அந்தப் பெரிய அணைக்கட்டு முழுவதும் டூரிஸ்ட்களும் இயற்கை விரும்பிகளும் வரவும் போவதுமாக இருந்தனர். வரும் பயணிகளுக்கு ஏற்ப வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. உணவு வகைகள் விற்பனைக்குத் தயாராக இருந்தன. இன்னொரு பக்கம் ஐஸ், குல்பி வண்டிகள் அங்கங்கே வரிசைகட்டி நின்றன. பொரிகடலை, மக்காச்சோளம் இன்னும் பல உணவுகளைச் சமைத்து விற்றுக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்குச் சறுக்கு ஊஞ்சல், வழுக்கு பலகைகள், சில உடற்பயிற்சி சாதனங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. நீண்டு விரிந்திருந்த செடிகளுக்கு மத்தியில் சிமெண்ட் பலகைகளும் நடுநடுவே ஊஞ்சலும் அமைக்கப்பட்டிருந்தன. மனிதர்கள் அமர்ந்தால் மறைக்குமளவுக்கு மறைவுகள் நிறைய இருந்தன. அந்த மறைவுக்கு நடுவில் காதல் ஜோடிகள் நிறையப் பேர் முத்தமிட்டபடி இருந்தனர்.
தன் காதலனோடு அமர்ந்திருந்தாள் பாவனா.
“இன்னும் எத்தனை வருஷம் லவ் பண்றது? படிப்பு முடியப்போகுது. வீட்டில் கல்யாண ஏற்பாடு பண்ணப்போறாங்க… உங்க வீட்ல நம்ம காதலைப் பத்தி சொல்லிட்டியா, இல்லையா?” என்று கேட்டவாறு குகன் மடியில் படுத்திருந்தாள் பாவனா.
“இன்னும் இல்லை பாவி… எனக்கு அண்ணனும் இருக்கான். அவனுக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாணத்தைப் பற்றி பேசுவாங்க. நான் இப்பவே நம்ம விரும்புறதைச் சொல்லிட்டா அப்புறம் ஒத்துக்கவே மாட்டாங்க. அண்ணனுக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும், அதுவரைக்கும் எப்படியாவது சமாளி. படிச்சு முடிச்சு ఏదாவது வேலைக்குப் போகணும்னு சொல்லி வை. உங்கப்பா எப்பவும் குடிச்சுட்டுதானே சுத்துவார்? கண்டிப்பாக உனக்கு மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணி வைக்கமாட்டார், கவலைப்படாதே,” என்று குகன் கூறினான்.
“என் அப்பா எதுவும் பண்ணமாட்டாருனு எனக்கே தெரியும். ஆனா என்னை வளர்த்தது என் பெரியப்பாதானே? அவர்தான் எனக்கு எல்லாமே செய்றாரு. அவரால் பார்த்தா சம்மதிச்சுதான் ஆகணும். இருந்தாலும் உன் வீட்ல சொல்லிரு. முடிஞ்ச அளவுக்கு நான் தடுக்கப் பாக்குறேன். அதுக்கு மேல தடுக்க முடியாது; நம்ம திருட்டு கல்யாணம்தான் பண்ணிக்கணும். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்மள யாராலும் பிரிக்க முடியாது… பண்ணிக்கலாமா?” என்று பாவனா கேட்க, குகனுக்குத் தலைவலியாக இருந்தது.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, பாப்பா, சித்தி, சித்தப்பா என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். அவன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். பாவனாவின் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் அவன் குடும்பத்தைப் பிடிக்காது. காரணம், அவள் அப்பா மகாகுடிகாரன்; எப்போது பார்த்தாலும் குடித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருப்பான்.
பாவனா பிறந்ததும் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வந்த சண்டையில் கைகுழந்தையான பாவனாவை அம்போவென விட்டுவிட்டுச் செல்ல, குழந்தையில்லாத அவள் பெரியப்பாதான் இவளைத் தூக்கி வளர்த்தார். தாய் முகம் பார்த்துப் பழகிய பாவனாவைப் பெற்றவர்கள் மறுபடியும் வந்து தூக்கிப் போக, அவளோ அழுது அழுது மூச்சடக்கிச் சாவின் விளிம்புக்கே போய்விட்டாள். பாவனா மறுபடியும் பெரியம்மா, பெரியப்பாவிடம் வர, அன்றிலிருந்து இன்றுவரை பெற்ற மகளைப் போல் அவளைக் கவனித்து வளர்த்துப் படிக்க வைக்கின்றனர்.
அவள் பெரியப்பாவை ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். பெற்ற அப்பாவை ‘சித்தப்பா’ என்று அழைப்பாள். பெற்றவளுக்குக் கூட கொஞ்சம் கோபம்தான். “பத்து மாசம் சுமந்து பெத்தவ கல்லுமாதிரி இருக்கேன். என்னை விட்டுட்டுத் தூக்கி வளர்த்தவளை அம்மான்னு சொல்றாளா?” என்று கோபம் கோபமாக வந்தது. ஆனால் கணவன்-மனைவி சண்டையில் பிறந்த குழந்தையை அம்போவென விட்டுவிட்டுப் போனது தவறுதானே? அதை நினைத்துப் பார்க்கவில்லை.
பெற்ற அம்மாவுக்கு மகளைப் பார்க்கப் பார்க்கக் கோவந்தான் வந்தது; அம்மான்னு சொல்ல அவளுக்கு வலிக்குது. “நான் இன்னொரு குழந்தை பெத்து அதை எப்படி வளர்க்கிறேன் பாருங்க,” என்று கூறியதோடு நிற்காமல், குழந்தையும் பெற்று அதைப் பொத்திப் பொத்தி வளர்த்தார். பாவனாவுக்கு அவள் தங்கையைப் பிடிக்காது. தங்கைக்கும் அக்காவைப் பிடிக்காது; இருவரும் எதிர்துருவம்தான். பாவனா தங்கை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இவள் கல்லூரி முடிக்கும் நிலையில் இருக்கிறாள்.
பக்கத்துத் தெருவில் மாமா முறையுள்ள ஒருவரின் மகன் இருக்க, இருவரும் சோஷியல் மீடியா மூலம் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, இப்போது காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். பையன் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்; வாரத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வருவான். இவர்கள் பேசிப் பழகி யாரும் பார்த்ததில்லை. உள்ளூரில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதோடு சரி; பேசியதில்லை, பேச மாட்டார்கள். அவர்கள் பேச்செல்லாம் மொபைலில்தான். ஊருக்குள் பேசினால் யாராவது பார்த்து வீட்டில் சொல்வார்களோ என்று பயம். நேரில் பார்த்து கடந்து போவதோடு சரி; மற்றபடி பேசிக் கொள்வதெல்லாம் மொபைலில்தான்.
பாவனா கல்லூரியில் படிப்பதால், சொந்த ஊரில் காதல் அது இதுவெனத் தடமாறி விடுவாளோ என்று ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைத்தனர். கையில் மொபைல் கொடுத்ததால் அதில் பேசி கடலை போட்டு, தனியாகச் சந்திக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.
“குகா, என்னப்பா அமைதியா இருக்க? இப்போ என்னதான் பண்றது? ஆனா நான் சொன்னதுதான், வீட்ல விஷயத்தைச் சொல்லுங்க. எங்க வீட்ல பிரச்சனை வந்தா அடுத்த நிமிஷம் உங்க வீட்டுக்கு வந்துருவேன், நீங்கதான் சமாளிக்கணும்!” என்று பாவனா கூற, குகனுக்கோ தலைவலியானது.
“சரி, மெதுவா பார்த்துக்கலாம்,” என்று கூறி இருவரும் கிளம்பினர். பாவனாவின் பெரியப்பா கருணாநிதி, ஹாஸ்டலில் இருக்கும் மகளை அழைத்துப்போக வந்திருந்தார். அவளும் வீட்டுக்கு வந்து அங்கிருந்தே கல்லூரிக்குப் போனாள்.
பாவனாவின் அத்தை கல்யாணி வந்திருந்தார். “தம்பி, உன் மருமகனுக்குக் கல்யாண வயசு வந்துருச்சு. பாப்பாவும் படிப்பு முடிக்கப் போறா; நீங்க என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்கனு ஒரு வார்த்தை கேட்டுட்டு வெளியே பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம். என்னப்பா சொல்ற?” என்று கல்யாணி, பாவனாவைப் பெற்ற கண்ணதாசனிடம் கேட்க…
“நான் என்னக்கா சொல்றது? என் மகளை என்கிட்ட விடாம அண்ணன்தான் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க என்ன நினைச்சுட்டு இருக்காங்கனு தெரியல. நான் என்ன நினைக்கிறேன்னா, சொந்தத்துல பையன் இருக்கும்போது வெளியே எடுக்கிறது கொடுக்கிறது சரியில்லை. நீ போயி அவன்ட்ட ஒரு வார்த்தை சொல்லு, என்ன சொல்றான்னு பார்க்கலாம்,” என்று கண்ணதாசன் கூற, கல்யாணியும் சரியெனப் பெரிய தம்பியிடம் வந்து கேட்டார்.
“அக்கா, அது படிச்சுட்டு இருக்கு. கட்டிக்கப் போறது அவதானே? ஒரு வார்த்தை கேட்றலாம். அவ மறுத்தா வெளியதான் பார்க்கணும். புள்ள மனசை மீறி எதுவும் பண்ண முடியாதுக்கா. பாப்பா சரின்னு சொன்னா அடுத்த மாசத்துலயே கல்யாணம் வச்சுக்கலாம்,” என்று கூறிய கருணாகரன், மகளை அழைத்து அவள் அபிப்பிராயத்தைக் கேட்டார்.
அத்தை மகனான அமரனைச் சிறுவயதிலிருந்தே அவளுக்குத் தெரியும். அமைதியானவன், அதிர்ந்து பேசமாட்டான். சிறுவயதிலிருந்து அவன் அமைதியானவனாக இருந்தான். வயதுவந்த மாமா மகளைப் பார்த்த பிறகும் இளித்துக் கொண்டு பேசும் ரகமில்லை. நல்லவன், நாணயமானவன்.
“அப்பா, அவனைப் பிடிக்கவே பிடிக்காதுப்பா. அவனை நான் கட்டிக்க மாட்டேன், எனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்!” என்றாள். அப்பாவிடம் காதலைச் சொல்ல தைரியமாக இல்லை. காரணம், ஒரே ஊர், ஒரே சாதியாக இருந்தாலும் அந்தச் சாதிக்குள்ளும் குலம் இருக்கும். இவர்கள் வேறு குலம்; குகனும் வேறு குலம். அவன் வீட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தில் காதலைக் கூறவில்லை.
இப்போது காதலைப் பற்றிக் கூறினால், குகன் அண்ணனின் திருமணத்திலேயே அவனுக்கும் பெண் பார்த்துத் திருமணம் முடித்து விடுவார்கள் என்ற பயம்தான் அவளைச் சொல்ல விடாமல் தடுத்தது.
“அக்கா, படிச்ச பிறகு மனசு மாறிடுவா. ஒரு வருஷம் இருக்குல்ல, பார்த்துக்கலாம். அந்த ஒரு வருஷத்துல பிடிக்காமலா இருக்கும்? மெதுவா பார்த்துக்கலாம்,” என்று தம்பி கதற, அரைமனதாகச் சம்மதித்து ஊருக்குக் கிளம்பினார்.
பாவனா மறுபடியும் குகனுக்கு மெசேஜ் அனுப்பினாள்: “இதுதான் லாஸ்ட், இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது. எப்படியாவது உங்க வீட்ல சொல்லு.” அவள் மெசேஜ் அனுப்ப, அவனும் சரியெனக் கூறிவிட்டான்.
ஏதோ குகனின் அண்ணனுக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிந்துவிட, குகன் தைரியமாகத் தன் காதலை வீட்டில் சொல்ல, மொத்தக் குடும்பமும் அதிர்ந்தது. அவன் அப்பாவும் தாத்தாவும் அவனை அடித்து வெளுத்துவிட்டனர்.
“ஏண்டா அறிவுகெட்டவனே! ரோட்டில் போற பிச்சைக்காரியைக் கட்டிக்கிறேன்னு சொன்னாக்கூட மனசார ஏத்துப்போம். போயும் போயும் குடிகாரனோட மகளையாடா காதலிக்கிறேன்னு சொல்லுற? உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று அப்பா திட்டினார்.
“அப்பா, அவங்க அப்பா குடிக்கிறதுக்கு அவ என்ன பண்ணுவா? அவ ரொம்ப நல்லவப்பா,” என்று பையன் எவ்வளவு கூறியும் பெற்றவர்கள் சம்மதிக்கவில்லை.
“இனிமேல் இந்த ஊரு பக்கம் நீ வரவே கூடாது, இப்பவே கிளம்பு!” என்று அடித்துத் துரத்தாத குறையாகச் சென்னைக்குத் துரத்தி விட்டனர். பாவனாவையும் அவன் வீட்டுப் பக்கம் பார்த்தால் முறைத்துக் கொண்டு சுற்றினர்.
“இதோ பாரு, உன் குடும்பத்துக்கும் எங்களுக்கும் செட் ஆகாது. இனி என் பையன் இருக்கிற பக்கம் வந்தா உனக்கு மரியாதையே இல்லை!” என்று அவள் அப்பாவிடம் பேசாமல் அவளைத்தான் திட்டினர்.
அவள் அப்பா குடிகாரன் அல்லவா? ஏதாவது ஏடாகூடமாகப் பேசிச் சண்டை போடுவானே! அதனால்தான் அவனிடம் பேச விரும்பாமல் பாவனாவிடம் கூற, அவளும் காதலனிடம் கூறிக்கண்ணீர் விட்டாள்.
“நீ ஒன்னும் கவலைப்படாத. யார் என்ன சொன்னாலும், எவளைக் கொண்டுவந்து நிறுத்துனாலும் நான்தானே பேசணும்? எங்க வீட்ல யாரு என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நீ எதையும் நினைக்காதே, சந்தோஷமா இரு. உன்னை எப்பவும் கைவிட மாட்டேன்; உன்னை விட்டுட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், என்னை நம்புடா! அடுத்த வாரம் உன்னைப் பார்க்க வர்றேன்,” என்று உறுதியளித்தான்.
சொன்னது போலவே அடுத்த வாரத்திலேயே வந்துவிட்டான்; ஆனால் ஊர்பக்கம் வரவில்லை. அவளை அணைக்கட்டுக்கு வரச் சொல்லிவிட்டான். இவளும் பரீட்சை அது இதுவெனச் சொல்லி அணைக்கட்டுக்கு வந்துவிட, இருவரும் கைகோர்த்து உல்லாசப் பறவைகளாக உலா வந்தனர். அடுத்து என்ன செய்யலாமென்று யோசித்தனர்.
“ஒண்ணும் கவலைப்படாத. நம்ம பிடிவாதமா இருந்தாதான் பெத்தவங்க சம்மதிப்பாங்க. அவங்க மிரட்டுறாங்கனு நம்ம எல்லாத்துக்கும் தலையாட்டிட்டா அப்புறம் நம்மளைப் பிரிச்சுடுவாங்க. பொறுமையா இரு, நான் இருக்கேன்,” என்று அவளுக்குத் தைரியம் கூறினான். அவளும் சரியென விட்டுவிட, இருவரும் கிடைத்த இடத்தில் எல்லாம் செல்ஃபி எடுத்துத் தள்ளினர்.
“ஏலே காசிமாயா, எதுக்கு இந்தப்பக்கம் கூட்டிட்டு வந்திருக்க?” என்று பாவனாவின் அப்பா தன் நண்பனோடு நடந்தவாறே கேட்க…
“அணைக்கட்டுல தண்ணி நிறைய போகுதாம். பார்க்கிறதுக்கு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வீட்டுல சும்மாவே சுத்திட்டு இருக்கிறதுக்கு இந்தப்பக்கம் வந்துட்டு போனா மனசுக்கு நல்லா இருக்கும்ல? அதான் வந்தேன்,” என்று பேசிக்கொண்டே எதையோ கையில் வைத்தபடி கொறித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.
“ஏலே கண்ணதாசா, அங்க பாரு! அங்க உக்காந்திருக்கிறது உன் பொண்ணு மாதிரி தெரியுது,” என்று காசிமாயன் கூற, நண்பன் கைகாட்டிய பக்கம் பார்த்த அப்பன்காரனுக்கு ஆத்திரம் உச்சிமண்டைக்கு ஏறியது.
“நமது சாதியில எந்தப் பொண்ணும் இவ்வளவு தைரியமா வெளியே வந்து சுத்துனதில்லை. உன் பொண்ணு நல்லா படிக்குதுனு நினைச்சா, இவ என்னடான்னா இப்படி ஊர் சுத்திட்டு இருக்கா? நல்ல பொண்ணுனு நினைச்சேன்டா… இப்படி செய்வான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல,” என்று காசிமாயன் கூற, அப்பனுக்கு வந்த கோபத்தில் அங்கேயே குகனை அடித்து, மகளை உதைத்து இழுத்து வந்தார்.
விஷயம் கேள்விப்பட்ட அண்ணனும் மனைவியும் வந்து சேர, “என் மகளை நீ வளர்த்துக் கிழிச்சது போதும்! நல்லா படிக்கிற பொண்ணுன்னு அவ இஷ்டத்துக்கு சுத்தவிட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா? உன் பொண்ணு இப்படி கண்டவன்கூட வெளியே சுத்திட்டு இருந்தா நீ ஏத்துப்பியா? நீ வளர்த்த வரைக்கும் போதும்; இனிமே என் பொண்ணு வாழ்க்கையில் நீ தலையிடாதே. இனிமே என்கூடத்தான் இருப்பா,” என்று உறுதியாகக் கூறிய கண்ணதாசனோ, அக்காவை வரவழைத்தார்.
“அக்கா, பேசுறதுக்கு நேரமில்லை. அடுத்த வாரத்திலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணனும்,” என்று கூறிவிட, அக்காவும் விஷயம் கேட்டுப் பாவனாவைத் திட்டிவிட்டுத் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.