ஒரு பெரிய நிறுவனத்தின் சிஈஓவாக இருப்பவன், இப்படித் நேரடியாக ஊழியர்களின் மேஜைக்கே இறங்கி வந்து, கோடிங் வரை உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மதுசூதனனுக்கு வேலையில் அப்படி எந்தப் பாகுபாடும் கிடையாது; இறங்கி அடிப்பதில் அவன் என்றுமே தயங்கியதில்லை.
அந்தச் சமயத்தில், அவனது போன் லேசாக அதிர்ந்தது. டிஸ்பிளேவில் மின்னிய பெயரைப் பார்த்த மதுசூதனன், “எக்ஸ்கியூஸ் மீ…” என்று மிக நாகரிகமாகக் சொல்லிவிட்டு தன் சேரிலிருந்து எழுந்தவன், மற்ற ஊழியர்களுக்கு இடையூறு இல்லாதவாறு சற்றுத் தள்ளி நகர்ந்து சென்று, அழைப்பை ஏற்றவன், “எஸ் சார்!” என்றான் மரியாதையான குரலில்.
மறுமுனையில் அவனது பழைய மேலதிகாரியும், கம்பெனியின் முதன்மை இயக்குனருமான அதிகாரி பேசினார். “என்னாச்சு மது? சென்னை ஆபீஸ்ல நிலைமை எப்படி இருக்கு?” என்று நல விசாரிப்போடு தொடங்கினார்.
அதற்கு மதுசூதனனின் உதடுகளில் ஒரு லேசான புன்னகை அரும்பியது. “குண்டு போட்டுருக்கேன் சார்! மொத்த டீமும் இப்போ அலர்ட் ஆகி வேலை பார்க்குறாங்க. வேலை ரொம்ப தீவிரமா நடந்துட்டு இருக்கு. நாம கிளையன்ட்கிட்ட வாக்கு கொடுத்தபடி, சரியான நேரத்துக்குப் புராஜெக்ட்டை கண்டிப்பா ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம் சார்!” என்று மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் கூறினான்.
அவனது அந்தத் தன்னம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்ட அதிகாரி பெருமிதத்தோடு சிரித்தவர், “நீ அங்கே பொறுப்பெடுத்துக்கிட்ட பிறகு எனக்கு அந்த ஆபீஸைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை மது… யூ ஜஸ்ட் கேரி ஆன்!” என்று பாராட்டிவிட்டு, மேலும் சில வேலை விஷயங்களை பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
போனை பாக்கெட்டில் வைத்தபடி திரும்பிய மதுசூதனனின் பார்வை, அங்கிருந்தவர்களின் மீது சுழற்றி சென்று வந்து ஓரிடத்தில் நிலைத்தது.
மாலை நேரம் ஆபீஸ் பணிகள் அனைத்தும் முடிந்து, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் பூங்கோதை.
வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு, ஹாலில் பேரனுக்குப் பொறுமையாக ஹோம்வொர்க் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த தாய் மீனாவின் பிம்பமே முதன்முதலில் கண்ணில் பட்டது. தன் மகனின் சுட்டித்தனத்தையும், அதைத் தாய் கையாளுவதையும் கண்ட பூங்கோதையின் மனதில் நாள் முழுதும் இருந்த அலுப்பு மெல்ல விலகியது.
தன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, முகம் கழுவிப் புத்துணர்ச்சியோடு வெளியே வந்தாள். சமையலறையில் மகளுக்காகவே பிளாஸ்க்கில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த சூடான காபியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்தாள்.
சமையலறையிலிருந்து வெளியே வந்த மகளைப் பார்த்தவர் “ராத்திரிக்கு பூரிக்கு மாவு பிசைஞ்சு வச்சுட்டேன், தொட்டுக்கக் காரசாரமா குருமாவும் பண்ணியாச்சு,” என்றார் தாய்மையின் பரிவோடு.
“ஹ்ம்ம்… சரிம்மா,” என்று காபியை ஒரு சிப் உறிஞ்சியபடி தலையசைத்தவள், நோட்டுப் புத்தகத்தில் தீவிரமாகப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்த மகனைப் பார்த்தாள்.
“ஆதிக்குட்டி… இன்னும் எவ்வளவுடா இருக்கு எழுத வேண்டியது?” என்று அன்போடு வினவினாள்.
ஆதிரன் தன் குட்டி விரல்களால் நோட்டின் பக்கத்தைக் காட்டி, “இன்னும் ஒன்னே ஒன்னுதான் மம்மா… ஐ மீன், ஒன் பேஜ் தான் அம்மா!” என்று தடுமாறிச் சொல்ல, பூங்கோதை மெல்லச் சிரித்தாள்.
ஹோம்வொர்க் எழுதி முடித்ததும், பூங்கோதை ஆதிரனைக் கையோடு அழைத்துக்கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருந்த பார்க்கிற்கு வந்தாள்.
மாலை நேரத்துச் சில்லென்ற காற்றில், அங்கே பல சிறுவர்கள் ஊஞ்சலிலும் சறுக்கு மரத்திலும் கலகலப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
“அம்மா… நான் விளையாடப் போறேன்!” என்று ஆதிரன் துள்ளிக் குதிக்க, “பார்த்து விளையாடணும் ஆதி… கீழே விழுந்துடாதே,” என்று செல்லமாக எச்சரித்து அனுப்பிவைத்தாள்.
மகன் சிறுவர்களோடு சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அவன் மீது ஒரு கண்ணை வைத்தபடியே, பூங்கோதை அந்தப் பார்க்கைச் சுற்றியிருந்த நடைபாதையில் மெல்ல வாக்கிங் போகத் தொடங்கினாள். மாலை நேர அமைதியும், பிள்ளைகளின் கலகலப்பான சிரிப்புச் சத்தமும் அவளது மனதிற்குள் ஒரு இதத்தை அளித்தன.
மாலை ஆபீஸ் பணிகள் அனைத்தும் முடிந்ததும், தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தான் மதுசூதனன்.
உடனே வேகமாகக் குளித்து, ஒரு கேஷுவல் டீ-ஷர்ட்டும் டிராக் பேண்டும் அணிந்துகொண்டு, நேராகப் பத்தாவது மாடியில் இருக்கும் நண்பன் கவினின் வீட்டை நோக்கி விரைந்தான். அவனது உள்ளத்தில் ஒரு தவிப்பும் கோபமும் மாறி மாறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தன.
காலிங் பெல் சத்தம் கேட்டு கவின் வந்து கதவைத் திறந்த அடுத்த நொடி, மது எதுவுமே பேசாமல் அவனது தோள்களிலும் நெஞ்சிலும் பட்டுப் பட்டென அடிக்கத் தொடங்கினான். தன் நண்பனின் குணமும் அவனது இந்தத் திடீர் ஆவேசத்தின் பின்னணியும் நன்கு தெரிந்திருந்ததால், கவின் எதிர்த்துப் பேசாமல் அமைதியாகவே அடியை வாங்கிக்கொண்டான்.
“டேய்! எதுக்குடா ஒரு வார்த்தை கூட என்கிட்ட இந்த விஷயத்தைப் பத்திச் சொல்லல? அவ்வளவு தூரமா போயிட்டோம் நாம?” என்று மது ஆதங்கத்தோடு சத்தமிட்டான்.
கவின் அவனை ஆழமாகப் பார்த்து, “எனக்கு அது அவ்வளவு முக்கியமான விஷயமா தோணலடா, அதான் நான் சொல்லல! இப்போ அதுக்கு என்ன பண்ணப் போற, அதைச் சொல்லு?” என்று கொஞ்சம் கோபமும் கண்டிப்பும் கலந்த குரலில் கேட்டான்.
மது ஒரு கணம் அமைதியாகி, பெருமூச்சு விட்டபடி, “சரி ஓகே… இத இப்படியே விட்றலாம்,” என்றான் தளர்ந்த குரலில்.
“அதுக்காகத்தானேடா நானும் அதைப்பத்தி உன்கிட்ட சொல்லாம இருந்தேன்!” என்று கவின் அவனைப் போலியாக முறைத்துப் பார்த்தான்.
நேரமும் கடந்து செல்ல, கவின் தன் மகளையும் அழைத்துக்கொண்டு மதுவுடன் கீழே இறங்கி வந்தான். மூவரும் அங்கிருந்து குடியிருப்பின் பார்க் நோக்கிச் சென்றனர். அங்கே ஏஞ்சல் குழந்தைகளோடு விளையாடச் சென்றுவிட, மதுவும் கவினும் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தனர்.
இரவு ஏழு மணி…. சுற்றிலும் இருந்த மின்விளக்குகளின் வெளிச்சம் பார்க்கின் பசுமையான மரங்கள் மீது விழுந்து ஒரு அழகான சூழலை உருவாக்கியிருந்தது. இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருந்தாலும், மதுவின் மனம் மட்டும் அமைதியடையவே இல்லை.
“இல்லடா கவின்… நீ இதப்பத்தி கண்டிப்பா என்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கணும்,” என்று மது மீண்டும் தன் மனதில் இருந்த பாரத்தை வெளிப்படுத்தினான்.
கவின் மீண்டும் அவனிடம், “டேய், நான் தான் சொல்றேன்ல… எனக்கு அது அந்தளவுக்கு முக்கியமானதாத் தெரியல. இப்போ அதனால என்ன ஆகிடுச்சுன்னு கேட்குறேன்?” என்று சற்றே கடுப்புடன் கேட்க, “சரி விடு… இதைப் பத்தி இனிமே பேச வேண்டாம், இதோட விட்றலாம்,” என்று மது தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ம்ம்… அதைத்தான் நானும் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்,” என்று கவின் லேசாக முறைத்தபடி கூறினான்.
நேரம் நகர, இருவரும் ஆபிஸ் விஷயங்களோடு பொதுவாக பேசி முடித்து அவரவர் பிளாட்டிற்குத் திரும்பினர்.
மது தன் பிளாட்டிற்கு வந்தபோது, ராதா அம்மா இரவு உணவைச் சுடச்சுடச் சமைத்து மேஜை மீது மூடி வைத்திருந்தார். வீட்டோடு தங்கிச் சமையல் வேலை செய்யும் வசதிக்கேற்பத்தான் கவின் அவரை ஏற்பாடு செய்திருந்தான். ராதா அம்மா தன் பணிகளை முடித்துவிட்டு, அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கினார்.
அமைதியான அந்த நள்ளிரவில், விளக்குகள் அணைக்கப்பட்ட தன் ஹாலில் நின்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் மதுசூதனன். கவின் மறைத்த அந்த விஷயம் அவனது தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தன.
நாட்கள் வழமை போல வேகமாக ஓடி மறைந்தன. புதிய சிஈஓ மதுசூதனனின் தீவிரமான கண்காணிப்பிலும் வழிகாட்டலிலும், அத்தனை பேரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்து வேலை பார்த்தனர். புராஜெக்ட் சப்மிட் பண்ண இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருந்த நிலையில், இறுதிக்கட்டச் சரிபார்ப்புகளும் அவசர அவசரமான திருத்தங்களும் அனைவரது விழிகளையும் பிதுங்க வைத்தன.
அன்று வழக்கத்தை விட வேலைப் பளு அதிகமாகவே இருந்தது. பூங்கோதை தன் குழுவோடு சேர்ந்து ஒவ்வொரு கோடிங்கையும் சரிபார்த்து முடித்துவிட்டு, வீட்டிற்குக் கிளம்பும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது.
“வர லேட் ஆகும்மா, பார்த்துக்கோங்க,” என்று காலையிலேயே தாயிடம் சொல்லிவிட்டு வந்திருந்ததால், அவளுக்கு வீட்டைப் பற்றிய பெரிய கவலை எதுவும் இருக்கவில்லை.
நண்பர்களுக்குப் “பாய்” சொல்லிவிட்டு, ஆபீஸ் வளாகத்திலிருந்து தன் ஸ்கூட்டியில் ஏறினாள் பூங்கோதை. இரவின் சில்லென்ற காற்றை முகத்தில் வாங்கியபடி, இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு தன் அடுக்குமாடி குடியிருப்பின் பேஸ்மெண்டிற்கு வந்து சேர்ந்தவள் ஸ்கூட்டியைத் தனக்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு, லிஃப்ட்டிற்காகக் காத்திருந்தாள்.
அந்த அமைதியான இரவில், லிஃப்ட்டின் கதவு திறப்பதற்காக அவள் காத்திருந்த தருணத்தில், திடீரென பின்னால் காலடிச் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்த பூங்கோதைக்குத் தூக்கி வாரிப்போட்டது! அங்கே கம்பீரமாக வந்து கொண்டிருந்தான் மதுசூதனன். இந்த நேரத்தில், இந்த இடத்தில் அவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
அவளது இதயத் துடிப்பு சட்டென்று எகிறியது. அதற்குள் லிஃப்ட் வந்து கதவு திறக்க, இருவரும் உள்ளே ஏறினர். தான் இறங்க வேண்டிய மூன்றாம் தளத்தின் பட்டனை நோக்கி பூங்கோதை தன் கையை நீட்டிய அந்த மறுநொடி…
எதிர்பாராத விதமாக, மதுவின் வலிமையான கரங்கள் மின்னல் வேகத்தில் அவளது இடையை வளைத்துப் பிடித்தன!
பூங்கோதை அதிர்ச்சியில் அலற முற்பட்ட கணத்தில், அவளது பிஞ்சு உதடுகளைத் தன் அகன்ற உள்ளங்கையால் இறுக்கமாக மூடிப் பொத்தினான் மது. அவளது குரல் அவனுக்குள்ளேயே அமுங்கிப் போனது.
அதே வேகத்தில், மற்றொரு கையால் லிஃப்ட்டின் 11-வது மாடி டெரஸ் பட்டனை அழுத்தியவன், இடைப்பட்ட எந்தத் தளத்திலும் லிஃப்ட் நிற்கக் கூடாது என்பதற்காக ‘நோ ஸ்டாப்’ பட்டனையும் அழுத்த மறக்கவில்லை.
லிஃப்ட் வேகமாகக் மேலே எழும்பத் தொடங்கியது.
மதுவின் அகன்ற, சூடான நெஞ்சோடு இறுக்கி அணைக்கப்பட்ட நிலையில் நின்ற பூங்கோதை, முற்றிலும் அதிர்ந்து போனாள்!
அவளது கண்கள் பயத்திலும் திகைப்பிலும் அகல விரிந்தன. அவனிடமிருந்து வீசிய அதே மயக்கும் பர்ஃபியூம் வாசனை, இப்போது அவளது நாசியை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
அவனது உடலின் வெம்மையும், தன்பால் அவனைக் கட்டிப் போட்டிருந்த கரங்களின் அழுத்தமும் பூங்கோதையின் நரம்புகளை முறுக்கேற்றின. தப்பிக்க முயன்று அவன் மார்பில் கை வைத்துத் தள்ளியவளுக்கு, மதுவின் வேகமான இதயத் துடிப்பு அப்பட்டமாக உறைத்தது.
தன் வாழ்நாளில் ஆடவர்களின் அருகாமையை வெறுத்து ஒதுக்கிய ஒரு பெண்ணுக்கு, இந்த இரவு வேளையில், மூடிய லிஃப்ட்டிற்குள், தன் நிறுவனத்தின் சிஈஓ-வும் அந்நியனுமான ஒருவன் தன்னை இப்படி முரட்டுத்தனமாகவும் அதே சமயம் ஒருவித பிடிவாதத்தோடு பிடித்து நிறுத்தியிருப்பதைச் சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
லிஃப்ட்டின் மேலெழும்பும் வேகத்தை விட, இருவரின் மனதிற்குள் வீசிய உணர்ச்சிப் புயலின் வேகம் பலமடங்கு அதிகமாக இருந்தது!
டெரஸை வந்து அடைந்ததும் லிஃப்ட்டின் கதவுகள் திறந்தன. பூங்கோதை அவனிடமிருந்து விடுபட முயன்றும், மது அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றியபடி சற்றும் யோசிக்காமல் தரதரவென வெளியே இழுத்துச் சென்றான்.