Stories that touch hearts

Home  /  11. பூங்கோதை (மீண்டும் இசைத்த ராகம்)  /  Chapter 4

CHAPTER 4

இசை – 4

By poongothai · November 21, 2026

0

பத்தாவது மாடியிலிருந்து லிஃப்ட்டில் ஏறி, தனது பிளாட் அமைந்திருந்த மூன்றாவது தளத்தில் இறங்கியவன், அமைதியான அந்த இரவு வேளையில், நடைபாதையின் வளைவில் அவன் மெல்லத் திரும்ப எதிர்பார்த்திராத வகையில் ஒரு சிறுவன் வேகமாகக் குறுக்கே ஓடிவந்தான்.

திடீரென அந்தச் சிறுவனின் கால்கள் மதுவின் கால்களில் தட்டி இடற, நிலைதடுமாறி அவன் கீழே விழப் போனான்.

“அய்யோ!” என்று சிறுவனின் பிஞ்சுக் குரல் பயத்தில் அலற, நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்ட மது, தன் இரு கைகளையும் நீட்டி அந்தச் சிறுவனை லாவகமாகப் பற்றிப் பிடித்துத் தூக்கினான்.

சிறுவனும் கீழே விழாமல் மதுவின் கரங்களின் பிடியில் தப்பித்தான். பயத்தில் வேகமாகக் அடித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் இதயத் துடிப்பை மதுவால் உணர முடிந்தது.

“ஹேய் குட்டி… சேஃப், சேஃப்! பயப்படாதே…” என்று மது கனிவான குரலில் ஆறுதல் சொல்லியபடியே அவனது குட்டித் தோள்களைப் பிடித்து நிமிர்த்திப் பார்த்தான்.

வெளிச்சத்தில் அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்த மதுவிற்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வு பொங்கியது. பளிங்கு போன்ற கண்கள், பயத்தில் துடிக்கும் உதடுகள்… வேறு யாருமல்ல, பூங்கோதையின் ஒரே உலகமான ஆதிரன்!

தான் யாரைப் பிடித்து நிறுத்தியிருக்கிறோம் என்பது மதுவுக்குத் தெரியவில்லை; ஆனால், அந்தச் சிறுவனின் கலையான முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே மதுவின் மனதில் சொல்லத் தெரியாத ஒரு பாசமும் ஈர்ப்பும் சட்டென்று தொற்றிக்கொண்டது.

“பார்த்து ஓடக் கூடாது செல்லம்… அடிபட்டிருந்தா என்னாகிறது?” என்று மது மிகவும் அன்போடு அவனது சட்டையைச் சரிசெய்து கேட்க, ஆதிரன் மெதுவாகத் தன் பெரிய கண்களை விரித்து, “தேங்க்ஸ் அங்கிள்…” என்று மெல்லிய குரலில் சொல்லிய பிஞ்சு முகத்தில் பயம் விலகி, ஒருவித சுட்டித்தனம் குடியேறியிருந்தது.

“ஹேய் குட்டி! உன் பேர் என்ன?” என்று மது மிகவும் வாஞ்சையோடு, அவனது கன்னத்தை லேசாகத் தொட்டபடி கீழே இறக்கி விட்டபடி கேட்டான்.

அவனைக் கூர்ந்து பார்த்த அந்தச் சிறுவன், தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, “ஹலோ அங்கிள்! நான் ஒன்னும் குட்டி இல்லை… ஐ ஆம் ஆதிரன்! 4 இயர்ஸ் ஓல்டு… எல்-கே.ஜி ‘ஏ’ செக்ஷன்!” என்று மழலை மொழியில் தெளிவாக, பெரிய மனித தோரணையில் தன் விவரங்களை வரிசையாகக் கூறினான்.

அந்தப் பிஞ்சு மொழியையும், அவன் காட்டிய பாவனையையும் பார்த்த மதுவுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சத்தமாகச் சிரித்தவன், “யப்பா! பெரிய படிப்புதான் போ!” என்று செல்லமாகக் கலாய்த்தான்.

பிறகு, அவனது உயரத்திற்குத் தன் முழங்காலை மடித்துக் கீழே குனிந்த மது, தன் வலது கையை நீட்டி, “ஹாய் ஆதிரன்… ஐ ஆம் மதுசூதனன்!” என்று புன்னகையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஆதிரனும் சிறிதும் தயக்கமின்றித் தன் குட்டி கரத்தை நீட்டி, மதுவின் கையைக் குலுக்கி, “க்ளாட் டு மீட் யூ, அங்கிள்!” என்று ஆங்கிலத்தில் அழகாகக் கூறிவிட்டு சிரித்தவன், மறுநொடியே, “ஐயோ! அம்மா என்னை தேடுவாங்க…” என்று திடீரென ஞாபகம் வந்தவனாக, வந்த வழியிலேயே தன் குட்டி பாதங்களால் துள்ளிக்குதித்து ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனனின் மனதில், அறியாத ஒரு மென்மை பரவியது. யாரோ ஒரு தெரியாத சிறுவன், ஆனால் அவனது அந்த ஒற்றைப் புன்னகையும் பேச்சும் மதுவின் நெஞ்சில் ஆழமான ஒரு ஈர்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அமைதியாகத் தன் பிளாட் கதவைத் திறந்த மது, “ஆதிரன்… நல்ல பேரு!” என்று மனதிற்குள் முணுமுணுத்தபடியே உள்ளே நுழைந்தான்.

அறைக்குள் நுழைந்து, உடனே ஒரு குளியலைப் போட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தான். நெடுந்தூரப் பயணம், புதிதாக மாறிய சூழல் என அனைத்தும் சேர்ந்து உடலுக்குக் களைப்பைக் கொடுத்திருந்தாலும், புது இடம் என்பதால் அவனுக்கு அவ்வளவாகத் தூக்கம் வரவில்லை. மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய, நள்ளிரவை தாண்டிய வேளையில்தான் அவனது கண்கள் லேசாகச் சொக்கின.

காலை 8 மணி அளவில், வீட்டின் காலிங் பெல் சத்தம் இடைவிடாமல் ஒலித்தது. அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவன், கதவைத் திறந்தான். வாசலில் சிரித்த முகத்தோடு கவின் நின்றிருந்தான்; அவனது கையில் ஆவி பறக்கும் காபி அடங்கிய பிளாஸ்க் இருந்தது.

“என்னடா மது… புது இடத்துல தூக்கம் வரலையா? மூஞ்சிய பார்த்தாலே தெரியுது!” என்று கலாய்த்தபடி உள்ளே வந்த கவின், காபியை அவனிடம் நீட்டினான்.

“ஆமாடா… புது இடத்தில் எனக்கு டக்கெனு தூக்கம் வராதுன்னு உனக்குத் தெரியாதா?” என்று சோம்பல் முறித்தபடியே காபியை வாங்கி குடித்தவனுக்கு ரோசி வைத்த காபியின் சுவை நாவில் அமிர்தமாக இறங்கியது.

காபியைக் குடித்து முடித்ததும், “சரிடா, 11 மணிக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு… நான் போய் ரெடியாகுறேன்” என்று சொல்லிவிட்டுக் குளியலறைக்குச் சென்றான்.

அவன் குளித்து, நேர்த்தியான உடையில் தயாராகி வெளிய வந்தபோது, கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கவின் ஒரு 55 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். முகத்தில் தாயன்பும், கனிவான புன்னகையும் தவழ அந்தப் பெண்மணி நின்றிருந்தார்.

“மது… சமையலுக்கு ஆள் வேணும்னு கேட்டிருந்தாய்ல? ” இவங்க தான் என்று கவின் அறிமுகப்படுத்தினான்.

அந்தப் பெண்மணி தன் இரு கரங்களையும் கூப்பி, “வணக்கம் தம்பி… என் பேரு ராதா,” என்று பணிவோடு அறிமுகம் செய்து கொண்டார்.

‘ராதா…’

அந்தப் பெயரைக் கேட்ட கணத்தில் மதுசூதனனின் இதயம் ஒரு நொடி லேசாகக் கணத்தது.

‘ராதா… என்னைப் பெற்ற தாயின் பெயர்!’

அனாதை ஆசரமத்தின் பதிவேடுகளில் மட்டுமே தான் பார்த்த, தன் தாயின் அந்தப் பெயர் உணர்த்திய பாசம் அவனது மனதிற்குள் மெல்ல ஊடுருவியது. தந்தையும், தாயும் எங்கே என்றே அறியாமல் வளர்ந்த அவனுக்கு, ‘ராதா’ என்ற அந்த ஒற்றைச் சொல் எப்போதுமே ஒரு புனிதமான உணர்வைத் தரும்.

அந்தப் பெண்மணியை வெறும் சமையல்காரராகப் பார்க்காமல், தன் தாயின் பெயரைக் கொண்டவராகக் கண்ட மதுவின் முகத்தில் ஒரு கனிவான புன்னகை அரும்பியது.

“வணக்கம்மா… உங்க பேரு ரொம்ப நல்லாருக்கு. எனக்குக் காரம் கொஞ்சம் கம்மியா இருந்தா போதும்மா,” என்று மது மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் கூறினான்.

“சரிங்க தம்பி… உங்களுக்கு என்ன பிடிக்குமோ பார்த்துப் பார்த்துச் சமைச்சுடுறேன்,” என்று தாய்மை ததும்பும் குரலில் சொன்ன ராதா அம்மா, செத்த இருங்க தம்பி டிபன் பண்ணிடுறேன் என்றவாறு சமையலறை நோக்கிச் சென்றார்.

கவினும் ரோசியும் ஏற்கெனவே சமையலுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வைத்திருந்ததால் வேகமாக சேமியா கிச்சடி தேங்காய் சட்னி செய்தவர் தட்டில் எடுத்து வந்து மதுவிடம் நீட்டினார்.

தேங்க்யூ மா என்ற மதுவோ வேகமாக சாப்பிட்டு எடுழ்தவாறு தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்; மணி ஒன்பதரையை காட்டியது. இது தான் என் போன் நம்பர், ஏதாச்சும்னா எனக்கு கால் பண்ணுங்கம்மா என்க, அச்சோ என்கிட்ட போன் இல்லே தம்பி என்றார்.

இவ்வளவு தானே…வாங்கிட்டா போச்சுனு மது சொல்ல, எனக்கு எதுக்கு தம்பி போனெல்லாம், நான் யார் கூட பேசப்போறேனென்று ராதா சொல்ல, ஒரு அவசரத்துக்கு வேண்டுங்கம்மா.

சில நேரங்களில் நான் வர லேட் ஆனா விஷயத்தை சொல்லனுமே அதற்கு தான் என்றபடி வீட்டை விட்டு வெளியேறிய மதுசூதனன், தன் காரில் ஏறிச் சிறுசேரி சிப்காட் ஐடி பூங்காவை நோக்கிச் தனது பயணத்தைத் தொடங்கினான். காலை நேரத்து ஓஎம்ஆர் சாலையின் பரபரப்பைக் கடந்தபடி, பிரம்மாண்டமான அந்த ஐடி பூங்காவின் நுழைவாயிலைக் கடந்து தன் கம்பெனி வளாகத்திற்குள் காரை நிறுத்தினான்.

வரவேற்பறையிலேயே கம்பெனியின் உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகக் குழுவினர் திரண்டு நின்றிருந்தனர். பெங்களூர் கிளையில் பல சாதனை படைத்து, இப்போது இந்தச் சென்னை கிளைக்குச் சிஈஓ-வாகப் பொறுப்பேற்க வந்திருக்கும் அந்தத் இளம் தலைவனை வரவேற்கத் துடிப்புடன் காத்திருந்தனர்.

கார் கதவைத் திறந்து கம்பீரமாக இறங்கிய மதுவைக் கண்டதும்,அவனுக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்பெனியின் எச்.ஆர் தலைமை அதிகாரி பூங்கொத்து கொடுத்து அவனை அன்போடு வரவேற்க, புன்னகையுடனும் கனிவான கம்பீரத்துடனும் அதை ஏற்றுக்கொண்டான் மது.

“வெல்கம் சார்! ஆபீஸ் முழுவதும் உங்க வருகைக்காக ரொம்பவே ஆர்வமா காத்துட்டு இருக்காங்க,” என்று அதிகாரிகள் கூற, “தேங்க்ஸ் எவரிஒன்!” என்றபடி தனது பிரத்யேகச் சிஈஓ கேபினுக்குச் சென்றான்.

அங்கே கம்பெனியின் அதிகாரப்பூர்வமான சிஈஓ பொறுப்பேற்புப் படிவங்களில் தனது கையொப்பமிட்ட மதுசூதனன் அதன்பின், தனது பிஏ-வை அழைத்து, “பதினோரு மணிக்குக் கான்ஃபெரன்ஸ் ஹால்ல மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணிருந்தோம்ல? எல்லாத் துறை தலைவர்களும், முக்கியப் புராஜெக்ட் டீம்களும் அங்கே இருக்கணும்,” என்று உத்தரவிட்டான்.

ஒருவழியாக பூங்கோதை அவளது கம்பெனி வாசலை அடைந்து, வருகைப் பதிவேட்டில் தன் ஐடி கார்டைச் ஸ்வைப் செய்யும்போது பஞ்ச் மிஷினில் நேரம் சரியாகக் காலை ஒன்பது மணியைக் காட்டியது.

“ஹப்பாடா..இன்னைக்கு லேட் பஞ்ச் விழுந்து ஆப்சென்ட் ஆகாம தப்பிச்சோம்டா சாமி!” என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டபடி உள்ளே ஓடினாள்.

தன் இருக்கையை நோக்கிச் சென்று பையை வைத்துவிட்டு உட்கார்ந்தவளை, சுற்றிலும் இருந்த அவளது டீம் மெட்கள் வழக்கமான கலாட்டாவுடன் வரவேற்றார்கள்.

“குட் மார்னிங் பிளவர்!” என்றான் ஒருவன்.

“குட் மார்னிங் பூ…” என்று இன்முகத்துடன் குரல் கொடுத்தாள் மற்றொரு தோழி.

“நமஸ்தே சிசி!” என்று இன்னொருவன் சிரிக்க,

பூங்கோதை தன் இரு கரங்களையும் குவித்து, நாடகத்தனமான பாவனையோடு, “வணக்கம், வந்தனம், நமஸ்காரம், நமஸ்தே!” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுத் தன் சிஸ்டத்தை ஆன் செய்தாள். ஸ்கிரீன் பூட் ஆகும் இடைவெளியில், வழக்கமான தினசரி வேலைகளில் மூழ்கத் தொடங்கினாள்.

சரியாகக் காலை பத்து மணி.

“ஹாய் காய்ஸ்!” என்று கம்பீரமாக அலைபாயும் குரலில் வாழ்த்துத் தெரிவித்தபடி மேனேஜர் கார்த்திக் அவர்களின் ஃப்ளோருக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் டீமில் இருந்த அனைவரும் ஒரே குரலில், “யெஸ் சார்!” என்று கோரசாகச் சொல்ல, கார்த்திக் பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டே, “அடச்சை… என்னப்பா இது, தினமும் இதே கோரஸ் தானா? கொஞ்சம் மாத்தி யோசிங்கடா!” என்று சலித்துக்கொள்வது போலச் சொல்லிச் சிரித்தான்.

“சார், நீங்க சொல்ற அந்த ‘ஹாய் காய்ஸ்’ டைமிங் மாறாதப்போ, நாங்க சொல்ற ‘யெஸ்’ மட்டும் எப்படி சார் மாறும்?” என்று ரமேஷ் கலாய்க்க, அந்த இடமே கலகலப்பானது.

“சரி சரி, மேட்டருக்கு வர்றேன்,” என்றவன் ” நம்ம ஆபீஸ்க்கு ‘சிஈஓ புதுசாக வந்தாச்சு… 11 மணிக்கு மீட்டிங்’ இருக்கு. சோ, எல்லாரும் கொஞ்சம் பிரிப்பேர்டா இருங்க!” என்று அந்த முக்கிய அறிவிப்பைச் சொல்லிவிட்டுத் தன் கேபினை நோக்கி நகர்ந்தான்.

கடிகாரத்தின் முள் சரியாகக் காலை 11 மணியைத் தொட்டது.

பிரமாண்டமான அந்த கான்ஃபெரன்ஸ் ஹாலில் அனைத்துத் துறை மேனேஜர்களும், டீம் லீட்களும் அசெம்பிள் ஆகியிருந்தனர். பூங்கோதையின் டீம் மேனேஜர் கார்த்திக், புதிய சீனியர் டீம் லீடான வேலன் மற்றும் பூங்கோதை உட்பட அந்தப் புராஜெக்ட்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.

திடீரென கான்ஃபெரன்ஸ் ஹாலின் கதவுகள் திறக்கப்பட, கம்பீரமான நடையோடு புதிய சிஈஓ மதுசூதனன் உள்ளே நுழைந்தான்!

அவனைக் கண்டதும் ஹாலில் இருந்த அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர். மேஜை மீது தனது லேப்டாப்பை வைத்துவிட்டு, “ப்ளீஸ் பி சீட்டட் எவரிஒன்!” என்று கம்பீரமான குரலில் மது கூறினான்.

அவனது குரலைக் கேட்டதும், சிந்தனையில் ஆழ்ந்திருந்த பூங்கோதை இயல்பாக நிமிர்ந்து பார்த்தாள். எதிரே சிஈஓ நாற்காலியில் அமர்ந்திருந்த மதுசூதனனைக் கண்ட நொடியில், பூங்கோதையின் கண்கள் ஆச்சரியத்திலும் திகைப்பிலும் விரிந்தன!

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!