Stories that touch hearts

Home  /  11. பூங்கோதை (மீண்டும் இசைத்த ராகம்)  /  Chapter 5

CHAPTER 5

இசை – 5

By poongothai · November 23, 2026

0

கான்ஃபெரன்ஸ் ஹாலில் நிலவிய அமைதியை மதுசூதனனின் கம்பீரமான குரல் உடைத்தது. எந்தவிதப் பூச்சுற்றலும் இல்லாமல், அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“வெல்கம் எவரிஒன்! நான் மார்னிங் வந்ததும் கடந்த சில வருஷங்களோட புராஜெக்ட் ரிப்போர்ட்ஸைப் பார்த்தேன். அதுல எனக்கு ஒரு விஷயம் ரொம்பவே சந்தேகமா இருக்கு…” என்று நிறுத்திய மது, தன் முன்னிருந்த லேப்டாப் திரையை அனைவருக்கும் தெரியும் விதமாகப் பெரிய ப்ரொஜெக்டரில் திருப்பினான்.

“கடந்த மூன்று பெரிய புராஜெக்ட்ஸ்… க்ளையன்ட்கிட்ட சரியா ஹேண்ட் ஓவர் பண்ற கடைசி நேரத்துல மட்டுமே, அதுவும் கரெக்ட்டா அந்த க்ரிட்டிக்கலான கட்டத்துல மட்டும் எப்படி வைரஸ் அட்டாக் ஆச்சு? இது தற்செயலா நடந்த விபத்தா, இல்ல வேணும்னே பண்ணப்பட்ட சதியா?”

மதுவின் அந்தக் கூர்மையான கேள்வி கான்ஃபெரன்ஸ் ஹாலில் இருந்த அனைவரின் நெஞ்சிலும் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. மேனேஜர் கார்த்திக் உட்பட பலரின் முகங்களில் தயக்கம் படர்ந்தது.

மது தன் கைகளை மேஜை மீது ஊன்றி, சுற்றிலும் இருந்தவர்களைப் பார்வையால் அளந்தபடி, “இந்த மூணு புராஜெக்ட்டோட லீட் யார்?” என்று மிக அழுத்தமாகக் கேட்டான்.

அவன் கேட்ட அடுத்த நொடி, ஹாலில் இருந்த மூவர் நிதானமாகத் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தனர்.

பூங்கோதை, அருண் மற்றும் வித்யா!.

அவர்கள் மூவரும் எழுந்து நிற்பதைக் கண்ட மதுசூதனன், தன் கூர்மையான பார்வையை அவர்கள்மீது செலுத்தினான். ஒரு நொடி அவனது கண்கள் பூங்கோதையின் மீது நிலைத்தது. அமைதியான, ஆனால் உள்ளுக்குள் சுயமரியாதையும் உறுதியும் கொண்ட அவளது முகத்தை அவன் உற்று கவனித்தான்.

“ஓகே… கம்!” என்று சைகை செய்தவன், “அவரவர் புராஜெக்ட் பத்தி, அந்த வைரஸ் அட்டாக் முன்பு வரை எந்த லெவல் இருந்தது என்பதை எனக்குக் கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க,” என்றான்.

அங்கிருந்த யாரும் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை!

புதிய சிஈஓ அறிமுகக் கூட்டம், சாதாரணமாகச் சில வாழ்த்துரைகளுடன் முடியும் என்று நினைத்திருந்தவர்களுக்கு, அவன் எடுத்தவுடனேயே கம்பெனியின் மிக ரகசியமான, சர்ச்சைக்குரிய இந்த வைரஸ் அட்டாக் பிரச்சினையைக் கையில் எடுப்பான் என்பது அதிர்ச்சியாக இருந்தது.

அருணும் வித்யாவும் தங்கள் புராஜெக்ட்கள் குறித்த விளக்கங்களைச் சொல்லி முடிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலானது. அவர்களின் தடுமாற்றமான பதில்களை அமைதியாகக் கேட்டுக்கொண்ட மதுசூதனன், “ஓகே, நெக்ஸ்ட்!” என்று பூங்கோதையைப் பார்த்துத் தலையசைத்தான்.

பூங்கோதை சிறிதும் தயக்கமின்றித் தன்னம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் மேடைக்கு வந்தாள். தன் புராஜெக்ட் தொடர்பான பைல்களைப் ப்ரொஜெக்டரில் இணைத்து விளக்கத் தொடங்கினாள்.

“சார், எங்களுடைய புராஜெக்ட் ‘ரிமோட் ஆன்லைன் விசா கார்ட்’. வழக்கமா ஏடிஎம் எந்திரத்தில் நாம கார்டை நேரடியாகப் செருகி, பின் நம்பர் போட்டுத்தான் பணம் எடுக்க முடியும். ஆனா, நாங்க வடிவமைச்ச இந்த சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் மூலமா, வாடிக்கையாளர்கள் தங்களோட கார்டை கையில வச்சுக்கிட்டே, ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே பணப் பரிவர்த்தனைகளைக் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்த முடியும்,” என்று மிகத் தெள்ளத் தெளிவாக, அணுவணுவாக விளக்கி முடித்தாள்.

அவளது தொழில் நுட்ப ஆளுமையைக் கண்டு மனதிற்குள் வியந்த மதுசூதனன், அதிலிருந்த நுணுக்கமான இடைவெளிகளை நோக்கி ஏகப்பட்ட கேள்விகளைச் சரமாரியாகக் கேட்டான்.

ஆனால், பூங்கோதை சற்றும் பதற்றமடையாமல், ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஆதாரங்களோடு மிகத் தெளிவாகப் பதிலளித்து அவனது சந்தேகங்களை நிவர்த்தி செய்தாள்.அவளது பதில்களில் திருப்தியடைந்த மது,

“ஓகே!” என்று கூறியபடி தன் லேப்டாப்பைத் திருப்பினான்.

அடுத்த சில நிமிடங்களில், அந்த மூன்று புராஜெக்ட்களிலும் நுட்பமாகச் செய்யப்பட்டிருந்த குளறுபடிகளையும், வைரஸ் ஊடுருவிய இடங்களையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் காட்டினான்.’நமக்கே தெரியாமல் இவ்வளவு பெரிய தவறுகளும், பாதுகாப்பு மீறல்களும் நம்ம புராஜெக்ட்டில் நடந்திருக்கிறதா?’ என்று அருண், வித்யா மற்றும் பூங்கோதை மூவருக்குமே அது பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்தது.

அவர்களின் முக பாவங்களைக் கவனித்த மதுசூதனன், தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கூர்மையான பார்வையோடு அவர்களைப் பார்த்தான்.

“உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம்… ஹேக் செய்யப்படுவதற்கு முன்னாடி இருந்த இந்த மூணு புராஜெக்ட்டோட ஒரிஜினல் ‘ரஃப் காப்பி’ ஒன்னு என்கிட்ட பத்திரமா இருக்கு!” என்று மிக அமைதியான, ஆனால் அழுத்தமான குரலில் கூறினான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் அங்கிருந்த சிலர் பேரதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஆனால், அந்த அதிர்ச்சியில்…ஒருவர் மட்டும் அளவுகடந்த பயத்துடன் கடுமையாகத் திடுக்கிட்டுப் போனார்! அவர்தான் அந்தத் துரோகத்தைச் செய்தவர் என்பதை உணர்த்தும் வகையில், அவரது முகத்தில் அப்பட்டமான நடுக்கம் தோன்றி மறைந்தது.

அந்த ஒரு நொடித் தடுமாற்றத்தையும், முகத்தில் படர்ந்த பயத்தையும் மதுசூதனனின் கழுகு கண்கள் கச்சிதமாகக் கவனிக்கத் தவறவில்லை. லேசான புன்னகையோடு அந்த நபரைத் தன் பார்வையின் எல்லையிலேயே வைத்திருந்தான்

மது!மீட்டிங் முடிந்து அனைவரும் கான்ஃபெரன்ஸ் ஹாலை விட்டு வெளியேற, அந்தப் பிரம்மாண்ட அறையில் மதுசூதனன் மட்டுமே தனியாக இருந்தான். லேப்டாப் திரையை ஆழ்ந்து நோக்கியவன், அந்த மூன்று புராஜெக்ட்களின் பைல்களையும் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு, அதில் சந்தேகத்திற்குரிய இரண்டு பேரின் பெயர்களைச் சுற்றிலும் சிவப்பு நிறத்தில் மார்க் செய்தான்.

‘தவறு இங்கேதான் நடக்கிறது!’ என்பதை வந்த முதல் நாளிலேயே கச்சிதமாகக் கண்டுபிடித்து விட்டவனின் உதட்டோரத்தில் ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தியபடி, “உங்க வழியிலேயே வந்து உங்களைச் சரியான நேரத்தில் பிடிக்கிறேன்!” என்று மனதிற்குள் சபதம் எடுத்தான்.

அதன்பின் தன் சிஈஓ அறைக்கு வந்தவன், இங்கே உட்கார்ந்து கொண்டு வெறும் அறிக்கைகளைப் படிப்பதை விட நேரில் களத்தில் இறங்குவதே சிறந்தது என முடிவெடுத்தவன் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் புராஜெக்ட் விவரங்களை ஒருமுறை பார்த்துவிட்டு, நேரடியாக ஒவ்வொரு டீமின் ஃப்ளோருக்கும் சென்று பார்வையிட்டான்.

ஒவ்வொரு மேஜையாகச் சென்று ஊழியர்கள் எந்த நிலையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மிக நுணுக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.கடைசியாக, பூங்கோதை உட்கார்ந்திருந்த அந்தத் தளத்திற்கு வந்தான்.

அவளது மேஜைக்கு அருகில் வந்து நின்ற மதுசூதனன், கம்பீரமான குரலில், “நீங்கதானே இந்த புராஜெக்ட் ஹெட்?” என்று வினவினான்.

“எஸ்… சார்!” என்று பதற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நின்று பதிலளித்தாள் பூங்கோதை.

அடுத்த நொடி, மதுசூதனன் எவ்வித ஆடம்பரமும் இன்றி அவளுக்குப் பக்கத்தில் இருந்த காலியான நாற்காலியில் இயல்பாக அமர்ந்தான். அவன் அவ்வாறு அருகில் அமர்ந்ததும், பூங்கோதைக்குத் தூக்கி வாரிப்போட்டது; மனதிற்குள் நூறு திருகுகள் ஒன்றாகக் சுற்றிக்கொண்டது போல் ஒரு தவிப்பு உண்டானது.

அவனிடமிருந்து வீசிய அந்த மென்மையான பர்ஃபியூம் வாசனை அவளது நாசியைத் தீண்டிய போது, தன் வாழ்நாளில் முதன்முறையாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தாள் பூங்கோதை.

அவளது கரங்கள் கீபோர்டின் மீது லேசாக நடுங்கின.அதே நிலைமைதான் மதுசூதனனுக்கும்!அவள் அருகே அமர்ந்த அந்த நொடியில், அவளது கூந்தலிலிருந்து வீசிய மல்லிகையின் மணமும், அவளது முகத்திலிருந்த அந்தத் தீவிரமான அமைதியும் மதுவின் மனதிற்குள் விவரிக்க முடியாத உணர்வைத் தூண்டியது. தொழிலில் கழுகு போலக் கூர்மையாகச் செயல்படும் அவனது மனதும், அவளது அருகாமையில் நிலைதடுமாறித் தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது.

பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பூங்கோதை தன் வீல் சேரைச் சற்றே தள்ளி நகர்த்தியபோது, அந்தச் சிறிய சத்தத்தில் மதுசூதனன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது கூர்மையான, கனிவு கலந்த அந்த ஒற்றைப் பார்வையை பூங்கோதையால் எதிர்கொள்ளவே முடியவில்லை; சட்டென்று தன் பார்வையைக் கீழ்நோக்கித் திருப்பிக் கொண்டாள்.

பூங்கோதையின் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டவன் போல, மதுசூதனன் தன் பார்வையை மீண்டும் கணினித் திரையின் பக்கம் திருப்பித் திரையில் இருந்த சிக்கலான கோடிங் அமைப்பைச் சில நொடிகள் ஆழ்ந்து கவனித்தான்.அடுத்த நொடி, அவனது கரங்களில் கீபோர்ட் அநாயாசமாக வலம் வரத் தொடங்கியது. அவனது விரல்கள் கீபோர்டின் மீது மின்னல் வேகத்தில் நடனமாட, புதிய கோடிங்குகள் வரிசையாகத் திரையில் தோன்றின.

எந்தவொரு தயக்கமுமின்றி, அத்தனை வேகமாகவும் துல்லியமாகவும் அவன் டைப் செய்வதை அருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.முழு கோடிங்கையும் கணப்பொழுதில் முடித்தவன், உடனே அதற்கான எர்ரர் செக் பண்ணி ரன் செய்தான். திரையில் ‘ஜீரோ எர்ரர்’ என்று பச்சை நிறத்தில் செய்தி தோன்றியது.

தன் பணியை அற்புதமாக முடித்துவிட்டு, பூங்கோதையின் பக்கத்தில் இருந்த வீல் சேரை மெல்ல நகர்த்தி, அடுத்திருந்த மூவரின் கணினித் திரையைய் பார்க்க வீல் சேரை அவர்கள் பக்கம் தள்ளிச் சென்றான்.

மது விலகிச் சென்ற அந்த நொடியில்தான், பூங்கோதைக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சுக்காற்று சீராகி, இயல்பான மூச்சே வந்தது.

“இந்தப் புராஜெக்ட்டை எப்போ க்ளையன்ட்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணனும்?” என்று அடுத்தடுத்து இருந்த மூவரிடமும் விசாரித்தபடியே, அவர்களின் கணினியில் இருந்த சிக்கலான கோடிங் பிழைகளையும் தன் கைவண்ணத்தால் அநாயாசமாகச் சரிசெய்து கொண்டிருந்தான் மதுசூதனன்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!