பகுதி 4
இரண்டு வருடங்களுக்குப் பிறகு…
“ என்ன ராணி… உங்க அக்கா மகள் இந்த பக்கமே குடுத்தனம் வந்துட்டா போல கேள்விப்பட்டேன்” மதிய உணவு உண்டவாறே செல்வம் கேட்க…
“ ஆமா, எங்க அம்மா சொன்னுச்சி..” என்றார் அவர்.
“ ஏன்.. அடிக்கடி அந்த மொகரய பாத்தா, நம்ம மனசு மாறிடும்னு நினைக்கிறாளாமா..” என்றவரிடம்…
“ இருக்கிருக்கும்…. அவங்க அம்மா மனசை அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாதில்ல.. அதுதான் நம்மகிட்ட ஏதாவது பருப்பு வேகமானு பாக்குறா” என்றார் ராணி.
“ ம்ம்ம்.. ஆயிரம் தான் திட்டினாலும் அவளை இப்படி பார்க்க மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. எப்படி வளர்ந்த பிள்ளை, இப்போ வேலைக்கு போய் கஷ்டப்படுறா… ஆனா அவ செஞ்சதை மறக்க முடியலையே” செல்வம் வருத்தப்பட…
“அவ்வளவு தூரம் சொன்னேன், என் தம்பியையே கட்டிக்கடி, ராணி மாதிரி வைச்சிக்குவானு.. கேட்டாளா அவ… திமிரு எடுத்து போய் அவன் கூட ஓடுனா, இப்போ கஷ்டப்படுற அதுக்கு நாம என்ன பண்ண முடியும்” என கோபப்பட்டார் ராணி.
“ ஏண்டி உனக்கெல்லாம் அறிவே இல்லையாடி, அவளுக்கும் உன் தம்பிக்கும் எத்தனை வயசு வித்தியாசம். அதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா” என்ற கணவனிடம்..
“என்ன வித்தியாசம்.. ஒரு பத்து வயசு வித்தியாசம், இதில் என்ன இருக்கு” என்றார் மனசாட்சியின்றி.
“ பத்து வயசு… உனக்கு வித்தியாசமா தெரியலையா” கேட்டவாறு மனைவியை முறைத்தவர், “ உங்க திட்டமெல்லாம் தெரியும்டி” எனக்கூற..
“என்ன பெரிய பொல்லாத திட்டம் போட்டுட்டாங்க…” என்றார் ராணி.
“உன் தங்கச்சி கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. உன் தம்பிக்கு வேற யாரையாவது கட்டி வச்சுட்டா, அவ வந்து உங்க அம்மாவையும் தங்கச்சியும் பார்த்துக்க மாட்டா. அதனால இவளை உன் தம்பி கூட கோர்த்து விட்றலானு நீயும் உங்கொக்காவும் ஐடியா பண்ணிங்க. ஆனா அவ, அந்தப் பையன் கூட ஓடிப் போய் உங்களுக்கு அல்வா கொடுத்துட்டா” என்றார்.
அவர் பேசியதை கேட்டு எரிச்சல் அடைந்த ராணி… “அதுக்காக மட்டும் சொல்லல.. என் தம்பிக்கும் அவளை கட்டிக்கணும்னு ஆசை அதனாலதா சொன்னோம் அவ கேக்கல.. அதுக்கு தான் இப்ப அனுபவிச்சிட்டு இருக்கா.. எதோ புள்ள குட்டினு உண்டாக இருந்தாலாவது, எங்க அக்கா மனசு மாறி இருக்கும். ஆனா கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் இன்னும் அதுவும் நிக்கல… எல்லாம் அவ பண்ண பாவம்… எங்க அக்காவையும் மாமனையும் ஏமாத்திட்டு போனாலே அதுக்கான பாவம்தான்” என்றார்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்க.. “அம்மா” என அழைத்தவரே உள்ளே வந்த ஹேமா, “ம்மா.. அவ்வா உன்னை உடனே வர சொல்லுச்சிம்மா” என்றாள்.
“எதுக்காம்” என கேட்ட தாயிடம்… “தெரியும் மா” என்றாள் ஹேமா.
“சரி, நான் போய் பாத்துட்டு வரேன். நீ அப்பாவுக்கு சாப்பாட்டை போடு” எனக்கூறி சென்றிட…
“உங்க அக்கா நாலு தெரு தள்ளி குடி வந்திருக்கா.. தெரியுமா” என்றார் செல்வம் மகளிடம்.
“ஐ! அப்படியா” கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டவள்… “தெரியாதுப்பா” என்றாள் சந்தோஷத்தை அடக்கியவாறு.
“ம்ம்… தெரியாதவரைக்கும் சந்தோஷம். இனி மேலும் அப்படியே இருந்துக்கோ.. அக்காவை பார்க்க போறேன், ஆட்டுக்குட்டியை பார்க்க போறேனு ஏதாவது பண்ணே.. என்ன நடக்கும்னு தெரியுமில்ல” அவர் அவளை மிரட்டிட…
“தெரியும்பா.. போக மாட்டேன்” என்றாள் பயத்துடன்.
“அந்த பயம் இருக்கட்டும்… ரசத்தை ஊத்து” என்றவர், சாப்பிட்டு முடித்து வேலைக்கு சென்றுவிட..
தந்தை சென்றதும் அக்காவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமடைந்த ஹேமா.. “உடனே அவளை போய் பார்ப்போம்” என எழுந்தாள்.
ஆனால் அவளுக்கு அம்ரியின் வீடு தெரியாததால், “அடச்சே.. வீடு தெரியாம எங்க போய் பார்க்கிறது? என யோசித்தவள், “சரி அவ்வாக்கு அம்ரி வீடு தெரியுமான்னு கேட்டு பாப்போம்” என அங்கே ஓடினாள்.
அதேநேரம்…. “என்னமா.. இப்போ எதுக்கு அழுதுகிட்டு இருக்க” என தாயைக் கேட்டுக் கொண்டிருந்தார் ராணி.
“நான் என்னன்னுடி சொல்லட்டும். உன் தம்பிகாரன் டெய்லி குடிச்சிட்டு வந்து என் உயிரையே வாங்குறான்டி. அம்ரியை ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல… உன்னால தான் எல்லானு என்கிட்ட மல்லுக்கு நிக்கிறான்டி… நான் என்னதான்டி பண்ணட்டும்” என அழுது கொண்டே கூறினார் லட்சுமி.
” ஆமா.. என்னவோ நாம தான் அவளை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொன்னோம் பாரு…. அவளை கல்யாணம் பண்ணும்னு ஆசைப்பட்டவன், அவ முன்னாடி குடிக்காம கொள்ளாம ஒழுக்கமா இருந்திருந்தா… இவனை அவ கல்யாணம் பண்ணி இருப்பா. இப்படி தினத்துக்கும் அவ முன்னாடி குடிச்சிட்டு வந்து ஆடுனா… அப்புறம் எப்படி இவனை கல்யாணம் பண்ணிக்க அவ ஒத்துக்குவா.. பண்றதெல்லாம் இவன் பண்ணிட்டு கடைசில உன்னை சொல்றானா” என்றவர், “ரெண்டு வருஷம் ஓடிப்போயிடுச்சு இன்னும் இவன் பஞ்சாயத்து முடியலை.. இன்னைக்கு அவன் வரட்டும் பேசிக்கிறேன்” என்றார்.
“ராணி.. சீக்கிரமா எல்லாரும் சேர்ந்து இவனுக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வச்சிரலாண்டி.. இல்லன்னா என்னை சாவடிச்சிடுவாண்டி இவன்” என்ற தாயிடம்..
“ அதையேதான் நானும் யோசிக்கிறேன்..” என்றவர், தனது அக்கா கணவருக்கு கால் செய்து நடந்துவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வா வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஹேமாவை வழிமறித்த மோகன்… “ஹேமா.. நானும் ரெண்டு வருஷமா உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா நீ, என்ன பாக்கவும் மாட்டேங்குற.. நான் கேட்டதுக்கான பதிலை சொல்லவே மாட்டிக்கிற” என்றவன்… “இன்னைக்கு என்ன ஆனாலும் சரி.. பதில் தெரியாம உன்னை விடப்போறதில்லை” என்றான் கோபமாக.
நடு ரோட்டில் வைத்து, இவன் இப்படி நடந்து கொள்வதை யாரேனும் பார்த்து தாயிடம் கூறிவிட்டால் பிரச்சனையாகி விடுமே என்று பயந்த ஹேமா.. “மோகன் ப்ளீஸ்.. தயவு செஞ்சு போயிடு.. என்கிட்ட எதுவும் கேட்காதே, யாராவது பார்த்து எங்க அம்மாகிட்ட சொல்லிட்டா பெரிய பிரச்சனை ஆயிடும்” என்றாள்.
“என்ன பெரிய பிரச்சினையாகும்…. புரியல எனக்கு.. இப்போ என்ன, நான் உன் கையவா புடிச்சு இழுத்தேன். இல்ல கட்டிப்பிடிச்சேனா, பிரச்சனையாகறதுக்கு.. நான் கேட்டதுக்கு பதில் தானே சொல்ல சொன்னேன். ஆமா இல்லைன்னு ஒத்த வார்த்தையில சொல்ல முடியாதா உன்னால. உனக்கு என்ன பிடிச்சிருக்கா? பிடிக்கவில்லையான்னு தெரியாம பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கு ஹேமா.. தயவு செஞ்சு சொல்லிட்டு போ” என்றான்.
பதில் கூறாமல் இன்று இவன் விடப் போவதில்லை என்று தெரிந்த ஹேமா.. “பிடிச்சிருக்கு போதுமா.. இப்பவாது என்ன போக விடுறியா” எனக்கூற..
சந்தோஷத்தில் குதித்தவன்.. “நிஜமாவா.. அப்புறம் ஏன் இத்தனை நாளா சொல்லவே இல்ல” என்றான்.
” எங்க வீட்ல நடந்தெல்லா தெரிஞ்சும் கேக்குற பாத்தியா” என வருத்தமாக கூறியவளிடம்…
“உங்க அக்கா பண்ணதுக்கு நீ என்ன பண்ண முடியும்” என அவன் கேட்க…
“இப்போ அதெல்லாம் பேச நேரமில்லை மோகன்.. தயவு செய்து என்னை போக விடு” என்றாள்.
“ஏண்டி, ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் பேசுறோம். ஒரு ரெண்டு நிமிஷம் நிக்க கூடாதா.. போறேன் போறேன்னு குதிக்கிற” என்றவன்.. “சரி இனிமேலாவது உங்க அம்மா வேலைக்கு போனதுக்கு அப்புறம் வீட்டு கதவை திறந்து வை” எனக்கூற..
“ஏன்.. நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா” என்றாள் அவள்.
“நீ நல்லா இருக்குறதால தான், உன்ன புடிச்சிருக்கு” என்றவனை முறைத்தவள்..
“அப்போ நான் அழகா இருக்கறதுனால தான் என்ன லவ் பண்ற, இல்ல” என்றாள்.
“ஆமா இதுல என்ன சந்தேகம்.. உனக்கும் நான் அழகா இருக்கேன்னு தான என்ன புடிச்சிருக்கு” என்றான் அவன்.
“அதனால மட்டும் இல்லை” என்றவளிடம்.. “வேறு எதனால்” எனக் கேட்க..
“மொட்ட வெயில்ல, நடு ரோட்டுல நிக்க வச்சி கேட்கிற கேள்வியா இது. எங்க அம்மா, எங்க பாட்டி வீட்டுக்கு தான் போயிருக்காங்க. எப்போ வேணா திரும்பி வந்துருவாங்க. தயவு செஞ்சு என்னை விடு. இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்ற ஹேமா, வேகமாக ஓடியிருந்தாள்.
அவள் ஓடிய திசையை பார்த்து “லவ் யூ டி” சற்று சத்தமாக மோகன் கூற.. அது அவளின் செவியை சென்று சேர்ந்திருக்கவில்லை.
ஒரு வழியாக காதலை தன்னவனிடம் கூறி விட்டோம் என்ற சந்தோசத்தில் துள்ளி வந்தவள், தாயும் அதே ரோட்டில் சற்று தூரத்நில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பதட்டமடைந்தாள்.
“அய்யய்யோ.. நானும் அவனும் பேசினதை அம்மா பார்த்திருக்குமோ.. பார்வை வேற அடிக்கடி இங்க வருதே.. இப்ப என்ன பண்ணுவேன் ஆண்டவா” பதறியவள், “எதுவும் நடக்காத மாதிரியே நடந்துக்குவோம்” என தாயை நோக்கி சாதாரணமாக சென்றாள்.
ஹேமா ராணியை நெருங்கி செல்லவே.. யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ராணியும் தன் பேச்சை முடித்துக் கொண்டு அவளை நோக்கி சென்றவர், “எங்கடி போற” என்றார்.
“அ.. அது.. இந்த பக்கம் போனா வேற எங்கம்மா போக முடியும்” என்றவள், “ அவ்.. அவ்வா வீட்டுக்கு தாம்மா போறேன்” என்றாள் திணறியவாறு.
“இப்பதான அங்கிருந்து வந்தே.. உடனே அங்க என்ன வேலை? வா வீட்டுக்கு” என மகளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல…
“அப்பாடி.. அம்மா எதையும் பாக்கல போல” பெருமூச்சுடன் நிம்மதி அடைந்தாள் ஹேமா.
ஆனால் அப்படியெல்லாம் உன்னை நிம்மதியாக விட மாட்டேன் என்று எண்ணிய விதியோ.. வேறு ரூபத்தில் தனது இடியை இறக்கியது.
தொடரும்…