• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
67
முத்துப்பேச்சுவுடன் வெளியே சென்றிருந்த கார்த்திகேயன் மாலை நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வாசலில் மனைவியின் செருப்பைக் கண்டதும் மனம் துள்ள, "முத்தண்ணா என் வைஃப் வந்துட்டா" பரவசமாய் உரைத்திருந்தான்.

"அதெப்படி சொல்லுத கார்த்தி? அவங்க காதல் காத்து உன்னை அடிச்சிருச்சா?" என்று முத்து கேலிச் செய்யவும், "அட போங்கண்ணா!" என்று சிரித்தவன், "என் பொண்டாட்டியோட செருப்பு இது" என்றான்.

"அட.. அட.. அட.. நீ தான்ப்பா அக்மார்க் புருஷன் மெட்டீரியலு! எனக்குலாம் என் பொண்டாட்டி என்ன செருப்பு வச்சிருக்கானு கூடத் தெரியாது" என்று சிரித்தார் முத்துப்பேச்சு.

"இதை என் பொண்டாட்டி சொல்லனுமே!" என்று கார்த்திகேயன் சிரிக்க,

"ஊரு உலகத்துல எந்தப் பொண்டாட்டி புருஷனைப் பாராட்டியிருக்காங்க" என்றார் முத்துப்பேச்சு.

அவரின் கேலியில் சிரித்தவனாய் ஆர்வமும் ஆவலுமாய் உள்ளே சென்ற கார்த்திகேயன் முகப்பறையில் எவரும் இல்லாது இருப்பதைப் பார்த்து, தான் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஒருக்களித்தவாறு கண் மூடி படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும் அவனின் உள்ளம் மகிழ்வில் துள்ள, ஓடிச் சென்று அவளின் அருகில் ஒட்டிப் படுத்தவனாய் இடையில் கைப்போட்டு நெருக்கியவன், அவளின் காதோடு, "மிஸ்டு யூ சோ மச் வைரக்கட்டி" என்றவன் அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். சட்டென அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகி மூக்கோடு ஊடறுத்து வழிந்தோட தனது உதடு கொண்டே துடைத்தான் அவன். அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டு தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

கணவனின் அண்மையிலும் ஸ்பரிசத்திலும் அவளின் அங்கமெல்லாம் புல்லரித்து அடங்கியது.

அவளின் முதுகோடு ஒண்டியவாறு படுத்தவன், "நீ வராம போய்டுவியோனு பயந்தே போய்ட்டேன் தெரியுமா?" ஒருவித நடுக்கத்துடன் உரைத்தவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனாய்,

"நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன்" படபடப்புடன் உரைத்திருந்தான்.

அவன் நெஞ்சத்தின் படபடப்பை முதுகில் உணர்ந்தாள் வள்ளி.

தனக்கான அவனது தவிப்பில் உருகியவளாய் சட்டெனக் கண்களை விழித்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்ததும் அவளைத் தன்புறம் திருப்பியவனாய், கண்களில் முத்தமிட்டவன், "எதுக்கு இந்த அழுகை?" எனக் கேட்டான்.

"கார்த்தி" என்று அழுகைக்குரலில் கதறியவளாய் அவனை அணைத்தவள் மார்பில் முகம் புதைத்தாள்.

"என்னடா? என்னாச்சு?" அவளின் முதுகை வருடியவாறு கேட்டவனோ அங்கே அவளைத் துன்புறுத்துமாறு ஏதேனும் பேசியிருப்பார்களோ என்று யோசித்தான்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்து தேம்பியவள், "மனசு உங்களை எவ்ளோ தேடுச்சு தெரியுமா? இனி உங்களை விட்டுட்டு நான் எங்கேயும் தனியா தங்க மாட்டேன்" என்று விம்மலுடன் உரைத்திருந்தாள்.

'ஓ என்னைப் பிரிஞ்சி இருந்ததுக்குத் தான் அழுறாளா?' அவனின் மனம் ஆசுவாசமாக, அவளின் முகத்தைக் கைகளில் தாங்கியவனாய் நெற்றியில் முத்தமிட்டவன், "இனி நானும் உன்னை எங்கேயும் தனியா அனுப்புற ஐடியால இல்லை. செத்தாலும் உன்னைக் கூடக் கூட்டிட்டுப் போய்டுவேன்" அவன் கூறிய நொடி பட்டென அவன் வாயில் அடித்தவளாய், "என்ன பேச்சு பேசுறீங்க? இனி தான் நாம நல்லா வாழ்ந்து காண்பிக்கனும். என்னிக்குனாலும் நாம பிரிஞ்சிடுவோம்னு நினைக்கிறவங்க முன்னாடி, வாழ்ந்தா இவங்களைப் போலத் தான் வாழனும்னு சொல்ற மாதிரி வாழ்ந்து காண்பிக்கனும் கார்த்தி" தீவிரமான முகப்பாவனையுடன் திடமான குரலில் உரைத்தவளை புருவ முடிச்சுடன் பார்த்தான் கார்த்திகேயன்.

"நாம பிரிஞ்சிடுவோம்னு உங்க வீட்டாளுங்க சொன்னாங்களா?" மிகச் சரியாக அவன் கணித்துக் கேட்கவும் அதிர்வுடன் அவனைப் பார்த்தவளாய் வாயடைத்துப் போனாள் வள்ளி.

"சொல்லு வள்ளி! உங்க வீட்டுல அப்படிச் சொன்னாங்களா?" அவன் சற்று அதட்டலாய் கேட்கவும், அவனை விட்டு விலகி எழுந்தவள் இன்று முழுவதும் நடந்ததை உரைத்தாள்.
 
Joined
May 20, 2025
Messages
67
"எனக்கு யார் சொல்றதை நம்புறதுனே தெரியலை கார்த்தி. உதயாவையும் அப்பாவையும் கெட்டவங்களா நினைக்க முடியலை. ஆனா அதுக்காக இங்கே இருக்கவும் பிடிக்கலை. எனக்கு இந்த ஊரும் வேண்டாம். யாரும் வேண்டாம். நீங்க மட்டும் போதும். நாம இங்க இருந்து போய்டலாம் கார்த்தி. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. நம்மளை யாராவது பிரிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு கார்த்தி" என்றவளாய் அவனை அணைத்து அழுதிருந்தவளின் உடலின் நடுக்கத்தைத் தனது அணைப்பில் உணர்ந்தவன் அவளின் முதுகை வருடினான்.

அவளுக்கு இருக்கும் குற்றவுணர்வு முழுவதுமாய் நீங்கவும், தங்களது திருமணத்தை அவள் முழுமனதாய் ஏற்க வேண்டுமென்ற எண்ணத்துடனும் தான் வள்ளியை இங்கே அழைத்து வந்து அவளது பெற்றோருடன் தங்க விட்டிருந்தான் கார்த்திகேயன்.

அவளின் பெற்றோர் இவர்கள் இருவரையும் கண்டதும் திட்டி பேசியிருந்தால், அவளை அங்கே விடாது கையோடு அழைத்து வந்திருப்பான். ஆனால் மாறாக அவளின் தந்தை அவளிடம் பாசமாகப் பேசவும் தான் மாறிவிட்டார்கள் என்று நம்பி விட்டு வந்தான். அப்பொழுதும் அவளின் வீட்டில் நடப்பதை இந்த வீட்டு வேலையாள் மூலம் கண்காணிக்கச் சொல்லி பணம் கொடுத்திருந்தான் கார்த்திகேயன். அங்கு அவளுக்கு ஏதேனும் பிரச்சினை நடந்தால் தனக்கு உடனே தெரியப்படுத்துமாறு உரைத்திருந்தான்.

ஞாயிறன்றும் திங்களும் எவ்வித பிரச்சினையும் இன்றி அவளது பெற்றோருடன் மகிழ்வாய் அவள் இருப்பதை அறிந்த பிறகு பெரு நிம்மதி உண்டாயிற்று அவனுக்கு‌. பெற்றோருடன் இருந்தது போதும் அழைத்து வந்துவிடுவோம் என்று எண்ணியிருந்த வேளையில் தான் இவளே வந்திருந்தாள்.

ஆனால் இப்பொழுது அவளது குற்றயுணர்வு போயிருந்த போதும், அவளுக்குப் பயவுணர்வு அதிகரித்திருப்பதை உணர்ந்தான்.

'ஏற்கனவே இவ ஓவர் சென்சிட்டிவ், ஆங்சைட்டி பிரச்சினை வேற இருக்கு! இதுல இது வேறையா?' என்று தான் தோன்றியது அவனுக்கு.

"உன்னையும் என்னையும் யாரும் பிரிக்க முடியாதுடா வள்ளி‌" தனது கைவளைக்குள் வைத்தவனாய் குழந்தைக்குச் சொல்வது போல் அவளது கண்களை நோக்கி உரைத்தவன், "நாளைக்கே நாம சென்னைக்குப் போய்டுவோம்" என்றான்.

ஹ்ம்ம் என்று மண்டையை ஆட்டியவள் அவனை அணைத்துக் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவள் அவ்வாறு செய்ததும், "வெயில்ல போய்ட்டு அப்படியே வந்துட்டேன். ஒரே வியர்வைடா வள்ளி. நான் குளிச்சிட்டு வரேன்" என்று அவன் விலகப் போக, "பரவாயில்ல!" அவனின் சட்டையைப் பிடித்தவளாய் மேலும் அவன் கழுத்தில் அவள் புதைந்து கொள்ள, எங்கே தன்னை விட்டு பெற்றோருடன் இவள் போய்விடுவாளோ என்று பயந்திருந்த அவனின் மனத்திற்கு அவளின் இந்தச் செய்கையும் நெருக்கமும் அத்தனை ஆறுதல் அளித்திருந்தது.

என்றைக்கும் தன்னை விட்டு இவளால் பிரிந்து இருக்கவே முடியாது என்று அவனின் மனம் அன்று தெளிவாய் புரிந்து கொண்டது.

அப்படியே அவளோடு கட்டிலில் படுத்துக் கொண்டான். அவனை அணைத்துக் கழுத்தில் முகம் புதைத்தவளாய் அவள் படுத்திருக்க, அவளின் தலையையும் முதுகையும் அவன் வருடிக் கொண்டே இருக்க, சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்.

அவளின் முதுகை விடாது வருடியிருந்தவனின் மூளையோ வள்ளி கூறியவனவற்றைக் குறித்துச் சிந்தித்திருந்தது.

'யாராவது கல்யாணம் செஞ்சியிருக்கப் பொண்ணை வேறொருத்தருக்குக் கட்டி வைக்க நினைப்பாங்களா? ஒரு வேளை இந்த மல்லிகா சொன்னது பொய்யா இருக்குமோ? ஆனா மல்லிகா ஏன் பொய் சொல்லனும்?' பல்வேறு சிந்தனையுடன் படுத்திருந்தவன் உறங்கியிருந்தவளை தள்ளிப் படுக்க வைத்தவனாய் குளித்து முடித்து முகப்பறைக்குச் சென்றான்.

அங்கே முத்துப்பேச்சு மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் அங்குச் சென்று அமர்ந்தான்.

காமாட்சி ஏற்கனவே நடந்தவற்றை முத்துப்பேச்சுவிடம் உரைத்திருக்கிறார் என்பதை அவரின் பார்வையிலே புரிந்து கொண்ட கார்த்திகேயன், "ஏன் முத்தண்ணே, வள்ளி வீட்டைப் பத்தி விசாரிக்கும் போது இதெல்லாம் என்கிட்ட நீங்க சொல்லலை?" எனக் கேட்டான்.

"தப்பானவங்களாவே இருந்தாலும் எடுத்ததும் ஒருத்தங்களைப் பத்தி தப்பா சொல்றது தப்பில்லையா கார்த்தி" எனக் கேட்டார் முத்துப்பேச்சு.

ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவனாய், "ஆனா ஏன் அந்த மல்லிகா இதையெல்லாம் வள்ளிக்கிட்ட வந்து சொல்லிருக்கானு தான் புரியலை. இதனால அவளுக்கென்ன லாபம்?" எனக் கேட்டான்.

"உதயா அவ கையை மீறி போய்டக் கூடாதேன்ற பயம் தான்" என்றார் காமாட்சி.

"இல்ல காமாட்சி. இதுல வேற ஏதோ உள்குத்து இருக்கு" என்றார் முத்துப்பேச்சு.

கார்த்திகேயன் புரியாது முத்துவைப் பார்க்க, "உதயாவைக் கெட்டவனா நினைக்க முடியலை கார்த்தி. நான் இந்த ஊருலயே பிறந்து வளர்ந்தவன். உதயாவைப் பத்தி நல்லா தெரியும் எனக்கு. அவன் எந்தப் பொண்ணுக்கிட்டயும் தப்பா பார்த்துப் பேசிப் பழகி நான் பார்த்ததேயில்லை. அவனோட அப்பா அம்மா இறந்த பிறகு தனிச்சு வாழுறவனுக்கு யாராவது அரவணைப்பா கிடைச்சா என்ன செய்வான்? அதை மல்லிகா யூஸ் செஞ்சிருக்கானு தான் நான் நினைச்சிக்கிட்டேன். வள்ளியோட அப்பா உதயாவை இதுலருந்து வெளில கொண்டு வந்து, அவனுக்கு வேற கல்யாணம் கட்டி வைக்கப் பார்க்கனும். அதை விட்டுட்டு வள்ளிக்கே கல்யாணம் செஞ்சி வைக்க நினைக்கிறது தான் தப்பு. அதுவுமில்லாம அந்தச் சொத்துக்காகத் தான் மல்லிகா உதயாவை கைக்குள்ள வச்சிருக்காளோனு தோணுது எனக்கு" என்றான்.

'ஆஹா இங்கே பெரிய இடியாப்பச் சிக்கலே இருக்கும் போலயே! இதுல தலையைக் கொடுக்காம கிளம்புறது தான் நமக்கு நல்லது' என்று நினைத்துக் கொண்டான் கார்த்திகேயன்.

சிறிது நேரத்தில் விழித்தாள் வள்ளி. தேநீர் அருந்தியவர்களாய் இருவரும் அன்றிரவு அங்கேயே தங்கிக் கொண்டு மறுநாள் காலை திருச்செந்தூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பலாம் என்று திட்டமிட்டனர். அதன் பிறகு அவரவர் அலுவல் வேலையில் மூழ்கிப் போயினர்.

இரவுணவை உண்டு விட்டு வந்த பின்னும் கார்த்திகேயன் உறங்காமல் மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தவாறே படுத்திருந்தாள் வள்ளி.

தன் மீதிருக்கும் அவளின் பார்வையை உணர்ந்தவனாய் வேலையை நிறுத்தி விட்டு அவளை அவன் பார்க்க, கண்களில் அழைப்புடன் கைகளை விரித்தாள் வள்ளி.

கண்கள் மின்ன அவளைப் பார்த்தவன் மடிக்கணினியை ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு அவள் கைகளுக்குள் சென்று அடைகலமானவனாய், "என்ன வள்ளி? தூக்கம் வரலையா?" எனக் கேட்டான்.

"சாய்ந்திரம் தூங்கினதுல தூக்கம் வரலை" என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளாய், "கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கவா?" என்று கேட்டாள்.

"இதென்ன கேள்வி? ஐம் ஆல் யுவர்ஸ் வள்ளிமா" என்றவன் அவள் படுப்பதற்கு ஏதுவாகப் படுத்துக் கொண்டான்.

அவன் மார்பில் படுத்திருந்தவளின் தலையை வருடி விட்டான்.

தலையை நிமிர்த்தி அவனைப் பார்ப்பதும் படுப்பதுமாய் அவள் இருக்க, "என்கிட்ட ஏதாவது கேட்கனுமா வள்ளி?" எனக் கேட்டான்.

அவன் மார்பில் தாடையைப் பதித்து ஆச்சரியத்துடன் அவன் முகத்தை ஏறிட்டவளாய், ஆமெனத் தலையசைத்தாள்.

"என்ன கேட்கனுமாம் என் வள்ளிக்கு?" என்றவன் கொஞ்சல் குரலில் கேட்கவும் சற்று இலகுவானவளாய், திக்கித் திணறி,

"நான்.. நான் ஹனிமூன்ல.. உங்களை.." என்று அவள் நிறுத்த,

"ஹ்ம்ம் என்னை?" சுவாரசிய சிரிப்புடன் கேட்டான்.

விழிகளைத் தாழ்த்தி அவனது மார்பைப் பார்த்தவளாய், "உங்களை.. என்கிட்ட.. நமக்குள்ள.." எப்படி வார்த்தைகளைக் கோர்ப்பது என்று தடுமாறியவள்,

"நீங்க ஏன் நம்ம ஃபர்ஸ்ட் நைட் பிறகு என்னை விட்டு ஒதுங்கி இருக்கீங்க?" எனத் தட்டுத் தடுமாறி தாழ்வான குரலில் கேட்டிருந்தாள்.

"நான் எங்க ஒதுங்கியிருக்கேன். இதோ உன்கிட்ட இப்படி ஒட்டிக்கிட்டு தானே இருக்கேன்" அவளைத் தன்னோடு இறுக்கியவாறு சிரிப்புடன் கூறினான்.

"ம்ப்ச் நான் அதைச் சொல்லலை" இன்னுமே கூச்சத்துடன் அவன் மார்பைப் பார்த்தவாறு அவள் உரைக்க,

அவளின் தாடையை நிமிர்த்தித் தனது கண்களை அவளைப் பார்க்க வைத்தவன், "நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல சொன்னது தான் வள்ளி. எனக்கு உடல் மட்டுமே உரசிக்குற அந்தத் தாம்பத்தியம் வேண்டாம். இரண்டு மனசும் காதலோட இணையுற சுகமான தாம்பத்தியம் தான் வேணும். வெளி இடத்துல உனக்கு விருப்பமில்லைனு சொன்னதுல எனக்கு அப்ப கோபம் வந்துச்சு தான். ஆனாலும் உன் உணர்வுகளுக்கு நான் மதிப்புக் கொடுக்கனும் தானே. அதுக்குப் பிறகு இரண்டு பேருமே இணக்கமான மனநிலையிலேயே இல்லயே. அதனால எனக்கும் இப்படிச் சூழ்நிலையில் நமக்குள்ள தாம்பத்தியம் நடத்துற விருப்பமில்லை.. அதோட" என்றவன் அவளின் கன்னங்களைத் தாங்கியவனாய்,

"நமக்குப் பிறக்கப் போற குழந்தைங்க நம்மளோட முழுக் காதலின் பரிசாகத் தான் இருக்கனும்னு நினைக்கிறேன் வள்ளி" என்றான்.

தன் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் அவனளிக்கும் மதிப்பையும் தாம்பத்தியத்தைக் குறித்து அவனது பார்வையையும் கேட்டு நெஞ்சுருகிப் போனது அவளுக்கு.

அதீத மகிழ்வில் தன்னையும் மீறி அவன் இதழில் அழுத்தமாய்த் தனது இதழைப் பதித்து எடுத்தவள் நாணத்துடன் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவளின் செயலில் முதலில் இன்பமாய் அதிர்ந்தவன் அதன் பிறகு கண்ட அவளின் நாண முகத்தில் வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திகேயன்‌.

"லிப் கிஸ் எப்டி கொடுக்கிறதுனு உனக்குத் தெரியவே இல்லை வள்ளி. உன் புருஷனாயிருந்துட்டு எனக்கு இது எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா? உன் பொண்டாட்டிக்கு லிப் கிஸ் எப்படிக் கொடுக்கிறதுனு சொல்லித் தராத நீயெல்லாம் என்னடா புருஷன்னு நாளைக்கு உலகம் என்னைக் கேலி செய்யாது?" தீவிரமான பாவனையில் அவன் உரைத்ததைக் கேட்டு எழுந்து அமர்ந்தவளாய் மனம் விட்டு சிரித்தாள் வள்ளி.

அவளின் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன், முத்தத்தின் வித்தைகளை அவளுக்குப் பயில்விக்கத் தொடங்கினான்.

முத்தத்தின் தித்திப்பை நெஞ்சிற்குள்ளும் உணர்ந்தவளாய் இன்பமாய் உறங்கிப் போனாள் வள்ளி.

மறுநாள் காலை முத்துப்பேச்சுயிடமும் காமாட்சியிடமும் பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினர் இருவரும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தம்பதி சமேதராய் கண்குளிர முருகனைத் தரிசித்து விட்டு வந்தவர்கள், மண்டபத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தனர்.

தனது தியானத்தை முடித்துக் கண் திறந்த கார்த்திகேயன், மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் பெருக தியானம் செய்து கொண்டிருந்த வள்ளியின் அருகில் சென்று அவளின் கண்ணீரைத் துடைத்தான்.

கண்களைத் திறந்து அவனை அவள் பார்க்கவும், "முருகர் எதுவும் திட்டினாரா?" எனச் சிரிப்புடன் கேட்டான்.

கண்களைத் துடைத்தவாறு இவளும் மெல்லச் சிரித்தவளாய், "எனக்கு யாரையும் கெட்டவங்களா நினைக்கத் தோணலை முருகா. எது உண்மைனு எனக்குக் காட்டிக் கொடுங்க முருகானு வேண்டிக்கிட்டேன் கார்த்தி" என்றாள்.

முந்தைய நாள் முத்துப்பேச்சுயிடம் பேசிய எதையும் அவன் வள்ளியிடம் பகிரவில்லை. என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளி வந்து தானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அங்கிருந்து அவளின் கைகளைப் பற்றியவனாய் கடலலைக்கு அழைத்துச் சென்றவன் அவளுடன் நிறையத் தற்படங்களை எடுத்துக் கொண்டான்.

"இப்ப சொல்லு வள்ளி! அப்பா அம்மாவை விட்டு வந்து என்னைக் கட்டிக்கிட்டோமேனு இருந்த உன்னோட கில்டி ஃபீலிங்லாம் போய்டுச்சா?" எனக் கேட்டான்.

"தப்பானவனை நான் கல்யாணம் செஞ்சி கஷ்டப்பட்டுடக் கூடாதுனு தான் என்னைக் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டாரு முருகர்னு இப்ப தோணுதுங்க" என்றாள்.

"வாழ்க்கைல நமக்கு நடக்குற எந்தவொரு விஷயத்துக்கும் பலவித காரணக் காரியங்கள் பலவித பார்வைகள் கோணங்கள் இருக்கும் வள்ளி. இப்ப நீ சொல்றதும் கூடச் சரியான காரணம்னு நான் சொல்ல மாட்டேன். இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்க்கும் போது, கடவுள் என்னை உன் கூடச் சேர்த்து வச்சதுக்கு வேற சில காரணங்கள் கோணங்கள் தெரிய வரலாம். அதனால இது தான் காரணம்னு ஃபிக்ஸ் செஞ்சிக்காம வாழ்க்கையை அதன் போக்குல ஏத்துக்கிட்டு வாழப் பழகு வள்ளி" என்றான்.

இரு மனங்கள் மட்டுமே இணைந்தவர்களாய் இந்த ஊருக்கு வந்தவர்கள் முருகனின் அருளால் ஈருயிர் அல்லாது ஓருயிராய் தங்களை உணர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
 
Member
Joined
May 9, 2025
Messages
55
I visualized Thiruchandur balamurgan and the thanghatheru , while reading I am imagining hearing the waves sound. Soft sand touching your feet in the burning sunlight.. sillukarauppati,missing so many. Sorry I didn’t say about the story. It’s going good, thanks for informing me about the next chapter.
 
Joined
May 20, 2025
Messages
67
I visualized Thiruchandur balamurgan and the thanghatheru , while reading I am imagining hearing the waves sound. Soft sand touching your feet in the burning sunlight.. sillukarauppati,missing so many. Sorry I didn’t say about the story. It’s going good, thanks for informing me about the next chapter.
I could feel it ma 😍😍 Thank you so much ma 💗
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top