• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
737
பூவளூர்:

பூவளூரின் கே.ஜி. எஸ்டேட் மலைச்சரிவுகளில், சுந்தர் மற்றும் மீனாட்சியின் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடையைப் போல எவ்வித சலனமுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

தினமும் அதிகாலையில் பனிமூட்டத்திற்கு நடுவே வேலைக்குச் செல்வதும், மாலையில் கைகோர்த்து வீடு திரும்புவதுமாக அந்தத் தம்பதிகளின் அன்பு அந்த ஊருக்கே முன்னுதாரணமாக இருந்தது.

எஸ்டேட்டில் ஒரு மதிய வேளை....
அன்று வெயில் சற்று கூடுதலாகவே இருந்தது. தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்த மீனாட்சிக்கு, திடீரென தலைச் சுற்றுவது போல இருந்தது.

சுற்றியுள்ள பச்சை நிறத் தேயிலை புதர்கள் எல்லாம் அவளுக்குச் சுழல்வது போலத் தோன்ற, கையில் இருந்த கூடையை மெல்லக் கீழே வைத்துவிட்டு, ஒரு மரத்தடி நிழலில் சோர்ந்து போய் உட்கார்ந்தாள்.

அவளது முகம் வெளிறிப் போயிருப்பதைப் பார்த்த காமாட்சி அக்கா, பதறிப்போய் ஓடி வந்தாள். "என்னடி மீனாட்சி... என்னாச்சு? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?" என்று கேட்டபடி அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

மீனாட்சி மெல்லிய குரலில், "ஒண்ணுமில்லைக்கா... ஏதோ மயக்கம் வர்ற மாதிரி இருக்கு, மதிய வெயில் ஒத்துக்கலை போல," என்றாள்.

காமாட்சி அக்கா அவளை உற்றுப் பார்த்தாள். ஒரு அனுபவப்பட்டப் பெண்ணின் கண்கள் அவளது முகமாற்றத்தைக் கவனித்தன. "ஏன் புள்ள... நாள் தள்ளிப் போயிருக்கா? விசேஷம் ஏதும் உண்டோ?" என்று ரகசியக் குரலில் காமாட்சி கேட்க, மீனாட்சி வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளது மௌனமே பதிலைச் சொல்லியது.

விஷயம் உடனே சுந்தருக்கு எட்டியது. பதற்றத்துடன் ஓடி வந்த அவன், மீனாட்சியை மெல்ல அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தகவல் தெரிந்து அந்த ஊரின் கைராசி மிக்க மருத்துவச்சி பாட்டி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார்.

அன்னம்மாளும் பெருமாளும் ஆவலோடு வாசலில் காத்திருக்க, பாட்டி உள்ளே சென்று மீனாட்சியின் அருகே அமர்ந்தாள். அவளது மெலிதான மணிக்கட்டைப் பிடித்து, கண்களை மூடி நாடிப் பிடித்துப் பார்த்தாள்.

சில நொடிகள் அறையில் நிசப்தம் நிலவியது. பின்னர், பாட்டியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் ஒரு பெரிய புன்னகை அரும்பியது.

"அன்னம்மா... உன் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வரப்போறா! மீனாட்சி மாசமா இருக்கா. இனி அவளைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும்," என்று பாட்டி கட்டியம் கூறினாள்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் சுந்தருக்கு நிலத்தில் கால் பாவாதது போன்ற ஒரு உணர்வு. ஆனந்தக் கண்ணீருடன் அவன் மீனாட்சியைப் பார்க்க, அவள் தன் வயிற்றை மெல்லத் தடவியபடி பூரிப்பில் ஆழ்ந்தாள்.

அன்னம்மாளோ அந்த "மலையம்மன் என் வேண்டுதலைக் கேட்டுட்டா!" என்று சொல்லி சர்க்கரைப் பொங்கல் வைக்க ஆயத்தமானாள்.

பெருமாள் தன் மகனின் தோளைத் தட்டி, "இனி நீ ஒரு அப்பாவாகப் போற சுந்தர்... பொறுப்பு அதிகமாயிடுச்சு," என்று பெருமிதத்துடன் சொன்னார்.

விஷயத்தை கேள்வி பட்டதும் சாமி- ஆச்சி இருவரும் மகனை டவுனுக்கு அனுப்பி சில தீனிகளை வாங்கி வரச் சொல்லிவிட்டு மூவரும் சுந்தர் வீட்டிற்கு வந்தனர்.

மகளின் நெற்றியை வழித்து நெட்டி முறித்தவர் என் ராசாத்தி என்று மகளுடன் சம்மந்தி அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு சாப்பாடு அங்கேயே ஒன்றாக சாப்பிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

அதன் பின்னர் வந்த நாட்களில் மீனாட்சியை தாங்கு தாங்கென தாங்கினாலும் அவள் வேலைக்கு போவதை மட்டும் விடவில்லை.

சுந்தரோ மாதம் தவறாமல் அரசாங்க ஆஸ்பத்தரிக்கு செக்கப்பிற்கு கூப்பிட்டு போகவும் மறக்கவில்லை.மாதங்களும் வேகமாக ஓட இதோ ஒன்பதாம் மாதமும் தொடங்கியது.

மீனாட்சியின் வயிறோ பானை போல பெரிதாக இருக்கவும், பொட்ட பிள்ளை போலனு பார்கிறவர்கள் சொல்லிக் கொண்டனர்.

வளைகாப்பு வைபவம் கோலாகலமாகத் தொடங்கியது. பெருமாள் - அன்னம்மாள் வீடே பூக்களாலும், மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கே.ஜி. எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தோழிகள், உறவினர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தது.

மீனாட்சிக்கு அழகான பட்டுப்புடவை உடுத்தி, தலையில் மல்லிகைப் பூச்சூடி, சந்தனத் திலகமிட்டு மேடையில் அமர வைத்தார்கள். அவளது முகம் தாய்மையின் பூரிப்பில் நிலவாகப் பிரகாசித்தது.

மருத்துவச்சி பாட்டி முதலில் ஒரு ஜோடி வளையல்களை அணிவிக்க, பின் அன்னம்மாளும், மீனாட்சியின் தாயார் ஆச்சியும் வரிசையாகக் கண்ணாடி வளையல்களை அவளது கைகளில் அடுக்கினர்.

"கிளிங் கிளிங்" என்று எழுந்த அந்த வளையல் சத்தம், வயிற்றுக்குள் இருக்கும் உயிருக்குத் தாயின் அன்பைச் சொல்லும் தாலாட்டாக அமைந்தது. காமாட்சி அக்கா கிண்டலாக, "பாருடி மீனாட்சி, இந்தச் சத்தம் கேட்டு உன் புள்ளை உள்ளேயே குதிக்கிறான்!" என்று சொல்ல, கூட்டம் சிரிப்பொலியில் நிறைந்தது.

வளைகாப்பு என்றாலே உணவுக்குப் பஞ்சமிருக்காது. ஆச்சி தன் மகளுக்காகப் பார்த்துப் பார்த்து ஒன்பது வகையான சாதங்களைத் தயாரித்திருந்தார்: உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மீனாட்சியின் கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி வாழ்த்தினர்.

சுந்தர் வாசலில் நின்றபடி, உள்ளே தன் மனைவிக்கு நடக்கும் சடங்குகளைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் மீனாட்சியின் கைகளில் நிறைந்திருந்த அந்த வண்ணமயமான வளையல்களையே மொய்த்தன.

மாலையில் கூட்டம் கலைந்த பிறகு, மெல்ல மீனாட்சியின் அருகில் வந்த சுந்தர், "மீனாட்சி... இந்த வளையல் சத்தம் நம்ம வீட்ல எப்பவும் கேட்டுட்டே இருக்கணும். நீயும் நம்ம குழந்தையும் தான் எனக்கு எல்லாமே," என்று உணர்ச்சிவசப்பட்டு அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.

வளைகாப்பு முடிந்து மீனாட்சி தன் தந்தை சாமி மற்றும் தாய் ஆச்சியின் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. தாய்வீட்டுப் பராமரிப்பும், ஆச்சியின் கைப்பக்குவ உணவுகளும் மீனாட்சியின் முகத்தில் ஒரு தனித் தேஜஸைக் கொடுத்திருந்தது.

சரியாக இரண்டு வாரங்கள் முடிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, மீனாட்சிக்கு மெல்லிய வலி எடுக்கத் தொடங்கியது. "அம்மா..." என்ற அவளது முனகல் சத்தம் கேட்டு ஆச்சி பதறித் துடித்து எழுந்தாள்.

"எனங்க... சீக்கிரம் சுந்தருக்குத் தகவல் சொல்லுங்க. நம்ம பிள்ளை துடிக்குது!" என்று ஆச்சி பதற, தகவலறிந்த அடுத்த பத்தே நிமிடத்தில் சுந்தர் அங்கே வந்து நின்றான்.

அங்கிருந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீனாட்சியை அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, "வலி அதிகமா இருக்கு, ஆனா பயப்பட ஒண்ணுமில்லை. சுகப்பிரசவம் ஆக வாய்ப்பிருக்கு," என்றனர்.

வெளியே சுந்தர், பெருமாள், சாமி மூவரும் அங்கும் இங்கும் நடந்தபடி மலையம்மனை வேண்டிக் கொண்டிருந்தனர். உள்ளே மீனாட்சியின் வலி நிறைந்த முனகல் சத்தம் அவ்வப்போது கேட்டது. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு...

முதலில் ஒரு மெல்லிய மழலைச் சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் ஒரு அழுகைச் சத்தம்!

நர்ஸ் புன்னகையோடு வெளியே வந்து, "வாழ்த்துகள் சுந்தர்! உங்களுக்கு இரட்டைப் பிள்ளைங்க. முதல்ல பிறந்தது ஒரு அழகான ஆண் குழந்தை, அடுத்தது ஒரு தேவதை... பெண் குழந்தை!" என்று சொன்னார்.

சுந்தரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“ரெண்டு பேரா! மலையம்மன் எங்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்துட்டா!" என்று நெகிழ்ந்தான்.

ஆச்சியோ "என் மகள் ரெண்டு ரத்தினங்களைக் கொடுத்துட்டா," என்று பெருமிதத்துடன் மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டாள்.

மயக்கம் தெளிந்து படுக்கையில் இருந்த மீனாட்சியின் இருபுறமும் அந்த இரண்டு பிஞ்சு உயிர்கள் கிடத்தப்பட்டிருந்தன.

பெண் குழந்தை, மீனாட்சியைப் போலவே மென்மையாக இருந்தது.

ஆண் குழந்தை, சுந்தரின் சாயலில் துடிப்பாக இருந்தது.

சுந்தர் உள்ளே வந்து தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, "மீனாட்சி... நம்ம வாழ்க்கையையே அழகாக்கிட்ட. இந்த ரெண்டு குழந்தைகளும் நம்ம மலைக்கே ராஜா, ராணி மாதிரி வளர்வாங்க," என்றான்.

மீனாட்சிக்கு சுகப்பிரசவம் என்பதால், மருத்துவமனையில் இருந்து மூன்றாம் நாளே இரட்டை குழந்தைகளுடன் தாய் வீடு வந்துவிட்டாள். அவள் முகம் களைத்திருந்தாலும், கைகளில் தவழ்ந்த இரு ஜீவன்களைப் பார்க்கையில் அந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.

நாட்கள் நொடிகளைப் போல பறந்தன. இன்று பதினாறாம் நாள்—குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் முக்கிய விசேஷம்.

வழக்கப்படி, விடியற்காலையிலேயே வீட்டின் பெரியவர்கள் குலதெய்வமான மலையம்மனுக்கு படையலிடத் தயாராகினர். சர்க்கரைப் பொங்கல் மணம் ஊரைக் கூட்டியது. வேப்பிலை தோரணங்கள் வாசலில் அசைந்தாட, மீனாட்சியின் அம்மா ஆட்சியும் அவளது மாமியார் அன்னம்மாளும் பூரிப்போடு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஆச்சியோ மனதிற்குள் வேண்டிக்கொண்டார், "தாயே மலையம்மா, என் மகளையும் பேரப்பிள்ளைகளையும் நீதான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்."

மதிய வேளையில், உறவினர்கள் சூழ மீனாட்சி தன் இரு குழந்தைகளையும் மடியில் கிடத்தி அமர்ந்திருந்தாள். குழந்தைகளின் காதுகளில் பெயரை மும்முறை சொல்லும் நேரம் வந்தது.

மூத்த ஆண் குழந்தைக்கு 'சமரன்' என்று பெயர் சூட்டப்பட்டது.இளைய பெண் குழந்தைக்கு 'ஷமிரா' என்று பெயரிட்டனர். பெரியவர்கள் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளுக்குச் சீர் கொடுத்து வாழ்த்தினர். கிராமத்து முறைப்படி, பச்சரிசிப் பொங்கல் இலையில் வைத்து குழந்தைகளுக்குக் காப்பு கட்டப்பட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
737
மாலை நேரத்தில், தன் அப்பாவின் வீட்டுத் திண்ணையில் மீனாட்சி அமர்ந்திருந்தாள். சமரன் கை கால்களை உதைத்துக் கொண்டு விளையாட, ஷமிரா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். பூவளூர் கிராமத்தின் பசுமையான சூழலும், உறவுகளின் அன்பும் மீனாட்சிக்கு ஒரு பெரிய பலத்தைத் தந்திருந்தது.

"அப்பா, இந்தப் பதினாறு நாட்களும் எப்படிப் போனதுன்னே தெரியல" என்றாள் மீனாட்சி.

அவள் தந்தை சிரித்துக்கொண்டே, "பெத்தவங்களுக்குத் தான் நாட்கள் ஓடும், இந்த ஊருக்கே இந்த ரெண்டு சுட்டிகளும் தான் இனி பொழுதுபோக்கு!" என்றார்.

பதினாறாம் நாள் விழா முடிந்து, மறுநாள் காலை விடிந்தது. மீனாட்சி தன் குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்குச் செல்லும் நேரம். பூவளூரில் ஒரு தெரு தள்ளித்தான் மாமியார் வீடு என்றாலும், முறைப்படி குழந்தைகளை அழைத்துச் செல்வது என்பது அந்தக் கிராமத்தில் ஒரு பெரிய கொண்டாட்டம்.

மீனாட்சியின் அம்மா ஆச்சி, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழங்கள், தேங்காய் மற்றும் குழந்தைகளுக்குப் புதிய உடைகளை வைத்துச் சீர் கொடுத்தார். மீனாட்சியின் கண்கள் சற்று கலங்கின.

"என்னம்மா இது? பக்கத்து தெருதானே... எப்ப வேணும்னாலும் வந்து பார்ப்பேன்ல?" என்றாள் மீனாட்சி.

அவள் தந்தை மெல்ல அவளின் தோளைத் தட்டி, "இது முறைதானம்மா. மகாலட்சுமியாட்டம் இரண்டு குழந்தைகளோட நீ உன் வீட்டுக்குத் திரும்பப் போறதுதான் எங்களுக்குப் பெருமை," என்றார்.

ஊர் பெரியவர்கள் முன்னிலையில், ஆச்சி மீனாட்சியின் நெற்றியில் குங்குமம் இட்டு, குழந்தைகளுக்குப் திருஷ்டி சுற்றினார். சமரனை மீனாட்சியின் தம்பியும், ஷமிராவை மீனாட்சியும் கைகளில் ஏந்திக்கொள்ள, பின்னால் பெண்கள் சீர் தட்டுகளைச் சுமந்து வர, அந்தச் சிறிய ஊர்வலம் பக்கத்து தெருவை நோக்கித் தொடங்கியது.

தெருவில் பார்த்தவர்கள் எல்லாம், "சமரன்-சமிரா வந்துட்டாங்கப்பா!" என உற்சாகமாகக் குரல் கொடுத்தனர்.

மீனாட்சியின் மாமியார் அன்னம்மாள், ஒரு செம்பு நிறையத் தண்ணீருடன் காத்துக்கொண்டிருந்தார். வாசலில் நின்ற மீனாட்சிக்கும் குழந்தைகளுக்கும் ஆரத்தி எடுத்து, "வாங்கப்பா... என் வீட்டு வாரிசுகள் வந்துடுச்சு!" என நெகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

வலது காலை எடுத்து வைத்து மீனாட்சி உள்ளே நுழையும்போது, அந்த வீடு புதுப்பொலிவு பெற்றது போலிருந்தது.

சமரன் மாமியாரின் கைகளுக்கு மாறினான்; அவன் வந்த வேகத்திலேயே அங்கிருந்த பித்தளை உருளியைத் தட்டி சத்தம் எழுப்பியது எல்லோரையும் சிரிக்க வைத்தது.

சமிரா அமைதியாகத் தன் பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அன்று மதியம் மாமியார் வீட்டில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மீனாட்சிக்குத் தன் பிறந்தவீட்டின் அரவணைப்பும், புகுந்தவீட்டின் அங்கீகாரமும் ஒருசேரக் கிடைத்தது பெரும் நிம்மதியைத் தந்தது.

பூவளூரின் தெருக்களில் தவழ்ந்த சமரனும் சமிராவும், இப்போது சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர்.

சமரன் மற்றும் ஷமிராவிற்கு இன்று பள்ளியின் முதல் நாள்.

பூவளூர் கிராமத்தின் அதிகாலைப் பனியில் மீனாட்சியின் வீடு களைகட்டியது.

"சமரன், சீக்கிரம் குளிச்சிட்டு வாப்பா... வண்டி வந்துடும்!" என்று மீனாட்சி குரல் கொடுக்க, சமரனோ தன் தங்கை ஷமிராவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

"அம்மா, இவன் என் ஜடையை அவுத்துவிட்டுட்டே இருக்கான்!" என ஷமிரா சிணுங்க, மீனாட்சி இருவரையும் சமாதானம் செய்து தயார் படுத்தினாள்.

நீல நிறச் சட்டையும், அடர் நீல நிறப் பாவாடை/கால்சட்டையும் அணிந்து, கையில் தண்ணீர் புட்டிகளுடன் நின்ற குழந்தைகளைப் பார்க்கையில் மீனாட்சியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பியது.

சமரன் எப்போதும் போல துருதுருவென எதையும் ஆராயும் சுபாவம். அவனது பையில் பென்சில் பெட்டியும், ஒரு சிறிய பொம்மை காரும் (அம்மாவுக்குத் தெரியாமல்) ஒளிந்திருந்தது.

ஷமிரா நேர்த்தியாகத் தலை சீவி, இரண்டு பக்கமும் ரிப்பன் கட்டி, ஒரு குட்டித் தேவதை போலத் தெரிந்தாள். அவளுக்குப் பாடப் புத்தகங்களை விட, வண்ணப் பென்சில்கள் மீதுதான் அதிகப் பிரியம்.

பள்ளிக்குக் கிளம்பும் முன், பக்கத்து தெருவில் இருந்த மீனாட்சியின் அப்பா வீட்டிற்குச் சென்றனர்.
"தாத்தா, நாங்க ஸ்கூலுக்குப் போறோம்!" என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

மீனாட்சியின் தந்தை, பேரன் பேத்திகளின் கைகளில் இனிப்புகளைக் கொடுத்து, "நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்" என வாழ்த்தி குழந்தைகளின் நெற்றியில் திருஷ்டி பொட்டு வைத்து அனுப்பி வைத்தார்.

சுந்தர் தனது எக்ஸல் வண்டியை ஸ்டார்ட் பண்ண,சமரன் உற்சாகமாக முதலில் ஏறினான். ஷமிரா மட்டும் ஒரு நிமிடம் மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு தயங்கினாள்.

"ஷமிரா குட்டி, அண்ணன் கூடப் போயிட்டு வாங்க... சாயங்காலம் அம்மா உங்களுக்குப் பிடிச்ச முறுக்கு செஞ்சு வைக்கிறேன்," என மீனாட்சி தைரியம் சொல்ல, சமரன் கையை அசைத்து, "வா ஷமிரா, அப்பாக்கு பின்னாடி உட்காரு!" என்று அழைத்தான்.

வண்டி நகரத் தொடங்கியதும், மீனாட்சி வாசலில் நின்று கையாட்டிக்கொண்டே இருந்தாள். நேற்றுதான் அந்தத் தொட்டிலில் கிடந்தார்கள், அதற்குள் எவ்வளவு பெரிய வளர்ச்சி!

மாலை பள்ளி முடிந்து வந்ததும், வீடு முழுவதும் அவர்களின் பேச்சால் நிறைந்திருந்தது.

"அம்மா, இன்னைக்கு மிஸ் எனக்கு ஸ்டார் போட்டாங்க!" என ஷமிரா காட்ட, "நான்தான் இன்னைக்கு வேகமா ஓடி ஜெயிச்சேன் தெரியுமா?" என சமரன் தன் வீரதீரச் செயல்களைச் சொல்லத் தொடங்கினான்.

பூவளூர் கிராமத்தின் அமைதியான மாலைப் பொழுதில், சமரன்-ஷமிராவின் மழலை கலந்த பள்ளிப் பேச்சுக்கள் மீனாட்சிக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டின.

நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது…பூவளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அந்த ஆண்டு 'ஆண்டு விழா' கோலாகலமாகத் தொடங்கியது. கிராமமே திரண்டு வந்திருந்த அந்த மாலைப் பொழுதில், மீனாட்சியும் சுந்தரும் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதத்துடன் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பள்ளித் தலைமையாசிரியர் மைக் பிடித்து, "அடுத்ததாக முதலாம் வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்!" என்று அறிவிக்க, அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

முதலில் ஒரு குழு நடனம். அதில் சமரன் கையில் ஒரு மரவாளுடனும், தலையில் ஒரு சிறு கிரீடத்துடனும் ஒரு குறுநில மன்னனைப் போல மேடைக்கு வந்தான். அவனது அந்தத் துடிப்பு, மீனாட்சிக்கு அவன் பிறந்தபோது சூட்டிய பெயரின் அர்த்தமான 'போர் வீரன்' என்பதை நினைவுபடுத்தியது.

பாடல் ஒலிக்கத் தொடங்கியதும், சமரன் தன் பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இடையில் ஒரு முறை தடுமாறினாலும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவன் கொடுத்த 'போஸ்', ஊர் பெரியவர்களை விசிலடிக்க வைத்தது.

"பாருப்பா, நம்ம பேரனை... அப்படியே ராஜா மாதிரியே இருக்கான்!" என மீனாட்சியின் அப்பா சாமி, பெருமையுடன் பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அடுத்தது ஒரு தனிப்பாடல் மற்றும் அபிநய நிகழ்ச்சி. ஷமிரா மெல்லிய இளஞ்சிவப்பு நிறப் பாவாடை சட்டையில், தலையில் மயில் தோகை சூடி மேடை ஏறினாள்.

ஷமிரா பாடலுக்கு ஏற்ப கைகளை அசைத்து ஆடிய அந்த நளினம், உண்மையிலேயே ஒரு 'தென்றல் காற்று' வருடுவது போலவே இருந்தது. அவள் கண்கள் மேடையில் இருந்த மீனாட்சியைத் தேடின. மீனாட்சி கட்டை விரலை உயர்த்திக் காட்டி ஊக்கப்படுத்த, சமிரா ஒரு அழகான புன்னகையைச் சிந்தி தன் நடனத்தை முடித்தாள்.

விழாவின் இறுதியில், சிறந்த துடிப்பான மாணவன் விருது சமரனுக்கும், சிறந்த கலைத் திறன் விருது ஷமிராவுக்கும் வழங்கப்பட்டது.

மேடையில் ஏறித் தலைமை ஆசிரியரிடம் பரிசு வாங்கும்போது, இருவரும் தங்களின் பிஞ்சுப் பிடிகளால் கேடயத்தைப் பிடித்துக் கொண்டு கேமராவுக்குச் சிரித்த அந்த நொடி, மீனாட்சியின் வாழ்நாள் சாதனையாகத் தெரிந்தது.

வீட்டிற்குத் திரும்பும் வழியில், சமரன் தன் கேடயத்தைக் காட்டிக்கொண்டே வந்தான். ஷமிரா தன் பரிசைப் பத்திரமாக மடியில் வைத்திருந்தாள்.

"அம்மா, நான் நல்லா ஆடினேனா?" என ஷமிரா கேட்க, "ரெண்டு பேரும் அசத்திட்டீங்கடா... இன்னைக்கு மலையம்மன் அருளால எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு!" என மீனாட்சி இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

வருடங்களும் ஓட, ஊராட்சி ஒன்றியப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளி ஆனது. இந்த நல்ல செய்தி சுற்றி இருந்த மக்களுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பனியூத் என்ற ஊருக்கு சென்று தான் படித்து வரணும்.

பெரும்பாலான மாணவர்களுக்கு அது ரொம்ப சிரமமாக இருக்க, சுற்றி இருக்கும் எஸ்டேட் ஓனர்களில் சிலர் நல்ல உள்ளங்களின் முயற்சியால் இது சாத்தியம் ஆனது.

வருடங்களும் ஓடியது… தற்போது ஷமிரா- சமரன் இருவரும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.

அன்று வழக்கம் போல ஸ்கூலுக்கு கிளம்பும் போது அம்மா என்று வயிற்றை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

ஷமிரா பெரிய மனுஷியானது தெரிந்து, முதலில் முறைப்படி அவள் தாய்மாமனுக்கும், பக்கத்து தெருவில் இருந்த தாத்தா-பாட்டிக்கும் தகவல் சொல்லப்பட்டது. மீனாட்சி தன் மகளை ஒரு தனி அறையில் அமர வைத்தாள்.
ஷமிரா உட்கார்ந்திருந்த அறையின் வாசலில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க வேப்பிலை சொருகப்பட்டது.

மீனாட்சி தன் மகளுக்கு மஞ்சள் பூசி, கையில் ஒரு சிறிய இரும்புத் துண்டையும் (பாதுகாப்பிற்காக) வேப்பிலையையும் கொடுத்து வைத்தாள்.

"ஷமி, இனி நீ ஒரு பொறுப்பான பெண். உன்னோட ஆரோக்கியத்தை நீயே பார்த்துக்கணும்," என மீனாட்சி சொல்லிக் கொடுக்க, ஷமிரா மௌனமாகத் தலை அசைத்தாள்.

ஷமிராவின் உடல் நலத்திற்காக மீனாட்சி பாரம்பரிய உணவுகளைத் தயாரித்தாள்:உளுந்தங்களி- இடுப்பு எலும்பு வலுப்பெறவும், வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்த மணமணக்கும் புட்டும், தினமும் காலையில் பச்சை முட்டையுடன் நல்லெண்ணெய் கலந்து கொடுக்கப்பட்டது.

ஷமிராவின் தோழியான சாந்தாவிற்கு தான் தோழி இல்லாமல் ஒத்தையில் பள்ளிக்கூடம் போவதற்கு பிடிக்கவில்லை. தினமும் பள்ளி முடிந்ததும் வீட்டு பாடத்தோடு தோழி வீட்டிற்கு வந்து விடுவாள்.

குறிப்பிட்ட நாளில், சுமங்கலிப் பெண்கள் ஒன்று கூடி ஷமிராவிற்கு மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினர்.

வேப்பிலை கலந்த நீரால் நீராட்டி, அவளுக்குப் புதிய ஆடைகளை அணிவித்தனர்.

நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், கைகளில் மருதாணியும் இட்டு, அலங்கரித்து, நடுவீட்டில் அமர வைத்தனர்.

தாய்மாமனுக்கு தான் முதல் உரிமை என்பதால் மீனாட்சியின் தம்பி மணி அவரது மனைவி கலா இருவரும் இணைந்து ஷமிராவிற்கு மாலை போட்டு சந்தனம் பூசிய பின்னர், மருமகளுக்காக வாங்கி வந்த செயினை போட்டு விட, மற்றவர்களும் அவர்கள் வாங்கி வந்ததை கொடுத்து ஆசீர்வாதம் செய்தனர்.

இறுதியில், பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து ஷமிராவிற்கு ஆரத்தி எடுத்தனர். "தீய கண்கள் உன் மேல் படாமல் மலையம்மன் உன்னைக் காக்கட்டும்" என வேண்டிக்கொண்டனர்.

தாத்தா வந்து பேத்தியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். "ஷமிரா, உன் படிப்புதான் உனக்குக் கண். இந்த மாற்றமெல்லாம் இயற்கை தந்தது, ஆனா உன் அறிவை நீதான் வளர்த்துக்கணும்," என அறிவுரை கூறினார்.

ஷமிரா பட்டுப் பாவாடை சரசரக்க, தன் அறையில் ஒரு புதிய முதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள். நேற்று வரை ஓடிப் பிடித்து விளையாடிய அதே தெருக்கள், இன்று அவளுக்குப் புதிய மரியாதையையும் மாற்றத்தையும் கொடுத்திருந்தன.

தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top