Stories that touch hearts

Home  /  27. சுதா சுரேஷ் (இரண்டாம் பாதி)  /  Chapter 2

CHAPTER 2

அத்தியாயம் -2

By Sudha Suresh · November 24, 2026

0

அத்தியாயம் -2

“என்ன வியாஷ் ரெடியா? போகலாமா கீழே?” கேட்டுக் கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தார் பார்த்திபன். 

“ம்ம்.. ரெடிப்பா, போலாம்” கூறிக் கொண்டே எதிர் அறையில் இருந்து வந்தான் அவருடைய மகன் வியாஷன். 

“பேட் எடுத்துகிட்டியா? மானசா எங்கே? இன்னும் வெளியே வரலையா?” மகளைக் கேட்டார் பார்த்திபன். 

“வரலை இன்னும்”

அவளுடைய அறை பக்கம் பார்த்து அழைத்தார் அவளை. 

“மானசா.. எம்மா மானசா”

“விளையாடப் போறதுக்குக் கூட முகத்துக்கு மேக்கப் போடுவா போல. எவ்வளவு நேரம் பண்றான்னு பாருங்க டாட்” 

நக்கலும் கிண்டலுமாகக் கூறினான் வியாஷன். 

“மானசா, லேட் ஆகுதுடா. வாம்மா சீக்கிரம்” மீண்டும் அழைத்தார் மகளை. 

“ப்பா.. இன்னைக்கு வரலேப்பா நான். நீங்க போயிட்டு வாங்க”

அறையின் உள்ளே  இருந்து மானசாவின் குரல் மெலிதாக வந்தது. 

உடனே ஒருக்களித்துச் சாத்தியிருந்த அவளுடைய அறைக் கதவைத் தள்ளினார் பார்த்திபன். அங்கு கட்டிலில் சோர்வாக படுத்திருந்தாள் மானசா. 

“என்னம்மா என்ன ஆகுது உனக்கு? ஏன் படுத்திருக்கே? ஏன் வரலேன்றே? எப்பவும் நீ தானே மொதோ ஆளா நிப்பே? இன்னைக்கு என்னாச்சுடா?”

உள்ளே சென்று மகளின் தலையைக் கோதியவாறு அன்பான குரலில் கேட்டார் பார்த்திபன். 

“வயிறு ரொம்ப வலிக்குதுப்பா. நிக்க முடியல என்னால”

“ஓ! மறந்தே போயிட்டேண்டா! இன்னைக்கு உனக்கு பீரியட்ஸ் டைம் இல்ல? சரிடா படுத்துக்கோ நீ. நல்லா ரெஸ்ட் எடு. நானும் வியாஷனும் போயிட்டு வந்துட்றோம்” 

மகளின் பிரச்சினையை உணர்ந்துக் கூறினார். அதற்குள் தங்கையின் அருகில் வந்தான் வியாஷன். 

“ரொம்ப வயித்து வலிக்குதுன்னா எப்பவும் போட்ற டேப்லட் போட்டுக்கலாமே மானஸ்? ஏன் டேப்லட் இருக்கா இல்லையா?”

“தெரியலேண்ணா பாக்கணும். நைட் வேணா போடலாமான்னு யோசிச்சேன்”

“ஓ! இரு.. மொதோ மாத்திரை இருக்கா இல்லையான்னு பாக்குறேன்” என்றவாறு தங்கையின் அறையின் ஒரு ஓரத்தில் இருந்த டேபிள் அருகே சென்று, அதன் கீழ் ட்ராவை இழுத்துத் தேடினான். 

“காணோமே மானஸ். டேப்லட் எதுவுமே இல்ல. பாரு, நல்லவேளை நான் கேட்டதால கவனிக்க முடிஞ்சது. இல்லேன்னா நைட்ல திடீர்னு அவசரமா தேவைப்பட்டா என்ன பண்ணியிருப்பே? ஏண்டி இப்படி பண்றே? என் கிட்ட சொல்றதுக்கென்ன?” 

உரிமையான கோபத்துடன் கேட்டான் வியாஷன். 

“ஏம்மா மானசா, சொல்றதுக்கென்ன? இதெல்லாம் முன்னாடியே பாத்து வச்சுக்க வேணாமா சொல்லு? உனக்குத் தான் மாசா மாசம் தேவைப்படுது இல்லையாடா? வயித்து வலி வந்தா தாங்கவே மாட்டே நீ! ஏண்டா இப்படி பண்றே?”

ஆதங்கத்துடன் கேட்டார் பார்த்திபன். 

“இல்லேப்பா.. எப்படியும் பாத்துச் சொல்லிருப்பேன்”

“சரி மானஸ், விளையாடிட்டு வர்றப்ப கொண்டு வர்றேன் நான். ஓகேயா?” கூறினான் வியாஷன். 

“சரிண்ணே, ஓகே கொண்டா”

“ஆனா நாங்க வர்றதுக்கு ஒரு டூ ஹவர்சாவது ஆகும்ல. பரவாயில்லையா? இல்லே.. இப்பவே கொண்டாந்து குடுத்துட்டுப் போகவா?”

“இல்லேண்ணே.. அவ்வளவு அவசரம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீ விளையாடிட்டு மெதுவாவே கொண்டு வா போதும்”

“சரிடி மானஸ், அப்ப நாங்க கிளம்புறோம். சரியா?”

“ம்ம்.. ஓகேடா”

“ஏதாவது தேவைன்னா எனக்கு ஃபோன் பண்ணும்மா. சரியா? நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. எல்லாம் சரியா வந்துரும். நாங்க கதவைப் பூட்டிட்டு போறோம். இங்கே உள்ளே ஒரு சாவி இருக்குல்ல”

“சரிப்பா, நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்குறேன்”

இருவரும் கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினர். 

அதே அவிநாஷ் அபார்ட்மெண்ட்டின் பதினைந்தாம் எண் வீடு தான் பார்த்திபனின் வீடு. 

ஷைலஜா இருக்கும் அதே ‘C’ பிளாக்கில் அதே வரிசையில் மூன்று வீடு தள்ளி இருக்கிறது. 

பார்த்திபன்.. வயது ஐம்பது. மனைவியை இழந்தவர். மகன் வியாஷன். மகள் மானசா என்று மூன்று பேர் மட்டும் இருக்கின்றனர் அந்த வீட்டில். 

ஷைலஜா அந்த வீட்டிற்கு வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் பார்த்திபன், தன் குடும்பத்துடன் இங்கு வந்தார். 

பார்த்திபன் ஒரு ஆடிட்டர். நிறைய கிளையண்ட்ஸ் இருந்தனர் முதலில் அவருக்கு. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் முதுகுத் தண்டுவடத்தில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக, தன் வேலையை மிகவுமே குறைத்துக் கொண்டு விட்டார் பார்த்திபன். 

மகன் வியாஷனுக்கும் மகள் மானசாவுக்கும், பார்த்திபன் தந்தை மட்டுமல்ல. தாயும் அவராகவே இருந்தார். இருவருக்கும் ஒரு நல்ல நண்பனாகவும் இருந்தார். 

இருவரும் அனைத்து விஷயங்களையும் தன் தந்தையிடம் கூறுவார்கள். 

மானசாவுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கூட அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார் பார்த்திபன். 

அவளுக்கு அம்மா இருந்தால் எவ்வளவு ஆதரவும் அன்பும் கிடைக்குமோ, அதை விடப் பன்மடங்கு அன்பையும் ஆதரவையும் அவளுக்குக் கொடுப்பார் பார்த்திபன். 

தனக்கு அம்மா இல்லையே என்கிற ஒரு ஏக்கமே வராத அளவுக்கு இருவரையும் பார்த்துப் பார்த்துக் கவனிப்பார். 

சில சமயங்களில் அவருடைய அன்பில் இருவரும் நெகிழ்ந்து விடுவார்கள். தந்தையையே பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, தன் தங்கையை அவ்வளவு தாங்குவான் வியாஷன். 

மற்ற வீடுகளில் இருக்கும் கேலி, கிண்டல் பேச்சு, சண்டை, சச்சரவு என்று எல்லாமே அவர்களுக்குள்ளும் தவறாமல் இருக்கத்தான் செய்யும். 

ஆனால் அதற்கு மேல் பாசமும் அன்பும் தான் மேலோங்கி நிற்கும் அங்கு. 

வார இறுதி நாட்களில் மூவரும் சேர்ந்து பாட்மிண்டன் விளையாட கீழே வளாகத்தின் உள்ளே இருக்கும் மைதானத்திற்குச் சென்று விடுவார்கள். 

வளாகத்தில் மற்ற வீடுகளில் இருப்பவர்களும் அந்நேரத்தில் வருவார்கள். அனைவரும் சேர்ந்து விடுவார்கள். விளையாட்டு தூள் பறக்கும் அங்கு. 

அந்த மாலை நேரத்தில், அந்த இரு நாட்களும் வளாகத்தில் எல்லா பக்கமும் கூட்டம் இருக்கும்.

ஒரு பக்கமாக இருந்தது அந்த சிறிய பிள்ளையார் கோவில். சாம்பிராணி புகையும் ஊதுபத்தி மணமும் கோவிலின் மணியடிக்கும் சத்தம் என்று எல்லாமே சேர்ந்து, ஒரு தெய்வீக உணர்வைத் தர, கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று யோசிக்காதவர்கள் கூட அவர்களையும் அறியாமல் உள்ளே நுழைந்தனர். 

அந்த கோவிலுக்கென்று நியமனம் செய்யப்பட்டிருந்த அர்ச்சகர், மக்கள் வர வர தீபாராதனை காட்டியவாறு இருந்தார். 

கோவிலைத் தாண்டித் தான் விளையாட்டு மைதானத்திற்குச் செல்ல வேண்டும். பார்த்திபனும் வியாஷனும் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை சேவித்து விட்டு, மைதானத்திற்குச் சென்றனர். 

வழியில் நீச்சல் குளம் வந்தது. அங்கும் சில இளம் பெண்கள், ஆண்கள் என்று நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தனர். 

மற்றொரு பக்கம் இருந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்த இளம் தாய்மார்கள், தாத்தா பாட்டிகள் என்று அவரவர் வயதை ஒத்தவர்கள் கூடிக் கூடி அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். 

நடைப்பயிற்சி செய்பவர்கள் வேகமாக நடந்த வண்ணம் இருந்தனர். இப்படி வழி நெடுக அனைத்தையும் வேடிக்கை பார்த்தவாறு, ஏற்கனவே பழக்கம் உள்ளவர்களிடம் கையாட்டிக் காட்டியவாறு நடந்து சென்றனர் இருவரும். 

விளையாட்டு மைதானத்தில் இவர்களின் வருகைக்காகவே காத்திருத்தவர்கள், இருவரையும் கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

அனைவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுத்துத் தொடர்ந்தனர். ஒன்றரை மணி நேரம் ஓடிய பிறகு வியாஷன், தன் தந்தையிடம் கூறி விட்டு, வெளியே மருந்து கடைக்குச் சென்று, தங்கைக்குத் தேவையான மருந்தை வாங்கிக் கொண்டு திரும்பினான். 

இருவரும் வீட்டிற்கு வரும் போது, அப்போது தான் எழுந்து முகம் கழுவி வெளியே வந்திருந்தாள் மானசா. 

“என்னம்மா,  ஸ்டமக் பெயின் இப்ப எப்படி இருக்கு.. பரவாயில்லையா?” கேட்டார் பார்த்திபன். 

“இப்ப கொஞ்சம் பரவாயில்லேப்பா. தூங்கி எழுந்தப்புறம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு”

“ம்ம்..”

“இந்தா மானஸ் டேப்லட். உள்ளே வச்சிரவா உன் ட்ரால?”

“சரிண்ணா வை”

ஒன்றை மட்டும் அவள் கையில் கொடுத்து விட்டு மற்றதை எடுத்து உள்ளே கொண்டு சென்று வைத்தான் வியாஷன். 

“இன்னைக்கு நைட்டுக்கு தோசை ஊத்திரவாப்பா? சட்னியும் இருக்கும்” கேட்டவாறே எழுந்தாள் மானசா.

“ஏய் நீ உட்காரு பேசாம. நான் பண்றேன் இன்னைக்கு” கூறி விட்டுச் சமையலறையை நோக்கிச் சென்றான் வியாஷன்.

“ஆமாண்டா மானசா. நானும் வியாஷனும் பாத்துக்குறோம். இன்னைக்கு மட்டும் இல்ல, நாளைக்கு ஃபுல் டேயும் உனக்கு ரெஸ்ட் தான். நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குறோம். சரியா?”

“ஆமாடி, தயவு செஞ்சு ரெண்டு நாள் மட்டும் எங்களுக்கு உன் கிட்ட இருந்து விடுதலை குடேன். நாங்க கொஞ்சம் நல்லா ருசியா சாப்பிட்டுக்கிறோமே ப்ளீஸ்!”

தங்கையின் முன்னே வந்து நின்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சிய குரலில் கூறினான் வியாஷன். 

“டேய்.. உன்னை.. இரு வர்றேன்” என்று எழுந்து ஓட முயன்றவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே மீண்டும் உட்கார்ந்தாள்.

“அப்பா.. பாருங்கப்பா இவன. இவன் பேசுறதப் பாருங்க. நான் செய்றது அவ்வளவு வொர்ஸ்டாவா இருக்கு? உங்களுக்குத் தண்டனை கொடுக்கிற மாதிரியாப்பா இருக்கு?”

சிரித்துக் கொண்டே மகளருகே வந்தார் பார்த்திபன். 

“அவன் சும்மா சொல்றாண்டா. உன்னைக் கலாய்க்கிறான் விடு. என் தங்கம் செய்றது தேவாமிர்தம் மாதிரியில்ல இருக்கும். நீ நல்லா செய்றேன்னு உன் மேலே அவனுக்கு பொறாமை. விடு”

தன் முகத்தை மகன் இருந்த பக்கம் கையை வைத்து மறைத்தவாறு, மகளிடம் கண்ணடித்துக் காண்பித்தார். 

“ம்ம்.. அப்படிச் சொல்லுங்க. என் செல்ல அப்பா!” என்று அவருடைய கைகளில் முத்தம் தந்தாள். 

“அப்பா.. பாத்தீங்களா? என்ன இருந்தாலும் உங்களுக்கு உங்க பொண்ணு மேலே தான் பிரியம் அதிகம். என் மேலே இல்ல”

“டேய் டேய்.. ஏண்டா நீ?”

“ப்பா.. சும்மா கல்யாச்சேன்பா”

“நல்லா கலாய்ச்சே போ”

அதற்குள் மானசா, தன் அண்ணனைப் பார்த்து, நாக்கைத் துருத்திக் காண்பிக்க, “அடி போடி” என்று அவனும் பதிலுக்கு நாக்கைத் துருத்திக் காண்பித்தான். 

“ம்ம்.. ஓகே ஓகே.. கம் டு தி மேட்டர் யா! டின்னர் என்ன பண்ணட்டும்? ஏய்.. சொல்லுடி, உனக்கு என்ன வேணும்?”

“தோசையே போதும்டா அண்ணா. இப்ப எந்த வேலையும் இழுத்துப் போட்டுக்காதே”

“ஆமா பெரிய வேலை.. இழுத்துப் போட்டுக்குறாங்க. அப்பா சொல்லுங்க என்ன செய்யலாம்?”

“மானசா சொல்ற மாதிரி தோசையே போதும் வியாஷ்”

“அதெல்லாம் இல்லேப்பா.. இன்னைக்கு வேற ஏதாவது பண்ணலாம். இவளுக்கு சப்பாத்தி குருமான்னா ரொம்ப பிடிக்கும்பா. அதையே செய்றேன். நீங்களும் உட்காருங்க பேசாம. நான் செய்றேன்”

“சரிடா.. நான் வெங்காயம் தக்காளி மட்டும் வெட்டித் தர்றேன். தள்ளு” 

ஆனால் தந்தையை எந்த வேலையும் செய்ய விடாமல் தானே செய்தான் வியாஷன். அடுத்த ஒரு மணி நேரம் முடிவதற்கு முன்பே அனைத்தையும்  தயார் செய்து மேஜையில் கொண்டு வந்து அடுக்கினான். 

அண்ணனும் தங்கையும் சண்டை போட்டுக் கொண்ட அடுத்த நொடியே, தன் தங்கைக்குப் பிடித்தமான உணவைத் தயாரிக்க ஆரம்பித்த மகனையும், அவன் மேல் உயிரையே வைத்திருந்த தன் மகளையும் அன்புடன் பார்த்தவாறே சப்பாத்தியைச் சாப்பிட்டார் பார்த்திபன். 

தனது உலகமாகவே நினைத்திருக்கும் மகனும் மகளும் இன்னும் எத்தனை நாட்கள் கூடவே வருவார்கள்? அவரவர்க்கென்று குடும்பம், குழந்தை என்று ஆகி விட்டால், அதன் பிறகு தன் நிலைமை? 

யோசித்துக் கொண்டு இருந்தார் பார்த்திபன். மகனும் மகளும் திருமண வயதை அடைந்ததில் இருந்து, தன் மனதிற்குள் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இந்தப் பயம் அப்போதும் அவரையும் அறியாமல் எட்டிப் பார்த்தது.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஒரு பயம் வந்து மனதை ஏன் கலங்கடிக்க வைக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை அவருக்கு. 

அந்தப் பயத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்றும் பார்த்திபனுக்குத் தெரியவில்லை பாவம்! 

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!