Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 5

CHAPTER 5

அத்தியாயம் 4

By nisharajan · October 19, 2026

0

அத்தியாயம் 4

ஆதித்யவர்மன் அவளின் கரம் பற்றும் முன்னே அவளுக்காக பரிந்து பேசிய விதத்தில் செந்தாழினி அவளின் மனதை அவனிடம் பறிகொடுத்தாள்.

அவளை மறந்து அவளின் மனம் அவனை பின் தொடர ஆரம்பித்தது. அவனின் கரம் பிடிக்க மங்கல நாதங்கள் முழங்க இனிதே மங்கல நாண் செந்தாழினியின் கழுத்தில் ஆதித்யவர்மன் பூட்டினான்.

முதல் நாள் இரவு அவனுக்குள் பயமும் பதட்டமும் ஒன்று சேர கலந்திருக்க, செந்தாழினி மணக்கோலத்தில் வீட்டில் ஒரு மூலையில் அமர்த்தப்பட்டிருந்தாள்.

அந்த சமயம் உள்ளே வந்த பாப்பாத்தியும் வனஜாவும் அவள் நகைகளை அணிந்து அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து விட்டு “இங்க பாரு வனஜா நகையை போட்டு மினுக்கிட்டு இருக்கலாம்னு நினைக்க வேண்டாம்னு சொல்லி வையி, காலம் கெட்டு போயி கிடக்கு, போற வரவன் கழுத்தை அறுத்துட்டு போயிடுவான்.” என்று ஜாடை மாடையாக செந்தாழினியை பார்த்து சொன்னாள் பாப்பாத்தி.

அதைக் கேட்ட வனஜா “அண்ணி! அம்மா சொல்றது பொய்யில்லை. நீங்க அம்மாகிட்ட உங்க நகையை கொடுத்து வைங்க. அவ்வளவும் பத்திரமா இருக்கும்” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட செந்தாழினி அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

“என்ன நெஞ்சழுத்தம் பாரு. இவ்வளவு தூரம் சொல்லியும் கழட்டறாளா பாரு, ஊமை ஊரை கெடுக்கும்னு ஏன் சொன்னாங்கன்னு இப்போ தான் தெரியுது. இதோ பாரு செந்தாழினி இங்கதான் நீ குப்பை கொட்டியாகனும், மரியாதையா சொல்றத கேட்டு இருக்க முடிஞ்சா இரு. இல்லன்னா வெட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று மிரட்டி விட்டு சென்றாள் பாப்பாத்தி. வனஜாவும் எதுவும் பேசாமல் தன் தாயின் பின்னே நடக்க ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்த செந்தாழினியின் கண்ணில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

‘இன்று தான் முதல் நாள், வந்த அன்னைக்கே இப்படி இருந்தால்…?’ என்று மனதில் நினைத்தாள்.

அவள் காதுகளில் ஒலித்தது தன் தந்தை அவளுக்காக ஒவ்வொரு நகையையும் பார்த்து பார்த்து செய்தது அவளின் நினைவுகளில் மறையாமல் நின்றது.

அந்த சமயம் உள்ளே வந்த ஜெயகாந்தம் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து தன் மகளிடம் கொடுத்து விட்டு “பாப்பா! நாங்க இன்னைக்கு இராவுல ஊருக்கு கிளம்பறோம். இனி நீ தான் எல்லாத்தையும் பாத்து பக்குவமா நடந்துக்கனும்.” என்று செந்தாழினியின் கண்ணீர் கசியும் படபடக்கும் விழிகளை பார்த்தவள்.

“மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையனா இருக்காரு. அவங்க குடும்பம் எப்படி இருந்தாலும், மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ தாயி.” என்று சொன்னவள் தன் மகளுக்கு திருஷ்டி கழித்து விட்டு ஆதித்யாவின் அறையில் விட்டு விட்டு வந்தாள் ஜெயகாந்தம்.

“என்ன அண்ணி பொண்ணை… பையன் அறையில் விட்டாச்சு போல” என்றாள் பாப்பாத்தி.

அதற்கு ஜெயகாந்தம் “ஆமாங்க அண்ணி!” என்று தலை குனிந்தவள். “கஷ்டத்தை பார்க்காம வளர்ந்த பொண்ணு. வேலைகளை சிட்டா செய்வா, ஆனா சிடுக்குன்னுன்னா கண்ணுல தண்ணி வந்திடும். ஏதாவது தப்பு செஞ்சா சொன்னா திருத்திக்குவா கோபமா பேசிடாதீங்க.” என்று சொன்னாள் ஜெயகாந்தம்.

மகளின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணில் நீர் வடிய பேசியவளை பார்த்த பாப்பாத்தி “எங்களையும் கண்ணுக்குள்ள வச்சி தான் வளர்த்தாங்க… ஏன் நாங்க இல்ல. உங்க பிள்ளையை யாரும் கடிச்சு சாப்பிட மாட்டோம். பயப்படாம போங்க” என்றாள் பாப்பாத்தி குத்தலாக பேசியபடி.

அதை கேட்ட ஜெயகாந்தத்திற்கு என்னவோ போல் ஆனது. அங்கு எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பினாள். ‘வந்துட்டா கஷ்டத்தை பார்க்காம வளர்ந்தாலாம். கண்ணீரை பாக்காம வளர்ந்தாலாம். இருக்கு உன் மவளுக்கு இரு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு உள்ளுக்குள்ளே வன்மத்தை வளர்த்தாள் பாப்பாத்தி.

ஆனால் ஜெயகாந்ததிற்கு புரிந்து விட்டது. தன் மகள் சிறையில் அடைபட்ட பறவை என்று நினைத்தவள் மேற்கொண்டு யாரிடமும் எதை பற்றியும் சொல்லிக் கொள்ளவில்லை.

முதலிரவு அறையில் பயத்தின் உச்சக் கட்டத்தில் உள்ளே நுழைந்த செந்தாழினி அங்கே அமர்ந்திருந்த ஆதித்யவர்மனை பார்த்து சிரித்து விட்டாள்.

அவனோ ஒரு மூலையில் பூனை போல அமர்ந்திருக்க அவனுடைய கால்கள் நடுங்கி கொண்டிருந்தது. அவளை பார்த்த ஆதித்யா தன்னுடைய நடுக்கத்தை அடக்க முற்பட்டாலும் அவனால் ஓர் அளவுக்கு தான் சுதாரிக்க முடிந்தது.

ஆனால் அவனுடைய நடுக்கம் அவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது. அவளுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனிடம் சென்றவள் பால் செம்பை நீட்டினாள்.

அவனோ ‘என்ன என்பது போல் அவளின் முகத்தை பார்த்தான்.’ “அம்மா பால் தர சொன்னாங்க.” என்று அவள் தட்டு தடுமாறி பேச, அப்போது தான் அவளின் குரலை முதல் முதலாக கேட்கிறான்.

அவளின் கண்களை பார்த்துக் கொண்டே பால் சொம்பை வாங்கியவன் முதல் ஒரு மடக்கை குடிக்கும் போதே அவளின் பார்வை பால் சொம்பையும் அவனின் கழுத்தில் பால் நகரும் அழகையும் பார்த்து ரசித்தாள்.

அவள் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த ஆதித்யனுக்கு “என்ன என்பது போல் பார்த்தான். அவளின் படபடக்கும் விழிகள் அவனின் உதட்டோரம் வடிந்த பாலை அவளின் நினைவுகளை மறந்தவள் தொட்டு துடைக்க, அவனுக்குள்ளே பயம் மறந்து ஒரு சிலிர்ப்பு.

அவளின் கண்களை பார்த்தவனுக்கு அவளுக்குள் தஞ்சம் புக மனதில் ஒரு ஏக்கம் கையில் இருந்த பால் சொம்பு தவறி விழ, அவளின் நாணம் அவளை விட்டு தப்பியது. அவனிடம் இருந்து நகர, அவனுடைய கைகள் தானாக அவளின் கைகளை பற்றியது.

அவளின் பெண்மையின் மெண்மையில் இதமாக திண்ட, இரு உயிர் ஓருயிர் ஆக, கூரையின் கீற்று வழியாக தெரிந்தே நிலாவே அதற்கு சாட்சி என்பது போல் அவர்களின் காதலின் அணையாத தீபத்தில் இணைந்தார்கள் உன்னில் நானாக என்னில் நீயாக என்று.

காலை கதிரவன் அவனின் கதிர்களை உதிர்க்கும் முன்னரே அறையின் வெளியில் பாத்திரங்கள் உருளும் சத்தம் காதை கிழித்தது.

திடுக்கிட்டு எழுந்தவளின் மேல் வலிமையுடன் இருந்த ஆதித்யனின் கரங்கள் அழுந்தி இருக்க, அதை பார்த்தவளின் முகத்தில் நாணம் தொற்றிக் கொள்ள, வாசலின் வெளியே பாத்திரம் உருளும் சப்தம் அவளின் காலையை படபடப்புடன் எழுப்பியது.

அவசரமாக சீலையை சரி செய்து கொண்டு அவனுடைய கையை தரையில் இறக்கி வைத்து விட்டு கதவை திறந்தாள்.

கதவை திறக்கும் போதே முன்னால் வந்து விழுந்தது வீடு சுத்தம் செய்யும் துடைப்பம்.

“வீட்டுக்கு வந்த பிள்ளைங்க காலகாலத்துல எழுந்து குளிச்சு முழுகி வீட்டு வேலையை பாக்கனும். அதை விட்டு புருஷனை கட்டிக்கிட்டு தூங்கினா ஊடு உருப்படும்” என்று விடியற் காலையிலேயே பஞ்சாங்கம் படிக்க ஆரம்பித்தாள் பாப்பாத்தி.

அவசரமாக சென்று குளித்துவிட்டு வந்தவள். வீடு முழுவதும் சுத்தம் செய்து விட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு தலை நிமிரும் போது தான் அடிவானத்தில் செங்கதிர் பரவ துவங்கியது.

அதற்கு கல்யாண வீட்டு பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பாத்திரங்கள் என்று மலை போல் குவித்து விட்டு சென்றாள் பாப்பாத்தி.

“இன்னைக்கு சாப்பாட்டு வேலையை நான் பாத்துக்கறேன். வெளி வேலையை நீ செய்” என்றவள். துணிகளையும் துவைக்க எடுத்து போட்டு விட்டு சென்றாள்.

அதை பார்த்த செந்தாழினிக்கு தலையே சுற்றுவது போல் ஆனது.

எதுவும் பேசாமல் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க, ஆதித்யா எழுந்து குளித்து விட்டு அவளை பார்க்கும் போது சிரித்த முகமாக நின்று அவனைப் பார்த்தாள்.

‘சாப்பிட்டயா…?’ என்று அவளை பார்த்து சைகை செய்தான் அவன். அதற்கு செந்தாழினி ஆச்சு என்பது போல் தலையசைத்தாள். அவன் கேட்டதே வயிறு நிறைந்தது போல் ஆக, பாப்பாத்தி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவை எடுத்து வைத்தவள்.

செந்தாழினியை பார்த்து முறைத்தாள். “என்ன பார்வை போயி பையன் வேலைக்கு கிளம்பனும் சாப்பாட்டை கட்டு” என்று சொல்ல,

“இன்னிக்கு எதுக்கு அவன் வேலைக்கு போகனும் முதலியாரை பார்த்து விடுப்பு சொல்லிட்டேன். இன்னைக்கு புள்ளைங்க ரெண்டும் கோவிலுக்கு போயிட்டு வரட்டும். புள்ளையையும் உட்கார சொல்லு சாப்பிடட்டும் கல்யாணம் ஆன ஜோடி தனித்தனியா சாப்பிடக்கூடாது” என்றார் கண்ணுப்பையன்.

அதைக் கேட்ட பாப்பாத்தி “உனக்கென்னயா பைத்தியம் பிடிச்சிடுச்சா! கண்ணாலத்துக்கு வாங்கின கடன் தலை நிறைய கிடக்க, இவளை கூட்டிட்டு ஊர் சுத்த சொல்ற விளங்கிடும் பவுசு” என்றாள் காட்டமாக.

அதைக் கேட்ட கண்ணுப்பையன் “ஒரு நாள் வேலைக்கு போகலன்னா ஒன்னும் ஆகாது. உன் வேலையை பாரு. புள்ளைக்கு தட்டை எடுத்து வை” என்று சொன்னவுடன் எதுவும் பேசாமல் கோபமாக தட்டை டம் என்று எடுத்து வைத்தாள்.

அந்த சத்தத்தில் சாப்பிட உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்தான் ஆதித்யன். “என்ன ஆச்சு டா…? நீ உட்காந்து சாப்பிடு” என்றாள்‌ பாப்பாத்தி.

அதைக் கேட்டவன் “அம்மா! உனக்கு தான் உடம்பு சரியில்ல போல, காலையில இருந்து பாத்திரத்தை பிடிக்க கூட திராணி இல்லாம எல்லாத்தையும் போட்டு உடைக்கிற. நீ சாப்பிட்டு தெம்பா தூங்கு. நான் அவளை கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என்று அங்கே இருந்து வந்தவன் “வா கிளம்பு!” என்று அவனுடைய சைக்கிளை எடுத்தான்.

“டே ஆதி நில்லு டா! சாப்பிட்டு போ!” என்றவளை பார்த்து “அம்மா நானும் பாக்குறேன் செந்தாழினி வந்ததுல இருந்து உன்னோட நடவடிக்கையே சரியில்ல. நான் கோயிலுக்கு போயிட்டு சாமிகிட்ட சொல்லிட்டு வரேன். இப்படியே எத்தனை நாளைக்கு தான் எங்க அம்மா இருப்பாங்க கொஞ்சமாவது மாருவாங்களான்னு கேட்டுட்டு வரேன் சரியா…?” என்றவன் கோபமாக அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தான்.

பின்னால் செந்தாழினி செல்வதா…? வேண்டாமா…? என்று அங்கேயே நின்று இருக்க, “நீ சந்தோஷமா போயிட்டு வாம்மா” என்று கண்ணுப்பையன் சொல்ல ‘சரி…!’ என்று சிரித்த முகத்துடன் தலை அசைத்து விட்டு அந்த இடத்திலிருந்து தன் கணவன் பின்னே செல்ல ஆரம்பித்தாள் அவள்.

அதேசமயம் பாப்பாத்தியின் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிய, கண்ணு பையனுக்கு எடுத்து வைத்திருந்த உணவை எடுத்து பாத்திரத்தில் போட்டுவிட்டு வேகமாக உள்ளே நடந்தாள். “ஏடி நில்லு! எங்க சோத்த எடுத்துட்டு போற கொண்டு வந்து கொடு.” என்று சத்தமாக கண்ணுப்பையன் கேட்க, “உன் மருமக வருவா…! அவள பொங்கி போட சொல்லி நீ தின்னு…!” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றவள் சமையலறையை பூட்டிவிட்டு வெளியே நடந்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!