கதிரவனின் கதிர்கள் அந்த தெப்ப குளத்தின் நீர் அலைகளில் புகுந்து வெள்ளி நிற முத்துக்கள் போல் மின்னின. அங்கு கன்னத்திற்கு கை கொடுத்தபடி நீரில் மீன்களால் ஏற்படும் அலைகளையும், துள்ளிக் குதிக்கும் மீன்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா. அந்த அழகிய முகத்தில் சோகம் குடிகொண்டு, அது எதிரில் இருந்த நீரிலும் பிரதிபலித்தது.
அப்போது வயதான தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்தபடி தெப்ப குளத்தின் படிகளில் இறங்க ஆரம்பித்தனர்.
“நல்லா பிடிச்சுக்கோங்க.”
“நான் நல்லா பிடிச்சிருக்கேன் ரமணிம்மா. பார்த்து கால வையுங்க.”
“நீங்களும் பார்த்து வையுங்க.”
இருவரும் பேசியபடி படிகளில் இறங்கினர். ரமணி என்ற அந்த பெண்மணி பையில் வைத்திருந்த நெகிழிப் பையை எடுத்து அதில் இருக்கும் பொரியை மீன்களுக்கு தூவினார்.
இருவரும் வயோதிகம் காரணமாகப் படியில் அமர்ந்து கொண்டனர்.
“இப்ப தாங்க ரொம்ப நிம்மதியாக இருக்கு. ரொம்ப நாள் ஆசை அந்த கோயிலுக்கு வரணும்னு. உங்க கூட முதல் தடவை வந்தது ரொம்ப சந்தோஷம்.”
“எனிதிங் ஃபார் யூ ரமணிம்மா. அந்த பிரசாதத்தை எடுங்க சாப்பிடுவோம்.”
நெய்யில் குளித்து முந்திரியையும், திராட்சையும், ஆபரணங்களாக அணிந்திருந்த பொங்கலை தொன்னையிலிருந்து எடுத்த ரமணிம்மா முதல் கைப்பிடியை எடுத்தவர் தன் கணவருக்கு நீட்டினார்.
மீராவுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த இவர்களின் மீது அவள் கவனம் பதியவில்லை. தம்பதிகள் இருவரும் உண்டு முடித்தவர்கள் அப்போதுதான் அந்த பெண்ணை கவனித்தனர்.
“பாருங்க அந்த பொண்ணு ரொம்ப நேரமா அப்படியே உட்கார்ந்து இருக்கு. சோகமாக இருக்கிற மாதிரி இருக்கு.பேசலாம்ங்க.”
இருவரும் மீராவின் அருகில் சென்று நின்றனர்.
“ பாப்பா இந்தாப் பிரசாதம். சாப்பிடு.”
புன்னகைத்தபடி ரமணியம்மா இன்னொரு தொன்னையில் இருந்த பொங்கலை நீட்டினார்.
அவர் குரலில் நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
சாந்தமும் புன்னகையும் தவழும் முகமாக, இளம் பச்சை வண்ண பருத்திப் புடவையுடன், நரையோடிய கூந்தலுமாக நின்று கொண்டிருந்தார் அந்த மூதாட்டி. அவர் அருகே வெள்ளை நிற வேட்டி சட்டையில் தலை முழுவதும் நரைத்த பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
அவர்கள் அன்பை மீராவால் மறுக்க முடியவில்லை.
“தேங்க்ஸ் பாட்டி.”
என்று நன்றி கூறினாள்.
“கேட்கிறேனு தப்பா நினைக்காதப் பாப்பா. ஏன் இப்படி கோயில்ல வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க? சாப்பிட்டியா?”
அவள் முகத்தில் மீண்டும் சோகமான புன்னகை.
“நீங்க கொடுத்து இருக்கீங்க.
சாப்பிட்டுருவேன்.”
“ எங்க வீடு இங்க பக்கத்துல தான். அங்க வந்து சாப்பிட்டு போ. பயப்பட வேண்டாம். நாங்க இந்த ஊரு தான். உன்னைப் பார்த்தா இந்த ஊரு மாதிரி தெரியல.”
“நான் பக்கத்து தாலுகா.”
“ஓ அப்படியா! வீட்டுக்கு வாம்மா.”
அந்த முதியவரும் அழைத்தார். அவர்களைப் பார்த்ததும் மனதில் ஒரு நேர்மறை எண்ணம் மீராவுக்கு. அவர்கள் அழைத்ததும் மறுக்க தோணவில்லை.
“சரி போலாம் பாட்டி.”
ஏனோ அவர்கள் சாப்பிட அழைக்கையில் அவன் நினைவு தானாக எழுந்ததது. மீராவும் எழுந்து அவர்களுடன் நடந்தாள்.
“உன் பேர் என்னமா? படிச்சிட்டு இருக்கியா? வேலைக்கு போயிட்டு இருக்கியா?”
“பேரு மீரா. வேலைக்கு போயிட்டு இருக்கேன்.”
“ஓ சரி சரி.”
மூவரும் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் முன் வந்து நின்றனர். சுந்தர இல்லம் என்ற பெயர்ப் பலகை அவர்களை வரவேற்றது.
முகப்பிலேயே பெருங்கள்ளி மரங்கள் இலையற்று முழுவதும் பூக்களை தாங்கி நின்றது. வெண்ணிறமும் மஞ்சள் நிறமும் கலந்த பூக்கள் தரையில் கொட்டி கிடந்தது. அந்த பூக்களின் நறுமணம் வீட்டில் நுழையும் முன்னே மனதை தீண்டி தெய்வீக நறுமணத்தை பரப்பியது.
மீராவுக்கு உடனே அவன் நினைவு வந்தது. இந்த பூக்களைத்தான் அவன் தினமும் பறித்து சாமி படத்தின் முன் வைத்து சாமி கும்பிடுவான்.
கதவை நீக்கி உள்ளே சென்ற ரமணி சுந்தரன் தம்பதியர்கள் மீராவை வரவேற்று நீள் இருக்கையில் அமர வைத்தனர். ரமணிம்மா தண்ணீர் கொண்டு வந்து மீராவுக்கு கொடுத்தார். சுந்தரன் மீராவின் எதிரில் அமர்ந்து கொண்டார்.
மீரா சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். கருப்பு வெள்ளை நிறத்தில் பச்சை நிற பிரேமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இளம் வயது சுந்தரனும் இன்னொரு பெண்ணும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
மறுபுறம் எதிரே , ரமணி அம்மாவும் சுந்தரமும் வண்ண புகைப்படத்தில் நவீன பிரேமிடப்பட்டு மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்தனர். அருகில் இன்னொரு படத்தில் ஒரு இளவயது ஆடவனுடன் தம்பதிகள் இருவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
“அது என்னோட முதல் வைஃப். கல்யாணமான ஆறு வருஷத்துல இறந்துட்டாங்க. ரமணிம்மாவுக்கும் எனக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு.”
அவர் கூறிய செய்தியில் ஆச்சரியப்பட்டாலும் இதெல்லாம் இப்போது சகஜம் என நினைத்துக் கொண்டாள்.
“உங்க குழந்தைங்க எல்லாம்?”
“ஒரே பையன் வெளிநாட்டில் இருக்கான். நேத்து தான் கிளம்பி போனான்.”
“உங்க பையன் நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாரா?”
“பண்ணி வச்சதே அவன் தான்மா. என் பையன் போனதுக்கப்புறம் ரொம்ப தனிமைய உணர்ந்தேன். அரசு வேலை. கை நிறைய சம்பளம். ரிட்டையர் ஆனதுக்கப்புறம் பையனும் பக்கத்துல இல்ல. அப்ப பக்கத்துல இருக்குற முதியோர் இல்லத்துக்கு போக ஆரம்பிச்சேன். நிறைய பேர் என்னை மாதிரி வயசானவங்க. அங்கதான் ரமணிம்மாவை சந்திச்சேன். பயங்கரமாக செஸ் விளையாடுவாங்க. மூணு பசங்க. அப்பா இறந்ததுக்கு அப்புறம் சொத்து பிரச்சனை. அம்மாவை யாருக்கும் பார்த்துக்க இஷ்டம் இல்ல. இவங்களாவே முதியோர் இல்லத்துக்கு வந்துட்டாங்க. அங்க வந்து சோகமாக இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பாங்க. அதுதான் அவங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். பையன்கிட்டேயும் அவங்களப் பத்தி அடிக்கடி பேசுவேன். ஒரு நாள் அவங்களுக்கு உடம்பு சரியில்ல. மனசே தாங்கல. எப்பவும் அவங்கள பக்கத்துல வச்சு பார்த்துக்கணும்னு தோணிச்சு. பையன் கிட்ட சொன்னேன். அவனும், “நீங்க இத்தனை நாள் எனக்காக வாழ்ந்தது போதும். ரமணிம்மாவை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழுங்க. கல்யாணத்தப்ப சொல்லுங்க நான் ஃபாரின்ல இருந்து கிளம்பி வந்துடறேன்.” அப்படின்னு சொல்லிட்டான். ரொம்ப தயங்கி தயங்கித்தான் நானும் கேட்டேன். ஒரு கட்டத்துல இவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன கெட்டி மேளம் தான். “
“சொல்லிட்டாரா.. நீ வாம்மா.. சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். மூணு பேரும் சாப்பிடலாம் வாங்க.”
உணவு மேசையில் அமர்ந்த மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சுந்தரன் மனைவிக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். ரமணிம்மா அவருக்கும் மீராவுக்கும் பரிமாறினார்.
முதிய தம்பதிகளின் அன்பை பார்த்தவுடன் மீண்டும் அவன் நினைவு எழுந்தது. இரவு நேரத்தில் அவள் வருமுன் உணவு தயாராக இருக்கும். அவள் முகம் பார்த்து அனைத்தும் செய்வான். ஆனால் அவன் ஏன் இப்படி செய்தான்? எப்படி தன்னிடம் அந்த உண்மையை மறைக்க முடிந்தது? தானும் எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்? என்று தோன்றியது.
“சாப்பிடு மீராம்மா. சாப்பிட்டு யோசிச்சால் கிளியரா முடிவு கிடைக்கும்.”
சுந்தரன் மீராவின் முகத்தில் இருக்கும் குழப்பத்தை பார்த்து அவளை சாப்பிடும்படி உந்தினார்.
மீராவும் அமைதியாக பெரியவர்களைக் கவனித்தபடி உண்டு முடித்தாள்.
“சாப்பாடு ரொம்ப பிரமாதம்மா. தேங்க்ஸ். மனசே ரொம்ப லேசான மாதிரி இருக்கு.”
உண்டு முடித்தது மீண்டும் நீள் இருக்கையில் அமர்ந்தனர்.
“இப்ப சொல்லு மீராம்மா. உனக்கு என்ன பிரச்சனை?” சுந்தரன் நேரடியாக விஷயத்தைக் கேட்டார்.
மீராவும் கூற ஆரம்பித்தாள். சில சமயம் நம் பிரச்சினைகளைத் தெரியாதவர்களுக்கு சொல்வது சுலபமாக இருக்கும்.
மீரா பெரிய குடும்பத்துப் பெண். செல்வ செழிப்பில் வளர்ந்தாலும் அமைதியான குணம் உடையவள். தாய் இறந்து விட தந்தை மட்டுமே அவளுக்கு எல்லாம். அவள் தந்தை இரும்பு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வைத்திருந்தார். அத்தோடு அவருக்கு பள்ளி, கல்லூரி இரண்டும் இருந்தது.
பள்ளி ,கல்லூரியை நிர்வகிக்க தேவையான அளவு அவள் படித்து முடித்திருக்க, திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தார் அவளது தந்தை.
திருமணத்தன்று மண்டபத்திற்கு செல்லும் முன் மாப்பிள்ளை வேறு பெண்ணுடன் ஓடி விட்டதாகத் தகவல் வந்தது. மீராவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது.
இந்த சம்பவத்தால் அவளுக்கும், அவள் தந்தைக்கும் மிகுந்த அவமானமாக போய் விட்டது.
“காசு இருந்தால் மட்டும் வேற ஒருத்தி காதலனை கல்யாணம் பண்ண முடியுமா?” என சிலர் காதுபடவே பேசினர்.
அவளுக்கு மாப்பிள்ளையாக நிச்சயம் செய்யப்பட்டவன் கணவன் போல அனைத்தையும் உரிமையாகப் பேசிவிட்டு இறுதியில் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டிருந்தான். அதுவே மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே வேறொருத்தியைப் பிடித்திருந்தால் சிறு ஒதுக்கத்தையாவது காட்டி இருக்க வேண்டும் அல்லவா?
ஏற்கனவே அமைதியானவள், ஆட்களின் பேச்சுக்கு பயந்து இன்னும் அமைதியாக, இறுக்கமாக மாறிவிட்டாள். தன்னை சுற்றி ஒரு வேலியை உருவாக்கிக் கொண்டாள்.
அவள் திருமணம் நின்று போனது தொழிற்சாலை, பள்ளி மற்றும் கல்லூரியில் அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது.
அமைதி என்றால் தைரியமற்றவள் அல்ல. அவள் மீது தவறு இல்லாத போது எதற்கு அஞ்ச வேண்டும் என அடுத்த நாளில் இருந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள்.
அவ்வப்போது அவள் மீது விழும் பரிதாப பார்வைகளும் அவளுக்கு தெரியும்.
இரண்டு வருடங்கள் வேகமாக ஓட
மீரா திருமணத்துக்கு மட்டும் சம்மதிக்கவே இல்லை.
அவளுடைய தந்தை ராகவனும் எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்பு வந்து அவளிடம் திருமணம் செய்தாக வேண்டும் என கெஞ்சினார். ஒரு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகவும், அவனை திருமணம் செய்தால் நன்றாக வாழலாம் என்றும் கூறினார். மீரா மறுக்க அவர் மயங்கி விழுந்து மருத்துவமனை என அலைந்து பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். திருமணம் அருகில் உள்ள மலைக்கோவிலில் எளிமையாக நடந்தது.
மாப்பிள்ளை பற்றி எல்லாம் அவள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. எப்படியும் இதுதான் வாழ்க்கை. பல நேரம் உணர்வுகளைக் கொன்றுதானே பெண்களின் வாழ்க்கை செல்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கு என நினைத்துக் கொண்டாள்.
ஒருமுறை பட்ட அவமானம் அவளுக்கு திருமணத்தில் இருக்கும் நம்பிக்கையைத் தகர்த்து எறிந்திருந்தது. அதனால் அடுத்த திருமணத்திற்கு பொம்மை போல் தயார் ஆனாள்.
தேவதை போல் அழகுக்கலை நிபுணர்களின் கை வண்ணத்தால் ஜொலித்தவள் இறைவனின் சன்னிதானம் முன்பு அமர வைக்கப்பட்டாள். அப்போது மெல்ல அவள் விரலை தீண்டியது அவன் கைவிரல்கள். அதன் வெம்மையில் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
“நான் தான் மீரா. எனக்கு தெரியும் , எப்படியும் நான்தான் மாப்பிள்ளைனு உனக்கு தெரியாது.”
வசீகரிக்கும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
ஆனந்தக்கிருஷ்ணன். வசீகரமான அழகு, கல கலப்பான பேச்சு, அதற்கு குறைவில்லாமல் அறிவு என அனைத்தும் நிறைந்தவன். அவர்களுடைய தொழிற்சாலையில் பார்த்த ஞாபகம்.
தொழிற்சாலையில் பணிபுரிபவர்களைப் பற்றி அவள் பெரிதாக கண்டு கொண்டதே கிடையாது. இவனைப் பார்த்த நினைவு இருக்கிறது.
“எனிவே ஹாப்பி மேரீட் லைஃப் டூ அஸ்.” என புன்னகைத்தானே பார்க்கலாம், அந்த நொடி இன்னும் அவளுக்கு நினைவிருக்கிறது. அந்த திருமணத்தில் அவன் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.
மாறாக அவள் மனதில் அப்படி எதுவும் கொப்பளிக்கவில்லை. அவளை சுற்றி பார்க்கும் போது அங்கு இருக்கும் ஒவ்வொருவர் முகத்திலும் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சி தெரிந்தது. திரும்பி எதிரே இருந்த இறைவனைப் பார்த்தாள்.
‘இந்த வாழ்க்கையை அப்படியே நான் ஓடுற நதி போல ஏத்துக்கணும்.’ என வேண்டிக் கொண்டாள்.
அவளுக்கு மாறான குணம் உடையவன் ஆனந்தக்கிருஷ்ணன். கலகலப்புடன் பேசிக் கொண்டே இருப்பான். அவன் இருந்தால் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சிரிப்பார்கள். மாறாக மீராவின் வாயிலிருந்து ஒரு சில வார்த்தைகளே உதிரும்.
திருமண நாளில் அவளை மொத்தமாக அன்பில் வாரி சுருட்டி கொண்டான்.
தந்தையை விட்டு அருகில் உள்ள வேறு வீட்டில் குடியேறி கொண்டனர் தம்பதிகள். மீரா சமையலில் சொதப்புவாள். வீட்டிலும் வேலைக்கார பெண் மாதிரி இருந்தார். அவரே மீராவின் வீட்டிலும் சமைத்து பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டார். மாலை பல நேரங்களில் கிருஷ்ணனே சமைப்பான்.
அவளை எந்த குறையும் இன்றி தாங்கினான். முதலில் அவன் மீது விருப்பமில்லை. போகப் போக அவன் நல்ல குணம் மிகவும் பிடித்தது. இருவர் வாழ்க்கையும் தெளிவான நீரோடை போல் செல்ல ஆரம்பித்தது.
இருவருக்கும் பெரிதான பூசல்கள் எதுவும் இல்லை. பட்டாம்பூச்சி படபடப்பு போல் அல்லாமல் நிதானமான அன்பு அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியூர் பயணம் சென்றிருந்தான் ஆனந்தகிருஷ்ணன். அப்போதுதான் அவன் இல்லாத தனிமை மீராவுக்கு உரைத்தது.
அன்று அலுவல் ரீதியாக ஒரு ஆனந்த கிருஷ்ணனின் ஆதார் ஆவணம் தேவைப்பட்டது. காலையில் ஆறுமணி அளவில் முக்கிய ஆவணங்கள் எங்கு இருக்கும் என தெரியும் என்பதால் அதை அலமாரியில் தேடி எடுத்தவள் உற்று நோக்கினாள். அதை பார்த்து அதிர்ச்சியில் மொத்தமாக அவள் கையில் இருந்த கோப்புகள் தவறிவிழுந்தன.
அதில் அவனுடைய கல்லூரி சான்றிதழ் கண்களில் பட்டது. அவள் படித்த கல்லூரியிலே பொறியியல் படித்திருந்தான் ஆனந்தக்கிருஷ்ணன். அதோடு அவளை விட இரண்டு வருடங்கள் இளையவன். இதை மீரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு தந்தை திருமணத்திற்கு பார்க்கும் போது பொருத்தமுடைய ஜாதகங்கள் வந்தன. அவற்றில் சில வயதில் இளையவர்கள் ஜாதகம். மீரா வயதைக் காரணம் காட்டி மறுத்து விட்டாள். இப்போது வயதில் இளையவனுடன் வாழ்ந்து வருகிறாள்.
‘எனக்கு திருமணம் நடத்தி வைக்க இப்படி தந்தை இறங்கிவிட்டாரா? அத்தோடு ஆனந்தக்கிருஷ்ணன் அவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் மேலாளர். பணத்திலோ வசதியிலோ எதிலும் அவர்களுக்கு இணையில்லை. சாதாரண குடும்பம் அவன்.‘
சட்டென்று தந்தையின் மீது சந்தேகம் வலுத்தது
எப்போதும் அவர்கள் உறவில் ஆனந்தக்கிருஷ்ணன்தான் அதிகம் விட்டுக் கொடுத்தான். மீரா எங்கும் விட்டுக் கொடுத்ததாக அவளுக்கு நினைவில்லை.
தந்தைக்கு உடனே அழைத்தாள்.
“அப்பா கிருஷ்ணா என்னை விட ரெண்டு வருஷம்? ஏம்பா என்கிட்ட சொல்லல? நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு நீங்க ஏதாவது கேம் பிளே பண்ணி இந்த கல்யாணத்தை நடத்துனீங்களா? எப்பவுமே கிருஷ்ணா என் கிட்ட ரொம்ப அன்பா இருப்பான். அதெல்லாம் கூட எனக்கு இப்ப பொய்யோனு தோணுது. கிருஷ்ணா பின்னாடி ஃபேக்டரில இருக்கிற பொண்ணுங்க சுத்தறத நானே பார்த்திருக்கேன். அவனுக்கு தன்னை விட மூத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனு என்ன அவசியம்? எப்படிப்பா.. என்னை விட.. இதுவும் நம்ம பணம் கொடுத்து வாங்குன மாதிரித்தானே தெரியும். கிருஷ்ணாவும் எதுவும் சொல்லல. அவனால எப்படி நோ சொல்ல முடியும்? அவனுக்கு வேலை கொடுக்கிற முதலாளி கேட்கும் போது எப்படி மறுக்க முடியும்? ஏற்கனவே முன்னாடி பார்த்த ஆளு நம்மள விட வசதி கொஞ்சம் கம்மி. ஆனாலும் நீங்கள் குணத்தை பார்த்து சூஸ் பண்ணீங்க. அதுக்கு எத்தனை ரூமர்ஸ்? இப்ப இந்த விஷயம் தெரிஞ்சால் என்ன என்ன பேச்சு வரும்? கிருஷ்ணாவைப் பத்தி மத்தவங்க என்ன பேசுவாங்க?”
“மீரா நான் சொல்றத கேளுமா.”
“நான் எதையும் கேட்க விரும்பல. யாரையும் பார்க்க விரும்பல.”
அலைபேசியை துண்டித்துவிட்டவள் கோபத்தில் காரை எடுத்துக்கொண்டு ஓட்டியவள் இறுதியாகக் காரை நிறுத்தியது கோவில். கோவிலுக்கு வந்தவள் ரமணி அம்மாவின் வீட்டில் இருக்கிறாள்.
“கிருஷ் மேல் எனக்கு பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது. இந்த நாவல், படத்தில் வர மாதிரியெல்லாம் எனக்கு காதல் ஆரம்பத்தில் இல்லை. ஆனால் அவன் என்னை விட வயசு கம்மி, அதோட அந்தஸ்திலும் கம்மி. அவன் மட்டும் கட்டாயத்தினால் என் கூட வாழ்ந்து இருந்தால்.. அப்படிங்கற நினைப்பே என்னால தாங்க முடியல. நானும் அவனை ரொம்ப லவ் பண்றேன்னு நினைக்கிறேன்.”
கூறி முடித்தவளை தம்பதிகள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் கதவு படபடவென தட்டப்பட்டது.
ரமணி கதவைத் திறக்க உள்ளே நுழைந்தான் ஆனந்தக்கிருஷ்ணன். உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் எழுந்தாள் மீரா. அவள் எழுவதற்குள் அவளை பாய்ந்து அணைத்திருந்தான் கிருஷ்ணன்.
“மீரா உன்கிட்ட சொல்லாமல் மறைச்சது தப்புதான். ஆனால் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டதே நான்தான். காலேஜ் படிக்கும் போதே உன்மேல ஒரு க்ரஷ். அத பெருசாக எடுத்துக்கிட்டது இல்லை. ஆனால் இங்க ஒர்க் பண்றப்போ நீ தான் ஓனர் பொண்ணு தெரிஞ்சது. நீ எப்பவுமே எட்டாக் கனிதான்னு புரிஞ்சது. உன் கல்யாணம் நின்னு போனப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்பதான் என் காதலை உணர்ந்தேன். உன்னை விட்டு கொடுத்திடக் கூடாதுன்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஆனால் நம்ம ரெண்டு பேரும் ஸ்டேட்டஸ்ல, வயசுல எதிலுமே சமம் கிடையாது. ரெண்டு வருஷம் ஆகியும் நீ மேரேஜ் பண்ணிக்கவே இல்ல. ஒருநாள் ராகவன் சார் என்கிட்ட ரொம்ப புலம்புனாரு. அவரும் நானும் குளோஸ். அப்பதான் தைரியமா பொண்ணு கேட்டேன்.
மீராவை என்கிட்ட கொடுத்துடுங்க. நான் பாத்துக்குறேன். பணத்துக்காகனு கூட நீங்க நினைக்கலாம். அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. மீராவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க. இல்லனா பரவால்ல. நான் வேலையை விட்டு போயிடுறேன். எங்கிருந்து எனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சுன்னு தெரியல. உனக்கு என் மேல இன்டர்ஸ்ட் இல்லைனு எனக்கு தெரியும். கடமைக்காக, அப்பாவுக்காக என்கூட வாழறன்னும் தெரியும். இருக்கட்டும் நான் உன்ன லவ் பண்றேன் இல்ல. அதுவே போதும். வீட்டுக்கு போலாம் மீரா.”
ஆனந்தக்கிருஷ்ணனின் விழிகளில் இருந்து நீர்வழிந்தது. மீராவின் கண்களிலும் அது பிரதிபலித்தது.
காலையில் ஊரிலிருந்து திரும்ப வந்திருந்த கிருஷ்ணனுக்கு அவனது மாமா அழைத்து விஷயத்தை சொல்ல, கார் ஜிபிஎஸ் மூலம் அவள் இருக்கும் இடத்தை ட்ராக் செய்தவன், பிறகு புகைப்படத்தைக் காட்டி விசாரித்து இவர்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.
மீராவும் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என அமைதியாக பெரியவர்களிடம் விடைபெற்று கிளம்பினாள்.
கிருஷ்ணன் பைக்கில் வந்திருக்க, மீரா தன் காரில் வீட்டுக்கு வந்தவள் நீள்இருக்கையில் அமர்ந்தாள்.
பின்னாலேயே வந்த கிருஷ்ணன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“ ஏதாவது பேசு மீரா. பிளீஸ்.”
மீரா உடனே எழுந்து நிற்க கிருஷ்ணாவும் எழுந்தான். எழுந்தவள் தாவி அணைத்து முத்தமிட்டாள்.
கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சி, ஆனந்தம் ஒருங்கே ஏற்பட்டது.
தன்னை அவன் எந்த கட்டாயமும் இன்றி மணந்திருக்கிறான் என்ற நிம்மதி பெண்ணுக்கு.
அவளை நீள்இருக்கையில் சாய்த்து தன் காதலை இதழ் வழியே கூற ஆரம்பித்தவன், இடையில்,
“லவ் யூ மீரா.” என்றவுடன்
“லவ் யூ கிருஷ். நீ சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் கொஞ்ச நாளிலேயே உன்னை ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. எங்க அதெல்லாம் கனவாகப் போயிடும்னு ரொம்ப பயந்தேன்.”
“சாரி மீரா. உங்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். ஆனா நீ சொன்னால் எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியல. ராகவன் சார் பேசும்போது அந்த செகண்ட் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணிச்சு. கேட்டுட்டேன்.”
“உன்னை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. இதை எல்லாம் நீ வேண்டா வெறுப்பாக செஞ்சிருந்தால்.. நினைக்கும் போதே ரொம்ப வலிக்குது. உண்மை எல்லாம் நல்ல வேளை பேபி பொறக்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சிடுச்சு. கல்யாணம் நின்னதுக்கு அப்புறம் சில பேர் என்ன ராசி இல்லாதவனு கூட சொன்னாங்க. அதனால கூட அப்பா உன்னை இப்படி எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாருனு நினைச்சேன்.”
“பேபியா?” ஆனந்த கிருஷ்ணனுக்கு அப்போதுதான் புரிந்தது.
ஆனந்தத்தில் அவளை மடியில் வைத்து முத்தமிட்டு தீர்த்து விட்டான்.
காதல் இல்லாமல் திருமணம் செய்து கொண்டிருந்தவள் அன்று காதலை முழுமையாக அடைந்திருந்தாள்.
ரமணி பாட்டி, சுந்தரம் தாத்தாவை பற்றியும் பிறகு பேசினர்.
அவர்கள் கதையை கேட்ட ஆனந்த கிருஷ்ணன், “காதலுக்கு வயது வித்தியாசம் இல்ல மீரா” என அவள் கையைத் தன்னுடன் கோர்த்துக் கொள்ள,
மீரா அவனை முத்தமிட்டு தோளில் காதலுடன் சாய்ந்தாள்.
இளையவன், இனியவன், இனி அவன் எல்லாமுமே என்ற உண்மையில் அவள் மனம் அமைதி கொண்டிருக்க, தன் மனைவியை இன்னும் இறுக்கிக் கொண்டான் ஆனந்தக்கிருஷ்ணன்.