Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 11

CHAPTER 11

பனித்துளி 11

By seema · October 20, 2026

0

“அம்மா… என்னன்னு தெரியலம்மா! அக்கா இவ்வளவு நேரம் வராம இருக்கவே மாட்டாங்க. என்ன ஆச்சுன்னு புரியலையே!” என்று பதற்றத்துடன் குயிலா சொன்னாள்.

அதேநேரம், நாகர்கோவிலுக்குச் சென்று வயலில் விதைப்பதற்காகக் கேழ்வரகு விதைகளை வாங்கிக்கொண்டு, மருதுவும் ராயனும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கே பதற்றத்தில் நின்ற குயிலாவையும் மயிலாவையும் பார்த்த மருது, விஷயத்தை கேள்வி பட்டு “என்ன புள்ள சொல்ற? நர்சம்மா எங்கே போச்சு? இங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லையே… சரி பதறாதீங்க, ஆளுக்கு ஒரு பக்கமா போய்ப் தேடிப் பார்க்கலாம்,” என்றார்.

எழிலைக் காணவில்லை என்ற செய்தி ராயனின் காதில் விழுந்த அடுத்த நொடி, அவனது நெஞ்சம் அப்படியே உறைந்துபோனது. வழக்கத்தைவிட அவனது இதயத் துடிப்பு பல மடங்கு வேகமெடுக்க, காட்டின் பிரம்மாண்டமும், இரவின் கொடூரமும் அவன் மனக்கண் முன் வந்து பயமுறுத்தவும், கண்கள் சிவக்கத் தவித்துப் போனவன் உடனே நண்பர்களுக்கு இதைப்பற்றி சொல்ல, பரமு, சொக்கன், மூக்கையன் என அனைவரும் ஓடோடி வந்தனர்.

“ராயா… இருட்டுறதுக்குள்ள காட்டுக்குள்ள இறங்கி தேடனும்டா!” என்று நண்பர்கள் நால்வரும் காட்டின் ஒவ்வொரு திசையையும் பிரித்துக்கொண்டு, கையில் டார்ச் லைட்டுகளுடன்  தீப்பந்தங்களுடன் ஆளுக்கொரு பக்கமாக அடர்ந்த காட்டுக்குள் பாய்ந்து தேடத் தொடங்கினர்.

‘அரசி.. உனக்கு ஒன்னும் ஆகக்கூடாதுடி!’ என்று மனதிற்குள் ரத்தக் கண்ணீர் வடித்தபடி, ராயன் இருள் சூழும் காட்டுப் பாதைக்குள் வெறிபிடித்தவன் போல ஓடினான்.

எழிலுக்கு பாதை புரியாமல் நடந்து நடந்து கால்கள் இரண்டும் பயங்கரமாக வலிக்கத் தொடங்கின. அதற்குமேல் அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. தளர்ந்துபோய், அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தின் வேரின் மீது அப்படியே சாய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

சுற்றிலும் காடு வேகமாக இருட்டத் தொடங்கியது. பயத்தில் கை நடுங்கத் தன் போனில் இருந்த டார்ச் லைட்டை ஆன் செய்து சுற்றி பார்க்க, அந்த மெல்லிய வெளிச்சத்தில், சற்றுத் தள்ளி ஒரு பெரிய பாம்பு அமைதியாக ஊர்ந்து போவது தெரியவும், பயத்தில் அலறிவிடாமல் இருக்கத் தன் வாயை இரு கைகளாலும் இறுக்கமாகப் பொத்திக்கொண்டவள் கால்களை உடம்போடு சுருக்கி வைத்துக்கொண்டு நடுங்கியபடி உட்கார்ந்திருந்தாள்.

“எழில்… எழில்..நர்சம்மா…”என்று காட்டுக்குள் நண்பர்கள் ஆளுக்கொரு பக்கமாகத் தேடி அலைந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நேரம் கடந்து கொண்டே சென்றதே தவிர, அடர்ந்த காட்டுக்குள் எழில் இருக்கும் இடத்தை அவர்களால் அவ்வளவு சீக்கிரமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ராயனுக்கோ நெஞ்செல்லாம் பதறியது. “மலையாத்தா… என்னவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது! அவளைப் பத்திரமா என் கண்ணுல காட்டு தாயி…” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டான்.

கண் மண் தெரியாமல் ஓடி வந்தவனோ சட்டென்று சிறிது நொடிகள் நின்று கண்களை மூடவும், அவனது மனசாட்சி சொன்ன திசையை நம்பி, கிழக்கு பக்கமாக இருந்த அடர்ந்த ஒற்றையடிப் பாதையில் வெறிபிடித்தவன் போல வேகமாக ஓடினான்.

வழியிலிருந்த காட்டு முட்களும் புதர்களும் அவனது உடலைக் கிழித்துக் ரத்தம் வரச் செய்தாலும், ராயனோ எதையுமே பொருட்படுத்தவில்லை. எழிலைப் பத்திரமாகக் கண்டுபிடிப்பது மட்டுமே அவனுக்கு மூச்சாக இருந்தது.

“எழில்… எழில்…” என்று அவன் தொண்டை நனையக் கத்திய குரல் அந்த அடர்ந்த காடெங்கும் எதிரொலித்தது.

அழுது அழுது தொண்டை வறண்டுப் போய், மயக்க நிலைக்குச் சென்றுகொண்டிருந்த எழிலின் காதில், எங்கிருந்தோ அந்த ஆழமான குரல் கேட்கவும், “நான்… நான் இங்கதான் இருக்கேன்…” என்று சொல்ல முயன்றாள், ஆனால் அவளது தொண்டையிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

கையில் தீப்பந்தத்தோடு ‘எழில்’ என்று கத்திக்கொண்டே ஓடிவந்த ராயன், அடர்ந்த இருளுக்கு நடுவே மரத்தடியில் ஒரு மெல்லிய வெளிச்சம் தெரிவதைப் பார்த்துவிட்டான்!

“அரசி!” என்று பதறியபடி அந்தத் தீப்பந்தத்தோடு அவள் இருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடிவந்தான்.

அங்கே, மரத்தடியில் பயத்திலும் சோர்விலும் ஒடுங்கிப் போயிருந்தவள், வெளிச்சத்தோடு தன் முன்னே ஓடிவரும் ராயனைப் பார்த்தாள். அவன் கையில் இருந்த தீப்பந்த வெளிச்சத்தில் அவனது தவிப்பான முகம் தெரிந்தது.

அவனைக் கண்ட அந்த நொடியில், அவளுக்குள் இருந்த பயமெல்லாம் வடிந்து ஒருவிதப் பாதுகாப்பு உணர்வு மேலிட, ராயன் அருகில் வருவதற்குள்ளேயே சுதாரிப்பின்றி அப்படியே  மயங்கிச் சரிந்தாள்!

பதற்றத்தில் ஓடிவந்த ராயன், தரையில் மயங்கிக் கிடந்த எழிலைப் பூப்பந்து போலத் தன் இரு கரங்களிலும் அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன்”ஏய் அரசி…அரசி! எந்திரிடி…” என்று பதறிப்போய்க் அவளது கன்னத்தில் தட்டிக் கூப்பிட்டான்.

அவளிடம் அசைவு இல்லை, இங்கு பாருடி என்று உலுக்கியும் அவள் சுயநினைவின்றி இருப்பதை உணர்ந்து, தன்னவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உள்ளுக்குள் தெரிந்தாலும், காதல் கொண்ட அவனது மனம் தவிப்பை நிறுத்த மறுத்தது.

“அரசி… கண்ணைத் திறடி…” என்று உரத்த குரலில் அலறினான்.எங்கோ தூரத்தில் அவனது குரல் கேட்கவே, “ராயா… ராயா!” என்று கத்தியபடி நண்பர்கள் அந்தத் திசையை நோக்கி ஓடி வந்தனர்.

“இங்கதான்டா இருக்கேன்… சீக்கிரம் வாங்கடா!” என்று கத்தியவன், ஒரு கையில் தீப்பந்தத்தைப் பிடித்தபடி மற்றோரு கையால் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

சிறிது நிமிடங்களில் நண்பர்களும் அங்கே ஓடோடி வந்து சேர்ந்தனர்.

“பயத்துல மயங்கி விழுந்துட்டாடா…” என்று ராயன் தவிப்புடன் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் மூச்சிரைக்க மருதுவும் அங்கே வந்து சேர்ந்தார்.

அம்மா டி எழிலு என்று மருது பதற, “இவளுக்கு ஒன்னும் ஆகலப்பா! பயத்துலதான் மயங்கிட்டாள்,” என்று ராயன் சொல்ல, தன் மகன் கைகளில் தூக்கி வைத்திருந்த எழிலைப் பார்த்த மருது, “சரியா…நம்ம வூட்டுக்கே கூட்டிட்டு வா!” என்றார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்து சேர்த்தனர்.

எழிலை பார்த்த மயிலா “யாத்தே நான் என்ன செய்வேனென்று பதறியர் குடிக்க ஏதாச்சும் தண்ணி கொடுக்கலாமா? பயத்துல பல்லு கட்டிக்கிட்டு இருக்கப்போகுது…” என்று யோசித்துவிட்டு, வேகமாக உள்ளே சென்று அடுப்பில் வெதுவெதுப்பாக இருந்த வரகாப்பியை எடுத்து வந்து எழிலின் வாயைத் திறந்து மெதுவாகப் புகட்டினார்.

அவளது தொண்டைக்குழிக்குள் வரகாப்பி இறங்கிய அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில், மூடியிருந்த இமைகள் லேசாக அசைந்து கண்கள் உருளுவது தெரிந்தது.

“லேசாகச் சூடு பறக்கக் கால்ல தேய்ச்சு விடுங்க!” என்று மயிலா சொல்ல, ராயன் சற்றும் தாமதிக்காமல் அவளது பாதங்களைப் பிடித்துச் சூடு பறக்கத் தேய்த்துவிட்டான். குயிலாவும் எழிலின் கைவிரல்களைப் பிடித்துத் தேய்த்துவிட, சில நிமிடங்களில் எழில் முழுமையாகச் சுயநினைவுக்கு வந்தாள்.

மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள், சுற்றிலும் அனைவரும் கவலையோடு நிற்பதைப் பார்த்துச் சங்கடப்பட்டபடி மெல்ல எழுந்து உட்கார்ந்து, “எனக்கு ஒன்னும் இல்லங்க… தெரியாம வழி மாறி காட்டுக்குள்ள போய் மாட்டிக்கிட்டேன்,” என்று தயங்கியபடி சொன்னாள்.

“தாயி… உனக்கு ஒன்னும் ஆகலையே, அதுவே போதும்! தனியாப் போகாம கூடக் குயிலாவைக் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா? உனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா உங்க அப்பா அம்மாவுக்கு நாங்க என்ன தாயி பதில் சொல்றது?” என்று மருது அன்போடு அதட்டினார்.

அதைக் கேட்ட எழிலுக்கு தன் தவறு புரிய, கண்களில் நீருடன், “என்னை மன்னிச்சிடுங்க ஐயா… இனிமே இப்படி நடக்காது,” என்று தலைகுனிந்து மன்னிப்புக் கேட்டாள்.

அப்போது எழிலின் போனிற்கு கால் வரவும், குயிலா ஓடிச்சென்று மேஜையிலிருந்த போனை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.

‘அம்மா’ என்று தெரிந்ததும், போனை ஆன் செய்து காதில் வைத்த அடுத்த நொடியே, மறுமுனையிலிருந்து வள்ளி பொரிந்து தள்ளிவிட்டார்.

“ஏண்டி அறிவு கெட்டவளே… எங்கடி போன? எவ்வளவு நேரமா போன் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? மனசெல்லாம் ஏதோ மாதிரி பதறிக்கிட்டே இருக்குடி!” என்று பதற்றமும் கோபமுமாகக் கத்தினார்.

தாயிடம் நடந்ததைச் சொல்லி அவரை பயமுறுத்த விரும்பாத எழில், “ஒன்னும் இல்லம்மா… சும்மா பக்கத்துல காட்டைச் சுற்றிப் பார்க்கப்போனேன். அங்க நெட்வொர்க் கிடைக்கல, அதான் போன் பண்ண முடியல,” என்று சமாளித்தாள்.

“அப்படியா? குயிலாவையும் கூட்டிட்டுத்தானே போன?” என்று வள்ளி சந்தேகமாகக் கேட்க, “ஆமாம்மா… குயிலா கூடத்தான் போனேன்,” என்று தாயிடம் பொய்யைச் சொல்லி நிலைமையைச் சமாளித்தவளோ அப்படியே சுற்றிலும் நின்றிருந்த மருது குடும்பத்தினரைப் பார்த்து, தன் பொய்யை மன்னித்துக்கொள்ளுமாறு கண்களாலேயே வேண்டினாள்.

வள்ளி லேசாகச் சமாதானமாகிப் போனை வைத்ததும், மயிலா அவளது அருகில் வந்தவர், “இராவுக்கு நீ இங்கேயே இருத்தா… காலையில அந்த வீட்டுக்குப் போய்க்கலாம்,” என்றார் அன்போடு.

எழில் தயங்கியபடி, “இருக்கட்டும்மா… நான் அங்கேயே போய் தங்கிக்கிறேன்,” என்று மறுக்கப் பார்த்தாள்.

அப்போது வரை அமைதியாக நின்றிருந்த ராயன், அவளை நிமிர்ந்து பார்த்து, “சொன்னா கேட்க மாட்டியா நீ?” என்று அதிகாரமாக அதட்டினான்.

அவனது அந்த கம்பீரமான அதட்டல் குரலைக் கேட்டதும் எழிலுக்குள் ‘திடுக்’ என்றிருந்தது. அவன் பார்வையின் தீவிரத்திற்கு எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியானாள்.

பின்னர், மயிலா பரிமாறிய சூடான சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, குயிலாவோடு சேர்ந்து அவளது அறையிலேயே படுத்துக்கொண்டாள்.

மேலே மாடி அறையில் மரக்கட்டிலில் படுத்திருந்த ராயனுக்கோ தூக்கம் வரவில்லை. காட்டுக்குள் மயங்கிக்கிடந்த எழிலைத் தன் இரு கரங்களிலும் அள்ளித் தூக்கி வந்த அந்த நிமிடங்கள்தான் அவன் மனக்கண் முன் வந்து போயின.

அவளைத் தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஓடிவந்தபோது, அவளது மென்மையான உடலின் தீண்டலும், தன் தோள்மீது சாய்ந்திருந்த அவளது முகத்தின் ஸ்பரிசமும் இப்போது அவனை முழுமையாக ஆட்கொண்டன.

அவளது அந்த அண்மையும் தொடுதலும் உண்டாக்கிய புதுவித உணர்ச்சிகள், அவனுக்குள் பெரும் புயலையினைக் கிளப்பிவிட, கைகளைத் தலைக்கு அடியில் கொடுத்துக்கொண்டு அவளது நினைவுகளிலேயே விழித்திருந்தான்.

கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த எழில் மெதுவாகக் குயிலாவிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

“குயிலா… நான் காட்டுக்குள்ள மயங்கி விழுந்த அப்புறம் என்ன நடந்துச்சு? எனக்கு உங்க அண்ணன் ஓடி வந்தது மட்டும்தான் லேசாக நினைவிருக்கு…” என்று தயங்கியபடியே கேட்டாள்.

அதற்குக் குயிலாவோ, “அதான் அக்கா… நீங்க மயங்கி விழுந்ததும் எங்க அண்ணன் தான் உங்களை அப்படியே கைகள்ல தூக்கிட்டு ஓடி வந்துச்சு! அப்புறம் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து உங்க காலையெல்லாம் பிடிச்சுத் தேய்ச்சு விட்டுச்சு,” என்று இயல்பாகச் சொன்னாள்.

“அப்படியா…?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டாலும், எழிலின் உள்ளுக்குள் ‘திடுக்’ என்றிருந்தது!

‘அவன்… நம்மளைத் தொட்டுத் தூக்கிட்டு வந்தானா? அந்த வலிமையான நெஞ்சு மேலதான் நாம சாய்ஞ்சு கிடந்தோமா…?’ என்று முணவியவளுக்கு ராயனின் அந்த அகன்ற, கம்பீரமான நெஞ்சின் ஸ்பரிசமும், அவனது கைவிரல்களின் சூடும் தன் உடலில் பட்டதை நினைத்துப் பார்க்கும்போதே, அவளுக்குள் விவரிக்க முடியாத ஒரு மெல்லிய குறுகுறுப்பு உண்டாகாகவும், முகத்தை மூடித் தலையணையில் புதைத்துக்கொண்டாள்.

பனி சிந்தும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!