அத்தியாயம் -3
“என்னப்பா, திடீர்னு அமைதி ஆயிட்டீங்க? ஏதாவது யோசிக்கிறீங்களா?”
தந்தை பார்த்திபனிடம் கேட்டாள் மானசா.
“இ.. இல்லேடா.. அதெல்லாம் எதுவும் இல்ல”
“ஏய்.. உனக்குப் பிடிக்கும்னு தானே நான் சப்பாத்தி குருமா செஞ்சேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு ஏதாவது சொல்றியாடி மானஸ்?” கேட்டான் வியாஷன்.
“நிஜமாவே அது தாண்டா அண்ணா சொல்ல வந்தேன் இப்ப. எப்பவும் விட இன்னைக்கு சூப்பரா இருக்கே! கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு. ஆமாவாண்ணே? ஒரு எக்ஸ்ட்ரா டேஸ்ட் வருது. நான் சொல்றது கரெக்டா?”
“அட! கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே! நல்லா இருக்கா?”
“ரொம்ப நல்லா இருக்குண்ணா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“ஆமாடா வியாஷ், டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு. நீ இப்ப எல்லாம் ரொம்ப நல்லாவே சமைக்கிறே. எக்ஸ்பர்ட் ஆயிட்டே வர்றே” மகனைப் பாராட்டினார் பார்த்திபன்.
“சோ.. இன்றிலிருந்து வியாஷன் அவர்களுக்கு ‘கிச்சன் கில்லாடி’ என்கிற பட்டம் சூட்டப்படுகிறது” என்று மைக்கில் பேசுவது போல் கையை வைத்துக் கொண்டு கூறினாள் மானசா.
சிரிப்புச் சத்தம் அலை மோதியது அங்கு.
“கிசும்பப் பாரு, வாயாடி பொண்ணு!”
மகளின் தலையில் செல்லமாகத் தட்டினார் பார்த்திபன்.
“அது சரி, என்னண்ணே செஞ்சே? எக்ஸ்ட்ராவா எதை ஆட் பண்ணிருக்கே? அதைச் சொல்லு”
“ம்ஹும்.. நான் சொல்ல மாட்டேன். என்னன்னு நீயே கண்டுபிடி பாப்போம். அப்பா, நீங்களும் சொல்லலாம். அந்த எக்ஸ்ட்ரா டேஸ்டுக்கு புதுசா என்ன சேர்த்திருக்கேன்னு சொல்லுங்க பாக்கலாம்”
“ம்ம்.. அப்படியா? தெரியலையேடா வியாஷா. அந்த அளவுக்கு எல்லாம் சமையல் நாலேட்ஜ் இல்லையேப்பா எனக்கு. நீயே சொல்லு”
“சரி, அப்படின்னா நீங்க உங்க தோல்விய ஒத்துக்குறீங்க. ஏய் மானசா, நீ பதில் சொல்லு”
“அது தான் செக் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் இரு வர்றேன்”
சப்பாத்தியை பிய்த்து குருமாவை அதில் தோய்த்து வாயில் போட்டு சுவைத்தாள் யோசனையுடன். பிறகு குருமாவை மட்டும் சுவைத்துப் பார்த்தாள்.
“இதுக்கு எவ்வளவு பில்டப் குடுக்குறா பாருங்கப்பா” கிண்டல் செய்தான் வியாஷன்.
“டேய் அண்ணா, கொஞ்சம் பேசாம இரு. நீ பேசினா எனக்கு டைவர்ட் ஆகுது”
அவளை முறைத்தான் வியாஷன். இருவரையும் சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார் பார்த்திபன்.
பிறகு கையில் சிறிது எடுத்து முகர்ந்து பார்த்தாள் மானசா. பிறகு உதட்டைப் பிதுக்கினாள்.
“தெரியலையேடா அண்ணா எனக்கு. நீயே சொல்லிரு”
“ம்ம்.. அப்படின்னா நீயும் உன் தோல்விய ஒத்துக்குறியா?”
“ம்ம்.. ஒத்துக்குறேன். சொல்லு நீ மொதோ”
அது என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள் மானசா.
“கேஷியூ (cashew) கொஞ்சம் மேஷ் பண்ணி சேர்த்துருக்கேன். அவ்வளவு தான். சிம்பிள்!”
“ஹேய்.. ஆமாடா, நீ சொன்னப்புறம் தான் எனக்குத் தெரியுது. அந்த டேஸ்ட் இப்ப ஃபீல் ஆகுது எனக்கு. பொதுவா கேஷூயூ சேர்ப்பாங்க, தெரியும். ஆனா கரெக்டா இப்ப ஞாபகம் வரல எனக்கு”
“எஸ்.. நாங்க ரெண்டு பேருமே கூட இது பத்தி பேசி இருக்கோம். அதுதான் இன்னைக்கு செஞ்சு பாக்கலாம்னு தோணுச்சு. செஞ்சேன். நல்லா இருக்குல்ல?”
“ஆமாண்ணா”
மூவரும் பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர். பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். அண்ணனும் தங்கையும் அப்போதும் அரட்டை அடித்துக் கொண்டே பார்த்தனர்.
எப்போதுமே பார்த்திபனும் அந்த அரட்டையில் கலந்து கொள்வார். ஆனால் அன்று என்னவோ அந்த மனநிலையில் இல்லை அவர். சிந்தனையிலேயே இருந்தார்.
பிறகு அவரவர் அறைக்குச் சென்றனர் தூங்குவதற்கு.
“குட் நைட் டாடி”
“ம்ம்.. குட் நைட்”
பார்த்திபனும் தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டார். அலமாரியில் இருந்த ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தார்.
அதில் இருந்தது சிநேகா, பார்த்திபனின் மனைவி. சிறிது நேரம் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். இலேசாகக் கண் கசிந்தது அவருக்கு.
பார்த்திபனும் சிநேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். படிக்கும் வயதில் இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர்.
நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். காதலை முதலில் வெளிப்படுத்தியது சிநேகா தான். படிப்பு முடிந்ததும் வேலை கற்றுக் கொள்ள என்று ஆடிட்டர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தான் பார்த்திபன்.
சிநேகாவுக்கு ஒரு அண்ணன். வெளிநாட்டில் இருந்தான். அவர்களின் அப்பாவிற்கு இருதய நோய் இருப்பதால், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று அவசரப்பட்டனர் சிநேகாவின் குடும்பத்தினர்.
வேறு வழியின்றி பார்த்திபனும் சம்மதித்தான். இருவருக்கும் திருமணம் நடந்தது. மகளின் திருமணம் முடிவதற்காகவே காத்திருந்தது போல் அதன் அடுத்த வருடமே சிநேகாவின் அப்பா இறந்து விட்டார்.
சிநேகாவின் அம்மா மகளுடன் வந்து இருந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு தான் தன் ஆடிட்டிங் தொழிலை தனியாகச் செய்ய ஆரம்பித்தான் பார்த்திபன்.
அப்போது வியாஷன் பிறந்து விட்டான். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் மானசா பிறந்தாள்.
சிநேகாவின் அண்ணன், அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான்.
மகனைப் பற்றிய கவலையிலேயே சிநேகாவின் அம்மாவும் உயிர் நீத்தார்.
மானசா பிறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, சிநேகாவின் உடல்நிலை திடீரென பாதிப்பு அடைந்தது. மருத்துவச் சோதனையின் முடிவில் அவளுக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது தெரிய வந்தது.
குடும்பமே இடிந்து போனது. பார்த்திபன் தான், உலகத்தின் இயக்கமே நின்று போனது போல் ஆகி விட்டார்.
ஆனால் அதை சிநேகாவிடம் காட்டிக் கொள்ளவும் முடியாமல் தவித்தார். சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவுமே சிரமப்பட்டனர் இருவரும்.
தன் முடிவு தெரிந்து விட்டதால், அப்போதிருந்தே குழந்தைகளிடம் இருந்து சிறிது விலகியே இருக்க ஆரம்பித்தாள் சிநேகா.
தான் இல்லாத சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு பழக்க ஆரம்பித்தாள்.
பார்த்திபன், வீட்டின் முன்பு ஒரு பக்கமாக இருந்த அறையை, தன் அலுவலக அறையாக மாற்றிக் கொண்டார். குழந்தைகளைப் பெரும்பாலும் அவரே பார்த்துக் கொண்டார்.
கணவனும் மனைவியும் மனதில் இருந்த கவலைகளை மறைத்து மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டனர்.
மானசாவுக்கு மூன்று வயதானது. ஒரு நாள் இரவு படுத்தவள், காலையில் எழவே இல்லை. தூக்கத்திலேயே இறைவனடி போய் சேர்ந்து விட்டாள்.
பார்த்திபனுக்கு அப்போது வெறும் முப்பத்தி இரண்டு வயது தான். வியாஷனுக்கு ஆறு வயது. மானசா மூன்று வயது குழந்தையாக இருந்தாள்.
மனைவி தன்னையும் குழந்தைகளையும் விட்டுச் சென்ற பிறகு, அவரே குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் ஆனார்.
வீட்டையும் அலுவலகத்தையும் அத்துடன் குழந்தைகளையும் ஒரு சேரக் கவனித்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்கிற ஒரு நினைவு கூட வரவில்லை.
தாய் இல்லாத குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்தது அப்போதைக்கு.
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் மாறினார். வீட்டில் எந்நேரமும் குறும்பு, கலாட்டா என்று எப்போதும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் இருந்தது.
பொதுவாக ஆண் பிள்ளை என்றால் உசத்தி என்கிற ஒரு எண்ணம் அந்த வீட்டில் இல்லாதவாறு இருவரையும் பார்த்துப் பார்த்து வளர்த்தார்.
ஆண் என்றால் வெளியே சென்று சம்பாதிக்க வேண்டும்; பெண் என்றால் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்கிற ஒரு கருத்தை மாற்றினார்.
எல்லாரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் குழந்தைகளாக இருந்த போதே வயதுக்கேற்ற வேலைகளை செய்யப் பழக்கினார் இருவரையும்.
ஆணோ பெண்ணோ, இருவரும் ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்.
வியாஷனும் மானசாவும் அவர் நினைத்தபடியே வளர்ந்தனர். இருவரும் பொறியியல் படிப்பு படிக்க விருப்பப்பட்டதால் அதையே படிக்க வைத்தார்.
வியாஷனுக்கு படிப்பு முடியும் போதே வேலை கிடைத்து, சேர்ந்தும் விட்டான். மானசாவுக்கு இன்னும் ஆறு மாதப் படிப்பு இருந்தது.
வீட்டு வேலைகளை மூவரும் சேர்ந்து செய்வார்கள். இப்படியே அவர்களின் வாழ்க்கை நன்றாகவே ஓடிக் கொண்டு இருந்தது.
அப்படி நிர்மலமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில், இப்போது இரண்டு ஆண்டுகளாக, அதாவது வியாஷன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததில் இருந்து என்று சொல்லலாம்.
பார்த்திபனின் மனம் சிறிது சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது. மனதில் தனிமை எனும் உணர்வு சூழ்ந்து கொண்டு அவரை அலைக்கழிக்க ஆரம்பித்து இருந்தது.
இத்தனை வருடங்கள் இல்லாத இந்த உணர்வு, இப்போது ஏன் தன்னை இப்படி வாட்டுகிறது என்று அவருக்கு யோசனையாக இருந்தது.
அவருடைய கவலையை அதிகம் ஆக்குவது போல், அடுத்த இரண்டு நாட்களில் அவர் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது.
ஆனால் உண்மையில் அது சந்தோஷப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். ஆனால் அவரால் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
வழக்கம் போல் செல்லும் நடைப்பயிற்சிக்கு அன்று காலையும் சென்றார் பார்த்திபன்.
அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கும் மூர்த்தியும் எப்போதும் அவருடன் நடைப்பயிற்சிக்கு வருவது வழக்கம்.
அன்றும் இவர் கீழே செல்லும் போதே அவருக்காகத் தயாராகக் காத்திருந்தார் மூர்த்தி. இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.
“வந்து ரொம்ப நேரமாச்சா மூர்த்தி? நான் லேட்டா?”
“இல்ல பார்த்திபன், இப்ப தான் வந்தேன். நான் வந்து நிக்குறேன். நீங்க வந்துட்டீங்க”
“ம்ம்..”
“அப்புறம் பார்த்திபன், உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே”
ஆச்சரியமாக இருந்தது பார்த்திபனுக்கு.
‘நம்ம கிட்ட முக்கியமான விஷயம் பேச என்ன இருக்கு இவருக்கு?’
யோசித்துக் கொண்டே அதிசயத்துடன் பார்த்தார் அவரை.
“முக்கியமான விஷயமா? என்ன மூர்த்தி சொல்லுங்க”
“என் ஃபிரண்ட் ஒருத்தர், நாராயணன் அவர் பேரு. நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே நண்பர்கள்”
“ஓ! ஓகே”
மூர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்திபனுக்குப் புரியவில்லை.
“அவருக்கு ஒரு பொண்ணு. ஒரு பையன். பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டான். பையனுக்கு இப்ப தான் பார்த்துட்டு இருக்கான். நல்ல பொண்ணா யாராச்சும் இருந்தா சொல்லுன்னு சொன்னான். தெரிஞ்ச குடும்பமா இருந்தா நல்லதுன்னு நினைக்கிறதா சொன்னான். எனக்கு உடனே உங்க ஞாபகம் தான் வந்தது. உங்க பொண்ணுக்கு இந்த வருஷம் படிப்பு முடிஞ்சிருதுல்ல? உங்க பொண்ணுக்கு கல்யாணம் பாத்தா என்னன்னு தோணுச்சு. அது தான் உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன். சொல்லுங்க பார்த்திபன், உங்க அபிப்பிராயம் என்ன?”
மகள் வளர்ந்து விட்டாள், திருமண வயதை எட்டி விட்டாள் என்பது பார்த்திபனுக்கு அப்போது தான் உரைத்தது.
சட்டென்று மனதில் சந்தோஷம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் உடனே அவரிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை பார்த்திபனுக்கு.
“என்ன யோசிக்கிறீங்க பார்த்திபன்? இஷ்டமில்லையா உங்களுக்கு?”
“அப்படி சொல்ல முடியாது மூர்த்தி. நீங்க திடீர்னு கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன்னா, என் பொண்ணோட கல்யாணத்தப் பத்தி இதுவரை நான் யோசிச்சதே இல்ல. நீங்க இப்படி ஒரு விஷயம் கேட்டப்புறம் தான், என் பொண்ணு வளர்ந்துட்டா என்றதே எனக்கு ரியலைஸ் ஆகுது. கொஞ்சம் யோசிக்கணும் மூர்த்தி. இன்னும் ஆறு மாசப் படிப்பு இருக்கு. அதுக்கு அப்புறம் உடனே கல்யாணம் பண்ணனுமான்னு தோணுது. இதில அவ என்ன சொல்லுவான்னு தெரியல எனக்கு. வேலைக்குப் போகணும்னு சொல்லுவா எப்பவும். அதனால இப்ப உடனே இதில எந்த முடிவும் என்னால எடுக்க முடியாது மூர்த்தி”
தன் கருத்தைத் தெளிவாகவே கூறினார் பார்த்திபன்.
“ஒன்னும் அவசரம் இல்ல பார்த்திபன். நல்லா யோசிங்க. உங்க பொண்ணு கிட்ட பேசுங்க. வேலைக்குப் போறதில எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்ல. இப்ப எல்லாம் படிச்சுட்டு யாரு சும்மா இருக்கா? அதனால அது பத்தி வொர்ரி பண்ணிக்கத் தேவையில்ல. உங்க மகன் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணுங்க. நல்லா யோசிச்சு மெதுவாவே பதில் சொல்லுங்க பார்த்திபன். என்ன, சரி தானே?”
“ஓகே மூர்த்தி, என் பசங்க கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஒரு வாரத்தில பதில் சொல்றேன்”
“ஓகே பார்த்திபன். டேக் யுவர் ஓன் டைம்!”
வீட்டுக்கு வந்த பிறகும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் பார்த்திபன்.