- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
22
எதிரில் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்து, “ஏன் சித்தார்த்.. கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி அபத்தமா பேசுறீங்க?” என்று கேட்டான்.
“நீங்கதான் லாயர் சார் அபத்தமா பேசுறீங்க. இவள் என் ஒய்ஃப். அவளுக்கு எப்படி நீங்க தாலி கட்ட முடியும்?”
“என்ன சித்தார்த் உளர்றீங்க? இடம் தெரியாம தப்பு பண்றீங்க” என்றான் எச்சரிக்கும் தொணியில்.
“நான் தேடி வந்த என் மனைவி இவள்தான் லாயர் சார்” என்றான் சித்தார்த்.
சட்டென்று எழப்போன நட்சத்திராவைக் கைபிடித்து உட்கார வைத்தவன், “இவரை உனக்குத் தெரியுமா?” என கேட்க, ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“அப்ப சித்தார்த் சொன்னது உண்மையா?” என்றதும் நடந்ததை இல்லையென்று மறுக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
“அண்ணா நான் சொல்றேன்” என்றபடி வந்த தங்கையைப் பேசவிடாமல் தடுத்து,
“சொல்லு நதி. எப்படி இது நடந்தது?”
“இல்ல வேண்டாம்” என்று அவள் மிரள,
“ரிலேடிவ்ஸ் எல்லாரும் மண்டபத்துலதான் இருக்காங்க. இங்க இருக்கிற எல்லாரும் நம்மளோட நெருங்கின உறவுகள் மட்டும்தான். தயங்காம நடந்ததைச் சொல்லு நதி. இல்லன்னா சித்தார்த் சொல்றதை நம்ப ஆரம்பிச்சிருவாங்க.”
“லாயர் சார் அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. எங்க வீட்டுப் பொண்ணை எங்களோட அனுப்புங்க” என்றான் சித்தார்த்.
“என்ன நடந்ததோ அதை நான் சொல்றேன் தம்பி. அதுக்கு முன்னாடி முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள தாலியைக் கட்டுங்க” என்று இடையிட்டார் திலகவதி.
“என் மருமகளுக்கு எவன்டா தாலி கட்டுவேன்றது?” திடீரென சத்தமாகக் கேட்ட கணீர்க் குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்றிருந்தார் செல்லம்மா. அவருடன் ரெங்கசாமி.
“என்ன லாயர் தம்பி? எங்க கேஸை நீங்க எடுத்து நடத்தினா எங்க மருமகள் உங்களுக்குச் சொந்தமாகிருவாளா?” நக்கலாகக் கேட்டார்.
“ஓ... அப்படிச் சொல்றீங்களா?” என்றவன் நட்சத்திராவின் புறம் திரும்பி “நீ சொல்லு நதி? கல்யாணம் எப்ப நடந்தது?”
“என்னோட பதினாலாவது வயசுல.”
“பதினாலு வயசுலன்னா? லவ்வா?” என்றான்.
“ஐயையோ இல்லைங்க. ஏன் இப்படிப் பேசுறீங்க? அந்த வயசுல எனக்கு லவ்னா என்னன்னே தெரியாது. அப்ப இவனையுமே யார்னு தெரியாது.”
“ஓகே நம்புறேன். இப்ப இவன்மேல...”
“லாயர் சார் இது கோர்ட் கிடையாது. உங்க வாதத்திறமையை என் பொண்ணுகிட்ட காட்டாதீங்க. அவள் ஏற்கனவே இவனால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா” என்று நந்தகுமார் கோவமாக இடையிட்டார்.
“அட இருங்க மாமா. நீ சொல்லு நதி. இவன் மேல எதுவும் இன்ட்ரெஸ்ட்?”
‘உனக்கு என்னைத் தெரியாதா? நான் அப்படிப்பட்டவளா?’ என்பதாய் பார்வையாலேயே எதிர்க் கேள்வி கேட்டுக் கண்கலங்கப் பார்த்தாள்.
‘உன்னை நானறிவேன்’ என்பதாய் கண்மூடி ஆறுதலளித்தவன், தங்கையிடம் கண்காண்பித்து, தன் அப்பா, அம்மா, பாட்டியையும், நட்சத்திராவின் அப்பா, அம்மா, சித்திக்கும் சைகை காண்பித்தான். அனைவரும் மணமக்கள் அருகில் செல்ல, அவர்கள் அருகில் வந்ததும் “நதி என்னை முழுசா நம்புறல்ல?” என கேட்டான்.
அவளோ ஏனென்று புரியாவிட்டாலும் ‘ஆம்’ என்று தலையசைக்க, “கொஞ்சம் சிரி” என்றான்.
‘எப்படி?’ என்பதாய் அவள் பார்வையிருக்க, “இப்படித்தான்” என்று புன்னகையுடன் தாலியைக் கட்ட, மின்னல் கொடி நாத்தனார் முடிச்சிட்டு, வாழ்த்துச் சொல்லி அண்ணியாகிய தோழியை அணைத்துக் கொள்ள, சந்தோஷமும் ஒருவித அமைதியும் மட்டுமே நட்சத்திராவிடம்.
தாலி கட்டுகையில் “டேய்! வேண்டாம்” என்ற வார்த்தைகள் வலுவிழந்து போக, சித்தார்த்தோ அவன் பெற்றோரோ கத்திய எதுவும் அவர்களை அசைக்கவில்லை.
“நமக்கு எப்பவுமே நான் டைமிங்தான் நதிமா. என்ன அப்படிப் பார்க்கிற? சந்தேகப்பட்டேன்னு நினைச்சியா?” என்றதும் அவள் தலையாட்ட, “நீ வேணும்னா என்னைச் சந்தேகப்படலாம். நான் என்னைக்கும் அதைச் செய்யமாட்டேன். இப்ப உன்கிட்ட இதைச் சொன்னா அபத்தமா தெரியும். ஆனால், நிஜம் இதுதான். ஐ லவ் யூ நதி” என்றானவன்.
‘ஐ லவ் யூவா!’ பே என மலங்க விழிக்க,
“நான்தான் நீ என்னைச் சந்தேகப்படுவ சொன்னேன்ல. பாரு என்னை நம்பல” என சடைப்பாக சொல்லி, “இப்ப நீ என் ஒய்ஃப். கல்யாணத்துக்குப் பின்னான காதலுக்கு பிள்ளையார் சுழி போடணும்ல. அதான் ஆரம்பத்துலயே ஹெவியா போட்டுட்டேன்” என்றான் கண்ணடித்து.
‘அரை நாளில் இவனின் காதலியை மறந்து இன்னொருத்தியான தன்னை ஏற்பது சாத்தியமா? ஆண் என்பதால் நம்மைப்போல் உணர்வுகள் இருக்காதோ!’
அவளின் குழம்பிய பார்வையில், “ஏய் அண்ணி பார்த்தது போதும். சாமி கும்பிட்டுட்டு மண்டபத்துல போய் உட்கார்ந்து நிதானமா பார்க்கலாம். எதிர்ல பார் அக்னி குண்டத்துக்கு ஈக்வலா ஆத்திரத்தில் சிலர் எரிஞ்சிட்டு இருக்கிறதை” என்று எரிகிற நெருப்பிற்கு இன்னும் எண்ணையை ஊற்றினாள்.
“தப்பு பண்ணிட்டீங்க அர்ஸ். அவள் என் ஒய்ஃப்னு சொன்னதை நம்பாம, கண்சிமிட்டுற நேரத்துல தாலியைக் கட்டிட்டா சரியாகிருமா? இந்தக் கல்யாணம் செல்லாது லாயர் சார்? என்று கத்தினான்.
நட்சத்திராவின் உடல் நடுங்க, “எதுக்கு இப்ப பயப்படுற நதிமா? அண்ணன் பார்த்துப்பான் நீ தைரியமாயிரு” என்றாள் மின்னல் பெண்.
“இந்தக் கல்யாணம் செல்லாதுன்னா. பதினாலு வயசுப் பொண்ணுக்கு தாலி கட்டினது செல்லுமோ? நான் படித்த எந்தச் சட்டமும் அப்படிச் சொல்லலையே சித்தார்த் சார். பெண்களுக்கான திருமண வயசு பதினெட்டில் இருந்து இருவத்தொண்ணுக்கு மாறி ரொம்ப காலமாகுது. பெண்களுக்கே இருவத்தொண்ணுன்னா ஆண்களுக்கான வயசை நீயே கணக்குப்போட்டுப் பார்.”
“அந்த வயசுல நடந்த கல்யாணத்தைச் சொல்லலை லாயர் சார். நான் இன்றைக்கு நடந்த எங்க கல்யாணத்தைப் பற்றிச் சொல்றேன்” என நக்கலாகச் சிரித்தான் சித்தார்த்.
“இல்லைங்க. இவன் பொய் சொல்றான்” என்று நட்சத்திரா அலற,
“பொய் சொல்றேனா? சைன் பண்ணும்போது நீ நிதானத்துலதான இருந்த. இப்ப என்ன அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காத மாதிரி பேசுற?”
“சைனா? நான் எதுலயும் சைன் பண்ணலை” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.
ஏனோ அந்தக் கண்கள் சித்தார்த்திற்கு அந்நியமாகத் தெரிந்தன. ‘ரெஜிஸ்டர் ஆபீஸில் பார்த்த பெண்போல் தெரியவில்லையே’ என்று மனம் சொல்ல, ‘இல்ல மேக்கப் போட்டதால நமக்கு வித்தியாசமா தெரியுது’ என்று நினைத்தவன் தங்கள் திருமணத்தை நிரூபிக்கும் பொருட்டு, “ஜோஸ்” என்று சத்தமாக அழைத்தான்.
ஒருவன் வேகமாக வந்து கோப்பு ஒன்றைக் கொடுத்துச் சென்றான்.
அதை அரிச்சந்திரனிடம் நீட்டி, “இதைப்பார்” என்று கொடுத்த வேளையில், ஆங்காரத்துடன் வந்து அவன் சட்டையைப் பிடித்தாள் அவள்.
“ஏய்!” என கோபத்தில் அவள் முகம் பார்த்தவன் அதிர்ந்து அரண்டு நட்சத்திராவைப் பார்த்தான்.
“ஏன்டா இப்படிப் பண்ணின?” எனும்போதுதான் அவள் கட்டியிருந்த புடவையையும், தான் கட்டிய தாலியையும் அவளிடம் இருக்கக் கண்டவன் புரியாது விழித்தான்.
“என்ன சித்தார்த்? மாப்பிள்ளை இடத்துல உங்க பெயரும், மணமகள் இடத்துல வெண்மதி பெயரும் இருக்கு” என்றான் அரிச்சந்திரன்.
“நட்சத்திராவை வெண்மதின்னு நினைச்சிட்டீங்களா சித்தார்த்? அவள் வேணும்னா முறையா பேசி முடிச்சிருக்கலாமே. முறைப்பெண்தானே?” என்றதும் சட்டென்று ஒரு வேகம் எழ, அதை வாங்கிப் பார்த்தவன், தலையில் கைவைக்காத குறையாக தாயைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“அவன் கேட்டிருந்தா மட்டும் நான் இந்தப் பொறுக்கியை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேனா? ஏன்டா இப்படிப் பண்ணின? தூக்கி வந்த பொண்ணு யாருன்னு கூடத் தெரியலை நீயெல்லாம் என்ன...”
மேலே சொல்லவிடாமல் மகளின் கையைப் பிடித்துத் தடுத்த திலகவதி, “ஏன் சித்தார்த் இப்படிப் பண்ணின? சொத்தெல்லாம் இழந்து, அவரையும் இழந்தாலும் நாங்க மானத்தோட வாழ்றது உனக்குப் பிடிக்கலையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
“அ... அத்தை” என்று சித்தார்த் திணற,
“உங்க மானத்துக்கு என்ன குறை வந்தது திலகா? முறைதான?” என்றார் செல்லம்மா.
“முறையையும், முறை இல்லாமல் செய்தால் எல்லாமே தப்பா போயிரும் அண்ணி.”
“என் பையனைக் கல்யாணம் பண்ணிக்க உன் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்.” சற்று கர்வம் அவர் குரலில்.
“இந்த லூசைக் கல்யாணம் செய்ய கொடுத்து வேற வச்சிருக்கணுமா?” என்றதும் சித்தார்த் அவளைக் கடுப்பாய் பார்க்க, “கௌரவத்திற்காக என் அக்காவை வாழவிடாம ஓடஓட விரட்டினவனைக் கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கணுமா? அக்காவுக்கும், தங்கைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த காமாலைக்கண் உள்ளவனை கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கணுமா? மத்தது எல்லாம் விடுங்க. இவன் ஏன் இப்படிப் பண்ணினான்னு கேளுங்க? எனக்கு இப்ப நியாயம் வேணும்” என்றாள் கோவமாக.
தாயின் முறைப்பையும், தந்தையின் ‘என்னடா இப்படிப் பண்ணிட்ட’ என்ற குற்றம்சாட்டும் பார்வையையும் கண்டுகொள்ளாது, “சாரி” என ஒற்றை வார்த்தையில் மன்னிப்பை வேண்டினான் சித்தார்த்.
தங்கையின் நிலைக்குத் தான்தான் காரணமோ என கண்கலங்க நின்றிருந் நட்சத்திராவின் கைபிடித்து கண்களால் சமாதானப்படுத்தினான் அரிச்சந்திரன்.
“என்னது சாரியா? அம்மா சாரியாம்” என நக்கலாகச் சொல்லி “ஒரு சாரியில இந்தக் கல்யாணம் ரத்தாகிருமா? இல்ல இவன் தாலியே கட்டலன்னு அகிருமா? எதுக்கு இந்த சாரின்னு கேளுங்கம்மா?”
“ஏய் வெண்மதி! புருஷனை அவன் இவன்ற?” செல்லம்மா மகனுக்காக வர,
“வாங்க மாமியாரே!” என்றதில் அனைவரின் புருவமும் ஏறி இறங்க, சிலருக்குள் புன்னகை, சிலருக்குள் கேள்விகள்.
“இப்பவும் உங்க பையனைக் கண்டிக்க முடியலை இல்ல. அவனா நினைச்சா பொண்ணைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டுவான். பாதிக்கப்பட்ட நாங்க எதுவும் கேட்கக்கூடாது. அப்படித்தான? பயந்து ஊரை விட்டு ஓட என்னை என்ன நட்சத்திரா நினைச்சீங்களா? நான் வெண்மதி!” என்றாள் தெனாவட்டாய்.
செல்லம்மா அவளை ஆச்சர்யமாக மெச்சுதலாகப் பார்த்ததை வெண்மதி அறியவில்லை.