“அப்பா எனக்குக் கண்டிப்பா லேப்டாப் வேணும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ எனக்கு வாங்கித் தர. இல்லனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.”
“என்னடா பயமுறுத்துறியா? கொஞ்சமும் யோசிக்கமாட்டியா ஹரீஷ்? உன்னை படிக்க வைக்கவே லட்சக்கணக்குல செலவாகுது. அதுவே கடன்மேல கடன்னு ஏறிட்டேபோகுது. மேலமேல வாங்க முடியாது. கொஞ்சம் அப்பா சூழ்நிலையையும் புரிஞ்சிக்கோடா. இப்ப கழுத்தை நெறிக்கிற அளவு கடன் இருக்கு. இன்னும் வாங்கினா தாங்கமாட்டேன். இருக்கிறதை வச்சி படிப்பா.”
“என்னப்பா கதை சொல்லிட்டிருக்க. எல்லாருமே லேப்டாப் வச்சிருக்காங்க. என்னிடம் மட்டும் இல்ல. அவனவன் இதையே வாங்க முடியலனு கேவலமா பார்க்கிற பார்வையே ரொம்ப அவமானமாயிருக்கு.”
“அவங்கவங்க வசதிக்கு வாங்கிக்கறாங்க. நாம நமக்கு வசதிப்படுறப்ப வாங்கிக்கலாம். அடுத்தவங்கள பார்த்தா அவமானம்தான் மிஞ்சும். நீ அப்பா, அம்மாவைப் பாரேன்டா.”
“உன் லாஜிக்கை கேக்குற மனநிலையில நான் இல்லப்பா. படிக்கிறதுக்குதான கேக்குறேன். கண்டதுக்கும் கேக்கலையே. பெத்த புள்ளைக்கு செய்ய முடியலனா எதுக்காக பெத்துக்கறீங்க? கோபத்தில் கத்தியவன், ‘ஆ’ என்ற அலறலோடு கன்னத்தைப் பிடித்து, “ஏன்மா அடிக்கிற? நான் என்ன தப்பா கேட்டேனு அடிச்ச?” என்றான் அதிகபட்ச கோபத்தில்.
“நீ தப்பா கேக்கலடா. நாங்கதான் தப்புப் பண்ணிட்டோம். பக்கத்துல இருக்கிற கவர்ன்மெண்ட் காலேஜ் சேர்க்காம, ஒரே பையனுக்கு இன்னும் நல்ல படிப்பைக் குடுக்கனும்னு தகுதிக்கு மீறின காலேஜ்ல படிக்க வைக்கிறோம்ல எங்களை சொல்லனும்.”
“படிக்க வைக்கிறது உங்க கடமை. அதைச் செய்ய ஏன் அலுத்துக்கறீங்க?”
“ஓ… கடமை? அப்ப உன் கடமையை நியாபகப்படுத்தவா.. மகனுக்கான கடமை என்னென்னனு?”
“சும்மா பேசிட்டே இருக்காதம்மா. எனக்கு லேப்டாப் வேணும்னா வேணும்தான். இல்ல முடியாது இப்ப என்னிடம் பணம் இல்லனு எதாவது காரணம் சொன்னா, உங்க பையன் உங்களுக்கு இருக்கமாட்டான். முடிவு உங்க கையில. நான் தூங்குறேன்” என்று பொதுவில் சொல்லிவிட்டு வராண்டாவில் பாய்விரித்து படுத்துக்கொண்டான்.
அவனது பெற்றோரோ மகன் அள்ளித்தெளித்த வார்த்தையின் வலிதாளாமல் அதிர்வில் அப்படியே நின்றிருந்தனர். மனதே ஆறவில்லை அவர்களுக்கு. ஆசையாசையாய் பெற்று வளர்த்த மகனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தை வந்ததில் பாதி செத்துவிட்டனர்.
வந்த அழுகையை வாயை மூடி அழுத விஜயா கணவனின் கண்ணீர் கண்டு துடித்துப்போனார். யாரும் யாரிடமும் ஆறுதல் சொல்ல முடியா நிலை. தாயின் தேம்பல் சத்தம் மகன் காதில் கேட்கிறதுதான். தன் பிடிவாதத்திலிருந்து இறங்கினால் கேட்டது கிடைக்காது என்ற எண்ணத்தில் கண்ணை இறுக்க மூடிக்கொண்டான்.
இரவெல்லாம் தூக்கமில்லை பெற்றவர்களுக்கு. எங்கே மகன் சொன்னதை செய்துவிடுவானோ என்ற பயம் அவர்களை கலங்கடித்திருந்தது. தங்கள் தூக்கம் கெடுத்து அவனைப் பார்த்துக்கொண்டனர். அவன் ஆழ் உறக்கத்திற்குச் சென்றதும் மகனின் தலைவருடிய விஜயா, “நீ எப்படி எல்லாம் வரனும்னு கனவு கண்டேன். நல்லா படிச்சி வேலைக்குப்போயி உன் அப்பா சுமையைக் குறைப்பனு நினைச்சதுக்கு மாறா, நீ…” சட்டென்று அழுகை வந்தது. கண்ணீர் துடைத்து, “இப்ப என்னங்க செய்யப்போற மாமா? அதை வாங்கவே எழுவதாயிரம் வேனும் சொல்லுறான்.”
“என்ன செய்யனு தெரியல விஜயா. எப்படியும் பணத்தை ரெடி செய்துதான ஆகனும். கிடைக்குதா பார்க்கிறேன்.”
“எப்படி?” அவருக்கு தெரியுமே குடும்ப சூழ்நிலை.
“எப்படியோ கடவுள் மேல பாரத்தைப் போட்டு தெரிஞ்சவங்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். நாம வாழுறதே இவனுக்காகதான். அவன் அந்த வார்த்தையை சொல்லும்போது மூச்சே நின்னுடுச்சி விஜயா. என்ன வார்த்தை சொல்லிட்டான்” என்று குலுங்கி அழுதவரின் கண்ணீர் கல்நெஞ்சையும் கரைத்துவிடும்.
அப்பொழுதுதான் முழிப்பு தட்டியவனுக்கு, இதுவரை பார்த்திராத தந்தையின் அழுகை சின்னதாய் நெருடினாலும், தன் தேவை பெரிதென கண்திறக்காது படுத்திருந்தான்.
“அவன் சின்னப்பையன்பா. சீக்கிரமே நம்மளை புரிஞ்சிப்பான். ஆம்பளை அழக்கூடாதுனு சொல்லி வளக்கலையா என்ன? கண்ணைத் தொடைச்சிட்டு வேலைக்கு கிளம்பு” என தன் வேதனையை மறைத்து கணவனை சமாதானப்படுத்தி அனுப்பினார் விஜயா.
அடுத்த நான்கு நாட்கள் கண்சிமிட்டும் நேரத்தில் ஓடிப்போக, பணம் கிடைக்காத விரக்தியில் இருந்தார் சத்தியநாதன். சென்னையில் மளிகை கடையில் மாதம் பனிரெண்டாயிரம் சம்பளத்தில் இருப்பவருக்கு செலவுகள் அதைவிட அதிகம் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா. இருந்தும் மகனுக்காக குருவிபோல் சேர்த்து தனியார் பள்ளியில் படிக்க வைத்து அவன் தகுதியை வளர்க்க, அவனோ அவரை தாழ்த்திக் கொண்டிருந்தான்.
கடை முதலாளி காலில் விழுந்தும் பார்த்துவிட்டார். ஏற்கனவே லட்சதிற்குமேல் கொடுத்திருப்பதாக சொல்லி, இனி முடியாதென்று மறுத்துவிட்டார். தெரிந்த இடத்தில் வட்டிக்கு கேட்க, அங்கும் மறுப்பு மட்டுமே பதிலாக வந்தது அவருக்கு. “பத்து ரூபாய் வட்டி என்றாலும் பரவாயில்லை” என்றவரிடம், “அதை கட்டும் வசதி உனக்கில்லை என்று நிராகரித்துவிட்டனர்.
சோகத்தில் தாடி வளர்த்து பார்க்கவே என்னவோ போலிருந்த கணவனைக் கண்ட விஜயாவின் இதயம் இரத்தக்கண்ணீர் வடித்தது. “பணம் புரட்ட முடியலனா விட்டுவிடு” என்று சொல்லியும் பார்த்துவிட்டார்.
மகன் சொன்ன வார்த்தையிலேயே நின்றிருந்த சத்தியநாதனோ, எதாவது செய்து மகன் கேட்டதைக் கொடுத்துவிடும் முடிவுடன் இருந்தார்.
“அப்பா பணம் ரெடி பண்ணிட்டீங்களா? காலேஜ் முடிச்சி வந்ததும் நாம போயி வாங்கிட்டு வரலாம்.”
“நாளைக்கு உன் கையில் நீ கேட்டது இருக்கும். நீ காலேஜ் கிளம்பு” என்றனுப்பியவர், “விஜயா தெரிஞ்சவன் ஒருத்தன் ரெண்டாவதுல லேப்டாப் ஒன்னு இருக்கு சொன்னான். மாசம் இவ்வளவுனு குடுத்தா போதுமாம். மாலை வரப்ப கையோட வாங்கிட்டு வரேன்” என்று சட்டையை எடுத்து மாட்டியவர் யோசனையுடனேயே சென்றார்.
“அவன் புதுசுதான் வேணும்னு நின்னான். பழசுனா சம்மதிப்பானா?”
“வேற வழியில்ல. இதையாவது செய்து சமாளிப்போம். நமக்கு புள்ள முக்கியம்.”
“ம்ம்ம்…சாப்பிட்டு போ மாமா” என்று அடுப்படியிலிருந்து கண்டது வெளியே செல்லும் கணவனைதான். பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தார்.
மாலை நான்கு மணியளவில் கல்லூரி எதிரில் பேருந்திற்காக நின்றிருந்த ஹரீஷை அவன் நண்பன் போனில் அழைக்க, ‘இப்பதான போனான். அதுக்குள்ள என்ன?’ யோசனையுடன் எடுத்தவன், “சொல்லுடா” என்றான்.
“டேய் ஹரீஷ். நம்ம காலேஜ் தாண்டி மூனாவது ஸ்டாப்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்ல. அங்க சீக்கிரம் வாடா.” சற்றே பயந்த குரலில் அழைத்தான்.
“என்னடா சொல்லுற? சித்தி வீட்டுக்கு போறேனுதான அவுட்பஸ்ல போன. எதாவது பிரச்சனையா?”
“பிரச்சனை என்னால இல்லடா. நீ பயப்படுற அளவுக்கு எதுவுமில்ல. எனக்கு தனியா இருக்க ஒருமாதிரி இருக்கு. நீ அவுட்பஸ்ல போறதால உன்னை கூப்பிடுறேன். நீ வா நேர்ல எல்லாத்தையும் சொல்லுறேன்.”
அடுத்த கால்மணி நேரத்திற்கெல்லாம் காவல் நிலையம் வர, அங்கிருந்த நண்பனைக் கண்டவன், “திவா என்னடா?” என்றான்.
வேகமாக வந்து ஹரீஷை அணைத்து விடுவித்தவன், “நான் பஸ்சில் இருந்து இறங்கினதும் ஒருத்தன் என் பேக்கை அடிச்சிட்டு ஓடிட்டான்டா. ஒரு செகண்ட் பயந்து போயிட்டேன். நானும் முடிஞ்சளவு துரத்தி பார்த்தேன் முடியல. அப்ப அங்கிருந்த ரோந்து போலீஸிடம் நடந்ததை சொன்னதும் அவங்க வேகமா ஆக்ஷன் எடுத்து அந்தத் திருடனைப் பிடிச்சிட்டாங்க. இங்க உள்ளதான் வச்சிருக்காங்க. அப்பாட்ட சொல்ல பயம். அதான் உன்னை கூப்பிட்டேன்.”
“நல்லவேளை என் பஸ் வரதுக்குள்ள கூப்பிட்ட. இல்லனா கஷ்டம்டா. வா உள்ள போகலாம்,” நண்பனுடன் காவல் நிலையம் உள்ளே செல்லப்போக, அங்கிருந்த ஏட்டையா வழிமறித்து, “இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டிருக்கார். அவர் கூப்பிட்டா உள்ள போப்பா” என்று நிறுத்தினார்.
‘யார் அந்தத் திருடன்?’ ஒரு ஆர்வத்தில் ஹரீஷ் உள்ளே பார்க்க, இன்ஸ்பெக்டர் அந்தத் திருடனுக்கு விட்ட அடியில் திரும்பிய திருடனின் முகம் பார்த்தவன் அதிர்ந்து நெஞ்சடைக்க, “அப்பா” என்று உச்சரித்தான் சத்தமில்லாமல். உடலெல்லாம் நடுங்கி ஒடுங்கிப்போய் நின்றிருந்த அப்பாவைக் கண்டவன் கண்கள் தன்னாலேயே கலங்கியது.
“இவ்வளவு நேரமா கேள்வி கேட்டுட்டிருக்கேன். புதில் சொல்லாம நிக்கிற. அப்படியே நின்னா இன்னும் அடி விழும். சொல்லு ஏன் திருடின? வெறும் திருட்டு மட்டும்தானா? இல்ல கொலை செய்ய எதுவும் பிளானா?”
இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்வியில் ஆடிப்போனவர், “அப்படி எதுவும் இல்லங்க சார். இதுதான் முதல் முறை” என்றார்.
“சரி நம்பிட்டேன். ஏன் திருடின?”
“என் மகனுக்காக சார்” என்றதில் உள்ளுக்குள் உடைந்து போனான் ஹரீஷ்.
“தெளிவா சொல்லு” என்றார் இன்ஸ்பெக்டர்.
“எனக்கு ஒரே ஒரு பையன் சார். கல்யாணமாகி எட்டு வருடம் கழிச்சி பிறந்தவன். அவன் பிறந்ததோட என் மனைவிக்கு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய நிலை. ஒரே பையனை நல்லா வளர்த்து படிக்க வச்சி, ஆளாக்கி, நல்ல நிலைக்கு வரவைக்கனும். து எங்க கனவு. அதுக்காக நேரம் காலம் பாக்காம உழைச்சேன். அந்த பெரிய காலேஜ்ல என் பையனும் படிக்கனும் என்பது என் தனிப்பட்ட ஆசை சார். பனிரெண்டாவதுல மார்க் கொஞ்சம் கம்மியா எடுத்துட்டானா, என்ன செய்யுறது தெரியலை. அவனும் அந்த காலேஜ்லதான் படிப்பேனு அடம்பிடிச்சான். நமக்கு வசதி பத்தாதுனு நினைச்சாலும் பையன் ஆசையை நினைவேத்தாத தகப்பன் இருந்து என்ன பிரயோஜனம் சார்?”
“முதல் வருடம் படிக்க சேர்த்துவச்ச அத்தனையையும் எடுத்து, பத்தாததுக்கு கடை ஓனரிடமும் நிறைய பணம் வாங்கி கட்டிட்டேன். இந்த வருடம் என் பொண்டாட்டி போட்டிருந்த நகை, தாலிசெயின்ல உள்ள தாலியை தவிர எல்லாத்தையும் வித்து அந்த காலேஜ்ல ஃபீஸ் கட்டினேன் சார்” என்றதில் ஹரீஷ் அதிர, அதன்பின்னே தாயின் கழுத்தில் சமீபமாய் தாலி செயினுக்கு பதில் கயிறு இருந்ததை உணர்ந்தான். மகனாய் தான் எந்த இடத்திலும் சரியாக இல்லை என்பது புரிந்த நிமிடம், தன்னை நினைத்து முதல்முறை அருவருப்பானான்.
“எங்க குடும்பத்திலேயே முதல்முறையா காலேஜ் வரை போனது என் பையன்தான் சார். அதுவும் இன்ஜினியரிங். பெருமையா சொல்லிக்குவேன் சார் எல்லாரிடமும். ஆனா, கடைசிவரை அவனை படிக்க வைக்க முடியுமா தெரியலை. ஒரு வாரம் முன்ன, லேப்டாப் வேணும் கேட்டான். அது விலை எழுவதாயிரமாம். ரெண்டாவது வேண்டாமாம். புதுசு வாங்க அவ்வளவு பணத்துக்கு எங்கபோறது? கொஞ்சம் பொறுப்பானு சொன்னா, அதைக்கேக்குற பொறுமை என் பையனுக்கு இல்ல. வாங்கித்தரலனா செத்துப்போயிடுவேனு சொல்லுறான். சாகக் குடுக்கவா சார் நாங்க கஷ்டப்பட்டு வளத்தோம். அந்த வார்த்தையைக் கேட்ட நாங்கதான் சார் செத்துட்டோம்” என்று கதறி அழுதவரை இன்ஸ்பெக்டர் பாவமாகப் பார்க்க,
அவரின் மகனோ தான் விட்ட வார்த்தையின் வீரியத்தை இப்பொழுது உணர்ந்தான். தந்தை அழுததை பெரிதாக மதிக்காதவன். தற்பொழுது அடுத்தவரின் முன் தலைகுனிந்து நின்றிருந்தவரைக் கண்டு கண்ணீர் கொட்டி, உள்ளம் கலங்கி, இப்பொழுதே அவரை அணைத்து மன்னிப்பு கேட்க மனம் தவித்தது.
“தாய், தகப்பனை மிரட்டி, தான் நினைச்சதை சாதிக்கிற, தன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதி பையன் உங்களுக்கு அவசியமா? தூக்கிப்போட்டுட்டு போங்க சத்தியநாதன். அவனுக்காக திருட வந்த நீங்க, அடுத்து அவனுக்காக கொலையும் செய்வீங்களா? வெளிநாடுகள்ல அவங்கவங்க சம்பாதிச்சி படிக்கனும்னு சட்டமே வச்சிருக்கானுக. நம்ம நாட்டுலதான் அவனுகளை கங்காருகுட்டி மாதிரி கடைசிவரை கவ்விக்கிட்டே அலையுறோம். அன்பு என்ற கட்டுக்குள்ள இருந்து முதல்ல வெளில வாங்க. அப்பதான் பிள்ளைகளை திருத்த முடியும்.”
“அந்த அன்புதான சார் உலகத்தையே ஆளுது. என் மகனுக்காக கொலை செய்யுற சூழ்நிலை ஏற்பட்டா, அதையும் தாராளமா செய்யுவேன் சார். ஏன்னா அவன் எங்க உயிர் சார்” என்றார் சத்தியநாதன்.
‘அப்பா!’ கத்திக்கதறத் துடித்த மனதை அடக்கி நின்றான் மகன்.
“உங்களை மாதிரி பேரண்ட்ஸ் இருக்கிறவரை, உங்க மகன் மாதிரி ஆளுங்களை திருத்த முடியாது. சரிவிடுங்க அது உங்க பிரச்சனை. அந்த பையன் உங்க மேல கேஸ் குடுத்தா பைன் கட்டனும். இல்லனா ஜெயில் போகனும். உங்க டீடெய்ஸ் குடுங்க” எனக்கேட்டார்.
தன் கண்ணீர் துடைத்த ஹரீஷ், “திவா ஒரு நிமிஷம் என்னோட வா” என்று வெளியே அழைத்துச் சென்றவன் கண்ணீரை அப்பொழுதுதான் கண்டான் திவாகர்.
“ஏய் அழுதியா? ஏன்டா? அவர் பேசினதைக் கேட்டு எனக்கும் கஷ்டமாதான் இருந்தது. அதுக்காக அழுகை ஓவர்டா” என்றான்.
“இப்பவும் என்னைப் பெத்ததுக்காக அழலையேடா அவர். எனக்கு செய்ய முடியலைனுதான அழுறார்” என்றதும் அதிர்ந்து, “ஹரீஷ்” என்றான் திவாகர்.
“என் அப்பாடா அவர். தைரியமா நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன். கத்தி ஊரைக்கூட்டியும் சொல்லுவேன். சுயநலவாதிடா நான். பெத்த அப்பா நிலை தெரிஞ்சும், அவர் அழுத அழுகை தெரிஞ்சும் கல்லா நின்ன சுயநலப்பிசாசுடா நான். எனக்காக அவர்…” என்றவன் கதறத்திறந்த வாயை மூடி, பின் நிதானித்து, “நீ என்னைப்பற்றி காலேஜ்ல என்ன வேனும்னா சொல்லிக்கோ. தயவு செய்து என் அப்பாவைப்பற்றி மட்டும் சொல்லாத ப்ளீஸ்.”
“என்னடா இப்படி எல்லாம் பேசுற?”
“எல்லாத்துக்கும் சாரிடா. இந்த நிலையில் என் அப்பாவை நான் பார்த்ததை, அவர் பார்த்தா செத்துப்போயிடுவார்டா. எனக்கு அவர் வேணும். ப்ளீஸ் அவரை எப்படியாவது இந்த கேஸிலிருந்து வெளில கொண்டு வாடா. உன்னால முடியும்னு இன்ஸ்பெக்டர் சொல்லுறார். உன் கால்ல கூட விழுறேன்டா” என அவன் யோசிக்குமுன் காலில் விழுந்திருந்தான் ஹரீஷ்.
“டேய்! என்ன பண்ணுற? எழுந்திரு. நண்பனோட அப்பா எனக்கும் அப்பாதான்டா. இதுவரை நீ செய்தது அறியாமையில். இனி அவங்களை தாங்குடா. தன் தப்பை ஒருவன் எப்ப உணருகிறானோ அப்பவே அவன் மனிதனாகிடறானாம். இப்ப நீ பெர்பெக்ட்டுடா. நீ கிளம்பு. அப்பாவை நானே கூட்டிட்டு வந்து விடுறேன்.”
“திவா…”
“கவலைப்படாதடா. எந்தக்காலத்திலும் நான் உன் நண்பன்னு அவருக்கு தெரியாது. தைரியமா போ” என்ற நொடி நண்பனை கட்டிக்கொண்டு நன்றி சொன்னான்.
வீட்டிற்குள் வந்த நிமிடம் தாய் இல்லாதிருக்க அறைக்குள் நுழைந்தவன் அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகையை வாய்வழியாக கதறித்தீர்த்தான். தன் இத்தனை வருட வாழ்வையெண்ணி, தன் மீதான தந்தை, தாயின் அன்பையெண்ணி, தனக்காக கொலையும் செய்வேன் என்ற தந்தையின் உறுதியையெண்ணி என நீண்ட நேர அழுகை, வேகமாக அறைக்கதவைத் தட்டிய தாயின் குரலில் அடங்கியது.
வேகமாக முகம் துடைத்து வெளியே வந்தவனுக்கு தாயின் பதறிய முகம் தெரிய, அதன் காரணம் அறிந்தவன் தன்னைத்தானே மானசீகமாக அடித்துக்கொண்டான்.
“அப்பா இப்ப வாங்கிட்டு வந்திடுவார். நீ ஏன் உள்ள இருக்க வெளில வந்து உக்காரு” என்றதில், “அம்மா டென்சனாகாத. நான் எதுவும் செய்துக்கமாட்டேன். அன்னைக்கு அப்படி சொன்னது தப்புதான். நீ இந்தளவு பயந்துக்க வேண்டாம்மா ப்ளீஸ்” என்றான்.
“இல்லடா அது அப்பா…” எனும்போது சத்தியநாதன் உள்ளே வர, மகனின் முகம் பார்க்க முடியாமல், “நா..நான் நாளைக்குக் காலையில வாங்கி தரேன்பா. நீ அவசரப்பட்டு எதுவும்…” அடுத்து சொல்லமுடியாது நிறுத்தவும்,
ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டு ஆயிரம் மன்னிப்பு கேட்டு அழத்துடித்த மனதை அடக்கி, “எனக்கு லேப்டாப் வேண்டாம்ப்பா. என் பிரண்ட் காலேஜ்ல வச்சி அவனோட லேப்டாப்ல பார்த்துக்கலாம் சொல்லிட்டான். நான் அங்கே வச்சி முடிச்சிட்டு வரேன். நான்தான் உங்களுக்கு நிறைய சிரமம் குடுத்துட்டேன். மன்னிச்சிருப்பா. சாரிம்மா” என்றான் மனதார.
மகனின் தலைவருடி,” என்னடா மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு. என்ன திடீருனு?” ‘ஒருவேளை யார் மூலமாவது தான் செய்த செயல் தெரிந்துவிட்டதோ?’ என்ற பதற்றத்தை மறைத்து கேட்டார்.
“பிரண்ட் சொன்னான். அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தாதடா. அவங்க உயிர் வாழுறதே நமக்காகதான். அவங்களுக்கு மிஞ்சினது எதுவுமில்ல. அவங்க இல்லனா நமக்கு உலகமே இல்லடானு சொன்னான். அவனுக்கு அப்பா கிடையாதுப்பா. அதனோட கஷ்ட நஷ்டத்தை எடுத்துச்சொல்லி கால்ல விழுந்து மன்னிப்பு கேளுடா சொன்னான். நிதானமா உக்காந்து யோசிச்சா எல்லா தப்பும் என்மேலனு தெரிஞ்சது. உங்க ரெண்டு பேரையும் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சிருப்பா” என்று காலில் விழுந்து, தன் கண்ணீரை அவருக்கு காணிக்கையாக்கினான்.