• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
உன் விழியோடு நானாகிறேன் - 7


சடங்குகள் முடிந்து சிந்தியா ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள்.அதற்கிடையில் ஆதிரைக்கு கைப்பேசியிலிருந்து அழைப்பு வர தனியாக நின்று பேசி முடித்து விட்டு அவளருகில் வந்து உட்கார்ந்தாள்.

“எல்லா சடங்கும் முடிஞ்சிடுச்சா?”

“ம்ம்… முடிஞ்சிடுச்சு”

“இனி இங்கேத் தானே எல்லாமே”

ஆமாம் என்று தலையசைத்தாள்.அவளின் கரங்களின் மேல் கைவைத்தவள் “சந்தோஷமா இரு நானும் நாளைக்கு கிளம்புறேன்”

“ஹேய் என்னாச்சு இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல”

“ஆசைதான். ஆனால் ஆபிஸ்ல ஏதோ பிரச்சினை. நேர்ல போய தான் சரிசெய்ய முடியும் எல்லாம் கனவு மாதிரி இருக்கு” என்றாள்.

சிந்தியாவின் முகமே மாறிப் போனது.அவளைப் பார்த்து “ப்ளீஸ் கோவப்படாதே சிந்தியா இது மதனுக்கும் உனக்குமான நேரம் சந்தோஷமா இரு” என்றாள்.

“கல்யாணம் முடிஞ்சதும் எல்லோரும் வேகமாக பறந்துடுறீங்க இப்படித் தான் தர்ஷனும் நைட்டே வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிட்டு கிளம்பிட்டாரு இப்போ நீயுமா?” என்ற போது தான் தர்ஷன் அங்கிருந்து சென்று இருப்பது தெரிய வந்தது ஆதிரைக்கு.

அவன் சொல்லாமல் சென்றது ஏனோ ஒரு பெருத்த சோகத்தை மனதிற்குள் அழுத்தியது.ஆதிரை அமைதியாக இருப்பதைப் பார்த்து “என்ன ஒன்னுமே பேச மாட்டேங்கிறே? என்ன யோசனை?”

“ஒன்னுமில்லை” என்றவளுக்கு ஏதோ போல் இருந்தது.ஒவ்வொருவராக விடைப்பெற ஆரம்பித்தனர்.

அவள் இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலே இருந்த ஒரு கலகலப்பும் கிண்டலும் நின்று போனது போல் இருந்தது.மொட்டை மாடியில் போய் நின்றவளுக்கு அவன் வந்து தினமும் தொல்லைச் செய்வது நினைவில் வந்து போனது.

எதிரே இருந்த இயற்கையை நோக்கி வெறித்த பார்வை பார்த்தவள் தனக்குள்ளே

‘வாழ்க்கையில் சில விஷயங்களை இரசிக்கிறதோட நிறுத்திக்கனும் ஆதி அதை நம்ப கையோடு தக்க வைக்கனும்னு நினைக்கிறது முட்டாள்தனம் நமக்கானது என்னவோ அதுதான் நிரந்தனமானது’ என்று தன் மனதிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தாள்.

வாழ்க்கையில் நிறைய தருணங்களில் தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு வெளியே வருவாள்.இப்போதும் அப்படித் தான் வெறும் ஒருவாரம் பழக்கம் எல்லாம் சாதாரணமானது என்று எண்ணிக் கொண்டாள்.

இங்கே தனக்குத் தானே சமாளிக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் பல பெண்கள் முக்கியமான நேரத்தில் அதை பேச வேண்டாதவரிடம் சொல்வதால் தான் நிறையவே பிரச்சினைகளே உருவாகின்றன்.

நம்பிக்கைக் கொள்பவரிடமும் நம் மனம் முழுவதும் நம்பினால் தான் பேச வேண்டும் என்பதில் ஆதிரை ரொம்பத் தெளிவாக இருந்தாள்.

மறுநாள் காலையில் பயணம் என்பதால் தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து முடிக்கும் போது பின்னால் சிந்தியா நின்றுக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் பேக் பண்ணிட்டியா?”

“ம்ம்…”

“இந்த பலகாரத்தை அம்மாகிட்ட கொடு”

சரியென்று வாங்கி வைத்துக் கொண்டாள்.ஆதிரையே பார்த்துக் கொண்டிருத்ததாள் சிந்தியா.

“என்னாச்சு?”

“ஒன்னுமில்லை”

“அப்புறம“ ஆதி வாழ்க்கை முழுக்க இப்படியே தனியா இருக்க போறியா?”

அவள் கேட்டதன் அர்த்தம் புரிந்து “என் கூட வியன்கா இருக்கா”
“சரி தான் ஆதி ஆனால் வியன்கா வளர்ந்ததும் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குதுல்ல அதைத் தேடி அவ போகனும்ல”

“ஆமாம் நான் தடுக்க மாட்டேன்” என்றாள் ஆதிரை.

“எனக்குத் தெரியும் நீ அப்படி செய்ய மாட்டே ஆனால் தனிமையில் அதுவும் முதுமைல ரொம்ப கஷ்டமா இருக்கும் ஆதி”

“இதை என் அப்பா, அம்மா எல்லோரும் சொல்லிட்டாங்க இப்போ நீயும் கேட்டுட்டே” என்றாள் வருத்தத்தோடு…

அதைப் பார்த்த சிந்தியா “நீ கவலைப்படணும் நான் பேசலை ஆதி உன் வாழ்க்கை நல்லா இருக்கனும் அதற்குத் தான்” என்றாள் தவிப்போடு…

“நீங்க எல்லாரும் என்னோட நல்லதுக்காகத் தான் சொல்லுறீங்கன்னு தெரியுது சிந்தியா ஆனால் என்னோட மனசு அதை ஏற்க மாட்டேன்னு சொல்லுது அடுத்தும் ஏற்கனவே நடந்ததை விட கொடூரமா நடந்துச்சுன்னா என்னால யோசிக்கவே முடியலை என் மனசு மாறுமான்னு எனக்கே தெரியலை” என்றாள் விரக்தியாக.

தோழியின் கரங்களை ஆதரவாக பிடித்தவள் “காலம் எல்லாத்துக்கும் மருந்தாக இருக்கும் ஆதிரை இதெல்லாம் பொய்னு பேசின என்னையே மாத்திடுச்சு உன்னையும் மாற்றும்னு நம்பிக்கை இருக்கு நம்பு” என்றாள்.

அதற்கு ஆதிரை எந்த பதிலும் சொல்லவில்லை.

எல்லோரிடமும் இரவே பேசி முடித்து பயணம் சொல்லி இருந்தாள்.சென்னைக்கு தன்னுடைய வீட்டிற்கு சிந்தியா, மதன் மற்றும் அவனுடைய குடும்பத்தினரை அழைத்தாள்.மறுநாள் விடியற்காலை ஆறுமணிக்கு இரயில் நிலையத்திற்குச் செல்ல பயணம் தொடர்ந்தது.

இந்த ஒருவாரமாக நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்.புதியதாய் ஆரம்பித்த இந்த பந்தத்தில் எல்லோரும் அவளுக்கு முக்கியமாக இருந்தனர்.

தேவையில்லாத பேச்சுக்கும் கேள்விக்கும் இடமில்லை.

அன்பாக நடந்துக் கொண்டதுதான் நினைவில் நின்றது.

அவனின் நினைவும் தன்னாலேயே வந்தது.

தர்ஷனிடம் செல்வதற்கு முன் பயணம் சொல்லி இருந்தால் அவனை இவ்வளவு தூரம் நினைத்திருக்க மாட்டாமோ என்று நினைத்தாள்.அவன் எதுவுமே பேசாமல் சென்றது தான் அவனைப் பற்றி அதிகமாக நினைக்கிறோமோ! என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

இரவு சென்னையை வந்தடைந்தாள்.ஆதிரையின் பெற்றோரும் அவளது மகளும் மறுநாள் வருவதாகச் சொன்னார்கள்.இரவு வீட்டிற்கு வரும் போதே சாப்பாட்டையும் வாங்கிக் கொண்டு வந்தவள் சாப்பிட்டு விட்டு அவள் எப்போதும் கேட்கும் வானொலி நிகழ்ச்சியை ஓட விட்டாள்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஆனால் ருத்ரன் வந்திருக்கவில்லை.

வேறொருவர் தான் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.அவன் சொல்லாமல் சென்றதால் நிகழ்ச்சியின் மூலமாக அவன் நன்றாக இருக்கிறானா? என்று தெரிந்துக் கொள்வதற்கும் இயலாமல் போனது.

மறுநாள் காலையில் எழுந்து காலை உணவை மட்டும் தயார் செய்துவிட்டு வாங்கி வந்த பொருட்களை மேசையின் மீது வைத்து வாங்கி வைத்தவர்களுக்கான பெயரை ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் அவளுக்கு சுலபமாக இருந்தது.

முதலில் தான் வீட்டில் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார்கள் இரண்டு பேருக்கும் காபி பொடியும் ஸ்டாபெர்ரி ஜாமும் வாங்கி வந்ததைக் கொடுத்தாள்.அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.ஆதிரை இந்த வீட்டிற்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாக இருக்கும்.இப்போதுதான் முதன்முறையாக ஒரு பொருளை வாங்கி வந்து அவளாகவே கொடுக்கிறாள்.

இல்லையென்றால் அவளின் அம்மா மட்டும் எல்லோரிடமும் பேசி உறவாடுவதோடு பண்டமாற்று வைத்துக் கொள்வார்.ஆனால் ஆதிரை யாரிடமும் முகம் கொடுத்து சரியாக பதில் சொல்ல மாட்டாள்.நிமிர்ந்தே பார்க்காமல் சென்று விடுவாள்.அதனால் அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்து அலுவலகத்திற்கு கிளம்பும் போது வாங்கி வந்த பொருட்களை எடுத்துச் சென்றவள் அவளுடன் பணிபுரியும் எல்லோருக்கும் வாங்கி இருந்தாள்.காபி குடிப்பவர்களுக்கு காபி பொடியும்,தேநீர் குடிப்பவர்களுக்கு டீத்தூளும் சில சாக்லெட்டும் தன் மேலாதிகாரிக்கு கூடுதலாக ஜாமும் வாங்கிக் கொடுத்தாள்.

எல்லோருக்கும் அவரவர் தேவையறிந்து அவள் வாங்கி கொடுத்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.இதுவரை யாரையும் அவள் மதிக்க மாட்டாள் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அவரவர் விருப்பம் தெரிந்து வாங்கியது ஆதிரை எல்லோரையும் கவனித்து இருப்பது தெரிய வந்தது.

அவளது மேலாளர் “ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்களா?”

“ஆமாம் சார்”

“நம்ம ஆபிஸ்ல உள்ள பிரச்சினையைப் பற்றி தெரியுமா?”

“தெரியும் சார்”

“நாம கணக்கை சரியாகதான் கொடுத்து இருக்கோம். ஆனால் அமௌண்ட் சரியா வரவு வைக்கலைன்னு சொல்றாங்க. எனக்கு ஹெட் ஆபிஸ் டெல்லிக்கு போக வேண்டி இருக்கு. நீங்க பெங்களூர்ல போய் நேராக அங்கே இருக்கிற கம்பெனிக்கு போய், லெச்சர் எல்லாத்தையும் செக் பண்ணுங்க. அப்புறம் பிரச்சினையை சரி பண்ண முடியுதான்னு பார்க்கலாம்” என்றார்.

“சரிங்க சார் நான் போறேன்”

“ஓகே குட். கூடவே உங்க அஸிஸ்டென்ட் யாரையாவது கூடிட்டு போங்க. இல்லைன்னா டீம் லீடரை அழைச்சுட்டு போங்க” என்றார்.அவள் சரியென்றதும் “எனக்கு பிடிச்ச மாதிரியே வாங்கிட்டு வந்து இருக்கீங்க தாங்க்ஸ்” என்று அவள் கொடுத்த பொருட்களுக்காகச் சொல்லி சென்றார்.

அந்தக் கம்பெனியின் வரவு செலவு கணக்குகளை பார்க்க வேண்டியது நிறைய இருந்ததால் அதிலே நேரம் சென்றது.இந்த நிறுவத்தின் விவரங்களைப் பற்றி அறிந்த தன்னுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தியை பெங்களூர் செல்ல உடன் வரச் சொன்னாள்.

மாலை வீட்டிற்கு வந்தாள்.வீட்டின் கதவை திறக்கவும் வியன்கா ஓடி வந்து “அம்மா” என்று கட்டிக்கொண்டாள்.

மகளிடம் “ஊரு எப்படி இருந்துச்சு? எங்கெல்லாம் போனீங்க?” என்று விசாரித்தாள்.

வியன்கா தன் சிறு கோலிக்குண்டு கண்களை உருட்டி “தாத்தா வீட்டுக்கு அப்புறம் சித்தி வீட்டிக்கு போனோம் அங்கே நிறைய பேர் இருந்தாங்க கல்யாணமும் நடந்திச்சு எனக்கு நிறைய புது ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க” என்றவள் “அம்மா நீங்க எப்படி இருந்தீங்க? ஜாலியா இருந்துச்சா?” என்று கேட்டாள்.

“ம்ம்… நல்லா இருந்துச்சு. இங்கே பாரு போட்டோஸ். அப்புறம் உனக்கு அம்மா டிரெஸ் வாங்கி இருந்தேன் பார்த்தியா?”

“ம்ம்… போட்டு பார்த்தேன் நல்லா இருக்கு” என்றபோது அவளது அம்மா அஞ்சலி “அஜய்க்கும் டிரெஸ் வாங்கினியா?”

“ஆமாம் அம்மா நீங்க அண்ணனை பார்க்கும்போது அஜய் கையில கொடுங்க” என்றாள்.

அவளது அப்பா மூர்த்தி “அவன் தான் உன்னைப்பற்றி நினைக்கிறதே இல்லையே நீ ஏன் வாங்கிட்டு வந்தே?”

“இருக்கட்டும் அப்பா நான் இப்படியே இருந்துட்டு போறேன் ரெண்டுநாள் ஆபிஸ் வேலையா பெங்களூர் போக வேண்டி இருக்கு நீங்க இங்கே இருந்து வியன்காவை பார்த்துப்பீங்களா? இல்லை என்கூட அழைச்சிட்டு போகவா?”

அவளது அம்மா அஞ்சலி “நாங்க பார்த்துக்கிறோம் நீ போய்ட்டு வாம்மா” என்றார்.

“எப்போ கிளம்புற?”

“நாளைக்கு காலையில் போகனும்”

சரியென்றவர் சிந்தியா கொடுத்த பலகாரங்களை எல்லோருக்கும் சாப்பிட கொடுத்து விட்டு அவளும் சாப்பிட்டாள்.இதுவரை நடந்ததை எல்லாம் ஒரு குரல் பதிவாக சிந்தியாவிற்கு அனுப்பி இருந்தாள்.அவளும் தன்னுடைய புதுவாழ்க்கையைப் பற்றி அனுப்பி இருந்தாள்.

ஆதிரை பக்கத்து வீட்டிற்கு பொருட்கள் கொடுத்தது அஞ்சலி அவருக்கும் தெரியவந்தது.தன் மகளின் சிறு மாற்றம் அவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது.சிந்தியாவிடம் கைப்பேசியில் பேசி திருமணம் முடிந்ததைப் பற்றி விசாரித்தார்.அவருடன் மதனும் பேசினான்.அவர்களை வீட்டிற்கு அழைத்தார்.

ஆதிரை அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கிறாள்.அவளது பெற்றோர் மகன் வீட்டில் இருக்கிறார்கள்.மாதத்தில் ஒருவாரம் மட்டும் இங்கே வந்துச் சென்று விடுவார்கள்.

இப்போது விடுமுறையாக இருப்பதாலும் சொந்த ஊரில் திருமணம் இருந்ததால் வியன்காவையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

அஞ்சலி தன் கணவனான மூர்த்தியிடம் “சிந்தியாகிட்டே போன்ல பேசினேன். அவக்கூட ஆதிரைக்கிட்டே ரெண்டாவது கல்யாணம் பத்தி பேசி இருக்கா. முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார் கவலையோடு.

மூர்த்தி “அஞ்சலி அவசரப்படாதே! இந்த தடவை அவ வாழ்க்கையை அவளே முடிவெடுக்கட்டும் அவளை இப்படி ஆக்கியதே நம்ம தானே அவ படிக்கனும்னு ஆசைப்பட்டா ஆதிரையை கல்யாணம் பண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தி பண்ணி வைச்சோம் ஆனால் என்ன நடந்துச்சு அந்த வீணாப் போனவன் அவளை டார்ச்சர் செய்து இப்போ நாலைந்து வருஷமாகத்தான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் கொஞ்சமா அவ சரியாகிட்டு வருகிறாள். அதனால அவசரப்படுத்தாதே அஞ்சலி” என்று அவரது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் அப்பா பேசியது எல்லாம் ஆதிரையின் காதில் விழுந்தாலும் அவள் எதுவுமே கேட்காததுபோல் இருந்தாள்.பழைய வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை.அன்றைய இரவும் வானொலியில் ருத்ரா நிகழ்ச்சியை நடத்தவில்லை.

பக்கத்தில் வியன்கா படுத்திருக்க அவளை கட்டியணைத்தபடி ஏதேதோ யோசனைகள் வந்து அழுத்த அப்படியே தூங்கிப் போனாள்.ஒரு வாரமாக தூக்கத்திற்கான மாத்திரையை எடுக்காமல் இருப்பதால் இப்போது அதுவே பழக்கமானது.

மறுநாள் காலை பத்து மணிக்கு அதிவேமாகச் செல்லக்கூடிய இரயிலில் பயணம் செய்து பெங்களூரை வந்தடைந்தாள்.
 
Top