Stories that touch hearts

Home  /  14. ஹீரா நிலவன் (சக்தியின் சிவன்)  /  Chapter 3

CHAPTER 3

அத்தியாயம் – 3

By Heera Nilavan · November 20, 2026

0

குழந்தைகளை அழைத்துச் சென்று, ஆட்டோவில் அமர்ந்திருந்த தன் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அக்காவை சமாதானப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளே வந்தாள் அவள்.

அக்காவோ கணவனை விட கள்ளக்காதலனுக்கு கொடி பிடிக்க, அதிர்வு தான் அவளுக்கு. அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவள், ‘இத்தனை அசிங்கத்திற்கு பின் ஒருவன் தன் வாழ்க்கையில் மனைவியாய் ஏற்றுக்கொள்வானா?’ என்ற எண்ணத்தில் உதவி ஆய்வாளர் கேட்ட கேள்விக்கு, அவளும் அவரின் பதிலை எதிர்பார்த்து இருக்க, அங்கு இருந்தவர்களின் எண்ணத்திற்கு மாறாக, அவன் சொன்ன பதில் அங்கு அனைவரையும் உலுக்கி எடுத்தது.

உண்மையில் அச்சமயம் ஒரு பெண்ணாக, ‘என்ன இப்படி இருக்கிறான்?’ என்ற கோபமும் வந்தது அவளுக்கு. இன்னொரு புறம், ‘இப்படிப்பட்ட நல்லவனை விட்டுவிட்டு எதைத்தேடி செல்கிறாள் தன் அக்கா’ என்ற ஆதங்கமும் வந்தது. தற்பொழுது தன்னுடைய துன்பம் எல்லாம், அவன் முன் ஒன்றுமே இல்லை என்றானது அவளுக்கு.

“எப்பா சாமி! தியாகச் சுடரே. உனக்கு இதனால் யாரும் கோவில் எல்லாம் கட்டப்போறது இல்ல. என்னயா நீ இப்படி இருக்க? அந்தப் பொண்ணே அவ்வளவு தெளிவா சொல்லுறா… எனக்கு புருசன், பிள்ளைங்க வேண்டாம். அவன் தான் வேணும். அவனோடு தான் போவேன்னு அழுத்தமா சொல்லுறா. நீ என்னடானா… இதுக்கு உன்னை பாராட்டி யாரும் சிலை வைக்க மாட்டாங்க. அப்படியே பிள்ளைகளுக்காக தான் அப்படின்னா, வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. ஏன் இந்த அசிங்கத்தை எடுத்து திருப்பியும் மூஞ்சில பூசிக்க போறேன் நிக்கிற?” என்று ஆதங்கத்தில் கேட்டுவிட்டார்.

“என் குழந்தைகளுக்கு எங்க வாழ்க்கை ஒரு கெட்ட உதாரணமாக அமைஞ்சிடகூடாது சார். இப்போ உள்ள சொசைட்டியில, பிள்ளைகளை நல்லபடியா வளர்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கே தெரியும். இதையெல்லாம் தாண்டி, இப்படிப்பட்ட ஒரு அம்மாவுக்கு பிள்ளைங்களா பிறந்திருக்கோம் என்ற எண்ணம், என் பிள்ளைகளுக்கு வந்துச்சுன்னா, அது பின்னாடி காலத்துல ஏதோ ஒரு வகையில தப்பா அமையும் சார்.”

“குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது தெரியும் வயசு சார். ஒன்னு என் பையன் பொண்ணுங்களே இப்படித்தான் மனநிலைக்கு வருவான். அப்போ இவனால பல பெண்கள் பாதிக்கப்படலாம். இல்ல இவனே மனதளவில் பாதிக்கப்படலாம். மத்தவங்க பேசுறப்போ என் பொண்ணோட மனநிலை யோசித்துப் பாருங்க. அம்மா அப்படினாலே இப்படித்தான் முடிவு பண்ணிடுவா. எந்த பெண்களிடமும் ஒட்டவே மாட்டா. தன்னைத்தானே தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவா. எனக்கு என் பிள்ளைங்க நல்லா இருக்கணும் சார். அதுக்கு இவளை சரிசெய்து தான் வாழனும் என்றால் வாழ்ந்துக்கிறேன் சார்.” என்றவனுக்கு பிள்ளைகள் எதிர்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

“நான் இப்பவும் சொல்லுறேன் நந்தன். இவ உனக்கு தகுதியானவ கிடையாது. இங்க முதல் திருமணத்தில் தோற்றுப்போயி, இரண்டாம் திருமணத்தில் ஜெயிச்சவங்க தான் அதிகம். அவங்க வாழ்க்கை தான் நல்ல ஒரு புரிதலோட சுமூகமாக இருக்கும். நீ அதுக்கு பாருப்பா” என்றார் அவர்.

“சார் இப்ப உள்ள அனுபவம் எனக்கு ஒரு பாடம். இவளை தாண்டி இன்னொரு பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலுமே, இவ செஞ்ச மாதிரி அவள் செஞ்சிடுவா என்ற நினைப்பில், ஒவ்வொரு நேரமும் அவளை நான் குத்திக்கிட்டே இருப்பேன். அது என்னுடைய சுபாவம் கிடையாது. என்னதான் இருந்தாலும் அடிபட்ட மனசுல்ல சார். அது கொஞ்சம் ஆழமாக காயப்படுத்த தான் செய்யும். இவள் செஞ்சதுக்காக இன்னொரு பெண்ணை பழிதீர்த்தா அது தான் சார் பெரிய பாவம். அதுக்கு இவளோடு இருந்துடலாமே. இப்பவும் பிள்ளைங்களுக்குக்கு அம்மான்னு ஒருத்தியை கூட்டிட்டு வந்து, அந்தப் பொண்ண என் பிள்ளைகளால ஏத்துக்க வைக்க முடியும்‌.”

“ஆனால், எனக்கு மனைவியா வருபவள் என்னால சின்னதா கூட கஷ்டப்பட்டுடக் கூடாது சார். அதுக்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். அவளுக்கும் மனசு இருக்கும் சார். அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும். இவள் பண்ண துரோகத்துல, அந்தப் பொண்ண நான் எக்காரணம் கொண்டும் காயப்படுத்திடக் கூடாது. அந்த காரணத்துக்காக தான் இவளை கெஞ்சிட்டு இருக்கேன். இவள என்னோட வர சொல்லுங்க சார்” என்றான் அவன்.

“என்னையா நீ…” என்று உதவி ஆய்வாளர் சலிப்பாய் பார்க்க,

திடீரென்று அவன் யோகாவின் அருகில் வந்து கையெடுத்து கும்பிட்டு, “வந்துரு யோகா. இந்த உறவு எல்லாம் ஒரு குறிப்பிட்ட நாள், இல்ல மாதம் தான். அதன்பின் ஏதோ ஒரு வகையில் இந்த மாதிரி உறவுகள் பிரேக் ஆகிடும். நடுத்தெருவில் உன்னை விட்டுட்டு இன்னொரு பெண்ணை தேடிப் போனா என்ன பண்ணுவ? நீ நம்ம வீட்டிலேயே இரு யோகா” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

“அச்சோ மாமா… என்ன பண்ணுறீங்க?” என்று வாசலில் இருந்து வேகமாக உள்ளே வந்தவளைக் கண்டு, “நீ…நீ இன்னும் போகலையா? குழந்தைங்களை எங்க?” என்று கேட்டான்.

“பிள்ளைங்க ரெண்டு பேரும் வெளிய அப்பாவோட இருக்காங்க. இங்க நடக்கிறத அப்பா பாத்தா தாங்கிக்க மாட்டார். அதனாலதான் நான் மட்டும் வந்தேன். நீங்க ஏன் மாமா இவ்ளோ இறங்கிப் போறீங்க? சார் சொன்ன மாதிரி, நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா. இவள் வேண்டாம். ரெண்டு பிள்ளைகளுக்கும் அம்மாவா இருக்கிற தகுதி இவளுக்கு சுத்தமா கிடையாது. அப்படியே நீங்க கூட்டிட்டு போனாலும், இவன் இல்லன்னா, இன்னொருத்தன்னு போக மாட்டானு என்ன நிச்சயம்? பக்கத்திலேயே உட்கார்ந்து காவல் காத்துக்கொண்டே இருப்பீங்களா? ஆண் பிள்ளைகளிடம், வேலை செய்து பொண்டாட்டி, பிள்ளையைக் காப்பாத்துறது புருஷ லட்சணம் என்று சொல்லி வளர்த்திருக்காங்க.”

“ஆனா அந்த வேலைனால தான், நான் தப்பு செய்தேன்னு ஒருத்தி சொல்றானா, அவ எவ்ளோ மட்டமான ஒருத்தியா இருக்கணும், நீங்க பிள்ளைங்கள தனியாவே வளத்துக்கோங்க மாமா. இந்த சமுதாயம் வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். அதை கணக்கில் எடுக்காமல் நீங்க உங்க வாழ்க்கை பாருங்க. இவகிட்ட நீங்க கெஞ்சுறது எனக்கே பிடிக்கல” என்று சொன்னாள் அப்பெண்.

“இல்ல ஈ…ஈஸ்…”

“பெயர்ல கூட யோகேஸ்வரி என்ற பேரோட இருக்கிற ஈஸ்வரிய உங்களுக்கு கூப்பிட வரல மாமா. இனி சக்தினே கூப்பிடுங்க. ஆனா, பெயருக்கே இவ்ளோ யோசிக்கிற நீங்க, எப்படி மாமா அவளை உங்க வீட்ல வச்சி, அவள் முகம் பார்த்துட்டு இருப்பீங்க? வேண்டாம் மாமா. துணை இருந்தா தான் வாழ்க்கையா என்ன? தனியா வாழலாம் மாமா. அப்படியே ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல உங்களுக்கு ஒரு துணை தேவைப்பட்டுச்சுன்னா, நீங்க தாராளமா கல்யாணம் பண்ணிக்கோங்க. பிள்ளைங்கள நான் பாத்துக்குறேன் மாமா” என்றாள் அவள்.

“பிள்ளைகளை மட்டும் பார்த்துக்கிறியா? இல்ல பிள்ளைகளுடைய அப்பனையும் சேர்த்து பார்த்துக்கிறியா? சொல்லு என் தங்கச்சி” என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டாள் யோகேஸ்வரி.

“எப்பவும் நான் சாக்கடை தான்னு நீ நிரூபிக்கிற அக்கா. அக்காவா… ச்சேச்சே… உன்னை அக்கான்னு கூப்பிடவே அசிங்கப்படனும். அப்படி ஒரு இழிபிறவி நீ.” பார்வையாலேயே தன் சகோதரியை அருவருப்பாய் பார்க்க,

“யேய் என்னடி?” என்று யோகா எகிற,

“பின்ன… நீ கள்ளக்காதல் எல்லாம் வச்சிருக்க. என் வார்த்தைக்கு உன்னிடம் மதிப்பு சுத்தமா இல்லன்னு தெரியும். சோ, யோகா… சாக்கடையில கல்ல விட்டு எறிஞ்சா, நம்ம மேல தெரிக்கிறது சாக்கடையாகத்தான் இருக்கும். அதனால நீ பேசுற எதுவும் என்னை பாதிக்காது. இதுவரை உன் தங்கச்சியா இருந்ததுக்கு… இல்லை பிறந்ததுக்கு நான் அசிங்கப்படுறேன். இந்த இடத்தோட நம்மளுடைய உறவும் முடிஞ்சிடுச்சு. எந்த காலத்திலும் அப்பா, தங்கச்சின்னு எங்களை தேடி வராத.” என்றாள் அழுத்தமாக.

“ஓ… நாங்க சாக்கடை. நீங்க சந்தனமா? புருஷன் சுகம் அறிஞ்சவ, புருஷன் செத்ததும் சும்மாவா இருப்ப. நீ எந்தச் சாக்கடையில் கிடக்கியோ யாருக்குத் தெரி…” முடிக்கும் முன் ‘ஆ’ என அலறினாள் தங்கையின் பளாரென்ற அடியில்.

“இனிமேல் என்னைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா சொன்ன கொன்னுடுவேன். எல்லாரையும் உன்னைப்போல் நினைச்சிட்டியா? மானங்கெட்டு வாழ நான் ஒன்னும் யோகேஸ்வரி இல்ல. சக்தி! சக்தீஸ்வரி நான். என்னை நெருங்க எந்தக் கொம்பனாலயும் முடியாது.” என்று திட்டி விட்டு, ஏதாவது கேட்பானா என்று தன் மாமனைப் பார்க்க,

அவன் இப்பொழுதும் தன் மனைவி வந்து விடமாட்டாளா என்ற பார்வை பார்த்து நின்றான்.

கோபம் தலைக்கேற, “மாமா மனுஷனுக்கு மானம், சூடு, சொரணை போன்ற உணர்ச்சிகள் இருப்பதினால் தான், நம்மளுக்கு ஆறறிவு இருக்கு. இப்படி நீங்க நடந்துக்கிட்டா, உங்கள நீங்களே ஒரு கட்டத்துல மன்னிக்க மாட்டீங்க. அவ எக்கேடோ கெட்டு போகட்டும். நீங்க வாங்க. பிள்ளைகளை பார்க்கத்தானே ஆள் வேணும். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் பிள்ளைங்களோட என் வீட்டுக்கு போறேன். பிள்ளைங்க என் பொறுப்பு” என்று வெளியே சென்றாள் பெண்.

“ப்பா… ரொம்ப காரமா இருக்காங்க. பட் மிஸ்டர் நந்தன், உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த சக்தி தான். நீங்க கல்யாணம் முடிக்கிறப்போ தப்பான ஆளை சூஸ் பண்ணிட்டீங்க. சரியான ஆள் இவங்க தான். சிவனந்தன், சக்தீஸ்வரி பெயர் பொருத்தம் கூட ரொம்ப அழகா இருக்கு. சக்தியின் சிவன். சிவனின் பாதி சக்தி” என்று உதவி ஆய்வாளர் ரசித்து சொல்ல…

 “தப்பா பேசாதீங்க சார். சக்தி ரொம்ப நல்ல பொண்ணு. ஏன் ரொம்ப அமைதியானவ. இங்க நடந்ததைப் பொறுக்காம கொஞ்சம் சத்தமா பேசிட்டா. அதுக்காக…”

“சத்தமா பேசல நந்தன். சத்தியத்தை பேசிட்டு போறாங்க.”

“உண்மைதான் சார். இல்லைன்னு சொல்லவே இல்ல. அவள் சொல்லிட்டு போனதை கேட்டீங்க தானே ஒருவனுக்கு ஒருத்தி. அதுதான் சார் எனக்கும். இவ தப்பா போகலாம் அதுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது சார். இவளை வேண்டாம் என்று நான் ஒதுக்கிட்டு போகலாம் சார். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. என்ன கொஞ்ச நாள் பேசுவாங்க. ஆனா, யோகாவின் பிற்கால நிலையை யோசிச்சு பாருங்க சார். அவளுக்கு இப்போ அதுதான் நல்லது என்று தோணும். ஆனா, நடப்புன்னு ஒன்னு இருக்கே சார். அப்போ இவ எங்கோ ஒரு இடத்துல கஷ்டப்பட்டு இருப்பா. அந்த கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுன்னு தான் இப்பவே என்னோட வர சொல்றேன்.”

“இப்பவும் அவளுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. கடைசி முறையாக அவளை யோசிச்சு சொல்ல சொல்லுங்க சார். இப்ப வந்தா கூட அவளை நான் மனசார ஏத்துக்கிறேன். ஆனா, இதுக்கு அப்புறம் அவனோட போயிட்டு, என்கிட்ட வரணும் நெனச்சா, அவளுடைய கனவுல கூட நடக்காது சார். என் வாழ்க்கைகுள்ள அவளுக்கான இடம் எதுன்னு, இப்ப அவள் தீர்மானித்தே ஆகணும். சக்தி சொன்ன மாதிரி கால்ல எல்லாம் விழலை சார். கடைசி வாய்ப்பு அவளுக்கு கொடுத்து தான் பார்க்கிறேனே” என்று அவன் யோகாவை நேருக்கு நேர் பார்த்தான்.

சில நொடி தடுமாற்றம் அவளிடம் எழுந்தது என்னவோ உண்மை. அதே நேரம் சஞ்சய் அவளின் கையை சற்று அழுத்தி பிடிக்க, சில நொடி தடுமாற்றம் மறைந்து, “இல்ல சார். முடிவு பண்ணியது பணணியது தான். எனக்கு இவர் வேண்டாம்” என்றாள் அவள்.

“உன்னை மட்டுமே யோசிக்கிறியே. கைக்குழந்தையோட நிக்கிற அந்தப் பொண்ண ஒரு நிமிஷம் நீ யோசித்து பார்த்தியா? அவளோட வாழ்க்கையில விளையாடுறமே என்று கொஞ்சம் கூட உனக்கு குற்றவுணர்ச்சி இல்லையா? நீ எல்லாம் பெண் பிறவிக்கு அவமானம்.” என்று சஞ்சய் மனைவியிடம் திரும்பியவர், “பேப்பர்ல சைன் பண்ணிட்டு, குழந்தையை தூக்கிட்டு கிளம்புமா” என்று அவளை அனுப்பினார்.

“நீங்க என்னப்பா?” என்று சிவனந்தனிடம் கேட்க,

“எங்க கையெழுத்து போடணுமோ போட்டுட்டு கிளம்புறேன் சார். பின்னாடி வந்து என் பிள்ளைகள் வேணும்னு கேட்கக்கூடாது. அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கித்தாங்க. முடிஞ்சா எனக்கு நீங்களே விவாகரத்து வாங்கிக் குடுங்க சார். இன்னொரு முறை இவளை நான் பார்க்கிறது என்றால், அது எங்க விவாகம் ரத்து செய்யும் இடத்தில் மட்டுமே.” என்று அவர் சொன்ன அனைத்தையும் படித்து கையெழுத்திட்டு வெளியே சென்றான்.

வெளியே வாசல் வரை சென்றவனிடம் வேகமாக வந்த உதவி ஆய்வாளர், “பிரண்ட்லியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கங்க நந்தன். சக்திய கல்யாணம் பண்ணிக்கோங்க. உண்மையிலேயே உங்களுடைய ஃபியூச்சர் ரொம்ப நல்லா இருக்கும். கொள்கை அது இதுன்னு சொல்லி தனித்தனியாக வாழ்ந்துடாதீங்க. சேர்ந்து வாழுங்க. கண்டிப்பா சொர்க்கம் உங்களுக்கு இருக்கு” என்று உள்ளே சென்றார்.

அவனும் அதைப் பெரிதாக எண்ணாது வெளியே சென்று ஆட்டோவில் நெருங்குகையில், பிள்ளைகள் இருவரும் இருவரும் ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டனர்.

“அப்பா இனி நாங்க அம்மா கேட்க மாட்டோம். எங்களுக்கு அம்மா வேண்டாம். நீங்க எங்களை நினைத்து கவலைப்படாதீங்க. நாங்க உங்களை பார்த்துக்கிறோம் அப்பா” என்று இரண்டு குழந்தைகளும் சொல்ல,

அது யாரால் என்பது புரிந்தபோதும் சிறு புன்னகையுடன், இரு குழந்தைகளையும் ஒன்றாக தூக்கியவன் இருவருக்கும் முத்தமிட்டு, அவர்களிடமும் முத்தத்தைப் பெற்று, “நம்ம மூணு பேரும் தான் இனி.  வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கலாம்டா” என்று சொன்னான்.

“அப்ப சித்தி?” என்றான் நவீன்.

“சித்தி தாத்தாவோட போவாங்க.”

“தாத்தா வீட்டுக்கு போகலாம் அப்பா. இனிமே அம்மா வர மாட்டாங்க. நாம தாத்தா வீட்டுக்கு போகலாம். அங்க சித்தி இருப்பாங்க. இங்க தானே எல்லாரும் கேள்வி கேப்பாங்க சொன்னீங்க. நம்ம அங்க போகலாம்பா” என்றனர் குழந்தைகள்.

“அது தப்பு தங்கங்களா. நாம அங்க போகக்கூடாது. நம்ம யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாது. அவங்க… அவங்க வாழ்க்கை வாழட்டும். நாம நம்ம வாழ்க்கை பார்க்கலாம்” என்று சொன்னான் அவன்.

“ஆனா, எனக்கு சித்தி வேணுமே” என்றாள் குழந்தை.

“என்ன சக்தி இதெல்லாம்? நீ வந்து ஒரு அரை மணி நேரம் இருக்குமா? அதற்குள் என்ன பேசி தொலச்ச. திடீர்னு உன்னோட வரணும்னு சொல்றாங்க” என்று சற்றே கோபமாக கேட்டான்.

“அச்சோ இல்ல மாமா. நான் அக்கா பத்தி மட்டும் தான் புரிய வச்சேன். மத்தபடி வீட்டுக்கு வாங்கன்னு கூட நான் கூப்பிடல. அப்பாவ நல்லா பாத்துக்கோங்க சொன்னேன். வேற எதுவும் பண்ணல மாமா” என்றாள் சாந்தமான குரலில்.

‘திடீரென்று இதென்ன புது பிரச்சனை’ என்று தலையை கோதியவன், “இப்போதைக்கு நம்ம வீட்டுக்கு போகலாம். இன்னும் ரெண்டு நாள்ல வேற புது வீட்ல நம்ம குடி போறோம். சித்தி, தாத்தா வீட்டிக்கு லீவுக்கு கூட்டிட்டு போறேன். சரியா…” என்றான் பிள்ளைகளிடம்.

“இல்லப்பா சித்தி இருந்தா நல்லா இருக்கும். வேணும்னா சித்தி வீட்டு பக்கத்துலயே வீடு பாக்குறீங்களா? நாங்க சித்தி வேலை பார்க்கிற ஸ்கூல்ல போய் படிக்கிறோம். சித்தி எங்களை கூட்டிட்டு போவாங்க. கூட்டிட்டு வருவாங்க. நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டோம்பா. நீங்க உங்க வேலைய நிம்மதியா பாக்கலாம்” என்று நிற்க,

“அதெல்லாம் சரி வராது. நீங்க வாங்க” என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின் அருகே சென்றான்.

“அப்பா… சித்தி…” என்றான் நவீன்.

“சொன்னா சொன்னது தான். வாங்க போகலாம்” என்றவன் மாமனாரிடம் திரும்பி, “பத்திரமா போயிட்டு வாங்க மாமா.”

“சரி மருமகனே. நீங்க பிள்ளைகளை பாத்துக்கோங்க. நீங்க பார்த்துக்குவீங்க தெரியும். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால் ஒரு போன் பண்ணுங்க. நாங்க வரோம்” என்று சொன்னார்.

“இல்ல மாமா அதுக்கு அவசியம் இருக்காது. நான் பாத்துக்குறேன். கிளம்புறேன்” என்று வண்டியை எடுத்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!