Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 109
- Thread Author
- #1
விவாதக் காதல் – 54
“வா மச்சான். எப்போ வந்த? வீட்ல சிஸ்டர் நல்லா இருக்காங்களா?”
“ஹாங் இருக்காடா. அவளை பார்த்துக்க அவங்க அக்கா வந்து இருக்காங்க. அதான் நீ போன்ல சொன்னதும், நான் உடனே என் தங்கச்சியை பார்க்க கிளம்பி வந்துட்டேன்.” என்றான் சுரேஷ்.
“ஓ அப்போ இவரு சொல்லி தான் நீ வந்தியாக்கும்?” தங்கை கோவித்துக்கொள்ள,
“ஆமாம்மா. என் மச்சான் தான் என்னை உங்க பங்க்ஷன்கு கூப்பிட்டான். நீயும் பாட்டியும் தான் என்னை சுத்தமா மறந்துட்டீங்களே.”
“ஆம்பளையா லட்சணமா நீங்க குடும்பத்தை கவனிச்சிகிட்டா. நாங்க ஏன் உங்கள மறக்க போறோம்.” என்று தகப்பனிடம் கேட்டான் வேணு.
“ப்ச் வேணு. பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது.” கொடிவீரன் அதட்ட,
“மச்சான் நீ அமைதியா இருடா. இப்போ நீ இவன்கிட்ட சொல்லி எனக்கு மரியாதை கொடுக்க சொன்னினா, இதவிட மோசமா என்கிட்ட பேசுவான்.”
“சரிடா. வாசல்ல நின்னுகிட்டு பேசாம உள்ள வா. ஏங்க உங்க அண்ணனை உள்ள அழைச்சிட்டு போங்க” என்று சொன்னான்.
மாமியார், நாத்தனார் என்று அனைவரிடத்திலும் சிரித்து பேசி சந்தோசமாக இருந்தவளின், அழகான வதனத்தை அடிக்கடி சைட் அடிக்கும் கொடிவீரனை மகிழினி ஓரக்கண்ணில் பார்க்க தவறவில்லை. அன்றைய தினம் இரவு உணவை சாப்பிட்டு முடித்த அனைவரும் அவரவர் அறைக்கு செல்லபோக,
“சித்ரா கொஞ்சம் நில்லு” என்ற சசி தன் கையில் இருந்த மருதாணியை மகிழினியிடம் தந்து, “இத நல்லா ரெண்டு கைலயும் வச்சிக்கோ” என்று கொடுத்து அவள் அறைக்குச் செல்ல,
“அக்கா” என்று அழைத்ததும்,
“புரியுது. ஒரு கையில நீயே வச்சிக்கோ. இன்னோரு கையில உன் கண்ணாளனை வைக்கச்சொல்லு. எனக்கு நேரமாகுது. நான் போய் தூங்கணும். குட் நைட்” என்று அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
பாத்திரத்தில் உள்ள மருதாணி இலையின் விழுதோடு அறைக்குள் நுழைந்தவளை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்
“க்கும் க்கும்” என்று குரலை செரும்பியவள் மீண்டும் கணவனைப் பார்க்க அவனோ கண்சிமிட்டாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார் உங்கள தான். என்ன யோசனைலாம் பலமா இருக்கு” என்று மகிழினி நேரடியாகவே கேட்க,
“ஓ... வந்துட்டீங்களா. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். வாங்க வந்து இப்படி உக்காருங்க” என்று கட்டிலை சுட்டி காட்டியவனை பார்த்து மகிழினி முறைத்தாள்.
“ஏங்க அப்படி முறைக்கிறிங்க? உங்கள நான் என்ன என் பக்கம் படுக்கவா சொன்னேன். உக்கார தானே சொன்னேன்.”
“ஓ அதை வேற சொல்லுவிங்களா?”
“க்கும் சொன்னா மட்டும் அப்படியே பண்ணிடுவீங்க பாருங்க” என்று முனகினான்.
“என்ன சொன்னிங்க?”
“ஏங்க இப்படி உக்காருங்கன்னு சொன்னதுக்கா இவ்ளோ பேசுறீங்க” என்றதும் கட்டிலின் விழும்பில் அமர்ந்தவள், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“உங்களுக்கு சிலம்பம் சுத்த தெரியும்னு எனக்கு தெரியாதுங்க. ப்ச் அதே போல உங்களுக்கு நர்ஸ் வேலைக்கு போகணும்னு ஆசை இருக்குறது கூட எனக்கு தெரியாது.”
“சரி அதுக்கு இப்போ என்ன?”
“பேசாம நீங்க மறுபடியும் வேலைக்கு போறிங்களா?”
“என்ன வேலைக்கா?” என்று அதிர்ந்து கேட்டாள்.
“ம்... ஆமாங்க நர்ஸ் வேலைக்கு.”
“ஐயோ அதெல்லாம் வேணாம். எனக்கு கேண்டீன் வேலைக்கே நேரம் சரியா இருக்கும்.”
“ப்ச் அதுக்கெல்லாம் வேற ஆள் போட்டுக்கலாம். நானும் 5 மணிக்கு எல்லாம் வொர்க் முடிச்சிடுவேன். அப்படி இல்லைனா நான் என் வேலையை விட்டுட்டு உங்க கேண்டினை பார்த்ததுக்குறேன். நீங்க எனக்கு ஒரு சம்பளம் போட்டு கொடுங்க. நீங்க நர்ஸ் வேலைக்கு போங்க” என்றான்.
“என்னங்க நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் நடக்குற காரியமா?”
“ஏன் நடக்காது? நம்ம மனசு வச்சா எல்லாம் நடக்கும்.”
“ஏன் உங்களுக்கு ஆபீஸ் வேலை பிடிக்கலையா?”
“ஹ்ம் சுத்தமா பிடிக்கல.” என்றான் அப்பாவியாய் முகம்வைத்து.
“அச்சோ பாவம் ஒய் சார், உங்க டார்லிங் ரேஷு வேலையை விட்டு நின்னுட்டாங்களா?” கிண்டலாகவே கேட்டாள்.
“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் என்ன சைட் அடிக்க தான் வேலைக்கு போறேன்னு நினைக்கிறீங்க.”
“அப்ப இல்லையா?”
“ஹ்ம் ஆக மொத்தம் உங்களுக்கு என்னை பார்த்தா பொறுக்கி போல இருக்குல்ல” என்றான் வருத்தமாக.
“ஐயோ இல்ல இல்ல. நான் சும்மா தான் கிண்டல் பண்ணேன்.
“ம்...” சரி விடுங்.க நான் ஒன்னு நினைச்சு உங்ககிட்ட பேசுனா, நீங்க அதை வேற மாதிரி புரிஞ்சிப்பிங்க. இது நமக்குள்ள எப்பவும் நடக்குறது தானே. ஓகே படுங்க. குட் நைட்” என்றவன் தன் தலையணை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே செல்லும் முன்பு,
“எங்க போறீங்க? நீங்க இங்கேயே படுங்க. நான் தரையில படுத்துக்குறேன்.” என்றாள் அவள்.
“வேணாங்க. நான் இங்க இருந்தா என் வாய் சும்மா இருக்காது.”
“ஹலோ சார் நான் உங்கிட்ட சும்மா தான் சண்டை போட்டேன். வாங்க வந்து உக்காருங்க” என்றவள் தன் கையில் இருந்த மருதாணியை மேசை மேல் வைத்தாள்.
கட்டிலில் அமர்ந்தவன், “ஏங்க மருதாணி வச்சிக்கலையா?” என்று கேட்க,
“வச்சுக்க தோணல.”
“உங்களுக்கு எதுதாங்க தோணுது. இது தோண.””
“ஏன் வேற என்ன தோணனும்?”
“ஆமா கேள்வி எல்லாம் நல்லா தான் கேக்குறீங்க. நான் பதில் சொன்னா மட்டும் புரியாத மாதிரியே கண்ணை அந்த சுழட்டு சுழட்டுவிங்க.”
“ஏன் இப்படி முனங்குறீங்க?”
“மருதாணி வச்சிக்கோங்க. அப்புறம் அம்மா காலையில ஆயிரத்தேட்டு கேள்வி கேப்பாங்க.”
“ம்...” என்று அவள் மருதாணி வைக்க,
“பிள்ளைங்க ஆசைக்கு பெரியவங்க, பெத்தவங்க தான் தடையா இருக்காங்க இல்ல.” என்று திடீரென கேட்டான் கொடிவீரன்.
“ஏன் அப்படி சொல்றிங்க?”
“பின்ன என்ன, உங்களுக்கும் நர்ஸா வேலை செய்யணும்னு ஆசை எல்லாம் இருந்திருக்கு. எனக்கும் கூட கபடியில் ஒரு நல்ல பிளேயரா வரணும், இல்லையா ஒரு சின்ன ஹோட்டலாவது வைக்கணும்னு எவ்வளவோ ஆசை இருந்துச்சு. என் ஆசையை நான் கேட்காமயே நிறைவேத்தும் அம்மா, நான் வாயைத் திறந்து கேட்டும் கூட இந்த ரெண்டுத்துலயும் என்னை நுழையவே விடல. ஆனா, நம்ம அப்படி எல்லாம் இருக்கக்கூடாதுங்க” என்றான்.
“புரியல. நம்மனா?
“ஆமாங்க. நமக்கு பொறக்க போற குழந்தைங்க ரெண்டு பேரையும். அவங்க என்ன ஆசைப்படறாங்களோ அதை எல்லாம் அவங்க செய்வதற்கு சுதந்திரத்தை கொடுத்துடனும்.”
“என்னது நமக்கு குழந்தை பிறக்கபோகிறதா? இது எப்போ?” என்றாள் அதிர்ந்து.
“ஒரு வருஷத்துக்கு அப்புறம் நீங்களும் நானும் நம்ம இல்லற வாழ்க்கை ஆரம்பிச்சுருவோம் தானே. அதுக்கப்புறம் பாருங்க அடுத்த ஒரு வருஷத்துல ஒரு பையன், ஒரு பொண்ணு. அதுக்கப்புறம் அவங்கள படிக்க வச்சு பெரிய ஆளாக்கி, அவங்களுக்கு படிப்பு வரலனாலும் பரவால்ல. அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வைத்து...”
“ஹலோ... ஹலோ போதும். என்ன கற்பனை குதிரை ஓவரா ஓடுது. - நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்கன்னு நினைவிருக்கா? உங்க அம்மா மனசும், என்னோட பாட்டி மனசும் கஷ்டப்படாமல் நான் நடந்துக்கிட்டா, எனக்கு ஒரு வருஷத்துல டைவர்ஸ் கொடுத்துடுவீங்கன்னு சொல்லி இருக்கீங்க. அது ஞாபகம் இருக்கட்டும். அதை விட்டுட்டு புள்ள குட்டி, வேலை வெட்டின்னு நீங்களா கற்பனையை வளர்த்துக்கிட்டு போகாதீங்க” என்றதில் அவன் முறைக்க, “அப்புறம் பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க. இதுல வேற நாளைக்கு மறுபடியும் உங்க கையால நான் தாலி செயின் போட்டுக்குற சம்பவம் வேற நடக்கப்போகுது. ஏன்தான் இப்படி அவங்கவங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறாங்கன்னு தெரியல” என்று புலம்பினாள்.
“ப்ச் ஏங்க...” என்றான் சலிப்பாக.
“எப்பா போதும் சாமி. சும்மா நீங்க தேவையில்லாம எதுவும் பேசி வைக்காதிங்க. எப்போடா ஒரு வருஷம் ஆகும்னு இருக்கு.”
“ஹ்ம் ஏன் எப்ப பாரு நெகட்டிவாவே பேசிக்கிட்டு இருக்கீங்க. வாழ்க்கையை பாசிட்டிவாவே வாழ கத்துக்க மாட்டீங்களா?”
“ஹலோ இந்த பாசிட்டிவ் பத்மநாதன் வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. என் வாழ்க்கையை எப்படி நினைக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க உங்க வாழ்க்கை கூட என்னை சேர்த்து வச்சு பாக்காதீங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது.”
“என்னோட நல்லதே உங்க கூட நான் சேர்ந்து வாழறதுதான். அதனால என்னை எப்படிடா கழட்டி விடலாம் என்று யோசிக்கிறதை விட்டுட்டு, எப்படி எல்லாம் அழகா இவன் கூட வாழலாம்னு நல்லதை யோசிங்க” எனவும் அவள் முறைக்க, “நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். குட் நைட். “ஹாங் இன்னொரு கைல உங்களுக்கு மருதாணி வச்சு விடனும்னு எனக்கும் ஆசைதான். எப்படியா இருந்தாலும் நான் கேட்டா நீங்க வேணான்னு தான் சொல்லுவீங்க. அதனால அதையும் ஒரு வருஷம் கடந்தே நான் வச்சு விடுறேன். குட் நைட். கட்டில்ல படுங்க தரை ஜில்லுன்னு இருக்கும்” என்று சொல்லி தலையணையை எடுத்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே சென்றான்.
மகிழினி இருதலைக்கொல்லி எறும்பாக இவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், இவனை ஒதுக்கவும் முடியாமல் மருதாணியை வைத்து முடித்து உறக்கத்தை தழுவினாள்.