Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 7

CHAPTER 7

அத்தியாயம் 6

By nisharajan · October 29, 2026

0

அத்தியாயம் 6

காலம் கடந்த காதல் அலைகள்

நிஷா ராஜன்

வண்ண மயில் தோகை ஒன்று அதன் தோகை விரித்து ஆடிக் கொண்டு செல்வது போல் நெல் வயலின் நடுவே இருந்த வாய்க்கால் வரப்பின் மேல் தன் பிஞ்சு மலர் பாதங்களை பதித்து “எனக்கு அப்பா இருக்காரு…!” என்று சொல்லிக் கொண்டு ஓடினாள் அவள்.

காற்றுக்கும் கேட்டிருக்கும் அவளின் குயில் போன்ற ஓசை. மல்லிகை ஒன்று மலர்ந்தது போல் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே ஓடினாள் அவள்.

“அடியே யாழினி! எங்க இப்படி ஓடிட்டு இருக்க” என்ற அந்த குரலை கேட்டு மூச்சு வாங்க திரும்பிப் பார்த்த அவள்.

“பாட்டி…! என்ன ஆயால முழுங்குனவளேன்னு பேசினல்ல, எனக்கு அப்பா இருக்காரு பாட்டி.” என்று அவள் மழலை மொழியில் சிரித்துக் கொண்டே சொல்ல,

“ஏது அப்பனா எங்கடி உன் அப்பன் இருக்கான். அவன் தான் உங்க ஆயா செத்த கையோட பட்டாளத்துக்கு போனவன் நாலஞ்சு வருசமா ஊரு பக்கமே தல வச்சு படுக்கலயே, அப்புறம் எங்கடி உங்க அப்பன் வந்தான்” என்றாள் பாப்பாத்தி.

யாழினி! “பாட்டி என் அப்பா! மாமா தோட்டத்துல இருக்காரு. நான் இப்போ தான் பாத்தேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.

பாப்பாத்தியோ ஆதித்யா வந்ததை அறிந்தவுடன் “ஆதித்யா வந்துட்டயா பா” என்று சொல்லியபடி ஆறுமுகத்தின் தோட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

அதற்குள் ஊருக்குள் மூச்சு வாங்கியபடி ஓடி வந்த யாழினி “மித்ரா! மித்ரா!” என்று தன்னோடு விளையாடும் தோழியின் வீட்டின் முன் வந்து அழைத்தாள்.

“என்ன டி எதுக்கு இப்படி சத்தம் போடுற. எங்க அப்பா தூங்கிட்டு இருக்காரு எழுந்தா அடி வாங்குவ ஓடி போ டி. உன்ன தான் எங்க அம்மா சாயங்காலத்துல வந்து விளையாடுன்னு சொன்னாங்கல்ல இப்போ எதுக்கு வந்த” என்று மித்ரா சத்தமிட்டாள்.

அதைக் கேட்டு மூச்சு வாங்கியபடி சிரித்த யாழினி “உங்கூட யாரு விளையாட வந்தா, எனக்கு அப்பா, அம்மா இல்லன்னு சிரிச்சல்ல. எனக்கு அப்பா இருக்காரு. இன்னைக்கு நான் அவரை பார்த்தேனே” என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.

“அட போடி எங்க அம்மா சொன்னுச்சு. உங்க அப்பா பட்டாளத்துள வடநாட்டு பிள்ளைய கல்யாணம் பண்ணி அங்கேயே இருந்துக்கிட்டாராம். நீ என் காதுல பூ வைக்குறயா போடி” என்று சொல்ல, அதை கேட்ட யாழினிக்கு அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் கண்கலங்கி போய் நின்றாள்.

“இல்ல என் அப்பா அப்படி எல்லாம் பண்ணல, அவரு மாமா தோட்டத்துல இருக்காரு” என்று அழுதபடி மீண்டும் ஆதித்யாவை பார்க்க ஆறுமுகம் தோட்டத்துக்கு ஓடி வர ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த மித்ராவின் தாய் யாழினி அழுதபடி ஓடுவதை பார்த்து “இந்த அனாத கழுத இங்க எங்க டி வந்தா விளையாட கூப்பிட்டாளா…!” என்று கோபமாக மித்ராவை கேட்க, “இல்லம்மா அவ அப்பா வந்துட்டாராம். வந்து பைத்தியம் மாதிரி உளறிட்டு போறா.” என்றாள் மித்ரா.

அதைக் கேட்ட மித்ராவின் தாய் “என்ன டி சொல்ற…?” என்று கேள்வியாக அவளை பார்த்தாள்

“ஆமா மா…! நீ தான் அப்பாக்கிட்ட சொன்னீயே வட நாட்டு பிள்ளைய கல்யாணம் பண்ணிருப்பான்னு. நான் அதை சொன்னதும் அவ அழுதுகிட்டே ஓடுறா” என்றாள் மித்ரா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அதைக் கேட்ட அவளுக்கோ “அடியே குடிய கெடுத்தவளே அவ அப்பன் பட்டாளத்துக்காரன் துப்பாக்கி எடுத்து நம்ள சுட்ருவான் டி, எதுக்கு அப்படி சொல்லி தொலைஞ்ச, பாவத்த அந்த பிள்ள போயி அப்படியே அங்க ஒப்புச்சா என்ன பண்றது” என்று தவித்தவள். “ஏயா மனசா இங்க என்ன நடக்குது. உனக்கு தூக்கம் வேண்டி கிடக்குதா…? எழுந்திரு யா” என்று தன் கணவனை புலம்பிய படி எழுப்பினாள்.

எழுந்தவனோ கண்களை தேய்த்துக் கொண்டு “என்ன டி ஆச்சு, எதுக்கு இப்படி ஊரைக் கூட்டுற” என்றான்.

அதைக் கேட்டவள் நெஞ்சில் அடித்துக் கொண்டு நடந்த விவரங்களை சொல்ல, “நீ அந்த புள்ள யாழிய என்னென்ன பேசின, உன் வாய்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஆதி சும்மாவே ஆடுவான். நீ சலங்கை வேற கட்டிருக்க நல்லாவே ஆட போறான். இதுல பட்டாளத்துக்காரன் துப்பாக்கியோட வந்திருப்பான்.” என்று சொன்னதை கேட்டவுடன்.

“அய்யோ வாயா! போலாம் ஏதாவது அந்த புள்ள ஒன்னுக்கு ரெண்டா உளறி வைக்க போகுது.” என்று பயத்தில் உளற ஆரம்பித்தாள்.

“அய்யோ நான் வர மாட்டேன் பா. ஒருமுறை எங்க அப்பனுக்கு தெரியாம கள்ளு குடிக்க போயி. இவங்கிட்ட மாட்டினேன் பாரு. தூக்கி போட்டு மிதிச்சான். இன்னுமும் என்னால மறக்க முடியல தெரியுமா…!. ஆனா ஒன்னு பொம்பளைங்க மேல அவன் கை வைக்க மாட்டான் நீ பயப்பட தேவையில்ல.” என்றவன்.

“அது தான் குழலு துப்பாக்கி வைச்சிருக்கான் ல சுட்டு போட போறான்.” என்று அவளை பார்த்து சிரித்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

“அய்யோ இந்த ஆளை துணைக்கு கூப்பிட்டா பயப்படுத்திட்டு படுத்துக்கிட்டானே…! நான் என்ன பண்ணுவேனோ” என்று தலையில் அடித்துக் கொண்டு ஆறுமுகம் தோட்டத்திற்கு ஓட ஆரம்பித்தாள்.

அங்கே யாழினி கண்ணீருடன் ஓடி சென்றவள். ஆதித்யாவின் அருகில் நின்றாள்.

அதைப் பார்த்தபடி பின்னே “ஐயோ கடவுளே இந்த புள்ள எதுவும் அவங்க அப்பன்கிட்ட உளறி வெச்சிட கூடாது. நீ தான் காப்பாத்தணும் உனக்கு நான் கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்” என்று மனதிற்குள் வேண்டுதல்களை அடுக்கிக் கொண்டு வரப்பில் ஓட ஆரம்பித்தாள்.

கட்டிலில் அமர்ந்திருந்த ஆதித்யா அருகில் வந்த யாழினி தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். அவளின் கண்கள் கலங்கி சிவந்து இருப்பதை பார்த்து அவன் “என்னாச்சுடா தங்கம் எதுக்கு இப்படி கண்ணு எல்லாம் சிவந்திருக்கு, அழுதியா” என்று அவளை பார்த்து கேட்க ஆறுமுகத்திற்கு புரிந்து விட்டது.

எதுவும் பேசாமல் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த சரசுவை பார்த்தான். “அப்பா!” என்று யாழினி வாய் திறக்கும் முன் அவள் “அண்ணா!” என்று கத்திக்கொண்டு அங்கே வந்தாள்.

அதைப் பார்த்த ஆறுமுகம் “வா மா சரசு என்ன ரொம்ப நாளைக்கு அப்புறம் என் தோட்டத்து பக்கம் எட்டி பார்த்து இருக்க, என்ன ஏதாவது பஞ்சாயத்தா?” என்று அவளை வேண்டுமென்றே சீண்டினான்.

‘இவன் வேற என் நிலைமை புரியாம வேணுன்னே கேக்குறான் பாரு’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள். “அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க அண்ணா. பாப்பா வந்து அண்ணா வந்திருக்காங்கன்னு சொன்னது. அதுதான் எப்படி இருக்கீங்கன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றாள் மூச்சடைக்க,

அதைக் கேட்ட ஆறுமுகமோ வாய்விட்டு சிரித்து விட்டு “பாரு டா ஆதி. உன்ன பாக்க சரசு எம்புட்டு வேகமா வந்து இருக்கு, அப்படி என்ன தங்கம் நீ போயி சரசு கிட்ட சொன்ன?” என்று யாழினி பார்த்து கேட்டார் ஆறுமுகம்.

அவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யா தன் மகள் ஏதாவது பேசுவாளா சொல்வாளா என்பது போல் அவளை பார்த்து புன்முறுவலுடன் அவளின் குரலைக் கேட்க ஆர்வமாக அமர்ந்திருந்தான். அப்போது குழந்தை யாழினி அழ ஆரம்பித்தாள்.

மூச்சு வாங்கிக் கொண்டே “அப்பா நீ வடநாட்டு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டியா, இனிமே இங்க வரமாட்டியா?” என்றாள் அழுது கொண்டே,

அதைக் கேட்ட ஆதித்யாவிற்கு நெஞ்சை அடைத்தது போல் ஆனது.

“இல்ல தங்கம்! அப்பா உன்ன அப்படி எல்லாம் விட்டுட்டு போக மாட்டேன். உங்கிட்ட இப்படி யார் சொன்னது” என்று கேட்டான் ஆதித்யா.

“மித்ரா தான் பா சொன்னா! இந்த சரசுக்கா அவகிட்ட சொல்லி இருக்காங்க. ஏதோ ஒரு வடநாட்டு பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு நீங்க அங்கயே இருந்துட்டீங்கன்னு” என்று தேம்பலுடன் சொன்ன செய்தியை கேட்ட ஆறுமுகமும் ஆதித்யாவும் சரசுவை திரும்பி முறைத்தார்கள்.

அப்போது அங்கே வந்த கண்ணாத்தா “என்னாச்சு குட்டிப் பா எதுக்கு இப்படி அழுது இருக்க” என்று கேட்க,

ஆறுமுகம் “அடியே கண்ணாத்தா உனக்கு தெரியாம எங்கேயோ நம்ம ஆதித்யா போய் வடநாட்டு புள்ளைய கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானாம். அது எப்படி இந்த சரசுக்கு தெரிஞ்சதுன்னு தெரியல” என்றார் காட்டமாக,

அதைக் கேட்ட கண்ணாத்தா “அடியே ஆதமத்த சிறுக்கி, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மவராசன் ஆதித்யாவை பார்த்து எப்படியாபட்ட வார்த்தையை பேசி இருக்க, அதுவும் இந்த சின்ன பிள்ளைகிட்ட, நீங்களெல்லாம் தொரவுக்கு வேலைக்கு போயிட்டு இப்படித்தான் பேசிட்டு ஊருக்குள்ள சுத்துறீங்களா, வெளக்கமாத்தை சாணில கரைச்சு அடிச்சேனா பல்லு பவுடு எல்லாம் கொட்டி போயிரும். மருவாதையா ஓடி போயிரு.

இதுக்கு தான் புள்ள பின்னாடியே இங்க வந்து நிக்கிறியே நீ. என்னடா இத்தன நாள் வரையும் வராத காக்கா இன்னிக்கு வந்துருக்குன்னு பாத்தேன். சேதி சொல்ல தான் வந்திருக்குது போலையே, போயிரு மூஞ்சு முன்னாடியே நிக்காத,” என்று அவளின் காது கிழியும் அளவுக்கு சத்தம் போட்டு அனுப்பினாள்.

விட்டால் போதும் என்று அங்கிருந்து நகர்ந்தாள் சரசு. “நீ அழாதே டி தங்கம் சரசுக்கு பேய் பிடிச்சிருக்கு. அதனால தான் இப்படி பேசி உலாத்திட்டு இருக்கா” என்றாள் கண்ணாத்தா.

இந்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும் போது அங்கே வந்தாள் பாப்பாத்தி. “ஏன் டா ஆதித்யா நேரா வீட்டுக்கு வராம இங்க என்ன பேச்சு கிடக்கு” என்றாள்.

“ஏன் ஆத்தா உன் வீட்டுல என்ன சூடா அரிசி சோறு பொங்கி வச்சிருக்கயோ,” என்றாள் கண்ணாத்தா. அதைக் கேட்ட பாப்பாத்தி அவளை முறைத்து விட்டு “வா டா ஆதித்யா!” என்று அவனுடைய கையை பிடித்து இழுக்க,

“இரு ஆத்தா! இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல, நின்னு நீ பதில் சொல்லிட்டு போ,” என்று அவளை தன் கரம் பிடித்து நிறுத்தினாள்.

“என்னடி உனக்கு நான் பதில் சொல்லணும் சொல்லுடி சொல்றேன்.”

“யாழினி இன்னைக்கு நீ வீட்டுல என்ன சாப்பிட்ட!” என்று குழந்தையை பார்த்து கேட்டாள். “ஆயா களி கரைச்சு கொடுத்துச்சு. அதைக் குடிச்சேன்” என்றாள்.

“அப்படியா! உங்க ஆயா நேத்து களி கிண்டி நான் பார்க்கவே இல்லையே?” என்றாள் கண்ணாத்தா.

“அதுவா அத்த அது நாலு நாளைக்கு முன்னாடி செஞ்ச புளிச்ச களி. உப்பு போட்டு கொடுத்தாங்க, அது தான் உடம்புக்கு சத்தாமே நான் காலைல எப்பவும் அது தான் குடிப்பேன்” என்றாள் யாழினி.

அதைக் கேட்ட ஆதித்யா அவளின் பிஞ்சு முகத்தை பார்த்து கன்னம் வருடி கண்ணீர் கலங்க, “அம்மா நான் இத்தன வருசமா அனுப்புன பணம்.” என்று பாப்பாத்தியை கேட்க,

பாப்பாத்தியோ கையை பிசைந்து கொண்டு நின்றாள். அதைப் பார்த்த “ஆறுமுகம் நீ அமைதியா இரு ஆதி.”

“இன்னும் எத்தனை நாளைக்கு ணா நான் அமைதியா இருக்கனும். இங்க நடக்குறதை எல்லாம் பார்த்தா? எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு.” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!