காதலைக் கட்டுப்படுத்த அவன் போராடுவதையும் அவனது மூச்சுக்காற்றின் சூட்டிலேயே எழிலும் உணர்ந்தாள்.
அப்போது வீட்டிற்குள்ளிருந்து யாரோ நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்கவே, “இராவுக்கு பாக்குறேன்…” என்றவாறு, வேகமாக அவளிடமிருந்து விலகியவன் தோட்டம் வழியாக முன்பக்கம் சென்று விட்டான்.
அவன் போன திசையையே பார்த்தபடி நின்ற எழிலுக்கு, இப்போது நடந்தது உண்மையா இல்லை கனவா என்றே புரியவில்லை. இதயத் துடிப்பு காதைடைக்கும் அளவுக்கு எகிற, கைகளை நெஞ்சில் கைவைத்து அப்படியே அதிர்ச்சியிலும் திகைப்பிலும் உறைந்து நின்றாள்.
எழிலை தேடி வந்த மயிலா தோட்டத்தில் நிற்பதை பார்த்து விட்டு அருகில் வந்தவர், “என்னத்தா…உடம்பு இப்போ தேவலைதானே?” என்று விசரித்தபடி அவளுக்குச் சூடான காப்பியைக் நீட்டினார்.
“ஆ… நல்லா இருக்கேன் ம்மா,” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, காப்பிக் கோப்பையை வாங்கிய எழிலின் கைகள் லேசாக நடுங்கின.’உன் மேல எனக்குக் கொள்ளைப் பிரியம் இருக்குடி…’ ராயன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
அவனது கரங்களின் இறுக்கமும், மார்பின் சூடும் இன்னும் தன் உடம்பில் ஒட்டியிருப்பதைப் போல எழிலுக்கு ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.அன்று முழுவதும் அவளால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும் அவளது மனம் ராயனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது.
‘எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அப்படி இழுத்து அணைப்பான்? அதிலும் அந்த அதிகாரமான மிரட்டல்… வரலன்னா வீட்டுக்குள்ளேயே புகுந்துடுவேன்னு சொல்றானே!’ என்று நினைக்கும்போது அவளுக்குள் ஒருபக்கம் கோபமும், மறுபக்கம் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பும் ஏற்பட்டது.
நேரம் நகர நகர, இரவின் அடர்த்தி கூடியது. மணி ஒன்பதைத் தாண்டியது.ராயன் சொன்னது போல வீட்டின் பின் தோட்டத்து இருட்டில் அமைதியாக வந்து நின்றான். நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் அவனது உயரமான உருவமும், கம்பீரமான முகமும் தெளிவாகத் தெரிந்தன. ஜன்னல் வழியே அவனைப் பார்த்த எழிலின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.
அவன் தோட்டத்தில் காத்திருப்பது உண்மைதான் என்பதை உறுதி செய்துகொண்ட எழில், ‘இவன் உண்மையிலேயே சொன்னபடி வீட்டிற்குள் வந்தாலும் வந்துடுவான்’ என்ற பயத்தில், மெதுவாக வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் வந்தாள்.
இருட்டில் தன் முன்னே வந்து நிற்கும் எழிலைப் பார்த்ததும், ராயனின் உதடுகளில் ஒரு லேசான வெற்றி புன்னகை வரவும், “வருவேன்னு தெரியும்டி…” என்று ஆழமான குரலில் ராயன் சொல்ல, அவனை முறைத்தவள் “யாராவது உங்களை இங்கு பார்த்தா என் நடத்தையைத் தவறாப் பேசுவாங்கங்கிற எண்ணத்துலதான் வந்தேன்,” என்று திக்கித் திணறிச் சொன்ன எழில், தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “உண்மையிலேயே நீங்க என்னைக் காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி. மத்தபடி உங்க மேல எனக்கு வேற எந்த அபிப்பிராயமும் இல்லை… புரியுதா?” என்று முகத்துக்கு நேராகச் சொன்னாள்.
அவளுக்குத் தன் தந்தையைப் பற்றி நன்றாகத் தெரியும்.மிகக் கண்டிப்பான மனிதர். ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே அவருக்கு ரத்தம் கொதிக்கும். ஏற்கனவே அக்கா தன் விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்டதால், கடந்த ஆறு வருடங்களாக அவளைத் தன் மகளே இல்லை என்று வீட்டை விட்டே ஒதுக்கி வைத்திருக்கிறார்.
இப்போது தானும் அதே தவறைச் செய்துபோய் நின்றால், கண்டிப்பாக தந்தை தன் தாயை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார் என்பதை காலையிலிருந்தே ஆயிரம் முறைக்கு மேலயாவது யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருந்தாள்.
ஆனால் ராயன் அசரவில்லை. அவளது கண்களை ஊடுருவிப் பார்த்து சிரித்துக்கொண்டே, “நீ உடனே சம்மதிச்சாதான்டி நான் சந்தோஷப்படணும்!” என்றான் மிகச் சாதாரண குரலில்.
அவனது அந்தப் பேச்சில் சட்டென்று கோபத்தைக் வரவழைத்துக் கொண்ட எழில், “முதல்ல இந்த ‘டி’, ‘நீ’ன்னு மரியாதை இல்லாம பேசுறதை நிறுத்துங்க! நான் இன்னும் உங்க பொண்டாட்டி ஆகல!” என்று எகிறினாள்.
“ஆமாடி… பொண்டாட்டியா ஆகப்போறவளைத்தானே அப்படி கூப்பிடுறேன்?” என்று அவன் அதே கம்பீரத்தோடு பதிலுக்குக் கேட்க எழிலிற்குள் என்ன செய்வதென்றே புரியவில்லை.
அவனது அந்த வீரியமிக்க கம்பீரமும், எந்தச் சூழ்நிலையிலும் கலங்காத அந்த ஆளுமையான பேச்சும் உள்ளுக்குள் அவளுக்கு ரசனையாகத்தான் இருந்தது. அவன் தன்மீது வைத்திருக்கும் அந்த அளப்பரிய காதலை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சுக்குள் பிரியம் பொங்கி வழிந்தது தான்.
ஆனால், தன் குடும்பச் சூழ்நிலையும் தந்தையின் கோபமும் அவளது கரங்களைக் கட்டிப் போட்டதோடு குடும்பத்தின் பயத்தையும் இடையே வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அந்த நிலவொளியில் ராயனின் பார்வையில் தவித்து நின்றாள்.
அவளின் தவிப்பை உணர்ந்தவன், அவளுக்கு இன்னும் நெருக்கமாக வந்தான். நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் அவளது பயந்த விழிகளையும், தன்மீது இருக்கும் பிரியத்தை மறைக்கப் போராடும் அந்தப் போராட்டத்தையும் அவன் துல்லியமாகப் படித்துவிட்டான்.
அரசி…”உன் கண்ணு பொய் சொல்லுதுடி” என்று ஆழமான குரலில் சொன்னவன், அவளது முகத்திற்கு அருகே குனிந்து, “உன் மனசுல என்னைப் பத்தின பயம் இல்ல… உன் குடும்பத்தைப் பத்தின பயம் மட்டும்தான் இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
உன்னை கஷ்டப்படுத்தி பெற வேண்டிய காதல் எனக்குத் தேவையில்லை அரசி. ஆனா, உன்னைத் தவிர வேற ஒரு பொண்ணை இந்த ராயன் நினைச்சுக் கூட பார்க்க மாட்டான்.
“அவனது குரலில் இருந்த அந்த உறுதியும், தன்னைப் புரிந்துகொண்ட விதம் எழிலின் இதயத்தை அப்படியே உருக்கியது. கண்கள் லேசாகக் கலங்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்”ராயன்… என் சூழ்நிலை உங்களுக்குப் புரியல. எங்க அப்பா…” என்று அவளது குரல் தழுதழுத்தது.
“எனக்கு எல்லாமே புரியுதுடி. உன் குடும்பத்தோட சம்மதத்தோட, உங்க அப்பா தலைநிமிர்ந்து நிற்கிற மாதிரிதான் உன்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டு போவேன். அதுவரைக்கும் இந்த ராயன் காத்திருப்பான். ஆனா, என்னைப் பிடிக்கலன்னு பொய் மட்டும் சொல்லாதே… இந்த நெஞ்சு தாங்காது,” என்று அவளது கரங்களை மெதுவாகப் பற்றி அழுத்தமாகச் சொன்னான்.
உண்மையிலேயே அப்போது ராயன் மீது எழிலிற்குப் பெரிய காதலோ அபிப்பிராயமோ எதுவும் வரவில்லை. அவன் மீது ஒரு பிரமிப்பும், ஆபத்தான நேரத்தில் தன் உயிரைக் காப்பாற்றினான் என்ற நன்றியுணர்ச்சியும் மட்டுமே இருந்ததால் தன் எண்ணத்தில் உறுதியாக நின்றவள், “நிஜமாவே உங்க மேலே எனக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை! தயவுசெய்து இனிமே என்கிட்ட இப்படிப் பேசுற வேலையை வச்சுக்காதீங்க,” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு விலகாத ராயன், “லேசாக அவளது தாடையைப் பற்றித் தன் பக்கம் திருப்பியவன் உன் கண்ணுல காதல் தெரியுதுடி… அதை நீ வீம்புக்கு மறைக்கிற, அவ்வளவுதான்!” என்று ஆழமாகச் சொன்னான்.
“அப்படியெல்லாம் ஒரு மண்ணங்கட்டியும் இல்லை!” என்று கோபத்துடன் அவனது கையைச் சட்டென்று தட்டிவிட்டவள் “இனிமே என்னை இப்படித் தனிமையில சந்திச்சுப் பேசுற வேலையை வச்சுக்காதீங்க. சத்தியமாக உங்க மேலே எனக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை!” என்று உறுதியாக சொல்லிவிட்டு, வேகமாகத் திரும்பி நடந்தவளின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.
பனி சிந்தும்…