திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தின் அருகில் இருக்கும் ‘தி பேசின்’ எனும் புறநகர் பகுதியில் தான் பிரவீனின் வீடு அமைந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் நிர்வாக அமைப்புப்படி இது மெல்பேர்ன் மாநகரத்திற்கு உட்பட்ட ஒரு குடியிருப்பு பகுதி. அங்கேதான் திருமணம் முடிந்தவுடன் மஹிமா குடியேறினாள் .வீடு என்று சொன்னால் சற்றும் பொருந்தாத ஒரு அமைப்பு அது. மாளிகை,அரண்மனை என்று சொன்னால் சரியாக இருக்கலாம். திருமணத்திற்கு என்று சொல்லி ஏற்க்கனவே பெண்ணை பெற்றவரிடமிருந்து பத்து லட்சம் பணத்தை வாங்கிவிட்டார் பிரவீனின் அப்பா.மேற்கொண்டு ,இதற்கு,அதற்கு என்று அவர்கள் வாங்கிய பணம் அவர்கள் பெயரளவில் செலவழித்தது போன்று மூன்று மடங்கு.வரதட்சிணை என்று வாங்கவில்லை .அவ்வளவு தான்.
சுந்தரம்,தனது மாப்பிள்ளைக்கு என்று வாங்கிய செயின்,பிரேஸ்லேட்,மோதிரம் எல்லாமே 22காரட் நகைகள்.அதே போல பிரவீனின் வீட்டில் சுந்தரத்திடம்,”நீங்க அவளுக்கு போட வேண்டிய நகைகள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திருங்க சுந்தரம். தாலி சரடு கூட வாங்கிடுங்க.முகூர்த்த புடவை கூட நீங்களே செலக்ட் பண்ணி வாங்கிடுங்க. அதுக்கு அமௌன்ட் நாங்க கொடுத்திடறோம்”என்ற பிரவீனின் பெற்றவர்கள் அதற்கு உண்டான தொகையை சுந்தரத்திடம் கொடுக்கவே இல்லை.தன் மகளுக்கு வாங்கியதற்கு சம்மந்தியிடம் எப்படி பணம் கேட்பது என்று சுந்தரம் அமைதியாக இருந்துவிட்டார்.
திருமணம் முடிந்து ஒரு வாரம் அங்கே மகளுடன் இருந்துவிட்டு சுந்தரம் தம்பதி இந்தியா திரும்பிவிட்டார்கள் . பெண்ணை ஆசையாக பார்த்துக்கொள்ளும் மாப்பிள்ளை ஏனோ இவர்களுடன் சகஜமாக பேசவோ,பழகவோ விரும்பவே இல்லை. பிரவீனின் பெற்றவர்களும் இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு கனடா வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட கொஞ்சமும் ஒட்டாத தன்மையுடன் அந்த ஒருவாரமும் கழிந்தது.
ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கிளம்பியவர்கள் தான். ஏனோ அங்கிருந்து கிளம்பினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. டிக்கெட் தொகை அதிகம் கொடுத்துதான் திரும்ப வந்து சேர்ந்தார்கள். மனம் முழுவதும் பாரமாக அழுத்தியது. மஹிமா வேறு இங்கே இல்லாதது மனம் முழுவதும் சோர்வு அப்பிக்கொண்டது பெற்றவர்கள் இருவருக்கும்.
இங்கே கண்முன்னே இந்தியாவில் திருமணம் செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றாள் பெண்ணை பெற்றவள். சுந்தரத்திற்கு பெருமூச்சு எழுந்தது. இப்போது இதைப் பற்றி பேசி என்ன பலன்? இவர்கள் இந்தியா திரும்பியதை அறிந்து ரமா தனது அண்ணனுக்கு அழைத்து திருமணம் நன்றாக நடந்ததா ?என்று விசாரித்தார். அதற்குப் பிறகு இன்னமும் சில நெருங்கிய உறவுகளும் அழைத்து ஒப்புக்கு திருமணம் விசாரித்தார்கள். மனதை மறைத்துக் கொண்டு வெகு உற்சாகமாகவே பேசினார்கள் சுந்தரமும் அவரது மனையாளும். அவர்கள் வார்த்தைகளில் பெருமை தெறித்தது.
அதற்குப் பிறகு மெல்ல நாட்கள் நகரத் தொடங்கியது. ‘தி பேசின்’ வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் தான். பிரவீன் இன்னமும் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கவில்லை. தேன்நிலவு கொண்டாட இருவருக்கும் நேரம் போதவில்லை.வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லை.அதற்க்கு பதிலாக எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருந்தன. பாத்திரம் கழுவ,வீட்டை சுத்தம் செய்ய , துணி துவைக்க என்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் இருக்க மஹிமாவுக்கு வீட்டில் சமைக்கும் வேலை ஒன்றுதான். அதிலும் மஹிமா சுத்த சைவ பட்சி.அவள் கணவனுக்கோ சூப் சாப்பிட கூட அசைவம் வேண்டும்.மஹிமா சமைக்க திண்டாட,ப்ரவீனுக்கு கோவம் வந்துவிட்டது.புதுமனைவியிடம் கோவத்தை காண்பிக்க பிரியம் இன்றி அவளுக்கு தனது சுவையை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.
மனதில் ஒருவித ஒவ்வாமை இருந்தாலும் காண்பித்துக் கொள்ளாமல் மஹிமா சமைக்க கற்றுக் கொண்டாள் . மற்றபடிக்கு இருவருக்கும் கட்டிலை பொறுத்தவரை பத்துபொருத்தமும் அமர்க்களமாக பொருந்தியது. மஹிமாவின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தை பருவத்திலிருந்து குமரியாகி உடனேயே திருமணமும் முடிந்திருக்கவே இளமையில் வேகமும், ஹார்மோன்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் நோக்கமுமாக கணவனுடன் ஒன்றினாள் பெண்.அந்த வகையில் பெண்ணிடம் ப்ரவீனுக்கு நூறு சதவிகிதம் திருப்தி தான்.
ஏற்கனவே லிவ் இன்னில் இருந்தவனுக்கு அவனது காதலியிடம் கிடைத்ததைவிட கூடுதலாக உணர்வுகள் கட்டவிழ மஹிமாவை கொண்டாடினான். அவனுக்கு ஈடுகொடுக்கும் பெண்ணை அவனுக்கு அவ்வளவுக்கு பிடித்துப் போனது. மஹிமாவுக்கு இந்த புதிய வாழ்க்கையிலும்,கணவனை பழகும் தீவிரமுமாக பெற்றவர்கள் பற்றி அவ்வளவுக்கு கவலை இல்லை.தினமும் அவர்களுடன் மஹிமா பேசிவிடுகிறாள். அவளது குரலில் தெரியும் துள்ளலில் பெற்றவர்கள் சந்தோசம் கொள்கிறார்கள்.வேறென்ன வேண்டும்?
நீச்சல் தெரியாத புதுமனைவிக்கு தனது அரண்மனையில் இருக்கும் நீச்சல் குளத்தில் நீந்த கற்றுக்கொடுக்கும் கணவன் அதற்கு குரு தக்ஷிணையாக அங்கேயேயும் ஒரு கூடலை நடத்த நீரின் குளுமையிலும், கணவனின் வெம்மையிலும் தள்ளாடுகிறது பெண்ணின் உடல். கண்டிக்கவோ, வார்த்தைகள் சொல்லவோ பெரியவர்களும் அருகில் இல்லாத தனிமை அந்த புதுமண தம்பதிக்கு முழுநேர போதையை கொடுத்தது.
பதினைந்து நாட்களுக்கு விடுமுறை எடுத்திருந்தான் பிரவின் . அவனது பெற்றவர்கள் இந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை அழைத்துப் பேசி இருந்தால் அதிகம். அதைப் பற்றியெல்லாம் மஹிமா பெரியதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. வெளியே கோவில்களுக்கு அழைத்து சென்றான். சூப்பர் மார்க்கெட், சுற்றிப் பார்க்கவென்று அழைத்துக் கொண்டு சுற்றினான் பிரவீன். இருவரும் சிட்னி சென்றார்கள்.அங்கே இரண்டு நாட்கள் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கினார்கள்.பெண்ணுக்கு சுற்றிப் பார்க்க ஆசை.ஆணுக்கு அவளை சுற்றிக் கொள்ளும் மோஹம் .
பிரவீனின் விடுமுறை முடிந்தது.அவனும் மீண்டும் அலுவலகத்தில் சேர்ந்தான். வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகம் செல்லவேண்டும்.மற்ற இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்தான். அவன் வேலைக்கு கிளம்பிவிட்டால் வீடே அமைதியாக இருக்கும்.பேச்சு துணைக்கு கூட யாரும் அருகில் இல்லை. தான் இல்லாத நேரத்தில் வெளியே எங்கும் செல்லவேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான் பிரவீன்.
இன்னமும் இந்த நாடு என்ன,தான் இருக்கும் சுற்று வட்டாரம் கூட அவளுக்கு பழகவில்லை.”இனிமே இங்கே தானே? நிதானமாக பழகிக்கலாம்.இப்போதைக்கு என்னை பழகு”என்று ஹஸ்கி குரலில் காது மடலை உரசியவாறே கணவன் சொன்னது இப்போது கூட மஹிமாவின் கன்னங்களை சிவக்க செய்தது.
வீட்டிலிலிருந்து வேலை செய்யும் நாட்களில் நிச்சயம் நடுவில் பிரேக் எடுத்துவந்து இவளுடன் ஒரு மினி கூடலை நடத்திவிட்டு ,ஒன்றுமே நடக்காதது போல வேலை செய்யும் அறைக்கு சென்று வேலையை தொடர்வான் பிரவீன் .இவளுக்குத்தான் ஆச்சர்யமாக இருக்கும்.
பிரவீன் பொதுவாக அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கமுடையவன் இல்லை. சென்னையில் இருக்கும் பொழுது அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்லும் பழக்கம் கொண்டவள் மஹிமா.இங்கே அந்த பழக்கம் வேறு அந்தரத்தில் தொங்கியது. எப்படியோ கணவனை சரிக்கட்டி அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல பழகிக் கொண்டாள் .
திருமணம் முடிந்து மூன்று முழு மாதங்கள் முடிந்திருக்க அதை இருவரும் புதுமண தம்பதிக்கு உரிய முறையில் கொண்டாடினார்கள். கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வந்தாள் மஹிமா.பிரவீன் வரவில்லை என்றுவிட்டதில் மனதில் வருத்தம்தான்.
அங்கே கோவிலில் புதிய நட்புகள் கிடைத்திருந்தது. அதில் ஒருவர் இசைவகுப்புகள் எடுக்கும் ஆசிரியை. இனொருவர் நடன வகுப்புகள் எடுப்பவர். இருவரது வீடுகளும் பிரவீன் வீட்டிலிருந்து வலதும் இடதுமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. நடந்து செல்லும் தொலைவு தான் . சேர்வதற்கு இவளுக்கு ஆசை,நேரம் இரண்டும் இருக்கிறது. இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் போர் அடிக்க தொடங்கி விட்டது.சென்னையில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தவள் தானே!
இங்கே ப்ரவீனுக்காக சமைப்பது, அவன் இஷ்டப்படும் நேரங்களில் அவனுக்கு தன்னில் இடம் கொடுப்பது தவிர வேறு வேலைகள் எதுவுமே இல்லை. உடம்பு வேறு கொஞ்சம் எடை கூடி இருக்கிறது.பிரவீனிடம் உடற்பயிற்சி பற்றி பேசியதற்கு, அந்தரங்க நேரங்களை வருணித்து அவளின் இப்போதிருக்கும் அழகு அவனை எவ்வளவுக்கு போதை ஏற்றுகிறது என்றெல்லாம் மயக்கத்துடன் சொல்லவே பிறகு அதை பற்றி அவள் எங்கே பேசுவது? இப்படித்தான் அவளது வாயை அடைத்து விடுகிறான். தினமும் தீவிரமாக நீச்சல் பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தாள். கணவனிடம் பேசுவது வேலைக்கு ஆகாது என்று அவளுக்கு புரிந்துபோனது.
அடுக்களையில் நின்றுகொண்டு அடுப்பு மேடையின் ஒரு ஓரத்தில் அசைவம் வெட்டுவதற்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கும் இடத்தில நின்று கொண்டு அங்கே வைக்கப் பட்டிருக்கும் சிக்கனை முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள் மஹிமா. கைகளில் க்ளோவ்ஸ் அணிந்திருந்தாள். இதோடு இரண்டுமுறை வாந்தி எடுத்துவிட்டு வந்துவிட்டாள் .சுந்தரம் வீட்டில் அசைவம் சமைப்பது இல்லை.என்றாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கடையிலிருந்து சாப்பிட்டு வந்துவிடுவார்கள் சுந்தரமும் அவர் மனைவியும். அதுவும் பிடிக்காமல் வெறும் மரக்கறியில் வளர்ந்திருந்தாள் மஹிமா.அதனால் அவளுக்கு அசைவம் சமைக்க கற்றுக்கொள்ளும் அவசியம் நேர்ந்திருக்கவில்லை.
இப்போது இந்த நாட்டு சமையல் வழக்கப்படி சிக்கனை தயார் செய்தால் தான் பிரவீன் சாப்பிடுவான்.அவனுக்கு சுத்தமாக காரமும் ஆகாது. ஒருநாள் கூட சைவம் சாப்பிடவே மாட்டான். அதிலும் காலையில் சமைத்த உணவை மாலையில் சாப்பிடுவதெல்லாம் நடக்காத ஒன்று.
தனிமை பெண்ணை கொன்று தீர்த்தது. அவள் ஆசைப் பட்டு திருமணம் செய்துகொண்டு வந்திருக்கிறாள்.ஆனால் கணவன் தனக்கான மரியாதையை கொடுக்கவில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது.ஏனோ யுகம் கடந்தது போலவொரு ஆயாசம் ஆக்கிரமிக்க இன்னமும் அவளால் சமைக்க முடியவில்லை. அடுக்களையில் போடப்பட்டிருக்கும் சேரில் அமர்ந்துவிட்டாள் .
தான் இப்படியே காலத்தை ஓட்ட முடியாது என்றுதான் அவளுக்கு தோன்றியது. ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும்.அல்லது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் இல்லையென்றால் மேற்படிப்பாவது படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் .
தனது எண்ணங்களை அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்ளதான் சரியான நேரம் வாய்க்கவே இல்லை. பெரும்பாலும் அவன் அலுவலக கணினியின் முன் அமர்ந்திருப்பான். நேரம் கிடைக்கும் பொழுது உடற்பயிற்ச்சி,நீச்சல், மிதிவண்டியில் ஒரு பெரிய சுற்று சுற்றி வருதல் என்று இருப்பவனுக்கு மனைவியை உடன் அழைத்து செல்லவேண்டும் என்று இதுவரை ஒருமுறை கூட தோன்றியதே இல்லை என்பது தான் பெரிய ஆச்சர்யம்.
ஆரம்பத்தில் கட்டிலில் அவனுக்கு கிடைத்த தேவதை எண்டு மஹிமாவை கொண்டாடி தீர்த்தவன் இப்போதெல்லாம் தனது தேவைக்கு மட்டும் அவளை நாடுகிறான். மறந்தும் அவளாகவே சென்று கணவனை தொட்டுவிட முடியாது. கோவப்பார்வை பார்த்தால் கூட தாங்கிக்கொள்ள முடியும்.அவனது பார்வை பிடித்தமின்மையை படம் பிடித்து காட்டிவிடும்.
உடல் அளவில் நெருக்கத்தை காண்பிப்பவன் நிஜத்தில் அவளை தன்னிடம் நெருங்க விடவே இல்லை.இருவருக்குள்ளும் என்னமாதிரியான உறவு நிலை இருக்கிறது என்று தனியாக இருக்கும் நேரங்களில் நிறைய யோசித்தித்திருக்கிறாள். கூடலில் பொழுதுகூட அவனது விருப்பங்களை நிறைவேற்றும் இயந்திரம் தான்.அவளுக்கென்று இருக்கும் ஆசைகளை வாய்விட்டு சொல்லக் கூட அவன் அனுமதிப்பது இல்லை.அவனுக்கு வேண்டுமென்றால் ‘ஆம்’.மற்றபடிக்கு இவளது விருப்பங்களுக்கு அங்கே இடமில்லை.
” நா இங்கே paatu-டான்ஸ் க்ளாஸ்ன்னு எடுக்குறாங்களே.போகட்டுமா?” கணவனிடம் வெகுவாக தயங்கி கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து உடனடியாக பதில் வந்தது.
“ஒய் நோட் ஹனி. பீஸ் எவ்ளோ டாலர்ன்னு கேளு.உனக்கு சரின்னா நா என்ன சொல்லப் போறேன்?”
பிரவீனின் பதிலில் பெண்ணுக்கு மயக்கம் வராத குறை. அன்று மதியமே தேவையான விவரங்களை கேட்டு வந்து கணவனிடம் சொன்னாள் மஹிமா.மனைவி சொன்னவற்றை கேட்டு கொண்டவன் அவளிடம்,
” ம்ஹும்… ஓகே. இப்போ சொல்லு. உனக்கு என்ன தோணுது.நிச்சயம் இந்த வகுப்புகளுக்கு நீ சேர்ந்து தான் ஆகணுமா? “
ஆஸ்திரேலிய மதிப்பில் அந்த தொகை ஒன்றும் பெரியது அல்ல தான்.மனதில் அதை யோசித்து,” ஹாங் ..ஒன்னும் பிக் அமௌண்ட் இல்லையே. வி கேன் அபோர்ட் .” அவளது பதிலில் கூர்ந்து அவளை ஒரு நொடி பார்த்தவன், “தென் ஓகே.உங்க அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிடு. மறக்காம நம்ம காமென் அகௌண்ட்டுக்கு பணத்தை அனுப்ப சொல்லு. அப்போதுதான் என்ன வருது,எவ்ளோ செலவுன்னு எனக்கும் புரியும்”என்றுவிட்டு தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான் பிரவீன்.
அவன் சொன்னதன் அர்த்தத்தை முழுமையாக உள்வாங்கி புரிந்துகொள்ளவே மஹிமாவுக்கு நேரம் பிடித்தது. புரிந்தவள் அங்கேயே சமைந்து நின்றாள். நான் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றால் எனது அப்பா தான் பணம் அனுப்ப வேண்டுமா? எனக்காக இதை கூட செலவு செய்ய மாட்டாரா?” கண்கள் பொங்கியது.
அடுத்தடுத்த நாட்களில் கீழே சமையல் அறையின் எதிரில் அமைந்திருக்கும் விருந்தினர் அறையில் தங்கி கொண்டாள் மஹிமா. அவளின் கோவத்தை பிரவீன் கண்டுகொள்ளவே இல்லை. எதுவும் கேட்கவும் இல்லை. நோ சமாதானம். அந்த வார இறுதியில் இரவு தூங்கிக் கொண்டு இருந்தவளை அலேக்காக தூக்கிக்கொண்டு தங்களது அறைக்கு சென்ற பிரவீன் தனது தேவைகளை முழுமையாக தீர்த்துக்கொண்டு உறங்கி விட்டான். மறுநாளும் இதுவே தொடர்ந்தது.இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் மறந்தும் பிரவீன் தனது மனைவியிடம் பேசவே இல்லை.
எதிலோ தோற்கும் உணர்வு ஆழமாக கீற , அவளது தலையணை நனைந்தது அவளது கண்ணீர் துளிகள் சிதறியதில்!