• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
11


மாலை மயங்கும் வேளையில் சென்னையில் வந்திறங்க, ஆரத்தியுடன் சிரித்த முகமாக வந்த சந்திராவைப் பார்த்த தாரிணிக்கு மயக்கம் வராத குறைதான். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்லும் வழியில், “ஹேய் பாக்கி எப்படிடி ஆன்ட்டி சமாதாமானாங்க? நான் கோவப்படுவாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்” என தோழியின் காதைக்கடித்தாள்.

“ம்... முதன்முதல்ல எங்க வீட்டுக்கு வரும்பொழுது எந்தவித உறுத்தலும் இருக்கக்கூடாதில்லையா. அதான் பேசி சரி பண்ணினேன்.” நம்பாமல் பார்த்த தோழியின் பார்வையை தவர்த்தவளுக்கு, முந்தின தினம் நடந்தது கண்முன் விரிந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் திருப்பூர் செல்ல, சென்னை வந்தவளுக்கு தாயை எப்படி சமாளித்து சம்மதிக்க வைப்பதென்ற பயம் எழுந்தது. மாலை வீடு திரும்பிய தாயிடம் நடந்த அனைத்தும் சொல்லிவிட்டாள். கோவத்தில் கைநீட்டப் போனவர் தன்னை அடக்கி, “இன்னும் எத்தனை பேரை நீ கஷ்டப்படுத்துவ? உனக்காக உனக்காகன்னு.. ப்ச்... போடி” என்று மனம் கலங்கியவரைக் கண்டு தானும் பதறி, “அம்மா! தாரிணி...”

“என்னடி தாரிணி தாரிணின்னு உருகுற? அப்ப உனக்காக உருகுறவங்க மனுஷங்களா தெரியலையா? சிந்து பற்றி ஒரு செகண்ட் நினைச்சிப் பார்த்தியா? நீ யாரைத்தான் நினைச்சிப் பார்த்த. அப்படி நினைச்சிருந்தா மேரேஜ் பண்ணிக்கிற வரை போயிருப்பியா?” என்றார் தன்னையறியாது.

“அம்மாஆஆ..” என்ற அதிர்ந்து அழைத்ததும்தான் தன் வார்த்தையின் வீரியம் உணர்ந்து, “சே... என்னை பேச வைக்கிறடி நீ? உன்னோட செயலால என்னோட இயல்பு மாறிப் பேசுறேன்.”

“சாரிம்மா. உங்களை காயப்படுத்தணும்னு இல்ல. அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்டு சரின்னு சொன்னதும் தான்ம்மா...”

“சரின்னு சொல்லாம? சொல்லு சரின்னு சொல்லாம என்ன சொல்லச் சொல்ற? ஜம்பமா எல்லார் முன்னாடியும் எங்கண்ணனுக்கு பொண்ணு கொடுங்கன்னு கேட்டுட்டு, உங்கப்பாவுக்கு கால் பண்ணினா, என்னடி பண்ணுவாங்க? அந்த டைம்ல உன்னோட கௌரவம்தான் பெருசுன்னு சம்மதிச்சிட்டாங்க. இனிமேல் என்கிட்ட பேசாதே” என்று சுற்றிலும் வேலையாட்கள் யாராவது இருக்கிறார்களா என பார்க்க, இல்லையென்றதும் தான் தெரிந்தது, மகள் அனைவரையும் ஒதுக்கியிருப்பது.

தாயின் வார்த்தையில், “அம்மாஆஆ” என அதிர, அதை சிறிதும் கண்டுகொள்ளாது நகர்ந்தவரிடம், “ம்மா.. இப்படில்லாம் சொல்லாதீங்கம்மா. நான் செஞ்சது தப்புத்தான். ப்ளீஸ்மா என்கிட்ட பேசுங்க” என்றபடி தாயை வழிமறித்து, “சாரிம்மா” என கெஞ்சினாள்.

“உன்னோட சாரி எனக்குச் சொந்தமானதில்லை. உங்கப்பாகிட்ட போய்ச் சொல்லு உன் சாரியை” என்று மகளின் கையை நகர்த்தி வேகமாக தன்னறைக்குள் சென்றவர்தான், அன்று முழுவதும் வெளியே வரவேயில்லை. மகளின் கெஞ்சலோ, அழுகையோ அவரை அசைக்கவில்லை.

காலையில் வெளியே வந்த சந்திரா, தன் அறை வாயிலிலேயே சுருண்டு படுத்திருந்த மகளைப் பார்த்து பதறியபடி வந்து, “அம்மு எழுந்திரு” என்றெழுப்ப, தாயின் குரல் கேட்டு எழுந்த வேகத்தில், “அம்மா சாரிம்மா. ப்ளீஸ்ம்மா பேசாம மட்டும் இருந்துராதீங்கம்மா.”

அழும் மகளையே பார்த்திருந்தவர் அவளின் கண்துடைத்து, “ஓகே இதான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் இந்த மாதிரி எதாவது நடந்தது, அத்தோட என்னை மறந்திரு” என கட்டளையிட்டு, “சரி கிளம்பு இன்னைக்கு வர்றவங்களை வரவேற்கணும்” என்றார்.

அதை தற்பொழுது நினைத்தவள் நினைவுகளைத் தள்ளிவிட்டு, “அம்மாவை சமாதானப்படுத்த முதலில் பயந்தேன் தர்ணி. அப்புறம் சரியாகிட்டாங்க” என்றாள்.

இரவு உணவின் போது, “சந்திரா காலையில சீனுகிட்டப் பேசணும். நியாபகப்படுத்துறியா?” என்று கணபதி கேட்டார்.

“ம்... சரிங்க. நானே அவன்கிட்ட பேசணும்னு இருந்தேன்.”

“ம்மா... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். தாரிணி கல்யாணத்துக்கு சிந்து அண்ணி, அண்ணா வந்திருந்தாங்க” என்றாள்.

“அம்மூ என்ன சொல்ற? இதை ஏன் முதல்லயே சொல்லல?”

“இல்லம்மா. இருந்த டென்சன்ல மறந்திருச்சி” என்றாள்.

மகளை முறைத்து, “நேற்று காலையில மேரேஜாகிருக்கு. கோவத்துல திட்டுறதுக்காகக் கூட போன் பண்ணல. இவனை என்ன செய்யலாம்? ஒரு நிமிஷம்” என்று கைபேசியை எடுத்தவர், ஸ்ரீனிவாசனுக்கு அழைப்பு விடுத்து அவனின், ‘ஹலோ’ தன்னை வந்து சேரும் முன், “சீனு சென்னையிலயா இருக்க?” என்றார் நேரடியாகவே.

“ஏன் அத்தை? என்ன விஷயமா பேசணும்?”

“தெரிஞ்சே தெரியாத மாதிரி எனக்கும் நடிக்கத் தெரியும். விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடியே, என்ன விஷயமா பேசணும் கேட்கிற. நான் பேசத்தான் கூப்பிடுறேன்னு உனக்கு தெரிஞ்சிருக்குல்ல. இப்ப எங்கயிருக்க சொல்லு?”

“இங்க சென்னைலதான் இருக்கேன்” என்றான் குரல் இறங்க.

“அப்ப சரி. காலைல வீட்டுக்கு வா பேசணும்.”

“இல்ல வேண்டாம். நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்லை. பொறுப்பாக்கவும் வேண்டாம்” என்றவன் அங்கு செல்வதை தவிர்க்க நினைத்தான்.

“நீ வீட்டுக்கு வர்ற. இது என்னோட ஆர்டர். இப்ப குட் நைட்” என்று சந்திரா போனை வைத்தார்.

ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் சங்கடமும் சேர போனையே பார்த்திருந்தவன் சின்ன ஏக்கப் பெருமூச்சுடன் வைத்தான்.

“என்னமா? என்ன சொல்றான் உன் மருமகன்?”

“ம்... நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்லையாம். யாரையும் பொறுப்பாக்கவும் வேண்டாம்னு வரல சொல்றான்” என்று மகளையே பார்க்க, அதில் பாகீரதி தலைகவிழந்தாள்.

“ஓ... நீ என்ன சொன்ன?”

“கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டேன். இவன்கிட்ட பேசிட்டு, சிந்துட்டயும் பேசிக்கலாம்.”

“ஏய் பாக்கி யாரந்த சிந்து? ஓவரா பில்டப் கொடுத்துக் குடும்பமே சிந்து பாடுறீங்க. இதுவரை நீ அந்த நேம் யூஸ் பண்ணினதே இல்லையே?” என்றாள் பாகீரதியின் புறம் குனிந்து.

“அ...அது தரணி, சிந்து அண்ணி, அண்ணனுக்கு பார்த்த பொண்ணு” என்று திணறி முடிக்க,

“வாட்?” என்று அதிர்ந்ததில் குடித்த தண்ணீர் புரையேறியது.

“ஹேய் பார்த்து” என்று ப்ரவீண் தலையில் தட்டினான்.

அவனையே பார்த்திருந்தவள் முறைத்தபடி அவன் கைகளை விலக்க, என்னவென்பது போல் அவன் பார்க்க, வேகவேகமாக சாப்பிட்டு எழுந்தாள்.

அவள் பின்னே வந்த பாகீரதி தோழியின் மனம் புரிந்தவளாய், “என்ன தர்ணி இவ்ளோ அவசரம்?” என்றாள் வம்படியாக.

“ஒண்ணுமில்லையே. சாப்பிட்டு முடிச்சதால எழுந்து வந்துட்டேன்.”

“ஓ... ஒண்ணுமே இல்லையா! சரி நீ ரெஸ்ட் எடு. நான் ஹாலுக்கு போறேன்” என நகர்ந்தவள் கைபிடித்து, “ப்ளீஸ் சொல்லுடி. யார் அந்த சிந்து? ஏற்கனவே நேத்திலிருந்து கன்ப்யூஸ் பண்றாங்கடா ரேஞ்சில புலம்பிட்டிருக்கேன். நான் பாவம்லயா. உங்கண்ணனுக்கு பார்த்த பொண்ணுன்னா நிச்சயம் முடிஞ்சிதா. எப்போ முடிஞ்சிது? என்கிட்ட சொல்லல?” என்று படபடப்பாக கேட்டவள் இதயம், பதில் வருவதற்குள் தாறுமாறாய் எகிறியது.

அவளின் அவஸ்தையைப் பார்த்து பாகீரதி சிரிக்கவும், அங்கு வந்த ப்ரவீணோ மனைவியின் பதற்ற முகத்தையே பார்த்திருக்க, “ப்ச்.. சிரிக்காத பாக்கி. எனக்கு பிபி எகிறுது.”

“ஓகே ஓகே. சிந்து அண்ணியை ஒரு பங்க்ஷன்ல பார்த்து, பொண்ணு கேட்டு, ரெண்டு மாசம் கழிச்சி மேற்கொண்டு பேசிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அண்ணனோ, அவங்களோ நேர்ல பார்த்துக்கிட்டதோ, பேசினதோ கிடையாது. உன்னை கேட்டப்ப அவங்க சுத்தமா என் மைண்ட்ல இல்ல தர்ணி. அண்ணாவுக்கு நீதான்னு இருக்கு. என்ன பண்றது விதியை மாத்தியா எழுத முடியும்” என்று கண்ணடித்தாள்.

“உன்னை...” என அவளை விரட்டியபடி, “அறிவிருக்காடி. ஒரு பொண்ணை பேசியிருக்கீங்க. அந்தப் பொண்ணு மனசுல இவங்கதான் ஹஸ்..ஹஸ்பண்ட்னு நினைச்சிருந்தா அது பாவம்லயா. இது அவங்களை ஏமாத்தின மாதிரிதான?”

“நீ நினைக்கிறது தப்பு தர்ணி. அவங்க அப்படி நினைக்கிறவங்க கிடையாதுன்னு உறுதியா சொல்ல முடியும். ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க. நேத்து நடந்த மேரேஜை அவங்க அண்ணன் சொல்லாமலா இருப்பாங்க. நமக்கு தர்மசங்கடம் கொடுக்கக்கூடாதுன்னு தான் அவங்க போன் கூட பண்ணல. அம்மாவா அவங்க அண்ணனைக் கூப்பிட்டப்ப கூட மாட்டேன்னுதான் சொன்னாங்க. சோ யூ என்ஜாய் பேபி.”

“உன்னை என்ன பண்றேன் பாரு” என்று அவளை விரட்ட, இருவரும் சிரித்தபடி ஓடியாடி சண்டையிட்டதை பார்த்தவன், அந்த நிமிடம் முழுதாக உணர்ந்தான். ‘இவள்தான் தனக்கானவள் என்று.’

இரவு தங்கையுடனேயே தாரிணியை தங்க வைக்க, பெரியவர்களின் சந்தேகப் பார்வைக்கு எதுவும் சொல்லாமல், அவனெடுத்த முடிவில் தெளிவாக இருந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
காலை ஏழு மணிக்கெல்லாம் வந்த ஸ்ரீனிவாசனை கணபதியும், சந்திராவும் வரவேற்க, சற்று கூச்சத்துடனே உள்ளே வந்தவனை அமரவைத்து காஃபி கொடுக்க, அவன் அருந்தி முடித்ததும், “எங்களை மன்னிச்சிருப்பா” என இருவரும் ஒருசேர கேட்டார்கள்.

“அச்சச்சோ! எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க?” என்றான் தர்மசங்கடத்துடன்.

“நீ அந்த கல்யாணத்துக்கு வந்திருந்ததா அம்மு சொன்னா. அவ ஏதோ நல்லது செய்றதா நினைச்சி.. மன்னிச்சிருப்பா” என்ற சந்திராவின் குரல் கரகரத்தது.

இருக்கையை விட்டு எழுந்தவன் தன் அத்தையின் எதிரே மண்டியிட்டு அமர்ந்து, “எதுக்கு அத்தை திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்குறீங்க? இதுக்குத்தான், என்னைப் பார்த்தா உங்களுக்கு சங்கடமா இருக்கும்னுதான் நான் வரல சொன்னேன். போனும் பண்ணல.”

இதை அவன் சொன்ன பொழுதுதான் தோழிகள் இருவரும் வெளியே வர, அவனை சரியாக கணித்த தோழியை தாரிணி பாராட்டுதல் பார்வை பார்க்க, அவளோ அதிர்ச்சியின் பிடியிலிருந்தாள்.

‘அவன்தானா! அன்று கோவிலில் பார்த்ததும், கல்லூரியில் பார்த்ததும், மாலில் பார்த்ததும், இவனைத்தானா! தன் வீட்டில், தன்னெதிரே தாயினருகில்’ மனம் அலறியது. தாய் அவளுக்கெதிராய் அமர்ந்திருக்க, தாயின் முன் மண்டியிட்டு பக்கவாட்டாக திரும்பியவாறு, அதே மெல்லிய குரலில் பேசியவனை அடையாளம் கண்டு வாயடைத்துப்போய் பார்த்திருந்தாள் பாகீரதி. திருமணம் முடிந்த தினத்திலிருந்து குழப்பத்திலேயே தாடியை எடுக்காததால் அவனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டாள் அவனின் முறைப்பெண்.

அன்று மாலில் தங்கையின் காலைப் பிடித்து அமர்ந்திருந்த தோற்றமும், சிந்துவின் முகமும் கண்முன் தோன்றியது. ‘அப்படின்னா, பங்க்ஷன் அன்று எப்படி கண்டுபிடிக்காமல் போனேன்? இவன் திறக்கச் சொன்னதும்தான தன்னால போய் திறந்தேன். கடைசியா எதோ சொன்னானே. என்ன சொன்னான்?’ என்பது சுத்தமாக நினைவிலில்லை பாகீரதிக்கு.

பலவித யோசனைகளினூடே நின்றிருந்தவளை, “என்னாச்சி பாக்கி? ஏன் ஒரு மாதிரியாகிட்ட?” என்ற தோழியின் குரல் கலைத்தது.

ஹான்! என விழித்தவள், “ஒண்ணுமில்ல. வா போகலாம்” என்று வரவேற்பறைக்கு வந்தாள்.

“உங்க பொண்ணு ஒரு காரணம்தான் அத்தை. ஆட்டி வைக்கிறவன் மேலே இருக்கான்” என உயரே விரல் நீட்டி காண்பித்து, “சித்தப்பாட்டயும், சிந்துட்டயும் சொல்லிட்டேன். அவங்க சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டாங்க. ஒரு வார்த்தை கூட கோவப்பட்டு கேட்கலை” என்றான் பெருமையாகவே.

ஏனோ அந்த நிமிடம் அனைவருக்கும் அவர்கள் மேலுள்ள மதிப்பு உயர்ந்தது என்றால், தாரிணிக்கு சிந்துவை நேரில் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.

சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு, ”உனக்குத் தெரிஞ்சதுதான். இவ எங்க மருமகள் தாரிணி. இவன் ப்ரவீண்” என்று மணமக்களை அறிமுகப்படுத்தி அந்த மௌனத்தை சந்திராவே கலைத்தார்.

தாரிணிக்கு ஹலோ சொல்லி, ப்ரவீணுக்கு கைகொடுத்து “ஹேப்பி மேரீட் லைஃப்” என்று வாழ்த்தினான்.

ஸ்ரீனிவாசனின் சகஜ பாவத்தில் ப்ரவீண் குற்றவுணர்ச்சியில், “சாரி” என்றான்.

அவனை முறைத்து, “இதுக்குத்தான் என்னை இங்க வரச்சொன்னீங்களா? ஆள் மாத்தி ஆள் மன்னிப்பு கேட்குறீங்க. எனக்கு இது பிடிக்கலை. எனக்கு எப்பவும் டேக் இட் ஈஸி பாலிஸிதான் செட்டாகும். மகேந்திரன் சித்தப்பாகிட்ட கத்துக்கிட்ட முதல் பாடம்” என்று சிரித்தான்.

அவன் வந்ததில் இருந்து அவனையே பார்த்திருந்த பாகீரதி, எங்கே திருப்பதியில் நடந்ததை சொல்லிவிடுவானோ? என்ற பயம் தோன்ற, மனமோ, ‘மாட்டான்’ என்றே சொன்னது. ஏனோ அவனிடம் தனித்து பேச பயம், தன் பலவீனத்தை அறிந்தவனாயிற்றே. இந்த பயம்தான் இவர்களின் வாழ்க்கையில் வினையாகப் போகிறது என்பதை அறியாமல் இருந்தாள் பெண்.

மற்றவர்கள் அறியாவண்ணம் பாகீரதியின் அருகில் வந்தவன், “ஹாய் முறைப்பொண்ணு! கங்க்ராட்ஸ்” என்றான் நேருக்குநேர் தைரியமாக.

‘என்னது முறைப்பொண்ணா!’ அதிர்ந்தவள் முகம் பார்த்து வந்த சிரிப்பை அடக்கி, “யா! உங்கம்மா எனக்கு அத்தைன்னா, நீ எனக்கு முறைப்பொண்ணு தான?”

‘ஹான்!’ என விழித்தவள், “அப்ப இந்த வாழ்த்து எதுக்கு?”

“நெக்ஸ்ட் வீக் காலேஜ் ரீஓபன் ஆகுதில்ல அதுக்குத்தான்.”

“அது உங்களுக்கெப்படி?”

“இதென்ன உலக அதிசயமா. படிக்கிறவங்களுக்கு காலேஜ் லீவு விடுறதும், ஆரம்பிக்கிறதும் சகஜம்தான” என்றவன், அத்தையின் சாப்பிட்டுப் போவை மறுத்து வெளியேறினான்.

விடுமுறை முடியுமுன் தாரிணியின் தாய் தந்தை மருமகன் வீடு வந்து சென்றார்கள்.

மறுவாரம் கல்லூரி ஆரம்பிக்கும் முன்னர் விடுதி செல்ல, மறுபடியும் அனுமதி கேட்டு நினைத்ததை சாதித்தாள் பாகீரதி. என்னதான் சாதாரணமாக பேசினாலும், தன் அப்பா செய்ததை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை அவளால். இவளின் முடிவால் தாரிணிதான் இருதலைக் கொள்ளியாய் வீடா! ஹாஸ்டலா! என்று திணறி, முடிவை கணவனிடமே கேட்க எண்ணி ப்ரவீணிடம் வந்தாள்.

“என்ன மெச்சூரிட்டி கேர்ள்? உன் குழப்பம் தீர்ந்தபாடில்லை போல?”

“எங்க தீர விட்டீங்க? குழப்பம் கூடுதே தவிர குறையமாட்டேன்னுது. சும்மா ரௌண்ட் கட்டி அடிக்கிறீங்க” என்றாள் சின்னதான குரலில்.

“இப்ப என்ன குழப்பம் வீடா? ஹாஸ்டலான்னா?” என்றான் அவளின் மனம் புரிந்தவனாய்.

“ஹை... எப்படி கண்டுபிடிச்சீங்க?” ஆர்வமாய் கேட்க,

“ஆங்! இந்த மெச்சூரிட்டி பொண்ணுக்குள்ள என்னன்ன ஓடுதுன்னு என் மனசுக்குத் தெரியும்.”

“ஓ... நிஜமாவா!” என கண்விரித்து வாய்குவித்து கேட்ட அழகில் சொக்கியவன், தன் இரண்டாண்டுத் திட்டத்தையெல்லாம் கைவிட்டு அவளருகில் வந்தான். கணவனின் வருகை உணர்ந்து மேலும் விழிவிரிக்க, அவளின் பார்வையிலிருந்த அதிர்ச்சியா, ஆர்வமா ஏதோ ஒன்று அருகே அழைக்க சட்டென்று அவளை இறுக்கியணைத்து, “தண்ணி நீ மெச்சூர்ட் கேர்ள் சொன்ன. ஆனா, மேரேஜான பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டேன்ற?” என்றான் ஒருவித கிறக்கக்குரலில்.

“நா...நானா? நா...நான் என்ன நடந்துக்கல?” குரல் அநியாயத்திற்கு தந்தியடித்தது.

“என்ன நடந்துக்கிட்ட? புருஷனுக்கு ஒரு ஹக், ஒரு கிஸ், ஒரு...” என இழுத்து நிறுத்த,

“ஐயையோ!” என்றவள் அவனின் வாய்மூடி, “என்னால முடியாது என்னை விடுங்க” என அவனின் கையிலிருந்து நழுவ முயற்சித்தாள்.

அவனோ விடாமல் இறுக்கிப்பிடிக்க, “ப்ளீஸ்ங்க நான் அன்மெச்சூர்ட் கேர்ளாவே இருந்துக்கறேனே” என்று கணவனிடம் கெஞ்சலில் இறங்கினாள்.

அவளின் பதிலில் அந்த பாவனையில் அவளை தள்ளி நிறுத்தி வாய்விட்டு சிரித்தவன், “நீ அ...அன் மெச்சூர்ட் கேர்ளா? நான் நம்பிட்டேன்!” என்றவனது சிரிப்பு அடங்கவில்லை. பின் தன்னை நிதானப்படுத்தி, அவளைக் காண மனைவியின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவன், “நீயும் அம்முவோட ஹாஸ்டல்ல இருந்து படி. அம்மா பற்றி அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம்’ என்றான் சிரிப்பை நிறுத்தித் தீவிரமாக..

“என்ன என்ன தெரிய வேண்டாம். அவளுக்கு எல்லாமே தெரியும்” என்ற உண்மையை தன்னியல்பாக உடைத்தாள். தன்னை கேலி செய்து வாய்கொள்ளாச் சிரிப்புடன் நின்றிருந்தவனை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ‘ஹாஸ்டல்ல போய் படி’ என்று சொன்னதும் கோவம் வந்துவிட்டது அவளுக்கு. ‘அதென்ன மேரேஜான பிறகு ஹாஸ்டல் அனுப்புறது?’ ஏதோ ஒரு தாக்கம் அவனால் அவளினுள். அது கோவமாக வெளிவர உண்மையை உளறிவிட்டாள்.

“ஏய் என்ன சொன்ன?” என்று அருகில் வர, அதற்குள் வார்த்தையின் வீரியம் உணர்ந்து நாக்கைக் கடிக்க, “அம்முவுக்குத் தெரியுமா? பேசு தண்ணி. அம்மா பத்தி அம்முவுக்குத் தெரியுமா? இது மறைக்கிற விஷயமில்லமா. சீரியஸானது. சொல்லு எப்ப தெரியும்? எப்படி தெரியும்?” என்றான் பதற்றத்துடன்.

அவனின் பதற்றமே அவளை வாய்திறந்து அனைத்தையும் சொல்ல வைத்தது.

“ஷிட்... எத்தனை தடவை சொன்னேன் கேர்புல்லா இருங்கன்னு. இவங்களை...” என்று கோவத்தில் கையால் சுவற்றைக் குத்தினான்.

வேகமாக வந்து கணவனைத் தடுத்து, “எதுக்கு எமோஷனலாகுறீங்க? நான் அவகிட்ட எதுவும் சொல்லமாட்டேன். என்னை நம்பி என்கிட்ட சொல்லுங்களேன்.”

அதற்குள் சற்று நிதானத்திற்கு வந்தவன், “இப்ப என்கிட்ட உளறின மாதிரி அவகிட்டயும் உளறிட்டனா, சோ, நான் ரிஸ்க் எடுக்க விரும்பல” என்றான் தெளிவாய்.

“ஓ... அப்ப அவகிட்ட எனக்குத் தெரிஞ்சதை சொல்லிருறேன்” என்றாள் தன்னை நம்பவில்லையென்ற கோவத்தில்.

பதிலுக்கு, “என்ன? என்னை மிரட்டுறியா?” என்றான் ஆத்திரமாய்.

“மிரட்டுறேனா? நானா?” என தோள்குலுக்க,

அவளின் தோளைப் பிடித்தவன், “உன் மூலமா அவளுக்கு எதாவது தெரிய வந்ததுன்னு தெரிஞ்சது, அத்தோட நம்ம உறவுக்கும் என்ட்தான். அதன் பிறகு இந்த ப்ரவீண் லைஃப்ல நீ இல்லவே இல்ல. உனக்கே தெரியும் எனக்கு அம்மு எவ்வளவு முக்கியம்னு. அவளை எனக்கெதிரா திருப்பின கொன்னுருவேன்” என்று ஆக்ரோஷமாய் நின்றவனைப் பார்த்து பயந்தேவிட்டாள் தாரிணி.

அவன் பிடியில் உடல் வலித்ததென்றால், வார்த்தையில் மனம் வலித்தது. அவள் வேண்டுமென்று எதுவும் பேசவில்லை. வார்த்தைக்கு வார்த்தை வாயாடியது தான் வினையாகிப் போனது.

அவள் பழிவாங்கவென சொல்லவில்லை என்று மூளைக்குத் தெரிந்தாலும், மனது அதை ஏற்க மறுக்க, அவளை உதறிவிட்டு வெளியே சென்றான்.
 
Active member
Joined
May 9, 2025
Messages
110
Thanni unpadu thindattam dhan between the pasamalars be careful with your words,better try to be a mounasamiyar most of the times.🤪🤪
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Thanni unpadu thindattam dhan between the pasamalars be careful with your words,better try to be a mounasamiyar most of the times.🤪🤪
ஆமாங்க ஆமா. பாசமலர்கள் நடுவில் போனா போறவங்கதான் கஷ்டப்படணும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top