இதோ எழில் இந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில், அந்த வெள்ளிக்கிழமை இரவு தன் சொந்த ஊருக்குப் போக, டிரெயினில் டிக்கெட் புக் பண்ணியிருந்தாள்செய்திருந்தாள்.
விஷயம் தெரிந்த குயிலா, “அக்கா… போயிட்டு எப்பக்கா வருவீங்க? அந்த ஊரைப் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு என்க, அப்போ நீயும் கூட வரியா?” என்று ஆவலுடன் கேட்டாள் எழில்.
குயிலா அவளது அன்பைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “எனக்கும் உங்க கூட வர ஆசையாக தான் இருக்கிறது.ஆனா எனக்குக் காலேஜ் இருக்கே! எனக்கு செமஸ்டர் லீவு வரட்டும், அப்போ என்னை உங்க ஊருக்குக் கூட்டிட்டுப் போகணும்,” என்று சிரித்தாள்.
பின்னர் மருத்துவமனை டாக்டரிடம் பேசி, மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை மாலையே கிளம்பிச் சிதம்பரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
அதேநேரத்தில், ராயன் வழக்கம்போலத் தன் நண்பர்களுடன் மலைக்காட்டுக்குள் விவசாய வேலைகளையும், இரவு வேட்டையையும் கவனித்து வந்ததால், எழில் ஊருக்குச் சென்ற செய்தி அவனுக்குத் தெரியவில்லை.
தங்கையுடன் பேசும் போது எதேச்சையாக கேட்பது போல நர்சம்மாக்கு பேர் கிடையாதா?, எல்லாரும் நர்சம்மானு சொல்றாங்களேனு சிரிக்க, அய்யோ அண்ணா…”அவங்க பேர் எழிலரசி” என்றாள்.
‘எழிலரசி இளந்திரையன்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவனுக்கு சில்லென்று இருந்தது.
அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும், தங்கை குயிலா அவளது அறைக்குள் தூங்கச் செல்வதைப் பார்த்த ராயனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஏய் குயிலா… இன்னைக்கு என்ன நர்சம்மா வீட்டுக்குத் துணைக்குப் போகாம இங்கேயே போற?” என்று இயல்பாகக் கேட்பது போலக் கேட்டான்.
“அந்தப் புள்ள தான் ஊருக்குப் போயிருக்கேடா… அதான் குயிலா இங்கேயே தங்கியிருக்கா,” என்றார் மயிலா.
அம்மா சொன்னதைக் கேட்டதும் ராயனின் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தூக்கி வாரிப்போட்டது. “என்னது… ஊருக்குப் போயிருக்காளா?!”பேரதிர்ச்சியுடன் நின்றவனுக்கு அதற்குமேல் என்ன கேட்பதென்றே புரியவில்லை.
அவனது முகமும் சட்டென்று மாறிப்போனது.அன்றிலிருந்து அவனது எண்ணம் முழுவதும் ‘அவள் எப்போது வருவாள்?’ என்ற ஒரே கேள்வியைச் சுற்றியே அலைபாய்ந்தது.
சனி, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமையும் வந்தது. தினமும் ஜன்னல் வழியே எதிரே இருக்கும் வீட்டைப் பார்ப்பதும், ஏமாந்து போவதுமாக அவனது நாட்கள் நகர்ந்தன.
திங்கள் கிழமையும் அவள் வரவில்லை என்றதும் ராயனுக்குத் தவிப்பு இன்னும் அதிகமாகியது. மேலும் இரண்டு நாட்கள் கழித்து, அதாவது புதன்கிழமை காலையில்தான் எழில் மீண்டும் மேதினூருக்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே செல்லும் எழிலை, தன் மாடி வீட்டு ஜன்னல் வழியே பார்த்த ராயனின் முகத்தில்,கடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு பேரொளி படர்ந்தது!
எழிலிடம் தன் மனதில் இருக்கும் காதலைத் தாமதிக்காமல் சொல்லிவிட வேண்டும் என்பதில் ராயன் மிக உறுதியாக இருந்தான். அதற்கான சந்தர்ப்பத்திற்காக தான் காத்துக்கொண்டிருந்தான்.
நேரமும் கடந்து மாலைப் பொழுதானது. மருத்துவமனையில் தன் அன்றாடப் பணியை முடித்துவிட்டு எழில் வீட்டிற்கு வந்தாள். அவளது அம்மா வள்ளி ஊரிலிருந்து வரும்போது செய்து கொடுத்த தொக்கும், கூடவே ஹாட்பாக்ஸில் வைத்துத் தந்த சப்பாத்தியும் இருந்ததால், அன்றிரவுக்குச் சமையல் செய்ய வேண்டாம், அதை வைத்தே சமாளித்துக்கொள்ளலாமென்று முடிவெடுத்தாள்.
பின்னர் உடம்பிலிருந்த கலைப்பு தீர, வழக்கம்போலத் தோட்டத்து குளியலறையில் குளித்துவிட்டு வந்தவள் ஈரமுகத்தைத் துண்டால் துடைத்தபடி எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோனாள்!
அங்கே, எதிர் வீட்டின் மாடி ஜன்னலிலிருந்து ராயன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டாள்.
‘அய்யயோ… நாம இங்க குளிப்பதெல்லாம் அந்த மாடி ஜன்னல்ல இருந்து பார்த்தா தெரியுமா?!’ என்று தவறாக நினைத்து அவளது இதயம் பயத்தில் துடித்தது.
ஆனால் உண்மையில், வெளிப்பக்கக் குளியலறை மரக்கதவு மட்டுமே அங்கிருந்து தெரியுமே தவிர, உள்ளே இருந்து எதுவும் தெரியாதென்ற விஷயம் பாவம் அவளுக்குத் தெரியவில்லை.
அவளது முகத்தில் படர்ந்த அந்தத் திடுக்கிட்ட மாற்றத்தையும் பயத்தையும் உணர்ந்த ராயன், உடனடியாகத் தன் கைகளால், “பயப்படாதே… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சைகை காட்டினான்.
அவன் சைகை செய்த விஷயம் எழிலுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், எதுவுமே பேசாமல் சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டவளின் இதயம் வேமாகப் படபடத்தது.
கடந்த இரண்டு மூணு வாரங்களாக எழிலும் அவனைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் தான் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது, அவன் அப்படி சைகையில் வந்து பேச அழைத்ததைப் பார்த்ததும், ‘இவனுக்கு என்ன ஆச்சு? என்கிட்ட என்ன பேசணும்னு நினைக்கிறான்?’ என்று ஒரு பக்கம் குழப்பமாகவும் யோசனையாகவும் இருந்தது.
எழில் கதவைச் சாத்திய பிறகும், ‘அவள் வெளியே வந்து பதில் சொல்வாளா?’ என்று அதே ஜன்னலோரம் துடிக்கும் இதயத்தோடு காத்திருந்தான். ஆனால் அதன் பின்னர் எழில் வெளியே வரவில்லை.
மறுநாள் வழக்கம்போல எழில் மருத்துவமனையில் தான் இருந்தாள். அன்று காலையிலிருந்தே நோயாளிகளின் நடமாட்டம் பெரிதாக இல்லை.அப்போது, “நர்சம்மா… நர்சம்மா!” என்று அலறியபடி இருவர் பதற்றத்தோடு ஓடோடி வந்தனர்.
“சீக்கிரம் வாங்க…டாக்டர் ஐயா இல்லையா?” என்று மூச்சிரைக்கக் கேட்டனர்.”இல்லையே… டாக்டர் சார் இன்னைக்கு வரமாட்டாரே, என்ன ஆச்சு?” என்று எழிலும் பதறிப்போய்க் கேட்டாள்.
“அய்யய்யோ… நம்ம சுப்பன் பொண்டாட்டி பொன்னாத்தாவுக்குத் திடீர்னு பிரசவ வலி புடிச்சுக்கிச்சு! காட்டுகுள்ள அப்படியே விழுந்துட்டா… பனிக்குடமும் உடைஞ்சு போச்சு நர்சம்மா! சீக்கிரம் வாங்க!” என்று அவர்கள் கதறினர்.
அங்கிருந்த முதிய வாட்ச்மேன், “அம்மா… ஆஸ்பத்திரியை நான் பார்த்துக்கிறேன், நீங்க போய்த் தாயையும் பிள்ளையையும் காப்பாத்துங்க!” என்று அனுப்பி வைத்தார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எழில், ஒரு நொடியும் தாமதிக்காமல் அட்டெண்டரையும் சேர்த்துக்கொண்டு பிரசவத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணப் பெட்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேகமாக ஓடினாள்.
அடர்ந்த காட்டுப் பாதை வழியே மூச்சிரைக்க ஓடியவர்கள், ஒரு பெரிய மரத்தின் அடியை அடைந்தனர். அங்கே பொன்னாத்தா வலியால் அலறித் துடித்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி இரண்டு பெண்கள் புடவைகளால் மறைப்பாகப் பிடித்துக்கொண்டு, “ஐயோ… இன்னும் ஆஸ்பத்திரி ஆளுங்களைக் காணோமே!” என்று பதற்றத்தோடு இருந்தனர்.
எழிலும் அட்டெண்டரும் அங்கே போய் சேர்வதற்குள், வலியின் உச்சத்தில் பொன்னாத்தா கதறினாள். அத்துடன் குழந்தையின் தலையும் வெளியே வரத் தொடங்கியிருந்தது!
நிலைமை கையை மீறிச் செல்வதைப் புரிந்துகொண்ட எழில், யோசிக்க நேரமின்றி உடனடியாகக் களத்தில் இறங்கினாள். காட்டின் சுட்டெரிக்கும் சூழலிலும், வசதிகள் இல்லாத அந்த மரத்தடியிலும் பதற்றப்படாமல், தன் அனுபவ முழுவதையும் பயன்படுத்திச் சமயோசிதமாகப் பிரசவம் பார்க்கத் தொடங்கினாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆண் குழந்தையின் அழுகை சத்தம் அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே வீலென்று எதிரொலித்தது!
“மகராசியா இருக்கணும் தாயி! நாலு வருஷமா குழந்தை இல்லாம தவிச்சுக் கிடந்தா… இப்பதான் அந்த மலையாத்தா புண்ணியத்துல மாசமானா. உன் உருவத்துல வந்து அந்த மலையாத்தா தான் பொண்ணையும் பிள்ளையையும் காப்பாத்திக் கொடுத்துட்டா!” என்று எழிலைப் பார்த்துக் கைகூப்பி நின்றபடி நெகிழ்ந்து அழுதனர்.
பொன்னாத்தாவோ பிள்ளை பெற்ற வலியின் களைப்பில் மெதுவாக மயக்க நிலைக்குச் சென்றுவிட, காட்டின் அமைதியில், ஒரு புதிய உயிரைக் காப்பாற்றிய நிறைவோடு எழில் குழந்தையைத் துணியில் சுற்றித் தாயின் அருகே கிடத்தினாள்.
காட்டுக்குள் பிரசவம் நடந்த விஷயம் கேள்விப்பட்டதும், பொன்னாத்தாவின் கணவன் சுப்பனும் இன்னும் இரண்டு பேரும் பதறியடித்துக்கொண்டு ஒரு கயிற்றுக் கட்டிலைச் சுமந்தபடி ஓடோடி வந்தனர்.
அங்கே தன் மனைவியும் பிறந்த குழந்தையும் நலமாக இருப்பதைக் கண்ட சுப்பனுக்கு அழுகையே வந்துவிட்டது. உணர்ச்சிப் பெருக்கில், “தாயி!” என்று அலறியபடி நேராக வந்து எழிலின் காலில் விழப்போனான்.
அவளோ பதறிப்போய், “அய்யய்யோ! என்ன பண்றீங்க… எந்திருங்க!” என்று அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
கண்ணீரைத் துடைத்த சுப்பன், “இல்ல தாயி… என் பொண்டாட்டியை மலடி மலடின்னு என் வீட்லயே என்ன பெத்த தாயே பேசும்போது அவள் பட்ட வேதனையை கூடவே இருந்து பார்த்தவன் நான். இன்னைக்கு நீங்க கடவுளா வந்து காப்பாத்தியிருக்கீங்க!” என்று நெகிழ்ந்தான்.
துணியில் சுற்றப்பட்டிருந்த பச்சைக் குழந்தையை தூக்கிய எழில் சுப்பனின் கையில் கொடுக்க, கைகள் நடுங்க தன் மகனை முதன்முறையாக நெஞ்சோடு அணைத்துக்கொண்ட சுப்பன், “ஆத்தா…” என்று சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான்.
பின்னர், மயக்கத்திலிருந்த பொன்னாத்தாவை மெதுவாகத் தூக்கி அந்தக் கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்து, ஊருக்குள் சுமந்து சென்றார்கள்.”தாயும் புள்ளையும் நல்லா இருக்காங்க, ஒன்னும் பயப்படத் தேவையில்லை. சுகப்பிரசவம் தான்!” என்று எழில் ஆறுதல் கூறியபடி அவர்கள் பின்னாலேயே நடந்தாள்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல அந்த மலைக் கிராமம் முழுவதும் பரவியது. ஏற்கனவே அன்பாக நடந்துகொள்ளும் எழிலை, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிராம மக்களுக்கு இன்னும் அதிகமாகப் பிடித்துவிட, அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கத் தொடங்கினர்.
அன்று வெள்ளிக்கிழமை, எழிலுக்கு விடுமுறை. அதனால் தாமதமாகவே தூங்கி எழுந்தாள். நிதானமாகக் குளித்து முடித்து, ஊரில் இருக்கும் தன் அப்பா, அம்மா மற்றும் தோழிகளுடன் போனில் பேசிவிட்டு, ஒரு வாரமாகச் சேர்த்து வைத்திருந்த துணிகளையெல்லாம் துவைத்து வெயிலில் காயப்போட்டாள்.
குயிலாவும் காலேஜிற்கு போய்விட, வீட்டில் தனியாக இருந்ததால், ‘சரி, சும்மா பின்னாடி இருக்குற அந்த அழகான சுனையைப் பார்த்துட்டு வரலாம்’ என்று யோசித்தவள், தன் போனை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு காட்டுப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
இயற்கை அழகை ரசித்துக்கொண்டே, போனில் புகைப் படங்கள் எடுத்தபடி முன்னேறிய எழில், வழி தவறி அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டாள். சில மணி நிமிடங்களுக்கு பிறகு தான் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றுவிட்டதை உணர்ந்தவள், சுற்றிலும் பார்த்து மிரண்டு போனவள் பதற்றத்துடன் தன் போனை எடுத்துப் பார்த்தால், சிறிதும் நெட்வொர்க் சிக்னல் இல்லை.
சுற்றிலும் அடர்ந்து வளர்ந்த மரங்களும், விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கிளைகளும் எழிலைப் பயமுறுத்தத் தொடங்கின.
“குயிலாவுக்குப் போன் பண்ணி கூப்பிடலாம்னா அதுக்கும் வழியில்லையே!” என்று புலம்பியபடி, காட்டுப் பாதையிலேயே தவித்து நின்றவளோ “யாராவது இருக்கீங்களா…?” என்று உரக்கக் கத்திய அவளது குரல், அடர்ந்த காட்டின் அமைதியில் எதிரொலித்து அவளுக்கே பயத்தைக் கூட்டியது.
எங்குத் திரும்பிப் பார்த்தாலும் ஒரே மாதிரியான மரங்களும் புதர்களுமே தென்பட, எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் பரிதவித்து நின்ற எழில், பயத்தில் அழுது அழுது ஓய்ந்துபோனாள்.
நேரமும் கடந்து செல்ல… குயிலாவும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்துவிட, வர காப்பி போட்ட மயிலா, எழிலுக்காக ஒரு சொம்பில் ஊற்றியவர், “குயிலா…போய் எழில் புள்ளகிட்ட கொடுத்துட்டு வாடி,” என்று நீட்டினார்.
சரிம்மா என்றவாறு சொம்பை வாங்கிக்கொண்டு வந்த குயிலா, கதவு சாத்தியிருக்கவும் வாசலில் நின்று, “அக்கா… அக்கா…” என்று கூப்பிட்டாள். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
ஒருவேளை தோட்டத்தில் இருக்காங்களோனு அங்கு போய் தேடியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.”எங்கே போனாங்க? இன்னைக்கு ஆஸ்பத்திரி லீவுன்னு தானே சொன்னாங்க… இங்க காணோமே?” என்று யோசித்தபடி வீட்டிற்கு வந்து விஷயத்தைச் சொன்னாள் குயிலா.
“சரிடி… ஏதாச்சும் அவசர வேலையா டவுனுக்குப் போயிருக்கும், வந்துடும்,” என்று மயிலா இயல்பாக எடுத்துக்கொண்டார்.
பொழுது சாய்ந்து மாலை ஆறு மணியைத் தாண்டியும் எழில் இருந்த வீடு மட்டும் இருளடைந்து கிடந்தது. விளக்குக் கூட எரியாத அந்த வீட்டைப் பார்த்ததும் குயிலாவின் நெஞ்சில் பயம் தொற்றிக்கொண்டது.
பனி சிந்தும்…