• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
13
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 11

ஒரே ஒரு வினா தான். ஆனால் அந்த ஒற்றை வினாக்கே உயிரை உருக்கி விடும் வல்லமை இருந்தது.

"நீ ரஜன் கூட பழகுறியா?" கவிதாவின் வாயில் இருந்து வெளியான வினா அனுபமாவினுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.

"பழகுறியான்னா? என்ன கேட்க வர்றீங்க?" அவள் மனம் எதையோ ஊகித்திருந்த போதும், தான் நினைப்பது பொய்யாகி விடாதா என்ற ஏக்கத்துடனே கேட்டாள்.

"நீ நெனக்கிறது தான் அனு. நீ ரஜனோட பேசி பழகிட்டு இருக்கியான்னு கேட்கிறேன்" கவிதா இழுவையாகக் கேட்க, அவ்வார்த்தைகள் அவள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் உணர்வைக் கொடுத்தது.

"இப்படி கேக்க வாய் கூசலயா உங்களுக்கு? கல்யாணமான என்னைப் போய் இப்படி ஒரு வார்த்த கேக்கிறீங்களே. அசிங்கமா இல்லையா?" பெண் புலியாய் சீறிச் சினந்தாள்.

"இந்த ஒரு வார்த்தைக்கே இப்படி கேக்கிறியே அனு‌. ஊருல விதவிதமா, இதை விட அசிங்கமா பேசுறாங்களே. அதைக் கேட்டா என்ன சொல்லுவ?" என்ற கவிதாவின் பேச்சில் அவள் புருவங்கள் இடுங்கின.

"ஊருல என்ன பேசுறாங்க? யாரு ரஜன்? கதிர் ஃப்ரெண்டா?" என்று கேட்க, "ம்ம் அவன் தான்" எனத் தலையசைத்தாள்.

அவளுக்கு தன்னைச் சுற்றிலும் ஏதொவொரு மாய வலை சுற்றப்பட்ட உணர்வு. ரஜனை அவளுக்குத் தெரியும். கதிரின் நண்பன் அவன். அவர்களது தெருவில் வசிப்பவன். திருமணத்தின் போது பார்த்தாள். சில சமயம் வீட்டிற்கும் வந்து போவான்.

ரஜன் நகைக் கடையில் வேலை செய்பவன். வேலை சம்மந்தமாக அவனுடன் புதிதாக ஒரு நாள் கதைத்தாள். அதைத் தாண்டி அவள் பேசியதே இல்லை.

அவனுடன் தனக்குப் பழக்கம் என்று எதை வைத்துச் சொன்னது? யார் சொன்னது? இது ஊரில் எவ்வாறு பரவியது? எவ்வாறு இந்தப் பேச்சு தோன்றியது? எதுவும் புரியவில்லை, அவளுக்கு.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது, அனுவின் நிலமை. ஊரில் அடிபடுகிறது என்றால் தன் புகுந்த வீட்டாருக்கும் தெரிந்திருக்குமோ என நினைக்கும் போது அச்சம் சூழ்ந்தது‌.

"எனக்கு ஒன்னுமே புரியலக்கா. அந்த ரஜனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லயே. அப்படி இருக்கும் போது யாரு எதுக்கு எப்படி இதை பேசலாம்? நான் கதிரோட பொண்டாட்டி. இன்னொருத்தரோட பழகுறேன்னு சொல்லுறது எந்த விதத்துல நியாயம்? எனக்கு எதுவும் புரியல" நா தழுதழுக்கக் கூறினாள்.

"எனக்கும் தான் அனு. இன்னிக்கு என் ஹஸ்பண்ட் வந்து அனு பத்தி இப்படி ஒரு பேச்சு எங்க ஃப்ரெண்ட் கேங்ல அடிபடுதுன்னு சொன்னார். எனக்கே கேக்க முடியாம போச்சு. உன்ன போய் அப்படி பேசுறாங்களேனு இருந்தது.

இத உன் கிட்ட சொல்லனும். ஆனா எப்படினு புரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுக்கு பிறகு பக்கத்து வீட்டு ரேகா என் கிட்ட வந்து அனு ரஜன் கூட பழகுறாளாம். புருஷன வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு கூத்து போடுறா அப்படி இப்படினு சொல்லுறா. இதுக்கு மேல இருக்க வேணானு தான் நான் கேட்டேன்" என்று கவிதா சொல்ல, அனுவுக்கு உடம்பெங்கும் கூசியது.

தன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசுகிறார்கள்? நான் கதிரின் மனைவி. அவனையன்றி ஒருவரையும் மனதார நினைத்ததில்லையே‌. அருகில் இல்லை என்றாலும் அவனை அல்லவா அணு தினமும் நினைத்து வாழ்கிறாள்.

தன் மீது இப்படியொரு அபாண்டமான பழி விழுவதை அவளால் தாங்க முடியவில்லை. இதற்கு மூல காரணம் என்ன என்பதுவும் புரியவில்லை.

பாடசாலை செல்லும் காலத்தில் அவள் இதே போன்றதொரு பிரச்சினையை எதிர்கொண்டாள். அவளைக் காதலிப்பதாகக் கூறி ஒருவன் பின்னால் வர, அவனைத் திட்டி அனுப்பினாள்.

வீட்டிற்குச் செல்லும் முன் அந்தத் தகவல் அவள் தந்தையை வந்தடைந்திருந்தது. அவர் கேட்ட போது அவள் நடந்ததை விளக்கிக் கூறினாள். அந்தப் பையனுடன் கதைத்ததாக, அவனுடன் அவளுக்கு தொடர்பு உள்ளதாக ஊரில் கிசுகிசு கிளம்பிய போதும் அவள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"ஊர் கண்ணு இப்படி தான் அனு. சும்மா போனாலே பேசி சிரிச்சானு சொல்லுற உலகம் இது. பேசினா கையை பிடிச்சுட்டு போனதா கூட திரிச்சு சொல்லி கதை கட்டுவாங்க. ஊர் வாய மூட முடியாது. சில விஷயங்கள ஊமையா கடந்து வந்துட வேண்டியது தான். நீ இதை கண்டுக்காத" என்று மங்களம் அவளைத் தேற்றினார்.

அவள் பெரிதாக வருந்தவில்லை. ஊர் பேசி விட்டுப் போகட்டுமே. தன் பெற்றவர் தன்னை நம்பும் போது வேறு எதுவும் தேவையில்லை என்று இருந்து விட்டாள். அப்போது அவள் திருமணமாகாதவள். ஆனால் தற்போது அப்படி இல்லையே.

ஊரறிய கதிரின் மனைவியாகி விட்டாள். அவனது குழந்தையை வேறு சுமக்கிறாள். அப்படி இருக்கும் பொழுது தனக்கு வேற்று ஆடவனுடன் தொடர்பு இருப்பதாக எப்படிப் பேசலாம்? துடிதுடித்துப் போனது, அவளிதயம்.

"ஊருல அப்படி பேசுறாங்க சரி. நீங்களும் அதை நம்பிட்டீங்களா? ஏன்க்கா அப்படி கேட்டீங்க?" தன்னைப் பற்றி அதிகம் அறிந்த கவிதாவும் இவ்வாறு பேசி விட்டாரே என்ற ஆதங்கம் அவளைக் கசக்கிப் பிழிந்தது.

"அப்படி இல்லை அனு. எல்லாரும் பேசுறாங்களேனு தான் சொல்ல வந்தேன். நானும் நெறய வாட்டி யோசிச்சேன். நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு எனக்கு தெரியாதா? கதிர நீ எவ்வளவு நேசிக்கிறேனு எனக்கு தெரியும். இதை எப்படி கேக்குறதுன்னு தெரியாம தான் கேட்டேன்.

அதுக்காக நான் அப்படி நெனச்சேன்னு சொல்லாத. நீ எதுக்கும் சூதானமா இரு. இந்த மாதிரி வதந்திகள் ரொம்ப ஆபத்தானது. உறவுகளை நம்பிக்கையை ஒத்த நொடில முறிச்சிடும். நீ இதை பெருசா அலட்டிக்க தேவயில்ல.

கதிர் கிட்ட சொல்லு. அவர் உன்ன நம்புவார். அது போதும்‌. ஊருக்கு நல்லவங்களா இருக்கனும்னு இனி நீ எதிர்பார்க்க கூடாது. உனக்கும், உன் மனசுக்கும், உன் புருஷனுக்கும் உண்மையா இருந்தா போதும். எந்த பிரச்சினையிலும் அவர் உன் கூட நின்னா சமாளிச்சுடலாம். ஃபீல் பண்ணாத சரியா?" அவளுக்கு இதற்கு மேல் ஆறுதல் சொல்லத் தெரியாமல் நிறுத்தினாள், கவிதா.

"ஏன்க்கா இப்படி ஒரு நெலம எனக்கு வரனும்? நான் என்ன பண்ணேன்னு இந்த மாதிரி கெட்ட பேச்சு வருது?" அழுகை பொங்கக் கேட்டாள்.

"இந்த மனுஷங்க இப்படி தான் டா. ஒன்ன ரெண்டாக்குவாங்க, இல்லாதத உண்டு பண்ணுவாங்க. நான் கூட இந்த மாதிரி ஒரு பிரச்சனையில் மாட்டிட்டு வந்தவ தான். புருஷன் பக்கத்துல இருந்தும் எனக்கு அப்படி பேச்சு வந்தது. நீ புருஷன் பக்கத்துல இல்லாம வாழுற. இப்படியான நெலம அந்த மாதிரி பேசுற கேடுகெட்ட ஜென்மங்களுக்கு வசதியா போயிடும்"

"அவர் பக்கத்துல இல்லாம‌ இருக்கிறது என் தப்பா? எங்க குடும்ப சூழ்நிலை அப்படி. சேர்ந்திருக்குற சந்தர்ப்பம் இருந்தும் நாங்க விரும்பி பிரிஞ்சு இருக்கோமா இல்லயே? குடும்ப கஷ்டம் எங்கள இப்படி தூர நிறுத்தி வேடிக்கை பாக்குது. அது பத்தாதுன்னு இந்த மாதிரி பேச்ச கேட்டு நரக வேதனைய வேற அனுபவிக்கனுமா?" அழுகையில் துடித்த இதழ்களை பற்களால் கடித்துச் சிறை பிடித்தாள்.

மற்றவர் முன்னால் அழுவதை அவள் விரும்புவதே இல்லை. மிக மிக சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டாள்.

"உன் நெலம புரியுது அனு. உன்ன நெனச்சா கஷ்டமா இருக்கு. உன் வயித்துல குழந்தை இருக்கு. அதையும் மனசுல வெச்சுக்க. கவலைப்படாத. ஏதாவதுன்னா என் கிட்ட சொல்லு. கதிர் கிட்ட பேசி உன் நெலமய புரிய வை. வா வீட்டுக்கு போகலாம்" அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள், கவிதா.

அவளிடமிருந்து விடைபெற்று வந்தவள், அறையினுள் அடைந்து கொண்டாள். கட்டிலில் தொப்பென அமர்ந்தவளுக்கு நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு.

ஒரு பெண்ணைப் பற்றி, அவளின் நடத்தை பற்றி இவர்கள் ஏன் விமர்சனம் செய்கிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன தான் கிடைக்கப் போகிறது? தனக்கும் இப்படியொரு நிலை வந்தால் எப்படியிருக்கும் என்று அவர்கள் நினைக்கவே மாட்டார்களா என யோசனை தாறுமாறாக எழுந்தது.

இது தன் மாமியார் வீட்டிற்குத் தெரிந்தால் என்னவாகும்? அவள் மீது எந்தத் தவறும் இல்லை தான். இருப்பினும் இப்படியான பேச்சுகள் தன்னை வருத்தி விடுமே, இன்னும் காயங்களைக் கொடுத்து விடுமே என நினைக்கையில் கிலியெடுத்தது.

தாயிடம் இதைச் சொல்லலாம் என்று நினைத்து அவருக்கு அழைக்க, அவரோ அழைப்பை ஏற்கவில்லை. திரும்ப எடுக்கவும் அவளுக்குத் தோன்றவில்லை. விட்டத்தை வெறித்தவாறு அப்படியே சாய்ந்திருந்தாள்.

உள்ளத்தில் ஏராளமான யோசனைகள் பிறந்தன. எங்கு ஆரம்பித்தது இந்தப் பேச்சு? ரஜனுக்கும் இது நிச்சயம் தெரிந்திருக்கும் அல்லவா? அவன் இதனை மறுக்கவில்லையா? எதுவும் செய்யவில்லையா? அவனிடம் கேட்கலாமா என்று தோன்றிய யோசனையை அந்நொடியே குழி தோண்டிப் புதைத்தாள்.

அவனோடு பேசி என்னவாகப் போகிறது? பேச்சுகள் யாவும் நின்று விடுமா என்ன? இப்போது பேசியது வெளியில் தெரிந்து அது வேறு விதமாகப் பேசப்பட்டால்.. அதை விட மௌனித்து இருப்பது சிறந்தது என்று நினைத்தாள்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் சிந்தையை அவ்வெண்ணங்களும் வேதனையும் கவ்விக் கொண்டன.

அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளிவர முடியாமல் திணறிப் போனாள். தலை வேறு விண் வெளியில் என்று வலித்தது. கண்ணீர் கூட வராமல் சதி செய்ய, இறுகிப் போனாள், பாவை.

திடுமென ஒலித்த அலைபேசி ஒலியில் திடுக்கிட்டு எழுந்தவளுக்கு கணவனின் எண்ணைக் கண்டதும் உணர்வுகள் உயிர் பெற்றன.

அழைப்பை ஏற்றவள், அவனை வெற்றுப் பார்வை பார்க்க, "பொண்டாட்டி" உற்சாகமான குரலில் அழைத்தான், ஆடவன்.

அவள் இதழ்கள் புன்னகைக்க முயன்றன. ஆனால் இதயம் அதற்கு வழி விடாமல் இருக்க, தவித்துப் போனாள்.

"என்னடா ஆச்சு? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?" பதற்றத்துடன் அவன் வினவ, "ஒ..ஒன்னும் இல்ல" தடுமாற்றத்துடன் பதிலுரைத்தாள்.

ஏதோ சரியில்லை என்று அவள் முகம் காட்டிக் கொடுத்தது. அவனுக்குத் தெரியாதா அவனது உள்ளத்தில் வசிக்கும் உயிரானவளின் மாற்றங்கள்?

"என் கிட்ட சொல்ல மாட்டியா?" என்று கேட்க, ஒன்றும் பேசாமல் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

அவனும் அமைதியாக இருந்து விட்டு, "அம்மு" என்றழைக்க, உயிர் உருக்கும் அக்குரலில் உணர்வுகள் மீட்சி பெற, "தங்கம்" என்றவாறு இத்தனை நேரம் அடக்கியிருந்த கண்ணீர் சிலீ
ரிட்டுப் பாய்ந்திட, கதறியழுதாள், அனுபமா.

தூரம் தொடரும்........!!

ஷம்லா பஸ்லி
2025-06-12
 
Top