Stories that touch hearts

Home  /  11. பூங்கோதை (மீண்டும் இசைத்த ராகம்)  /  Chapter 3

CHAPTER 3

இசை – 3

By poongothai · November 19, 2026

0

சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் கெட்டிக்காரனான மது, கல்லூரியின் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே தேர்வாகி, முன்னணி நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான். தான் வாங்கிய முதல் சம்பளத்திலிருந்தே பாதியை, தன்னை எடுத்துச் செதுக்கிய அந்த ஆசிரமத்தின் வளர்ச்சிக்குத் தவறாமல் கொடுத்து வந்தான். 

மது…நீ உதவி பண்ணுவது சந்தோஷம் தான் ஆனால், “உனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் மது” என்று பாதர் ஜேம்ஸ் பிடிவாதம் பிடித்ததால்தான், அந்தக் கட்டிடம் கட்டுமான வேலையில் இருந்தபோதே குறைந்த விலைக்கு வாங்கி அந்த 2BHK வீட்டை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பார்த்துப் பார்த்து உருவாக்கினான்.

இன்னும் திருமணமாகாத தனிமரம்… சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அவனுக்கு இரத்த பந்தங்கள் ஏதுமில்லை. மனதிற்கு நெருங்கிய நண்பன் ஒருவனும், உயிராக நேசிக்கும் பாதர் ஜேம்ஸும் மட்டுமே அவனது உலகம். நிமிர்ந்த நன்னடை, கம்பீரமான தோள்கள், அடர்ந்த கூந்தல், ஆழமான பார்வைகள் எனத் தனித்துவமான ஆளுமை படைத்தவன் மதுசூதனன்.

அத்தகைய தனிமை விரும்பியான மதுசூதனனின் பாதை, இப்போது இதுவரை அறியாத சென்னை மாநகரத்தை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது.

காரின் டேஷ்போர்டில் இணைக்கப்பட்டிருந்த ப்ளூடூத் திரையில் மின்னி மறைந்த பெயரைப் பார்த்ததும் மதுசூதனன் உதடோரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. ஸ்டீயரிங்கிலிருந்த பட்டனை அழுத்தி அழைப்பை ஏற்றவன், “ம்ம்ம்… கிளம்பிட்டேன் டா” என்றான்.

மறுமுனையில் அவனது உயிர் நண்பன் கவின் உற்சாகமாக, “வெல்கம் டு தமிழ்நாடு!” என்று குரல் கொடுத்தான்.

“என்னடா… காலைலயே நக்கலா?” என்று மது காரின் வேகத்தைச் சீராகப் குறைத்தபடி கேட்க, கவின் சிரிப்பை அடக்க முடியாமல் தொடர்ந்தான்.

“பின்ன என்னடா? நானும் நாலு வருஷமா ‘சென்னைக்கு வாடா வாடா’னு கூப்பிடுறேன்… அசைஞ்சியா நீ? இப்போ பாத்தியா என் சாபம் எப்படிப் பலிச்சிருச்சுனு, ராசா!” என்று கவின் கெத்தாகக் கேட்க, மதுவுக்குள் மெல்லிய சிரிப்பு பொங்கியது.

அப்போது, போனின் பின்னணியிலிருந்து ஒரு பிஞ்சு மழலைக் குரல் செல்லமாகக் குறுக்கிட்டது. “ஏய் மது… எங்கே இருக்க டா?”

அந்தக் குரலைக் கேட்டதுமே மதுவின் முகத்திலிருந்த கம்பீரம் உருகி, அத்தனை கனிவும் வழியத் தொடங்கியது. அது கவினின் செல்ல மகள்!

“உன்னைத்தான் டி கடத்த வந்துட்டு இருக்கேன்!” என்று மது போனில் கள்ளச் சிரிப்புடன் செல்ல மிரட்டல் விடுக்க, அந்தச் சிறுமி உடனே தன் தந்தையிடம், “ப்பா… இவன் திருந்தவே மாட்டான் பா!” என்று பெரிய மனித தோரணையில் சலித்துக் கொண்டாள்.

அந்தப் பிஞ்சு மொழியைக் கேட்டு காரில் மதுவும், அங்கிருந்து கவினும் ஒரே நேரத்தில் சத்தமாகச் சிரித்தனர்.

பெற்றோர் யாரென்று தெரியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த மதுசூதனனின் தனிமை நிறைந்த வாழ்க்கையில், கவினும் அவனது இந்தச் செல்ல மகளும்தான் வசந்த காலத்தைக் கொண்டுவந்த சொந்த உறவுகளாக இருக்கிறார்கள். 

தூரத்தில் இருந்தாலும் அவளுக்குத் தேவையான பொம்மைகளையும் உடைகளையும் பார்த்துப் பார்த்து வாங்கி அனுப்புவது மதுவின் வழக்கம். அந்த மழலையின் ‘ஏய் மது’ என்ற ஒற்றை வார்த்தை, அவனது நெடுந்தூரப் பயணக் களைப்பை மொத்தமாகத் துடைத்தெறிந்தது.

சமையலை முடித்த பூங்கோதை, விறுவிறுவெனத் தனது அறைக்குள் சென்று வேலைக்குச் செல்வதற்கேற்ப உடையை மாற்றிக் கொண்டு தயாரானாள்.

அப்போது, அவளது அறைக் கதவை மெல்லத் தள்ளிக்கொண்டு நான்கு வயதுச் சிறுவன் ஆதிரன் உள்ளே வந்தான். அவன்தான் அந்த வீட்டின் ஒட்டுமொத்த உயிரும், கோதை சொன்ன அதே ‘அப்பு’!

“குட் மார்னிங், மம்மா!” என்று மழலை மொழியில், அவன் கூற, பூங்கோதையின் முகம் அத்தனை தாய்மைப் பூரிப்பில் மலர்ந்தது.

“குட் மார்னிங் அப்பு… ஸ்கூலுக்கு ரெடியா?” என்று அவனது பிஞ்சு கன்னத்தைக் கிள்ளிக் கேட்க, அந்தச் சிறுவன் “ஹ்ம்ம்…” என்று தலையை ஆட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

“ஓகே, அம்மாவும் ரெடி!” என்று மகனை அள்ளி அணைத்துக் கொஞ்சியவள், அவனை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். அங்கே தாய் மீனா காலை டிபனை தட்டுகளில் பரிமாறித் தயாராக வைத்திருந்தார்.

மகனின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி, அவனுக்கு ஒவ்வோர் உணவாக ஊட்டிவிட்ட பூங்கோதை, தானும் வேகமாகச் சாப்பிட்டு முடித்தவள், “வரேன் ம்மா, உடம்பைப் பார்த்துக்கோங்க… மாத்திரை மறக்கக் கூடாது!” என்று மீனாவிடம் அன்புக் கட்டளையிட்டு மகனின் கை பிடித்து லிஃப்ட்டில் ஏறி கீழே வந்தவளோ பார்க்கிங் பகுதிக்குச் சென்று, தன் ஸ்கூட்டியை ஆன் பண்ணி விட்டு

ஆதிரனை முன் பக்கத்தில் பத்திரமாக நிற்கவைத்து, வண்டியைக் கிளப்பினாள்.

படூரின் காலை நேரப் பரபரப்பு சாலையில் அலைமோதிக்கொண்டிருந்தது. அந்தப் பிரம்மாண்ட அபார்ட்மெண்ட்டின் அருகிலேயே பெரிய மெடிக்கல் காலேஜ் அமைந்திருந்ததால், வெள்ளை கோட் அணிந்த மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் எனப் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக இருந்தது. ஆம்புலன்ஸ்களின் ஓசையும், வாகனங்களின் ஹார்ன் சத்தமும் அந்தச் சாலையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

அந்தச் சலசலப்புகளுக்கு இடையே, தன் மகனைப் பாதுகாப்பாக அணைத்தபடி, அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியபடி, மகன் படிக்கும் ஸ்கூலை நோக்கிப் பூங்கோதையின் ஸ்கூட்டி சீரான வேகத்தில் சென்றது.

பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு, ஆதிரனின் பள்ளிக்கு வந்து சேர, ஸ்கூட்டியைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு, மகனின் பையை ஒரு கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு கையால் அவனது பிஞ்சுக் கரங்களைப் பிடித்துக் கொண்டு கேட் தாண்டி உள்ளே சென்றாள்.

வகுப்பறையின் நுழைவுவாயிலில் நின்றதும், குனிந்து மகனது தோள்களில் பையை மாட்டிவிட்டு அவனது சட்டையைச் சரிசெய்து, கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவள், “பத்திரமா இரு அப்பு… பாய்!” என்றாள். 

“ஓகே மம்மா!” என்று கன்னத்தில் குழி விழ சிரித்தபடி வகுப்பறைக்குள் துள்ளிக்குதித்து ஓடினான் ஆதிரன். மகன் உள்ளே செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த பூங்கோதையின் உதடுகளில் ஒரு தாய்க்கே உரிய நிம்மதி அரும்பியது. 

இடது கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்க்க, மணி காலை 8.30 என்று காட்டியது. பின்னர் வேகமாக வந்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணியவள் சிறுசேரி சிப்காட் ஐடி பூங்காவை நோக்கிச் சென்றாள். கடந்த நான்கு வருடங்களாக அந்தப் பிரம்மாண்ட ஐடி நிறுவனத்தில்தான் பூங்கோதை பணியாற்றுகிறாள்.

நான்கு வயது மகனோடு தனித்துப் போராடும் பெண்… வெளிப்புற உலகிற்கு அவள் ஒரு திறமையான, அமைதியான ஐடி ஊழியர்; அவளது வாழ்வின் ஒரே ஒளி மகன் ஆதிரன் மட்டும் தான்.

அவளது கடந்தகாலத் திருமண வாழ்க்கை என்பது வாசலில் அவசரமாகப் போட்டக் கோலத்தைப் போலத்தான் இருந்தது. அழகாக முழுமை பெறுவதற்குள்ளேயே, எதிர்பாராத புயலால் கலைந்து அழிந்துபோன ஒரு விதியின் கோலம் அது. அந்த முறிந்த வாழ்க்கையின் வடுக்கள் இன்னும் அவளது மன ஆழத்தில் ஆறாத தழும்புகளாகவே நிலைத்திருந்தன.

“இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நீ இப்படித் தனியாகவே வாழ்க்கையைக் கடப்பாய்?” என்று தாய் மீனாவும், உறவினர்களும் நண்பர்கள் என்று கடந்த மூன்று வருடங்களாக அவளுக்கு மறுமணம் செய்து வைக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். 

ஆனால், பூங்கோதையின் மனம் இன்னொரு பந்தத்தை ஏற்க முற்றிலும் மறுத்துவிட்டது. காயம்பட்ட இதயத்திற்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கையைக் கொடுப்பது அவளுக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

தனது கடந்தகால நினைவுகளின் பாரத்தையும், எதிர்காலம் குறித்த தாயின் கவலைகளையும் நெஞ்சில் சுமந்தபடியே, சிப்காட் நுழைவாயிலைக் கடந்து தன் அலுவலகப் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள் பூங்கோதை.

“சரி சரி… மேடம்கிட்ட நான் நேர்லயே வந்து டீல் பண்ணிக்கிறேன். அதுவரை எப்படியாவது சமாளி என்று மது சிரிக்க, ஆறு வருஷமா பெங்களூர் கிளையன்ட்ஸ் கிட்ட வாங்கின பேரு போதாதுன்னு, இப்போ சென்னை பிராஞ்சையும் தலைகீழா மாற்றப்போறியா?” என்றான் கவின் கெத்தாக.

“லொகேஷன் மாறுனா என்னடா, வேலை வேலதானே?” என்று சொன்ன மது, “மேடம்கிட்ட சொல்லு… அவளுக்குப் பிடிச்ச சாக்லேட்ஸோட வரேன்னு!” என்று சிரித்தபடியே அழைப்பைத் துண்டித்தான்.

காரின் வேகத்தை அதிகப்படுத்திய மதுவின் பார்வை நெடுஞ்சாலையை வெறித்தது. தான் பொறுப்பேற்கப் போகும் இந்தச் சிறுசேரி சிப்காட் கம்பெனி அவனுக்குக் கொடுக்கப்போகும் சவால்கள் என்னவென்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

மாலை நேரத்துச் சென்னை போக்குவரத்து நெரிசலைக் கடந்து, கவின் குடியிருந்த அதே அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தான் மதுசூதனன். கவினின் முயற்சியால், அவனது வீட்டிற்கு அருகிலேயே மதுவுக்கும் ஒரு அழகான வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதிய வீட்டிற்குச் சென்று குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு புத்துணர்ச்சியோடு கிளம்பியவன், கவின் குடும்பத்தினருக்காகத் தான் ஆசையோடு வாங்கி வந்த ஏராளமான பரிசுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தான். பட்டனை அழுத்திப் பத்தாவது மாடிக்குச் சென்று, கவினின் வீட்டின் அழைப்புமணியை அடித்தான்.

கதவைத் திறந்த கவின், “வாடா மச்சி!” என்று கூச்சலிட்டபடி அவனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த கவினின் மனைவி ரோசி, வாசலில் நின்றிருந்த மதுவைக் கண்டதும் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, பொய்யான கோபத்தோடு அவனை லேசாக முறைத்தாள்.

“என்னடா… இப்படி முறைக்கிற? அண்ணனைப் பார்த்தவுடனே ஒரு புன்னகை கூட இல்லையா?” என்று மது செல்லமாகக் கேட்க, ரோசி போலியாகச் சலித்துக்கொண்டாள்.

“பின்ன என்னவாம்? நாலு வருஷமா ஊர் சுத்திட்டு இப்போதான் நண்பனையும் இந்தத் தங்கையையும் ஞாபகம் வந்ததோ? போன் பண்ணா மட்டும் அரை மணி நேரம் பேசிட்டு ஓடிடுவீங்க… ஆனா நேர்ல வரத்தான் இத்தனை வருஷம் ஆச்சா?” என்று ரோசி உரிமை கலந்த கோபத்தோடு கேட்டாள்.

கவின் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, “அட இருடி… அவனுக்குன்னு கொஞ்சம் பிரைவேசி வேணாமா? இப்போவே அவனை இப்படியா கேள்வி கேட்டு மிரட்டுவ? அப்புறம் அவனுக்கு எப்படி உனக்கு ஏத்த மாதிரி ஒரு அண்ணி அமைவாள்? அவன் கல்யாணம் பண்ணி ஒரு பொண்டாட்டியோட வர வேண்டாமா?” என்று மதுவுக்குச் சாதகமாகப் பேசி நிலைமையைச் சமாதானம் செய்ய முயன்றான்.

அப்போது பின்னாலிருந்து எம்பி எம்பி வந்த கவினின் செல்ல மகள், தன் பிஞ்சு விரலால் மதுவைச் சுட்டிக்காட்டி, “நம்பாதம்மா! அப்பா சொல்றது எல்லாமே பொய்… பொய்!” என்று பெரிய மனிதத் தோரணையில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு கத்தினாள்.

“ஏய் குட்டி சாத்தானே! உனக்குச் சாக்லேட்டும் பொம்மையும் வாங்கிட்டு வந்தா என்னையே பொய்யா சொல்ற?” என்று மது சிரித்துக்கொண்டே பொம்மைகள் நிறைந்த பையைக் காட்ட, அந்தச் சிறுமி உடனே தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, “ஐ… மது செல்லம்!” என்று துள்ளிக் குதித்து அவனிடம் ஓடிவந்தாள்.

அந்தச் சிறிய வீடே இவர்களின் சிரிப்பாலும் கலகலப்பாலும் நிறைந்து வழிந்தது. 

மதுசூதனன் வருகைக்காகவே ரோசி பார்த்துப் பார்த்துப் பலவிதமான சுவையான உணவுகளைச் சமைத்திருந்தாள். நீண்ட மாதங்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பழைய கதைகளையும் நகைச்சுவைகளையும் பேசி சிரித்தபடியே இரவு உணவை மகிழ்வோடு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்ததும் கவினிடமும் ரோசியிடமும் விடைபெற்றுக்கொண்டு, தூங்கிவிட்ட அந்தச் சிறுமியின் தலையைக் கோதி “பாய்” சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குப் புறப்பட்டான் மது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!