Stories that touch hearts

Home  /  13. நிஷா ராஜன் (காலம் கடந்த காதல் அலைகள்)  /  Chapter 3

CHAPTER 3

அத்தியாயம் 2

By nisharajan · October 5, 2026

1

காலம் கடந்த காதல் அலைகள்
நிஷா ராஜன்
அத்தியாயம் 2

வாழ்வின் எல்லைக்கே சென்று விட்ட மௌனம் அவனிடம் மீதம் இருக்க, மனம் அமைதியில்லாமல் அலை மோதிக் கொண்டிருந்த நிமிடங்களில் அவனின் எண்ண அலைகள் இரயில் வண்டியின் தடதட ஓசையில் அதுவும் சேர்ந்து பயணப்பட ஆரம்பித்தது.

ஆதித்ய வர்மன்— எண்பதுகளின் இளமை துள்ளலும், துடிப்பும் நிறைந்த இளைஞன். சுத்தமாக மழித்த தாடையும், மூக்கின் சிறு கோடாக மீசை ஒன்று நளினமாட, வாட்டசாட்டமான சாதாரண குடும்பத்து இளைஞன்.

“செந்தாழம் பூவில் வந்தாலும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்ற பாடல் அந்த பேருந்தில் ஒலித்துக் கொண்டு இருக்க,

காக்கி உடையில் “டிக்கெட், டிக்கெட்” என்று சொல்லிக் கொண்டு சில்லறைகளை தான் மாட்டியிருந்த பையில் போட்டுக்கொண்டு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தான். ஆதித்ய வர்மன் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை. சில சமயங்களில் டிரைவரை நகர சொல்லி விட்டு வாய்ப்பு கிடைத்தால் பேருந்தும் ஓட்டி பார்ப்பான்.

அந்த காலகட்டத்தில் இருந்த ரஜினி, கமல், போன்று முடி திருத்தம் பார்க்கவே சில சமயங்களில் ரஜினியை போல் பாவனை செய்து கொண்டு அதே போல் யூனிபார்ம் பேண்டையும் சட்டையும் தைக்க சொல்லி எண்பதுகளின் டிரண்டிங்கில் சக்கை போடு போடுபவன். ஆனால் முன் கோபி. வாய் பேசும் முன் கை பேசி இருக்கும்.

பாடலின் தொடர்ச்சியாக “வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ” என்று பாடல் வரிகள் ஒலித்திருக்க, ஒரு பெண்ணின் அலறும் குரல்,

“ஆஆஆ…”

அவன் திரும்பி பார்க்கையில் பயத்தில் நடுங்கிய பெண் எதுவும் பேசாமல் ஒதுங்கி நிற்க… முன்னே சென்ற ஆதித்ய வர்மன் “என்ன ஆச்சு மா” என்று கேட்க, அவள் கண்ணீருடன் குனிந்த தலை நிமிராமல் தயக்கத்துடன் தரை தளத்தை பார்த்த படி நின்றாள்.

அவன் அருகில் நின்றிருந்த ஆண் எதிர் திசையில் ‘மாட்டிக் கொள்ள போறோமோ’ என்ற பயத்தில் தலை குனிந்து திறு திறுவென்று விழித்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ஆதித்ய வர்மனுக்கு புரிந்து போய்விட்டது. ‘இவன் ஏதோ சில்மிஷம் பண்ணிருக்கான்னு.’ ஆதித்யாவுக்கு வந்த கோபத்தில் அவனின் கன்னத்தில் பளார்…! என்று அவனின் காது சவ்வு கிழியும் அளவிற்கு ஒரு அறை வைத்தான்.

அந்த சத்தத்தில் பேருந்து பிரேக் போடப்பட்டு சரக்கென்று நின்றது.

“டேய் என்னை யாருன்னு நினைச்ச, எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலேயே கைய வச்சிருப்ப” என்று அவன் கத்திக் கொண்டே பேருந்தில் இருந்து கீழே இறங்கியவனை பார்த்து,

“உன்னால என்ன முடியுமோ பண்ணு டா, நான் இந்த பஸ்ல தான் இருப்பேன். பொண்ணுங்க மேல கைய வைக்கிற நீ எல்லாம் ஒரு ஆம்பள, இதுக்கு மேல உன்னை இந்தப் பக்கம் பார்க்க கூடாது. ஓடி போய்டு” என்று சத்தமிட்டான்.

“அண்ணா பஸ்ஸை எடுங்க, இனிமே எவனாவது பொண்ணுங்க மேல கைய வைக்கட்டும் முறிச்சி விட்றுவேன்” என்று திரும்பியவனை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அந்த பெண்.

“அழதே மா! தைரியமா அவனை எதிர்த்து நிக்கிறத விட்டு அழகூடாது” என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்தான்.

“ஏம்பா யாருன்னே தெரியல, அவன் மேல எதுக்கு கைய வச்ச, ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா என்ன பண்ணுவ” என்றார். ஒரு நடுத்தர வயது ஆண்.

“ஆமா யா அங்கே உன் பொண்ணை எவானது தடவி இருந்த நீ இப்படி தான் சொல்லுவயோ” என்று அவரை பார்த்து முறைத்து விட்டு முன்னேறினான் ஆதித்ய வர்மன்.

அவருக்கு அவன் சொன்ன அந்த வார்த்தை சுருக்கென்று ஆனது.பேருந்தில் இருந்து இறங்கி விட்டார். ஆனால் அவர்களின் பயணம் இந்த பேருந்துடன் முடிய போவதில்லை என்று ஆதித்யனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆதித்யனுக்கோ ‘போனா போகட்டும் பேச வந்துட்டான்’ என்று அவனுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

“ஆதி! எத்தனை நாளைக்கு தான் நீ இப்படியே டிக்கெட் கொடுத்துட்டு இருக்கலாம்னு நினைக்கிற நல்லா படிச்சிருக்க, சீக்கிரம் வேலையை தேடிக்க வேண்டியது தானே…!” என்று சிவராமன் டிரைவர் கேட்க,

“எங்க ணா வாங்குனா சர்கார் உத்தியோகம் தான் வாங்கனும் இல்லை. இப்படி பக்கத்துலயே எங்கயாவது வேலைக்கு போன்னு அம்மா சொல்றாங்க. நானும் முடிஞ்ச அளவுக்கு வேலை தேடிட்டு இருக்கேன். பணம் தான் வேலை செய்யுது.

தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணும் போது சேத்து வச்ச காசு செலவு ஆகி, கூட கடனும் வாங்குறதா போச்சு. இப்போதைக்கு கிடைக்கிற வேலையை தான் செய்யனும்” என்று தன்னிலையை சொன்னவன் அவனின் கையில் இருந்த யுபிஎஸ்சி புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான்.

அதேசமயம் அவனுக்கு டிப்போவில் இருந்து போன் வந்திருந்தது. ஆதித்ய வர்மனின் ஓனர், “ஆதித்யா உங்க அம்மா தான் போன் பண்ணாங்க.” என்றதும் அவனுக்கு அடிவயிரே கலங்கியது போல் ஆனது.

“என்ன சொன்னாங்க ணா” என்றான் பதட்டமாக,

“உன்ன வீட்டுக்கு கிளம்பி வர சொன்னாங்க டா, எதுக்குன்னு விசயம்லா சொல்லல” என்று அவர் சொல்லி விட்டு சென்று விட,

ஆதித்யாவிற்கோ ‘அடுத்து என்ன பிரச்சனை ஆரம்பிக்க போகுதோ’ என்று பயத்தில் அவசரமாக கிளம்பினான்.

வீட்டில் சென்று பார்த்தால் தன்னுடைய தங்கை, தங்கையின் கணவர், அவளின் மாமனார் மற்றும் பேருந்தில் ஆதித்யன் பேசிய அந்த நடுத்தர வயது மனிதர் என்று அவர்கள் வந்திருக்க,

“எதுக்கு இவங்க வந்திருக்காங்க. கூட இந்தாளு எதுக்கு வந்திருக்கான்.” என்று ஆதித்யாவிற்கு குழப்பமாக, புரியாமல் அவனுடைய தாயை பார்த்தான்.

“உன்னை எங்கையோ அய்யா பார்த்து பேசினாராம். அவருக்கு உன் பேச்சு நடவடிக்கை பிடிச்சு போச்சாம். அதனால அவரு பொண்ணை உனக்கு கல்யாணம் பேச வந்திருக்காரு” என்று சொல்ல, அவனுக்கோ கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

ஆனால் வெளி காட்டிக் கொள்ளவில்லை. “இல்லைங்க நீங்க ஏதோ தப்பா நினைச்சிட்டு வந்திருக்கீங்க. எனக்கு இப்ப அந்த எண்ணம் இல்ல. சரியான வேலை இல்லாம இருக்கேன்.” என்று அவன் தட்டு தடுமாறி சொன்னான்.

“தம்பி! என்னை நீ சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். உன்னோட தங்கச்சிக்கு சின்ன மாமனார்.” என்று சொல்லவும்.

ஆதித்யாவிற்கு ‘அய்யோ!’ என்பது போல் ஆனது. ‘யாருன்னு தெரியாம வாய்யை விட்டயே டா ஆதி!’ என்று அவனின் கைவிரல்களால் முகத்தை மூடிக் கொள்ள,

அவர் அவனை பார்த்து சிரித்து விட்டு “நமக்குன்னு ஒரு லாரி பட்டறை இருக்கு. இஷ்டம் னா அங்க வந்து வேலை செய்ங்க. இல்லன்னா இப்போ செய்யுற வேலையையே தொடர்ந்து செய்ங்க…!” என்று அவர் சொல்லவும் “சரிங்க நான் எங்க வீட்டுல பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்றாள் ஆதித்ய வர்மனின் தாய்.

“சரி மா! நல்ல முடிவா சொல்லுவீங்கன்னு நான் எதிர் பார்க்கிறேன்” என்று அவர் சென்று விட,

ஆதித்ய வர்மனின் தங்கை வனஜா “அம்மா இங்க வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தன் தாயை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“என்ன டி இப்போ எதுக்கு என்னை இங்க தனியா கூட்டிட்டு வர, என்ன சொல்லனும் சொல்லு” என்று பாப்பாத்தி ஆதித்யனின் தாய் கேட்டாள்.

“அம்மா என்ன அவங்களை நம்மள மாதிரி ஆளுங்கன்னு நினைச்சியா. அவங்க பெரிய இடம்…! நீ அந்த பொண்ணை அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அந்த பொண்ணு கொண்டு வர நகையை எனக்கு கொடுக்கலாம்ல,

எங்க மாமியார் வேற உங்க வீட்டுல எப்போ போட வேண்டிய நகையை போடுவாங்கன்னு கேட்குறாங்க.” என்று அவள் சொல்லவும் பாப்பாத்தி எதையோ யோசித்தவராக வெளியே வந்தவள்.

வனஜாவின் கணவர் கண்ணியப்பனிடம் “நான் மாமா வந்ததுக்கு பிறகு அங்க அழைச்சிட்டு வரேன். பேசி முடிச்சிடலாம்” என்று சொல்ல, அந்த இடத்தில் ஆதித்ய வர்மனால் எதுவும் பேச முடியவில்லை.

அவன் தன் தாயின் முடிவை கேட்டு திகைத்து நிற்க, “சரி மா நாங்க கிளம்புறோம்” என்று வனஜா சந்தோஷமாக அங்கிருந்து அவளின் கணவரோடு சென்றாள்.

“என்னம்மா ஆச்சு உனக்கு. ஏதேதோ சொல்லிட்டு இருக்கீங்க.

நீ பாட்டுக்கு அப்பா வந்ததும் வரேன்னு சொல்ற…! என்ன பாத்தா உனக்கு எப்படி தான் தெரியுது.

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா இத்தனை கடனை வாங்கி வச்சிட்டு இப்ப போய் எனக்கு கல்யாணம் பண்ணனும்னு வேற பேசுற.

சரியா ஒரு வேலை கூட இல்ல இப்ப அந்த பொண்ணு வந்தா என் நிலைமை. கொஞ்சம் கூட உனக்கு புரியுதா? இல்லையா?” என்று தலையில் அடித்துக் கொண்டு,

“எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். தயவு செஞ்சு என்னை நிம்மதியா விடுங்க. எனக்கு அதுவே போதும்” என்று ஆதித்ய வர்மன் புலம்ப,

“நீ பேசுறதுக்கு எல்லாம் இங்க இடம் இல்ல. நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் நீ கேளு.

உனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். உங்க அப்பா வந்ததும் போய் அந்த பொண்ண பார்த்துட்டு வரோம்.

குறிச்ச நேரத்துல கல்யாணம் பண்றோம் அதை மட்டும் மனசுல வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு பாப்பாத்தியும் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தாள்.

இப்போது யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்த ஆதித்யா அவனுடைய எதிர்காலத்தை நினைத்து புலம்புவதா…? இல்லை அழுவதா…? என்று கூட தெரியாமல் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.

அப்போது அவருடைய தந்தை கண்ணு பையன் அங்கே வந்தார்.

“தம்பி வர்மா! எப்ப சாமி வந்த” என்று அவர் கூப்பிட “அண்ணா!” என்று அவரின் தோளை கட்டிக்கொண்டு அழுதான் ஆதித்ய வர்மன்.

“ஏன் டா என்ன ஆச்சு…! எதுக்கு இப்படி அழர” என்று அவருடைய தந்தை கேட்க, நடந்த விவரங்களை தன் தந்தையிடம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

அதைக் கேட்ட கண்ணு பையன் “ஏலேய் பாப்பா! இப்போ என்ன வேலைக்கு உடனே மவுனுக்கு கண்ணாலம் பண்ணனும்னு ஆடிட்டு இருக்க” என்று அவர் கோபமாக தன் மனைவியை கேட்க,

“ஏய்யா பெரிய மனுஷா! இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன் மகனுக்கு கல்யாணம் பண்ணாம வீட்டுலயே வச்சிருக்காலான்னு பார்க்கிறே, அவன் வயசு பசங்க எல்லாம் கண்ணாலம் பண்ணி கையில ஒன்னை வெச்சிக்கிட்டு சுத்துதுங்க.

இப்ப வந்துட்டு போனவங்க சாதாரணமான இடம் கிடையாது. உன்னோட மகளோட சின்ன மாமனார் வீடு. நல்ல வசதியானவங்க.

மூணு பசங்க ஒரு பொட்ட புள்ள. அந்த பிள்ளைக்கு தான் அவனை கேட்க வந்திருக்கிறாங்க.

வந்த சம்மந்தம் நல்லபடியா இருக்குதுன்னு நினைச்சு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வைக்கிற வழிய பாரு. அத விட்டுட்டு தேவையில்லாம அவன் கூட சேர்ந்து நீயும் பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது பாத்துக்கோ” என்று கையில் கொண்டு வந்து அரிசி கழுவிய தண்ணி ஊற்றிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தாள்.

அவள் சொன்ன தன் மகளின் சின்ன மாமனார் என்ற வார்த்தை அவரை ஏதோ சிந்திக்க வைத்தது. ‘இப்போ இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொன்னா நம்ம பிள்ளைக்கு நாளபின்ன ஏதாவது பிரச்சனை வந்துருமா…?’ என்று யோசித்தவர் தன் மனைவி சொன்னதைக் கேட்டு சரி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!