Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 26

CHAPTER 26

மனசு – 26

By karuppiahrajesh70@gmail.com · November 18, 2026

0

​மதில் தாண்டுமா மனசு – 26​

ஆனந்தனும் அனுஷாவும் அன்று அருகிலிருந்த மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டனர்.​பரிசோதித்த மருத்துவர், “கரு உருவாகியிருப்பது உறுதியாகிவிட்டது. அடுத்த வாரம் வாருங்கள், ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிடலாம்” என்று புன்னகையுடன் கூறியவர், அனுஷாவிற்குத் தேவையான சத்து மாத்திரைகளை எழுதித் தந்தார். மருத்துவப் பரிசோதனை அட்டையை வாங்கிக்கொண்டு, அளவில்லா சந்தோஷத்துடன் இருவரும் வெளியே வந்தார்கள்.​வழியில் ஆனந்தன், “இந்தச் சந்தோஷமான விஷயத்தை அம்மாகிட்ட சொன்னா அவங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நினைக்கிறேன். அவங்களும் மனசு விட்டுச் சந்தோஷப்படுவாங்க,” என்றான்.​அனுஷா வெட்கத்தோடு தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தாள்.​இருவரும் ஒன்றாக மீனாவின் வீட்டுக்கு வந்தார்கள். வந்திருந்தவர்களை மீனாவின் மாமியார் லட்சுமி இன்முகத்துடன் வரவேற்க, இருவரும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.​ஆனந்தனும் அனுஷாவும் எப்போதும் இல்லாத நெருக்கத்தில் அமர்ந்திருப்பதையும், அனுஷாவின் முகத்தில் தெரிந்த ஒருவிதப் பூரிப்பையும் லட்சுமி சரியாகக் கணித்துவிட்டார். உடனே உள்ளே பார்த்து, “மதினி! வாங்க… உங்க பையனும் மருமகளும் வந்திருக்காங்க!” என்று கனகத்தை அழைத்தார்.​அந்தச் சத்தத்தில் தன் அண்ணன் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மீனா, கனகத்தை அழைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தாள்.​ஆனந்தன் மரியாதை நிமித்தமாக லட்சுமியிடம், “மாமா வீட்ல இல்லையா அத்தை?” என்று கேட்டான்.​”மாமாவும் சங்கரும் கடைக்குப் போயிருக்காங்க தம்பி,” என்ற லட்சுமி, பார்வையை அனுஷாவின் பக்கம் திருப்பினார். “என்ன டீச்சரம்மா… இன்னைக்குப் பாடம் நடத்துறதை மறந்துபோச்சா? ஒண்ணும் தெரியாத மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்கீங்க!” என்று கேலியாகக் கேட்டார்.​அனுஷா அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “நல்லா இருக்கீங்களா அம்மா?” என்று விசாரித்தாள்.​”நான் நல்லா இருக்கேன்மா. நீயும் ஏதோ நல்ல செய்தியோடதான் வந்திருக்கேன்னு உன் முகமே சொல்லுது!” என்றார் லட்சுமி.​அவர் அப்படிச் சொன்னதும், கனகமும் மீனாவும் ‘என்ன செய்தி?’ என்று புரியாமல் லட்சுமியின் முகத்தையும் அனுஷாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.​ஆனந்தன் பேச்சைத் தொடர்ந்தான். “நீங்க சொல்றது சரிதான் அத்தை. நானும் அனுஷாவும் இப்போதான் ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம்…” என்றவனுக்கு அதற்கு மேல் சொல்ல முடியாமல் வெட்கம் தடுக்க, புன்னகையுடன் நிறுத்திக்கொண்டான்.​லட்சுமி தான் கணித்ததை ஆனந்தன் உறுதிப்படுத்திவிட்டான் என்ற சந்தோஷத்தில், “டீச்சரம்மா மாசமா இருக்காங்களா?” என்று சட்டெனக் கேட்டுவிட்டார்.​அனுஷா வெட்கத்தோடு தலைகுனிந்து கொள்ள, ஆனந்தனும் சிரித்தபடியே முகத்தைத் தாழ்த்திக்கொண்டான்.​கனகம் தான் வணங்கிய கடவுள் தன்னைக் கைவிடவில்லை என்ற எல்லையில்லா மகிழ்ச்சியுடன், “மதினி! நீங்க சொன்னது போலவே என் சந்தோஷ், எங்க ஆனந்துக்கு மகனா பிறக்கப் போறான்!” என்று உணர்ச்சிப் பெருக்கில் சத்தமாகச் சொன்னார்.​மீனாவுக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன. “கங்கிராட்ஸ் அண்ணா!” என்று மனதார வாழ்த்து தெரிவித்தார்.​ஆனால், அதுவரை தாமரை போன்று மலர்ந்திருந்த அனுஷாவின் முகம், கனகத்தின் வார்த்தையைக் கேட்டதும் அப்படியே வாடிப் போய்விட்டது.​கனகமோ உற்சாகம் குறையாமல், “நான் இப்பவே கிளம்பி உங்களோட வீட்டுக்கு வந்துடுறேன். என் மருமகளுக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் நானே செஞ்சு கொடுக்கப் போறேன்!” என்று கிளம்பத் தயாரானார்.​கனகத்தின் ஆர்வத்தைக் கண்ட மீனா அவரை ஆசுவாசப்படுத்தி, “இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க இருந்துட்டு அப்புறம் நிதானமா போலாம்மா…” என்று தடுத்து நிறுத்த, லட்சுமியும் கனகத்தை அங்கேயே இருக்குமாறு அன்போடு வற்புறுத்தினார்.​ஆனந்தனும், “அம்மா, கொஞ்சம் பொறுமையா இருந்து வா. அதெல்லாம் அனு பார்த்துப்பாங்க,” என்று சொன்னான். இந்தக் கலகலப்பில் யாரும் அனுஷாவின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை.​இருவரும் விடைபெற்று வீட்டுக்குக் கிளம்பினார்கள். செல்லும் வழியில் அனுஷா அமைதியாக இருப்பதைக் கவனித்த ஆனந்தன், “ஏன் அனு ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதும் தலைசுத்தல், வாந்தி வர்ற மாதிரி இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான்.​அனுஷா மறுப்பாகத் தலையசைத்து, “அதெல்லாம் ஒண்ணுமில்ல… அத்தை சந்தோஷ் பிறக்கப் போறதா சொன்னாங்கல்ல, அதான்…” என்று இழுத்தாள்.​ஆனந்தனுக்கு அனுஷாவின் சோர்வுக்கான காரணம் புரிந்துவிட, மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டான். “ஏன் அனு, சந்தோஷைப் பெத்துக்க மாட்டீங்களா?” என்று விளையாட்டாகக் கேட்டான்.​”இல்ல… நான் அப்படிச் சொல்லல. ‘வருண்’ என் வயித்துல இருக்கிறதா நீங்களே சொன்னீங்களே…” என்று அவள் தயங்கினாள்.​ஆனந்தன் கனிவுடன், “இருக்கட்டும் அனு… வருண் ‘சந்தோஷ்’ங்கிற பெயர்ல இருக்கிறதில் ஏதும் தப்பா? வருணைச் சந்தோஷ்னு கூப்பிட்டா என் அம்மா சந்தோஷப்படுவாங்க இல்லையா?” என்றான்.​அனுஷா ஆசையுடன், “அப்போ என் வயித்துல இருக்கிறது வருண் தானே?” என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கேட்டாள்.​”நிச்சயமாக வருண் தான் உங்க வயித்துல இருக்காரு. சாரி, என்னோட வருணுக்கு ‘சந்தோஷ்’னு பேர் வச்சா ஒண்ணும் தப்பில்லையே?” என்று ஆனந்தன் சிரித்தபடியே கேட்க, அனுஷாவின் முகத்திலும் மீண்டும் புன்னகை அரும்பியது.​அந்தச் சந்தோஷத்தோடு அந்த வாரம் கடந்திட, மீண்டும் மருத்துவரிடம் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார்கள்.​அனுஷாவைப் பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன் பார்த்துவிட்டு, “அனு, உங்களுக்கு வயித்துல இரண்டு கரு இருக்கு! கண்டிப்பா நார்மல் டெலிவரி ஆகுறதுக்குக் கஷ்டம் தான். இப்பவே கருவை ரிமூவ் பண்ணிடலாமா? இல்லை இருக்கட்டுமா?” என்று கேட்டார்.​உடனே ஆனந்தன், “இந்தக் கருவால அனுவுக்கு ஏதும் பாதிப்பு இருக்கா மேடம்?” என்று பதட்டத்துடன் கேட்டான்.​மருத்துவர் புன்னகையுடன், “நோ நோ… அப்படி எதுவும் பாதிப்பு கிடையாது. நார்மல் டெலிவரி ஆகாது அவ்வளவுதான். நாங்க பேபியையும் அம்மாவையும் பத்திரமா காப்பாத்திருவோம்,” என்றார்.​அனுஷா உறுதியாக, “சரிங்க மேடம், இந்தக் கரு அப்படியே இருக்கட்டும்,” என்றாள்.​அவளை வியப்பாகப் பார்த்த மருத்துவர், “குழந்தை பெத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சும் ஓகே சொல்றீங்க. பரவாயில்லை, ரொம்ப தைரியசாலிதான்!” என்று அனுஷாவைப் பாராட்டிச் சான்றிதழ் தந்தார்.​ஆனந்தனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி! வயிற்றில் உருவாகியிருக்கும் இரண்டு கருக்களையும் பெற்றெடுக்க வேண்டும் என்ற அவளது வைராக்கியத்திற்கு ஒரு காரணம் வருண் என்றால், மற்றொரு காரணம் தன் தம்பி என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாக வேரூன்றியிருந்ததுதான்.​இருவரும் மருத்துவரிடம் ஆலோசனை செய்துவிட்டு வெளியே வந்ததும், ஆனந்தன் அனுஷாவிடம், “ரொம்ப தேங்க்ஸ் அனு!” என்று மனதார நன்றி தெரிவித்துக்கொண்டான்.​”அனு, நாம நன்றி சொல்ல வேண்டியது அத்தைக்குத்தான்! அவங்க கும்பிட்ட கடவுள் அவங்களோட பையனை உடனுக்குடன் என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காரு,” என்றாள் அனுஷா.​ஆனந்தன் சிரித்துக்கொண்டே, “கடவுள் இருக்கிறார்னு சொல்றீங்களா அனுஷா?” என்று கேட்டான்.​”எனக்கும் அந்த நம்பிக்கை இதுவரை இல்லாமல் தான் இருந்தது. ஆனால், நடக்கிறதை பார்க்கும்போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது,” என்றாள் அவள் புன்னகையுடன்.​இருவரும் வீட்டுக்குள் நுழைந்ததும், அனுஷா, “இவ்வளவு பெரிய சந்தோஷத்தை நான் எங்க அம்மாவுக்குச் சொல்லவே இல்லையே! போய் அவங்களைப் பார்த்து சொல்லிட்டு வந்துடலாமா?” என்றாள்.​”நிச்சயம் போகலாம் அனு,” என்று சொன்னவன், அறியாமல் மர நாற்காலியில் அமர்ந்தான்.​அனுஷா அவனையே ஒருமுறை கூர்ந்து பார்க்க, ஆனந்தன் சுதாரித்துக்கொண்டு, “அனு, இன்னமும் அந்த நாற்காலியைப் பார்த்து பயப்படுறதை விடலையா? இப்பதான் சந்தோஷ் அந்த நாற்காலியில் இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமே! சந்தோஷ் உங்க வயித்துலதான் இருக்கான்னு சொல்லுங்க,” என்றான்.​அனுஷா வெட்கப்பட்டுச் சிரித்தாள். சிறிது நேரம் வீட்டிலிருந்துவிட்டு, இருவரும் சிவம், அமுதாவைப் பார்ப்பதற்காக வனஜாவின் வீட்டிற்குச் சென்றார்கள்.​இருவரும் ஒன்றாக வந்து இறங்குவதைக் கண்ட வனஜாவுக்கு, இருவரும் ஒன்றி வாழ ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரிந்துபோனது. “வாங்க… வாமா அனு,” என்று வரவேற்று அனுஷாவின் கன்னத்தைத் தட்டி முத்தமிட்டார்.​இருவரும் உள்ளே சென்றதும், அமுதா சமையலறையிலிருந்து வேகமாக வெளியே வந்து, “வாங்க தம்பி… வாம்மா” என்று அனுஷாவையும் வரவேற்றார். தொடர்ந்து, “நீங்க ரெண்டு பேரும் ஒருமுறை கூட இங்கே வரலைன்னு மனசு ரொம்ப வருத்தமா இருந்தது, இப்போ ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு!” என்றார்.​ஆனந்தன் புன்னகையுடன், “நாங்க சொல்ல வந்த செய்தியைக் கேட்டா இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவீங்க!” என்று சொல்ல, அனுஷா அவன் அருகில் அமர்ந்து, “சும்மா இருங்க,” என்று அவன் தொடையில் தட்டினாள்.​அவர்களது அன்யோன்யத்தைப் பார்த்த அமுதாவுக்கு மனம் நிறைவாக இருந்தது. ஆனந்தன் இதுவரை தன்னை ‘அத்தை’ என்று அழைத்ததில்லை. ஆனால் இன்று, “மாமா எங்க போயிருக்காரு அத்தை?” என்று கேட்டான்.​பாவம் அமுதா, அந்த எதிர்பாராத அழைப்பில் பதட்டத்தில் திகைத்துவிட்டார்.​வனஜா உடனே சமாளித்து, “கார்த்திக் கம்பெனியில செக்யூரிட்டியா வேலை பார்க்கிறார், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு தம்பி!” என்றார்.​அமுதா, “ஏதோ நல்ல செய்தி சொன்னீங்களே…” என்று இழுக்க, ஆனந்தனும் அனுஷாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தார்கள்.​வனஜா இடைமறித்து, “புதுசா கல்யாணம் ஆனவங்க சொல்லப்போற நல்ல செய்தி என்னன்னு எனக்குத் தெரியாதா? நாம பாட்டியா ப்ரோமோஷன் ஆகப் போறோம் சரிதானே!” என்று செல்லமாகக் கூறினார்.​ஆனந்தன் சிரித்துக்கொண்டே, “ஹம் சரிதான், நீங்க கடை போட்டு ஜோசியம் பார்க்கலாம் அத்தை, கரெக்டா கணிக்கிறீங்களே!” என்று கேலி செய்ய, அனைவரும் கலகலவெனச் சிரித்தனர்.​ஆனந்தன் தொடர்ந்து, “அப்படியே எத்தனை குழந்தைகள்னு சொல்லிடுங்க பார்க்கலாம்!” என்று வனஜாவிடம் கேட்க, வனஜா எத்தனை என்று எண்ணிக்கையைக் கேட்பதை வைத்து, “ரெட்டை குழந்தை சரிதானே?” என்று சொல்லி மீண்டும் சிரித்தார்.​அனுஷாவிற்கு, வனஜா எப்படிக் குறி சொல்வது சரியாக இருக்கிறதோ, அதேபோல் இதையும் சரியாகக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது.​வனஜா சிரிப்புடன், “எல்லாரும் குழந்தை உண்டாகி இருக்குன்னு சொல்லும்போது, நீங்க எத்தனை குழந்தைன்னு கேக்குறதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன் இது ரெட்டைப் பிள்ளைங்கன்னு!” என்று பெருமிதத்துடன் விளக்கம் கொடுத்தார்.​அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, அப்படியே கனகத்தையும் தங்களோடு அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். அனுஷா படும் மசக்கை துயரத்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே இருந்து கொண்டாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!