Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 6

CHAPTER 6

அத்தியாயம் 5

By nisharajan · October 26, 2026

0

வானில் இருந்து இறங்கி வந்த தங்கத் தாரகையை போல நின்றிருந்தாள் செந்தாழினி.

அவளின் அழகை ரசிக்க பிரம்மனே தோற்றுப் போவான் என்பது போல் நின்றிருந்தான் ஆதித்யா.

அவளை மெதுவாக கரம் பிடித்து மலைக் கோட்டையின் மேல் ஏறி வந்து அவளை அமர வைத்தான்.

அவளிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தவன் அவளுடைய விரல்களை மெதுவாக தொட்டு பார்த்தான். அவளின் கரத்தை பிடித்துக் கொண்டு முதல் முறையாக அவளிடம் “என்னை பிடித்திருக்கிறதா…?” என்று கேட்டான்.

அதைக் கேட்டவள் தன்னை மறந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். “என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி…!” என்று அவளுடைய வெண்கல குரலால் அவனிடம் சிரித்து காண்பித்தாள்.

அதைப் பார்த்த ஆதித்யா “நீ ஏன் இவ்வளவு அழகா இருக்கிறா…?” என்று அவளைப் பார்த்து மீண்டும் கேட்க, அதைக் கேட்டவள் சத்தமாக “என்ன சொன்னீங்க” என்று வாய்விட்டு நன்றாக சிரித்தாள்.

அதைப் பார்த்து ரசித்தவன் அவளைப் பார்த்து “நீ எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச” என்று அவளின் கண்களை பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.

அதைக் கேட்ட செந்தாழினி “அதுவா தெரியல அப்பா…! இவரை தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளைன்னு சொன்னாரு.

அவர் சொன்னதைக் கேட்டு சரின்னு சொல்லிட்டேன் மத்தபடி உங்க முகத்தை கூட நான் சரியா பாக்கல” என்றாள்.

அப்படி சொன்னவளை பார்த்து சிரித்துக்கொண்டே “நிஜமாதான் சொல்றியா” மீண்டும் குழப்பத்தில் கேட்பவன் போல அவளை பார்த்து விஷமாக கேட்டான்.

அதைக் கேட்டவள் “நீங்க எப்படி கேட்டாலும் அது தான் உண்மை.” என்று மீண்டும் சிரிக்க, அதைக் கேட்டவன் ‘என்னை சிரிச்சே கொல்லுற’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“சரி அப்போ நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு சரியான பதில் சொல்லுங்க பார்க்கலாம்.” என்றவள்

“உங்களுக்கு எப்படி என்ன பிடிச்சது? அதுவும் அவ்வளவு தூரம் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு,” என்றாள்.

“என்னோட அம்மாவுக்கு உன்னை ரொம்ப புடிச்சி போச்சு. அதனாலதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றவனை பார்த்து “சரியான அம்மா புள்ள போல” என்று அவனுடைய அரும்பும் மீசையை தொட்டுப் பார்த்தாள்.

அதைப் பார்த்தவன் “நீ சந்தோஷமா இருக்கியா…!” என்று அவளை பார்த்து கேட்டான்.

“உங்க பக்கத்துல இருக்கும் போது நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்” என்று சொன்னவளை பார்த்து,

“ஒருவேளை நான் உன்னை விட்டு தூரமா போயிட்டா…!” என்று ஆதித்யன் கேட்க அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய அவனுடைய முகத்தை பார்க்க முடியாமல் கண்களை மூடினாள்.

அப்போது தடக் கென்று இரயில் வண்டி நிற்க. திடுக்கிட்டு கண் விழித்தவனின் கண்ணில் செந்தாழினியை நினைத்து கண்ணீர் வர துவங்கியது.

மெதுவாக தன் கண்களை துடைத்துக் கொண்டவன். மெட்ராஸ் இரயில் நிலையத்தில் வந்து இறங்கினான்.

அங்கு அவனின் கண்களுக்கு தென்படும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை வாங்கியவன் பேருந்து நிலையத்தில் வந்து பஸ் ஏறினான்.

‘அப்பா நீங்க எப்போ வருவீங்க…? பயப்படாதீங்க, நான் யாழியை பார்த்துக்கிறேன்’ என்ற மழலை மாறாத குரல் ஆதித்யனின் காதுகளில் ஒலித்தது.

அவன் மனம் முழுக்க ஒருபுறம் செந்தாழினியின் நினைவுகள் அவனை கூறும் போட்டுக் கொண்டு இருந்தாலும் மறுபுறம் குழந்தை யாழினியின் சிரித்த முகமும் நவிலனின் தைரியமான பேச்சுமே அவனை வேகமாக அவனுடைய ஊருக்கு பயணப்பட வைத்தது.

அது மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமம் அந்த காலகட்டத்தில் பஸ் வசதி இல்லாமல் கடும் வெயிலில் கரடுகள் நிறைந்த அந்த வயலில் நடக்க ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன் இராணுவ உடையணிந்து கம்பீரத்துடன் அவனுடைய உடமைகளை இருபுறம் தோளில் சுமந்து கொண்டு…! நடந்தவனின் கண்கள் அவன் ஊரின் எல்லையை நோக்கி வேகமாக நடையுடன் ஓட ஆரம்பித்தது.

இரு தோள் பைகளையும் தோள்களில் சரிசெய்து கொண்டு அவன் ஊரின் எல்லையை துரித நடையுடன் வந்தடைந்தான்.

தூரத்தில் தெரிந்த பசுமையான வயல் பரப்பில் தென்னை மரத்திற்கு கீழ் கட்டில் போட்டு அமர்ந்திருந்த ஒரு மனிதர். அவரின் கையில் ஒரு சிறு பெண் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த ஆதித்ய வர்மனின் நடை இன்னும் துரிதமானது.

தூரத்தில் யாரோ வருவதை பார்த்த தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்த மனிதர் தன் கண்களை சுருக்கிக் கொண்டு பார்க்க இராணுவ உடையில் ஒருவன் வருவதை பார்த்த அவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

“டே ஆதித்யா!” என்றவன் குழந்தையை இறக்கி விட்டு அவன் வரும் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

ஓடி வருபவன் யார் என்று பார்த்த ஆதித்ய வர்மனுக்கு ஆச்சர்யம் அது தன்னுடைய நண்பன் ஆறுமுகம்.

“அண்ணா…!” என்று இரண்டு புறமும் இருந்த பைகளை கீழே போட்டு விட்டு ஓடினான்.

ஓடிய வேகத்தில் அவனைக் கட்டிக் கொண்டு “அண்ணா நான் வந்துட்டேன்” என்று அவரை பார்க்க, “ஆதி எப்படி டா இருக்க…?”

“நான் இருக்கேன் ணா…?” என்று அவனின் பிடி ஆறுமுகத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டது.

ஆறுமுகம் பின்னால் எதற்கென்றே தெரியாமல் ஓடிவந்த குழந்தையும், ஆதித்யனை பார்த்து பயத்தில் ஆறுமுகத்தின் பின்னால் மறைந்து கொண்டது.

குழந்தை இருப்பதை உணர்ந்த ஆறுமுகம் ஆதித்யனை நகர்த்தி விட்டு தன் காலின் பின்புறம் இருந்த குட்டி பெண்ணை முன்னே நகர்த்தி வந்தவன் “இங்க பாரு இவர் யார்னு சொல்லு பாக்கலாம்” என்று குழந்தையிடம் சொன்னான்.

அதைக் கேட்ட ஆதித்ய வர்மனுக்கு ஆறு வயது நிரம்பிய பெண் பிள்ளையை பார்த்து அவனுக்குள் ஏதோ போல தோன்ற அவளின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான். “உங்க பேரு என்ன…?” என்று ஆசையாக கேட்டான்.

அவனை பார்த்து பயந்த குழந்தை ஒதுங்கி நகர, ஆறுமுகத்தின் முகத்தை கேள்வியாக பார்த்தான். அவனை பார்த்து சிரித்த ஆறுமுகம். அந்த குழந்தை பார்த்து “உங்க பேரை சொல்லு செல்லம்” என்றார்.

அதன் பாவாடையின் தலைப்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு கை விரலை வாயில் வைத்துக் கொண்டு “யாழினி…!” என்றாள்.

ஆதித்ய வர்மன் ‘யாழினி…!’ என்ற பெயரை கேட்டவுடன் அவனின் உதடுகள் சிரித்தாலும் கண்ணில் நிறைந்த நீர் அவனின் சிரித்த உதடுகளின் புன்னகையை தாண்டி வடிந்தது.

“ஏன் மாமா…! அழறீங்க…!” என்று தன் தந்தையை தெரியாமல் மாமா என்று சொல்லவும், தன் கையை தரையில் தட்டிக் கொண்டு கதறியவன் “நான் மாமா இல்ல தங்கம். நான் தான் உன்னோட அப்பா…!” என்று அவளின் கன்னத்தை பிடித்து அவளின் நெற்றியில் முத்தமிட பயத்தில் ஆதித்யனை விட்டு நகர்ந்து நின்றாள்.

அப்போது அங்கே ஓடி வந்த கண்ணாத்தா ஆறுமுகத்தின் மனைவி “ஐயா ஆதித்யா எப்படி ராசா இருக்க நீ, பட்டாளத்துல இருந்து பேருக்கேத்த மாதிரியே ராசா கணக்குல வந்திருக்கயே யா…!” என்றாள்.

“நான் எப்படி கா இருக்க முடியும். நான் பெத்த பிள்ளைக்கே என்னை அடையாளம் தெரியல. இதுல நான் எங்க நல்லா இருக்க முடியும். நான் பாவி கா…!” என்று அவனின் கதறல் அந்த வறண்ட காட்டையே சிலையாக உறைய செய்தது.

“அழதே யா…! யாழி குழந்தையா இருக்கும் போது நீ போன, அவ விவரம் தெரியாத பொண்ணு. சரியாகிடும் அழதே யா…!” என்ற கண்ணாத்தா, “யாழி…! என் அழகு புள்ள! இது தான் டி உன் அப்பா” என்று சொல்ல, கண் இமைக்காமல் பார்த்து நின்ற யாழினி ஆதித்ய வர்மனை பார்த்து “நீங்க தான் என் அப்பாவா…!” என்று கேட்டாள்

அவனுடைய தொண்டைக் குழி பேச்சை நிறுத்த வாய் திறக்க முடியாமல் அவளை பார்த்து ஆமாம் என்பது போல் ஏக்கத்துடன் அடுத்து என்ன சொல்வாளோ என்று தலையசைத்தான்.

யாழினியோ எதுவும் பேசாமல் அவனுடைய கழுத்தை கட்டிக் கொண்டு “எனக்கு அப்பா இருக்காரு…!” என்று சந்தோஷமாக கத்த ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன அந்த வார்த்தையை கேட்ட ஆதித்ய வர்மன் மனம் உடைந்தது அவளின் தோள்களில் தஞ்சம் புகுந்த அவனின் அவன் இதுவரை தாங்காத பாரத்தை இதயம் சுமந்தது போல் உணர்ந்தான். அவனின் அத்தனை பாரமும் அவனுடைய கண்ணீராக அவளின் தோள் மேல் உடைந்து வெளிவர அவனின் மனம் லேசானது அந்த தருணம்.

அவளோ பிஞ்சு மழலை அவனுடைய கன்னத்தை தொட்டுப் பார்த்து கண்களில் வடிந்த கண்ணீரை அவளின் மெல்லிய பூங்கரங்களால் துடைத்து விட்டாள்.

“ஐ ஜாலி நான் போயி எல்லார்கிட்டயும் என்னோட அப்பா வந்துட்டாரு அப்படின்னு சொல்லுவேன்.” என்று ஆதித்ய வர்மனை பார்த்து சொன்ன பிள்ளை அவன் கன்னத்தில் முத்தமிட்டு வேகமாக அந்தக் கல்லு காட்டில் வெரும் கால்களுடன் துள்ளி குதித்துக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

அதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த ஆதித்யவர்மன் அவனின் துயரம் தாளாமல் ஆறுமுகம் மற்றும் கண்ணாத்தாவின் கால்களை கட்டி கொண்டு அவனின் சுமைகளை அவர்களிடம் பகிர முடியாமல் தவித்து அமர்ந்தான்.

“எதுக்கு ராசா அழுற, அழாதய்யா உம்புள்ள என் புள்ள மாதிரி நீ விட்டுப் போனாலும் நாங்க விட மாட்டோயா…!” என்று சொன்ன கண்ணாத்தாவை பார்த்து “அக்கா! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அக்கா!” என்று அவன் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் பெருக்கெடுத்தது.

“ஆதித்யா நீ அழாதயா! இதுக்கு மேல இப்படியே போனா யாழினி வீணா போயிருவா! அதனால…!” என்று கண்ணாத்தா ஒரு கணம் அமைதியானாள்.

“ஏ புள்ள நீ சும்மா இரு நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். நீ போயி ஆதிக்கு ஏதாவது சாப்பிட எடுத்து வை. ரொம்ப தூரத்திலிருந்து வந்து இருக்கான். பசியா இருப்பான். போய் சாப்பாட்டு வேலையை முதல கவனி” என்றார் ஆறுமுகம்.

“பாருங்க மச மசன்னு நானும் இப்படியே நின்னுட்டேன். முதல்ல போய் வேலைய பாக்குறேன்” என்று அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள் கண்ணாத்தா.

அதற்குள் ஆறுமுகம் சென்று ஆதித்யனின் உடமைகளை எடுத்துக்கொண்டு அவனிடம் வந்தார்.

“வாயா கொஞ்சம் நீர் மோர் குடி. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்” என்றவர் இரண்டு தோள் பைகளையும் அவரின் ஒரு கையால் பிடித்து முதுகில் தூக்கி போட்டுக் கொண்டு ஆதித்யனின் தோளில் அரவணைப்பாய் இன்னொரு கையை வைத்துக்கொண்டு சொன்னார் அந்த ஆஜானுபாகுவான மனிதர் ஆறுமுகம்.

அதுவரை உடைந்து போய் அழுது கொண்டு இருந்த ஆதித்ய வர்மன் தன் கண்களை துடைத்துக் கொண்டு அவரின் அரவணைப்பில் ஒரு பெரிய பலம் கூடியது போல் அந்த இடத்தில் இருந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!