• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
14


“ஏன் அத்தை? என்னதான் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், இவ்வளவு பெரிய வீடு, தோட்டம் சாத்தியமா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஏன்மா கேட்குற?”

“இல்ல அத்தை. என் தம்பி இப்பதான் சம்பாதிக்கப் போறான். கொஞ்ச வருஷமானா ஒரு லட்சம்னாலும் சம்பளம் கிடைக்கும். அப்ப இது மாதிரி இடம் வாங்கி வீடு கட்டிரலாம்ல. அதான் கேட்டேன்.”

“என்னது! இது மாதிரி சென்னையில் வீடா?” அதிர்ந்தவர், பின் விடாது சிரித்தார்.

“சந்தேகம் கேட்டா சொல்லித்தரணும். அதை விட்டுட்டு சிரிக்குறீங்க” என்று முகம் தூக்க,

“சரி சிரிக்கலை. இந்த இடம் எங்க அப்பா வாங்கிப்போட்டது. ஒரே பொண்ணுன்றதால அவங்க காலத்துக்குப் பிறகு எனக்கு வந்திருச்சி. இடம் பெருசுன்னாலும் இரண்டு சென்ட் அளவுல சின்னதா வீடு இருந்தது. அப்பாவோட நண்பர் யாருக்கோ அவசரத் தேவைன்னு இடத்தைக் கொடுத்து பணத்தை வாங்கிக்கிட்டார். இல்லைன்னா சென்னையில் இடம் வாங்க அவசியமே இருந்திருக்காது. நாங்க பிறந்த வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். அங்கதான் வீடு நிலம்னு எல்லாம் இருக்கு.”

“நீங்க ஒரே பொண்ணுன்னா, உங்க அண்ணன் ஆனந்தன்?”

“சித்தப்பா பையன்மா. எங்கப்பா அம்மாவுக்குக் கல்யாணம் முடிஞ்சி ஐந்து வருடம் கழித்துதான் பிறந்தேன். அதுக்குள்ள சித்தப்பாவுக்குக் கல்யாணம் முடிந்து அண்ணன் பிறந்துட்டான். ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமா இருந்ததால அம்மாகிட்டதான் அண்ணன் வளர்ந்தது. நான் பிறந்த பின்னும் அதுவே தொடர்ந்தது. விவரம் தெரியுற வரை யார் கேட்டாலும் அவனை கூடப்பிறந்தவன்னு தான் சொல்லுவேன். தெரிந்த பின்னும் அதான்” என்று சிரித்தார்.

“என் அண்ணன் குணத்துக்கு எதை வேணும்னாலும் கொடுக்கலாம் அனுமா. அத்தனை செல்லமா வளர்ந்த எனக்கு கல்யாணத்திற்குப் பிறகு எல்லாமே மாறிப்போச்சி. அப்பவும் அண்ணன் என் கூடவே இருந்தாங்க. சொத்து பிரிச்சப்ப அண்ணனுக்கும் ஒரு பங்கு கொடுக்க எங்கப்பா முன் வந்தப்ப, எனக்கு என்னோடதே போதும். வேணும்னா என்னோடதையும் அபிக்கே கொடுத்திடுறேன்னு சொன்னவன் என் அண்ணன். இப்பவரை அதே மாறாத அன்பு. பிள்ளைங்களும் பாகுபாடு பார்த்து வளர்ந்ததில்லை.”

“ஏழெட்டு வருடம் முன்னதான் சென்னை வந்தோம் அனுமா. அப்பா அம்மா போன பிறகு, பையன்களும் படிச்சி முடிச்சி நல்ல நிலைக்கு வந்ததும், இந்த வீட்டை இடிச்சிட்டு பெருசா கட்டிட்டாங்க. இரண்டு வருடம் இருக்கும் இந்த வீட்டுக்கு பால் காய்த்து. அண்ணனும் இங்கேயே இடம் வாங்கி வீடு கட்டி வந்துட்டாங்க. மதி, ஷண்மதிக்குப் பிடிச்சிருந்ததால கல்யாணம் செய்தாச்சி. அண்ணன் உறவும் விட்டுப்போகலை. என்ன கல்யாணம் முடிந்த கொஞ்ச நாள்ல அண்ணியும் இறந்துட்டாங்க.”

“ஓ...” என்றவள் பேச்சு சோகமாகச் செல்வதை உணர்ந்து, அவரை மாற்ற எண்ணி, “அப்ப சமூகம் பெரிய கைதான் போல?” என்றாள் கேலியாக.

“அப்படியும் வச்சிக்கலாம்” என்றார் சிரிப்புடன்.

“அதானே பார்த்தேன். லட்சக்கணக்குல சம்பளம் வந்தாலும் இவ்வளவு பெரிய வீடு எப்படி கட்டினாங்கன்னு யோசிச்சிருக்கணும்” என்றவள் திடீரென, “அத்தை, மாமா எப்ப இறந்தார்?” என கேட்டாள்.

“அ...அது அனுமா. அந்த ஆள் சாகலை. ஆனா, எங்களைப் பொறுத்தவரை செத்துட்டார்” என்றார் உறுதியாக.

“சரி விடுங்க அத்தை” என்று பேச்சை முடிக்கப் பார்த்தாள்.

“ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்கத் தோணலையா அனுமா?”

“அவசியமானது அப்படின்னா கல்யாணத்தப்பவே சொல்லியிருப்பீங்க. அவசியமில்லாததைச் சொல்லி பிரயோஜனம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். சரி விடுங்க அத்தை. செத்ததை ஏன் திரும்பவும் தோண்டிட்டு இருக்கணும். வாங்க மதிய சமையல் என்னன்னு பார்க்கலாம்” என்று வீட்டினுள் செல்லத் திரும்ப,

“உங்களுக்கு நான் என்ன செய்தேன்னு கேட்டியே அனுமா? இதைவிட எங்களுக்கு என்ன செஞ்சிடப்போற. இளவரசின்னு சொன்னது இதுக்குதான்” என்றார் அவள் குணத்தைக் காரணமாக்கி.

மறுநாள் காலை தாய் முன் வந்தவன் மனைவி எங்கே என கேட்க, அதே நேரம் அவளும் வர, “மிஸஸ்.அறிவழகன் செக்கப்கு ஹாஸ்பிடல் போகணும். சீக்கிரம் ரெடியாகுங்க” என்றான்.

“நான் அத்தை கூடப் போறேன்” என்றாள் அவன் முகம் பாராது.

“அனுமா சாரிடா. பெரியவன் கம்பெனியை பார்க்கப் போகணும். நிறைய வேலை அப்படியே தேங்கி நிற்குது. நான் கண்டிப்பா போயே ஆகணும்” என்றார் மறுப்பதற்கான வருத்தத்துடன்.

“என்ன கம்பெனி?” தனக்கு இதுவரை தெரியாதே என்ற எண்ணத்தில் கேட்டாள்.

“பேப்பர், ப்ளாஸ்டிக், இது மாதிரி இன்னும் சில பழையதை வாங்கி மறுசுழற்சி பண்ற கம்பெனிமா. வேலையாளா இருக்கிறதை விட முதலாளியா இருக்குறதுதான் பிடிக்கும்னு சொல்லி, எட்டு வருஷம் முன்ன ஆரம்பிச்சான். இப்ப பெரிய அளவுல போயிட்டிருக்கு. அவன் இல்லாததால நான் பார்க்க வேண்டிய சூழ்நிலை” என்றார்.

“ஓ... ஆனாலும், இந்த வயசுல ஏன் அத்தை கஷ்டப்படணும்? அதான் உங்க அறிவா பிள்ளை இருக்குல்ல, அனுப்பிட்டு வாங்க” என்றாள்.

“அவனுக்கு இதில் இன்ட்ரெஸ்ட் இல்லைமா. வந்தே ஆகணும்ன்ற சூழ்நிலை வந்தா, அப்ப மறுக்காமல் வருவான்.” மகனை விட்டுக்கொடுக்காது பேசினார் அபிராமி.

தன்னுடைய விருப்பமின்மையை முகத்தில் காண்பித்தாலும், “வெய்ட் பண்ணச் சொல்லுங்க அத்தை. வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.

“என்னடா அறிவா! இன்னும் மேனேஜராதான் இருக்கியா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறதா சொல்லிட்டிருக்கா.”

“கூடவே இருக்கிற நீங்க ஏன்மா சொல்லலை? கல்யாணத்துக்கு முன்ன சொல்லியிருப்பீங்க நினைச்சேன். அதனாலதான் அவள் மேனேஜர்னு சொல்றப்பல்லாம் விளையாட்டுக்கு சொல்றாள்னு எடுத்துக்கிட்டேன். இப்ப நான் சொன்னாலும் நம்பமாட்டா போல. நான் சொல்ல சந்தர்ப்பம் கொடுப்பாளா பாருங்க. நீங்களே இன்னைக்கு அவள்கிட்டச் சொல்லிருங்க” என்றான்.

வேலைப்பளுவில் அபிராமி அதை மறந்துபோக, தாய் சொல்லியிருப்பார் என மகன் நினைக்க, இதுவும் பிரச்சனையாக வெடிக்கும் காலம் வருமோ!

“அறிவா! இந்த மன்த் டாக்டர் ஸ்கேன் எடுக்கணும் சொன்னாங்க. குழந்தையோட சேர்த்து அனு ஹெல்த் எப்படி இருக்குன்னு கேட்டுக்கோ.”

“நான் பார்த்துக்குறேன்மா” என்று மனைவி வரும்வரை காத்திருந்தவனுக்கு, அவளின் கால் கொலுசு சத்தம் கேட்க, தன்னிச்சையாய் அவன் இதழ்கள் புன்னகைக்க, நிமிர்ந்தவன் கண்களில் சுடிதார் அணிந்து வந்த அவனவள் தெரிந்தாள். அதுவும் கைபேசியில் யாருடனோ சிரித்துப் பேசியபடி வந்தவளை, நேரடியாகவே விழுங்க ஆரம்பித்தான் அறிவழகன்.

மூளையில் அடித்த அலாரத்தில், நிமிர்ந்து கணவனைப் பார்த்தவள் மனம் பக்கென்றானது. ‘இவன் என்ன இப்படிப் பார்க்கிறான்? சரியில்லையே. ஆரம்பத்துலயே அடக்கி வச்சிரு அனு’ என்ற மூளையின் எச்சரிக்கையில் கோவத்தை அடக்கி, “வர்றேன் அத்தை” என்று வெளியே சென்றாள்.

‘அடேய் அறிவழகா! உனக்கு உன் பொண்டாட்டி எதோ ஆப்படிக்கப் போறா. முடிஞ்சா தப்பிச்சிக்க. இல்லை உன் பாடு ஹோஹையா’ என்று அறிவு எச்சரிக்கை விடுக்க, அடித்துப்பிடித்து எழுந்து வெளியே ஓடியவன், காரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடி வந்தான்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, வண்டியை எடுத்து சாலைக்கு வரும்வரை அமைதி காத்தவன், “ஆமா. என்னை ஏன் அப்படிப் பார்த்தீங்க?” என்று கோவமாகக் கேட்டான். உள்ளுக்குள் அவ்வளவு படபடப்பு. கேள்வியில் மனைவியை முந்திவிடும் வேகம்.

“ஹல்...” ‘ஹலோ’ என்று சொல்ல வந்தவளை முடிக்கவிடாது, “இங்க பாருங்க மிஸஸ்.அறிவழகன் நீங்க பார்த்ததை நான் பார்த்தேன். நல்லா உத்துப் பார்த்தேன். நீங்க இல்லைன்னு சொல்ல முடியாது” என்றான் வேகமாக.

கணவனையே பார்த்தவளுக்கு அவன் சொல்வது நிஜம்போல் தோன்ற, சட்டென தலையை உதறி, “என்ன மேனேஜர் சார் புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா? பார்த்தது நீங்க. எங்க நான் கேட்டுருவேனோன்னு முந்துறீங்களா?”

“நானா? நான் எப்பப் பார்த்தேன்? அவ்வ்...” என வாயில் கைவைத்து, “அப்பாவிப் பையன்றதால ஏமாத்தலாம்னு பார்க்குறீங்களா மிஸஸ்.அறிவழகன்?” என்றான் கோவம்போல்.

“இப்ப என்ன நீங்க ஏன் பார்த்தீங்கன்னு நான் கேட்கக்கூடாது. அதுதானே?”

“நான் பார்க்கவே இல்லைன்றேன்” என்று அடித்துப் பேசினான்.

“சரி நான் கேட்கலை” என்று பல்லைக்கடித்து வாபஸ் வாங்க, அதற்கும் பதில் சொல்ல வந்தவனை கைநீட்டித் தடுத்தவள், எதிரில் சாலையைக் கை காட்டி ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள்.

‘ஸ்ஸப்பா... தப்பிச்சேன்டா சாமி’ என தனக்குத்தானே பேசி மருத்துவமனை சென்று, மருத்துவர் வர்ஷாவிடம் சோதனை முடித்து மருத்துவ அறிக்கை வாங்கி வெளியே வருகையில், அறிவழகனுக்கு கைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன் முகம் மாற, சட்டென எழுந்த கோவத்தை மனைவிக்காக மறைத்தவன், “இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன். அதுவரை அங்க இருந்து யாரும் போயிருக்கக்கூடாது. போக விடவும் கூடாது” என்று அழுத்திச் சொல்லி அழைப்பைத் துண்டித்து, மனைவியின் பக்கம் திரும்புகையில் முகத்தை இயல்பாக்கினான்.

“மிஸஸ்.அறிவழகன்! அவசரமா ஆஃபீஸ் போகணும். உங்களைத் தனியாகவும் அனுப்ப முடியாது. என்ன செய்யலாம்? கூட வர்றீங்களா?” என்று கேட்டான்.

கணவனின் மிஸஸ்.அறிவழகனில் ஏதோ குறைவது போலிருந்தது. ஏனோ மறுக்கத் தோன்றாது சம்மதித்துக் காரில் உட்கார, ஒருவித இறுக்கத்தில் ஓட்டியவன், கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி வரும்வரை எதுவும் பேசவில்லை.

“இங்கேயே... ம்... இல்லை ரிசப்ஷன்ல உட்கார்ந்திருங்க. நான் அரைமணி நேரத்தில் வந்திருவேன்” என்றான்.

“என்ன பிரச்சனை?” என்றாள் அவனின் அந்நிலைக்கான காரணம் புரியாது.

“வந்து சொல்றேன்” என்று காரை விட்டு இறங்கியவன், சுற்றி வந்து மனைவி இறங்க உதவி செய்து, பின்புறக் கதவைத் திறந்து மேல் உடுப்பை எடுத்து மாட்டியவன், அதீத கோவத்தில் உள்ளே சென்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
அதுவரை அவனின் நடவடிக்கையைப் பார்த்திருந்தவளுக்கு, பிரச்சனை பெரிதோ என்று தோன்றியது. ஏனெனில் தன் முன் இயல்பாக புன்னகை முகத்துடன் இருந்தவன், வேறுபுறம் திரும்புகையில் தற்செயலாகக் கண்ணாடியில் அவன் முகம் அவள் பார்க்க, அவ்வளவு ரௌத்திரம் அக்கண்களில்.

அதோடு வீட்டில் அவன் இருந்தால் மாமியாரின் அறை தவிர, அவள் விழி வட்டத்தில்தான் இருப்பான். ‘ஒருவேளை நான்தான் அவன் விழி வட்டத்தில் இருக்கிறேனோ?’ எண்ணம் வந்தபோதும், தற்பொழுது தன்னை விட்டுச் செல்லுமளவு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள மனம் முரண்டியது.

கணவன் இருக்குமிடம் செல்ல வரவேற்பறை தாண்டுகையில், “மேம்! சார் உங்களை இங்கேயே இருக்கச் சொல்லி, கவனிச்சிக்கச் சொன்னாங்க. உங்களுக்கு ஃப்ரூட் ஜுஸ் வாங்கித் தரவா? இல்லை காஃபி குடிக்குறீங்களா?” என வரவேற்புப் பெண் கேட்டாள்.

அப்பெண்ணுக்கு முதலிலேயே சந்தேகம். நேர்முகத்தேர்விற்கு வரும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு, விஐபி லிஃப்டில் அனுப்பச் சொல்லி எம்.டியே சொன்னதால்.

“எதுவும் வேணாம். வர்ற வழியிலேயே உங்க சார் வாங்கிக் கொடுத்துட்டாங்க” என்று புன்னகை முகமாகச் சொன்னவள், “நான் மாலினியைப் பார்த்துட்டு வர்றேன்” என்று நகர, “மேம்! நான் அவங்களை இங்க வரச்சொல்றேன். நீங்க அங்க வேண்டாம். சார் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டுப் போயிருக்கார். நீங்க அங்க போனீங்கன்னு தெரிஞ்சது என்னை வேலையை விட்டுத் தூக்கிருவார்” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

“உங்க அறிவழகன் சார் கண்ணுலபடாம வந்திருறேன். பார்த்துட்டாலும் வேலையை விட்டு நிறுத்தமாட்டார். மீறி செய்தா என் மாமியார் கம்பெனியில் இதைவிட கூடுதல் சம்பளத்தோட வேலை வாங்கித் தர்றேன்” என்று அவளை அலட்சியப்படுத்தி மின்தூக்கியில் ஏறிவிட, என்ன செய்வதென்று புரியா பயத்தில் வரவேற்புப் பெண்.

ஐந்தாவது தளத்தில் இறங்கிய வினாடி கேட்ட சத்தத்தில், ஒரு நிமிடம் அப்படியே அசையாது நின்றுவிட்டாள். பின், என்ன சத்தமென்று சத்தம் வந்த திசை நோக்கிச் செல்ல, பொறுமைசாலி என்று சொல்லப்பட்ட அவள் கணவன் ரௌத்திரவாதியாகி, “தப்பு செய்வியா? செய்வியா?” என்று ஒருவனை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சத்தம்தான் அவளுக்குக் கேட்டது.

“இன்னொருத்தன் எங்கே?” என கர்ஜித்ததில் பயத்தில் இரண்டடி பின்னே எடுத்து வைத்தவள், “என்ன இப்படிக் கத்துறாங்க? இதுதான் இவங்கம்மா சொன்ன பொறுமையா?” என்று மெல்ல நடந்து அவன் பின்னால் பார்வைபடாத இடத்தில் இருந்தாலும், அங்கு நடப்பது காதில் விழும் தொலைவில் நின்று கொண்டாள்.

அந்த இன்னொருவனும் வர, முகத்திலேயே மாறி மாறி அடிக்க, “எதுக்கு சார் எங்களை அடிக்குறீங்க?” என்று கேட்டதும் கைக்குப் பதில் அறிவழகனின் கால் அவனிடம் பேசியது.

அதில் கண்களை மூடி, பின் திறந்து அலுவலகம் முழுக்க சுற்றிப் பார்த்ததில், சிலர் தவிர யாரும் இல்லை. அவள் கணவன் அனைவருக்கும் ஒருமணி நேரம் விடுப்பு கொடுத்து உணவகம் அனுப்பிவிட்டான் என்பது அவளுக்குத் தெரியாதே. அங்கு அறிவழகன் தவிர, ஜெகதீஷ், அடிவாங்கிய இருவர், ஒரு பெண்ணுடன் மாலினி நின்றிருக்க, இன்னும் இரண்டு ஆண்கள் நின்றிருந்தனர்.

‘என்ன பிரச்சனையா இருக்கும்? கண்டிப்பா கம்பெனிப் பிரச்சனை கிடையாது. அப்படின்னா தனி ரூம்ல வச்சிதான் விசாரிப்பாங்க. இங்க அப்படி இல்லையே’ என நினைக்க, அவள் வரவை மாலினி பார்த்துவிட்டதைக் கண்டு, வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டாள்.

“சிசிடிவி செக் பண்ற ஆபரேட்டர் என்ன பண்றார்? எத்தனை நாளா இது நடக்குது?” என்று கத்தினான் அறிவழகன்.

“சார் சாரி சார். நான்தான் சிசிடிவி ஆபரேட்டர்” என்று வந்தவனிற்கு ஓங்கி ஒரு அடி போட்டு, “வாங்குற சம்பளத்துக்காக வேண்டாம், பொண்ணு விஷயம் என்கிறப்ப அதை முதலிலேயே என் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டாமா? இந்தக் கம்பெனியில் வேலை செய்யுற பெண்கள் என் பாதுகாப்புக்கு உட்பட்டவங்க. இரண்டு நாய்கள் ஒரு பெண்ணை, ரொம்ப நாளா டார்ச்சர் பண்ணியிருக்கு, இதுவரை என் கவனத்துக்கு வரலை. அப்...”

“சாரி சார். அவனுங்க சிசிடிவி இல்லாத பக்கமா டீசிங் பண்ணியிருக்காங்க. மார்னிங்தான் என் கவனத்துக்கு வந்தது. வந்ததுமே ஜெகதீஷ் சார்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன் சார்” என்றவர் கண்களில் அவ்வளவு பயம்.

“சிசிடிவி இல்லாத இடம்னு ஒண்ணு இருக்கா? ஏன் இந்த அஜாக்கிரதை? இனி பாத்ரூம் தவிர எல்லா இடத்திலும் கேமரா இருக்கணும். கேமரா இந்த இடத்தை மட்டும் போகஸ் பண்ணுது, இங்க பண்ணலைன்ற பேச்சே வரக்கூடாது. போய் அந்த வேலையை முதல்ல பாருங்க. இன்னைக்கு ஈவ்னிங்குள்ள சரியாகியிருக்கணும். இல்லை...” என்று எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பினான்.

பின் அங்கு நின்றிருந்த பெண்ணிடம் திரும்பியவன், “அவன் பார்வை மாறும்போதே கம்ப்ளைய்ண்ட் பண்ணியிருக்கலாமேமா? ஆரம்பத்துலேயே தடுத்திருந்தா, ஒருத்தன் இரண்டு பேராகியிருக்க மாட்டாங்க. இன்னும் விட்டுருந்தா, இரண்டு நான்காகும். க்ரைம்லாம் இப்படிதான் ஆரம்பிக்கும். நீங்க இங்க பாதுகாப்பா இருக்கீங்கன்னுதான் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன். என் தப்புதான்” என்று நெற்றியைத் தடவியவன், “ஜெகதீஷ் சார் அங்கங்க ஒரு புகார் பெட்டி வைங்க. விரும்பி தப்பு செய்யுற பொண்ணுங்களை நாம தடுக்க முடியாது. அதுவும் ஆஃபீஸ் விட்டு வெளிலதான் இருக்கணும். விருப்பமில்லாத பொண்ணுங்களைத் தொந்தரவு பண்றவன், எவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்தாலும், தீர விசாரித்து உடனே வேலையைவிட்டு தூக்கிருங்க. இது என்னுடைய உத்தரவு” என்றான்.

“ஓகே சார்” என்றார் வேகமாக.

“இதோ பாருங்கமா இங்கன்னு இல்லை எங்கேயாவது நல்லவங்களும் இருப்பாங்க. கம்ப்ளைண்ட் பண்ணினா உங்களைத் தப்பா நினைப்பாங்களோன்னு முடிவு செய்திராதீங்க. எல்லாரும் கெட்டவங்க கிடையாது. உங்க அப்பா, அண்ணன், தம்பி மாதிரி வெளியில் நிறைய பேர் இருக்கோம். ஒண்ணு காதல்ன்ற பேர்ல கண்டவனையும் கண்மூடித்தனமா நம்புறீங்க. இல்ல ஒட்டுமொத்த ஆண் இனத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துறீங்க. இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணக் கத்துக்கோங்க. சரியா?” என்றவன் குரல் சற்று இறங்கியிருந்தது.

“சரிங்க சார். இனி எதுவா இருந்தாலும் முதல்லயே சொல்லிருவேன் சார். தேங்க்யூ சோ மச் சார்” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ப்ச்... முதல்ல கையை இறக்கிட்டு, இவங்களுக்கான தண்டனையை நீங்களே நிர்ணயிங்க” என்று விலகி நின்றான்.

“சார் நானா?” என்றாள் ஆச்சர்யமாக.

“பாதிக்கப்பட்டவங்களுக்குதான அதனோட வலியின் அளவு தெரியும். அப்ப நீங்கதான் தண்டனையும் கொடுக்கணும். அப்படிக் கொடுக்காததாலதான், இவனுங்களைப் போன்ற ஆளுங்க கொழுப்பெடுத்து அலையுறானுங்க. நீங்க சொல்லுங்க மற்றதை நான் பார்த்துக்குறேன்” என்றான்.

“அசிங்கம்னா என்ன? வெளியில் சொல்ல முடியாத அவமானம்னா எப்படி இருக்கும்னு சொல்லிக்கொடுங்க சார்” என்றாள் ஆத்திரம் மேலிட.

அதில் புன்னகைத்தவன், “குட். இதைத்தான் எதிர்பார்த்தேன்” என பாராட்டி, “மாலினி இவங்களை கேன்டீன் கூட்டிட்டுப்போய் ஸ்வீட் வாங்கிக் கொடுங்க. இங்க நான் பார்த்துக்குறேன்” என்றான்.

“சரிங்க சார்” என்று அவனைத் தாண்டி தோழியிடம் வர, “அனுமா! அறிவழகன் சார்தான் ரியல் ஹீரோ. அதுவும் நீ ஆசையா தேடிய ஹீரோ. எந்த சூழ்நிலையிலும் மிஸ் பண்ணிராத” என்று சொல்லிச் சென்றாள்.

‘நீ ஆசையா தேடிய ஹீரோ!’ மாலினி சொல்லிச் சென்ற வார்த்தை திரும்பத்திரும்ப ஒலித்ததோ! கண்கள் ஏனோ கணவனின் மீதே!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top