• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Apr 1, 2025
Messages
4
'இராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போனால் நீ என்னைக் காதலிக்கிறதா அர்த்தம்' அந்த பேப்பரில் எழுதியிருந்ததை கண்டு அனுராதாவிற்கு பயத்தில் படபடத்தது நெஞ்சம். அவள் ஓரளவுக்குத் தைரியசாலிதான். ஆனாலும் இந்த டாஸ்க் அவளை வெகுவாக அச்சுறுத்தியது.

இரண்டு நாளுக்கு முன் அவள் பாலாவிடம் தனது காதலைச் சொல்லியபோது அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவளது விளையாட்டுத் தனம் எல்லாம் அவனும் அறிவான் தானே. பக்கத்து பக்கத்தில் இருந்ததால் அனுவின் சேட்டைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன்தான். மொத்தத்தில் அவளுக்கு வால் மட்டும்தான் இல்லை.

பாலாவை விடாமல் வம்பிழுத்து மாட்டி விடுபவளுக்கு அவன்மீது காதல் உணர்வு வந்திருக்க அன்றிலிருந்து வால்தனத்தினை அவனிடம் காட்டாமல் சற்று ஒதுங்கிப் போனாள். அதுவே அவனுக்கு வித்தியாசமாகப் பட ஒரு நாள் அவனிடம் கடிதத்தினை நீட்டியிருந்தாள். வாங்கியவன் படித்ததுமே அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். அவளது உடல்மொழி அனைத்தும் வித்தியாசமாகப் பட்டது.

உஷாரா இருடா பாலா. இல்லை இதை வச்சு பெருசா நம்மளைப் போட்டுத் தள்ளிடுவா என தனக்குள்ளேயே நினைத்தவன் "சாரி அனு. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை" என்று முடித்துக் கொண்டான்.

"ஏன் பாலா?" அவனது மறுப்பில் அவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. அவன் முன்னால் அழ வேண்டாம் என்று அமைதியாய் கேட்டாள்.

"எனக்குப் பிடிக்கலை அனு. நம்ம இரண்டு பேருக்கும் ஒத்து வராது. எனக்கு அந்த மாதிரி ப்லீங் எதுவும் உன் மேல வரலை. என்னை விட்டுடு" தன்மையாகவே பேசினான்.

"நான் விளையாடுறேன்னு நினைச்சுட்டயா பாலா. இல்லை. நான் உண்மையாத்தான் சொல்லுறேன்? ஐ லவ் யூ"

"நீ லவ் பண்ணாலும் என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல அனு"

"பாலா என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது. இனி நான் சண்டையெல்லாம் போட மாட்டேன். நீ என்னை ஏத்துக்கோ" வீம்பாய் ஒலித்தது அவள் குரல்.

எரிச்சல் வந்துவிட்டது பாலாவிற்கு.
அப்படியே திட்ட வாய் திறந்தவனை அவளது பேச்சு வாய் மூட வைத்தது.

"பாலா! நீ என் காதலை ஏத்துக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். என்ன செய்யணும்னு சொல்லு" என்று சொல்ல எத்தனை நாள் நம்மளை போட்டு டார்ச்சர் பண்ணா.. இன்னைக்கு இவளை நாம வச்சு செய்யலாம் என்றெண்ணி அந்த பேப்பரிலேயே எதையோ அவன் எழுதிவிட்டு அவளிடம் நீட்டியிருந்தான்.

அவளும் ஆசையுடன் அதை வாங்கிப் படிக்க முகம் வெளிறிப் போனது.

"என்ன பாலா இது" குரல் கூட லேசாய் பயத்தின் சாயம் ஒட்டி வந்தது.

"நீதான் லவ் பண்ணுறதா சொன்ன. அது உண்மையா என்னென்னு நான் செக் பண்ண வேண்டாமா? ஏன்னா நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"அதுக்குன்னு இப்படியா? ப்ளீஸ் பாலா வேற ஏதாவது சொல்லேன் நான் செய்றேன்"

"நீ லவ் பண்ணுறது உண்மையாய் இருந்தால் இதைப் பண்ணு. இல்லை இடத்தைக் காலி பண்ணு

"சரி நான் இந்த டாஸ்க்கை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் இதைச் செஞ்சு முடிச்சுட்டால் என்னோட காதலை நீ ஏத்துக்குவயா?"

"கண்டிப்பா ஏத்துக்குவேன்" என்று சொல்ல பாலாவிடம் "நான் யாருன்னு உனக்குத் தெரியாது.. நான் இதை செஞ்சு முடிக்குறேன் பாரு" என சவால் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

மணி இப்போது 11.30 ஆகியிருந்தது

மீண்டுமொரு முறை அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.

மனம் வடிவேல் டோனில் அதைப் படித்துப் பார்த்து ஒப்பாரி வைத்தது.

"பாவி.‌ எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது டாஸ்க் குடுக்கலாம்ல அதைவிட்டுட்டு சுடுகாட்டுக் போகச் சொல்லுறான். நிறைய தடவை பேய் பேய்ன்னு நம்மளைத் திட்டுவானே. அங்க போனாலும் இவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நினைச்சுட்டான் போல. இப்போ என்ன 12 மணிக்கு நாம சுடுகாட்டுக்குப் போக முடியாதா? போய் காட்டுறேன். இந்த அனுவை அவன் சாதாரணமா நினைச்சுட்டான்ல. அவனை விடவே மாட்டேன். போயிட்டு வந்துட்டு அவனுக்கு இருக்கு. அனு நீ ரொம்ப ஸ்ட்ராங். சுடுகாடுக்குப் போறோம். அவன் மூக்கை உடைக்குறோம். அடுத்து அவனை போட்டு டார்ச்சர் பண்ணுறோம் என்றபடி மணியைப் பார்த்தாள்.

நேரம் இரவு 11. 40 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த இரும்பு துண்டு ஒன்றை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். அம்மணிக்கு பாதுகாப்புக்காம். ரொம்ப பலமான ஏற்பாடுதான்..

சாமி அறைக்குள் நுழைந்தவள் "ஆத்தா! உன் புள்ளையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. பொறுப்புல இருந்து பின்வாங்கிடாத ஆத்தா.. நான் திரும்பி வந்த உடனே உனக்கு பொங்கல் வச்சுடுறேன் சரியா?" என வேண்டிக் கொண்டவள் விபூதி பட்டையையும் போட்டுக் கொண்டு மையவெளிக்குள் வந்தாள். வீடே இருளில் மூழ்கியிருக்க மொபைலை காட்டிக் காட்டி வாசற்கதவு வரைக்கும் வந்துவிட்டாள்.

யாரும் எழுந்துடக் கூடாது என சத்தமே கேட்காத வண்ணம் கதவினைத் திறந்தாள். மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள் தாய், தந்தை இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க கூடப் பிறந்தவனும் குப்புற படுத்து அவன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.

'போகாதடி.‌ உசுருக்கு உத்தரவாதம் இல்லை' மனம் அலறத் தொடங்க அடக்கிக் கொண்டு வாசல் தாண்டி கால் எடுத்து வைத்தாள்.

அதுவரை பளீரென்று எரிந்துக் கொண்டிருந்த விளக்குகள் அணைந்துவிட "அம்மாடி" நெஞ்சில் கைவைத்து அப்படியே நின்று விட்டாள்.

தூரமாய் நாயின் ஊளைச்சத்தம்..

கிடுகிடுவென உடல் நடுங்கத் தொடங்கியது.

'உள்ள போயிருடி அனு' இதயம் பதற "ஷ்ஷ் ரிலாக்ஸ்! முன் வச்ச காலை பின் வைக்கக் கூடாது" என்றெண்ணி பாலாவுக்கு started என வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு புறப்பட்டாள்.

அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தவன் மொபைலைப் பார்க்க பக்கென்று ஆனது.

'பையித்தியக்காரி நிஜமாவே சுடுகாட்டுக்குப் போறாளா! இவளை' என பல்லைக் கடித்தபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

"பாலா" அவள் குரல் வித்தியாசமாய் ஒலிக்க இருந்த பதட்டத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை.

"அனு வீட்டுக்குப் போ. இந்த நேரத்துல வெளிய இருக்குறது சேஃப் கிடையாது" கடிந்தான்.

"நீதானே பாலா சுடுகாட்டுக்குப் போக சொன்ன. நான் உன்னைக் காதலிக்கிறேன் பாலா. அங்க போகத்தான் செய்வேன்"

"அடியே அறிவில்லையா.. எது சொன்னாலும் செஞ்சுடுவயா?" திட்டியபடி இருந்தவன்

"பாலா" என்ற அவளது அலறலில் சட்டென்று மொபைலைத் தவறவிட்டு விட்டான். கேட்ட அவனுக்கே நடுக்கம் பிறந்தது.

மீண்டும் மொபைலை உயிர்ப்பித்து அவளுக்கு அழைக்க தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற குரல் வரவும் அவனுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.

"அச்சோ போச்சு.. இந்த பையித்தியம் பத்தி தெரிஞ்சும் நான் இவகிட்ட போய் இப்படி விளையாண்டிருக்கக் கூடாது" சட்டையை மாட்டியவன் மொபைலை எடுத்துக் கொண்டு நிமிடத்தில் வெளியே வந்திருந்தான்.

பயத்தோடு அவர்களின் தெருவினை அப்போதுதான் தாண்டி நடந்தாள் அனு. விளக்குகள் பளீரென்று எரிந்துவிட அப்படியே அந்த வெளிச்சத்தில் சுடுகாட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போன் கையில் அப்படியே பத்திரமாக இருந்தது.

சுடுகாட்டை நோக்கி நடக்கும் போதே குழந்தை அழுவது போல் சத்தம் கேட்க முதுகுத்தண்டு அப்படியே சிலீரென்று உணர்வில் உறைந்துப் போய்விட்டது.

குழந்தை அழற சத்தம் கேட்டது.. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். இடமே அமானுஷ்யத்தின் பிடியில் இருப்பதைப் போலிருக்க அய்யய்யோ என அவள் வேகமாக எட்டு வைத்தாள்.

காலில் எதுவோ இடறியது.

"ஆத்தா! காப்பாத்து" என முணங்கியபடி பார்த்தாள். கண்கள் மின்னியபடி ஒரு பூனை அவளைத் தாண்டி நகர்ந்துவிட அப்படியே நிம்மதியுற்றவள் முன்னே நகர்ந்தாள்.

பெரிய ஆலமரம் இப்போது பார்வைக்குத் தெரிந்தது. அதைக் கடந்தால் ஒற்றையடிப்பாதை வரும். அதுதான் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி..

சகல தெய்வங்களையும் அவள் அழைத்தபடி நகர்ந்தாள். ஆலமரத்தினை நெருங்கியும் விட்டிருந்தாள்.

அந்த இடமே அவளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.

"கருப்பா காப்பாத்து.. காளியாத்தா காப்பாத்து.." உருப்போட்டுக் கொண்டே அவள் நடக்க, "அனு" என்ற குரல் அவளுக்குக் கேட்டது.

"இது பாலாவோட சத்தமாச்சே.. பாலா வந்துட்டானா.." என்றவாறு விழிகளைச் சுழலவிட்டாள்.

சத்தம் தான் கேட்டதே ஒழிய பாலா அவள் கண்ணுக்குத் தென்படவில்லை..

"அதானே அவனாவது வர்றதாவது? மெசேஜ் போட்டோமே.. வேண்டாம்டி வீட்டுக்குப் போடி.. நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு போன் பண்ணி தடுத்தானா.. எருமை மாடு ஹாயா தூங்கிட்டு இருக்கும். இருக்கட்டும்" என கருவிக் கொண்டு நடக்க, "அனு" மீண்டும் குரல் கேட்டது.

இம்முறை அந்த குரல் அவளுக்குள் அச்சத்தின் அளவினை அதிகப்படுத்தியது. அது பாலாவின் குரல் அல்ல.. அந்த குரலில் அவளுக்குள் அச்சம் பிறந்தது.

"வா அனு நீ போக வேண்டிய இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன்" குரல் கரகரவென்று கேட்க அவள் தொண்டை அடைத்தது.

அப்படியே பின்னால் நகரப் போனவள் கல் தடுக்கி விழுந்துவிட, நச்சென்று அவள் தலை எதன்மீதோ மோதியது.

"அம்மா.. ஆ" லேசாக தலை உயர்த்திப் பார்க்க மண்பாண்டத்தின் உடைந்த துண்டில் தான் அவள் தலை மோதியிருந்தது. உடைந்தது மோதி அவள் தோலினை கீறியிருக்க இரத்தம் கசிந்து ஒரு துளி மண்ணில் விழுந்துவிட்டது.

விர்ரென்று சப்தம். காற்று பலமாய் அடிக்க ஆரம்பித்துவிட ஆலமரம் அப்படியே பேயாட்டம் ஆடத் தொடங்கியது. விழுதுகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப இப்படியும் அப்படியாக போய் வர அதுவும் அவள் மேலேயே போய் மோதி அவளை வலிக்கச் செய்தது.

குழந்தையின் அழுகுரல் வேறு விட்டு விட்டு கேட்க ஆரம்பித்ததும் வலியைத் தாங்கிக் கொண்டு எழ முற்பட்டாள். தரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு விழுது மட்டும் அவளது காலில் சுற்றி இழுத்துவிட மீண்டும் நிலைகுலைந்து விழுந்து விட்டாள்.

தலை பயங்கரமா வலித்தது. இரத்தம் வழிந்து அவளது கண்களுக்குள் கலந்தது. பார்வை லேசாக மங்க பளீச்சென்று மின்னல் வேறு வெட்டி அந்த இடத்தினை இன்னும் பயங்கரமாக காட்ட நிமிர்ந்து பார்த்தவளின் கண்களுக்கு அந்த ஆலமரத்தின் கிளை மேல அமர்ந்தபடி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் உருவம் தட்டுப்பட்டது.
 
Joined
Apr 1, 2025
Messages
4
அகோரமான அந்த பெண்ணின் தோற்றத்தில் நா உலர்ந்து போனது. இமைக்க மறந்து அப்படியே சிலைபோல அவளிருக்க இதயம் பயங்கரமாக அடித்துக் கொள்வது வெளியே கேட்க ஆரம்பித்துவிட்டது.

சர்ரென்று பறந்து வந்து அவளுக்கு முன்னே அமர்ந்தாள் அந்த பெண்.. அல்ல பேய்..

அவள் மேனியில் இருந்து பயங்கர துர்நாற்றம் வர இவளோ பயத்தில்
கண்களை பட்டென்று மூடிக் கொண்டாள்.

காதுக்குள் குழந்தை அழுவது கேட்டது..

அச்சத்தில் கண்களைத் திறவாமலேயே அவள் எழப் பார்க்க முதுகின் மீது யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போல் அதீத பாரம்.

நிமிரவும் முடியாமல் கண்களைத் திறவாமல் இருந்தவள் மூச்சு தடைபட தொண்டை வேறு அடைத்துக் கொண்டது. கழுத்தினை அழுத்தும் உணர்வில் இருந்து விடுபட முடியாது மொத்தமாய் மண்ணோடு மண்ணாய் அவள் சரீரம் கிடக்க அப்படியே கண்கள் சொருகி "என்னை விட்டுடு" என கெஞ்சியவாறே மயக்கத்திற்கு போய்விட்டாள் அனு.

போன் பண்ணா ரீச் ஆகவும் இல்லை. எங்கதான் போனா இவ.. ஆலமரத்தினை நெருங்கியிருந்தவன் அவ்விடம் முழுவதும் டார்ச் அடித்துத் தேடினான். அவளைக் காணவில்லை.

ஆலமரத்தினை மீண்டும் நோட்டம் விட்டுவிட்டு அவன் அந்த ஒற்றையடிப் பாதையில் செல்லத் தொடங்கினான்.

சுடுகாட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரமே இருந்தது.

"அனு! அனு! எங்கடி இருக்க?" என குரல் கொடுத்தவாறு அந்த பாதையில் தேடினான்.

உள்ளே நுழைந்த உடனே அவள் போனுக்கு டிரைப் பண்ண, அவனுக்கு சற்றுத் தள்ளி வெளிச்சம் மட்டும் மின்னி மின்னி அவளது போன் என்பதை உறுதிப்படுத்தியது..

வேகமாய் அங்கே சென்றவன் அவளைக் கண்டு அப்படியே பயந்துப் போனான். ஏனெனில் அவள் பாதி உடல் மண்ணுக்குள் புதைந்திருந்தது. பாதி மட்டுமே வெளியே கிடந்தது..

"ஏய் அனு! அனு" அவளை மடிதாங்கியவன் வேகமாய் மண்ணை தள்ளிவிடத் தொடங்கினான்.

அதற்குள் அனுவின் அண்ணன் சரணுக்கு அழைப்பு விடுத்தான். செய்தியைச் சொல்லிவிட்டு அவன் மண்ணைத் தோண்டினான்.

அவள் முகம் வேறு இரத்தம் படிந்து உறைந்து போய் அவளை அகோரமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

"ப்ளீஸ்டி எழுந்திரு.‌ நான் உன்கிட்ட இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" என நினைத்தபடியே அவன் மெல்ல மெல்ல அவளை வெளியே கொண்டு வர முயற்சி செய்தான். முழுதாய் அவளை வெளியே கொண்டு வரும் போதே கால் மட்டும் மண்ணுக்குள்ளயே இருந்தது.

மெல்ல காலையும் அவன் தூக்க.. அது மாட்டியிருப்பதை உணர்ந்து பொறுமையாய் விடுவிக்க முற்பட்டான். கொலுசு எதிலோ மாட்டியிருந்ததால் கால் வெளியே வர மறுத்தது. என்னவென்று லைட்டை அங்கே காட்ட அவளது கொலுசில் சிக்கியிருந்த சிவப்பு நிற துணியின் முனையைக் கண்டு அதை எடுக்கும் வேளையில் சரண் வந்துவிட்டான்‌.

இப்போதுதான் அவனுக்குள் இன்னும் தைரியம் வந்தது. வந்தவனோ "அனு! அனு!" என அவன் மடிந்து அமர்ந்துவிட, இவனோ கொலுசில் மாட்டியிருந்த அந்த துணியை பிடித்து இழுக்க மண்ணுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஒரு கால் மேலே வந்து விழுந்தது.

"அம்மா.." என அவன் அலறி விட சரண், "என்னடா ஆச்சு" என கேட்டான். அதைக் காட்ட சரணுக்குப் பயம் வந்துவிட்டது.

"ப்ச். மொதல்ல இவளைத் தூக்குடா" என சரண் திட்ட பாலாவும் அவள் கொலுசில் இருந்த அந்த துணியை விலக்கிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டான்.

அழுகிய நிலையில் வெளி வந்து கிடந்த கால் உள்ளே புதைந்து கொள்ள,

"வீட்டுக்குப் போகலாம். வா!" என சரண் அவனை முன்னே தள்ளிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.

வீட்டில், பிரம்மை பிடித்தது போல் இருந்த மகளைக் கண்டு பெற்றவர்கள் பதறிப் போனார்கள். பாலாவின் பெற்றோர் அவனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

"அவதான் சின்னப்பொண்ணு. நீயும் அவளுக்குச் சரிசமமா இப்படி இறங்கி பேசி வைப்பயா.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தால் என்ன பண்ணுறது..?" என அவர்கள் திட்ட அவனும் தப்பு தன் பேரில் என்பதால் அதை ஏற்றுக் கொண்டான்.

இவர்கள் பேசுவதைக் கண்டுக் கொள்ளாமல் அவள் பாட்டுக்கு இருக்க, குழந்தையின் அழுகுரல் கேட்க ஆரம்பித்ததும்.. "அய்யோ என் பிள்ளை" என பதறி அடித்து வெளியே ஓடினாள் அனு.

"அனு அனு" பாலா விரைந்து ஓடினான்.

அவள் வேகமாய் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தொட்டியில் அழுதுக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

"அம்மா வந்துட்டேன்டா.. அம்மா இனி உன் கூடவே இருப்பேன். நீ அழக்கூடாது என் தங்கம்ல" என கொஞ்ச அந்த குழந்தை அழுவதை விட்டுவிட்டு அவளையேப் பார்த்து அமைதியாகிவிட்டது.

இதைக் கண்டு பாலாவோடு சேர்ந்து அந்த குழந்தையின் தகப்பன் விக்ரமும் அதிர்ந்து போனான்.

"அனு! குழந்தையைக் குடுத்துட்டு நீ உன் வீட்டுக்குப் போ" என விக்ரம் தன்னிலைக்கு வந்து தெரிந்த பெண் என்பதால் அவளிடம் கை நீட்ட "காயத்ரிங்க" என்றாள் சிரித்தபடி.

விக்ரம் அதிர்வுடன் சுவற்றில் மோதி நிற்க பாலா வேகமாய் "ஏய் அனு.. வாடி வீட்டுக்குப் போகலாம்" என்று குழந்தையைத் தூக்க, "ஏய் விடுடா. என் குழந்தையைத் தொடாத. அவன் என் கூடதான் இருப்பான்.‌ விடு விடு. என்னை விடு. இதுதான் என் வீடு. நான் இங்க இருந்து வரமாட்டேன். மரியாதையாய் போயிடு" என அரட்ட, பின்னாடியே வந்த இருவரின் பெற்றோர்களும் அவளின் பேச்சினைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள்.

விக்ரமின் தாய், "காயத்ரி ஆவி இவளுக்குப் பிடிச்சுடுச்சுப் போல கோடாங்கியைக் கூட்டிட்டு வந்து விரட்டலாம்" என அனுவின் பெற்றோர் அருகே வந்து சொன்னார்‌.

கோடாங்கியின் முன்னால் அனு அமர்ந்திருந்தாள்.

"இந்த பொண்ணு உடம்பை விட்டுப் போயிடு" கடினக் குரலில் மிரட்டினார் கோடாங்கி.

"மாட்டேன். நான் என் குழந்தைக் கூட இருக்கணும். அதுக்குத்தான் இவ உடம்புல புகுந்துருக்கேன். போக மாட்டேன்" ஆவி வீம்பு பிடித்தது.

"சொன்னால் கேக்க மாட்ட.." கண்களை உருட்டினார். பளாரென்று அறை வேறு விட்டார் கோடாங்கி..
உடுக்கை சத்தம் காதைக் கிழித்தது.

"போயிடு! போயிடு!"

"மாட்டேன் மாட்டேன்.. என் குழந்தை கூட இருக்கணும். இவதான் ராத்திரி தனியா வெளிய வந்தா. அப்பவே அவள் உடம்பை நான் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டேன். இனி நான் போக மாட்டேன்.. " சிரித்தாள் அனு(காயத்ரி).

அனுவின் தலைமுடி கொத்தாக இப்போது கோடாங்கியின் கையில்.. பாலாவுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

"எல்லாம் உன்னாலதான்டா" அப்பா அவனை முறைக்க தலை குனிந்துக் கொண்டான்.

கோடங்கி விடாமல் அவளை போட்டு பாடுபடுத்தி உடலை விட்டு வெளியே வரவைத்து அனுவை அவள் கட்டுப் பாட்டிலிருந்து காத்துவிட்டார்.

"கருப்பன் கோவிலுக்கு புள்ளையைக் கூட்டிட்டுப் போய் அங்க இந்த கயிறை அவன் பாதத்துல வச்சு இவளுக்குக் கட்டிவிடுங்க. கவலைப்படாத. உன் பொண்ணுக்கு ஆயுசு கெட்டி. இனி கருப்பன் பார்த்துக்குவான்" என்று சொல்லவும் அவர்களும் அவளைக் கூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள்.

கோடாங்கி விக்ரமிடம் திரும்பி "புள்ளை ஏக்கம். சுலபத்துல போகாது. அகால மரணம் வேற.. உடனே சாந்தி பண்ண ஏற்பாடு. இல்லைன்னா இப்படியாவே ஏக்கத்துலயே சுத்திட்டு இருக்கும். அது ஊருக்கும் நல்லதில்லை" என்று சொல்ல சரியென அவனும் எழுந்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் உடல் வலியால் அவஸ்தைப் பட்டுப் போனாள் அனு. அவளிடம் யாரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவளுக்கு நடந்தது மங்கலாய் நினைவிற்குள் இருக்கத்தான் செய்தது.

பாலா அனுவைப் பார்க்க ஆசைப்பட பாலாவின் அப்பா நீ அங்க போகவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

மேலும் இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அவனது மொபைலுக்கு மெசேஜ் வந்திருந்தது..

"இராத்திரி பத்து மணிக்கு மொட்டை மாடிக்கு வந்தால் நீ என்னை காதலிக்கிறதா அர்த்தம்.." அனுதான் அனுப்பி வைத்திருந்தாள். சிரித்துக் கொண்டான் பாலா.. பத்துமணிக்காக அப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தான்.

பத்து மணி ஆன உடனே வேகமாய் மொட்டை மாடிக்குச் சென்றான். அவளுக்காக நின்றிருக்க "பாலா" என அவள் குரல் மெல்லக் கேட்க சட்டென திரும்பியவன் "அம்மா பேய்" என அலற, "டேய் டேய் நான்தான்டா.." என்று அந்த முகமூடியைக் கழட்ட அதற்குள் சத்தம் கேட்டு ஐவரும் மேலே வந்துவிட்டார்கள்..

அனுதான் சங்கடப்பட்டுப் போனாள். இவன் இப்படிக் கத்திக் காட்டிப் கொடுத்துவிடுவான் என அவள் நினைக்கவே இல்லை.

"என்னடா நடக்குது பாலா.."

"அவதான் அப்பா பயமுறுத்துனா"

"விளையாட்டுத்தனம் எல்லாத்துலயும் இருக்கக் கூடாது அனு" என எச்சரித்து விட்டு அவர்கள் செல்ல பாலாவினை நெருங்கியவள் "எப்போ ஓகே சொல்லுவ?" என்று கேட்டாள்.

"பத்து மணிக்கு டான்னு மாடிக்கு வந்து நான்தான் ப்ரூப் பண்ணிட்டேனே. இனியும் உனக்கு ஓகே சொல்லணுமா?"

அவள் இதழ்களில் அழகான சிரிப்பு உதயமானது. அதையே ரசித்தவன் அவளை நெருங்கி "டாஸ்க் கம்ப்ளீட் பண்ண உனக்கு ஒன்னு கொடுக்கணும்னா ஆசைப்படுறேன்" ஹஸ்கி ஸாய்ஸில் முணுமுணுக்க, "பாலா" என சிணுங்கியபடி அவனைத் தள்ளிவிட்டு
வெட்கத்துடன் ஓட

"தராமல் விடமாட்டேன் டி" என அவனும் ஓடும் அவளைப் பார்த்து நிறைவுடன் புன்னகைத்துக் கொண்டான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top