“யாருமா நீங்க?” என்றார் ஏட்டு.
“சார் நான் வித்யா. இந்த சஞ்சயோட… வொய்ப்… அப்படி என்று சொல்லிக்க அருவருக்குற ஜென்மம் சார்.” என்றாள் பெண்.
“ஓ… வாமா. இப்ப தான் விசாரணை ஆரம்பிச்சிருக்கு. உனக்கு தெரியுமா இவங்க உறவு பத்தி?” எனக் கேட்டார்.
“அக்கா, தம்பி உறவை யாராவது சந்தேகப்படுவாங்களா சார்? அளவுக்கு அதிகமா உரிமை எடுத்தப்பவும், இவருக்கு கூடப்பிறந்த உறவுகள் இல்லை என்பதால், அவ்வளவு உரிமை எடுத்துக்குறார் நினைச்சேன். பாதி நேரம் அவங்க வீட்டுல இருப்பார். கேட்டா… அந்த அக்கா பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி குடுத்தேன் சொல்லுவார். இப்ப தான சார் தெரியது… யாருக்கு… என்ன பாடம் எடுத்திருக்கான்னு. வேலை விசயமா ஓனர் வெளியூருக்கு போக சொல்லியிருக்கார். அங்க எத்தனை நாள் ஆகும் தெரியலை, அப்பப்ப போன் பண்ணுறேன் என்று சொல்லிட்டு போனான் சார்.”
சில நொடிகள் அழுதவள், ‘இவனுக்காக அழ வேண்டுமா?’ என்று கண்ணீரைத் துடைத்து, “இந்த அண்ணன் கம்ப்ளைன்ட் குடுக்குறது வரை, எதுவும் தெரியாத முட்டாக்கழுதையா இருந்திருக்கேன் சார். எங்களுக்கு மூன்று வயசில் குழந்தை இருக்கு சார்.” என்றாள்.
“ஓ… இப்ப என்ன செய்யுறதா இருக்கீங்க?” என்று கேட்டார் உதவி ஆய்வாளர்.
“உங்க விசாரணை முடிவில் சொல்லுறேன் சார்” என்றாள் அப்பெண்.
அதே சமயம், “அக்கா, மாமா…” என்று உள்ளே நுழைந்த பெண்ணைக் கண்டு, யோகா முகம் கொஞ்சம் அதிர்ந்தாலும், கள்ள உறவு கொடுத்த தைரியத்தில் அசராது நின்றாள்.
“உன்னை யார் இங்க வரச்சொன்னது? புருஷன் இல்லாதவளுக்கு போலீஸ் ஸ்டேசன்ல என்ன வேலை?” என்று தங்கையை முடக்கிப்போடும் வார்த்தையை பிரயோகிக்க,
“நான் தான் வரச்சொன்னேன். நான் கூப்பிட்டு வரலைன்னா, உன் உடன்பிறப்பு சொன்னா கேட்ப என்ற எண்ணம் தான். அதோட, என் பிள்ளைகளை இங்க எவ்வளவு நேரம் வைத்திருக்கிறது? சார் ஒரு நிமிஷம்” என்று குழந்தைகளுடன் அவள் அருகில் சென்றவன், ‘ஈஸ்வரி…’ என்று உச்சரிக்க வந்தவன், அது மனைவியின் பெயரில் பாதி என்பதால் அந்தப் பெயரில் உள்ள வெறுப்பில், “நீ பிள்ளைகளைக் கூப்பிட்டு வெளிய காத்திரு நான் வரேன்” என்று அனுப்பப் பார்த்தான்.
“ஆனா மாமா… இங்க என்ன நடக்குது? அக்கா ஏன் அவனோட…” சில நொடிகளில் மூளை நடப்பதை உணர்த்த, அதிர்ந்து விழித்தாள் பெண்.
அவளின் அதிர்ந்த விழிகளைப் பார்த்தவன், “புரிஞ்சிடுச்சி இல்ல. கூட்டிட்டுப் போ” என்றான்.
“அக்கா என்ன இது?” என்று உடன்பிறந்தவரிடம் கேட்க,
“உன்னை நான் பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போகச் சொன்னேன். நவீன், அஞ்சனா சித்தி கூட போங்க. அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று அவர்களை அனுப்பி திரும்பியவன், “சாரி சார். நீங்க கேளுங்க” என்றான் நிமிர்வாக.
“நீ சொல்லு… என்ன நடந்ததுனு?” என்று யோகாவிடம் அதிகாரக்குரலில் உதவி ஆய்வாளர் கேட்டார்.
“சா..சார்… அ..அது… ஆரம்பத்துல பெருசா எதுவும் கிடையாது. அவன் மனைவி மாசமா இருந்தப்ப… எப்படியோ எங்களுக்குள்…” திக்கி திணறி ஆரம்பித்தாள்.
“அப்ப இந்தக் கேவலம் பல வருடமா ஓடுதா? நான்தான் எதுவும் தெரியாத ஏமாளி கழுதையா இருந்திருக்கேனா?” என்ற வித்யா யோகாவிடம் திரும்பி, “நீயெல்லாம் ஒரு பொண்ணா? இன்னொருத்தி வாழ்க்கையை கெடுக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு? தம்பி தம்பினு சொல்லி, இப்படி தரங்கெட்ட வேலையை பாத்திருக்கியே. அசிங்கமா இல்ல உனக்கு. நீ மாசமா இருந்தப்ப, உன் புருஷன் இப்படிப் போயிருந்தா தெரிஞ்சிருக்கும் என் நிலை.” என்றவள் கணவனிடம் திரும்பி,
“எந்த நிலையிலும் மனைவியை விடவோ, விட்டுக் கொடுக்கவோ செய்யாதவன் தான்டா மனுஷன். இதோ பொம்பள தப்பு பண்ணி இருக்கா, இருந்தும் அவளை கூட்டிட்டு போக வந்திருக்கிறார். அதுக்கு பேர்தான்டா திருமண பந்தம். அதை நாங்க மதிச்சோம். ஆனா… நீங்க ரெண்டு பேரும் உடல் சுகத்துக்காக அலைஞ்சிருக்கீங்க. ச்சீய்…” என்று அவன் முகத்தில் காரித்துப்பினாள்.
“நீ அமைதியா இருமா. ஏய் நீ சொல்லு?” என்று யோகாவை அதட்டினார்.
அவரவர் செயல்களை வைத்தே மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படும். யோகா, சஞ்சய் செயலுக்கான மதிப்பின் அளவு கீழிறங்கி தான் இருக்கும். மருந்துக்கும் மதிக்கவில்லை அந்த உதவி ஆய்வாளர்.
“எங்களோட உறவை இவர் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்துட்டாரு. பார்த்ததும் திட்டி எச்சரிக்கை செய்தார். அந்த டைம் தப்பு பண்றமோ தோணுச்சு. சரி இனி சரியா இருக்கலாம் அப்படின்னு நினைச்சேன். ஆனா இவன் என்ன விடல. என்னை திரும்பத் திரும்ப அப்ரோச் பண்ணதுல, என்னோட மனசு மாறிடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் எங்களுக்கு பழைய உறவு ஆரம்பிச்சிடுச்சி. ஒரு கட்டத்துல திரும்பவும் இவருக்கு தெரிஞ்சிடுச்சி. அதுக்கு மேல அவரோட வாழ முடியாதுனு தோணிடுச்சி. நாங்க தனியா போய் கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு பேசி முடிவு பண்ணி வீட்ல இருந்து கிளம்பிட்டோம். உப்பை இங்க நிற்கிறோம். எங்களை தனியா விடுங்க சார். நாங்க எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். எங்களுக்கு யாருமே வேண்டாம்.” என்று சொன்னாள் யோகா.
இப்பொழுது உதவி ஆய்வாளரோ, “அப்ப உன் புருஷன ஆம்பளை இல்லைன்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“அது அப்படி இல்ல சார். எப்பவும் வேலை வேலைன்னு இருப்பாரு. வேலை முடிச்சு வந்தா, பிள்ளைங்களோட தான் நிற்பார். என்கிட்ட அன்பா தான் இருப்பார். இருந்தாலும் இவனைப் பார்த்துப் பேசி பழகிய பிறகு, அந்த அன்பும் பிடிக்கல. பிடிக்காதவனோட வாழ வேண்டான்னு சட்டமே சொல்லுது சார். எங்களுக்கு புடிச்ச வாழ்க்கை நாங்க தேர்ந்தெடுத்துட்டோம். இப்ப எங்களை வாழவிடாம நீங்க தொந்தரவு பண்ணுறீங்க. எங்கள விடுங்க சார். நாங்க எங்களுக்கான இடம் தேடிப்போறோம்” என்றாள் அவள்.
“ஓ… சட்டம் பேசுறீங்க நீங்க. அதுசரி. மேலே இருக்கிறவன் இல்லீகல் அபேருக்கு ஆதரவு கொடுக்குறப்போ, நீங்க ஏன் பேச மாட்டீங்க. ஆமா. உங்களை மட்டுமே யோசிக்கிறீங்களே. இங்க ஒரு ரெண்டு ஜீவன்… ரெண்டு இல்ல. ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு ஜீவன், உங்களை நம்பி இப்ப நடுரோட்ல நிக்குது. இவங்களுக்கு என்ன பதில்?” என்று அவர் கேட்க,
“வேணும்னா அவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வாழ சொல்லுங்க சார்” என்று அவள் கணவனையும், வித்யாவையும் பார்த்து அலட்டாது சொன்னாள்.
“ஏய்…” என்று கையை ஓங்கியபடி இருவரும் வர,
“ச்சீய்… எங்களையும் உங்களைப்போல அசிங்கம் பிடிச்சவங்க நினைச்சீகளா. அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரி. அக்கா, தம்பி… அண்ணன், தங்கச்சி உறவு உங்களுக்கு தெரியாது. ஆனா, எங்களை பொறுத்த வரைக்கும், அது புனிதமானது. தங்கச்சி என்றால் தாய்க்கு அடுத்தபடி… அதாவது பெத்த பொண்ணுக்கு சமானம். உங்களை மாதிரி…” என்று ஓங்கிய கையை இறக்கினான் அவன்.
“நீங்க ஏன் அண்ணே அவங்களுக்கு விளக்கம் குடுக்குறீங்க. அவங்க லட்சணம் தான் தெரிஞ்சு போச்சே. தான் செய்வது அசிங்கம் என்று தெரியாம, அடுத்தவங்களையும் அந்த அசிங்கத்துக்குள்ள இழுக்கப் பாக்குறாங்க” என்று கோபத்துடன் சொன்னாள் வித்யா.
“அப்போ உனக்கு அவன் தான் வேணும் என்ற முடிவில் தெளிவா இருக்க. சரி… இப்போ அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்“ என்று சஞ்சயிடம் திரும்பியவர், “நீ சொல்லு. உன்னுடைய முடிவும் தெரியனும் இல்ல?” என்றார்.
“சார் அது…” என்று தயங்கி மனைவி முகம் பார்த்தான்.
“ஏன் என் முகத்தை பாக்குற. அவ… எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வாழு சொன்னப்போ, உன் முகத்தில் ஒரு சின்ன தவிப்பு கூட இல்லையே. அப்புறம் நீ பாத்து என்ன செய்யப்போற சொல்லு. எல்லாம் வெட்ட வெளிச்சமா தெரிஞ்சிடுச்சு. இனிமே நீ மறைத்து ஒன்னும் பண்ண முடியாது. நீ பேசு” என்றாள் வித்யா.
“அது சார். முதல்ல சாதாரணமா பக்கத்து வீட்டு ஆட்களா தான் பேச ஆரம்பிச்சோம். பேச பழக புடிச்சி இருந்தது. அப்பப்ப இவங்க வீட்டுக்கு போறப்போ அவ டிரஸ் கொஞ்சம் விலகி… நான் அதுல சலனப்பட்டு… முயற்சி செய்து பார்த்தேன். அதே எண்ணம் இவளுக்கும் இருந்திருக்கும் போல. அதனால தான் கொஞ்சம் கொஞ்சமா நெருங்க ஆரம்பிச்சு, ஒருமுறை எல்லை மீறிட்டோம். ஒருமுறை என்பது பலமுறையா மாறிடுச்சி.”
“எங்க துணைங்க இரண்டு பேரும், எங்களை சந்தேகப்படாதது எங்களுக்கு வசதியா போச்சு. ஒரு நேரம் சிக்கிக்கிட்டாலும், பழகிய அந்த பழக்கத்தை என்னால விட முடியல. யோகா வேண்டாம்ன்னு தான் சொன்னா. நான்தான் இது தப்பு கிடையாது. நமக்குப் பிடிச்சதை நாம செய்யுறது தப்பே இல்ல என்று சொல்லி சொல்லியே, திரும்பியும் இவளோட உறவை ஏற்படுத்திக்கிட்டேன். நாளாக நாளாக எங்க ரெண்டு பேருக்கும் தான் பொருத்தம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம். என்ன அதை செயல்படுத்த முடியாமல் இருந்தோம். இவ புருஷன் திரும்பவும் தெரிஞ்சு சண்டை போட்டது எங்களுக்கு வசதியா போச்சு. அதுதான் ரெண்டு பேருமே வெளியே வந்துட்டோம். இரண்டு நாள் ஹோட்டலில் இருந்தது கூட, வீடு வாடகைக்கு ஏற்பாடு பண்ணுறதுக்காக தான். வீடும் பாத்து நாளைக்கு குடிபோக இருந்தோம். அதுக்கு முன்ன கோயில்ல வைத்து இவ கழுத்துல தாலி கட்டவும் முடிவு பண்ணி இருந்தேன். அதுக்குள்ள நீங்க கூட்டிட்டு வந்துட்டீங்க” என்றான் எந்தவித குற்றவுணர்வும் இல்லாது..
“அப்போ பைனலா இவளுக்கு புருஷன் வேண்டாம். அவனுக்கு பொண்டாட்டி வேண்டாம். நந்தனுக்கு பிள்ளைகளுக்காகவாது பொண்டாட்டி வேணும் கேட்கிறார். உனக்கு என்னமா?” என்று அந்த பெண் வித்யாவிடம் கேட்டார் அவர்.
“என் புருஷன் செத்து ரெண்டு நாள் ஆயிடுச்சு சார். செத்த பிணத்துக்கு எதுக்கு உயிர் குடுக்கணும். பிணம் எப்பவும் பிணம் தான் சார். எனக்கான வாழ்க்கையை நான் தேடிக்கிறேன் சார். எனக்கு அப்பா, அம்மானு குடும்பம் இருக்கதான் செய்யுறாங்க. அப்படி எல்லாம் நடுரோட்டில் விட்டுட மாட்டாங்க. அப்படியே விட்டாலும் கிடைக்கிற வேலையை செஞ்சு என் பிள்ளையை நான் காப்பாத்திக்குவேன் சார். இவங்க சொன்ன மாதிரி அசிங்கமா அந்த அண்ணனோட… அந்த வார்த்தைக்காகவே இவங்களை தண்டிக்கணும் சார்.” என்று எதையோ யோசித்து, “ஆனா சார்… சட்டம் இல்லீகல் உறவை ஏத்துக்குது. அப்புறம் எப்படி எங்களைப் போன்றவர்களுக்கு நியாயம் கிடைக்கும்?”
“அதெல்லாம் கிடைக்கும்மா. ஈஸியா இவன்கிட்ட விவாகரத்து வாங்கிக்கலாம். ஜீவனாம்சம் அப்படின்னு ஒரு பெரிய தொகை அவனிடம் கேளு. அவனால் உனக்கு தரவே முடியாது. ஆனால் தந்துதான் ஆகணும்னு கோர்ட்ல வாதாடனும். கோர்ட் சம்மதிச்சி அதுக்காகவே இவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி உனக்கு தர ஓடுவான். இதோ இந்த நந்தன் ஓடுன மாதிரி ஓடுவான் இல்ல. அப்படி ஓடுறப்போ, அங்க இவங்க காதல்… இல்லயில்ல இவங்க காமம் செத்துப் போகும். ஏன்னா புருஷன் வேலை வேலைன்னு போயிடுறதனால தான், இவனைப் புடிச்சதுன்னு சொன்னா. இவனும் அதையே செய்யுறப்போ, என்ன செய்வா? இவனையும் விட்டுட்டு போயிருவா. அதுவே இவனுக்கான தண்டனை தானம்மா” என்றார் அவர்.
“நீங்க சொல்லுவது நியாயம் தான் சார். ஆனா, எனக்கு இவனுடைய பணம் தேவையில்லை சார். இவனுடைய உறவும் எனக்கு வேண்டாம். உடனே எனக்கு மியூச்சுவலா விவாகரத்து மட்டும் வாங்கி கொடுத்துடுங்க. எனக்கான வாழ்க்கை இனி நான் பாத்துக்குறேன் சார். இப்ப இருக்கிறது வீடு என்னோட அப்பா அம்மா சீதனமா வாங்கிக் கொடுத்தது. அந்த வீட்டில் நானும் என் பொண்ணும் இருப்போம். தவறுதலா கூட இவன் அந்த பக்கம் வரக்கூடாது. அதை மட்டும் பாத்துக்கோங்க சார்” என்றாள் பெண்.
“சரிமா. உங்களுடைய எண்ணத்தை எழுத்தா எழுதிக் குடுத்துட்டு போங்க. ரைட்டர் இந்த பொண்ணுகிட்ட கேஸ் விஷயமா எழுதி வாங்கிட்டு அனுப்புங்க. நீ போமா” என்று அவளை அங்கிருந்து நகர்த்தி விட்டு, “நீ சொல்லுப்பா. உன்னுடைய முடிவு என்ன? அந்தப் பொண்ணு அவ்வளவு தெளிவா, என் பிள்ளையை நான் பாத்துக்குறேன்னு சொல்லிடுச்சு. கஷ்டமா, நஷ்டமோ ஒரு பொண்ணு அவ்ளோ தைரியமா நின்னு, அந்த வார்த்தை சொல்லுது. இப்பவும் நீ என் பிள்ளைகளுக்காக இவதான் வேணும்னு சொல்ல போறியா?” என்று கேட்டார்.
“ஆமா சார். இவள்தான் வேணும்” என்று அவன் சொல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.
ஏன் அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த யோகாவின் தங்கைக்கு பேரதிர்ச்சி.