Stories that touch hearts

Home  /  34. வேணி தீசன் (இனி உனக்கு நானே)  /  Chapter 5

CHAPTER 5

இனி உனக்கு நானே

By veni dheesan · October 22, 2026

0

       பகுதி 5

“ ராணி..‌ உன் ரெண்டு அக்காங்களும் எப்போ இங்க வருவாங்கன்னு கேளு, அதுக்கேத்த மாதிரி நாமாளும் பஸ் ஸ்டாண்ட் கிளம்பிடுவோம்” என செல்வம் கூற…

“சரிங்க” என்ற ராணி, அறையிலிருந்து வெளியே வந்து, அவரது அக்கா விஜயாவிற்கு அழைப்பு விடுத்தார். 

அழைப்பு ஏற்கப்பட்டவே.. “ஹலோ அக்கா, நாளைக்கு நீயும் சாந்தியும் எத்தனை மணிக்கு வருவீங்க”  எனக் கேட்க..  தமக்கை கூறிய பதிலில், ராணி சற்று கோபமடைந்தார்.

“என்னடி இப்போ போய் இப்படி சொல்ற. மாமாவுக்கு ஏற்கனவே தெரியும் தானே. சரவணனனுக்கு பொண்ணு பாக்க போறோனு, அப்புறம் என்ன திடீர்னு வேலை இருக்கு அது இருக்குன்னு சொல்லிட்டு இருக்காரு.” என்றவர், “அவர் வேலைக்கு போனா என்ன.. நீ வா, எல்லா இடத்துக்கும் நீ மாமாகூடவே தான் போறியா…. ஏன்டி என் புருஷன பத்தி தெரிஞ்சே இப்படி பண்றிங்க…. சாந்தி என்ன சொன்னா..‌” என்றார் எரிச்சலாக.

சாந்தியும் அவர் கணவரும் வருகிறார்கள் என்ற தகவலை  விஜயா கூற..

“அதான் அவங்க வராங்கல்ல அவகூடவே நீயும் ஒழுங்கா நாளைக்கு வந்து சேரு, இல்லன்னா என் புருஷன் என்னைதான் திட்டுவாரு” என்றவர், “நானும் அவங்க அப்பாவும் காலையில ஆறு மணிக்கு  பஸ் ஸ்டாண்ட்ல இருப்போம்” என கத்திவிட்டு அலைபேசியை அணைத்தார்.

அப்போது அங்கு வந்த செல்வம்.. “என்ன ராணி, எதுக்கு இப்படி கத்துக்கிட்டு இருக்க” எனக் கேட்க…

“எங்க மாமாவுக்கு எதோ வேலை வந்துருச்சாம். அதனால நாளைக்கு பொண்ணு பாக்க வரலையாம். நம்மள மட்டும் போக சொல்றாராம்” என்றார்.

உடனே செல்வம்.. “ஏன் உங்க மாமாக்கு மட்டும்தான் வேலை இருக்கா, எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா.  இப்பதான் மசாலா கம்பெனி ஆர்டர் எடுத்திருக்கேன் தெரியுமில்ல அவருக்கு.  ஆனா அதெல்லாம்  விட்டுட்டு எல்லாரும் கூப்பிட்டீங்களேன்னு உங்ககூட வரதுக்கு ஒத்துக்கிட்டா,  திடீர்னு உங்க மாமா இப்படி சொல்றாரு” என்றவர், “பேசாம நீ மட்டும் உன் குடும்பத்தோட  போயிட்டு வா” என்றார் கோபமாக.

“ உடனே நீங்க முருங்க மரத்துல ஏறாதீங்க.. சாந்தியும் சாந்தி வீட்டுக்காரரும் வராங்க, அவர்களோடவே எங்க பெரிய அக்காவையும் வர சொல்லி இருக்கேன். அதனால நீங்களும் எங்ககூட வரீங்க” என்றவர், “நான் போய் நாளைக்கு நீங்க போட வேண்டிய டிரஸ அயர்ன் பண்ண கொடுத்துட்டு, எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்” எனக் கூற…

“சரி சரி நல்ல டிரஸா எடுத்து குடு.. பொண்ணு நல்லா இருந்தா உன் தம்பிக்கு பதிலா நானே கட்டிக்கிறேன்” என்றார் அவர் சிரித்தவாறு.

உடனே கணவனை முறைத்தவர்.. “ஏன் உங்களுக்கு ரெண்டு பத்தலையா, மூணாவது வேணுமா” என ராணி கேட்க..

“ஏய்..‌ என்னடி வீட்டுக்கு வெளியில் நிக்கிறதால அடிக்க மாட்டேங்கற தைரியத்தில பேசுறியா, போடி உள்ளே” கோபமாக கூறியவர், “கொஞ்சம் வேலை இருக்கு வெளியே போயிட்டு வந்துடறேன்” என்றவர் மனைவியை முறைத்தவாறே வாகனத்தை கிளப்பினார்.

“உண்மையை சொன்னா கோவம் வருதோ” என்ற ராணியும்.. “வரும்போது  அப்படியே எனக்கு வாந்தி வராமல் இருக்க மாத்திரை வாங்கிட்டு வாங்க” என கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

ராணியும் செல்வமும் பேசிக் கொண்டிருந்த இடம் அவர்களின் சந்திற்குள் நுழையும் வாயில். அந்த வாயிலை ஒட்டியே மோகன் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சிறிதாக அமைந்திருக்க.. சுவற்றை ஒட்டியவாறு அமர்ந்திருந்த மோகன்   இவர்கள் இருவரும் பேசுவதை முழுதாக கேட்டிருந்தான். 

அவர்கள் சென்றதும்  எழுந்தவன்,  “என்ன இரண்டு பத்தலையான்னு கேக்குறாங்க, ஒருவேளை நம்ம மாமனாருக்கு இன்னொரு வீடு   இருக்கோ” என யோசித்தவன்.. “சரி அது எதுக்கு நமக்கு…. அப்போ நம்ம மாமனாரும் மாமியாரும் நாளைக்கு ஊருக்கு போறாங்க.. நாம நம்ம ஆளு கூட வெளியே போறோம்” என திட்டமிட்டபடியே, வேகமாக வீட்டிற்குள் சென்றான்.

அதேநேரம், ராணி கணவனது உடைகளோட  இஸ்திரி கடைக்கு சென்றுவிட… 

“ஹேமா.. ஹேமா.. ஹேமா”  ஜன்னல் வழியே மெல்லிய குரலில் மோகன் அழைக்க, அதை கவனிக்காமல் தீவிரமாக பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்தாள் ஹேமா.

“இங்க ஒருத்தன் கூப்பிடுறது கூட கேட்காத அளவுக்கு எவ்வளவு இன்வால்வ்மெண்டோட பாத்திரத்தை விளக்கிட்டு இருக்கா பாரு.. இவ தான் எங்க வீட்டுக்கு ஏத்த குத்து விளக்கு” என்றவன், “அடியேய் அதை கழுவுனது போதும் என்னையும் கொஞ்சம் கவனிடி” என்றான் சத்தமாக.

அவனது சத்தத்தில் நிமிர்ந்த ஹேமா,  சுற்றும் முற்றும் பார்க்க நல்ல வேலையாக அங்கு யாரும் இல்லை.

உடனே அவனை முறைத்தவள்.. “எரும மாடு, ஏன்டா இப்படி கத்துற..” என்றாள் மெல்லிய குரலில்.

“எவ்வளவு நேரமாடி ஒரு மனுஷன் உன்னை கூப்பிடுறது.  கொஞ்சமாவது காதுல வாங்குறியா.  அதான் சத்தமா கூப்பிட்டேன்” என்றவன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மெல்லமாக.

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.  என் தம்பி உள்ளே இருக்கான், எங்க அம்மாவும் கடைக்குதான் போய் இருக்கு, எப்ப வேணா வந்துரும்” என்றாள் அவள். 

“ உங்க அம்மா‌ வர எப்படியும் லேட் ஆகும்.. உன் தம்பி  உள்ளே தானே இருக்கான்,  நாம பேசறது கேட்காது. ஒன்னும் பிரச்சனை இல்லை,  எனக்கு உன்கிட்ட இப்போவே பேசியாகணும்” என்றவனிடம்…

“ என்கிட்ட பேசியே ஆகணுன்ற அளவுக்கு அப்படி என்ன தல போற விஷயம்.  அப்படியே தலை போற விஷயமா இருந்தாலும், இப்ப என்னால பேச முடியாது. என் தம்பிக்கு தெரிஞ்சா, எங்க அம்மாகிட்ட சொல்லிடுவான். அப்றம்  மரண அடி தான் விழும், நான் போறேன்” என்றவள், தன் வீட்டு வாயிற் கதவை வேகமாக மூட…

“ஹே.. ஹே.. ஒரு நிமிஷம் நில்லடி” என்றான் மோகன்.

உடனே கதவை லேசாக திறந்த ஹேமா,  “என்ன” எனக் கேட்க…

“உங்க அம்மாவும் அப்பாவும் நாளைக்கு ஊருக்கு  போறாங்க தானே” என்றான் அவன்.

“ஆமா, அது எப்படி உனக்கு தெரியும்” என்றவளிடம்..

“ எப்படியோ தெரியும். இப்போ அதுவா முக்கியம்” என்றவன், “அவங்க ஊருக்கு போனதும் நீ  பக்கத்துல இருக்க பார்க்குக்கு வா” என்றான்.

“அய்யய்யோ.. என்னால முடியாதுப்பா” என அவள் கூற..

“முடியாதா”  என கோபமாக கேட்டவன், “ அப்போ சரி, எப்படியும் உன் தம்பி நாளைக்கு ஸ்கூலுக்கு போயிடுவான். நீ வீட்ல தனியா தானே  இருப்ப,  நானே உங்க வீட்டுக்கு வரேன்” என்றான்.

“ஐயோ..‌ வேண்டவே வேண்டாம்” ஹேமா பயந்தவாறு கூற…

“ என்னடி விளையாடுறியா.. நீயா  பார்க்குக்கு வான்னாலும் வர மாட்டேங்குற,  சரி நான் உன் வீட்டுக்கு வரேன்னு சொன்னாலும்   வேண்டான்ற. அப்போ எப்ப தாண்டி நான் உன்னை தனியா பார்த்து பேசுறது” என்றான் மோகன் கோபமாக.

அவனது ஆசையும் காதலும் அவளுக்கு புரிகிறதுதான்.  ஆனால் அவளது  சூழ்நிலை  சரியில்லையே. அதை எப்படி அவனிடம் சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் அவள் விழிக்க..

“ இங்க பாரு நாளைக்கு காலைல 11 மணிக்கு நீ  பார்க்குக்கு வர. இல்ல நான் உன் வீட்டுக்கு வந்துருவேன் சொல்லிட்டேன்”  என்றவன், ஜன்னல் கதவை மூடிவிட்டு மறைந்தான். 

“கடவுளே,  ஆளாளுக்கு என்னை மிரட்டுறாங்களே, நான் என்னதான் பண்ணட்டும்” புலம்பிய ஹேமா, நாளை எப்படி பார்க்குக்கு செல்வது என யோசிக்க தொடங்கினாள்.

இரவு அனைவரும் உணவு உண்டு முடித்திருந்த நேரம்.. செல்வத்தின் அலைபேசி இசைக்க.. அதில் தெரிந்து எண்ணை பார்த்த செல்வம்..

“என்னடி, உன் சின்ன அக்கா வீட்டுக்காரர் இந்நேரத்துக்கு ஃபோன் பண்றாரு,  இவரும் வரலைன்னு சொல்ல போறாரா” என்றார் அலைபேசியை எடுக்காமலே. 

“நீங்களா ஏதோ ஒன்னு பேசிட்டு இருக்காதீங்க.. ஃபோனை எடுங்க, எடுத்தாதானே அவர் என்ன சொல்லறாருன்னு தெரியும்” என்றார் ராணி.

முதல் அழைப்பு முழுதாக முடிந்து.. அடுத்த அழைப்பு வரவே உடனே அழைப்பை ஏற்ற செல்வம்… “சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு ஃபோன் போட்டு இருக்கீங்க” எனக்கேட்க…

“அது ஒன்னும் இல்லைங்க, நாளைக்கு ஊருக்கு பாப்பாவையும் கூட்டிட்டு வரலாம்னு இருந்தோம். ஆனால் திடீர்னு அவளுக்கு உடம்பு சரியில்ல அதனால அவளையும் ஹேமாவோடயே உங்க வீட்டில விட்டுட்டு, நாம மட்டும் போயிடலாம்னு சாந்தி சொன்னா.  அதான் நாளைக்கு நாங்க புது பஸ் ஸ்டாண்ட் வந்ததும் நீங்க உங்க வண்டில வந்து அம்முவை கூட்டிட்டு போய் வீட்ல விட்டுட்டு, அதுக்கப்புறம் ராணியை கூட்டிட்டு வந்துடுறிங்களா”  என கேட்டார் மணி.

“அப்படியா சரி,  அப்போ நீங்க வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் வந்து அம்முவை கூப்பிடுகிறேன்” என்றவர், வேறு ஏதோ பேசிக்கொண்டே  வெளியே சென்றார்.

உடனே ஹேமா.. “அப்போ நாளைக்கு அம்மு இங்க வரா,  அவளையும் கூட்டிட்டு பார்க்குக்கு போயிட வேண்டியது தான் எப்படியோ ஒரு வழி கிடைச்சிருச்சுடா சாமி” என எண்ணியவள், “அம்மா,  நாளைக்கு தான் அம்மு இங்க வரால்ல, அப்போ நானும் அவளும் என்  ஃப்ரண்டு வீடு வரைக்கும்  போயிட்டு வந்துரட்டுமா” என்றாள் தாயிடம்.

“எந்த ஃப்ரண்டு வீடு.. வாரி ஹோட்டலுக்கு எதுத்தாப்புல இருக்கே அந்த ஃப்ரண்டு வீடா”  ராணி கேட்க..

“ஐயோ அங்கெல்லாம் இல்லம்மா” என பதறினாள் ஹேமா. 

ஏனென்றால் அங்கு இருப்பது அம்ரிதாவின் வீடு. அதனால்தான்  அவ்வளவு  பயம்.

“பார்க்கு தாண்டி இருக்குல்ல கிரிஜா வீடு அங்க தான் போறேன்” என ஹேமா கூற..

“எங்கேயும்  வேண்டாம் ஒழுங்கா வீட்டுலயே  இருங்க” என்றார் அவர்.

“அம்மா,  எப்பவும் நான் வீட்டிலேயே தானே இருக்கேன், ஒரே ஒரு நாள் வெளியில போறேன்னு கேட்குறேன் அதுக்கு கூட விடமாட்டியா. அதுவும் நாள் பூராவுமா இருக்க போறேன். போயிட்டு  இரண்டு மணி நேரத்துல வந்துற போறேன்.‌‌ நம்ம வீட்ல யாரும் இல்லனா அவ்வா வீட்லதான இருக்கேன்.. இப்போ அவ்வாவும் உங்க கூட தான் வராங்க.  அப்போ நாங்க என்னதான் பண்றது, எவ்வளவு நேரம் தான் டிவி பார்க்கிறது. நான் என்ன  தனியாவா போக போறேன்,  அம்முவையும் கூட கூட்டிட்டு தானே போறேன்னு சொல்றேன்..  ப்ளீஸ்மா விடுமா” எனக் கெஞ்ச…

மனமிறங்கிய ராணி… “சரி சரி போயிட்டு சீக்கிரம் வந்துடனும், வீட்ல யாரும் இல்லன்னு ஆட்டம் போட்டுட்டு இருக்க கூடாது புரியுதா” என்றவர், நாளை வீட்டில் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் மா… கண்டிப்பா எல்லா வேலையும் செஞ்சு முடிச்சிடுறேன்” என்ற ஹேமா… அம்முவிடம் எப்படி இதை கூறுவது என சிந்தித்தவாறே உறங்கினாள்.

அடுத்த நாள் அழகாக விடிய.. ஹேமாவின் பெற்றோர் இருவரும் காலை ஐந்து மணிக்கே தயாராகிவிட..

“ராணி உங்க அக்காவுக்கு ஃபோன் பண்ணி பஸ் ஸ்டாண்ட் வந்துட்டாங்களான்னு கேளு.. நான் போய் அம்முவை கூட்டிட்டு வந்துடறேன்.. நீ அதுக்குள்ள உங்க அம்மா வீட்ல எல்லாரும் ரெடி ஆயிட்டாங்கன்னு பாரு” என்றார் செல்வம்.

அவர் கூறியபடியே சாந்திக்கு அழைத்து கேட்க… தற்போது தான் தாங்கள்  பஸ் நிலையத்திற்கு வந்ததாக கூறினார் அவர். 

உடனே மனைவியை அழைத்துக் கொண்டு சென்றவர், ராணியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் கிளம்பினார்.

அப்போது கண்விழித்த ஹேமா நேரத்தை பார்க்க..  கடிகாரம் ஐந்து முப்பது மணியை காட்டியது.

உடனே எழுந்தவள்.. “ இந்த வாரம் நாம தான் வாசல் கூட்டனும்.  சரி முழிச்சாச்சி, கையோட அந்த வேலையை  முடிச்சிட்டு டீயை  வைப்போம்.  அம்மு வந்ததும் அவகிட்ட ஏதாவது பேசி சரிகட்டி, இவனையும் ஸ்கூலுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டு பார்க்கு போவோம்” என எண்ணியப்படியே துடப்பத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள்.

கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சமிருக்க… ஆள் அரவமற்ற அந்த தெருவை ஒருமுறை சுற்றியும் பார்த்தவள்,  வாயிலை பெருக்கி முடித்து, தண்ணீர் பிடிக்க உள்ளே வர.. அவள் பின்னே வந்த மோகன்.. அவளது கையை பிடித்து இழுந்திருந்தான்.

அதில் பயந்த ஹேமா “ஆஆஆஆ” என அலற.. உடனே அவள் வாயை மூடிய மோகன் “கத்தாதடி நான் தான்” எனக்கூற…

சட்டென அவளை உதறிவிட்டு நகர்ந்தவள்… “பைத்தியக்காரா பைத்தியக்காரா.. ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற” என்றாள் கோபமாக.

“ஹே, இப்போ என்ன பண்ணிட்டேனு இப்டி திட்ற.. லவ் பண்ற பொண்ணாச்சேனு ஆசைய கைய புடிச்சேன், அதுக்கேன் கத்துற” என்றான் அவன்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..  இந்த இருட்டு நேரத்துல இப்படி பின்னாடி வந்து கைய புடிச்சா,  யாரா இருந்தாலும் பயப்படுவாங்கன்னு தெரிய வேண்டாம்..  அரைமெண்டல்” என்றவள், “எங்க அப்பா வந்துடுவாரு, போய் தொலைடா” என்றாள்.

“சரி போறேன், பார்க்குக்கு வந்துடுவதுதானே” அவன் கேட்க..

“வரேன், இப்போ நீ  போடா.. யாராவது பாத்துட போறாங்க”  என அவனை அவள் விரட்ட… வேகமாக சந்திலிருந்து வெளியே வந்தான் மோகன்.

சரியாக அதேநேரம் செல்வம் அங்கு வர… இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

தொடரும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!