- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
14
“ஏன் அத்தை? என்னதான் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், இவ்வளவு பெரிய வீடு, தோட்டம் சாத்தியமா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ஏன்மா கேட்குற?”
“இல்ல அத்தை. என் தம்பி இப்பதான் சம்பாதிக்கப் போறான். கொஞ்ச வருஷமானா ஒரு லட்சம்னாலும் சம்பளம் கிடைக்கும். அப்ப இது மாதிரி இடம் வாங்கி வீடு கட்டிரலாம்ல. அதான் கேட்டேன்.”
“என்னது! இது மாதிரி சென்னையில் வீடா?” அதிர்ந்தவர், பின் விடாது சிரித்தார்.
“சந்தேகம் கேட்டா சொல்லித்தரணும். அதை விட்டுட்டு சிரிக்குறீங்க” என்று முகம் தூக்க,
“சரி சிரிக்கலை. இந்த இடம் எங்க அப்பா வாங்கிப்போட்டது. ஒரே பொண்ணுன்றதால அவங்க காலத்துக்குப் பிறகு எனக்கு வந்திருச்சி. இடம் பெருசுன்னாலும் இரண்டு சென்ட் அளவுல சின்னதா வீடு இருந்தது. அப்பாவோட நண்பர் யாருக்கோ அவசரத் தேவைன்னு இடத்தைக் கொடுத்து பணத்தை வாங்கிக்கிட்டார். இல்லைன்னா சென்னையில் இடம் வாங்க அவசியமே இருந்திருக்காது. நாங்க பிறந்த வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். அங்கதான் வீடு நிலம்னு எல்லாம் இருக்கு.”
“நீங்க ஒரே பொண்ணுன்னா, உங்க அண்ணன் ஆனந்தன்?”
“சித்தப்பா பையன்மா. எங்கப்பா அம்மாவுக்குக் கல்யாணம் முடிஞ்சி ஐந்து வருடம் கழித்துதான் பிறந்தேன். அதுக்குள்ள சித்தப்பாவுக்குக் கல்யாணம் முடிந்து அண்ணன் பிறந்துட்டான். ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமா இருந்ததால அம்மாகிட்டதான் அண்ணன் வளர்ந்தது. நான் பிறந்த பின்னும் அதுவே தொடர்ந்தது. விவரம் தெரியுற வரை யார் கேட்டாலும் அவனை கூடப்பிறந்தவன்னு தான் சொல்லுவேன். தெரிந்த பின்னும் அதான்” என்று சிரித்தார்.
“என் அண்ணன் குணத்துக்கு எதை வேணும்னாலும் கொடுக்கலாம் அனுமா. அத்தனை செல்லமா வளர்ந்த எனக்கு கல்யாணத்திற்குப் பிறகு எல்லாமே மாறிப்போச்சி. அப்பவும் அண்ணன் என் கூடவே இருந்தாங்க. சொத்து பிரிச்சப்ப அண்ணனுக்கும் ஒரு பங்கு கொடுக்க எங்கப்பா முன் வந்தப்ப, எனக்கு என்னோடதே போதும். வேணும்னா என்னோடதையும் அபிக்கே கொடுத்திடுறேன்னு சொன்னவன் என் அண்ணன். இப்பவரை அதே மாறாத அன்பு. பிள்ளைங்களும் பாகுபாடு பார்த்து வளர்ந்ததில்லை.”
“ஏழெட்டு வருடம் முன்னதான் சென்னை வந்தோம் அனுமா. அப்பா அம்மா போன பிறகு, பையன்களும் படிச்சி முடிச்சி நல்ல நிலைக்கு வந்ததும், இந்த வீட்டை இடிச்சிட்டு பெருசா கட்டிட்டாங்க. இரண்டு வருடம் இருக்கும் இந்த வீட்டுக்கு பால் காய்த்து. அண்ணனும் இங்கேயே இடம் வாங்கி வீடு கட்டி வந்துட்டாங்க. மதி, ஷண்மதிக்குப் பிடிச்சிருந்ததால கல்யாணம் செய்தாச்சி. அண்ணன் உறவும் விட்டுப்போகலை. என்ன கல்யாணம் முடிந்த கொஞ்ச நாள்ல அண்ணியும் இறந்துட்டாங்க.”
“ஓ...” என்றவள் பேச்சு சோகமாகச் செல்வதை உணர்ந்து, அவரை மாற்ற எண்ணி, “அப்ப சமூகம் பெரிய கைதான் போல?” என்றாள் கேலியாக.
“அப்படியும் வச்சிக்கலாம்” என்றார் சிரிப்புடன்.
“அதானே பார்த்தேன். லட்சக்கணக்குல சம்பளம் வந்தாலும் இவ்வளவு பெரிய வீடு எப்படி கட்டினாங்கன்னு யோசிச்சிருக்கணும்” என்றவள் திடீரென, “அத்தை, மாமா எப்ப இறந்தார்?” என கேட்டாள்.
“அ...அது அனுமா. அந்த ஆள் சாகலை. ஆனா, எங்களைப் பொறுத்தவரை செத்துட்டார்” என்றார் உறுதியாக.
“சரி விடுங்க அத்தை” என்று பேச்சை முடிக்கப் பார்த்தாள்.
“ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்கத் தோணலையா அனுமா?”
“அவசியமானது அப்படின்னா கல்யாணத்தப்பவே சொல்லியிருப்பீங்க. அவசியமில்லாததைச் சொல்லி பிரயோஜனம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். சரி விடுங்க அத்தை. செத்ததை ஏன் திரும்பவும் தோண்டிட்டு இருக்கணும். வாங்க மதிய சமையல் என்னன்னு பார்க்கலாம்” என்று வீட்டினுள் செல்லத் திரும்ப,
“உங்களுக்கு நான் என்ன செய்தேன்னு கேட்டியே அனுமா? இதைவிட எங்களுக்கு என்ன செஞ்சிடப்போற. இளவரசின்னு சொன்னது இதுக்குதான்” என்றார் அவள் குணத்தைக் காரணமாக்கி.
மறுநாள் காலை தாய் முன் வந்தவன் மனைவி எங்கே என கேட்க, அதே நேரம் அவளும் வர, “மிஸஸ்.அறிவழகன் செக்கப்கு ஹாஸ்பிடல் போகணும். சீக்கிரம் ரெடியாகுங்க” என்றான்.
“நான் அத்தை கூடப் போறேன்” என்றாள் அவன் முகம் பாராது.
“அனுமா சாரிடா. பெரியவன் கம்பெனியை பார்க்கப் போகணும். நிறைய வேலை அப்படியே தேங்கி நிற்குது. நான் கண்டிப்பா போயே ஆகணும்” என்றார் மறுப்பதற்கான வருத்தத்துடன்.
“என்ன கம்பெனி?” தனக்கு இதுவரை தெரியாதே என்ற எண்ணத்தில் கேட்டாள்.
“பேப்பர், ப்ளாஸ்டிக், இது மாதிரி இன்னும் சில பழையதை வாங்கி மறுசுழற்சி பண்ற கம்பெனிமா. வேலையாளா இருக்கிறதை விட முதலாளியா இருக்குறதுதான் பிடிக்கும்னு சொல்லி, எட்டு வருஷம் முன்ன ஆரம்பிச்சான். இப்ப பெரிய அளவுல போயிட்டிருக்கு. அவன் இல்லாததால நான் பார்க்க வேண்டிய சூழ்நிலை” என்றார்.
“ஓ... ஆனாலும், இந்த வயசுல ஏன் அத்தை கஷ்டப்படணும்? அதான் உங்க அறிவா பிள்ளை இருக்குல்ல, அனுப்பிட்டு வாங்க” என்றாள்.
“அவனுக்கு இதில் இன்ட்ரெஸ்ட் இல்லைமா. வந்தே ஆகணும்ன்ற சூழ்நிலை வந்தா, அப்ப மறுக்காமல் வருவான்.” மகனை விட்டுக்கொடுக்காது பேசினார் அபிராமி.
தன்னுடைய விருப்பமின்மையை முகத்தில் காண்பித்தாலும், “வெய்ட் பண்ணச் சொல்லுங்க அத்தை. வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.
“என்னடா அறிவா! இன்னும் மேனேஜராதான் இருக்கியா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறதா சொல்லிட்டிருக்கா.”
“கூடவே இருக்கிற நீங்க ஏன்மா சொல்லலை? கல்யாணத்துக்கு முன்ன சொல்லியிருப்பீங்க நினைச்சேன். அதனாலதான் அவள் மேனேஜர்னு சொல்றப்பல்லாம் விளையாட்டுக்கு சொல்றாள்னு எடுத்துக்கிட்டேன். இப்ப நான் சொன்னாலும் நம்பமாட்டா போல. நான் சொல்ல சந்தர்ப்பம் கொடுப்பாளா பாருங்க. நீங்களே இன்னைக்கு அவள்கிட்டச் சொல்லிருங்க” என்றான்.
வேலைப்பளுவில் அபிராமி அதை மறந்துபோக, தாய் சொல்லியிருப்பார் என மகன் நினைக்க, இதுவும் பிரச்சனையாக வெடிக்கும் காலம் வருமோ!
“அறிவா! இந்த மன்த் டாக்டர் ஸ்கேன் எடுக்கணும் சொன்னாங்க. குழந்தையோட சேர்த்து அனு ஹெல்த் எப்படி இருக்குன்னு கேட்டுக்கோ.”
“நான் பார்த்துக்குறேன்மா” என்று மனைவி வரும்வரை காத்திருந்தவனுக்கு, அவளின் கால் கொலுசு சத்தம் கேட்க, தன்னிச்சையாய் அவன் இதழ்கள் புன்னகைக்க, நிமிர்ந்தவன் கண்களில் சுடிதார் அணிந்து வந்த அவனவள் தெரிந்தாள். அதுவும் கைபேசியில் யாருடனோ சிரித்துப் பேசியபடி வந்தவளை, நேரடியாகவே விழுங்க ஆரம்பித்தான் அறிவழகன்.
மூளையில் அடித்த அலாரத்தில், நிமிர்ந்து கணவனைப் பார்த்தவள் மனம் பக்கென்றானது. ‘இவன் என்ன இப்படிப் பார்க்கிறான்? சரியில்லையே. ஆரம்பத்துலயே அடக்கி வச்சிரு அனு’ என்ற மூளையின் எச்சரிக்கையில் கோவத்தை அடக்கி, “வர்றேன் அத்தை” என்று வெளியே சென்றாள்.
‘அடேய் அறிவழகா! உனக்கு உன் பொண்டாட்டி எதோ ஆப்படிக்கப் போறா. முடிஞ்சா தப்பிச்சிக்க. இல்லை உன் பாடு ஹோஹையா’ என்று அறிவு எச்சரிக்கை விடுக்க, அடித்துப்பிடித்து எழுந்து வெளியே ஓடியவன், காரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடி வந்தான்.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, வண்டியை எடுத்து சாலைக்கு வரும்வரை அமைதி காத்தவன், “ஆமா. என்னை ஏன் அப்படிப் பார்த்தீங்க?” என்று கோவமாகக் கேட்டான். உள்ளுக்குள் அவ்வளவு படபடப்பு. கேள்வியில் மனைவியை முந்திவிடும் வேகம்.
“ஹல்...” ‘ஹலோ’ என்று சொல்ல வந்தவளை முடிக்கவிடாது, “இங்க பாருங்க மிஸஸ்.அறிவழகன் நீங்க பார்த்ததை நான் பார்த்தேன். நல்லா உத்துப் பார்த்தேன். நீங்க இல்லைன்னு சொல்ல முடியாது” என்றான் வேகமாக.
கணவனையே பார்த்தவளுக்கு அவன் சொல்வது நிஜம்போல் தோன்ற, சட்டென தலையை உதறி, “என்ன மேனேஜர் சார் புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா? பார்த்தது நீங்க. எங்க நான் கேட்டுருவேனோன்னு முந்துறீங்களா?”
“நானா? நான் எப்பப் பார்த்தேன்? அவ்வ்...” என வாயில் கைவைத்து, “அப்பாவிப் பையன்றதால ஏமாத்தலாம்னு பார்க்குறீங்களா மிஸஸ்.அறிவழகன்?” என்றான் கோவம்போல்.
“இப்ப என்ன நீங்க ஏன் பார்த்தீங்கன்னு நான் கேட்கக்கூடாது. அதுதானே?”
“நான் பார்க்கவே இல்லைன்றேன்” என்று அடித்துப் பேசினான்.
“சரி நான் கேட்கலை” என்று பல்லைக்கடித்து வாபஸ் வாங்க, அதற்கும் பதில் சொல்ல வந்தவனை கைநீட்டித் தடுத்தவள், எதிரில் சாலையைக் கை காட்டி ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள்.
‘ஸ்ஸப்பா... தப்பிச்சேன்டா சாமி’ என தனக்குத்தானே பேசி மருத்துவமனை சென்று, மருத்துவர் வர்ஷாவிடம் சோதனை முடித்து மருத்துவ அறிக்கை வாங்கி வெளியே வருகையில், அறிவழகனுக்கு கைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன் முகம் மாற, சட்டென எழுந்த கோவத்தை மனைவிக்காக மறைத்தவன், “இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன். அதுவரை அங்க இருந்து யாரும் போயிருக்கக்கூடாது. போக விடவும் கூடாது” என்று அழுத்திச் சொல்லி அழைப்பைத் துண்டித்து, மனைவியின் பக்கம் திரும்புகையில் முகத்தை இயல்பாக்கினான்.
“மிஸஸ்.அறிவழகன்! அவசரமா ஆஃபீஸ் போகணும். உங்களைத் தனியாகவும் அனுப்ப முடியாது. என்ன செய்யலாம்? கூட வர்றீங்களா?” என்று கேட்டான்.
கணவனின் மிஸஸ்.அறிவழகனில் ஏதோ குறைவது போலிருந்தது. ஏனோ மறுக்கத் தோன்றாது சம்மதித்துக் காரில் உட்கார, ஒருவித இறுக்கத்தில் ஓட்டியவன், கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி வரும்வரை எதுவும் பேசவில்லை.
“இங்கேயே... ம்... இல்லை ரிசப்ஷன்ல உட்கார்ந்திருங்க. நான் அரைமணி நேரத்தில் வந்திருவேன்” என்றான்.
“என்ன பிரச்சனை?” என்றாள் அவனின் அந்நிலைக்கான காரணம் புரியாது.
“வந்து சொல்றேன்” என்று காரை விட்டு இறங்கியவன், சுற்றி வந்து மனைவி இறங்க உதவி செய்து, பின்புறக் கதவைத் திறந்து மேல் உடுப்பை எடுத்து மாட்டியவன், அதீத கோவத்தில் உள்ளே சென்றான்.