• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 54

Joined
Jan 15, 2026
Messages
109
விவாதக் காதல் – 54


“வா மச்சான். எப்போ வந்த? வீட்ல சிஸ்டர் நல்லா இருக்காங்களா?”

“ஹாங் இருக்காடா. அவளை பார்த்துக்க அவங்க அக்கா வந்து இருக்காங்க. அதான் நீ போன்ல சொன்னதும், நான் உடனே என் தங்கச்சியை பார்க்க கிளம்பி வந்துட்டேன்.” என்றான் சுரேஷ்.

“ஓ அப்போ இவரு சொல்லி தான் நீ வந்தியாக்கும்?” தங்கை கோவித்துக்கொள்ள,

“ஆமாம்மா. என் மச்சான் தான் என்னை உங்க பங்க்ஷன்கு கூப்பிட்டான். நீயும் பாட்டியும் தான் என்னை சுத்தமா மறந்துட்டீங்களே.”

“ஆம்பளையா லட்சணமா நீங்க குடும்பத்தை கவனிச்சிகிட்டா. நாங்க ஏன் உங்கள மறக்க போறோம்.” என்று தகப்பனிடம் கேட்டான் வேணு.

“ப்ச் வேணு. பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது.” கொடிவீரன் அதட்ட,

“மச்சான் நீ அமைதியா இருடா. இப்போ நீ இவன்கிட்ட சொல்லி எனக்கு மரியாதை கொடுக்க சொன்னினா, இதவிட மோசமா என்கிட்ட பேசுவான்.”

“சரிடா. வாசல்ல நின்னுகிட்டு பேசாம உள்ள வா. ஏங்க உங்க அண்ணனை உள்ள அழைச்சிட்டு போங்க” என்று சொன்னான்.

மாமியார், நாத்தனார் என்று அனைவரிடத்திலும் சிரித்து பேசி சந்தோசமாக இருந்தவளின், அழகான வதனத்தை அடிக்கடி சைட் அடிக்கும் கொடிவீரனை மகிழினி ஓரக்கண்ணில் பார்க்க தவறவில்லை. அன்றைய தினம் இரவு உணவை சாப்பிட்டு முடித்த அனைவரும் அவரவர் அறைக்கு செல்லபோக,

“சித்ரா கொஞ்சம் நில்லு” என்ற சசி தன் கையில் இருந்த மருதாணியை மகிழினியிடம் தந்து, “இத நல்லா ரெண்டு கைலயும் வச்சிக்கோ” என்று கொடுத்து அவள் அறைக்குச் செல்ல,

“அக்கா” என்று அழைத்ததும்,

“புரியுது. ஒரு கையில நீயே வச்சிக்கோ. இன்னோரு கையில உன் கண்ணாளனை வைக்கச்சொல்லு. எனக்கு நேரமாகுது. நான் போய் தூங்கணும். குட் நைட்” என்று அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

பாத்திரத்தில் உள்ள மருதாணி இலையின் விழுதோடு அறைக்குள் நுழைந்தவளை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்

“க்கும் க்கும்” என்று குரலை செரும்பியவள் மீண்டும் கணவனைப் பார்க்க அவனோ கண்சிமிட்டாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார் உங்கள தான். என்ன யோசனைலாம் பலமா இருக்கு” என்று மகிழினி நேரடியாகவே கேட்க,

“ஓ... வந்துட்டீங்களா. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். வாங்க வந்து இப்படி உக்காருங்க” என்று கட்டிலை சுட்டி காட்டியவனை பார்த்து மகிழினி முறைத்தாள்.

“ஏங்க அப்படி முறைக்கிறிங்க? உங்கள நான் என்ன என் பக்கம் படுக்கவா சொன்னேன். உக்கார தானே சொன்னேன்.”

“ஓ அதை வேற சொல்லுவிங்களா?”

“க்கும் சொன்னா மட்டும் அப்படியே பண்ணிடுவீங்க பாருங்க” என்று முனகினான்.

“என்ன சொன்னிங்க?”

“ஏங்க இப்படி உக்காருங்கன்னு சொன்னதுக்கா இவ்ளோ பேசுறீங்க” என்றதும் கட்டிலின் விழும்பில் அமர்ந்தவள், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு சிலம்பம் சுத்த தெரியும்னு எனக்கு தெரியாதுங்க. ப்ச் அதே போல உங்களுக்கு நர்ஸ் வேலைக்கு போகணும்னு ஆசை இருக்குறது கூட எனக்கு தெரியாது.”

“சரி அதுக்கு இப்போ என்ன?”

“பேசாம நீங்க மறுபடியும் வேலைக்கு போறிங்களா?”

“என்ன வேலைக்கா?” என்று அதிர்ந்து கேட்டாள்.

“ம்... ஆமாங்க நர்ஸ் வேலைக்கு.”

“ஐயோ அதெல்லாம் வேணாம். எனக்கு கேண்டீன் வேலைக்கே நேரம் சரியா இருக்கும்.”

“ப்ச் அதுக்கெல்லாம் வேற ஆள் போட்டுக்கலாம். நானும் 5 மணிக்கு எல்லாம் வொர்க் முடிச்சிடுவேன். அப்படி இல்லைனா நான் என் வேலையை விட்டுட்டு உங்க கேண்டினை பார்த்ததுக்குறேன். நீங்க எனக்கு ஒரு சம்பளம் போட்டு கொடுங்க. நீங்க நர்ஸ் வேலைக்கு போங்க” என்றான்.

“என்னங்க நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் நடக்குற காரியமா?”

“ஏன் நடக்காது? நம்ம மனசு வச்சா எல்லாம் நடக்கும்.”

“ஏன் உங்களுக்கு ஆபீஸ் வேலை பிடிக்கலையா?”

“ஹ்ம் சுத்தமா பிடிக்கல.” என்றான் அப்பாவியாய் முகம்வைத்து.

“அச்சோ பாவம் ஒய் சார், உங்க டார்லிங் ரேஷு வேலையை விட்டு நின்னுட்டாங்களா?” கிண்டலாகவே கேட்டாள்.

“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் என்ன சைட் அடிக்க தான் வேலைக்கு போறேன்னு நினைக்கிறீங்க.”

“அப்ப இல்லையா?”

“ஹ்ம் ஆக மொத்தம் உங்களுக்கு என்னை பார்த்தா பொறுக்கி போல இருக்குல்ல” என்றான் வருத்தமாக.

“ஐயோ இல்ல இல்ல. நான் சும்மா தான் கிண்டல் பண்ணேன்.



“ம்...” சரி விடுங்.க நான் ஒன்னு நினைச்சு உங்ககிட்ட பேசுனா, நீங்க அதை வேற மாதிரி புரிஞ்சிப்பிங்க. இது நமக்குள்ள எப்பவும் நடக்குறது தானே. ஓகே படுங்க. குட் நைட்” என்றவன் தன் தலையணை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே செல்லும் முன்பு,

“எங்க போறீங்க? நீங்க இங்கேயே படுங்க. நான் தரையில படுத்துக்குறேன்.” என்றாள் அவள்.

“வேணாங்க. நான் இங்க இருந்தா என் வாய் சும்மா இருக்காது.”

“ஹலோ சார் நான் உங்கிட்ட சும்மா தான் சண்டை போட்டேன். வாங்க வந்து உக்காருங்க” என்றவள் தன் கையில் இருந்த மருதாணியை மேசை மேல் வைத்தாள்.

கட்டிலில் அமர்ந்தவன், “ஏங்க மருதாணி வச்சிக்கலையா?” என்று கேட்க,

“வச்சுக்க தோணல.”

“உங்களுக்கு எதுதாங்க தோணுது. இது தோண.””

“ஏன் வேற என்ன தோணனும்?”

“ஆமா கேள்வி எல்லாம் நல்லா தான் கேக்குறீங்க. நான் பதில் சொன்னா மட்டும் புரியாத மாதிரியே கண்ணை அந்த சுழட்டு சுழட்டுவிங்க.”

“ஏன் இப்படி முனங்குறீங்க?”

“மருதாணி வச்சிக்கோங்க. அப்புறம் அம்மா காலையில ஆயிரத்தேட்டு கேள்வி கேப்பாங்க.”

“ம்...” என்று அவள் மருதாணி வைக்க,

“பிள்ளைங்க ஆசைக்கு பெரியவங்க, பெத்தவங்க தான் தடையா இருக்காங்க இல்ல.” என்று திடீரென கேட்டான் கொடிவீரன்.

“ஏன் அப்படி சொல்றிங்க?”

“பின்ன என்ன, உங்களுக்கும் நர்ஸா வேலை செய்யணும்னு ஆசை எல்லாம் இருந்திருக்கு. எனக்கும் கூட கபடியில் ஒரு நல்ல பிளேயரா வரணும், இல்லையா ஒரு சின்ன ஹோட்டலாவது வைக்கணும்னு எவ்வளவோ ஆசை இருந்துச்சு. என் ஆசையை நான் கேட்காமயே நிறைவேத்தும் அம்மா, நான் வாயைத் திறந்து கேட்டும் கூட இந்த ரெண்டுத்துலயும் என்னை நுழையவே விடல. ஆனா, நம்ம அப்படி எல்லாம் இருக்கக்கூடாதுங்க” என்றான்.

“புரியல. நம்மனா?

“ஆமாங்க. நமக்கு பொறக்க போற குழந்தைங்க ரெண்டு பேரையும். அவங்க என்ன ஆசைப்படறாங்களோ அதை எல்லாம் அவங்க செய்வதற்கு சுதந்திரத்தை கொடுத்துடனும்.”

“என்னது நமக்கு குழந்தை பிறக்கபோகிறதா? இது எப்போ?” என்றாள் அதிர்ந்து.

“ஒரு வருஷத்துக்கு அப்புறம் நீங்களும் நானும் நம்ம இல்லற வாழ்க்கை ஆரம்பிச்சுருவோம் தானே. அதுக்கப்புறம் பாருங்க அடுத்த ஒரு வருஷத்துல ஒரு பையன், ஒரு பொண்ணு. அதுக்கப்புறம் அவங்கள படிக்க வச்சு பெரிய ஆளாக்கி, அவங்களுக்கு படிப்பு வரலனாலும் பரவால்ல. அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வைத்து...”

“ஹலோ... ஹலோ போதும். என்ன கற்பனை குதிரை ஓவரா ஓடுது. - நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்கன்னு நினைவிருக்கா? உங்க அம்மா மனசும், என்னோட பாட்டி மனசும் கஷ்டப்படாமல் நான் நடந்துக்கிட்டா, எனக்கு ஒரு வருஷத்துல டைவர்ஸ் கொடுத்துடுவீங்கன்னு சொல்லி இருக்கீங்க. அது ஞாபகம் இருக்கட்டும். அதை விட்டுட்டு புள்ள குட்டி, வேலை வெட்டின்னு நீங்களா கற்பனையை வளர்த்துக்கிட்டு போகாதீங்க” என்றதில் அவன் முறைக்க, “அப்புறம் பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க. இதுல வேற நாளைக்கு மறுபடியும் உங்க கையால நான் தாலி செயின் போட்டுக்குற சம்பவம் வேற நடக்கப்போகுது. ஏன்தான் இப்படி அவங்கவங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறாங்கன்னு தெரியல” என்று புலம்பினாள்.

“ப்ச் ஏங்க...” என்றான் சலிப்பாக.

“எப்பா போதும் சாமி. சும்மா நீங்க தேவையில்லாம எதுவும் பேசி வைக்காதிங்க. எப்போடா ஒரு வருஷம் ஆகும்னு இருக்கு.”

“ஹ்ம் ஏன் எப்ப பாரு நெகட்டிவாவே பேசிக்கிட்டு இருக்கீங்க. வாழ்க்கையை பாசிட்டிவாவே வாழ கத்துக்க மாட்டீங்களா?”

“ஹலோ இந்த பாசிட்டிவ் பத்மநாதன் வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. என் வாழ்க்கையை எப்படி நினைக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க உங்க வாழ்க்கை கூட என்னை சேர்த்து வச்சு பாக்காதீங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது.”

“என்னோட நல்லதே உங்க கூட நான் சேர்ந்து வாழறதுதான். அதனால என்னை எப்படிடா கழட்டி விடலாம் என்று யோசிக்கிறதை விட்டுட்டு, எப்படி எல்லாம் அழகா இவன் கூட வாழலாம்னு நல்லதை யோசிங்க” எனவும் அவள் முறைக்க, “நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். குட் நைட். “ஹாங் இன்னொரு கைல உங்களுக்கு மருதாணி வச்சு விடனும்னு எனக்கும் ஆசைதான். எப்படியா இருந்தாலும் நான் கேட்டா நீங்க வேணான்னு தான் சொல்லுவீங்க. அதனால அதையும் ஒரு வருஷம் கடந்தே நான் வச்சு விடுறேன். குட் நைட். கட்டில்ல படுங்க தரை ஜில்லுன்னு இருக்கும்” என்று சொல்லி தலையணையை எடுத்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே சென்றான்.

மகிழினி இருதலைக்கொல்லி எறும்பாக இவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், இவனை ஒதுக்கவும் முடியாமல் மருதாணியை வைத்து முடித்து உறக்கத்தை தழுவினாள்.
 
Joined
Jan 15, 2026
Messages
109
மறுநாள் காலை வீடு முழுதும் பூந்தோரண அலங்காரங்கள் ஜொலிக்க, அனைவரின் செவிகளிலும் மெல்லிய இசையும் ஒலிக்க, ஜெயாவின் அழைப்புக்கு இணங்கி அவர்களின் சொந்த பந்தங்கள் சிலர், தாலி பெருக்கி கோர்க்கும் சடங்குக்கு வருகை தந்திருந்தனர். சசியின் நாத்தனார் ஆண்டாள் மட்டும் இந்த விஷேஷத்துக்கு வந்திருந்தாள்.

விடிந்ததில் இருந்து கணவன் தன் கண்ணில் படாமல் இருப்பதை யோசித்த மகிழினி வேணுவை அழைத்தாள்.

“என்ன அத்தை? ஏன் கூப்பிட்டீங்க? என்னவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க பத்மா வெய்டிங்.” என்றான்.

“டேய் உன் வயசுக்கு பத்மா கேக்குதா?” மருமகனை திட்ட,

“ஆசைக்கு வயசு எல்லாம் இல்லை. சரி சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“அது அது ஒண்ணுமில்ல. நீ போய் விளையாடு.”

“என்ன அத்தை நீ முக்கியமான நேரத்துல என்னை டிஸ்டர்ப் பண்ற மாதிரி கூப்பிட்டுட்டு, இப்போ ஏதும் இல்லைனு சொல்ற.”

“இல்லடா. உன் மாமா எங்கன்னு கேட்கதான் கூப்பிட்டேன்.”

“எந்த மாமா?” என்றான் புரியாது.

“ஏய் உனக்கு எத்தன மாமா இருக்காங்க?”

“நீதானே நேத்து மாறனையும் மாமான்னு கூப்பிட சொன்ன?” என்று சத்தமாகக் கேட்டான்.

“சரி கத்தாத. நான் கேவியை தான் கேட்டேன்.” என்றுவிட்டாள் ஒருவழியாக.

“கேவினா கோனை வாயனா?”

“டேய் ஏன்டா” என்று பல்லைக்கடிக்க,

“பின்ன என்ன அத்தை. அவங்கவங்க அம்மா அப்பா கோவில் குளம் ஏறி தவமிருந்து பிள்ளையை பெத்து அவங்களுக்கு பார்த்து பார்த்து அழகான பெயரை வச்சா, நீங்க எல்லாம் அந்த பெயரை சுருக்குறேன்னு சிஎம்னு சொல்றிங்க. கேவின்னு சொல்லுறீங்க. ஏன் உங்கனால முழுசா ரெண்டு வார்த்தை சேர்த்து முழு பெயரை சொல்ல இயலாதோ?”

“எப்பா சாமி உன் கொடிவீரன் மாமனை பார்த்தியா கேட்டேன்.”

“அவரா, நான் அவர பாக்கல அத்தை.”

“போடா பணியார சட்டி வாயா” என்று திட்டிவிட்டாள்.

“ஹாங் நான் போறேன். நீங்க போய் முதல்ல உங்க புருஷனை தேடுங்க” என்றவன் வேகமாக அங்கிருந்து பத்மாவை பார்க்க ஓடிவிட,

மீண்டும் மகிழினியின் கண்கள் கணவனைத் தேட, அவனை பற்றி யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையில் இருந்தவள், தன் மனதில் எழுந்த புதுவித உணர்வுகளை கட்டுப்படுத்தி வீட்டு வேலைகளை தொடர்ந்தாள்.



சில மணி துளிகள் கடந்த நிலையில் மாறனும் மகியும் அவர்களின் புல்லட்டில் வந்திறங்கி எதிர்பட்ட அனைவரையும் நலம் விசாரித்து, “எங்க தம்பியை காணோம்?” என்று கேட்க,

‘பதிலை யாராவது சொல்லுங்களேன்’ என்ற நிலையில் இருந்த மகிழினியின் காதில், “அவரு சிங்கப்பூர்ல இருந்து அவங்க ஃப்ரண்ட் வந்து இருக்காங்கன்னு, அவங்கள ஒரு எட்டு பாக்க போயிருக்காரு” என்று கீதா சொன்னதும், மகிழினி அதை பெரிதும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

“என்ன மாமியாரே ரொம்ப அமைதியா இருக்கீங்க? மாமியாரை வம்புக்கிழுத்தான் மாறன்.

“ஆமா நான் உன்னபற்றி பேசுனாதான் என் பொண்ணுக்கு கோவம் வருதேபா. அதான் நான் யார் கூடவும் பேச வேணான்னு முடிவு பண்ணிட்டேன்.”

“அத்தை உங்க பொண்ணுக்கு உங்களபற்றி நான் பேசுனா கோவம் வரும். அதேபோல என் பொண்டாட்டிக்கு என்னைபற்றி நீங்க பேசுனா கோவம் வரும். சோ, இதுல இருந்து என்ன உங்களுக்கு என்ன புரியுது?

“ம்... நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து என் மகளை பைத்தியமாக்கிட்டு இருக்கோம்ன்னு புரியுது” என்று நோடித்தார் கீதா.

“நீங்க ஆல்ரெடி அப்படித்தானே அத்தை.”

“மாமா நீங்க அடங்கவே மாட்டீங்களா. அங்க பாருங்க அவரு தான் நம்ம சித்ராவோட அண்ணன்” என்றாள்.

“சரி இருக்கட்டும். அதுக்கு நான் என்ன பண்ணுறது?”

“போய் ஒரு வணக்கம் சொல்லுங்க மாமா.”

“ஹேய் யார பார்த்து என்ன சொல்ற? நான் போய் ஒரு ஆம்பளைக்கு வணக்கம் வைக்கிறதா. நோ நெவர்.”

“அதுக்குன்னு நாங்க அவரை மும்பைக்கா அனுப்ப முடியும்?” கீதா நக்கலடிக்க,

“அத்தை ஏன் இப்படி?”

“பின்ன என்ன யாரையாவது அறிமுகப்படுத்தி வச்சா, வணக்கம் சொல்ல வேண்டியது தானே. அதை விட்டுட்டு என்ன குதற்கமான பேச்சு.”

“இப்போ என்ன வணக்கம் தானே சொல்லணும். இருங்க சொல்லிட்டு வரேன்” என்றவன் சுரேஷிடம் இயல்பாக பேச்சை தொடங்கி அவருடன் நல்ல நட்பை ஏற்படுத்தி கொண்டான்.

“என்ன சசி இது காலையில போன உன் தம்பியை இன்னும் காணோம். அதுக்குதான் அவனை இந்த மாதிரி நேரத்துல வெளிய போக வேணான்னு சொன்னேன்” என்று கவலையாகக் கேட்டார் ஜெயா.

“அதெல்லாம் அவன் சரியான நேரத்துல வருவான்ம்மா. இந்த விஷேஷம் எவ்ளோ முக்கியம்னு அவனுக்கு தெரியாதா என்ன?”

“இல்லடி. நேரம் வேற ஆகிட்டே இருக்கு. முகூர்த்த நேரம் முடியுறதுக்கு முன்னால நம்ம இந்த சடங்கை முடிக்கணும். இந்த நாளை விட்டா அடுத்து நாள் ரொம்ப தள்ளி இல்ல போகும்.”

“ஜெயா நம்ம சடங்கை ஸ்டார்ட் பண்ணலாம். முதல்ல சசியை உக்கார வச்சி அவளுக்கு சடங்கை ஸ்டார்ட் பண்ணு” என்றார் கீதா.

“ஏன் சித்ரா? வெளிய போகும்போது கொடி தம்பி உன்கிட்ட எதாவது சொல்லிட்டு போனாரா?” என்று பாட்டி கேட்க,

“இல்ல பாட்டி. நான் காலையில எழுந்ததுல இருந்தே அவர பாக்கல.”

“என்னமா இது, இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாளு. ஏன் இந்த புள்ள இப்படி பண்ணுது?” என்று பேத்தியிடம் கேட்டார்.

“எனக்கும் தெரியல பாட்டி.”

“சசி நீ வந்து உக்காரு வா” என்று அழைத்ததும் சசி மனையில் அமர, சில பெண்மணிகள் பங்களிப்புடன் சசி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிரை அவிழ்த்து, சசியின் கணவன் சிவா கையால் தங்கத்தாலான தாலி சங்கிலியை, சசி கழுத்தில் அணிவித்த காட்சியை பார்த்து ஜெயாவின் கண்கள் ஆனந்தத்தில் மிளிர்ந்தது.

“ஏன் ஜெயா கொடி தம்பிக்கு போன் பண்ணி பார்த்தீங்களா?” பாட்டி கேட்க,

“பாட்டி நான் காலையில இருந்து கால் பண்ணி பார்த்துட்டேன். என்னனே தெரியல போன் சுவிட்ச் ஆஃப் ன்னு வருது.” என்றான் சுரேஷ்.

“மகி நான் போய் அவன் எங்கன்னு பார்த்துட்டு வரேன். நீ இங்கேயே இரு” என்ற மாறன் வேகமாக அங்கிருந்து கிளம்பியதும், ஜெயா மற்றும் பாட்டி கவலையில் நின்றிருக்க, மகிழினிக்குமே கொடிவீரனின் இந்த செயல் கோவத்தை தான் வரவைத்தது.

சில நிமிடங்கள் கடந்த நிலையில், “ஜெயா கொடி மாப்புள்ள வரும்போது வரட்டும். சித்ராக்கு நம்ம அதுக்குள்ள தாலி பெருக்கி போட்டுடுவோம்” என்றார் கீதா.

“என்ன அண்ணி சொல்லுறீங்க? ஆனா, கொடி தானே தாலி சங்கிலியை சித்ரா கழுத்துல போடணும்.”

“ஏய் நீ என்ன இப்படி பேசுற? இதெல்லாம் இப்போ வந்த மாடல். இன்னும் சொல்ல போனா, பெண்கள் சிலர் மட்டும்தான் தாலி பெருக்கி பொண்ணு கழுத்துல போடணும். புருஷன் சும்மா கையை கட்டிக்கிட்டு தான் நிக்கணும். அதனால நம்மளே சித்து கழுத்துல இருக்குற மஞ்சள் கயிறை கழட்டிட்டு மருமகன் பண்ண தாலி சங்கிலியை போட்டு விடுவோம்” என்று கீதா சொல்ல, வேறு வழியெல்லாம் அவர்கள் சொன்னது போலவே மகிழினி கழுத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து போட்ட தாலி சங்கிலி, அவள் இதயத்தின் பக்கத்தில் தொங்கியது.

அதே தருணம் மாறன் கொடிவீரனுடன் வர, சிரித்த முகத்துடன் உள்ளே வந்தவன், “சாரிக்கா. ஃப்ரண்ட பார்க்க போனேன். இல்ல அப்படியே நேரம் போறது தெரியாம பேசிக்கிட்டே இருந்துட்டேன். எனிவே வாழ்த்துக்கள் அக்கா” என்று அக்காவின் கரங்களை பிடித்து குலுக்கியவனின் தோளை பிடித்து தன் வசம் திருப்பிய ஜெயா, அனைவரின் முன்னிலையிலும் கொடிவீரனின் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட, அனைவரின் கண்கள் இமைக்க மறந்தது.

விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top