அந்த காலைப் பொழுதை அழகாக்கி கொண்டிருந்தால் அவள். காலை துயிலை அவளுக்காகவே விட்டுக் கொடுத்துவிட்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியை தஞ்சம் அடைந்து விடுவான் ஆனந்த்.
காலையிலேயே முதல் தரிசனம் அவளுடையது தான். அவளுக்கு தெரியாமல் அவளை புகைப்படம் எடுத்து தன் அலைப்பேசியில் சேமித்து வைத்திருக்கிறான். அலாரம் வைத்து எழுந்து கொள்பவன். அலைபேசியில் இருக்கும் அவளுடைய முகத்தில் தான் கண் விழிப்பான். பிறகு அவசரமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டு அவள் முழு தரிசனத்தையும் அவதானிப்பான்.
அல்லி சொருகிய நைட்டியோடு வெளியில் வருவாள் சினேகா. லட்சத்தில் ஒருத்தி, அவ்வளவு அழகு. நைட்டியிலும் கலைந்த கூந்தலிலும் ஒரு பெண்ணால் அழகாக இருக்க முடியும் என்றால் அது அவளாகத்தான் இருப்பாள்.
காதலிக்கும் ஒவ்வொரு ஆண்மகன்களுக்கும் அவளுடைய காதலிதான் தேவதை. அவள் தான் உலகத்திலேயே மிக அழகு என்று தோன்றும். அது போல தான் அவனுக்கும் தோன்றியதோ என்னவோ???.
பொறுமையாக தண்ணீரை வாசலில் தெளித்து பெரிய மாகோலமாக போடுவாள். அதற்கு பத்து நிமிடமேணும் பிடிக்கும். மொத்தத்தில் பதினைந்து நிமிடத்தை அவளைப் பார்பதற்காகவே செலவழிப்பான் ஆனந்த். போட்டு முடித்த பிறகு புறங்கையால் தலைமுடியை ஒதுக்கியபடியே அவள் போட்ட கோலத்தை அவளே ரசிப்பாள்.. அது திருப்தியாக இருந்தால் ஒரு புன்னகை சிந்துவாள்.. பிறகு துள்ளி குதித்து வீட்டின் உள்ளே செல்வாள். இது தினமும் நடக்கும் செயல்தான் என்றாலும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவனுக்கு மட்டும் தோன்றும்.
அதன் பிறகு அவளை பார்ப்பது அரிதாகிவிடும். சரியாக ஏழு மணிக்கு தந்தையுடன் பின்னால் அமர்ந்தபடி கல்லூரிக்கு செல்வாள். மாலையில் அவள் எப்படி வருகிறாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அவனும் தன் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு அவளுக்காக காத்துக் கொண்டு அதை அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்கு முன்னால் தான் அந்த வீட்டை வாங்கிக் கொண்டு அங்கு குடியேறினார்கள். அப்பொழுது அழகாக இருக்கும் சிறு பெண் என்று மட்டுமே தோன்றியது.
ஒருநாள் சைக்கிளில் இருந்து இறங்கும்போது “அண்ணா”, என்று குரல் கேட்டது. திரும்பி பார்த்தான். அந்த பெண் தான் பாவாடை சட்டையில் நின்று இருந்தாள். மிஞ்சி போனால் பனிரெண்டு வயது இருக்கும். அதுதான் முதல் முறை அவளை அவன் மிக அருகே பார்த்தது. அதுவும் நீண்ட மாதங்கள் கழித்து.
“இந்த ஃப்ர்ஸ் உங்கள்தான்னு பாருங்க”, என்று அவள் நீட்டிக் கொண்டிருந்த ஃப்ர்ஸ் அவனுடையதுதான். அவசரமாக தன் பாக்கெட்டை தொட்டு பார்த்தவன். அவளிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கினான். அதில் அவள் கையில் வேகமாக பட்டுவிட்டது போல. முகத்தை சுருக்கினால் சிறியவள்.
திறந்து பார்த்தான் பணம் எல்லாம் அப்படியே தான் இருந்தது. அது அவளை மனசோர்வு அடைய வைத்திருந்தது.
“நீங்க ஓட்டிட்டு வரும்போது உங்க பேக்கெட்ல இருந்து விழுந்துச்சு. எடுத்துட்டு வந்து உடனே தான் கொடுக்கிறேன். நான் அதை திறந்து கூட பாக்கல அண்ணா”, தன்னிலை விளக்கம் கொடுத்தாள். அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் வேண்டுமென்றே செய்யவில்லை அனிச்சை செயலாக செய்து விட்டான். ஆனால் நேர்மையான அந்த பெண்ணை அது பாதித்திருக்கிறது என்று புரிந்தது.
“சாரிமா நான் தப்பா பாக்கல. ஐ மீன் உன்ன தப்பா நினைச்சு பாக்கல. இதுல முக்கியமான ஐடி ஒன்னு வச்சிருந்தேன். அது மிஸாயிடுச்சான்னு பார்த்தேன். நல்ல வேலை அது இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மா”, என்று கூறினான். அப்போதுதான் அந்த பெண்ணின் முகம் மலர்ந்தது. அவன் அவசரத்திற்கு ரேஷன் கார்டை தூக்கி காட்டி இருந்தான். அந்த சிறு பெண்ணும் அதை கவனிக்காமல் தலையாட்டி விட்டு சென்று விட்டாள்.
ஆனால் அவன் பார்த்தது பணத்தை தான். “வர வழியில ஈ.பி பில் கட்டிட்டு வா”, என்று அவன் தாய் கொடுத்த பணம் அதில் இருக்கிறதா என்று பார்த்தான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆனந்த்.
அதன் பிறகு அவனையும் அறியாமல் அந்த பெண்ணை அவன் அவதானிக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதும் தந்தையுடன் தான் பள்ளிக்கு செல்வாள். இப்பொழுதும் தந்தையுடன் தான் கல்லூரிக்கு செல்கிறாள்.
“கங்காரு அதோட குட்டியை அடகாக்குற மாதிரி. இவரு அவர் பொண்ணை காக்குறாரு”, என்று மனதிற்குள் தன் வருங்கால மாமனாரை கிண்டல் அடிப்பான்.
ஆம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அவன் அவளை விரும்ப ஆரம்பித்து விட்டான். சினேகாவுடைய தாய்க்கும், ஆனந்தின் தாய்க்கும் நல்ல புரிதலும் சினேகமும் இருந்தது. அது அவனுக்கும் வசதியாக போய்விட்டது. அவர்கள் வீட்டில் ஏதாவது செய்தால், அவர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். இவர்கள் வீட்டிலும் அதே நிலை தான். அவருடைய பெண்ணை அவன் சைட் அடிப்பது தெரிந்தால் அது நிலைக்குமா, நீடிக்குமா??, என்று தெரியாது. ஆனால் ஏனோ மனம் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது..
அவள் வயதுக்கு வந்து விட்டதாக அவளுடைய தாயார் வந்து அவன் தாயை அழைக்கும் போது தான் சினேகா அவன் கருத்தை முதலில் கவர்ந்தது. அதற்காக பார்க்கும் பெண்களை எல்லாம் ரசிக்கும் அளவு மோசமானவன் இல்லை அவன்.
“அம்மா எதிர் வீட்டுக்கு போறீங்கலா??, நானும் வரேன்”, என்று பட்டுப்புடவை நகை சகிதமாக உடுத்தி வந்த தாயிடம் சென்று நின்றான்.
“டேய் நான் என்ன கல்யாணத்துக்கா போறேன்?, உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போறதுக்கு??, அந்த பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு வீட்ல தண்ணி ஊத்துறாங்க. அதுக்கு உன்னையும் எப்படிடா கூட்டிட்டு போக முடியும்??, அமைதியா இங்க வீட்ல இரு “, என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
ஆனால் ஏனோ அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. திருட்டுத்தனமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு தான் வந்தான். அப்பொழுதெல்லாம் அந்த பெண்ணின் மீது அவனுக்கு காதல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆர்வம் மட்டுமே இருந்தது.
அவன் பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்றான். அவள் இன்னும் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டில் தான். அவள் மீது முதல் முறையாக அவனுக்கு ஈர்ப்பு வந்தது. பெரிய அளவிலான ஈர்ப்பு.
அன்று முதல் முறையாக அவளை பஸ்ஸில் பார்த்தான். மனம் துள்ளி குதித்தது. ஆனால் அவள் அசுசையாக முகத்தை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். முதல் முறையான பஸ் பிரயாணம் என்பது அவள் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. இவளுடைய தந்தைக்கு என்ன ஆனது??, எதற்காக இவள் பேருந்தில் செல்கிறாள்??, என்று சிந்தித்த மனதை அடக்கியவன்.
அதுவாடா இப்ப முக்கியம்??, இந்த சந்தர்ப்பத்தை விடாமல் அவளை நல்லா சைட் அடிடா, அவளிடம் பேச உனக்கு நல்ல வாய்ப்பு”, என்றது மனம்.
பக்கத்தில் இருக்கும் பெண் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க. அவள் மட்டும் நெளிந்து கொண்டே இருந்தாள். அவளை அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு அது புரிந்தது. சற்று நேரத்தில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தாள். ஆனந்தை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. பேக்கை எடுத்து முன்னால் பிடித்தபடி அவசரமாக அவனை நோக்கி வந்தாள்..
“என்னடா, அவளும் உன்ன விரும்புறா போல?? “, மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. அருகில் வந்து நின்றவள்.
“அண்ணா உங்க பக்கத்துல நிக்கவா??, அங்க இருக்கவங்க ஏதோ பேடா பண்றா மாதிரி இருக்கு”, என்றாள்.
‘அண்ணா’ என்று சொன்னதும் அவன் இருதயமே ஒரு நொடி நின்று விட்டது. ஆனால் அவள் கூறிய விஷயம் முதலில் கருத்தாய் பட. நிமிர்ந்து அவள் நின்று இருந்த இடத்தை பார்த்தான். ஒருவன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்வது புரிந்தது. பற்களை நரநரத்தவன். மனதில் பட்டிமன்றம் நடத்தினான்.
“ஹீரோ போல ஓடிச் சென்று அவனை ஓங்கி அரையலாமா, அல்லது இந்த பெண்ணை பாதுகாத்து வீட்டில் கொண்டு சென்று பத்திரமாக விடலாமா??. மீண்டும் அந்த ஆளை பார்த்தான். இல்லை இவள் பயந்திருக்கிறாள் இவளை தனியாக விடுவது நல்லதில்லை. அவன் முகத்தை நன்றாக மனதில் பதித்து வைத்து ஆகிவிட்டது. அவனை வேறு எப்பொழுது வேண்டுமென்றாலும் கவனித்துக் கொள்ளலாம். இவளை பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று விடுவது தான் இப்பொழுது முக்கியம் என்று நினைத்து விட்டான்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடையவளா? அல்லது அவளுடைய தந்தை பொத்தி பொத்தி வளர்த்து அவளை அப்படி ஆக்கிவிட்டாரா என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே அவனும் வெளியில் வந்து விளையாடி அவன் பார்த்ததில்லை. ஆனால் இவன், வீட்டில் ஒரே பையன் செல்ல பதிகம். அவனுடைய தாய் சொல்லி சினேகாவின் தந்தை மிகவும் கண்டிப்பானவர், ஆனால் அன்பானவர் என்று தெரியும்.
“பயப்படாதே, தைரியமா இருக்கணும். அப்புறம் என்ன அண்ணன்னு கூப்பிடாத. உன்னை நானே பத்திரமா கொண்டு போய் வீட்ல விடுறேன்”, என்று கூறினான்.
“ஏன்ண்ணா? “, என்று அவள் மீண்டும் அண்ணா போட.
“அண்ணன்னு கூப்பிடாத. அவ்வளவுதான். எனக்கு அண்ணன்னு கூப்பிட்டா பிடிக்காது. ஆமா உங்க அப்பா வரலையா??, எப்பயும் அவர் கூட தானே போவ? “.
“அப்பா ஊருக்கு போய் இருக்காங்க. ஊர்ல கல்யாணம் நாளைக்கு வந்துருவாங்க”.
“ நாளைக்கு காலையில் எப்படி போவ? “.
“அம்மா பஸ்ல கொண்டு வந்து விடுறேன்னாங்க. ஆனா எனக்கு பஸ்ஸ பார்த்தாலே பயமா இருக்கு. அம்மா கிட்ட சொல்லி ஆட்டோவில் போயிடுவேன்”.
“ நாளைக்கு சந்திக்கலாம்னு நெனச்சேனே “, என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.
“நீ எத்தனாவது படிக்கிற? “, அவனுக்குத் தெரிந்திருந்த போதும் கேள்வி கேட்டான்.
“டென்த், வீடு வந்துருச்சுண்ணா”.
“அண்ணன்னு சொல்லாதன்னு சொன்னேன்”.
அவள் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.
அவளுடன் சேர்ந்து நடப்பது நன்றாக இருந்தது. நீண்ட நாள் கனவு போல இருந்தது. வாழ்க்கை முழுக்க இதே போல உன்னுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று மனது கவிதை படித்தது.
அவள் திடீரென்று நின்றாள். அவனை திரும்பி பார்த்தாள். “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா நடந்தா, பாக்குறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க.
உங்க அம்மாவும் எங்க அம்மாவும் பிரண்டுன்னு பாக்குறவங்களுக்கு தெரியாது. நீங்கள் என் பாதுகாப்புக்காக தான் என் கூட நடக்கிறீங்கன்னும் அவங்களுக்கு தெரியாது. அவங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டு நம்மள பத்தி தப்பு தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனால நீங்க எனக்கு பின்னாடி வாங்க. நான் உங்களுக்கு முன்னாடி போறேன். இல்லன்னா நீங்க முன்னாடி போங்க நான் உங்களுக்கு பின்னாடி வரேன் ஏதாவது பிரச்சனைனா உடனே உங்களை கூப்பிடுறேன்”, என்று கூறியவளை ஏற இறங்க பார்த்தான்.
“ரொம்ப தெளிவு தான்”, என்று மனதிற்குள் சிலாகித்துக் கொண்டான். ஆனா பத்தாவது படிக்கிற பொண்ணு மாதிரி பேச மாட்டேங்கறாளே ஆறாவது படிக்கிற பொண்ணு மாதிரி இல்ல பேசுறாள். இவளை குறை சொல்ல முடியாது இவளை இப்படி வளர்த்திருக்கிற அவங்க அப்பாவ சொல்லணும்”, என்று சொல்லிவிட்டு, அவன் தான் முன்னால் நடந்தான்.
அவள் பின்னோடு நடந்தால் கூட அவளை பாலோ செய்வது போல் ஆகிவிடும் என்று அவளே கூறி அதை தடுத்து விட்டாள் . “விவரமா தான் இருக்கா “, என்று எண்ணினான்.
அதன் பிறகு அவளிடம் பேசவே இல்லை. காலங்கள் உருண்டோடி அவனும் வேலையில் சேர்ந்து விட்டான். அவளும் கல்லூரியை முடிக்கப் போகிறாள்.
வீட்டில் திருமண பேச்சு எடுத்தால் அவளைப் பற்றி கூறிவிடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க. அவனுடைய தாய் அந்த பேச்சை எடுக்காமல் அவனை டென்ஷன் ஆக்கிக் கொண்டிருந்தார்.
“சரி பாப்போம் இந்த ஒரு வருஷம் அவள் காலேஜ் முடிக்குற வரைக்கும் இவங்க இந்த பேச்சை எடுக்கலைன்னா அடுத்த வருஷம் அவள் காலேஜ் முடிக்கும்போது நாமளா இந்த பேச்சை எடுத்துற வேண்டியதுதான்”, என்று மனதிற்குள் முடிவெடுத்து விட்டான். அவள் கல்லூரி முடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறான்…
முதலில் எல்லாம் அவளுடைய தாயார் தான் வாசலில் கோலம் போடுவார். அவருக்கு சற்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு குனிய முடியாத நிலை வர. அந்த வேலையை இவள் கையில் எடுத்துக் கொண்டு கர்ம சிரத்தையாக தாயைப் போலவே பெரிய கோலம் போடுவாள். இப்பொழுதெல்லாம் அவளுடன் சேர்த்து அவள் கோலத்தையும் அவன் ரசிக்க ஆரம்பித்து விட்டான்.
இதுவரை அவன் காதலை அவன் சொல்லவே இல்லை. எங்கே சொன்னால் இரு தாய்மார்களின் தோழமையை அது பாதித்து விடுமோ என்று அமைதியாக இருந்துவிட்டான்.
அன்று மாலை வாகனத்தை அவன் வீட்டினுள்ளே நிறுத்தும்போதே வீடு இருள் சூழ்ந்திருந்தது. “விளக்கு கூட போடாம இந்த அம்மா எங்க போனாங்க?”, என்று சிந்தித்துக் கொண்டே அலைபேசி எடுத்து தன் தாய்க்கு அழைப்பு விடுத்தபடியே எதிர் வீட்டை பார்த்தான். அதுவும் அப்படித்தான் இருந்தது. அவன் புருவம் இடிங்கியது. எதிர் முனையில் ரிங் சென்று கொண்டே இருந்தது. அவன் தாய் எடுப்பதாக தெரியவில்லை. மீண்டும் அழைப்பு விடுத்தவன்.
“எதிர் வீட்டில் கூட லைட் எரியலையே? “, என்று சிந்தித்துக் கொண்டு இருக்க. அப்பொழுது சரியாக அழைப்பு எடுக்கப்பட்டது.
“அம்மா எங்க போய்ட்டீங்க??, வீடு சாத்தி இருக்கு. என்கிட்ட சாவியில்ல அப்பா கிட்ட தான் இருக்கு. அப்பா இன்னும் வரலை, இப்ப என்ன பண்றது?“, என்று அவருக்கு பேசவே இடம் கொடுக்காமல் அவன் பேசிக் கொண்டே இருந்தான்.
“நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் டா. இப்ப வர முடியாது நீ உங்க அப்பாவுக்கு போன் பண்ணி அவர் எப்ப வராருன்னு கேட்டுக்கோ”, என்று கூறிய நொடி அவன் மனம் படபடத்தது. அவர் குரலும் சரி இல்லை என்று தோன்றியது.
“என்ன ஆச்சு?, எதுக்கு தனியா ஹாஸ்பிடல் போனீங்க??, நான் வந்த பிறகு போய் இருக்கலால்ல. அப்பாவையாவது கூட்டிட்டு போய் இருக்கலால்ல? “, என்று தாயிடம் கோபமாகவே கேட்டான்.
“எனக்கு ஒன்னும் இல்லடா, நம்ம சினேகா இருக்கால்ல நம்ம வீட்டுக்கு வருவாங்களே லட்சுமி ஆன்ட்டி அவங்களுடைய பொண்ணு சினேகா அவளுக்குத்தான்”, என்று அவர் அதற்கு மேல் சொன்னது எதுவும் அவன் சிந்தையை எட்டியிருக்கவில்லை.
“எந்த ஹாஸ்பிடல்?? “, அவசரமாக கேட்டான்.
அவர் கூறிய நொடி வாகனத்தை எடுத்துக்கொண்டு பறந்தான்.
குறிப்பிட்ட அந்த மருத்துவமனையின் ரிசப்ஷனில் கேட்டுக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவை அவன் அடையும் போது. அவள் குடும்பத்தில் எல்லோருமே அழுது கொண்டிருந்தனர். அவனுடைய தாயும் கண்ணீருடன் தான் நின்று கொண்டிருந்தார். சினேகாவின் தந்தை கூட ஓங்கி அழுது கொண்டிருப்பது தெரிய.
மனம் படபடுத்தது. வேகமாக அவர்களை நோக்கி சென்றான்.
தன் மகனை பார்த்ததும் அவனுடைய தாய் அவனை நெருங்கினார்.
“நீ எங்கடா இங்க வந்த?? “.
“ அவளுக்கு என்ன ஆச்சு அம்மா??, அவங்க எல்லாம் ஏன் அழறாங்க, நீங்க ஏன் அழறீங்க??, பரிதவிப்புடன் கேட்ட தன் மகனை புரியாமல் பார்த்தவர். விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அவன் பூமியில் புதைவது போல உணர்ந்தான். உடனே அவளை பார்க்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. கண்களில் இருந்து நீர் திரண்டு விழுந்தது.
“நீ ஏண்டா அழுற?? “, என்று கேட்ட தாயைப் பார்த்தவன்.
“இப்ப அவள் எப்படி இருக்காள்?”.
“உயிருக்கு ஆபத்து இல்ல. ஆனா நிறைய தீக்காயம் பட்டு இருக்கு. இவளை போல அஞ்சு பிள்ளைங்க மாட்டிக்கிட்டாங்க. ரெண்டு புள்ளைங்க செத்தே போச்சுங்க. மீதி மூணு பேருக்குமே நல்ல தீக்காயம் தான். இவளுக்கு ஆபத்து இல்லன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் கொஞ்சமாச்சும் எங்களால மூச்சு விட முடிந்தது.
சரியாக அந்நேரம் மருத்துவர் வெளியில் வந்தார்.. “ஒவ்வொருத்தரா உள்ள போய் பார்த்துட்டு வாங்க”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இவன் அமைதியாக ஓரமாக நின்று இருந்தான். உள்ளே சென்று பார்த்து விட்டு வந்த சினேகாவின் தந்தை வாயை பொத்திக்கொண்டு அழுதார். தாய் முகத்திலேயே அடித்துக் கொண்டு அழுதார்.
“ஐயோ இவளுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டேனே, எல்லாம் இப்போ கானல் நீரா போச்சே?, என் பொண்ணு வலியுல துடிக்கிறாளே என்னால ஒன்னும் பண்ண முடியலையே“.
அவனுடைய தாயும் சென்று பார்த்துவிட்டு வந்தார். “என்னாச்சுமா எப்படி இருக்காள்? “, என்று கேட்டான்.
“முகம் நல்லா தான்டா இருக்கு ஆனா காலெல்லாம் தீக்காயம் உடம்புலயும் அங்கங்க இருக்கின்றாங்க”, அவர் முடிக்கவில்லை, அவன் தாயின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவளுடைய தாய் தந்தை அருகில் சென்று நின்றான்.
“ஆண்ட்டி, அங்கிள் எனக்கு உங்கள நல்லா தெரியும். ஆனா உங்க கிட்ட நான் இதுவரைக்கும் பேசினது இல்ல. இவங்க எங்க அம்மா, நாங்க எதிர் வீட்ல இருக்கோம் “.
“தெரியும்பா. உங்க குடும்பத்தையே எனக்கு தெரியும்”, என்றார் கலங்கிய குரலுடன்.
தன் பாக்கெட்டில் இருந்து ஐ.டியை எடுத்து அவரிடம் நீட்டியவன். “நான் இன்போசிஸ்ல வொர்க் பண்றேன். நல்ல சம்பளம் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். உங்க பொண்ண கட்டிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு கட்டிக் கொடுக்கிறீங்களா?? “, என்று கேட்டான்.
ஸ்தம்பித்து நின்று விட்டனர் பெற்றவர்கள் இருவரும். சிறியவன் கூட அவனை கண்களை விரித்து பார்த்தான்.
அவனுடைய தாய் அதிர்ந்து அவன் கரத்தைப் பற்ற போனார்.
“தம்பி இது விளையாட்டில்ல, அவளை பாத்துட்டு வந்ததுக்கப்புறம் பேசுங்க”, தன்னை சுதாரித்து கொண்டு கூறினார் தயாநிதி சினேகாவின் தந்தை.
“அவசியம் இல்ல அங்கிள். இத்தனை வருஷமா நான் அவளை பார்த்துட்டு தான் இருக்கேன். இப்ப பாக்குறதுனால என்னோட முடிவு எதுவும் மாறப் போறது இல்ல. பரிதாபப்பட்டு எல்லாம் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க கேக்கறேன்னு நினைக்காதீங்க. நான் அவளை மனசார விரும்புறேன். இந்த விஷயம் அவளுக்கே தெரியாது. ஏன்னா என்னை தவிர இந்த விஷயம் யாருக்குமே தெரியாது. அம்மா திருமண பேச்சை எடுக்கும் போது உங்ககிட்ட வந்து பேச சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா சினேகாவுக்கு இன்னும் படிப்பு முடியாததினால , அது முடியட்டும்னு நினைச்சுட்டு இருந்தேன். இக்கட்டான நிலைமையில் இப்படி நிக்க வச்சு உங்க பொண்ண கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க”, என்று அவன் கூறிய நொடி.
அவனுடைய இரு கரத்தையும் பற்றிக்கொண்டு அந்த கரத்திலேயே குலுங்கி குலுங்கி அழுதார் தயாநிதி.
அழுபவரை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை. அவனுக்கும் அழுகை வர இருந்தது. இவர்களுக்கு ஆறுதலாக பேசியாகிவிட்டது இப்பொழுது அவளிடம் பேச வேண்டும் என்று மனம் துடிதுடித்தது.
“அங்கிள் அழாதீங்க, நீங்க பர்மிஷன் கொடுத்தீங்கன்னா நான் போய் சினேகாவ பார்க்கலாமா??, நீங்களோ, இல்ல ஆண்டியோ, இல்ல எங்க அம்மாவோ கூட வரட்டும்”.
“நீங்க பாத்துட்டு வாங்க தம்பி. ஆனா உங்க வீட்டு பெரியவங்களுக்கு சம்மதம் இல்லாம இந்த திருமணம் வேண்டாம்”, என்றார் அவர்.
“ அங்கிள் எங்க அம்மாவுக்கு உங்க பொண்ணு ரொம்ப பிடிக்கும். எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எங்களுக்கு பிடிச்சதுனா எங்க அப்பாவுக்கும் பிடிக்கும். சோ எங்க வீட்ல எந்த தடையும் இல்லை. எனக்கு இப்பவே அவளை பாக்கணும் போல இருக்கு”.
“அப்படின்னா உங்க அம்மா கூடவே போய் பாருங்கப்பா”, என்றார் அவர்.
மீண்டும் அவன் தாயை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். தன் மகனை கர்வமாக பார்த்து நிமிர்ந்த நடையுடன் சென்றார் அவனுடைய தாய் .
அவனைப் பார்த்ததும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் இதயத்தில் நில நடுக்கமே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவள் உடல் முழுவதும் அரை சிலிண்டர் போல இருந்த பெட்டியால் மூடப்பட்டிருந்தது.
“இவங்க யாரு??, இந்த மாதிரி இடத்துக்கு எல்லாரும் வரக்கூடாது. அந்த பொண்ணோட அப்பான்றனால தான் ஜென்ட்ஸ் அலோ பண்ணோம். இவரை எதுக்கு கூட்டிட்டு வரீங்க? “, என்று அங்கிருந்த செவிலியர் அவர்களை தடுக்க நினைத்தார்.
“இவன், அந்த பொண்ணுக்கு வர போற புருஷன்”, என்று கூறியதும் அந்த செவிலியர் அமைதியாகிவிட அதிர்ந்து போய் அவள் திரும்பி அவனை பார்த்தாள்.
அவன் இதழ்களில் புன்னகையுடன் அவளை நெருங்கினான் .
“சீக்கிரம் குணமாகி வா, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்”.
“எனக்கு அடிபட்டு இருக்கு”.
“பரவால்ல”, மலர்ந்த முகமாக கூறினான் .
“வேண்டாம்”.
“எனக்கு நீதான் வேணும். ஏன்னா நான் உன்ன மனசார விரும்புறேன். உங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டேன். நீ சரியான அப்பா பொண்ணு தானே. உன்னோட காயம் எல்லாத்துக்கும் மருந்தா நான் இருப்பேன்”, என்று கூறியவனை கண் கலங்க பார்த்தவளின் இதயத்திற்குள் காதல் மலர் மலர ஆரம்பித்தது.