Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 5

CHAPTER 5

“இளவேனில்🍀🫂 சாய்ந்தாட ஒரு தோள்…!!!”

By மோ.நித்யா சபரி · November 4, 2026

1

அத்தியாயம்-5-

ரேப்பர் வருணி அவள் அப்பாவை குறித்தும்  அப்பா தன்னிடம் வாங்கிய சத்தியத்தை குறித்தும் சொல்லவும்… கணவனைக் குறித்த அந்த  பழைய நினைவுகளால் சாரதா மனதிற்குள் பொங்கி வந்த அழுகையையும், இத்தனை ஆண்டுகள் சுமந்த அந்த  அழுத்தத்தையும் தாங்க முடியாமல் நிலைகுலைந்தவளை டேவிட் தன் தோள் கொடுத்துத் தாங்க…..   

       அவனது அகன்ற தோள்கள் சாரதாவிற்கு ஒரு பெரும் சுமையாக இருந்த வாழ்க்கைப் பாதையில், சற்றே ஓய்வெடுக்கக் கிடைத்த அமைதியான நிழலாக இருந்தன….. அப்படியே வார்த்தைகள் ஏதுமின்றி, ஒரு நல்ல தோழனாய் அவள் கைகளை மென்மையாகப்  பற்றி, 

    “நான் இருக்கேன் சாருமா…”

என்பதை போலவே அமைதியாக ஆறுதல் படுத்தவும்… அவன் கொடுத்த அந்த அரவணைப்பில், சாரதாவின் மனம் மெல்ல மெல்ல ஆசுவாசமாகி பதற்றம் தணிந்து, ஒரு நிம்மதியான பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது….         

அதை அவளுக்கு அருகாமையில்  நின்று எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கவும்…. வருணியின் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பியது,   

   ‘வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்பட்டாங்க மம்மி… இப்போ அவங்களுக்குன்னு ஒரு நல்ல துணை கிடைச்சிருக்கு சூப்பரு… நிஜமாவே ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தமுமே சூப்பரு….!’  

    என்று மனதிற்குள் நினைத்துச் சிலிர்த்துக் கொண்டாள் வருணி….. ஆனால், அதே இடத்தில் நின்றிருந்த குமரனுக்கும் யாழினிக்கும் அந்தத் தோழமை ஆறுதலாகத் தெரியவில்லை…  மாறாக,  தங்களது குடும்பத்தின் கௌரவத்திற்கும்…., உரிமைகளுக்கும் ஒரு பெரும் தடையாகவே தோன்றவும்….​குமரன் தன் மனதிலிருந்த கொந்தளிப்பை அடக்க முடியாமல், அக்கா வருணியைப் பார்த்துச் சீறினவன்,   

​”நீ சொன்னதெல்லாம் சரிதான் அக்கா வரு…  ஆனா ஒன்னு யோசிச்சு பாரு…! அம்மா அப்பா இறந்து கொஞ்ச வருஷத்துலயோ..  இல்ல நாமெல்லாம் சின்ன வயசா இருந்தப்பவோ…. மம்மி இன்னொரு கல்யாணத்த பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னா…., நான் கண்டிப்பா ஒன்னும் சொல்ல போறதில்ல…. ஏன்னா, அப்பதான் அம்மாவுக்கு ஒரு ஆண் துணையும் … நமக்குமே அப்பாங்குற ஒரு உறவும்… ரொம்பவே முக்கியமா தேவைப்பட்டுச்சு…. ஆனா அம்மா அப்படியா பண்ணாங்க….?, இல்லயே…. அன்னைக்கு துணிச்சலா சிங்கிள் பேரண்ட்டா! நின்னு நம்ம ரெண்டு பேரையும் தனியொருத்தியா வளர்த்து ஆளாக்கினாங்கள்ல… அதனால…, இப்ப வந்து புதுசா ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு அவுங்களுக்கு….?”   

என்று  ​குமரன் சுயநலத்துடன், அதே சமயம் கோபமும் ஆதங்கமுமாகப் பேசிவிட்டு, நேராகச் சாரதாவின் முன்னும் போய் நின்று,   

   ​”மம்மி… உங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்….!  நல்லா கேட்டுக்கோங்க…. இவர் உங்களுக்கு ஒரு நல்ல நண்பரா, ஏன்… இதோ தோள் கொடுக்கிற தோழனாவே கூட இருக்கலாம்…. அதுல எந்த தப்பும் இல்லதான்….. ஆனா…., இந்த வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு என்ன அவசியம் வந்துருச்சு….?”    

என்று  ​குமரன் பேசவும்…., உடனே யாழினியும் குறுக்கிட்டு  …..   

     “ஆமா ஆண்டி…… இவரு சொல்றதுலயும் என்ன தப்பு இருக்கு…?, இப்ப எதுக்கு இந்த மறுமணம்….?”     

​என்று மகன் குமரனும் மருமகள் யாழினியும் தங்களது சுயநலமான வாதங்களை வைத்து முடித்ததும், அங்கே ஒரு கனத்த நிசப்தம் நிலவியது…..   

       அதன் காரணமாக,  சாரதா தலைகுனிந்து நிற்பாள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவும்….​ஆனால், அதற்கு நேர்மாறாக… அமைதியாக இருந்த சாரதாவின் முகத்தில் ஒரு புதிய தீர்க்கம்! பிறந்திருந்தது….  ஆகையால்,  நிமிர்ந்து நின்றிருந்த சாரதா, அப்படியே சற்று உரத்த குரலிலேயே பேசத் தொடங்கி,   

“அவசியம் இருக்குடா குமரன்….!”   

என்கிற ​சாரதாவின் அந்த உறுதியான குரலைக் கேட்கவும்…. குமரனும் யாழினியும் ஒரு கணத்திற்குத் திகைத்துப் போனவர்கள்,  உடனே சுதாரித்துக் கொண்டும் இருவருமாக,    

“இந்த வயசுல இவுங்களுக்கு காதலாம்… கல்யாணமாம்…”       

என்று ஏளனமாகத் தலையில் அடித்துக் கொண்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கிசுகிசத்துச் சிரிக்கத் தொடங்கவும்… .இப்படி இளப்பமாக அவர்கள் முணுமுணுப்பதைக் கண்டதும், அமைதியாக இருக்க முயன்ற வருணியின் பொறுமை எல்லையைக் கடந்து கொதித்தெழுந்து  தம்பி  என்றும் பாராமல் அவர்களின் திமிரான பேச்சை நோக்கிப் பாய்ந்தவள்,    

   ​”போதும் உங்க ரெண்டு பேரோட கிண்டலும் சுயநலமும்….!”   

    என்றப்படியே கோபமாக அதேசமயம் அம்மா காதுகளுக்கு  கேட்காத வண்ணம் அவர்களின் பக்கம் திரும்பியவள்,    

   ​”உங்ககிட்ட ஒன்னு சொல்றென் அத வெளிய போய் சொல்லிடாதீங்க… நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ்! பண்ணவங்கன்னு வெளிய யாரிடமும் சொல்லவேணாம்…. மீறி போய் சொன்னா ஊரே சிரிக்கும்…, அது  உங்களுக்கு வெட்கக்கேடு…! ஏன்னா, காதலுக்கு வயதுல்லடா லூசுகளா…! ‘இந்த வயசுலயா காதல்…?, இந்த சமூகத்துல என்ன சொல்லுவாங்க’ன்னு வயது பாத்து, காலம் பாத்து, ப்ளா…ப்ளான்னு… சொல்லிக்கிட்டு … தப்பு தப்பா  கணக்குப் போட்டு வர்றதுக்கெல்லாம் பேர்தான் காதலில்ல…. உண்மையான தோழமையும் அன்பும் கிடைச்சா எந்த வயசுல வேணாலும்  காதல் வரலாம்…!”      

            என்று  வருணி, எரிமலையாய் வெடித்தபடி சொல்லவும்….. அவள் பேசிய அந்த வார்த்தைகள் பாதி  கேட்கவில்லை என்றாலும் முடிவாக  ,   

     ‘ உண்மையான தோழமையும் அன்பும் கிடைச்சா எந்த வயசுல வேணாலும்  காதல் வரலாம்..’ன்னு!     

   சொன்ன அந்த வார்த்தை மட்டுமாக ரெம்ப அழுத்தமான குரலிலே  அம்மாவுக்கும் கேட்டது… அப்படியே அங்கே நின்றிருந்த மற்ற அனைவரின் மனதிலும் அந்த வார்த்தைகள்  ஒரு உலுக்கலை ஏற்படுத்தவும்….       

      அந்த தருணத்திலே…!, சாரதாவின்  தாய் மனம் வேறு ஒரு திசையை நோக்கியும் நகர்ந்தன….    

   காதலைப் பற்றி வருணி இவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் பேசுவதைக் கேட்டதிலிருந்து, சாரதாவின் நெஞ்சில் ஒரு மெல்லிய அலை மோதி, 

      ‘காதலை பற்றி இவ்வளவு ஆழமா சொல்லிறீயே வருமா… உன் மனதிலும் காதல் இருக்குதானே…? , அது யாரிடத்தில் என்று என்னிடம் மறைச்சுட்டதானே, அப்படித்தானே வருமா….?’     

    என்று நினைத்து வருந்தியது சாரதாவின் தாய்மனம்….. அதன் விளைவாக மகளைக் குறித்து   ஏக்கம் உண்டாகி,  ஒரு கணம்  அவள் வேதனைக்குள்ளாக …. அந்த தருணத்தில்  மகன்  மற்றும் மருமகளின்  அந்த எதிர்ப்பை எதிர்கொள்வதை விட…, மகளின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத அந்தத் தவிப்பு அவளுக்குப் பெரிதாகத் தோன்றியது….  

      ​அப்போதுமே, அங்கே நிலவிய அமைதியைக் கலைத்துவிட்டு மீண்டும் அவளுக்கு ஆதரவாக அவளது தோளை மென்மையாக தட்டிய  டேவிட், 

     “என்ன சாருமா… என்ன ஒரே சிந்தனை…? இவ்வளவு ஆழ்ந்து என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க…?”      

     என்று அன்போடு கேட்டவனின்​ அரவணைப்பு குரலில் இருந்த உண்மையான அக்கறை சாரதாவின் இறுக்கமான மனதைச் சற்று தளர்த்தவும்….. தன் மனதில் ஓடிய குழப்பங்களை அவனிடம் மறைக்க விரும்பாதவளாக வருணியின் காதல் குறித்தும், தன் தாய்மனதின் வேதனை குறித்தும் டேவிடுடன் அவ வெளிப்படையாகப் பகிரத் தொடங்கவும்…. அதை பொறுமையாக கேட்டு முடித்த டேவிட், ஒரு புன்னகையுடன் அவளது கைகளை உரிமையாகப் பற்றிக்கொண்டு,  

  ​ “ஹேய்… இதுக்கெல்லாம் போய் ஏன் இவ்வளவு கவலைப்படுற சாருமா…?, நான் எதுக்கு இருக்கேன்…? ,ஒரு பக்குவமான அப்பாவா, அவகிட்ட உரிமை எடுத்து நான் விசாரிச்சுக்கிறேன் போதுமா கவலையை விடு… எல்லாமே நல்லபடியா சரியாகும்…!”   

 

என்றவன்  உறுதியோடு சொல்ல…, அவனது வார்த்தைகளில் நம்பிக்கை பெற்றவளாய் லேசாகத் தலையசைத்து ஆசுவாசமானாள் சாரதா…..​  

  வருணி சுடச்சுடச் சுழற்றி வார்த்தைகளால்  அடிக்கவும்…. அதன் விளைவாக குமரனுக்கும் யாழினிக்கும் சில கணங்களுக்கு சுர்ரென்று உறைத்தது உண்மைதான்…. ஆனால், அந்த அதிர்ச்சி நீடிக்குமா என்ன…?,வழக்கம் போலத் தங்கள் சுயநலப் புத்தியைக் கையில் எடுத்தவர்கள்…. மறுபடியும் அதே பழைய கிழவி கதவைத் திறடி கணக்கா… என்ற பாணியில், தாயை எப்படித் தங்கள் வழிக்குக் கொண்டு வருவது என்று மீண்டும் கூறுக்கெட்ட கணக்கு ஒன்றைப் போடத் தொடங்கி, அம்மாவிடம்  எப்படி மாற்றிப் பேசினால், அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தாங்களுடன் கூட்டுக்குடும்பமாக இருக்கச் சம்மதிப்பாள் என்று ரகசியமாகத் திட்டம் தீட்டவும்….   

        இந்த முறையும் அதற்காக அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம்!  அந்த வீட்டு வாரிசு என்கிற வார்தையைதான்….!    

    அதனால் ​பரிதாபமாக முகம் வைத்துக் கொண்ட குமரன், தன் மனைவியை  தனது ஆள்க்காட்டி  விரலால்  சுட்டிக்காட்டி ஒரு நாடகத்தை அரங்கேற்றியவன்,     

   “அம்மா… என் மனைவி இப்போ கர்ப்பமா இருக்கா…. பாவம் அவ…, இந்த வாரிசு சுமக்கிற கஷ்டத்துல அவளால வீட்டைப் பார்த்துக்க முடியல…. அதனால அவளுக்காக… ப்ளீஸ்ம்மா….ப்ளீஸ்….., இந்த குழந்தை பிறந்து, அது கொஞ்சம் வளர்ந்து இவ உடம்பு தேரும் வரை எங்க கூடவே வந்து இருங்களேன்மா…. அதுக்கப்புறமா வேணா உங்க பிரண்ட் இந்த டேவிட்டையே நீங்க மேரேஜ் பண்ணிக்கோங்கமா…, நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்மா…!”   

      என்றதும் அவன் பக்கத்திலேயே நின்றிருந்த யாழினியுமே, ஏதும் அறியாத ஒரு அப்பாவிக் குழந்தை போலவே தன் முகத்தை வைத்துக் கொண்டு கணவனின் நாடகத்திற்கு ஆமோதிப்பாய்  அவளுமே தலையாட்டவும்…..               ​ஆனால், அவர்களின் வஞ்சகமான எண்ணம் அதுமடடுமே அல்ல….! பிள்ளை பிறந்து, அது நடந்து, ஜோவிகா பாப்பாவும் அவளுடைய  சகோதரர்களும்  வளரும் வரையிலுமே சாரதாவின் உழைப்பும் கவனிப்பும் அவர்களுக்குத் தேவைப்பட்டது….. ஆகையால்,   

       ‘அம்மா நம்ம கூடவே இருந்தா குழந்தைகளை பார்த்துக்க வசதியா இருக்கும்…. அப்புறம் பிள்ளைக்குட்டி பெருசாகி, நமக்கு தேவை இல்லாமல் போகிற காலத்துல வேணும்னா இவங்கள கழட்டிவிட்டுடலாம்….!’ 

     என்ற கொடூரமான சுயநலத்துடன் அந்தத் திட்டமும்  மகன் மற்றும் மருமகளால் தீட்டப்படவும்….. மேலும் மருத்துவப் பரிசோதனைக் குறிப்பேட்டையும்  காட்டி, யாழினியின் உடல்நிலையை அறிந்துக் கொள்ள சாட்சி இதுவே என்றும், இதோ பாருங்கள் நம்ம வீட்டு வாரிசு…!, என்றும் கூறி சாரதாவை மூளைச் சலவை செய்துக் கொண்டிருந்தனர்….    

      அதை அறியாத சாரதாவோ மறுமணம் குறித்து இப்போது தான் விழிப்புணர்வு வந்தவளாக அவள் தெளிவாக இருக்க… புறத்தில் பரிவு போலவும், அகத்தில் வஞ்சகம் போலவும் அவர்கள் ஆடிய அந்த நாடகம் சாரதாவின் காதில் விழுந்ததுமே தாய் மனம் கொண்டவள் அல்லவா அவளுமே  ஆகையால் செய்வதறியாது திகைத்து நிற்கவும்… அவள் மனதில் நினைப்பது என்னவென்று குறிப்பால் அறிந்துக்கொண்ட டேவிட்டோ,

‘உன் விருப்பம்  தான் என் விருப்பமும் சாருமா….. அதனால தையரிமா முடிவெடு…..’

என்று கண்களாலே எடுத்து சொல்ல… அதை வாய்விட்டே  சாரதாவும் தன் முடிவான விருப்பத்தை டேவிட் தோள் மீது சாய்ந்துக் கொண்டே அவனிடம் கூறிய விளைவால்…………………………………………

🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…

🍀வருணி யாரை காதலிக்கிறாள்…?

🍀சாரதா டேவிட் இருவருமாக என்ன முடிவெடுப்பாங்க…? பார்ப்போம்….

← Previous All Chapters Next →

1 comment

Sharva Nithya November 4, 2026 - 11:34 pm

அட வருணி லவ் பண்றாளா யாரை தெரியனும் சாரதா டேவிட் என்ன முடிவு எடுப்பாங்க

Leave a Comment

error: Content is protected !!