Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 359
- Thread Author
- #1
பூமாலை 9
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவன் சரிங்க மாமா நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்க. நான் எஸ்டேட் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று விக்ரம் சொல்ல, சரி கண்ணு என்று அவர்கள் ஐவரும் காரில் ஏறி செல்ல, தனது போனிலிருந்து மித்ரனுக்கு கால் பண்ணினான்.
கடைசி ரிங்கில் அட்டென் பண்ணியவன் "சொல்லு மச்சி, வேலை எல்லாம் எப்படி போகுது? என்றான்."
"வேலையெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்ப நான் எங்க இருந்து பேசுறேன்னு தெரியுமா? கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறேன். இப்பதான் மிருதுளாவைப் பார்த்துட்டு வர்றேன்."
சிறு மௌனத்திற்குப் பிறகு "ஓ... பார்த்தியா? குட்டிமா அங்கதான் ஜாயின் பண்ணியிருக்கா டா" என்று மித்ரன் சொல்லவும், அவளா குட்டிமா... எப்பாஆஆஆ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்ட விக்ரம், "என்னடா 'அங்கதான் ஜாயின் பண்ணியிருக்கா'ன்னு இவ்வளவு சிம்பிளா சொல்ற? அவ கலெக்டர்னு எனக்குத் தெரியும், ஆனா நம்ம ஊருக்கே அவதான் கலெக்டரா வந்திருக்காங்கிற விஷயம் உனக்குத் தெரியும்தானே? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?"
"இல்லடா... அவ இன்னைக்குத்தான் சார்ஜ் எடுத்தா. நீ வேலை விஷயமா அங்க போவேன்னு எனக்குத் தெரியும்." சரி சர்ப்ரைஸா இருக்கட்டும் என்கவும் , மயிர் சர்ப்ரைஸ்.
"நான் போறேனோ இல்லையோ, அது முக்கியம் இல்லடா. நேத்து கூட உன் கூட எவ்வளவு நேரம் பேசினேன்? ஒரு வார்த்தை 'இவள் நம்ம ஊருக்கே வர்றா'ன்னு சொல்லியிருக்கலாம்ல? அங்க அவ முன்னாடி போய் நிக்கும்போது, எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சியா? அவளுக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. எனக்கு அசிங்கமாப் போச்சுடா."
தனது நண்பன் இத்தனை வருடங்களில் மிருதுளா என்று கூட சொல்லியதில்லை. ஆனால் இன்று அவள் இவள் என்று பேசுவதை கேட்ட மித்ரனுக்கு திகைப்பு தான் வந்தது.
ஹலோ ஹலோ எருமை மாடு லைன்ல இருக்கியா என்று விக்ரம் கத்தவும் அந்த குரலில், "இதுல என்னடா அசிங்கம்? அவ அவ வேலையைப் பார்க்கப்போறா. நாம எதுக்கு நடுவுல?".
"டேய், அவ வேலையைப் பார்க்கட்டும், அது வேற. ஆனா அவ நம்ம ஊருக்கே அதிகாரியா வர்றப்போ, என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க பாரு... அதுதான் எனக்குப் புரியல. நான் என்ன அவகிட்ட சிபாரிசா கேட்கப்போறேன்? மிலிட்டரிக்கு போனதுல இருந்து நீ ரொம்ப 'ரிசர்வ்டு' ஆயிட்ட மச்சி. நண்பன்கிட்ட கூட எதையும் ஓப்பனா பேச மாட்டேங்குற. இது சரியில்லைடா."
அடேய்.... ராசா...."ஏன் டா ஏன், நான் வேணும்னு பண்ணல..."
ஓஓஓ"சரி விடு... உனக்கு இது சாதாரணமாத் தெரியலாம். ஆனா எனக்கு இது அப்படி இல்ல. நான் அப்புறம் பேசுறேன்" என்று விக்ரம் போனை கட் பண்ண..
எப்பா நல்லவனே ...
ஆமா எந்த அதிகாரி கலெக்டர் வந்தா உனக்கு எங்க ராசா வலிக்குது?.
என்ன என்னைக்கும் இல்லாம புதுசா அவளைப் பற்றி சொல்லவில்லை என்று இப்படி குதிச்சுக்கிட்டு இருக்க என்று மனசாட்சி கேட்கவும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே.என் நண்பனோட தங்கச்சி அந்த எண்ணம் மட்டும் தான் எனக்கென்றான்.
ஆஹான்..
அப்படியா!
உன் பார்வையை பார்த்தால் அப்படி இல்லையே ராசா. என்னமே புது பொண்டாட்டி யை ரசிக்கிற போல இன்ச் இன்ச் ஆ பாத்துட்டு இருந்தியே அதை நான் கவனிச்சேன் தான் என்கவும், மரியாதையா ஓடிப் போயிடு என்று பல்லை கடித்தவன் பின்னர் தனது ஜீப்பில் ஏறி வீட்டை நோக்கி சென்றான்.
அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் அங்கே ஹாலில் உட்கார்ந்து இருக்கும் தனது தாத்தா பாட்டியை பார்த்து சாப்பிட்டீங்களா? என்க, இப்போது தான் விக்கி. ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம் என்று வசுந்தரா தனது பேரனிடம் கேட்கவும், கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிருந்தோம் பாட்டி.
புதுசா வந்திருக்கிறது யார் தெரியுமா? என்க... எங்களுக்கு எப்படி தெரியும் பா நீதான போயிட்டு வந்த என்று சுந்தரமூர்த்தி சொல்லவும் புது கலெக்டர் வந்து இருக்காங்க.சரி மரியாதை நிமித்தமாக பார்க்க போயிருந்தோம். அங்க போனா நம்ம மிருதுளா உக்காந்து இருக்கா...ஓஓஓ...அப்படியா என்று இருவரும் புதிதாக கேட்பது போல் ஆச்சரியமாக கேட்க, ஆமாம் தாத்தா எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
அந்த எருமை மாட்டு பயல் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லைனு தனது தாத்தா பாட்டியிடமும் நண்பனை திட்ட மறக்கவில்லை.
சரி விடு கண்ணு எப்படியும் குட்டிமா வீட்டுக்கு வருவா, பாத்துக்கலாம் வா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்கவும், ஹம் என்றவன் கையை கழுவிட்டு வந்து உட்கார, வசுந்தரா வும் பேரனுக்கு பரிமாறினார்.
பின்னர் சாப்பிட்டு மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த விக்ரம் அங்கிருந்த சோபாவில் உட்கார, கண்கள் மட்டும் கலெக்டர் ஆபீஸில் கண்ட அந்த ஒரு காட்சியிலேயே நிலைத்திருந்தன.
"அவளா இது?" என்று அவனுக்குள் ஆயிரம் முறை கேட்டுக்கொண்டான். காலங்கள் அவளை இவ்வளவு மாற்றியிருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவள் அமர்ந்திருந்த அந்த உயர்ந்த நாற்காலிக்கும், அவன் நின்றிருந்த இடத்திற்கும் இடையே இருந்த தூரம் அவனை மிகவும் பாதித்தது. அவளைப் பார்த்த அந்த ஒரு நொடியில் அவன் உடல் சிலிர்த்ததை நினைத்து இன்னும் அதிராமலில்லை.
சிறிது நிமிடங்கள் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனது போனிற்கு கால் வரவும் அதில் கலைந்தவன் பின்னர் தனது வேலையை பார்க்கலானான்.
கலெக்டர் இல்லம்:
வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவளிடம் முதல் நாள் எப்படி போனது என்று மாலா கேட்க, நல்லா போச்சுங்கம்மா. சரி நான் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று ரூமிற்கு போய் ரெபிரஷாகி வரவும், சூடான காபி கப்பை கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் அமைதியாக ஜன்னல் ஓரம் போய் நின்றாள்.
ஜன்னல் வழியாக வெளியே இருக்கும் அழகிய மலர் தோட்டங்களும் நீண்டு வளர்ந்த மரங்களை விட அவளது கண்களுக்குள் விக்ரமின் முகம் மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தது.
அவன் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் அவள் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போனாள். ஆனால், ஒரு கலெக்டராக அந்த இடத்தில் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ள முடியாமல் போனது அவளுக்குள் ஒரு பாரத்தை ஏற்படுத்தியது.
கடைசியாக இவங்களை எப்ப பார்த்தோம் என்று யோசிக்கும்போது தனது அண்ணனின் கல்யாணத்தில் சந்தித்தது தான் அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள்.ஆனால் இதன் நடுவில் எவ்வளவு மாற்றம். ..
இருவருமே வெவ்வேறு அறைகளில் இருந்தாலும், இருவரது மனமும் அந்த ஒரே ஒரு சந்திப்பையே சுற்றிச் சுற்றி வந்தன. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அந்த மௌனமான சந்திப்பு இருவரின் இரவையும் தூக்கமில்லாமல் ஆக்கிவிட்டது.
எந்தவிதமான அரசு ஆரவாரமும் இன்றி, ஒரு சாதாரணப் பெண்ணாக, நீண்ட வருடங்களுக்கு பிறகு மாலா வுடன் வீட்டிற்குள் நுழைந்த மிருதுளா முதலில் தாத்தா-பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
வரவேற்பறையில் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும் தாத்தா, கண்ணாடிக்கு மேல் கண்களை உயர்த்தி, "வாம்மா மிருதுளா.. இப்பதான் உனக்கு நேரம் கிடைச்சதா?"
கலெக்டர் மேடம் என்று சுந்தரமூர்த்தி கூப்பிட தாத்தா என்று சிரித்தாள். சிறு வயதில் மிருதுளா விளையாடிய கதைகளையும் பகிர்ந்து கொண்டவர் "அப்பவே தெரியும் நீ பெரிய ஆளா வருவேன்னு" என்று அவர் சொல்லும்போது மிருதுளாவின் கண்களில் ஒரு பெருமிதம் மின்னியது.