Stories that touch hearts

Home  /  SS - 25 'திக் திக் திக்' சிறுகதைகள்  /  Chapter 5

CHAPTER 5

காவலுக்கு சவால் (மகாராஜா பரமேஸ்வரி)

By Sorna Sandhanakumar · September 20, 2026

0

சென்னை ஐ.ஜி அலுவலகம். காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது. அனைத்து உயர் அதிகாரிகளும், மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள். அனைத்து அதிகாரிகளையும் தங்கள் கைபேசியின் சத்தத்தைக் குறைத்து வைக்கச் சொல்லிக் கட்டளை வந்தது.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க, “ஐ.ஜிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதால், டி.ஐ.ஜி தான் இப்போது வருவார்” என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.

ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாகத் தெரியாமல்
தெரியாது என்றனர். அவர்களாகவே ஒரு யூகம் செய்து, “அந்தப் பிரச்சினையாக இருக்குமோ?” என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.

அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்தக் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ‌.ஜி இராமநாதன். டி.ஐ.ஜி வந்ததும், அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.

அனைவரையும் அமரச் சொல்லி விட்டு, கைபேசியில் தகவல் எதுவும் வந்ததா என்று பார்த்தார். அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார். நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்புச் சவால் விட்டிருக்கிறது. நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும். நாங்கள் அந்த இடத்தை க்ளூவாகச் சொல்கிறோம். முடிந்தால் காவல்துறை அதைத் தடுத்து பாருங்கள் என்று உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது” என்றார்.

அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி. மீண்டும் டி.ஐ.ஜி,
“
அந்த க்ளூ இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். அதான் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

அப்போது அவர் கைபேசிக்குக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் வந்தது. அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும்படி செய்தார் டி.ஐ.ஜி.

‘
ஒன்றாவது க்ளூ, 8,4,9 – 24.

இரண்டாவது க்ளூ, மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று.

மூன்றாவது க்ளூ, பி.சி.33.’ அதோடு முற்றுப் பெற்றிருந்தது தகவல்.

அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது, அழைப்பில் உள்ள பெயரைப் பார்த்ததும், அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.

அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க, டி.ஐ.ஜி அனைவரையும் அமரும்படி சைகை செய்து கொண்டே பவ்யமாகப் பேசினார்.

எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர். “உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று சொன்னார். “மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாகக் காவலர்கள் வேண்டும் என்றாலும், என் அனுமதிக்குக் காத்திருக்காமல், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தவர், “முதல்வர் தான் இப்போது பேசினார். நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார். சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூடப் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாம் தான் நடக்கபோக இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்க வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும். இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால்தான். இதைப் பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும், தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.

ஒரு அதிகாரி எழுந்து, “இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும். அதனால், மூன்று க்ளூவையும் இங்குள்ள அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும்” என்றார்.

“
அவரின் ஆலோசனை நல்லாதான் இருக்கிறது” என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாகப் பிரிக்க முயற்சி செய்தார். பிறகு ஒவ்வொரு குழுவிலும் தலைமை பொறுப்பு ஏற்க, ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ‌.ஜி

“
நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தித் தருகிறேன்” என்றவர் பிறகு அனைவரிடமும், “இந்த ஆபரேஷனுக்கு காவலுக்கு சவால் என்று பெயர். இந்தச் சதித்திட்டம் முறியடித்த பிறகு, இந்த வாட்சப் குழு இயங்காது. அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்துத் துரிதமாகச் செயல்படுங்கள். கான்பரன்ஸ் முடிந்தது” என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்குச் சென்றார்.

அனைத்து அதிகாரிகளும் தங்கள் கைபேசியின் சத்தத்தை அதிகரித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு அழைத்து, “நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது. அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும், வாட்சப்பில் மெசேஜ் செய்யவும்” என்று அனைவரும் சொல்லி விட்டு, மீண்டும் கடமை பொறுப்பைப் பார்க்கச் சென்றார்கள்.

முதலில் உள்ள க்ளூவை ஒரு குழு யோசிக்க ஆரம்பித்தது. 8,4,9, – 24 என்று ஒவ்வொரு நம்பராக யூகித்துப் பார்த்தார்கள். “8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலிலிருந்து எட்டா? அல்லது கடைசியிலிருந்து எட்டா? என்று யோசித்து பார்த்தார்கள். அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர, அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ? அப்படி என்றால், 9 க்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது குழப்பம்தான் வந்தது.

“
அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே. அது என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ?” என்று யூகம் செய்தார்கள்.

ஒருவர் அந்த யூகம் சரியென்றால், மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலப் பதில் சொன்னார்.

அடுத்த குழுவில் உள்ளவர்கள் இரண்டாம் க்ளூவான, ‘மரை+செவிலியர்+நான்கில் ஒன்று’ என்பதை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படியொரு இடமே இல்லை.

மூன்றாவது குழு மூன்றாம் க்ளூவான, ‘பி.சி.33’
என்பதை வருடத்தைக் கணக்கு செய்து, அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரைத் தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள். எதுவும் சரியாக வரவில்லை.

வாட்சப்பில் அப்பப்ப காவலுக்கு சவால் குழுவில் ஏதாவது தகவல் வந்ததா? என்று பார்த்துக் கொண்டார்கள்.
மூன்று குழுவிலும் மூன்று க்ளூக்களிலும் ஒரு முன்னேற்றம் கூட இல்லை. ஒரு சிலர் தங்கள் குழுவில் உள்ள க்ளூவை வைத்துக்
கூகுளில் தேடினார்கள்.

சிலர் முகநூலில் தேடி பார்த்தார்கள்.

வேறு சிலர் யூடியூபில் அந்த க்ளூவை வைத்துப் பார்த்தார்கள். எங்கேயும் அதற்கு விடை கிடைக்கவில்லை. உண்மையிலேயே சவாலாகத் தான் இருந்தது காவல்துறைக்கு.

ஆனால், நம் காவல்துறையினர் முயற்சி செய்வதில் சளைத்தவர்களா என்ன? தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது அனைவரின் வாட்சப்பில், ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது. அது என்னவென்றால், ‘சமூக விரோதி நாளை இரவுவரை என்று சொன்னவன், இன்று இரவுக்குள் நாங்கள் சொன்ன நகரங்களில் முக்கியமான இடத்தில் குண்டு வெடிக்கும் என்றும், கவுண்டன் ஆரம்பமாகி விட்டது’ என்றும் தகவல் இருந்தது.

அனைத்து அதிகாரிகளும் மீண்டும், “இது நமக்கு விடுத்த சவால்தான்.
இதை முறியடிப்போம்” என்று சொல்லி இன்னும் உத்வேகமாகச் செயல் பட ஆரம்பித்தார்கள். அவர்களின் கடின முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

முதல் குழுவினர் முதல் க்ளூவைக் கண்டு பிடித்து விட்டார்கள். அது, 8 என்பது ஆங்கில எழுத்தில், எச் என்றும், 4 என்பது ஆங்கில எழுத்தில்
டி என்றும், 9 என்பது ஆங்கில எழுத்தில் ஐ என்றும் கண்டுபிடித்தார்கள். அதன்படி எச்.டி.ஐ என்று ஒரு ஆங்கில வார்த்தையின் சுருக்கம் வந்தது.

அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போது, மீண்டும் அதே குழுவில் உள்ள ஒரு காவல் ஆய்வாளர், “அதன் விரிவாக்கம், எச்- ஹியுமன், டி- டெவலப்மெண்ட், ஐ- இன்டெக்ஸ்” என்றார்.

இரண்டையும் சேர்த்துவிட்டு, “24 என்பதற்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது, வேறொரு காவல் ஆய்வாளர், “ஹியுமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ் நம்பர். 24 என்பது ஜப்பானை குறிக்கும். அப்போ தமிழ்நாட்டில் ஜப்பான் என்பது சிவகாசிதான். குட்டி ஜப்பான்” என்று சொன்னதும், அந்தக் குழுவில் உள்ள அனைவரும் கைத்தட்டிப் பாராட்டினார்கள்.

உடனே இதை டி.ஐ.ஜியிடம் சொல்லிவிட்டு, காவலுக்கு சவால் வாட்சப் குழுவிலும் தகவல் அனுப்பினார்கள்.

உடனே டி.ஐ.ஜி இராமநாதன் சிவகாசி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கொடுத்த ஒருமணி நேரத்தில் சிவகாசியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதித்து, கடைசியில் மக்கள் அதிகம் கூடும் ஒரு பொது இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தார்கள்.

அந்தத் தகவலை டி.ஐ.ஜிக்கு சிவகாசி காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார். அவரும் அதை காவலுக்கு சவாலில், ‘முதல் சவாலை வெற்றி பெற்றோம்’ என்று வாட்சப்பில் காவலுக்கு சவால் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்து அனைத்து காவல்துறையினருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

‘
இன்னும் உத்வேகமாகச் செயல்பட்டால், அடுத்த இரண்டு சவால்களிலும் வெற்றி பெறுவோம்’ என்று மீண்டும் டி.ஐ.ஜி தகவல் அனுப்பினார்.

அடுத்த க்ளூவை கண்டு பிடிக்க, இப்போது முதல் குழுவும்,
இரண்டாவது குழுவுடன் சேர்ந்து கொண்டது. “மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று என்பதில், மரை என்பதற்கு தமிழில் மான் என்று பொருள்” என ஒரு காவல் ஆய்வாளர் சொன்னார்.

“அப்போ அடுத்த வார்த்தை செவிலியர். சிஸ்டர்” என்று சொன்னவர், அப்போ இரண்டையும் சேர்த்து பார்த்தால், மான்+சிஸ்டர்=மான்செஸ்டர் என்று வருகிறது. அப்போ அந்த நான்கில் ஒன்று என்பது என்னவாக இருக்கும்? என்று யூகிக்க ஆரம்பித்தார்கள்.

“
நான்கு வேதங்களில் ஏதாவது ஒன்றா? அல்லது நான்கு யுகங்களில் ஏதாவது ஒன்றா” என்று யோசிக்கும்போது, ஒரு காவல் துணை ஆய்வாளர், “நான்கு திசைகளில் ஒன்றாக இருக்கலாம்” என்றார்.

ஒவ்வொரு திசையாக வைத்து யோசித்து விட்டு, இறுதியில் அது “தெற்கு” என்று உறுதியாகச் சொன்னார்.

“
அது சரியாகத்தான் இருக்கும்” என்று சிலர் சொல்ல, அதன்படி, ‘மான்செஸ்டர்+ தெற்கு= மான்செஸ்டர் தெற்கு’ என்று வார்த்தை வந்தது.

“
மான்செஸ்டர் என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில் நகரம். அதேபோல் தென்னிந்தியாவில் நெசவு தொழிலில் மிகப்பெரிய தொழில் நகரமான கோயம்புத்தூரை, மான்செஸ்டர் ஆப் சவுத் என்று சொல்வார்கள்” எனச் சொல்லி முடித்தவுடனே டி.ஐ.ஜி க்கு தகவல் தரப்பட்டது.

அவரும் உடனே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். கோவை கண்காளிப்பாளருக்கு தகவல் கிடைத்ததும்,
உடனே வெடிகுண்டு நிபுணர்களுடன், கோவையில் முக்கியமான இடங்களில், வெடிகுண்டுச் சோதனை செய்யத் தீவிரமாக முயற்சி செய்தார்.

கடைசியில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரிந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள்
ஜாக்கிரதையாகச் செயல் இழக்கச் செய்தார்கள். சக்தி வாய்ந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்ததும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி இராமநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

அவரும் உடனே காவலுக்கு சவால் வாட்சப் குழுவில், ‘ஒரு சந்தோசமான செய்தி. இரண்டாவது சவாலிலும் வெற்றி பெற்று விட்டோம். ஆம். கோவையில் உள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டைச் செயல் இழக்க செய்து விட்டார்கள். அடுத்து மூன்றாவது சவாலிலும் சீக்கிரம் வெற்றி காண வேண்டும். ஏனெனில், இப்போது இரவு வரும் நேரம் ஆகிவிட்டது’ என்றார்.

மீண்டும் மூன்றாவது க்ளுவை பற்றிக் கண்டுபிடிக்க, இந்த முறை மூன்று குழுக்களும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சி செய்தார்கள்.

அப்போது முதல்வரிடமிருந்து டி.ஐ.ஜிக்கு பாராட்டு வந்தது. “இரண்டு மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுத்ததற்கு காவல்துறை
பாராட்டுகிறேன்’ என்றும், ‘மூன்றாவது அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்து விட்டு வாருங்கள், தமிழக அரசு சார்பில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அதை அப்படியே காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அனுப்பினார் டி.ஐ.ஜி. முதல்வரின் பாராட்டால் மகிழ்ந்த காவல்துறையினர், இன்னும் உற்சாகமாகக் கடமையாற்ற தயாரானார்கள்.

பி.சி 33 என்பதை பல கோணங்களில் யோசித்து பார்த்தார்கள். “பி.சி என்பதின் விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்றும், அதன் பெயரில் தமிழ் நாட்டில் முக்கியமான நகரம் உள்ளதா?” என்று யோசித்தார்கள். 33 என்பது, தமிழ் எழுத்துக்களில் உள்ள எண்ணாக இருக்குமோ? அல்லது ஆங்கில எழுத்தில் மூன்றாவது எழுத்தான சி சி என்று இருக்குமோ? அப்படி என்றால்?” சி சி என்று முடியும் நகரங்களை யோசித்து பார்த்தார்கள்.

ஒரு சிலர் “திருச்சியாக இருக்குமோ? என்று முடிவு செய்தார்கள். “ஆனால், அது சரியாக இருக்காது” என்று பலர் சொன்னார்கள். இருப்பினும், “நமக்கு நேரம் குறைவு என்பதால், திருச்சியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டுச் சோதனை செய்யச் சொல்வோம்” என்றார்கள்.

அதை டி.ஐ.ஜிக்கும் சொன்னார்கள். டி.ஐ.ஜியும் நேரம் குறைவாக இருப்பதால், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் திருச்சியில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம், அதிவேகமாக வெடிகுண்டுச் சோதனை செய்தார்கள். எங்கேயும் வெடிகுண்டுக் கிடைக்க வில்லை.

டி.ஐ.ஜி அலுவலகத்தில் உள்ள காவல்துறையினர் மற்ற இரண்டு இடங்களிலும், உடனே வெடிகுண்டுச் செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வந்தது.

“
இந்த முறை அப்படி எதுவும் வரவில்லையே. நாம் இன்னும் க்ளுவை சரியாகக் கண்டு பிடிக்காமல் விட்டோமோ?” என நினைத்து வேறு வேறு கோணத்தில் யோசித்து பார்த்தார்கள்.

டி.ஐ.ஜியும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து வெடிகுண்டைச் செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வராதா,
என நிமிடத்திற்கு ஒரு முறை போனையே பார்த்துக் கொண்டு இருந்தார். சமூக விரோதி கொடுத்த கவன்டவுன் முடிய, இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தது.

டி.ஐ.ஜி காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அந்தக் கவுன்டவுன் நேரத்தைச் சுட்டி காட்டி “சீக்கிரம்” என்றார்.

அப்போது அங்கே ஒரு துணை காவல் ஆய்வாளர், “நான் கண்டு பிடித்து விட்டேன்” என்று சத்தமாகக் கத்தினார்.

எல்லோரும் ,“என்ன க்ளூ?” என்று கேட்க, அவருக்கு உணர்ச்சி மிகுதியால் பேச்சு வரத் தடங்கள் ஆனது.

அருகில் உள்ள ஒரு ஆய்வாளர் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்துக் குடிக்க சொன்னார். அவரும் தண்ணீர் குடித்து விட்டு, அங்கே சத்தம் கேட்டு வந்த டி.ஐ.ஜியை பார்த்து, “அது தேனி சார்” என்றார்.

எல்லோரும், “எப்படி?” என்றார்கள்.

அந்தத் துணை ஆய்வாளர், “நான் பிறகு விளக்கம் தருகிறேன். முதலில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுங்கள் சார். நேரம் குறைவாகத் தான் இருக்கிறது” என்று சொன்னவுடன், டி.ஐ.ஜியும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடன், தேனி நகரில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம் வெடி குண்டுச் சோதனை செய்தார்கள். கடைசியில் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது, அது வெடிக்க இருக்கும் நேரம் மிக மிகக் குறைவாக இருந்தது.

இருப்பினும், தங்கள் அனுபவ ஆற்றலை வைத்து, வெடிகுண்டு வெடிக்க இருந்த ஐந்து நிமிடங்களுக்கு முன்பே செயல் இழக்கச் செய்தார்கள்.

அந்தச் சந்தோச விசயத்தை டி.ஐ.ஜிக்கு சொன்னார் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

டி.ஐ.ஜிக்கு சந்தோசம் தாங்க முடியாமல், அவர் அறையை விட்டு வெளியே வந்து உற்சாகமாக, “மூன்று சவால்களிலும் வெற்றி பெற்று விட்டோம்” என்றார்.
அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியாமல், தங்கள் அருகில் இருக்கும் காவலர் அதிகாரிகளிடம் கைக்கொடுத்துத் தங்கள் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது ஒரு அதிகாரி, “சார் மூன்றாவது வெடி குண்டு எங்கே இருந்தது? திருச்சியா? தேனியா? என்று கேட்டார்.

உடனே தான் டி.ஐ.ஜிக்கு நியாபகம் வந்தது. உடனே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு, “தேனியில் தான் அது இருந்தது. அதனால், நீங்கள் மேற்கொண்டு எங்கேயும் சோதனை செய்ய வேண்டாம்” என்று சொன்னார்.

அவரும் ‘சரி’ என்று சொல்லி விட்டுத் தங்கள் சோதனையை நிறுத்தி விட்டு அவர்கள் அலுவலகத்திற்கு சென்றார்கள்.

இப்போது டி.ஐ.ஜி அலுவலகத்தில் கடைசி க்ளூவை கண்டு பிடித்த துணை ஆய்வாளரிடம், “எப்படி கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டார் டி.ஐ.ஜி.

அவர் உடனே, “நீங்கள் அனுப்பிய மெசேஜை பார்க்கலாம் என்று
நான் திறந்து பார்க்க, அப்போது எதிர்பாராமல்
வேறொரு குருப்புக்கு சென்று விட்டேன். அதில் பார்லிமென்ட் கான்ஷ்டியுன்சி 33. தேனியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் மறு வாக்குப் பதிவு என்ற பழைய செய்தி இருந்தது. அதைப் பார்த்தவுடனே சந்தோசத்தில் நான் கத்தி விட்டேன்” என்றார்.

அங்கே இருந்த அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் அவரைப் பாராட்டினார்கள்.

அப்போது முதல்வர் ஐ.ஜி அலுவலகம் வருவதாகத் தகவல் வந்தது. முதல்வரும் ஐ.ஜி அலுவலகம் வந்து அனைவரையும் பாராட்டினார்.

“
எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பாக, நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.

முதல்வர் சென்றதும் டி.ஐ.ஜி, “நம் காவல் துறைக்கு விட்ட சவாலில் வெற்றி பெற்று விட்டோம். மேலும், இதற்காக உழைத்த அனைவருக்கும் நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

அப்படியே நானும் என் கதையைப் படித்த அனைத்து வாசக உறவுகளுக்கும், என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபம்.

← Previous All Chapters Next →

Leave a Comment