Stories that touch hearts

Home  /  11. பூங்கோதை (மீண்டும் இசைத்த ராகம்)  /  Chapter 1

CHAPTER 1

இசை – 1

By poongothai · November 16, 2026

0

படூரின் பரபரப்பான அன்றாட வாழ்க்கைக்கு முன்னோடியாக, அந்த அதிகாலைப் பொழுது மிகவும் அமைதியாகவும், மெல்லிய பனிமூட்டத்தோடும் மலர்ந்துகொண்டிருந்தது.

வானம் இன்னும் முற்றிலும் நீல நிறத்திற்கு மாறாத அந்த விடியல் வேளையில், அந்தப் பகுதிக்கே கம்பீர அடையாளமாக நின்றுகொண்டிருந்தது அந்தப் பெரிய பத்தடுக்கு மாடிகள் குடியிருப்பு. தூங்கி வழியும் மின்விளக்குகளும், ஆங்காங்கே வீசும் குளிர்ந்த காற்றும் அந்த விடியலின் அழகைக் கூட்டின.

அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் பி-பிளாக்கில் மூன்றாவது தளத்திற்குச் சென்று, இடது புறமாகச் செல்லும் நீண்ட நடைபாதையில் நடந்தால், வரிசையாக அமைந்த வீடுகளில் மூன்றாவது வீட்டின் மரக்கதவைத் தாண்டி, வெளியில் மெல்லிய சந்தன வாசனை கமழ்ந்துகொண்டிருந்தது.

வீட்டிற்குள், அதிகாலைக்கே உரிய ஒரு தெய்வீக அமைதி நிறைந்திருந்தது. பூஜா அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த நெய்விளக்கின் சுடர், மென்மையாக ஆடிக்கொண்டிருக்க, சுவர்களில் அதனுடைய நிழல் மெல்ல அசைந்தது.

வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து, சூலமங்கலம் சகோதரிகளின் கம்பீரமான அதே சமயம் அமுதகான குரலில், “சுட்ட திருநீரெடுத்து…” என்ற கந்த சஷ்டி கவசப் பாடல் மிக மிதமான சப்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இசை அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும், காற்றின் ஒவ்வொரு அசைவிலும் ஒருவிதப் நேர்மறை ஆற்றலைப் பாய்ச்சுவது போல இருந்தது.

பூங்கோதை அங்கு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவள் கண்கள் இரண்டும் மெல்ல மூடியிருந்தன. கைகள் கூப்பி, உள்ளங்கைகளுக்குள் ஒரு மெல்லிய பிரார்த்தனையோடு, பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ப அவளது உதடுகள் ஏதோ மந்திரத்தைப் போல முணுமுணுத்துக்கொண்டிருந்தன. நெற்றியில் துளிர்த்திருந்த மெல்லிய வேர்வைத்துளிகளையும் பொருட்படுத்தாமல், அவளது மனம் அந்தப் பாடலின் மெட்டிலும், கந்தனின் நாமத்திலும் முழுமையாகக் கரைந்திருந்தது.

அந்தப் பிரம்மாண்டமான குடியிருப்பில் எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ விதமான காலை அவசரங்கள்… ஆனால், அந்த மூன்றாவது தளத்தின் மூன்றாவது வீட்டிற்குள் மட்டும், பூங்கோதையின் இந்த அமைதியான விடியல் ஒரு தனி உலகமாக இயங்கிக்கொண்டிருந்தது.

சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கந்த சஷ்டி கவசத்தின் இறுதி வரிகள் ஒலித்து முடியவும், சமையலறையிலிருந்து பிரஷர் குக்கரின் கூர்மையான விசில் சத்தம் நீளமாகக் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. அந்தத் துல்லியமான நேரக் கணிப்பு பூங்கோதைக்கு ஒன்றும் புதிதல்ல.

கடந்த சில வருடங்களாகவே அவளது விடியல்கள் இந்தக் கடிகார அசைவைப் போலத்தான் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.

கண்களை மெதுவாகத் திறந்த பூங்கோதை, தன் இரு கைகளையும் கூப்பி நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். காதில் ஒலித்துக் கொண்டிருந்த வழிபாட்டுப் பாடலின் அமைதி மனதிற்குள் இன்னும் நீடித்திருக்க, தட்டிலிருந்த திருநீற்றை விரல் நுனியில் எடுத்து நேர்த்தியாக நெற்றியில் பூசிக்கொள்ள, பூஜையறையின் தீப ஒளியில் அவளது முகத்தில் ஒருவித அமைதியும், அதேசமயம் விவரிக்க முடியாத ஏதோவொரு ஏகக் கலக்கமும் ஒன்றாகப் பிரதிபலித்தது.

பின்னர் தன் சேலையின் முந்தானையை இடுப்பில் செருகியபடி சமையலறையை நோக்கி சென்றவள் அடுப்பில் நீராவியை வெளிப்படுத்தியபடி அமைதியாகத் தொடங்கிய குக்கரின் பட்டனைத் திருப்பி அணைத்தாள்.

சமையலறைச் சன்னல் வழியே பத்தடுக்கு மாடிக் குடியிருப்பின் பின்னே வெளிப்படத் தொடங்கிய அதிகாலைப் பரிதியின் பொன்நிறக் கதிர்கள் உள்ளே ஊடுருவின. அந்த மெல்லிய வெளிச்சத்தில் குக்கரில் இருந்து கிளம்பிய நீராவி, காற்றில் சுழன்று கரைவதையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சன்னலை லேசாகத் திறந்து வைத்ததால், வெளியில் வீசிய குளிர்ந்த காற்று அவளது முகத்தை வருடிக் கடந்தது. அந்த மிதமான காற்றில் அவளது முன்கூந்தல் இழைகள் கலைந்து ஆட, அவளது பார்வை தானாகவே அந்தப் பிரம்மாண்டமான குடியிருப்பின் மொட்டை மாடியையும், அதைத் தாண்டித் தெரியும் திறந்தவெளிப் பள்ளத்தாக்கையும் நோக்கி நிலைத்தது. காற்று வீசும் போதெல்லாம் அவளுக்குள் எழும் அந்தத் தீராத ஏக்கம், வழக்கம்போல இன்றைக்கும் அவளது நெஞ்சைக் கூசியது.

டீ வைப்பதற்க்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு, காலை டிபனுக்கானதைச் செய்யத் தொடங்கிய பூங்கோதையின் அன்றாட வேலைகளின் வேகம் குறையவில்லை என்றாலும், மனதின் ஒரு ஓரத்தில் எதையோ இழந்துவிட்ட உணர்வு மட்டும் தீவிரமடைந்தது.

டீயின் நறுமணம் சமையலறை முழுதும் பரவத் தொடங்கிய அந்த நிமிடத்தில், வீட்டிற்குள்ளிருந்த மற்றொரு அறையின் கதவு மெல்லத் திறக்கப்படும் சத்தம் கேட்டது.

“கோதை…” என்று ஹாலிருந்து தாய் மீனா மெல்லிய குரலில் கூப்பிட, “ம்மா.. கிச்சன்லதான் இருக்கேன்!” என்று சமையலறையிலிருந்தபடியே உரக்கப் பதிலளித்தாள் பூங்கோதை.

அவள் சொல்லி முடித்த அதே வினாடி, கூடத்துச் சுவரிலிருந்த கடிகாரத்தில் அலாரம் சத்தமிட்டுச் சரியாகக் காலை ஆறு மணியை அறிவித்தது.

ஆவி பறக்கும் சுடச்சுட டீயை இரண்டு கப்பில் ஊற்றியவள் ஒரு கையில் தாய்க்கானதையும், மறுகையில் தனக்கானதையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து தன் சேலையைச் சரிசெய்தபடி அமர்ந்திருந்த தாய் மீனாவின் கைகளில் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, எதிரிலிருந்த மரச் சோபாவில் சென்று சாய்ந்து உட்கார்ந்தவள் டீயை ஒரு மடக்கு பருகியபடி, தாயின் சோர்வான முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்த கோதையின் கண்களில் அக்கறையும் மெல்லிய கண்டிப்பும் ஒருசேர மின்னின.

“இப்ப எப்படி இருக்கு ம்மா?” என்று குரலில் கனிவைக் குழைத்துக் கேட்டவள், தாய் பதிலளிப்பதற்கு முன்பே தன் புருவங்களை உயர்த்திச் செல்லமாக முறைத்தாள்.

“சுகர் மாத்திரையை ஒழுங்கா சாப்பிடுறதுல உனக்கு அப்படி என்னதான் ரோதனையோ? நேரத்துக்கு மாத்திரை போடணும்னு டாக்டர் அத்தனை தடவை சொல்லியும் கேட்காம, உடம்பைப் பார்த்துக்காம இப்படி அலட்சியமா இருந்தா என்ன அர்த்தம்? அவன் டாக்டரா இல்லே நீ டாக்டரா?, உனக்கு உடம்பு முடியாம போனா அப்புறம் எனக்கு யார் இருக்கா?” என்று தாயின் மேல் உள்ள பாசம் முழுவதையும் கோபமாக வெளிப்படுத்தினாள்.

மீனா தன் மகளின் முறைப்பைக் கண்டு உதட்டோரம் மெல்லிய புன்னகையைச் சிந்தினாள். அந்தப் புன்னகைக்கு பின்னால், தன் உடல்நலனைக் காட்டிலும் மகளுக்குத் தன் மேல் இருக்கும் அளவு கடந்த அக்கறையைக் கண்டு பூரித்துப் போன ஒரு தாயின் நெகிழ்ச்சியே இருந்தது.

 “ம்ம்..எனக்கு ஒண்ணுமில்லடி கோதை… சும்மா தலை லேசா சுத்துச்சு, அதுக்குப்போய் இவ்ளோ தூரம் கத்துவியா?” என்று அமைதியாகச் சொன்னாள்.

“சும்மா இல்ல ம்மா… நீ மாத்திரையைத் தவற விடுற ஒவ்வொரு தடவையும் எனக்கு நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்கு” என்று தழுதழுத்த குரலில் சொன்ன கோதை, சோபாவில் இருந்து எழுந்து வந்து தாயின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவளது தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

தன் தோளில் சாய்ந்திருந்த மகளின் கூந்தலைத் தாய்மையின் மென்மையோடு கோதிவிட்ட மீனா, ஒரு மெல்லிய சிரிப்புடன் தன் மனதிலிருக்கும் நீண்ட நாள் ஏக்கத்தை வெளியிட்டாள்.

“எனக்கு ஒரு கேடும் வராதுடி கோதை. நீ மட்டும் சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, உனக்குனு ஒரு குடும்பமாகி சந்தோஷமா வாழ்றதைப் பார்த்துட்டாப் போதும். எனக்கு எந்த வியாதியும் அப்புறம் எட்டிப் பார்க்காது” என்றாள், குரலில் பரிவும் கவலையும் ஒருசேர இழையோட.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், கோதையின் முகத்தில் இருந்த கனிவு சட்டென்று மாறியது. அவளது விழிகளில் ஒருவிதச் சலிப்பும், அதேசமயம் தாயின் இந்த மாறாத கவலையைக் குறித்த மெல்லிய ஆதங்கமும் எட்டிப்பார்க்க, வேகமாக தாயின் தோளிலிருந்து தலையை நிமிர்த்தியவள், அவளது கண்களைப் பார்த்து “ஏன்மா இந்த பேச்சை மட்டும் நீ எப்போதுமே விட மாட்டியா? காலங்காத்தால ஆரம்பிச்சிருவியே!”

“எனக்குன்னு வேற என்னமா வேணும்? எனக்குத் தான் நீயும், நம்ம அப்புவும் இருக்கீங்களே… அதுவே எனக்கு ஆயுசுக்கும் போதும்!” என்று தாயின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக சொன்னாள்.

அதோடு மேற்கொண்டு அந்த உரையாடலை வளர்க்க விரும்பாதவள் போல, சோபாவிலிருந்து சட்டென்று எழுந்தவள் மேசையின் மீதிருந்த காலியான டீ கப்பை கையில் எடுத்துக்கொண்டே, “சரி சரி… இனி ஒழுங்காக மாத்திரையைப் போடுற வழியைப் பாரு. நான் போய் சமையல் வேலையைப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சமையலறையை நோக்கி விறுவிறுவென நடைபோட்டாள்.

மகள் அந்தப் பேச்சைத் தவிர்க்கவே இப்படி தப்பித்துச் செல்கிறாள் என்பது மீனாவிற்கு ஒன்றும் புரியாமலில்லை.

சமையலறைக்குச் செல்லும் மகளின் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் நெஞ்சில் கோதையின் வாழ்க்கை பற்றிய பாரம் வந்து அடைத்துக் கொண்டது.

வழக்கம்போல ஒரு நீண்ட பெருமூச்சை வெளிவிட்டவளுக்கு, தன் வாழ்நாளுக்குள் தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையையும் பாதுகாப்பையும் அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற தவிப்பு அந்தத் தாயின் மனதில் அடித்துக்கொண்டது.

பூஜையறையில் நெய்விளக்கின் ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய விநாயகர் உருவத்தை நோக்கி மனதால் கூப்பிய கரங்களோடு திரும்பியவர் “பிள்ளையாரப்பா… என் பொண்ணோட வாழ்க்கைக்கு நீதான் ஒரு நல்ல வழியைக் காட்டணும். என் ஆயுசு முடிவதற்குள் அவளுக்குன்னு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுப்பா…” என்று வழக்கம் போலத் தன் தாயுள்ளத்தின் அத்தனை பிரார்த்தனைகளையும் அந்த விநாயகனின் பாதங்களில் கோரிக்கையாகச் சமர்ப்பித்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!