Stories that touch hearts

Home  /  11. பூங்கோதை (மீண்டும் இசைத்த ராகம்)  /  Chapter 2

CHAPTER 2

இசை – 2

By poongothai · November 18, 2026

0

இசை 2

பெங்களூரின் பரபரப்பான எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், நவீனக் கண்ணாடியால் சூழப்பட்டு பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்றிருந்தது அந்தப் புகழ்பெற்ற பன்னாட்டு ஐடி நிறுவனம். அதிகாலை வெயிலின் பொன்னிறக் கதிர்கள் அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் மீது பட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

அந்த நிறுவனத்தின் முதன்மை நுழைவாயிலைக் கடந்து, ஒரு நவீனக் கருப்பு நிற சொகுசுக் கார் அதிவேகமாக வந்து சீரான ஓசையுடன் நின்றது. காரின் கதவு திறக்க, அதிலிருந்து கம்பீரமான தோற்றத்துடன் இறங்கினான் மதுசூதனன்.

கோட் சூட் அணிந்து, கையில் லேப்டாப் பையுடன் இறங்கிய அவனது தோற்றத்திலும், தீர்க்கமான நடைபோட்ட பாதங்களிலும் ஒருவிதக் கம்பீரமும் ஆளுமையும் வெளிப்பட்டன.

அவனைக் கண்டதும் வரவேற்பறையிலிருந்த ஊழியர்கள் மரியாதை கலந்த புன்னகையோடு தலைவணங்க, அதை மெல்லிய தலையசைப்பால் ஏற்றுக் கொண்டவன், விறுவிறுவென நடந்து சென்று லிஃப்ட்டில் ஏறினான்.

அதிவேகமாக இயங்கும் அந்தப் பிரத்யேக லிஃப்ட், சில நொடிகளில் ஏழாவது தளத்தைச் சென்றடைந்தது. அங்கிருந்த அமைதியான நடைபாதையைக் கடந்து, அந்த நிறுவனத்தின் சி.ஈ.ஓ அறைக்கு வெளியே நின்று கதவை மெல்லத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

“குட் மார்னிங், சார்!” என்று கம்பீரமான குரலில் சொன்னான் மது.

கணினித் திரையிலிருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து பார்த்த அந்த நிறுவனத்தின் தலைவர், “எஸ் மது… குட் மார்னிங்!” என்று புன்னகையோடு பதிலளித்தார்.

தன் இருக்கையிலிருந்து எழுந்து அவனருகே வந்தவர், “இன்னைக்குத்தானே நீ இங்கிருந்து ரிலீவ் ஆகுற?” என்று கேட்டார்.

“எஸ் சார்…” என்றான் மது, தன் குரலில் ஒருவிதத் தீர்மானத்துடன்.

அவனைச் சில நொடிகள் ஆழமாகப் பார்த்த அந்தச் சி.ஈ.ஓ, ஒரு பெருமூச்சோடு அவனது தோளைத் தட்டினார். “உண்மையைச் சொல்லணும்னா மது, உன்னை மாதிரி ஒரு தலைசிறந்த அதிகாரியை இங்கிருந்து அனுப்பவே எனக்கு மனசு வரல. ஆனா, அங்க இருக்குற சூழலுக்கு உன்னுடைய தேவை கண்டிப்பா அவசியம்”

“அங்க எல்லாமே சரியாகிச் சூழல் சீரானதும், நீ எந்த யோசனையும் இல்லாம இங்க திரும்ப வந்துடனும் மது. உனக்கான இந்த உயர் பதவி எப்போதுமே இங்க உனக்காகக் காத்திருக்கும்!” என்று நம்பிக்கையூட்டும் குரலில் கூறினார்.

“கண்டிப்பாகச் சார்…” என்று சி.ஈ.ஓ-வின் வார்த்தைகளுக்கு நன்றியோடு தலையசைத்து விடைபெற்றான் மது. பின்னர் அங்கிருந்து வெளியேறித் தன் குழுவினரைச் சந்திக்கச் சென்றான். இத்தனை வருடங்களாகத் தோளோடு தோள் நின்று உழைத்த நண்பர்களிடம் சிரித்த முகத்தோடு “பாய்” சொல்லி விடைபெற்றாலும், அவனது மனதிற்குள் ஒரு மெல்லிய பாரம் படரத்தான் செய்தது.

அலுவலகத்தை விட்டுப் புறப்பட்ட அவனது கார், நேராக அவன் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சென்று நின்றது. வீட்டிற்குள் நுழைந்தவன், தன் பாக்கெட்டிலிருந்த மொபைலிலிருந்து “பாதர்” என்று சேமிக்கப்பட்டிருந்த எண்ணிற்கு கால் பண்ணினான்.

நீண்ட நேரம் அடித்துக் கொண்டிருந்த போனை, கடைசி ரிங்கில் எதிர்முனையில் எடுத்தார் பாதர் ஜேம்ஸ். “ம்ம்…சொல்லு மது!” என்றது அவரது பரிவும் வாஞ்சையும் நிறைந்த குரல்.

“கிளம்பறேன் பாதர்…” என்றான் மது, குரலில் தேங்கியிருந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடி.

“காட் பிளஸ் யூ மை சைல்ட்… பத்திரமா போயிட்டு சேர்ந்ததும் கால் பண்ணு” என்று ஆசீர்வதித்துக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் பாதர் ஜேம்ஸ்.

போனைக் கீழே வைத்த மது, மெல்ல நிமிர்ந்து தன் அறையைச் சுற்றிப் பார்த்தான்.

கடந்த ஆறு வருடங்களாக அவனது அனைத்துத் தனிமைகளுக்கும், கனவுகளுக்கும் அடைக்கலமாக இருந்த அந்த 2BHK வீடு… இப்போது முற்றிலும் அமைதியாகக் கிடந்தது.

சுவர்களில் அவன் வரைந்து தொங்கவிடப்பட்டிருந்த வண்ண ஓவியங்கள், அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

ஒருபக்கம் வரவேற்பறைச் சுவரில் பிரேம் செய்யப்பட்டுத் தொங்கிய புகைப்படங்களில், நண்பர்களுடன் அவன் கை கோர்த்துச் சிரித்த தருணங்கள் காலத்தால் அழியாமல் உறைந்திருந்தன.

தன் சொந்த உழைப்பில், ஆசையோடு பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்கள் அனைத்தும் அவனது ஆறு ஆண்டு காலப் போராட்டத்தையும், வெற்றியையும் மௌனமாகப் பறைசாற்றின.

அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவனது வியர்வையின் வாசமும், இளமைக்கால நினைவுகளும் நிறைந்திருந்தன. தான் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அந்த உலகத்தை விட்டுவிட்டுப் புறப்படுவது, அவனது நெஞ்சை லேசாகப் பிழிவது போலதான் இருந்தது.

ஆனால் என்ன செய்ய, ஒரு நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்துத் தன் மனதைக் திடப்படுத்தியவன், அங்கிருந்த தன் டிராவல் பேகை எடுத்துக்கொண்டு, இத்தனை ஆண்டு நினைவுகளை மனதுள் சுமந்தபடி அந்த வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.

பில்லியனில் புரளும் அந்த பன்னாட்டு நிறுவனம் அவனுக்காக விமானத்தில் டிக்கெட் புக் பண்ணி தர முன்வந்தபோதும், மது அதை மென்மையாக மறுத்துவிட்டான்.
நீண்ட தூர பயணங்களுக்கு அவனுக்குத் தன் காரிலேயே பயணம் செய்வதுதான் ரொம்ப பிடிக்கும்.

இத்தனை வருடங்களாகத் தனக்காக அன்போடு சமைத்துப் போட்டுத் தாய்மை உணர்வோடு பார்த்துக்கொண்ட அந்த நடுத்தர வயதுத் தம்பதியை வர வைத்திருக்க, அவர்களும் கிரவுண்ட் ப்ளோரில் என்னவா இருக்கும் என்னும் யோசனையுடன் காத்திருந்தனர்.

கீழே வந்தவன் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு, “நான் திரும்பி வர வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டிலேயே தங்கியிருங்க…” என்று சாவியைக் கொடுத்தான்.

இதுவரை வாடகை வீட்டில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அந்த ஏழைத் தம்பதிக்கு, மதுவின் இந்த வார்த்தையைக்கேட்டு கண் கலங்கியபடி கைகள் நடுங்க வீட்டு சாவியை வாங்கிக் கொண்டனர்.

பார்த்து போங்க மது தம்பி. இங்கு நாலு வீட்டு வேலை இல்லை என்றால் நாங்களும் உன் கூட வந்துடுவோம் என்கவும், இது நீங்கள் சொல்லி தான் தெரியணுமா என்றபடி டிக்கியில் லக்கேஜை வைத்து பூட்டி விட்டு டிரைவர் சீட்டில் ஏறி காரை ஸ்டார்ட் பண்ணினான்.

பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த அந்த கருப்பு நிற ஆடம்பர கார், வீசிய பலத்த காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு பறந்தது.

‘சென்னை’… தன் வாழ்நாளில் இந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டதோடு சரி, இதுவரை அவன் அங்குச் சென்றதே இல்லை. தமிழ்நாட்டின் அந்தப் பெருநகரத்திற்கு இதுதான் அவனது முதல் பயணம்.

காரின் அதிநவீன ஒலிபெருக்கியில் குமார் சனுவின் கம்பீரமான குரலில் தொண்ணூறுகளின் இனிமையான ஹிந்திப் பாடல் ஒன்று மெல்லிசையாக ஒலித்துக்கொண்டிருந்தது.

அதோடு இணைந்து தனக்குத்தானே பாடியபடி, காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த அவனது வலிமையான கரங்கள், அதிவேகத்திலும் எந்தவிதப் பதற்றமும் இன்றி மிக அசால்ட்டாக வாகனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன.

மதுசூதனன் — தோற்றத்திலும் நடையிலும் ஒரு தனித்துவமான கம்பீரமும், கம்பீரத்திற்கு இணையான நேர்த்தியும் நிறைந்த வாலிபன். தோள்களில் உழைப்பாலும் உறுதியாலும் வந்த வலிமை, கூர்மையான பார்வையில் நிறைந்திருக்கும் தெளிவு என அவனது ஆளுமை கண்டவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும்.

படித்தது ‘பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்’. கணினித் திரையின் சிக்கலான குறியீடுகளை மிகவும் லாவகமாகக் கையாண்டு, பெங்களூரின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஒரு வெற்றிகரமான சாஃப்ட்வேர் இன்ஜினியராக தன் வாழ்க்கைப் பாதையைத் தன் உழைப்பால் செதுக்கிக் கொண்டவன்.

அவனது பெயருக்கு முன்னே பொறிக்கப்பட்டிருந்த ‘எஸ்’ என்ற ஒற்றை இனிஷியல், சீவகன் – ராதா என்ற அவனது பெற்றோரைக் குறிக்கும் அடையாளமாக மட்டுமே முகவரியில் இருந்தது.

இரத்த பந்தத்தின் பெயர்களைத் தாங்கி நின்ற அவனது பிறப்பு, ஏனோ அந்தப் பெற்றோருக்குத் தேவைற்ற ஒன்றாகவே போயிருந்தது.

பெற்றவர்களின் அலட்சியத்தால் ஆதரவற்று நின்ற அவனை, விதி தன் கொடூரக் கரங்களால் தூக்கி எறிந்தபோதிலும், வாழ்க்கை அவனுக்கு ஒரு கதவை அடைத்து மறு கதவைத் திறந்து வைத்தது.

பெற்ற தாயும் தந்தையும் கைவிட்ட இடத்தில், அவனுக்கு தாயாகவும் தந்தையாகவும் கரம்பிடித்தது பெங்களூரின் அமைதியான சூழலில் அமைந்திருந்த ‘பாதர் ஜேம்ஸின் ஆசிரமம்’.

பாதர் ஜேம்ஸ், மதுசூதனனுக்கு வெறும் ஆசிரமத்தின் காப்பாளர் மட்டுமல்ல; வழி நெடுகிலும் ஒளியேற்றிய இறைவனின் தூதனாகவும், பாசத்தைப் பொழியும் தாயாகவும் இருந்தார்.

பல வருடங்களுக்கு முன்பு..பெங்களூரின் அந்த அதிகாலைப் பொழுதில், ஆசிரமத்தின் அமைதியை மேலும் அழகாக்கும் விதமாக மெல்லிய பனிமூட்டம் சூழ்ந்திருந்தது.

பாதர் ஜேம்ஸ் வழக்கம்போலத் தன் தினசரி இறை வழிபாட்டையும் ஜெபத்தையும் முடித்துவிட்டு, தன் அறையின் மர ஜன்னலை மெல்லத் திறந்தார். ஜெபத்தின் நிறைவில் மனதிற்குள் எப்போதும் இருக்கும் அந்த அமைதியோடு, ஜன்னல் வழியே ஆசிரமத்தின் பெரிய இரும்புக் கேட்டை நோக்கியவரது பார்வை தற்செயலாகப் பதிந்தது.

அப்போது, அந்த பெரிய இரும்பு கேட்டின் கம்பிகளுக்கு இடையே, தரைக்குச் சற்றே மேலே துணியால் சுற்றப்பட்ட ஏதோ ஒரு பொருள் கிடப்பது போலத் தெரிந்தது.

முதலில் அது வெறும் துணி மூட்டை என்றுதான் நினைத்தார். ஆனால், அடுத்த வினாடியே அந்தத் துணி மடிப்புக்குள்ளிருந்து ஒரு சிறிய பிஞ்சுக்கையின் லேசான அசைவும், மெல்லிய முக்கல் சத்தமும் கேட்டது.

பாதர் ஜேம்ஸின் நெஞ்சு ஒரு கணம் திடுக்கென்றது. பூட்டிய கதவை வேகமாகத் திறந்து கொண்டு, பதற்றத்துடன் ஓடிப்போய் அந்த இரும்பு கேட்டைக் திறந்தார்.

அங்கே… பனித்துளிகள் படர்ந்திருந்த கூழாங்கற்களின் மீது, ஒரு மெல்லிய துணியில் சுற்றப்பட்டு, ஒரு கைக்குழந்தை!

“ஆண்டவரே!” என்ற முணுமுணுப்போடு, பாதர் ஜேம்ஸ் பதறியபடியே குனிந்து, அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தன் இரு கரங்களாலும் அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். தாய்மைக்கே உரிய பேரன்பும், ஒரு பிஞ்சு உயிரைக் காக்க வேண்டுமே என்ற தவிப்பும் அவரது நெஞ்சை ஒரே நேரத்தில் ஆட்கொண்டன. குழந்தைக்குக் குளிர் படாதவாறு தன் மேலங்கியால் அதை மெதுவாக மூடினார்.

அப்போது, குழந்தையைச் சுற்றியிருந்த அந்தத் துணியின் மடிப்பிற்குள் வெள்ளை நிறக் கடித உறை ஒன்று செருகப்பட்டிருந்தது அவரது கண்ணில் பட்டது.

குழந்தையை ஒரு கையால் அணைத்தபடி, மறு கையால் அந்த உறைக்குள் இருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்தார். அதனுள் சில ரூபாய் தாள்களும், நடுங்கும் கரங்களால் அவசரமாக எழுதப்பட்ட ஒரு ஒற்றைத் தாளும் இருந்தன.

அதில் எழுதப்பட்டிருந்த வரிகள்:

“ஐயா… எங்களை மன்னித்துவிடுங்கள். இந்த அநியாயத்தைச் செய்யும் பாவிகள் நாங்கள் தான். இந்த உயிரை வளர்க்கும் தகுதி எங்களுக்கு இல்லை. இதோ இவனுக்கான பிறப்புச் சான்றிதழ் போன்ற சில ஆதாரங்களும், எங்களால் முடிந்த சிறிய தொகையும் இதில் இருக்கிறது.

குழந்தையின் பெற்றோர்: சீவகன் – ராதா

இவனை அனாதையாக்கி விடாதீர்கள்… உங்கள் ஆசிரமத்தின் நிழலில் இவனுக்கு ஒரு வாழ்க்கை பிச்சை போடுங்கள்.”

அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த பாதர் ஜேம்ஸின் கண்கள் லேசாக கலங்கின. பெற்ற தாயும் தந்தையும் கைகழுவிவிட்டுச் சென்ற அந்தப் பிஞ்சு உயிரைப் பார்த்தார். பெற்றவர்களின் பெயர்கள் இருந்தும், பிறக்கும்போதே அனாதையாக்கப்பட்ட அந்தப் பாலகனின் முகம் நிலவைப்போலப் பொலிவோடு இருந்தது.

“சீவகன்… ராதா…” என்று அந்தப் பெயர்களை மனதிற்குள் உச்சரித்தவர், “பெற்றவர்கள் உன்னைக் கைவிட்டிருக்கலாம்… ஆனால் என் ஏசப்பா உன்னைக் கைவிடவில்லை. இனி நீ அனாதை அல்ல…” என்று தழுதழுத்த குரலில் கூறியபடி, பிறந்து சில நாட்களே ஆன அந்தக் குழந்தையை தன் சொந்த மகனாக நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு ஆசிரமத்திற்குள் சென்றார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பாதரும் அங்கு இருக்கும் மற்றவர்களும் யோசிக்கும் போது அதே ஆசிரமத்தில் வளர்ந்து வரும் ஐந்து வயது சிறுமி ஒருத்தியோ மதுசூதனன் என்றாள்.

மது என்றவாறு குழந்தையை நெஞ்சோடு அணைத்தவர் மற்ற குழந்தைகள் போலவே அவனையும் வளர்த்து, நற்பண்புகளையும் தன்னம்பிக்கையையும் அவனது இரத்தத்தில் விதைத்தார்.

சீவகனும் ராதாவும் கொடுக்கத் தவறிய தாய்-தந்தை பாசத்தை, தன் ஒவ்வொரு அசைவிலும் அரவணைப்பிலும் பாதர் ஜேம்ஸ் இந்த வினாடி வரையிலும் குறைவின்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார்.

அவனது படிப்பிலும், இயல்பான திறமையிலும் தனி அக்கறை காட்டி, உயர்கல்வி வரை ஊக்கமளித்து, சமூகம் வியக்கும் வண்ணம் ஒரு சிறந்த சாஃப்ட்வேர் இன்ஜினியராக அவனை ஆளாக்கிய பெருமை முழுவதுமே பாதர் ஜேம்ஸையும் அந்த ஆசிரமத்தையும்தான் சேரும்.

இன்று ஒரு கம்பீரமான வாலிபனாக, சொந்தக் காலில் தனித்தன்மையுடன் நிமிர்ந்து நிற்கும் மதுசூதனனின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும், பாதர் ஜேம்ஸின் பேரன்பும், தியாகமும், அந்த ஆசிரமத்தின் அமைதியான சுவர்களுமே நிசப்தமான சாட்சிகளாக நின்று கொண்டிருக்கிறது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!